குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

25.8.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஹஜ் செய்யும் பெண்களுக்காக
 ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாக இருக்கின்றது. இது மக்காவை நோக்கிய பயணத்தையும், இன்னும் சில சிறப்புத் தொழுகை, வணக்க வழிபாடுகள்,
தங்கியிருத்தல் போன்ற சிறப்பு வழிபாடுகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றது. இந்த ஹஜ்ஜுப் பயணமானது வசதி வாய்ப்புள்ள அனைத்து முஸ்லிம்களின் மீதும், ஒருமுறை ஹஜ்ஜுச் செய்ய வேண்டும் என்பது கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. ஹஜ் மாதமானது கீழ்க்கண்ட ஷவ்வால், துல்காஇதா, துல்ஹஜ் ஆகிய மூன்று மாதங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றது.
அல்லாஹ் இந்த ஹஜ்ஜுக் கிரியைகளை முழுமையாக நிறைவேற்றுபவர்களுக்கு அளப்பரிய நன்மைகளை வாரி வழங்குவதாகத் தன்னுடைய திருமறையிலே வாக்களித்துள்ளான். அதுவும் பெண்களுக்கு, ஆண்கள் ஜிஹாத் செய்தால் எத்தகைய கூலியை வழங்குவானோ, அத்தகைய கூலியை பெண்களுக்கு இந்த ஹஜ்ஜினைப் பூரணமாக நிறைவேற்றும் பொழுது வழங்குகின்றான். எனவே, ஹஜ்ஜுச் செய்வதற்கு வசதி வாய்ப்புள்ள பெண்கள் கண்டிப்பாக இந்த ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்களே! ஆண்களைப் போலவே நாங்களும் உங்களுடன் இஸ்லாமியப் போர்களில் கலந்து கொண்டு ஜிஹாத் செய்யலாமா? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் : பெண்களுக்கான ஜிஹாத் என்பது மிகவும் அழகிய முறையில் நிறைவேற்றப்பட்ட ஹஜ் மப்ரூர் ஆகும் என்றார்கள்.
இதனைச் செவியுற்ற நாளிலிருந்து நான் என்றைக்குமே ஹஜ்ஜுச் செய்வதிலிருந்து நான் ஒதுங்கியிருந்ததில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
எனவே, ஹஜ்ஜுச் செய்வதற்காகச் செல்லக் கூடிய பெண்கள் இஸ்லாமிய ரீதியில் தன்னை முதலில் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மஹ்ரத்தின் தேவை அவசியம்
ஒரு பெண்மணி ஹஜ் செய்வதற்காக தன்னுடைய வீட்டை விட்டு வெளிக் கிளம்ப வேண்டுமென்றால், அவளது கணவனது துணையுடனோ அல்லது அவள் தனக்கு மண முடிக்க இயலாத ஒருவரது துணையுடனும் அல்லது பல பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு குழுவை அமைத்துக் கொண்டு தான் அவர் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாகும். ஒரு வயதான பெண்ணுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது, அவள் மஹ்ரத்தின் துணையில்லை எனினும், ஹஜ் செய்யச் செல்லலாம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் : ஒருவர் மஹ்ரத்தின் துணையன்றி ஒரு பெண்ணுடன் தனித்திருக்கக் கூடாது. அதேபோல ஒரு பெண், மஹ்ரத்தின் துணையின்றி பயணமும் செய்யக் கூடாது. அப்பொழுது ஒரு மனிதர் எழுந்திருந்து கொண்டு இவ்வாறு கேட்டார் : இறைத்தூதர் (ஸல்) அவர்களே! நான் இந்த இந்த போரில் கலந்து கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், என்னுடைய மனைவி ஹஜ் செய்யச் சென்றிருக்கின்றாள், இந்த விவகாரத்தில் நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நீ சென்று அவளுடன் இணைந்து ஹஜ்ஜுச் செய்து கொள் என்று கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்).
அபுஹனீஃபா, அல் ஹஸன், அஹ்மது மற்றும் இஸ்ஹாக் ஆகியோர், மேற்கண்ட ஹதீஸின்படி ஒரு பெண் மஹ்ரத்தின் துணையின்றி ஹஜ்ஜுச் செய்யச் செல்லக் கூடாது என்று தடை விதித்திருக்கின்றார்கள்.
யஹ்யா பின் அப்பாத் அவர்கள் ஒரு செய்தியை இங்கு அறிவிக்கின்றார்கள்: ஒரு பெண் ஈராக்கில் இருந்து கொண்டு இப்றாஹீம் அன் நகயீ அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதத்தில் : நான் வசதியுள்ள பணக்காரப் பெண்மணியாக இருப்பினும், எனக்கு விதியாக்கப்பட்டிருக்கும் ஹஜ்ஜை நான் இன்னும் நிறைவேற்றவில்லை. எனக்குத் துணையாக வருவதற்கென மஹ்ரமான துணையும் இல்லை. இந்த நிலையில் நான் எவ்வாறு என்னுடைய ஹஜ்ஜை நிறைவேற்றுவது என்று கேட்டாள். அதற்கு அவர், யார் யாருக்கு அல்லாஹ் ஹஜ்ஜைக் கடமையாக்கவில்லையோ அத்தகையோர் வரிசையில் நீரும் இருக்கின்றீர் (அதாவது, உம்மீது ஹஜ் செய்வது கடமையில்லை) என்று பதில் எழுதினார்கள்.
