குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

17.11.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நெஞ்சாரத் தழுவி ஸலாம் கூறல்
நெஞ்சாரத் தழுவி ஸலாம் கூறும் முறை இடத்துக்கு இடம் மாத்திரமன்றி, ஆளுக்காளும் மாறுபடுகின்றது.
almighty-arrahim.blogspot.com

ஸலாத்தை வெளிப்படுத்தும் சில முறைகள் குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தனது நண்பரைச் சந்திக்கும் போது அவருக்காகக் குனிய முடியுமா? என்று கேட்டார்.
அதற்கு அன்னார் ''இல்லை'' என்றார்கள். 'அவரை நெருங்கி முத்தமிட முடியுமா?' என்று மீண்டும் கேட்டார். அதற்கும் அவர்கள் ''இல்லை'' என்றார்கள். கைலாது (முஸாபஹா) கொடுக்க முடியுமா?'' என்று தொடர்ந்தும் அவர் கேட்ட போது, ''ஆம், அவர் விரும்பினால்'' என்ப பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : அஹ்மத்)

ஸலாம் கூறும் போது நெஞ்சாரத் தழுவிக் கொள்வதை (முஆனகா) இந்த ஹதீஸ் தடுக்கவில்லை என்ற வகையில், அடிப்படையில் அது ஆகுமானதாகிறது.

''நபி (ஸல்) அவர்கள் என்னை தமது நெஞ்சோடு அணைத்து, ''யா அல்லாஹ், இவருக்கு மார்க்கத்தில் அறிவையும் விளக்கத்தையும் கொடுப்பாயாக..!'' எனப் பிரார்த்தித்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸை விளக்கும் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள், ''அடுத்தவர்களின் குழந்தைகளை இரக்க உணர்வின் காரணமாக மடியில் தூக்கி வைத்துக் கொள்ள முடியும் என்பதை இது காட்டுகிறது'' என்றார்.

தமது புதல்வி இறப்பதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் தமது நெஞ்சோடு அவரை அணைத்து இரு கைகளிலும் ஏந்திக் கொண்டார்கள். அன்னாரது கரங்களில் இருக்கும் போது அப்புதல்வியின் உயிர் பிரிந்தது.

ஹஸன் (ரலி), ஹுஸைன்(ரலி) ஆகிய இருவரையும் கூட நெஞ்சாரத் தழுவுபவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அபீஸீனிய ஹிஜ்ரத்திலிருந்து திரும்பியதும் நபியவர்கள் அவரைக் கட்டித் தழுவினார்கள்.

அதே போல் இப்னுத் தீஹான் என்ற அன்ஸாரித் தோழரை அவரது வீட்டில் அல்லது தோட்டத்தில் தரிசித்த போதும் அன்னார் கட்டித் தழுவினார்கள்.

இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களோடும் அன்புக்குரியவர்களோடும் நடந்து கொண்டார்கள். இது அவர்களது உயர்ந்த பண்பாட்டை மாத்திரமன்றி, அடுத்தவர்களை சிறந்த முறையில் வரவேற்றிருப்பதையும் காட்டுகிறது.

'நபி (ஸல்) அவர்களது தோழர்கள் சந்தித்துக் கொள்ளும் போது கைலாகு கொடுப்பார்கள். பிரயாணத்திலிருந்து திரும்பி வந்தால் கட்டித் தழுவுவார்கள்' என அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அதோ, ஜாபிர் பின் அப்தில்லாஹ் அவர்கள் நபியவர்களைப் பற்றி ஷாமிலுள்ள ஹதீஸொன்றைக் கேட்பதற்காக அப்துல் பின் அனஸிடம் சென்ற போது இருவரும் முதலில் என்ன செய்துகொள்கிறார்கள் பாருங்கள்..! ''அவரும் நானும் கட்டித் தழுவிக் கொண்டோம்'' என்கிறார் ஜாபிர் எவ்வளவு அழகிய தழுவல்?!

இதே தந்தையும் பிள்ளையும்.. .. .. கணவனும் மனைவியும்.. .. .. . .

ஆசிரியரும் மாணவரும் .. . . . . . உறவினரும் உறவினரும் .. .. .. .

நண்பனும் நண்பனும் .. .. .. .. தழுவிக் கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் அனுபவிக்கும் உணர்வுகள் தான் என்ன..!? பாசம், காதல், இரக்கம், கண்ணியம், மதிப்பு, பச்சாதாபம்.., என கட்டித் தழுவலுக்கு பல பொருள்கள் உண்டு.

கட்டித் தழுவுவோர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றனர். அன்பின் ஆகர்ஷணம் இறையச்சமுள்ளோரை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொருவர் உள்ளத்திலும் அடுத்தவர் பற்றிய உயர்ந்த எண்ணம் எழுகிறது. அடுத்தவரின் வழிகாட்டல், உபதேசம், நினைவூட்டல் என்பவற்றை; மகிழ்ச்சியோடும் திறந்த மனதோடும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஏற்படுகிறது.

எனினும் இங்கு ஒரு விசயம் கவனத்திற்குரியது. பெற்றோருக்கும் மனைவி மக்களுக்கும் இச்செயல் எல்லையின்றி அனுமதிக்கப்படும் அதேவேளை ஏனையோருக்கு மத்தியில் தொடர்ச்சியாகவன்றி விட்டு விட்டு நிகழவே அனுமதிக்கப்படுகிறது. ஆழமான பாதிப்பை அது மனதில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக..!

நன்றி : இஸ்லாமியச் சிந்தனை




, ,