குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

24.5.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மரணித்தவர்கள்

இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். 4:18


மரணித்தவர்கள் விஷயமாக மக்களிடம் காணப்படுகின்ற தவறுகள் 

1) மரணத்தை நினைப்பதில் கவனக்குறைவு

2) மரண தருவாயில் மரண உபதேசம் செய்வது

மரணத்திற்கு முன்பு யாராவது வசியத்துச் செய்யும்படி அறிவுறுத்தினால், இப்பொழுது வேண்டாம், இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பின்பு செய்யலாம் என்று சொல்வது.

சுப்ஹானல்லாஹ்..! எப்படி இவ்வாறு சொல்ல முடியும். நமது வாழ்க்கைக்கு யார் உத்ரவாதம் கொடுக்க முடியும்.

யாராவது வசிய்யத்துச் செய்ய நாடினால் உடனே செய்யட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரீ, முஸ்லிம்)

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நான் இந்த நபிமொழியைக் கேட்ட உடன் என்னுடைய மரண சாசன(வசிய)த்தை எழுதி விட்டேன்.



3) மய்யித்தை அடக்கம் செய்த பின்பு துக்கம் விசாரித்தல், அதற்காக விருந்து உபசரிப்பு, குர்ஆன் ஓதுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுதல். ஆனால் இவை அனைத்தையும் விட முக்கியமானது எதுவென்றால், இறந்தவரின் கடனை நிறைவேற்றாமல் இருப்பது தவறாகும். கடனை அடைப்பது அனைவர் மீதும் உள்ள முக்கியக் கடமையாகும். எது முக்கியமோ அதனை விட்டு விட்டு, முக்கியம் இல்லாத விருந்து போன்ற காரியங்களில் ஈடுபடுவது தவறானதாகும்.

4) உயிரை வாங்கும் மலக்கு இஸ்ராயீல் என்று குறிப்பிடுவது தவறாகும். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

5) மய்யித்திற்குக் குர்ஆன் ஓதுதல் அல்லது சூரா யாஸீன் ஓதுதல் இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது. இறந்ததில் இருந்து குளிப்பாட்டுவது எரை அல்லது மரண நிலையில் ஓதுவது - இதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது. ஓதுவதற்கே ஆதாரம் இல்லை என்னும் பொழுது, குர்ஆனை ஓதியதற்குக் கூலியாக பணம் பெறுவது எவ்வாறு இயலும்?

6) மரணிக்கும் போது அல்லது இறந்து குளிப்பாட்டும் வரை குர்ஆனை தலை அல்லது நெஞ்சில் மீது வைப்பதும் தவறானதாகும்.

7) ஒப்பாரி வைப்பது, அல்லது சப்தம் போட்டு அழுவது, தலைவிரி கோலமாக இருப்பது, சட்டையைக் கிழித்துக் கொள்வது கூடாத செயலாகும். மரணம் என்பது அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளது என்பதை மறந்து விட்டு, அல்லாஹ்வை இவ்விஷயத்தில் திட்டுவது, எத்தனையோ பேர்கள் இருக்க இவரது உயிரையா வாங்க வேண்டும் என்று சொல்வது கூடாது. ஓர் முஸ்லிம் 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' என்று தான் சொல்ல வேண்டும்.

8) கணவன் மனைவியையோ அல்லத மனைவி கணவனையோ குளிப்பாட்டக் கூடாது என்று சொல்வது கூடாது. சில நபித் தோழர்கள் இவ்வாறு செய்துள்ளதற்கு ஆதாங்கள் இருக்கின்றன.

9) மய்யித்தை அடக்கம் செய்யக் கொண்டு செல்லும் போது ஆயத்துல் குர்ஸி அல்லது வேறு ஏதாவது சில ஆயத்துக்கள் எழுதிய துணியால் மய்யித்தை மூடிக் கொண்டு செல்லுதல், தவறான நடைமுறையாகும்.

10) இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட நேரமான சூரிய உதயம், சூரியன் உச்சியில் இருக்கும் பொழுது, அஸ்தமனம் ஆகிய நேரங்களில் ஜனாஸா தொழுகையை தொழுவது, அல்லது அடக்கம் செய்வது. மேற்கூறிய நேரம் சுமார் 15 நிமிடம்

11) கப்ர்ஸ்தானில் பர்ளு தொழுகை அல்லது நபில் தொழுகையை தொழுவது கூடாது. காரணம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பூமி அனைத்தும் தொழுவது கூடும். ஆனால் கப்ர்ஸ்தானில் அல்லது கழிவறையில் தொழுவது கூடாது. ஆனால் ஜனாஸா தொழுகையை கப்ர்ஸ்தானில் தொழ வைப்பது கூடும். கப்ர்ஸ்தானில் தொழுவது அல்லது துஆக் கேட்பது, இணைவைப்பில் கொண்டு போய் விடும் என்பதால் அவ்வாறு செய்வது கூடாது.

12) ஜனாஸா தொழுகையை பிற்படுத்துவதும் தவறு. சொந்த பந்தங்கள் வந்து சேர்வதற்கோ அல்லது குர்ஆனை ஓதி முடிப்பது வரைக்கும் பிற்படுத்துவதும் மார்க்கத்தில் இல்லாத நடைமுறையாகும்.

சுன்னத் எதுவென்றால் இறந்தவுடன் மய்யித்தை சீக்கிரம் கொண்டு போய் அடக்கம் செய்வது தான். சொந்த பந்தங்கள் தாமதமாக வருவார்களென்றால், அவர்கள் கப்ரில் ஜனாஸா தொழுகை நடத்துவது கூடும்.

13) மய்யித் தொழுகையில் இமாமுக்கு நேராக மய்யித்தின் சொந்தக்காரர் நிற்பது - இதுவும் மார்க்கத்தில் இல்லாத நடைமுறையாகும். இமாமுக்குப் பின்னால் தான் மற்றவர்கள் நிற்க வேண்டும். அதுதான் சிறந்த நடைமுறையாகும்.

14) இறந்தவர் தொழாதவராக இருந்தால், அவரது மய்யித்துத் தொழுகையை முற்படுத்துதல் - இது பெரும் தவறு. காரணம், சாதாரணமாக ஒரு முஸ்லிம் தொழாமல் இருப்பது பெரும் குற்றம். இம்மனிதரை எப்படி முற்படுத்த முடியும். இது மற்றவர்களை ஏமாற்றுவதாகும். உண்மையில் ஒருவன் வேண்டுமென்றே தொழுகையை விட்டால், அவன் இஸ்லாத்தை விட்டு வெறியேறி விட்டவனாவான்.

தொழுகையை விட்டவன் இறந்தால் அவனைக் குளிப்பாட்டக் கூடாது. கபன் செய்யக் கூடாது. தொழ வைக்கவும் கூடாது. முஸ்லிம்களுடைய கப்ர்ஸ்தானில் அவனை அடக்கம் செய்யவும் கூடாது. எவரும் அவனுடைய வாரிசாக மாட்டார்கள். அவனது உடமைகளும் பிறருக்கு வாரிசாக மாட்டாது. அவனுடைய மனைவி அவனுக்கு ஹலாலானவள் அல்ல. அவன் அறுத்த மாமிசத்தை சாப்பிடக் கூடாது. அவன் அவனுடைய பிள்ளைகளுக்கும் பொறுப்பாளியாக முடியாது. இத்தகையவனுக்கு பாவ மன்னிப்பும் கேட்கக் கூடாது. அவனுக்காக இரக்கம் காட்டக் கூடாது. காரணம் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்ட, நிராகரிப்பாளனாவான்.

15) ஒரு முஸ்லிம் ஜனாஸா தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவது அல்லது எவ்வாறு தொழுவது ஆகிய முறைகளை அறிந்து கொள்ளாமல் இருப்பதும் தவறாகும்.

16) நான்கு மாதம் பூர்த்தியாகி விட்ட, சிசுவுக்கு தொழுகை வைக்காமல் இருப்பது தவறாகும். காரணம் நான்கு மாதம் பூர்த்தியாகி விட்ட சிசுவுக்கு உயிர் கொடுக்கப்பட்டு விடுகின்றது என்பதே காரணமாகும். எனவே, குளிப்பாட்டி தொழ வைக்க வேண்டும். ஆனால் நான்கு மாதத்திற்கு முன்பு தொழ வைக்க வேண்டிய தேவையில்லை.

