குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

7.11.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அந்தி...!
மதங்களும் இலக்கியமும் புராணமும் இந்த வயதானவர்களை எப்படி பார்த்துக் கொள்வது என்று பல விதங்களில் சொல்லித் தந்திருகிறது. சில சின்ன சின்ன கதைகள் , உதாரணங்கள்
இன்னும் கவிதைகள் என்று எவ்வளவோ சொல்லப்பட்டும் பெரியவர்கள் உதாசீணப் படுத்தப்படுவது இன்றைய கால கட்டத்தில் அதிகமாகவே தென்படுகிறது. இன்றைக்கு கிடைக்கும் டெலிவிசன் நிகழ்ச்சியின் சந்தோசமும் , பொழுது போக்குகளின் சந்தோசமும் எத்தனையோ ஏணிகளை எட்டி உதைக்க காரணமாக இருந்து விடுகிறது.

இப்போது இருக்கும் பெரியவர்கள் என் ஆக்கத்தை படிப்பார்களா என தெரியாது, ஆனால் இப்போது உள்ளவர்கள் வருங்காலத்தில் வயதாகப் போவதால் என் ஆக்கத்தை புரிந்து ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் கேவலப்பட்டுப் போகும் சூழ்நிலைகளை விட்டு ஓரளவு தவிர்த்துக் கொள்ளலாம். இந்த ஆக்கம் எனக்கும் சேர்த்துதான் நான் எழுதுகிறேன்.

நவீனகால காற்றின் வீச்சு மனித வாழ்க்கையின் வேர்களை தாக்கி, பிடுங்கி மறுபடியும் "நடவு" செய்ய பார்த்திருக்கிறது என்பது என் ஆழமான கருத்து.

இல்லாவிட்டால் தனிமை தாக்கும் மந்தாரமான வாழ்க்கை இன்றைய வயதானவர்களை தாக்கியிருக்குமா என்பது கேள்விக் குறிதான்.

வழக்கமாக இது போன்ற சூழ்நிலையில் பிள்ளைகளை குறை சொல்வதும் அவர்களுக்கும் வருங்காலத்தில் இப்படிதான் நடக்கும் என்று சாபம் இடுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. வாங்கி வந்த சரீரமே நமக்கு சொந்தமில்லை, ஒரு காலத்தில் வெள்ளைத் துணியில் சுற்றி அனுப்ப வேண்டிய கடனில் இருக்கும் போது பிள்ளைகளையும் சமுதாயத்தையும் , இப்போது வந்திருக்கும் கேட்ஜெட்டுகளையும் திட்டி ஆகப்போவது ஒன்றுமில்லை.

முதலில் மருத்துவ ரீதியாக உடலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை வயதானபிறகு மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. "நான் முன்பு இப்படி இயங்க முடிந்ததே ஏன் இப்போது முடியவில்லை" என்ற போராட்ட மனதே விரக்தியை விதைக்கிறது.

சின்ன பிள்ளையாக இருக்கும்போது சிறுவனாக மாறும் நம் உடம்பின் நரம்புகள் டிஜெனரேட்டிவ் நிலையை அடையும்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வது இயற்கைதானே??. இதை ரத்தம் சூடேறி ஒடிய காலம் கால ஓட்டத்தில் அழுக்கையும் தன் வழிநெடுக ஒட்ட வைத்துப் போனதில் என்ன ஆச்சர்யம் கண்டு விட்டோம்.

இப்படி வாழ்க்கை முழுக்க இறைவன் வகுத்த விதிமுறைகளுக்கும் நமது கற்பனைக்கும் இடையில் நடக்கும் முரன்பாடே மனதையும் உடம்பையும் சோர்வடைய செய்கிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேறாத சுழ்நிலையில் படைத்த இறைவனை குறை சொல்ல வைக்கிறது.

இந்த பிரபஞ்சத்தையே ஆளும் இறைவனின் ஞானத்தோடு ஒரு சதுர அடிக்குள் நின்று கொண்டு சிந்திக்கும் மனிதனின் சிற்றறிவு போட்டி போட நினைப்பதில் எந்த ஞாயமும் இருப்பதாக தெரியவில்லை.

'அப்படி ஒன்றும் இல்லை' என்று சொல்பவர்கள் யாரும் இதைக் கடக்காமல் இல்லை.



வாழ்க்கையின் பாதிக் கிணற்றை தாண்டுபவர்களுக்கென்று நிறைய பரிசுப் பொருள்களை ஃபார்மசூட்டிகள் கம்பெனிகள் கடை விரித்து வைத்து காத்திருக்கிறது. ப்ரஸ்ஸர் மாத்திரையும் , இனிப்பு என்று சொல்லும் 'கசப்பு" நோய்க்கு கண்டு பிடிக்கப்பட்ட மருந்துகளும் மனிதனின் ரத்தத்தில் மாற்றதை ஏற்படுத்த முயற்சிக்கும்போது மனித மூளைக்கு எடுத்துச் செல்லும் செயல்பாட்டில் கோளாறை ஏற்படுத்தி ஞாபகத்தை கொஞ்சம் கொஞ்சமாக மங்க வைக்கிறது. அதனால்தான் என்றோ ஒருநாள் ரயிலில் போகும்போது நிலக்கடலையின் தோல்களி நீக்கி ஊதி ஒசாப்பிட்ட ஞாபகம் இருக்கும்... காலையில் சாப்பிட்ட இட்லி டெலிட் ஆகியிருக்கும்.