ஷாஃபிஈ அறிஞர்களின் கருத்துப்படி, ஒரு பெண் தனக்கு மஹ்ரமான துணை எதுவும் இல்லை என்றால், ஒரு பெண்கள் குழுவுடன் இணைந்து அவள் தன்னுடைய ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற இயலும். இவர்களது இந்த முடிவு கீழ்க்கண்ட சம்பவத்தின் மூலம் பெறப்பட்டதாகும்.
அதாவது, உமர் (ரலி) அவர்கள் சில ஸஹாபாக்களின் உதவியுடன், அதாவது உத்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியவர்களுடைய துணையுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களை ஹஜ்ஜுச் செய்ய அனுமதித்தார்கள். ஆனால், அதிகமான அறிஞர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மூலமாக அறிவிக்கப்பட்ட ஹதீஸைத் தான் அதிக ஆதாரமுள்ளதாகக் கருதி, ஒரு பெண் மஹ்ரத்தின் துணையுடன் தான் ஹஜ்ஜுச் செய்யச் செல்ல வேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.
இப்பொழுது, வயது வந்த ஒரு பெண் ஹஜ்ஜுச் செய்யச் செல்லும் பொழுது, சரியான சிந்தனைத் தெளிவுடனும், உடல் ஆரோக்கியத்துடனும், இன்னும் பயணத் தேவைகளுக்குத் தகுந்த பொருளாதார வசதியுடனும் ஹஜ்ஜுச் செய்யச் செல்ல வேண்டும். அவர்இஹ்ராம் அணிந்த நிலையில் தன்னுடைய ஹஜ்ஜுப் பயணத்தைத் துவங்க வேண்டும்.
இஹ்ராம்
அவரது முகம் மற்றும் கையும் (மணிக்கட்டு மட்டும்) வெளியில் தெரியக் கூடிய அளவில் அவளுக்குப் பிடித்த எந்த உடையையும் இஹ்ராமாக அணிந்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கின்றது. இந்த உடைகள் ஏற்கனவே இஸ்லாம் வரையறுத்துத் தந்துள்ள வரையறைகளை மீறாமல் இருக்க வேண்டும் என்பது அவசியமாகும். அதாவது உடலை வெளிக் காட்டக் கூடிய மற்றும் உடல் உறுப்புக்களை கச்சிதமாகக் காட்டக் கூடிய இறுக்கமான உடைகளை அணிவது எல்லாக் காலங்களிலும் பெண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. பெண்கள் எப்பொழுதும் மிகவும் லூசான ஆடைகளையே அணிய வேண்டும் என்பது கட்டாயமாகும்.
அவள் கால் செருப்பு மற்றும் சூ அணிவதற்கும் அனுமதி உண்டு.
தல்பியா
பெண்களும் தல்பியாவைக் கூற வேண்டியது அவசியமாகும். ஆனால் அந்தத் தல்பியா அவளுக்கு மட்டும் கேட்கக் கூடிய அளவில் மிகவும் மெதுவாக இருத்தல் அவசியமாகும். அவளது சப்தம் பிறர் கேட்கும் அளவுக்கு தல்பியாவை உரத்துக் கூறக் கூடாது.
ஆண்கள் தல்பியா உரத்துக் கூற வேண்டும், ஆனால் பெண்கள் எந்தளவுக்கு தங்களது சப்தத்தைக் குறைத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு சப்தத்தை மிதப்படுத்தி, தல்பியாக் கூற வேண்டும்.
தல்பியா என்பது,
லப்பைக் கல்லாஹும்ம லப்பைக், லப்பைக்க லா ஷரீகலக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லகவல் முல்க் லா ஷரீகலக்
என்பதாகும்.
இஹ்ராமின் பொழுது தடை செய்யப்பட்டவைகள்
இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்படப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம் (உடலுறவு கொள்ளுதல்), கெட்ட வார்த்தைகள் பேசதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (2:197)
மேலே இறைவன் தெளிவாக்கி இருக்கின்ற அத்தனை தடைகளையும் இஹ்ராமில் இருக்கக் கூடிய பெண் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.
முற்றிலும் தடை செய்யப்பட்டவைகள் :
ஒரு பெண் தன்னுடைய சம்மதத்தின் பேரில் நடைபெறும் உடலுறவின் மூலம், ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படாததாக மாறி விடும். உடலுறவில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதோடு, மீண்டும் அடுத்த வருடம் இந்தக் கடமையை கண்டிப்பாக நிறைவேற்றியாக வேண்டும். இன்னும் அதிகமான அறிஞர்களின் கருத்துப்படி இவர்கள் ஒரு பலிப்பிராணியை அறுத்துப் பலியிடவும் வேண்டும்.
