குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

17.8.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஹஜ்
ஹஜ் கடமையாக்கப்பட்டதன் நோக்கம்


இஸ்லாத்தின்
தூண்கள் என்று
வருணிக்கப்பட்டுள்ள கடமைகளுள் இறுதியானது ஹஜ் எனும் கடமையாகும். மக்காவிலிருந்து ஆதி இறை இல்லமாம் கஅபாவை நோக்கி மேற்கொள்ளப்படும் புனிதப் பயணமே ஹஜ்.
இந்தப் புனிதப் பயணத்தை வாழ்வில் ஒருமுறையாவது மேற்கொண்டிடுவது உடல்பலம், மனபலம், பொருள் பலம் இவற்றையுடைய முஸ்லிம்களின் மீது கடமையாகும்.

தனது பொறுப்புக்களை உணருகின்ற வயதுக்கு வந்து விட்ட முஸ்லிம்கள் (ஆண், பெண் இருபாலரும்) போதிய பண வசதி படைத்தவர்கள் என்பதின் பொருள், தங்களுடைய சொந்தச் செலவுகளுக்கும், தங்களுடைய கடனைத் தீர்ப்பதற்கும் போதிய அளவு வசதி படைத்தவர்கள் என்பதாகும்.

ஹஜ் எனும் கடமை இஸ்லாத்திற்கே உரித்தானதொரு சிறப்பம்சமாகும். இஃது இறைவனால் பல்வேறு நோக்கங்களுக்காக பணிக்கப்பட்டதொரு கடமையாகும். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம் :

ஹஜ் ஈமானின் வருடாந்திர மாநாடாகும். அங்கே முஸ்லிம்கள் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்து குழுமுகின்றனர். ஒருவரையொருவர் தெரிந்து கொள்கின்றார்கள். தங்களின் பொதுவான பிரச்சினையைச் சித்தரிக்கின்றார்கள். விவாதிக்கின்றார்கள். உலக முஸ்லிம்களின் நல்வாழ்வுக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டுகின்றார்கள். ஹஜ் மனித வரலாற்றில் எங்ஙனம் காணமுடியாத அளவிற்கு நடத்தப்படும் மிகப் பெரிய அமைதி மாநாடாகும்.

ஹஜ் கடமையின் போது, அமைதியே மிகவும் முக்கியமானதாகும். இறைவனோடு அமைதிப்படுதல், தனது ஆன்மாவோடு அமைதிப்படுதல், சமுதாயத்தின் பிற உறுப்பினர்களோடு அமைதியாக இருத்தல், எல்லா உயிர்களுடனும் அமைதியாக இருத்தல் என்று ஹஜ் எனும் கடமை பொருள்படும். யாருடைய அமைதியை கலைப்பதும் ஹஜ் எனும் புனிதக் கடமையின் போது அனுமதிக்கப்படுவதில்லை.

இஸ்லாமெனும் இறைவனின் வழி காட்டுதல் அகிலத்தில் வாழும் மக்கள் அனைவருக்காவும் அருளப்பட்டதே! இதை வெளிப்படையாக எடுத்துக் காட்டும் கடமையே ஹஜ். மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே, அவர்களுக்குள் எந்த அடிப்படையிலேNயும் ஏற்றத் தாழ்வுகள் இல்லை, என்பதை உலக சகோதரத்துவத்தின் விழுமிய எடுத்துக் காட்டே ஹஜ்.

பல்வேறு நிறத்தைக் கொண்ட மனிதர்கள், பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள், பல்வேறு தொழில்களைச் செய்யும் மக்கள், பல்வேறு வகுப்பைச் சேர்ந்த மக்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள், இவர்கள் அனைவரும் தங்களுக்குள் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகின்ற உலக மாநாடே ஹஜ். இந்த மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டளைக்குப் பணிந்து, ஒரே நோக்கத்தோடு, ஒரே இலட்சியத்தோடு, ஒரே முழக்கத்தோடு, ஒரே விதமான உடையோடு. ஒரே செயல்முறைகளைப் பின்பற்றி ஏக இறைவன் முன் நிற்கும் அற்புதச் செயலே ஹஜ். அவர்கள் அனைவரும் ஏக இறைவனைத் தவிர வேறு யாருக்கும் பணிந்திட மாட்டோம் என முழங்குகின்றனர். அங்கு அத்துமீறிய செயல்களுக்கு இடமில்லை. அன்பு, பணிவு, அடக்கம், இறையச்சம் இவைகள் நிறைந்த ஒப்பற்ற மாநாடே ஹஜ்.

முஸ்லிம்கள், இறைவனுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயங்கிட மாட்டார்கள், என்ற உறுதியை வருடந்தோறும் புதுப்பித்து, புத்துயிர் அளித்திடும் மாநாடே ஹஜ். முஸ்லிம்கள் இறைபணியில் வரும் இழப்புகளைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்பதைப் பாரறிய பறையறிவித்து விடும் நாளே ஹஜ் நிறைவேறும் நாள்.

இந்தப் புனிதக் கடமையை நிறைவேற்றிடும் முஸ்லிம்கள் இறைவனின் இறுதித்தூதராம் முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்ந்த ஆன்மீகச் சூழ்நிலையோடும், வரலாற்றுச் சூழ்நிலையோடும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றனர். இது அவர்கள் புத்துணர்வு பெற்றிடவும் தங்களது நம்பிக்கையைப் பலப்படுத்திக் கொள்ளவும் கிடைத்த அரிய வாய்ப்பேயாகும். இதிலிரந்து அவர்கள் தாங்கள் மேற்கொண்ட இறைவனின் திருப்பணிகளுக்குத் தேவையான ஊக்கத்தைப் பெறுகின்றார்கள்.

நபி இப்றாஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) அன்று நிறைவேற்றி நிறைவடைந்த இறைச்சடங்குகளை நினiவு கூர்ந்து அதே சடங்குகளை நிறைவேற்றிக் களித்திடும் பெருவிழாவாக விளங்குகின்றது ஹஜ். இவர்கள் ஏக இறைவனின் ஆதி இறை இல்லத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்ட முதல் மனிதராவார்.

இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் முன் இப்படித் தான் மனிதர்கள் அனைவரும் எந்தப் பாகுபாடுமின்றி ஏற்றத் தாழ்வுகளின்றி தங்களது தீர்ப்புகளுக்காகக் காத்திருப்பார்கள் என்பதை நினைவுறுத்தும் செயலாக விளங்குகின்றது ஹஜ்.



டாக்டர் ஹமுத அப்த் அல் அத்தி.

, ,