குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

11.11.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அர்ஷின் நிழலில்.



ஏகஇறைவனின் திருப்பெயரால்....

يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ {34}  وَأُمِّهِ وَأَبِيهِ {35} وَصَاحِبَتِهِ وَبَنِيهِ {36} لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ {37}

அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தனது தாயையும், தனது தந்தையையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான். 80:33, 34



அர்ஷின் நிழலில்.

இதற்கு முந்தைய தொழுகை சம்மந்தமான கட்டுரைகளில் தொழுவதினால் ஏற்படும் இம்மை மறுமை நன்மைகளை நமக்குத் தெரிந்தவரை பட்டியலிட்டோம் இன்னும் நமக்குத் தெரியாமல் ஏராளமான நன்மைகள் அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய அருள்மறைக்குர்ஆனிலும், அண்ணல் நபி(ஸல்)அவர்களின் அறிவுப்புகளின் அறிவுச் சுரங்கத்திலும் குவிந்து கிடக்கின்றன.

முதல் அந்தஸ்து
ஒரு நாள் இவ்வுலகம் முழுவதும் உலகில் உள்ள அனைத்து வஸ்த்துகளும் அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப் போனவர்கள் அனைவரும் மீண்டும் எழுப்பப்பட்டு விசாரனை தொடங்கப் படுவதற்கு முன் நிழலில்லாத வெட்ட வெளியில் நிருத்தப்படும் பொழுது தகிக்கும் வெயிலிலும், கொதிக்கும் மணலிலும், பாதங்களை பூமியில் அழுத்தி நிற்க முடியாமல் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருப்பார்கள் அப்பொழுது உலகில் வாழ்ந்த காலத்தில் இறைவனுக்கு மிகவும் விருப்பமான நற்செயல்களில் ஈடுபட்டு வந்த ஏழு பேருக்கு அவன் தன்னுடைய பிரம்மான்டமான அர்ஷின் கீழுள்ள நிலழைக் கொடுத்து அமரச் செய்வான்.

இறைவனின் மிகவும் விருப்பமான அந்த ஏழு நற்செயல்கள். 

1.       நீதியை நிலை நாட்டும் தலைவர்,
2.       அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர்,
3.       பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொண்டவர்,
4.       அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்,
5.       உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோதுஅல்லாஹ்வை அஞ்சுகிறேன் என்றுக் கூறி விலகிக் கொள்பவர்
6.       தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர்,
7.       தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்¡ர் சிந்துபவர். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஆதார நூல், புகாரி 660.

இறைவனுக்கு மிகவும் விருப்பமான மேற்காணும் ஏழு நற்செயல்களில் இளமையில் இறைவணக்கத்தில் ஈடுபடுவதும், பள்ளிவாசல்களுடன் உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொள்வதும் போன்ற இரண்டு நற்செயல்கள் தொழுகை சார்ந்தவைகளாக  இருப்பதை கவனிக்க வேண்டும்.

இளமைக் குன்றி முதுமைத் தோன்றி.
இளங்கன்று பயமறியாது என்பதுபோல் அதிகமானோர் இளமையில் தான் தன்னையும், தன் சமுதாயத்தையும் அழிவில் ஆழ்த்தும் ஆரோக்கியமற்ற செயல்களில் மூழ்கி அற்ப ஆனந்தமடைவார்கள் படைத்தோனை நினைத்து பள்ளிவாசல் பக்கமே போக மாட்டார்கள். இளமைத் தேய்ந்து முதுமைத் தோன்றியதும் கைத்தடியின் துணையுடன் தட்டுத் தடுமாறி பள்ளிவாசலை நோக்கி நடப்பார்கள். அன்று பள்ளிவாசல்களைப் பார்த்தால் முதியோர் இல்லமா ? பள்ளிவாசலா ? என்று  நினைக்கத் தோன்றும்.

இப்படிப்பட்டவர்களின் மத்தியில் மிகச்சில இளைஞர்களின் முகத்தில் முடிகளின் அரும்பு மலர்வதற்கு முன் உள்ளத்தில் படைத்தோனின் அச்சம் மலர்ந்திருக்கும்.

இப்படிப்பட்ட இறையச்சமுடைய இளைஞர்களே தானும் ஒழுக்கம் பேண வேண்டும், தன்னைப் பார்த்து பிறரும் நல்லொழுக்கம் பேண வேண்டும் என்ற நற்சிந்தனையுடன் நல்லொழுக்கத்திற்கு முன்மாதிரியாகி விடுவார்கள். 

தங்களின் வாழ்க்கைக்குத் தேவையானதை மட்டும் உலக வளங்களில் கவனம் செலுத்துவார்கள், தங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு மீதமுள்ளதை தேவையுடையோருக்கு கொடுத்துதவி மணம் மகிழ்வார்கள்.

வேலை நேரம் போக ஓய்வு நேரத்தில் இறைவனுக்கு குறைவின்றி இறைவணக்கம் செலுத்துவதுடன், சமுதாயப் பணிகள் புரிவார்கள்.

என்டர்டெயின்மென்ட் என்று இரவுப் பகலாக மூழ்கி இளமையைத் தொழைத்து பல்லையும், சொல்லையும் இழந்து, நரம்புகள் நாட்டியமாடத் தொடங்கியப் பின் பள்ளிவாசலை நோக்கி நடப்பவர்கள் மத்தியில் இதுப் போன்ற இறையச்சமுடைய இளைஞர்களின் இறைவணக்கத்துடன் கூடிய நற்செயல்களே யாரும், யாருக்கும் உதவ முடியாத, தன்னைத் தானேக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத அந்த கடினமான நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் கீழுள்ள நிழலுக்கு இழுத்துச் செல்கிறது. 

