குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

18.7.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

சுவனப் பாதை
சுவனப் பாதை

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பின்வருமாறு கேட்டார் : ''நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றுகிறேன். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கின்றேன். ஹலாலான (அனுமதிக்கப்பட்டவை) கருமங்களை ஏற்று நடக்கிறேன். ஹராமான (அனுமதிக்கப்படாத) கருமங்களை விட்டும் தவிர்ந்து கொள்கிறேன். இவற்றை விட மேலதிகமாக எந்த செயலையும் நான் புரிவதில்லை.
இந்நிலையில் நான் சுவர்க்கம் நுழைவேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ''ஆம்'' எனப் பதிலளித்தார்கள்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த நபிமொழியை இமாம் முஸ்லிம் தனது ஸஹீஹ் முஸ்லிமில் 'அல்-ஈமான்' எனும் அத்தியாயத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த ஹதீஸின் முக்கியத்துவம் பற்றி அல் ஜுர்தானி பின்வருமாறு விளக்குகிறார் : ''இந்த ஹதீஸ் சிறப்பான இடத்தில் வைத்து நோக்கப்பட வேண்டும். இஸ்லாத்தில் அடிப்படையான, முக்கியமான அம்சங்களை இது உட்பொதிந்துள்ளது. பொதுவாக மனித செயற்பாடுகளை உள்ளம் சார்ந்தவை, உடல் சார்ந்தவை என்று பாகுபடுத்தினாலும் அவையனைத்தையும் மொத்தமாக அனுமதிக்கப்பட்டவை - அனுமதிக்கப்படாதவை (ஹலால், ஹராம்) என்று பிரிக்கலாம். ஒருவன் ஹலாலானவற்றை வாழ்வில் ஏற்று நடந்து ஹராமானவற்றை தவிர்ந்து கொண்டால் எத்தகைய சிக்கலுமின்றி பாதுகாப்பாக அவன் சுவனம் நுழைவான்'' என்ற கருத்தையே இந்த ஹதீஸ் எமக்குப் புலப்படுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் அருட்பிழம்பாக வந்தார்கள். மனிதர்களை நரகிற்கு இட்டுச் செல்லும் வழிகேட்டிலிருந்து மீட்டெடுத்து சுவனத்துக்கு அழைத்துச் செல்லும் நேர்வழியின் பால் வழி நடாத்த அல்லாஹ் தனது தூதரை உலகிற்கு அனுப்பினான். சுவனத்துக்குரிய பாதை மிகத் தெளிவானது. அந்தப் பாதையைப் புரிந்து கொண்டு அதில் பயணம் செல்வது எளிதானது. அதில் பயணிக்க விரும்புபவர்கள் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்குகளையும் வரையறைகளையும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். யார் அவற்றைப் பேணி அதில் பயணம் செய்கிறாரோ இறுதியில் அவர் தான் அடைய வேண்டிய இலக்கான சுவனத்தை எளிதாகவும் பாதுகாப்பாகவும் அடைந்து கொள்வார். சுவனப் பாதையில் பேண வேண்டிய ஒழுங்குகளை உதாசீனம் செய்து அத்து மீறி நடப்பவர் தான் போய்ச் சேர வேண்டிய இலக்கை அடையத் தவறி விடுவார். அது மாத்திரமின்றி அவரது அத்துமீறல்களுக்கும், ஒழுங்கீனங்களுக்குமுரிய தண்டனைகளைப் பெற நரகில் நுழைவார் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.