30 வருடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மருந்துகள் , மனிதனின் பெட்ரூம் வரை வந்து உறவை சிதறடித்து சென்றிருக்கிறது. மருந்து கம்பெனிகளின் 'மன்னிப்பு" இன்னும் மனிதனுக்கு செய்த துரோகத்தை ஈடு செய்யவில்லை. சரி இதையெல்லாம் நான் ஏன் எழுத வேண்டும்....பதில் மிக எளிது ' 'தயாராகுங்கள்' அவ்வளவுதான்.

வருங்காலத்தில் வளர்ந்து வரும் கல்வியில் போராட்டமும் வேலைக்கும் பணத்துக்கும் தன்னை சுற்றி வளர்த்துக் கொண்ட செயல்களுக்கு பணம் பட்டு வாடா செய்யும் நேரத்திலும் வாழ்க்கையின் நேரங்கள் நிரம்பி வழியும்... நாம் வளர்த்த நம் பிள்ளைகள் நம் கண் முன் இருந்து நமக்கு எல்லாம் செய்யும் என்று எதிர் பார்ப்பது பழைய கதை ஆகிவிடலாம்.

நாம் இப்போது விரும்புகிறோமோ இல்லையோ பிள்ளைகளை மிகப்பெரிய வெற்றிக்கு தயார் படுத்துகிறோம். இதில் தவறில்லை, ஆனால் குர்ஆனையும், ஹதீஸையும் கல்யாண சடங்குகளிலும், பள்ளிவாசலில் தொப்பி போடுவதிலும் மட்டும் எடுத்து பேசி விட்டு அன்றாட நடைமுறையிலும், எதிர்கால சந்ததிகளை எப்படி உருவாக்குவது என்பதிலும் கோட்டை விட்டு விடுகிறோம். பெற்றவர்களாகிய நாம் "கண்டிப்பானவன்" என்று பெயர் எடுக்க ஆசைப்படுகிறோம்.ஆனால், பிள்ளைகளிடம் ' காது கொடுத்து கேட்கும் தகப்பன்" என்று பட்டம் வாங்கினால் கேவலம் என்று நினைத்து விடுகிறோம் என நினைக்கிறேன்.

அதனால்தான் நம் தெருவில் இப்படி / நம் சமுதாயத்தில் இப்படி / நம் ஊரில் இப்படித்தான் என்று கதைக்கு உதவாத ரூல்ஸ்களால் குடும்பத்தை விட்டு வெகுதூரமாகி விடுகிறோம்.

வயதானவர்கள் சொந்தமாக ஏற்படுத்திக் கொள்ளும் பயம் ஒரு திகில் கதை மன்னனின் அறிவை விட விசாலமானது. உடம்பு வளைய மறுக்கும் தருணங்களில் "எனக்கு வயசாகுதுலெ" என்று மூளைக்கு கமென்ட் அனுப்பிக் கொண்டிருப்பதால் தசைகள் இறுகிப் போகிறது. கொஞ்சம் முயற்சி என்பதே இல்லாமல் போனதால் வயது ஆகும் ப்ராசஸ் அவசரமாகவே நடந்து விடுகிறது. நம் பகுதிகளில் மகளுக்கு / மகனுக்கு கல்யாணம் ஆகிவிட்டால் ஏறக்குறைய பெரியவர்கள் கல்யாணம் ஆகியும் துறவிகளாகிவிடுகிறார்கள். மருத்துவம் இதை "இயற்கைக்கு மாறானது" என்று சத்தியம் செய்கிறது.

ஒய்வு காலங்களில் தனக்கென்று ஒரு பொழுது போக்கு, தனக்கென்று ஒரு சின்ன விருப்பம் என்று வைத்துக்கொள்வது என்பது நம் பகுதிகளில் ஏதோ குற்றமாகவே பார்க்கிறார்கள். ஒரு முறை இங்கு வந்திருந்த நண்பர் நான் என் வீட்டுக்கு பெயின்ட் அடித்துக்கொண்டிருந்ததை பார்த்து ஏன் உங்களுக்கு ஒரு கூலி ஆள் கிடைக்கவில்லையா என்று கேட்டதிலேயே எனக்கு தெரிந்தது இதுபோன்ற வேலைகளை நாம் ஊரில் இருக்கும்போது செய்தால் கிறுக்கன், வெளிநாட்டில் இருக்கும்போது செய்தால் பரவாயில்லை என்ற தவறான ப்ரோக்ராமிங்.

பிள்ளைகள் பணம் தரும் , கூழ் ஊத்துவான் என்பதெல்லாம் பிளாக் & ஒயிட் காலத்து விதிமுறைகள். இப்போது அதை நம்பி வாழ்வது சவால்தான்.
ஒருமுறை நான் சந்தித்த ஒரு பெரியவர் தான் தன் பிள்ளைகளை எப்படி வளர்த்து  மிகப்பெரிய தொழில்களிலும் , உத்யோகத்திலும் அமர்த்தினேன்  என்று சொல்லிக் காண்பித்தார், சொல்லிக் காண்பித்த இடம் ஒரு முதியோர் இல்லம்.

எனக்கு அந்த பிள்ளைகள் மீது வெறுப்பு வந்தது, கொஞ்சம் கடுமையாக அந்த பிள்ளைகளை ஏசினேன். ' என் பிள்ளைகளை ஏசாதே தம்பி...திட்ட நினைத்தால் என்னைத்திட்டு.. இத்தனை பிள்ளைகளை கரை சேர்த்த நான் என்னை காப்பாற்றிக் கொள்ள தவறியது என் தவறுதானே?.....

இந்தக்கேள்வி நம் எல்லோருக்கும்தான்.

ZAKIR HUSSAIN
, ,