குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

22.5.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஆஸ்துமா பிள்ளைகளுக்கு
almighty-arrahim.blogspot.com
ஆஸ்துமா (ஈழைநோய்) என்பது என்ன?

ஆஸ்துமா என்பது உங்கள் பிள்ளையின் சுவாசப்பையைப் பாதிக்கும் ஒரு நிலையாகும். மூச்சிரைத்தல், இருமல், மற்றும் மூச்செடுக்கக் கஷ்டப்படுதல் ஆகியவைதான் ஆஸ்துமாவின் மிகவும் பொதுவான அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் வேறு உடல்நலப் பிரச்சனைகளின்போதும்கூட ஏற்படலாம். அதனால் ஆரம்பத்தில்இது ஆஸ்துமா என அடையாளம் காண்பது மருத்துவர்களுக்கு சிரமமாக இருக்கலாம், விசேஷமாக குழந்தைகளிலும் சிறு பிள்ளைகளிலும்.

உங்கள் பிள்ளையின் சுவாசப்பையை, ஆஸ்துமா அவனுடையா மீதி வாழ்நாளெல்லாம் பாதிக்கக்கூடும். சில வேளைகளில் உங்கள் பிள்ளையின் நிலை முன்னேற்றமடையலாம். மற்ற வேளைகளில் ஆஸ்துமாவின் காரணமாக உங்கள் பிள்ளை மோசமாக உணரலாம்.
உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா ஒரு பிரச்சனையாகும்போது

உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா ஒரு பிரச்சனையாகும்போது அவனுடைய மூச்சுக் குழாய்கள் ஒடுங்கிவிடுகின்றன. இது ஏற்படும்போது உங்கள் பிள்ளை காற்றை சுவாசப்பைக்குள் எடுப்பதும் வெளியேற்றுவதும்

உங்கள் பிள்ளை ஆஸ்துமா பிரச்சினையைக் கொண்டிருந்தால் மூச்சுக்குழாயை ஒடுங்கச்செய்யும் மூன்று விஷயங்கள் சம்பவிக்கின்றன:

மூச்சுக் குழாயின் உள் உறை தடிப்பாகி வீங்கும். இது அழற்சி என அழைக்கப்படுவதைக் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

மூச்சுக்குழலைச் சுற்றியிருக்கும் தசைகள் இறுக்கமாகும். இது பிராங்க இசிவு அல்லது மூச்சுக் குழாய் ஒடுக்கம் என அழைக்கப்படுவதைக் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

மூச்சுக் குழாய்கள் ஏராளமான சளி என்றழைக்கப்படும் நிறமற்ற, தடித்த நீர்மத்தை உண்டாக்கலாம். சளியானது வழக்கத்தைவிட தடிப்பாக இருப்பதோடு மூச்சுக் குழாய்களை அடைக்கக்கூடும்.

உங்கள் பிள்ளையின் நிலை முன்னேற உதவுதல்

உங்கள் பிள்ளையின் நிலை முன்னேற நீங்கள் உதவக்கூடிய சில வழிகள் இருக்கின்றன:
இந்தப் பக்கத்தை வாசிப்பது, ஆஸ்துமா பற்றிய வேறு மூலவளங்களை வாசிப்பது, மற்றும் உங்கள் மருத்துவரிடம் கேள்விகள் கேட்பதன் மூலம் உங்கள் பிள்ளையின் ஆஸ்துமாவைப்பற்றி அதிகம் கற்றுக்கொள்ளவும்.
உங்கள் பிள்ளையின் மருத்துவர் சொல்கின்றபடியே உங்கள் பிள்ளை எல்லா மருந்துகளையும் உட்கொள்கின்றதென்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
உங்கள் பிள்ளையின் ஆஸ்துமாவை எது தூண்டுகின்றது என்பதை அறிந்து அவற்றைத் தவிர்க்க முயற்சி செய்யவும். தூண்டுவிசைகள் என்பன உங்கள் பிள்ளையின் ஆஸ்துமாவை மோசமடையச் செய்யும் விடயங்களாகும்.
உங்கள் பிள்ளையின் ஆஸ்துமாவை மோசமடையச் செய்யும் தூண்டுவிசைகள் (டிரிகர்ஸ்)

தூண்டுவிசைகள் என்பன உங்கள் பிள்ளையின் ஆஸ்துமாவை மோசமடையச் செய்யும் விடயங்களாகும். ஆஸ்துமா உள்ள ஒவ்வொரு பிள்ளையும் வேறுபட்ட தூண்டுவிசைகளால் பாதிக்கப்படுகின்றது. எந்தத் தூண்டுவிசைகள் உங்கள் பிள்ளையைப் பாதிக்கின்றன என்பதையும் உங்கள் பிள்ளை எவ்வாறு இவற்றைத் தவிர்க்கலாம் என்பதையும் அறிய உங்கள் பிள்ளையின் மருத்துவரோடு சேர்ந்து செய்ற்படவும்.