17) ஸாலிஹான நல்லடியாராக இருந்தால் அவரது ஜனாஸா கனம் இல்லாமல் இருக்கும் என்று நம்புவது தவறாகும். இதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.

18) மய்யித்தைத் தூக்கிச் செல்லும் போது மிகவும் மெதுவாகச் செல்லுதல் தவறாகும். மய்யித்தை விரைவாகக் கொண்டு செல்வது தான் சுன்னத்து. மய்யித்தை விரைவாகக் கொண்டு செல்லுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

19) தக்பீர்; மற்றும் தஸ்பீஹ், கலிமா ஆகியவற்றை சப்தம் போட்டுச் சொல்லிக் கொண்டு செல்லுதல் அல்லது இவைகளைச் சொல்லுங்கள் என்று பிறரை ஏவுவதும் தவறான செயல்களாகும்.

20) ஜனாஸா தொழுத பின்பு கைகளை உயர்த்தி கூட்டாக துஆச் செய்வது கூடாது.

21) மய்யித்தை தொழ வைப்பது மற்றும் அடக்கம் செய்வது விஷயத்தில் அலட்சியமாக இருப்பது கூடாது. யார் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. யார் அடக்கம் செய்வதிலும் கலந்து கொள்கிறார்களோ அவருக்கு இரண்டு கீராத்து நன்மையுண்டு என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நபித் தோழர்கள் கீராத் என்றால் என்ன என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவிய போது, ஒரு கீராத் என்பது பெரிய மலையைப் போல் உள்ள நன்மை என்று பதில் கூறினார்கள். (ஆதாரம் : புகாரீ, முஸ்லிம்)

22) யார் ஜனாஸாத் தொழுகையைத் தொழுகிறார்களோ அவருக்கு கண்வலி வராது, மற்றும் கண் பார்வை நன்றாக இருக்கும் என்று நம்புவதும் தவறானதாகும்.

23) யாராவது இறந்து விட்டால் அவர் பயன்படுத்திய ஆடை மற்றும் படுக்கை தலையணைகளை வீட்டை விட்டும் அப்புறப்படுத்துவது மற்றும் இறந்தவர் பயன்படுத்தியவற்றை உபயோகிக்கக் கூடாது என்று நம்புவதும் கூடாது.



கப்ரு விஷயமாக மக்களிடம் உள்ள தவறுகள் மற்றும் பித்அத்கள்

 இரவில் அடக்கம் செய்வதை வெறுப்பது. இவ்வாறு செய்வது குற்றம் இல்லை.

இறக்கும் முன்பே ஏதாவது ஓர் இடத்தைக் குறிப்பிட்டு குழி தோண்டி தயார் செய்வது அல்லது இதற்காக வசியத்துச் செய்வது

மய்யித்தை அடக்கம் செய்யும் போது எவ்வித பயமும் இல்லாமல் வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது

 மய்யித்தை கப்ரில் வைக்கும் போது பாங்கு அல்லது இகாமத் சொல்வது அல்லது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்வது. ஆனால் மய்யித்தை கப்ரில் வைக்கும் போது, 'பிஸ்மில்லாஹி வ அலா மில்லத்தி ரசூலுல்லாஹி' என்று சொல்வது சுன்னத்தாகும். (பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயராலும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மாக்கமான இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நிலையிலும் இம் மய்யித்தை கப்ரில் வைக்கின்றேன்).

 மய்யித்தை அடக்கம் செய்யும் போது இறுதி வீட்டை அடைந்து விட்டார் என்று சொல்வது - இப்படிச் சொல்வது தவறாகும். காரணம் ஓர் மனிதனுக்கு இறுதியானது என்பது சொர்க்கம் அல்லது நரகமாகும்.

அடக்கம் செய்யும் போது, 'இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்'. (20:55)

என்ற இறைவசனத்தை ஓதுதல் தவறானதாகும்.

 குழி தோண்டிய மண் அனைத்தையும் திரும்பவும் புதைக்க வேண்டும் என்று நம்புவதும் தவறாகும்.

எ மய்யித்தை அடக்கம் செய்யும் போது அடக்கம் செய்பவர்களுக்கு உதவி செய்யாமல் ஒதுங்கி நிற்பது நல்லதல்ல. ஆனால் அவர்களுடன் சேர்ந்து அடக்கம் செய்தால் முழு நன்மையும் உண்டு. உதாரணமாக மூன்று பிடி மண்ணையாவது அள்ளிப் போட வேண்டும்.

