குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

1.3.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இறுதி ஹஜ்ஜும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணமும்
இறுதி ஹஜ்ஜும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணமும்
almighty-arrahim



ஹிஜ்ரத்திற்குப் பிறகு பத்தாவது ஆண்டில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய நாடினார்கள். ஹஜ்ரி 10 ஆம் ஆண்டு துல்கஅதா மாதம் 'அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு செல்கிறார்கள்' என்று அறிவிக்கப்பட்டது.
இந்தச் செய்தி அரபுலம் முழுவதும் பரவியது. இந்த அருள்வளம் நிரம்பிய சந்தர்ப்பத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்யும் நற்பேற்றினைப் பெறும் ஆர்வத்தில் அரபுலம் முழுவதும் அலையெனத் திரண்டு வந்தது.

துல்கஅதா மாதத்தின் கடைசித் தேதிகளில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனா நகரிலிருந்து புறப்பட்டார்கள். துல்ஹஜ் மாதம் 4 ஆம் தேதி வைகறை வேளையில் மக்காவை அடைந்தார்கள். மக்கா நகருக்கு வந்தவுடன் முதலாவதாக இறையில்லம் கஅபாவை தவாப் செய்தார்கள். பின்னர் மகாமே இப்ராஹீம் என்னுமிடத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுகையை நிறைவேற்றினார்கள். பின்னர் ஸபா மவைக்குன்றின் மீது ஏறிச் சென்றார்கள். அதற்கிடையே தொடர்ந்து இறைவனைப் புகழந்து துதித்துக் கொண்டும் துஆ செய்து (இறைஞ்சிக்) கொண்டுமிருந்தார்கள். தவாபையும் ஸபா, மர்வா குன்றுகளிடையே தொங்கோட்டத்தையும் முடித்துக் கொண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வியாழக்கிழமை 8ஆம் தேதியன்று முஸ்லிம்கள் அனைவரோடும் மினாவில் தங்கினார்கள்.
இரண்டாம் நாள் துல்ஹஜ் மாதம் 9ஆம் தேதி வைகறைத் தொழுகை தொழுது மினாவிலிருந்து புரப்பட்டார்கள். அரஃபாத்துக்கு வருகை தந்தார்கள். இங்குதான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வரலாற்றுப் புகழ்பெற்ற சிறப்புரையை நிகழ்த்தினார்கள். அதில் இஸ்லாத்தின் அறிவுரைகள் முழுமையாகவும் கம்பீரத்துடனும் எடுத்துரைக்கப்பட்டன. இந்தப் பேருரையில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எல்லா முக்கிய விஷயங்களைக் குறித்தும் ஏவுரைகளை வழங்கினார்கள். அவற்றில் சில பின்வருமாறு:-

ஹஜ் பேருரை

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

'அறிந்து கொள்ளுங்கள் அஞ்ஞானக் கால வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன'.

'ஓர் அரபிக்கு, அரபியல்லாதவரை விடவோ, ஓர் அரபியல்லாதவருக்கு ஓர் அரபியை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லை, நீங்கள் அனைவரும் ஆதமின் வழித் தோன்றல்களே! ஆகமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்'

'முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள்'