சுவனத்தின் மீதான ஆசையும் அதனை அடைவதற்கான வழியும்

இந்த ஹதீஸில் கேள்வி கேட்பவர் நுஃமான் பின் கவ்கல் (ரலி) என்ற நபித் தோழராவார். இவர் தான் சுவனத்துக்குச் செல்ல வேண்டும் என்ற பேராவலில் அதற்கான வழியை நபிகளாரிடம் வினவுகிறார். சுவனம் செல்ல தேவையான செயல்பாடுகள் குறித்து வினவுகிறார். அவரது நோக்கத்தை அடைந்து கொள்ள நபியவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

நபித் தோழர்களில் பலரும் இவ்வாறான கேள்விகளை கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் அவர்களது வரலாற்றைப் படிக்கும் போது புரிந்து கொள்கிறோம். சுவர்க்க வாழ்வை தாம் அடைந்து கொள்ள வேண்டுமென்பதில் மிகந்த ஆர்வமுடையவர்களாக அவர்கள் இருந்திருப்பதை இவை எமக்குணர்த்துகின்றன.

அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள் : ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் ''என்னை சுவர்க்கத்தில் நுழைவிக்கச் செய்யும் செயலை சொல்லித் தாருங்கள்'' என்றார். அதற்கு நபியவர்கள், ''அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் அவனை வணங்க வேண்டும், n தாழுகையை நிலை நாட்ட வேண்டும், ஸகாத் கொடுக்க வேண்டும், உறவினர்களைச் சேர்ந்து நடக்க வேண்டும் என்றார்கள். இந்த ஹதீஸை இமாம்களான புகாரீ, முஸ்லிம் ஆகியோர் தத்தமது நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். அபூ ஹுரைரா (ருலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் மற்றுமோர் அறிவிப்பில் ''உறவினர்களை சேர்ந்து நடத்தல்'' என்பதற்குப் பதிலாக ''நோன்பு நோற்றல்'' என்ற பகுதி இடம் பெற்றுள்ளது.

இப்னுல் முன்தபிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ''நபி (ஸல்) அவர்கள் அரபா வெளியில் தரித்திருந்த போது நான் அவர்களிடம் சென்று பின்வருமாறு கேட்டேன். 'இரண்டு விசயங்கள் பற்றி உங்களிடம் நான் வினவுகிறேன், என்னை நரகிலிருந்து பாதுகாப்பது எது? சுவனத்தில் நுழைவிப்பது எது? அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நீர் சுருக்கமாக வினாத் தொடுத்தாலும் பெரியதொரு விசயத்தையல்லவா கேட்டுள்ளீர் எனக் கூறிவிட்டு, இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் என பின்வருமாறு குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காது அவனை வணங்குவீராக! கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றுவீராக! உம்மீது விதிக்கப்பட்ட ஸகாத்தை நிறைவேற்றுவீராக! ரமழானின் நோன்புகளை நோற்பீராக! உமக்கு மனிதர்கள் எதனைச் செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ அவற்றை அவர்களுக்காகச் செய்வீராக! பிறரால் உனக்கு ஏற்படுகின்ற - நீ வெறுக்கின்ற செயல்களை அவர்களுக்கு ஏற்படுத்துவதை விட்டும் தவிர்ந்து கொள்வீராக.''

கடமைகளைப் பேணி வருவதும், தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து கொள்வதும் வெற்றிக்கான அடிப்படை

நாம் விளக்கத்திற்காக எடுத்துக் கொண்ட ஹதீஸில் நுஃமான் பின் கவ்கல் என்ற நபித் தோழர், தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது, ஹலாலான அம்சங்களை எடுத்து நடந்து ஹராமானவற்றைத் தவிர்ந்து கௌர்வது போன்ற அம்சங்கள் மாத்திரம் ஒருவனை சுவன வாழ்க்கைக்குத் தகுதிபடுத்தி விடுமா? என நபியவர்களிடம் வினவுகிறார். இவை தவிர நபிளான வணக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது சில போது மக்ரூஹானவைகளைச் செய்வதும் அவனது சுவன வாழ்வுக்குத் தடையாக அமையாதா? என்பதும் அவரது வினாவில் உள்ளடங்குகிறது. இந் நிலையில் நபியவர்களது பதில் ''ஆம்'' என அமைகிறது.