ஒரு சாண் அளவுக்கு மேல் கப்ரை உயர்த்தக் கூடாது.

அடக்கம் செய்த பின்பு தலைமாட்டில் இருந்து 'தல்கீன்;' ஓதுதல் - இதற்கு மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை.

அடக்கம் செய்த பின்பு அம் மய்யித்திற்கு பாவ மன்னிப்பு தேடாமல் இருப்பது. அல்லது கப்ரில் மலக்குகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதற்கு அல்லாஹ்விடம் துஆச் செய்யாமல் இருப்பது. இந்த சுன்னத்துக்கள் இக்காலத்தில் மிகவும் அரிதாகி விட்டது.

எ அடக்கம் செய்த பின்பு கப்ரில் மய்யித்தின் பெயர், அல்லது இறந்த தேதி ஏதாவது குர்ஆன் ஆயத்தை எழுதுவது - இதுவும் தவறான செயலாகும்.

மய்யித்தை வீட்டை விட்டு கொண்டு செல்லும் போதும் அல்லது கப்ரில் இறக்கி வைக்கும் போதும் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை அறுப்பது. இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

அடக்கத்தளத்தைக் கண்ணியப்படுத்தாமல் இருப்பது.

எ உதாரணமாக : கப்ரு மீது உட்டகாருவது அல்லது கப்ருகளை செருப்புக் காலால் மிதிப்பது அல்லது கப்ருகளில் மலம் ஜலம் கழிப்பது. இவ்வாறு செய்வதால் கப்ரில் அடங்கப்பட்டவர்களை கண்ணியப்படுத்தாமல் நோவினை செய்கிறோம்.

கப்ருகள் மீது குப்பைகளைக் கொட்டுவது அல்லது அசிங்கப்படுத்துவது. மண்ணறையின் சுற்றுப் புறச் சுவர்கள் இடிந்து இருந்தால் இவ்வாறு செய்வது மக்களின் பழக்கமாகி விடுகின்றது.

பேரீத்தம் மட்டைகள் போன்ற ஏதாவது பச்சை மரங்களை கப்ரில் வைப்பது

எ கப்ருகளில் விளக்கேற்றுவது

எ அவ்லியா உடைய கப்ருகளை கண்ணியப்படுத்துகிறோம் என்று சொல்லி மரம், செடி அல்லது கொடி மரங்களை நடுதல். இவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறுபவர்களை, அவ்லியாக்களை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டுவது.

கப்ரு ஜியாரத்தில் இரண்டு வகை உண்டு. 1.ஷிர்க் 2. பித்அத்.

 ஷிர்க் என்றால் இறந்தவர்களிடம் தங்களின் நாட்டங்களை வேண்டுவது, மற்ற தேவைகளைக் கேட்பது. இந்த ஜியாரத்தால் பரக்கத்து உண்டாகும் என்று நம்புவது. இறந்தவர்க்கு நேர்ச்சை செய்வது, கப்ருகளை வலம் வருதல் ஆகிய அனைத்தும் ஷிர்க் ஆகும்.

பித்அத் ஜியாரத் என்பது கப்ரில் போய் தொழுதல் அல்லது அங்கு போய் ஏதாவது தான தர்மங்களைச் செய்தல், அல்லது குர்ஆன் ஓதுதல் அல்லது இறந்தவர்களின் பொருட்டால் எதையாவது வேண்டிக் கொள்வது.

 கப்ருகளை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பயணம் செய்வது தவறாகும். இப்பயணம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய கப்ரைச் சந்திக்கச் செல்வதாக இருந்தாலும் சரியே! உண்மையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களது பள்ளிக்குத் தான் பயணம் செய்ய வேண்டும். ஆனால் அங்கு சென்ற பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களது கப்ரில் ஸலாம் சொல்வது சுன்னத்து ஆகும். இதே போல் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) அவர்களுடைய கப்ருகளுக்கும் ஸலாம் கூறுவது சுன்னத்தாகும்.

 வெள்ளிக் கிழமை அல்லது பெருநாள் அன்று கப்ரு ஜியாரத்தை குறிப்பாகச் செய்வதும் தவறாகும்.