'உங்கள் அடிமைகள் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். (அதாவது உங்கள் அடிமைகளுக்குரிய உரிமைகளைப் பேண்க்காப்பதில் கண்ணுங்கருத்துமாக இருங்கள்). நீங்கள் உண்பதையே அவர்களுக்கு ஊட்டுங்கள், நீங்கள் அணிவதையே அவர்களுக்கும் அணிவியுங்கள்.'
'அறியாமைக் காலத்தின் இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இனி பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. அனைவருக்கும் முதலாக நான் என் குடும்பத்தாரின் ரபூஆ பின் ஹர்ஸ் உடைய மகனுக்கான ரத்தப் பழியை ரத்து செய்கின்றேன். சொல்லாதென அறிவிக்கின்றேன்'.
'அறியாமைக்கால வட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. (இனி எவரும் எவரிடமும் வட்டி தரும்படி கோர உரிமை இல்லை) அனைவருக்கும் முதலாக நான் என் குடும்பத்தாரின் வட்டியை அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபிற்குரித்தான வட்டியை செல்லாதது ஆக்குகின்றேன்.'
'பெண்கள் விஷயத்தில் இறைவனை அஞ்சுங்கள். பெண்கள் மீது உங்களுக்கும் உங்கள் மீது பெண்களுக்கும் உரிமையுள்ளது.'
'இந்த நாளும் இந்த மாதமும் இந்த நகரும் கண்ணியத்திற்குரியனவாய் விளங்குவது போன்றே உங்கள் இரத்தமும் உங்கள் செல்வமும் இறுதித் தீர்ப்புநாள் வரை கண்ணியத்திற்குரியவை. ஒருவருக்கொருவர் அதனை மதித்து கண்ணியப்படுத்த வேண்டும்'.
'நான் உங்களிடம் ஒரு பொருளை விட்டுச் செல்கின்றேன். நீங்கள் அதனை வலுவாகப் பற்றிப் படித்துக் கொண்டால் வழிபிறழ்ந்து போக மாட்டீர்கள். அதுவே அல்லாஹ்வின் திருமறையாகும்'.--------
இதன் பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஷரீஅத்தின் அடிப்படைச் சட்டங்களை எடுத்துரைத்தார்கள். பின்னர் மக்கட் திரளை நோக்கி வினவினார்கள்:
'உங்களிடம் இறைவன் என்னைப் பற்றி விசாரித்தால் என்ன சொல்வீர்கள்?'.
'தாங்கள் இறைவனின் செய்தியை எடுத்துரைத்தது விட்டீர்கள். உங்கள் கடமையை நிறைவேற்றி விட்டீர்கள்' என்று நாங்கள் சொல்வோம் என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி விரலை உயர்த்தி மூன்று முறை 'இறைவா! நீயும் சாட்சியாக இரு!' என்று கூறினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் திருக்குர்ஆனின் இந்த வசனம் இறக்கியருளப்பட்டது:
'இன்று உங்களுக்காக உங்கள் நெறியை நிறைவு படுத்திவிட்டோம். நமது அருளை முழுமையாகப் பொழிந்து விட்டடோம். உங்களுக்காக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக அங்கீகரித்துக் கொண்டோம்.'
இந்த ஹஜ்ஜின் போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹஜ் எப்படிச் செய்ய வேண்டுமென்று ஹஜ்ஜின் வழிமுறைகள் அனைத்தையும் தாமே நிறைவேற்றிக் காட்டினார்கள். இந்த சந்தர்ப்பத்தில்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து ஹஜ்ஜின் சட்டங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு இன்னொரு ஹஜ் செய்ய எனக்கு வாய்ப்புக் கிடைக்குமா? கிடைக்காதா என்று நான் அறிய மாட்டேன்' என்று கூறினார்கள்.
இதே சந்தர்ப்பத்தில்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடம், 'இங்கே இருப்பவர்கள் அனைவரும் (இந்த அறிவுரைகள் அனைத்தையும்) இங்கில்லாதவர்களுக்கு எடுத்துரைக்கட்டும்' என்றும் கூறினார்கள்.

நோய்வாயப்படல்

ஹஜ்ரி 11-ல் ஸபர் மாதம் 18 அல்லது 19 தேதி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருளுடல் சற்று நலம் குன்றியது. அன்று புதன்கிழமை, சக்தியிருந்த வரை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதிற்கு வந்து தொழுகை நடத்தி வந்தார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நடத்திய கடைசித் தொழுகை மக்ரிப் தொழுகையாகும். தலைவலி இருந்த காரணத்தால் துண்டு ஒன்றை தலையில் கட்டிக் கொண்டு வந்தார்கள். தொழுகையில் 76 ஆவது அத்தியாயமான அல்முர்ஸலாத்தை ஓதினார்கள். இஷா நேரத்தில் பலவீனம் அதிகரித்தது. பள்ளிவாசலுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களால் வரமுடியவில்லை. அபூபக்ரு (ரலி) அவர்கள் தொழுகை நடத்தட்டும் என்று கூறினார்கள். ஆகவே பலநாட்கள் அபூபக்ரு (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள்.