ரஸுலுல்லாஹ் அல்லாஹுத்தஆலாவிடமிருந்து இந்த உறுதிப்பாட்டை அறிவிக்கிறார்கள். இமாம் புகாரீ அறிவிக்கும் ஒரு ஹதீஸ் குத்ஸி இவ்வாறு அமைகிறது. ''நான் விதித்த பர்ளான கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் என்னை நெருங்குவதைப் போலன்றி வேறு விசயங்களால் என்னை நெருங்க முடியாது.''

அது மாத்திரமின்றி ஸுரா அத்தவ்பாவின் 112 ம் வசனம் முஃமினுக்கு பின்வரும் சுபச் செய்தியைச் சொல்கிறது. ''அல்லாஹ்வுடைய வரம்புகளை காக்கும் முஃமின்களுக்கு நபியே! நீர் சுபச் செய்தியைச் சொல்வீராக!''

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் : எந்தவொரு அடியான் ஐந்து நேரத் தொழுகைகளை நிறைவேற்றி, ரமழானின் நோன்பை நோற்று, ஸாகத்தையும் கொடுத்து ஏழு பெரும் பாவங்களையும் தவிர்ந்து கொள்கிறாரோ அவருக்காக சுவனத்தின் பல வாயில்கள் திறக்கப்படும். அவர் விரும்பும் வாயிலினூடாக அச்சுவனத்தில் அவருக்கு நுழைய முடியும். பிறகு நபி (ஸல்) அவர்கள் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ''உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களை நீங்கள் தவிர்ந்து கொண்டீர்களானால் உங்களது ஏனைய சிறிய தவறுகளை நாம மன்னித்து விடுவோம். மேலும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைய வைப்போன்'' (ஸுரா : அன்னிஸா - 31)

இது தொடர்பாக ஏராளமான ஹதீஸ்களை நாம் காணலாம். ஏழு பெரும் பாவங்களாக விபச்சாரம், மது அருந்துதல், சூனியம் செய்தல், கற்புடையோர் மீது அபாண்டம் சுமத்துதல், நிரபராதியான ஒருவனை வேண்டுமென்றே கொலை செய்தல், வட்டியோடு தொடர்புபட்டிருத்தல், போராட்டக் களங்களில் இஸ்லாத்தின் எதிரிகளை விட்டும் புறமுதுகு காட்டி ஓடுதல் என்பவற்றைக் குறிப்பிடலாம். எனினும் வேறு பெரும் பாவங்கள் குறித்தும் ஹதீஸ்களில் வந்துள்ளன.

இஸ்லாம் மார்க்கம் இலகுவானது

இஸ்லாம் மார்க்கம் இலகுவானது. இஸ்லாத்தின் போதனைகள் மனித இயல்போடு ஒன்றித்துச் செல்பவை. நபி (ஸல்) அவர்களது இந்த ஹதீஸும் இதே கருத்தில் வந்துள்ள ஏனைய பல ஹதீஸ்களும் இஸ்லாம் தெளிவாகவும், மனித இயல்புக்கேற்பவும் போதனைகளை முன் வைப்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். தனது அடியார்களைப் பற்றி அல்லாஹ் நன்கறிந்துள்ளான். அவர்களால் சுமக்க முடியாத நிiவேற்றச் சக்தி பெறாத பொறுப்புக்களையோ, கடமைகளையோ அவன் ஒருபோதும் விதிப்பதில்லை. ''அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகிறான். அவன் உங்களுக்கு கஷ்டத்தைத் தர விரும்பவில்லை'' (அல் பகரா : 185)

''அல்லாஹ் எந்தவொரு மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமான (பொறுப்புக்களைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. (அல்பகரா : 286)

அவ்ன் 'தீனில்' எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை. (அல் ஹஜ் : 78)

இஸ்லாமிய ஷரீஅத் விதித்திருக்கும் கடமைப்பாடுகள் அனைத்தும் இலகுவாக மேற்கொள்ள முடியுமானவை. மனித சக்தியின் வரைமுறைகளுக்குள்ளேயே அவை அமைந்துள்ளன. ஏனெனில் மனிதனைப் படைத்த அல்லாஹ் தான், இஸ்லாத்தின் போதனைகளையும் வழங்கியுள்ளான். சிந்திக்கத் தெரிந்த மனிதன் இந்த தெய்வீக வழிகாட்டல்களை வாழ்வில் ஏற்றுப் பின்பற்றுவான். அதனூடா இம்மையில் மகிழ்ச்சியையும் மறுமையில் நரகிலிருந்து விடுதலை, மீட்சி ஆகியவற்றையும் பெற்றுக் கொள்வான்.