 கப்ரில் அடங்கப்பட்டவர்களுக்கு ஸலாம் கூறும் போது கப்ரில் கை வைப்பது அல்லது எதையாவது வைப்பதும் தவறு.

ஸலாம் கூறும் போது இன்னாருக்கு நான் ஸலாம் கூறுகின்றேன் என்று பெயர் கூறுவதும் தவறாகும்.

 ஜியாரத்துச் செய்யும் போது, கப்ரில் தண்ணீரை ஊற்றுவதும் தவறாகும்.

 கப்ருகளில் குர்ஆன் ஓதுவதும் தவறாகும்.

எ மதீனாவில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய கப்ரு இல்லை என்றால், அல்லாஹ்வுடைய பள்ளிவாசலுக்கு எவ்வித சிறப்பும் இல்லை என்று சொல்வது. இவ்வாறு தான் சூபியாக்கள், கப்ரு வணங்கிகளும் மற்றும் குராபிகளும் சொல்கின்றார்கள். இதற்கு இஸ்லாத்தில் எவ்வித ஆதாரமும் கிடையாது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய கப்ரில் ஸலாம் கூறுவதை திரும்பத் திரும்பச் சொல்வது. அதாவது ஒரு தடவை ஸலாம் கூறிவிட்டு திரும்பவும் வந்து ஸலாம் கூறுவது.

எ கப்ரு ஜியாரத்தை விட்டும் அலட்சியமாக இருப்பது கூடாது.

 கப்ருகளில் மலர் வளையம் வைப்பது. இது காபிர்களுடைய செயலுக்கு ஒப்பாகும். இது இஸ்லாத்தில் கிடையாது.

 யார் ஹஜ்ஜு செய்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய கப்ரை ஜியாரத்துச் செய்யவில்லையோ, அவர்களுடைய ஹஜ்ஜு நிறைவேறாது அல்லது குறைபாடு உடையாதாகும் என்று சில சூபியாக்கள் கூறுகின்றார்கள். இதற்கு இஸ்லாத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை. இவ்வாறு வரும் ஹதீஸ்கள் அனைத்தும் இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களாகும்.

துக்கம் விசாரிப்பதில் உள்ள தவறுகள் மற்றும் பித்அத்கள்

துக்கம் விசாரிக்கின்றோம் என்ற பெயரில் பெருங்கூட்டமாக ரோடு, தெரு ஆகியவைகளை அடைத்து விடுதல், இதற்காக பெரும் விழாவாக பல வண்ண வண்ண விளக்குகளை எரித்தல், அரசாங்க வேலை அல்லது தனியார் கம்பெனிகளில் விடுமுறை விடுதல் ஆகிய அனைத்தும் பித்அத்களாகும்.

 இதில் சுன்னத்து எதுவெனில், இறந்த வீட்டார்களை எங்கு பார்த்தாலும் சந்தித்து துக்கம் விசாரிப்பதே போதுமானதாகும்.

துக்கம் விசாரிக்க பெருங் கூட்டமாக வந்து அவர்களுக்கு விருந்து கொடுப்பதற்காக இறந்த வீட்டார்கள் பெரும் சிரமம் எடுத்துக் கொள்வது இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

 இறந்த வீட்டில் மய்யித்தை அடக்கம் செய்த பின்பு கூட்டமாக கூடி அவர்களுக்கு விருந்தளிப்பது, மய்யித்துக்கு ஒப்பாரி வைப்பதற்குச் சமமாகும் என்று நபித்தோழர்கள் கூறுகின்றார்கள்.

சுன்னத்தான நடைமுறை எதுவென்றால், மற்றவர்கள் தான் இறந்தவரது வீட்டார்களுக்கு சாப்பாடு போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

 இங்கு சிலர் சொல்லலாம். இது விஷயத்தில் விருந்து கொடுக்கவில்லை என்றால், மக்கள் இவர்களை கஞ்சன் என்று சொல்லக் கூடும். ஆனால் இதற்கான விருந்து கொடுப்பது பித்அத் ஆகும். ஆனால் இறந்தவர் பெயரால் ஏழைகளுக்கு உணவு கொடுத்தால் அதற்கு நன்மையுண்டு.

 இறந்தவர்களுடைய விருந்துக்கு அழைக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறாகும்.

இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதுவதற்காக குர்ஆனின் பிரதிகளை பல பேர்களிடம் கொடுப்பது. காரணம், குர்ஆனை ஓதி முடிப்பதற்கு, இவ்வாறு செய்வது பித்அத் ஆகும். இதற்கு ஆதாரம் ஏதுமில்லை.

எ மய்யித்தை அடக்கம் செய்த பின்பு தான் துக்கம் விசாரிக்க வேண்டும் என்று சொல்வது. இது தவறு. இறந்தவுடன் துக்கம் விசாரிக்கலாம்.

 பெருநாள் அன்று துக்கம் விசாரிக்காமல் இருப்பது. இது தவறு. அல்லது இதற்காக பெருநாளையில் வாழ்த்துச் சொல்லாமலும் இருப்பது.

எ மூன்று நாட்களுக்கு மட்டும் துக்கம் விசாரிப்பது. இதுவும் தவறு. காரணம் எப்போது மரணச் செய்தி கேள்விப்பட்டோமோ, அப்போது விசாரிக்கலாம். துக்கம் விசாரிப்பது என்பது இறந்த வீட்டார்களுக்கு ஆறுதல் அளிக்கும். எனவே, மூன்று நாளைக்குப் பின்பும் துக்கம் விசாரிக்கலாம்.

 துக்கம் விசாரிப்பவர் இறந்த வீட்டார்களைப் பார்த்து, உங்கள் வாழ்நாள் அதிகமாகி விட்டது அல்லது நீங்கள் தப்பி விட்டீர்கள் என்று சொல்வதும் தவறாகும்.

 இறந்தவர்களுக்கு பாத்திஹா ஓதுவது அல்லது இறந்தவருடைய உயிர் (ரூஹ்)க்காக இந்தச் சாப்பாடு என்று சொல்வது தவறாகும்.

சிலர் இறந்தவர்களுக்காகக் குர்ஆன் ஓதி அவர்களுக்காக அதனைச் சாட்டுவதும், இந்த சூரா அல்லது இந்தக் குர்ஆனின் நன்மைகள் எல்லாம் அனைத்து இறந்தவர்களுக்கும் அல்லது அனைத்து முஸ்லிம்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன் என்று சொல்கின்றார்கள். இப்படிச் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குர்ஆன் உயிரானவர்களுக்குத் தான் இறங்கியதே தவிர, இறந்தவர்களுக்கு அல்ல.

யாராவது பெரும் பாவங்கள் செய்து இறந்து இருந்தால் அவர்களுக்காக துக்கம் விசாரிக்காமல் இருப்பது தவறாகும். இறந்தவர் முஸ்லிமாக இருந்தால் துக்கம் விசாரிக்க வேண்டும்.

 துக்கம் விசாரிக்கிறோம் என்று சொல்லி செய்தித் தாள்கள் அல்லது ஊடகங்களில் அறிவிப்புச் செய்து விட்டு நேரடியாகச் சென்று விசாரிக்காமல் இருப்பது தவறாகும்.

 சில பெண்கள் துக்கம் விசாரிக்க வரும் போது அழுது கொண்டே வந்து, அங்கு இருப்பவர்களையும் அழத் தூண்டுவது. இப்படிச் செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒப்பாரி வைப்பதற்குச் சமமாகும்.

 இறந்தவர்களைப் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர் என்றோ அல்லது ஷஹீது என்றோ அல்லது சுவனபதி என்றோ அல்லது அல்லாஹ்விடம் சேர்ந்து விட்டார் என்றோ சொல்லக் கூடாது. காரணம் மேற்கூறிய அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்குத் தான் தெரியும். மற்வர்களுக்குத் தெரியாது.

யாரையும் இவர் சுவர்க்கவாதி என்றோ அல்லது நரகவாதி என்றோ சொல்லக் கூடாது. ஆனால் நல்ல அடியார்களுக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்றும் பாவிகளுக்கு நரகம் கிடைக்கும் என்றும் நம்ப வேண்டும்.

இறந்தவர் முஸ்லிம் என்றால் அவருக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பைத் தேட வேண்டும்.

 வல்ல அல்லாஹ் எல்லா முஸ்லிம்களுக்கும் சுவனபதியை வழங்க கிருபை செய்வானாக..!
, ,