நகம் வெட்டுவது, முடியை மழிப்பது அல்லது பிடுங்குவது தடை செய்யப்பட்டுள்ளது
மேலே கூறப்பட்டுள்ளவைகளை வேண்டுமென்றே ஒருவர் செய்வாராகில், அவர் ஒரு பலிப்பிராணியை அறுத்துப் பலியிட வேண்டியது அவசியமாகும். ஆனால் வேண்டுமென்றே அல்லாமல் மறதியாக ஒருவர் அதனைச் செய்திருப்பராகில் அவர் பலிப்பிராணியை பலியிட வேண்டிய அவசியமில்லை.
வாசனைத் திரவியங்கள் பூசுவது, ஹிஜாப் (முகத்தை மறைக்கக் கூடியவை) மற்றும் கையுறைகள் அணிவது :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஹஜ்ஜுச் செய்யச் செல்லக் கூடிய பெண்கள் வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வதையும், முகத்திரை அணிவைதையும், கையுறைகள் அணிவதையும் இன்னும் தங்களை ஆடைகளில் காவி நிறச்சாயம் ஏற்றிக் கொள்வதையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடுத்திருக்கின்றார்கள். இதுதவிர அவர்கள் வேறு எந்த நிறத்திலும் ஆடை அணிந்து கொள்வதையும் இன்னும் பட்டாடைகள் அணிந்து கொள்வதையும், நகைகள் அணிந்து கொள்வதையும், கால்சட்டை, அல்லது சட்டை அல்லது ஸு போன்றவற்றையும் அவர்கள் அணிந்து கொள்ளலாம். (அபூதாவூது)
மேற்கண்ட தடை செய்யப்பட்ட விசயங்களைக் கடைபிடித்தவர்களாக பெண்கள் இஹ்ராம் அணிந்து கொண்டு தங்களது ஹஜ் பயணத்தைத் தொடரலாம்.
கஃபா வலம் (தவாஃப்) வருதலும், ஸயீச் செய்வதும்
கஃபா வருதல் என்பது கஃபாவின் மீதுள்ள கருப்புக் கல்லில் இருந்து ஆரம்பித்து, கஃபாவை ஏழு முறை வலம் வருவதைக் குறிக்கும். நெருக்கடி இல்லாமல் கருப்புக் கல்லைத் தொட்டு முத்தமிட முடியும் என்ற நிலையிருந்தால், தஃவாபிற்கு முன்போ அல்லது பின்போ கருப்புக் கல்லை முத்தமிட்டுக் கொள்ளலாம். ஆனால் ஹஜ்ஜுக் காலங்களில் இது சாத்தியமற்றது. இன்னும் வலம் வரும் பொழுது, யாரையும் இடித்துத் தள்ளாமலும், பிறருக்கு இடையூறு இல்லாமலும் வலம் வருவது அவசியமாகும். ஆண்களுக்கு சொல்லப்பட்டுள்ளது போல, பெண்கள் ஆரம்ப மூன்று வலம் வருதலின் பொழுது வேகமாக நடந்து வலம் வர வேண்டிய தேவையில்லை.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
தவாஃபின் பொழுதும், ஸயீ ன் பொழுதும் பெண்கள் ஆண்களைப் போல சிறு ஓட்டம் ஓட வேண்டிய அவசியமில்லை. (பைஹகீ)
கஃபாவை ஏழு முறை வலம் வந்ததன் பின்னால், மகாமே இப்றாஹீம் என்ற இடத்தில் நின்று கொண்டு இரண்டு ரக்அத் தொழ வேண்டியது சுன்னத்தாகும். இந்த மகாமே இப்றாஹீம் என்ற இடத்தில் தொழ இடம் கிடைக்கவில்லை என்றால், கஃபா வைச் சுற்றியுள்ள பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பான பகுதியில் நின்று தொழுகையை நிறைவேற்ற வேண்டும். இதனையடுத்து, ஸம்ஸம் நீரை அருந்த வேண்டும். ஹஜ்ஜுக் காலங்களில் அதிகமான ஜனத் திரளுக்கு மத்தியில் ஒரு பெண் ஹாஜி எப்பொழுதும், ஆண்களின் நெரிசல் அதிகமான பகுதியைத் தவிர்த்து பெண்களுக்குப் பாதுகாப்பான பகுதியைத் தேர்ந்தெடுத்து தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும்.
மற்ற கடமைகள் அனைத்தும் ஆண்களைப் போலவே பெண்களும் நிறைவேற்ற வேண்டும். இன்னும் பெண்களுக்குள்ள மாதவிடாய் போன்ற பிரச்னைகளுக்கு ஹஜ் வழிகாட்டி என்ற நூலைப் பார்வையிடுக.
, ,