இங்கு நுஃமான் (ரலி) அவாகள், மனந்திறந்து தனது உள்ளத்தில் உள்ளவற்றை அப்படியே முன்வைக்கிறார்கள். உண்மையில் தான் செய்யாத செய்ய நினைக்காத சீர்திருத்தம், தக்வா என்பன குறித்து போலியாக அவர் வினவ விரும்பவில்லை. மாறாக, நான் ஒரு சாதாரண மனிதர் என்ற நிலையில் சுவனத்தைப் பெறுகின்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறார் அந்த சுவனத்துக்கு தன்னைக் கொண்டு செல்லும் எந்தவொரு செயலையும் செய்வதற்கு அவர் தயாராக இருக்கின்றார். தனது நோக்கத்தை அடைந்து கொள்ள தான் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் போதுமானது என்பதை அவர் அறிந்த போது, ''அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அவற்றை விட அதிமான எதனையும் செய்ய மாட்டேன்'' (இந்த ஹதீஸோடு தொடர்பான மற்றுமோர் அறிவிப்பின்படி_ என்று உறுதிப்படுத்திக் கூறுவதைக் காண்கிறோம்.

அல்லாஹ் முஃமின்களுக்கு இலகுவான கடமைகளை விதித்து அதனூடாக அவர்களுக்கு சுவனத்தை வழங்குகிறான். இது முஃமின்களுக்குக் கிடைத்த மாபெரும் அருளாகும். எவனது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டானோ அத்தகையவனுக்கு மார்க்கக் கடமைகளைப் புரிவது கடினமாகத் தர்ன இருக்கும். ''நீங்கள் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அதுவோ உள்ளச்சம் கொண்டவர்களுக்கன்றி ஏனையோருக்கும் பாரமானதாகும்.'' (அல்பகரா -45)

ஸஹாபாக்கள் எப்போதும் தெளிந்த மனோநிலையோடும், எத்தகைய நயவஞ்சகத் தனத்தையும் தமது உள்ளத்தில் புதைத்துக் கொள்ளாதவர்களாகவும் இருந்திப்பதைக் காண்கிறோம். அதேவேளை அவர்கள் ஷரீஆவை கடைபிடிப்பதிலும் பொடுபோக்காக நடந்து கொள்வதுமில்லை.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு நாட்டுப்புற அரபி வந்தார். ழமாம் இப்னு ஸஃலபா என்ற பெயருடைய இவர் தொழுகைகளைப் பற்றி வினவினார். நபியவர்கள் ஐந்து நேரத் தொழுகைகளைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அதற்கு அவர் ''இது தவிர எனக்கு கடமையான வேறு தொழுகைகள் உண்டா'' எனக் வினவினார். அதற்கு நபியவர்கள் ''நீர் விரும்பிச் செய்யக் கூடிய உபரி வணக்கங்கள் உண்டு'' என்றார்கள். தொடர்ந்து அவர் ஏனைய பர்ளான கடமைகள் பற்றி வினவினார். அதற்கு நபியவர்கள் பர்ளான கடமைகள் பற்றி விளக்கமளித்தார்கள். ''இது தவிர வேறு கடமைகள் எனக்குண்டா?'' என அவர் வினவ, நபியவர்கள் ''இல்லை. என்றாலும் நீர் விரும்பிச் செய்யக் கூடிய உபரி வணக்கங்கள் உண்டு'' என்றார்கள். அதற்கு அவர் ''நான் உபரியாக எதனையும் செய்யப் போவதில்லை. அல்லாஹ் என் மீது கடமையாக்கியவற்றுள் சிறிதளவேனும் நான் குறைவு செய்யவும் மாட்டேன்'' என்றார். பின்னர் நபியவர்கள் இவரைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். ''நான் கூறியது போல உண்மையாக நடந்து கொண்டால் அவர் வெற்றி பெற்று விட்டார்.'' மற்றுமோர் அறிவிப்பின்படி ''தனக்கு கடமையாக்கப்பட்டவற்றை அவர் எடுத்து நடந்தால் அவர் சுவனம் செல்வார்'' இன்னுமோர் அறிவிப்பின்படி ''சுவன வாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புபவர் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்.'' இந்த அறிவிப்பை இமாம்களான புகாரீ, முஸ்லிம் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.