சில பொதுவான தூண்டுவிசைகள் இதோ:
தடிமல் மற்றும் ∴ப்ளூ போன்ற நோய்த்தொற்றுகள்
சிகரட் அல்லது புகையிலை புகைப்பது
விறகு மற்றும் எண்ணெய்ப் புகை
ஒவ்வாமை விளைவுகளை ஏற்படுத்தும் விடயங்கள்
செல்லப்பிராணிகள்
காற்று மாசுறுதல்
ஈரப்பதமான காலநிலை
குளிரான காலநிலை
ASA (ஆஸ்பிரின்) அல்லது ஐபியூபுரோஃபென் போன்ற மருந்துகள்
பலமான மணங்கள் அல்லது ஸ்பிரேகள்
உடற்பயிற்சி
ஆஸ்துமா மருந்துகள்

ஆஸ்துமாவுக்கான மருந்துகள் உங்கள் பிள்ளையின் சுவாசப்பையை ஆரோக்கியமாக வைக்க உதவுவதோடு பிள்ளையின் ஆஸ்துமா மோசமடையாமலும் வைத்துக்கொள்ளும். இந்த மருந்துகள் ஆஸ்துமாவைக் குணப்படுத்தாது, ஆனால் அவை உங்கள் பிள்ளையின் சுவாசப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

ஆஸ்துமாவுக்காக உங்கள் பிள்ளை எடுக்கும் மருந்துகளில் அநேகமானவை மூச்சில் உள்வாங்குபவையாகும். மூச்சில உள்வாங்கும் மருந்துகள் இன்ஹேல்ட் மருந்துகள் என அழைக்கப்படுகின்றன. ஆஸ்துமாவுக்கான மிகச் சிறந்த மூச்சில் உள்வாங்கும் மருந்துகளில் சில கோர்ட்டிகொஸ்டீரொயிட் என அழைக்கப்படுகின்றன.

மூச்சுவழியாக உட்கொள்ளும் மருந்துகள் ஆஸ்துமா உள்ள பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பானவை என காட்டப்பட்டுள்ளன.உங்கள் பிள்ளை அவற்றை பல வருடங்களுக்கு உபயோகிக்கலாம் அதோடு ஒரு சாதாரண மனித உயரத்துக்கு வளரலாம்.

மூச்சுவழியாக உட்கொள்ளும் மருந்தை உட்கொண்ட பின் உங்கள் பிள்ளை வாயைக் கழுவ வேண்டும் அல்லது நீர் அல்லது பழச்சாறு அருந்தவேண்டும். வாய் வெண்புண்ணை நிறுத்த இது உதவும்.

ஆஸ்துமாவுக்காக உங்கள் பிள்ளை மூச்சுவழியாக உட்கொள்ளும் மருந்து வகைகளில் முதன்மையானவை கன்ட்ரோளர்ஸ் அதாவது கட்டுப்படுத்திகள் அல்லது ரிலீவர்ஸ் அதாவது நிவாரணிகள் என அழைக்கப்படுகின்றன.
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்

ஒரு கட்டுப்படுத்தும் மருந்தானது மூச்சுக்குழாய்களின் உள் உறை வீங்குவதைத் தடுக்கின்றது. தினசரி உபயோகிக்கப்படும் போது உங்கள் பிள்ளைக்கு குறைந்த அளவிலான வீக்கமும் சளியுமே ஏற்படுகின்றது. பெக்ளோமெதசோன் (கியுவர்), பியூடசோனைட் (பள்மிகோர்ட்), பியூடசோனைட் பிளஸ் ∴பொர்மடெரோல் (சிம்பிகொர்ட்), சிக்ளசோனைட் (அல்வெஸ்கோ), ∴ப்ளுடிகசோன் (∴ப்ளொவென்ட்), மற்றும் ∴ப்ளுடிகசோன் பிளஸ் சல்மெடரோல் ( அட்வெயர்) போன்றவை மூச்சில் உள்வாங்கும் கட்டுப்படுத்தும் மருந்துகளுக்கான சில உதாரணங்களாகும். வில்லை வடிவத்திலான கட்டுப்படுத்தும் மருந்துக்கான ஒரு உதாரணம் மொன்டலுகாஸ்ட் (சிங்குலெயர்) ஆகும்.