பள்ளிவாசலுடனான தொடர்பு
இதுப் போன்ற இறையச்சமுடையவர்களே தொழுது முடித்து பள்ளிவாசலை விட்டு வெளியேறியதும் அடுத்த தொழுகைக்காக பள்ளிவாசலுக்குள் நுழையும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள்.

ஒருத் தொழுகையிலிருந்து அடுத்த தொழுகையை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாலும், ஒரு தொழுகையிலிருந்து அடுத்த தொழுகைக்கு மத்தியில் சிறிது கால இடைவெளியே இருப்பதாலும் இவர்களை பாவகாரியங்களில் தள்ளுவதற்கான கால அவகாசம் ஷைத்தானுக்கு போதுவதில்லை. ஷைத்தானை தூரப் படுத்துவதற்கும் மேற்காணும் இளமையிலான இறையச்சமும், பள்ளிவாசலுடனானத் தொடர்பும் வேலியாக அமைகிறது.

இதுப்போன்ற இறையச்சமுடையவர்கள் பள்ளிவாசலுடன் உள்ளத்தை தொடர்பு படுத்திக்கொள்பவர்கள் மனிதநேயமிக்கவர்களாக இருப்பார்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி செலுத்த தவறுவதில்லை, அப்பாவிகளை பாதிப்புக்குள்ளாக்குவதில்லை, ...நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! 5:8 என்ற அல்லாஹ்வின் வாக்கு அநீதி செலுத்துவதிலிருந்து அவர்களை தடுத்து விடுகிறது,

ஷைத்தானின் தோழர்களை தங்களின் நன்பர்களாக்கிக் கொள்ளத் துணிவதில்லை, ஏற்கனவே இருந்தாலும் தாமதமின்றி அல்லாஹ்வுடைய மார்க்கத்தை குறைவின்றி பின்பற்றுவதற்காகவும், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காகவும்  உற்ற நண்பர்களாக இருந்தோரில் (இறைவனை) அஞ்சி, நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருந்தோரைத் தவிர (மற்றவர்கள்) அந்நாளில் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருப்பார்கள். 43:67  என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கை காரணமாக அவர்கள் பிரிந்து விடுவார்கள். 

ஒழுக்கங்கெட்டப் பெண்கள் விரிக்கும் விரச வலையில் வீழ்ந்து விட மாட்டார்கள், வீழ்த்தவும் துணிய மாட்டார்கள் இளமை காலத்தில் இறையச்சத்துடன் இறைவணக்கம் செலுத்துபவர்களை விபச்சாரம் போன்ற கொடிய தீமையிலிருந்து இறைவன் தடுத்து விடுகிறான். அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்) இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார். 12:24.  என்று இறைவன் கூறுவது இறையச்சமுள்ள இளைஞர் யூசுப் (அலை) அவர்களைப் பற்றியதாகும் யூசுப் (அலை) அவர்கள் அழகின் பொக்கிஷம் அவர்களின் அழகில் மயங்கிய ராஜகுமாரி விரித்த விரச வலையில் விழாமல் ஓடினாலும் அவள் அவரை விடாமல் விரட்டியதில் விழப் போன யூசுப் (அலை) அவர்களை விழ விடாமல் இறைவன் தாங்கிப்பிடித்தான்.

இதுப்போன்ற இறையச்சமுடையவர்களே பிறருக்கு உதவும் பணிக்காக உலகில் பாராட்டுதலை எதிர்பாராமல் மறுமையின் கூலியை மட்டும் எதிர்பார்த்து அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். 2:262.  எனும் அல்லாஹ்வின் வாக்கை மதித்து வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் செய்திடுவார்கள்.

தன்னையும் ஏனைய உயிரினங்களையும் உரிய வடிவம் கொடுத்து படைத்து இந்த பூமி என்றக் கோளை வாழ்வதற்கு தேவையான வசதிகளுடன் வடிவமைத்துக் கொடுத்த வல்லோன் அல்லாஹ்வின் பேராற்றலை தனிமையிலும் நினைத்து கண்ணீர் மல்க நன்றி செலுத்துவார்கள்.  வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன. 2:164

அர்ஷின் நிலலை பெற்றுத் தரும் ஏழு நற்செயல்களில் இரண்டு நற்செயல்கள் தொழுகை சார்ந்ததாக இருப்பதால் தொழுகையின் அந்த இரண்டு நற்செயல்கள் மற்ற ஐந்து நற்செயல்களின் பால் இழுத்துச் செல்கிறது இதுவே யாரும் யாருக்கும் உதவ முன் வரமுடியாத அந்த கடினமான வெப்பத்தில் அல்லாஹ்வின் அர்ஷின் கீழுள்ள நிழலுக்கு தகுதி உடையவர்களாக ஆக்குகிறது. அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தனது தாயையும், தனது தந்தையையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான். 80:33, 34

ஒரு காலத்தில் முதியோர்களாக முதல் ஒரு வரிசையில் மட்டும் நின்று தொழுத காலம் மாறி இன்று அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் தமிழகத்தில் தவ்ஹீத் புரட்சி வெடித்தப் பின் இளைஞர்களால் பள்ளிவாசல்கள் நிறைந்து, பள்ளிவாசலுக்கு வெளியிலும் தொழும் நிலை காணப்படுகிறது அல்லாஹ்விற்கேப் புகழ் அனைத்தும்.

தொழுகையைப் பேணுதலுடன் தொழுதும், ஒருத் தொழுகையிலிருந்து அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்திருந்தும், அதன் மூலமாக ஏராளமான தீமைகள் தடுக்கப்படவும், அதன் மூலமாக அல்லாஹ்வின் அர்ஷின் நிழலுக்குப் பாக்கியமிக்கவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக !




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்
, ,