ஸகாத்தும் ஹஜ்ஜும்

ஸகாத் ஹஜ் என்பன இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளாகும். இவை பற்றி அல்குர்ஆனும் ஹதீஸும் வலியுறுத்தியிருப்பதைக் காணலாம். எவர்மீது இவ்விரு கடமைகளும் விதியாகின்றதோ அவர் அவற்றை நிறைவேற்றுவதனூடாகவே நரகத்திலிருந்து மீட்சி பெற்று சுவனம் நுழைய முடியும். இமாம் அஹ்மத் பதிவு செய்துள்ள ஓர் அறிவிப்பில் இதனை நாம் தெளிவாகக் காண்கிறோம். இப்னுல் முன்தபிக் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் சுவனம் செல்வதற்குரிய செயல்களைப் பற்றி வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வீராக. அவனுக்கு இணைவைக்காதீர். தொழுகையை நிலைநாட்டுவீராக. ஸகாத்தைக் கொடுப்பீராக. ஹஜ் கடமையை நிறைவேற்றி, நோன்பையும் நோற்பீராக,'' என்று பதிலளித்தார்கள்.

எனினும் நாம் விளக்கத்துக்காக எடுத்துக் கொண்ட ஹதீஸில் நுஃமான் (ரலி) அவர்கள் இவ்விரு கடமைகள் பற்றியும் நபிகளாரிடம் குறிப்பிடவில்லை. அதற்கு பின்வரும் மூன்று நியாயங்களுள் ஏதேனுமொன்றை காரணமாகக் குறிப்பிடலாம்.

குறிப்பிட்ட இவ்விரு கடமைகளும் அதுவரை கடமையாக்கப்படாதிருக்கலாம்.

நுஃமான் (ரலி) அவர்களுக்கு இவ்விரு கடமைகளுள் வாஜிபாகாத நிலை இருந்திருக்கலாம். அவரது ஏழ்மை, வசதியின்மை போன்றன. இதற்குக் காரணமாக அமைந்திருக்க முடியும்.

''ஹலாலானவற்றை ஏற்று நடப்பேன். ஹராமானவற்றைத் தவிர்ந்து கொள்வேன்'' என்ற பொதுவான கருத்தில் எல்லாக் கடமைகளும் உள்ளடங்குகின்றன. கடமைகளைப் புறக்கணிப்பது ஹராம் ஆகும்.

தொழுகை, நோன்பு என்பவற்றின் முக்கியத்துவம்

இங்கு நுஃமான் (ரலி) அவர்கள் தன் மீது விதியாகிய கடமையான தொழுகைகளைத் தான் பேணி வருவதாகக் குறிப்பிடுகிறார்கள். இது தொழுகையைப் பற்றி ஸஹாபாக்களது மனோநிலையை விளக்குகிறது. தொழுகை மார்க்கத்தின் பிரதானமானதும் அடிப்படையானதுமான அம்சமாகும். ஒரு முஸ்லிம் நாளாந்தம் ஐந்துமுறை தொழுகைகளை கிரமமாகச் பேணித் தொழுகின்றான்.

தொழுகையின் முக்கியத்துவம் குறித்து நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் விளக்கியுள்ளார்கள்.