இறுதி உரையும் ஏவுரைகளும்


இடையில் ஒரு நாள் உடல் சற்று நலம் பெற்ற போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குளித்தார்கள். பின்னர் மஸ்ஜிதிற்கு வருகை தந்தார்கள். உரையொன்றை நிகழ்த்தினார்கள். அது அண்ணலாh (ஸல்) அவர்கள் வாழ்வின் இறுதியுரையாகும். அதில் அவர்கள் அருளினார்கள்:
'இறைவன் தன் அடியார் ஒருவருக்கு 'நீ விரும்பினால் உலக நலன்களையோ அல்லது மறுமையில் இருக்கும் கொடைகளையோ தேர்ந்தெடுத்துக் கொள்' என உரிமையை அளித்தான். அந்த அடியாரோ இறைவனிடம் மறுமையில் உள்ள இறைக் கொடைகளையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்.'
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சாடையாக எதனைக் குறிப்பிடுகின்றார்கள் என்பதை இதைக் கேட்டவுடன் புரிந்து கொண்ட அபூபக்ரு (ரலிp) அவர்கள் அழத் தொடங்கினார்கள்.
அண்ணல் நபி (ஸல்) மேலும் நவின்றார்கள்:-
'அனைவரையும் விட அதிகமாக எவருடைய செலவத்திற்கும் நட்புக்கும் நான் கடமைப்பட்டிருக்கின்றேனே அவர் அபூபக்ரு (ரலி) அவர்களாவார். நான் உலகின் என் சமுதாயத்தவரிலிருந்து எவராவது ஒருவரை என் நண்பனாக ஆக்கிக் கொள்ள முடியுமென்றால் அபூபக்ரையே எடுத்துக் கொள்வேன். ஆனால் இஸ்லாத்தின் உறவே நட்புக்கு போதுமானதாகும்.
ஆம்! செவி சாயுங்கள்! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்கள் தம் இறைத்தூதர்கள் மற்றும் பெரியார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். இதோ பாருங்கள். நீங்கள் அத்தகைய நடத்தைளை மேற்கொள்ளக் கூடாது. நான் உங்களை அதனை விட்டும் தடுத்துவிட்டுச் செல்கின்றேன்'.
மேலும் கூறினார்கள்:
'ஹலால், ஹராம் (ஆகுமானது, தடுக்கப்பட்டது) என்னும் கட்டளைகளை (நானே பிறப்பித்ததாக்க் கருதி என்னுடன் இணைத்தப் பேசாதீர்கள். இறைவன் அகுமாக்கியுள்ளவற்றையே நான் ஆகுமாக்கியுள்ளேன். அவன் தடை செய்தவற்றையே நான் தடை செய்துள்ளேன்.'
நோய் வாய்ப்பட்ட இதே நிலையில் ஒருநாள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தாரை நோக்கி கூறினார்கள்:
'இறைத்தூதரின் மகளான ஃபாத்திமாவே! இறைத்தூதரின் அத்தையான சபிய்யாவே! இறைவனிடம் உங்களுக்குப் பயன்படும் எந்த நற்செயலாது செய்து கொள்ளுங்கள். நான் உங்களை இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்றிட முடியாது.'
ஒருநாள் நோயின் கடுமை அதிகமாக இருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் முகத்தில் போர் வையைப் போட்டுக் கொள்வார்கள். பிறகு எடுத்து விடுவார்கள். இந்த நிலையில் ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருநாவிலிருந்து பின்வரும் சொற்களைச் செவியுற்றார்கள்.
'யூதர்களின் மீதும் கிறஸ்தவர்களின் மீதும் இறைவனின் சாபமுண்டாகட்டும்! அவர்கள் தங்கள் இறைத்தூதர்களின் மண்ணறைகளை வணக்கஸ்தளங்களாக்கின் கொண்டார்கள்.'
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் எப்போதோ ஒரு முறை சில பொற்காசுகளைக் கொடுத்து வைத்திருந்தார்கள். அந்த அமைதியற்ற நிலையிலேயே ஒருமுறை, 'ஆயிஷாவே! அந்தப் பொற்காசுகள் எங்கே?' என்று வினவினார்கள். 'முஹம்மத் இறைவனின் பரிபாலிக்கும் ஆற்றலைக் குறித்து ஐயங்கள் கொண்டவனாக, அவனைச் சந்திப்பது விருப்பத்தக்கதா? உடனே அந்தப் பொற்காசுகளை இறைவழியில் தருமம் செய்து விடு!' என்று ஆணையிட்டார்கள்.
பேரருளானை நோக்கி...
நோய் சில வேளைகளில் அதிகரிப்பதும் சில வேளைகளில் குறைவதுமாக இருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்வின் இறுதிநாளான திங்கட்கிழமையன்று காலையில் அவர்கள் நோய் சற்று தளர்ந்ததாகத் தென்பட்டது. ஆனால் நேரம் செல்லச் செல்ல அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி மூர்ச்சையானார்கள்.

இந்த நிலையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருநாவிலிருந்து, 'அல்லாஹ் எவர்கள் மீது தன் அருளைப் பொழிந்தானோ அவர்களுடன்' என்னும் சொற்களை அடிக்கடி வெளிப்பட்ட வண்ணமிருந்தன. சிலவேளை, 'இறைவா! நீயே உயர்ந்த நண்பன்!' என்று கூறியவண்ணமிருந்தார்கள். சில வேளைகளில் 'இப்போது வேறு எவருமில்லை. அந்த உயர்ந்த நண்பனே தேவை!' என்று கூறிய வண்ணமிருந்தார்கள், இவ்வாறெல்லாம் பிரார்த்தித்த வண்ணம் இருந்தார்கள. பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித ஆத்மா பிரிந்தது.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வபாரிக்க வஸல்லம்

அல்லாஹ்வே, முஹம்மத் மீது அருள் வளம் பொழிவாயாக! அவருக்கு சாந்தி வழங்குவாயாக!
ஹிஜ்ரி 11-ல் ரபிய்யுல் அவ்வல் மாதத்தில் பொருமானார் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். மரணித்த நாள் திங்கட் கிழமை ஆகும்.

அடுத்த நாள் அவர்களின் உடல் குளிப்பாட்டி கபனிடப்பட்டது. மாலை நேரத்திற்குள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருவுடல் அவர்கள் மரணித்த அதே அறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

'நீரும் மரணிப்பவரே! அவர்களும் மரணிக்கக் கூடியவர்களே!' (39 : 30

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்.( 2:156).



, ,