யார் தமது தொழுகைகளைத் தொழுது எமது கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுத்ததை சாப்பிடுகிறாரோ அவர்முஸ்லிம் ஆவார். இத்தகையவருக்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் பொறுப்பாளர்களாவர்'' - புகாரீ

''இந்த மார்க்கத்தில் தலையாய அம்சம் வழிப்படுதலாகும். யார் வழிப்பட்டாரோ அவர் பாதுகாக்கப்பட்டார். அதன் அடிப்படை தொழுகையாகும். அதன் அதியுயர் நிலை அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் புரிவதாகும்.'' - அத்தபராணி -

''தொழுகையை நிறைவேற்றுவதற்காக மஸ்ஜிதுகளுக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்ட மனிதனை நீங்கள் கண்டால் அவனது ஈமானுக்கு நீங்கள் சாட்சியாளனாக இருங்கள்.'' - அத்திர்மிதி.

''தொழுகை இல்லாதவனுக்கு மார்க்கம் இல்லை. மார்க்கத்தில் தொழுகைக்குரிய இடம் உடலில் தலைக்குரிய இடம் போன்றதாகும்.'' - அத்தபராணி

தொழுகையை விட்டவனது நிலை பற்றி எச்சரித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அது இறை நிராகரிப்பாகும். அல்லது நிராகரிப்புக்கு இட்டுச் செல்வதாகும். தொழுகையை விடுவதை ஸஹாபாக்கள் இறைநிராகரிப்பாகவே கருதினர். எனவே தொழுகை அடிப்படையான மார்க்கக் கடமைகளுள் ஒன்று என்பதை ஒருவன் ஏற்க மறுத்தால் அவன் காபிராகி விடுவான். எனினும் பொடுபோக்கு, சோம்பேறித்தனம் காரணமாக ஒருவன் தொழுகையை விட்டால் அதேநேரம் அது மார்க்கக் கடமை என்பதை புறக்கணிக்காதிருந்தால் அவன் பாவியாகக் கருதப்படுவானேயன்றி, காபிராக கருதப்பட மாட்டான்.

நோன்பு, தொழுகையை அடுத்து முக்கியத்துவம் பெறும் அடிப்படைக் கடமையாகும். நோன்பு அடிப்படையான மார்க்கக் கடமை என்பதை ஒருவன் ஏற்க மறுத்தால் அவன் காபிராகி விடுவான். பொடுபோக்காக அதனை விட்டு விடுவது அவனை பாவியாக்கி விடும். நோன்பின் முக்கியத்துவம் பற்றி விளக்கும் ஹதீஸ்களை நாங்கள் தாராளமாகக் காணலாம். ஆயினும் விரிவஞ்சி விடுகிறோம்.

வணக்க வழிபாடுகளின் தராதரமும் முஃமினீன் நிலைப்பாடும்

சுவனம் நுழைவதற்கு அடிப்படை நிபந்தனைகளாக ஈமானும், தௌஹீதும் அமைகின்றன. யார் அல்லாஹ், அவனது தூதர்கள், அவனது வேதங்கள், மலக்குமார்கள், மறுமை நாள், கழா கத்ர் என்பவற்றை ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு எந்தவோர் இணையும் வைக்காது மரணிக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார். பர்ளுகளை நிறைவேற்றாமலும், ஹராமானவற்றில் ஈடுபட்டுக் கொண்டுமிருப்பவனுக்கு அதற்குரிய தண்டனைகள் வழங்கப்படாமல் சுவனம் நுழைய முடியாது. எனினும் அல்லாஹ் தான் நாடிய சிலரை எத்தகைய தண்டனைகளுமின்றி சுவனம் நுழையச் செய்வான் என்பது அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமா ஆவின் நம்பிக்கையாகும்.

கடமைகளை நிறைவேற்றுவதும், தடுக்கப்பட்டவற்றை தவிர்ந்து கொள்வதும் நரகிலிருந்து பாதுகாக்கும். அல்லாஹ்வுக்கு வழிபடுவதன் அடிப்படை - ஹராமானவற்றைத் தவிர்ந்து கடமையானவற்றைப் பேணி வருவதாகும். இவ்வாறு ஒருவன் நடந்து கொள்கின்ற போது அவன் சிறப்பான வெற்றியை அடைந்து கொள்வான்.

அம்ரு இப்னு முர்ரத் என்பவர் பின்வருமாறு அறிவிக்கிறார். ''அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வைத் தவிர வேறு இலாஹ் இல்லை என்றும் நான் சாட்சி சொல்கிறேன். ஐந்து வேளை தொழுகிறேன். எனது சொத்துக்களுக்கான ஸகாத் தையும் செலுத்துகிறேன். ரமழானில் நோன்பு நோற்கிறேன்'' என்றார். அதற்கு நபியவர்கள் ''இதே நிலையில் யார் மரணிக்கிறாரோ அவர் நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகளுடன் மறுமையில் இருப்பார். எனினும் அவர் தனது பெற்றோருக்கு அநியாயமிழைத்திருக்கக் கூடாது'' என்று கூறினார்கள்.

நபிலான வணக்கங்களில் ஒருவர் ஈடுபடுவது அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத் தரும். ஒரு முஸ்லம் நபிலான வணக்கங்களைச் செய்யவில்லையென்பதற்காகக் குற்றம் பிடிக்கப்பட மாட்டார். எனினும் இது ஒரு தனிநபர் சார்ந்த அம்சமாக நோக்கும் போதே இவ்வாறான நிலை இருக்கும். மொத்தமாக சமூக ரீதியாக இவ்வாறு நபிலான வணக்கங்கள் புறக்கணிக்கப்படுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. ஒரு கிராமத்தவர்கள், ஒரு பிரதேசத்தவர்கள் இதிpல் பொடுபோக்காக இருந்தால் அக்குறிப்பிட்ட கருமத்தை நிறைவேற்றும் வரை அவர்களுடன் போராட வேண்டும் என இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் குறிப்பிடுவர்.

இதே போன்று நபிலான வணக்கங்களைப் புறக்கணித்து அது நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்று மனமுரண்டாக செயற்படுபவன் மார்க்கத்தை துறந்து விடும் அபாயத்திலிருக்கிறான் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். இந்நிலையில் நபிலான வணக்கங்களை நிறைவேற்ற அவன் நிர்ப்பந்தப்படுத்திக்கப்படுவான். எனினும் ஒருவன் நபிலான வணக்கங்களில் பொடுபோக்கு காட்டுவது, அவற்றை முறையாக நிறைவேற்றாதிருப்பது என்பன அவன் பெரும் நற்கூலிகளை இழப்பதற்கு வாய்ப்பாக அமையும். நபிலானவை மூலமே பர்ளானவைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் பூர்த்தியாக்கப்படுகின்றன.

அல்லாஹ்வின் அன்பையும் ஆதரவையும் அதிகமான வெகுமதிகளையும் எதிர்பார்க்கும் முஸ்லிம் நபிலான வணக்கங்கள் தன்னை விட்டும் தவறிப் போக அனுமதிக்க மாட்டான். எந்த மக்ரூஹான செயலிலும் அவன் ஈடுபட மாட்டான். அல்லாஹ்வின் விருப்புக்குரிய செயல் எதுவாக இருந்தாலும் அதனைச் செய்வதற்கு முன்வரவானேயன்றி பர்ழா? வாஜிபா? மன்தூபா? என்ற வேறுபாடுகளை நோக்க மாட்டான். அதேபோல் அல்லாஹ் தடுத்தவைகளை ஹராமானவையா? மக்ரூஹானவையாக? என்று தரம் பிரித்து நோக்கவும் மாட்டான். மாறாக அனைத்தையும் தவிர்ந்து கொள்வான்.

பொதுவாக ஸஹாபாக்களது நடத்தை இவ்வாறாகத் தான் இருந்திருக்கிறது. ''தூதர் உங்களுக்குத் தந்ததை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தடுத்ததைத் தவிர்ந்து கொள்ளுங்கள்'' என்ற அல்குர்ஆன் வசனத்தை தமது வாழ்வில் அவர்கள் பின்பற்றினர்.

இதே நிலையைத் தான் நாம் தாபிஈன்கள் அவர்களைத் தொடர்ந்து வந்த இமாம்கள் மற்றும் நல்லடியார்களது வாழ்விலும் காண்கிறோம். எனினும் பிக்ஹுக் கலை வளர்ச்சியுடன் மனித செயற்பாட்டை அதன் பெறுமானங்களின் அடிப்படையில் ''அல் அஹ்காமுல் ஹம்ஸா' என்று வகைப்படுத்தி நோக்கும் மரபு தோன்றியது. இங்கு செயல்களை சட்ட ரீதியாக நோக்கியே இமாம்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

நாம் நுஃமான் (ரலி) ன் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அதனை விட அதிகமாகச் செய்ய மாட்டேன்'' என்ற பிரகடனத்தை நபியவர்கள் ஏற்றுக் கொள்வதைப் பார்க்கிறோம். அவர் மேலதிகமாக உபரி வணக்கங்களில் ஈடுபட வேண்டும் என்பதை நபியவர்கள் உணர்த்தவில்லை. நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ஸஹாபிக்கு உற்சாகமூட்டவும் இஸ்லாமிய பிரச்சாரகர்களுக்கும், சமூகத் தலைவர்களுக்கும் தஃவாவில் ஈடுபடும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வழிகாட்டுதலையுமே இங்கு உணர்த்துகிறார்கள்.

உள்ளங்களில் நம்பிக்கையின் ஒளியை ஏற்படுத்த வேண்டும். நளினம், தாராளத்தன்மை என்பவற்றை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். இஸ்லாத்தின் இலகு தன்மையையும் சங்கடமின்மையையும் உறுதிப்படுத்தல் வேண்டும் என்பது இங்கு உணர்த்தப்படுகிறது. அதேவேளை தக்வாவுள்ள அடியான் அல்லாஹ்வை அஞ்சி அவன் விதித்த கடமைகளைப் பேணுதலாக எடுத்து நடக்கும் போது அவனது உள்ளம் அல்லாஹ்வுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளும். அவனது உள்ளம் விரிவடையும் இந்நிலையில் அவன் ஓர் ஆன்மீக இன்பத்தையும் மன அமைதியையும் அவன் உணர்ந்து கொள்வான். இவையனைத்தும் இபாதத்துக்களில் ஈடுபட அவனைத் தூண்டும். அல்லாஹ்வின் திருப்தியை அதிகமாகப் பெற்றுக் கொள்ள அவன் முனைவான். எனவே இயல்பாகவே நபிலான வணக்கங்களில் ஈடுபாடு காட்டவும் மக்ரூஹான செயல்களைக் கூட தவிர்ந்து கொள்ளவும் அவன் ஆரம்பித்து விடுவான். எனவே நபிலானவற்றை செய்வதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை.

இவ்வாறு தான் முஃமின் பூரணத்துவத்தை நோக்கி நடைபோட ஆரம்பிப்பான். பகல் பொழுதுகளில் போராடும் கதிரை வீரனாகவும் இரவுகளில் அல்லாஹ்வை வணங்கி வழிபடுகின்ற துறவியாகவும் அவன் தன்னை மாற்றிக் கொள்வான். ''அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் உயர்ந் விடுகின்றன. அச்சத்துடனும் ஆர்வத்துடனும் தங்கள் இரட்சகனை பிரார்த்திக்கிறார்கள். மேலும் நாம் அவர்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து செலவும் செய்கின்றனர்.'' (ஸூரா அஸ்ஸஜ்தா : 16)

அஷ்ஷெய்க் எஸ்.எம்.அஸாஹிம்

- நன்றி : இஸ்லாமிய சிந்தனை
, ,