உங்கள் பிள்ளை நலமானதாகத் தோற்றமளித்தால்க்கூட கட்டுப்படுத்தும் மருந்தை தினமும் உப்யோகிக்க வேண்டும். உங்கள் வைத்தியர் நிறுத்தச் சொல்லும்வரை உங்கள் பிள்ளை இந்தக் கட்டுப்படுத்தும் மருந்தை உபயோகிப்பதை நிச்சயப்படுத்துங்கள்.
ஆஸ்துமா அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிக்கும் மருந்துகள்

இருமல் அல்லது மூச்சிரைப்பு போன்ற ஆஸ்துமாவுக்கான அறிகுறிகளுக்கு, நிவாரணி மருந்து சிகிச்சையளிக்கின்றது

மூச்சுக்குழாயை சூழ்ந்து செல்லும் தசைகளை நிவாரணி மருந்து இளைப்பறச் செய்கின்றது. தசைகள் இளைப்பறும்போது மூச்சுக்குழாய் திறக்கின்றது. மூச்சுக்குழாய்கள் திறக்கும்போது உங்கள் பிள்ளையால் மேலும் இலகுவாக சுவாசிக்க முடிகின்றது. சல்பூட்டமோல் (எயாரொமிர் அல்லது வென்டோலின்) மற்றும் டர்புடலின் ( பிரிக்கனில்) என்பன நிவாரணி மருந்துகளுக்கான உதாரணங்களாகும்.

ஆஸ்துமா பிரச்சனை வரும்போது உங்கள் பிள்ளை நிவாரணி மருந்தை பயன்படுத்த வேண்டும். உங்கள் பிள்ளையின் நிலை முன்னேற்றம் கண்டு வருவதாக என்று மருத்துவர் சொல்லும்போது, நிவாரணி மருந்தை தினமும் உபயோகிப்பதை அவன் நிறுத்த வேண்டும். உடற்பயிற்சி செய்ய முன்பு நிவாரணி மருந்தை உபயோகிக்கபடி உங்கள் பிள்ளையிடம் உங்கள் மருத்துவர் சொல்லக்கூடும்.
உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா மோசமடைகின்றதற்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்

ஆஸ்துமாவிற்கான பிரச்சனைகள் சில மணிநேரங்களாகவோ அல்லது நாட்களாகவோ மெதுவாக ஆரம்பிக்கலாம். உங்கள் பிள்ளை ஆஸ்துமா பிரச்சனைகளைக் கொண்டிருக்கும்போது அவனின் உடலில் ஏற்படக்கூடிய சிறிய மாற்றங்கள் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளென அழைக்கப்படுகின்றன.

ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் ஒவ்வொரு பிள்ளைக்கும் வேறுபட்டதாக இருக்கும். அவை இலகுவாக காணக்கூடியவை அல்ல என்பதை நீங்கள் அறிந்துகொண்டிருக்கக்கூடும். சில பொதுவான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் இதோ.

உங்கள் பிள்ளையிடம் நீங்கள் காணக்கூடிய அல்லது கேட்கக்கூடிய விடயங்கள்
விட்டு அகலாத இருமல்
வாந்தி எடுக்கும்வரை இருமுதல்
இரவில் இருமுதல்
மூச்சிரைப்பு (வீசிங்)
மூச்செடுக்க முடியாமை
விளையாட அல்லது உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததும் களைப்படைதல்.
வழக்கத்தைவிட விரைவாக சுவாசிப்பது
சினங்கொள்ளுதல், கோபமடைதல், வழமைக்கு மாறான நிலை
தடுமலுக்கான அறிகுறிகள்
தும்முதல்
உங்கள் பிள்ளை உங்களிடம் சொல்லக்கூடியவை
“நான் களைப்பாக இருக்கின்றேன்”
“எனது நெஞ்சு வலிக்கின்றது”
“மூச்செடுக்கக் கடினமாக உள்ளது”
“நான் மூச்செடுக்கும் போது ஒரு வினோதமான சத்தம் (வீசிங்) கேட்கின்றது.”
உங்கள் பிள்ளை ஏதாவது ஆரம்ப எச்சரிக்கை அடையாளங்களைக் கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்யவேண்டும்

இவற்றில் ஏதாவது ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை நீங்கள் காண்பீர்களானால், உங்கள் மருத்துவருடன் நீங்கள் உருவாக்கிய செயல்த் திட்டத்தை பின்பற்றுங்கள்.

ஒரு செயல்த் திட்டம் உங்களிடம் இல்லையென்றால், ஒன்றை உருவாக்குவது பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா மோசமடைவதற்கான அபாய அறிகுறிகள்

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஏதாவது அபாய அறிகுறிகளை உங்கள் பிள்ளை கொண்டிருந்தால், உங்கள் மருத்துவருடன் நீங்கள் உருவாக்கிய செயல்த் திட்டத்தை பின்பற்றத் தவறாதீர்கள்.
இருமுவதையும் வாந்தி எடுப்பதையும் நிறுத்த முடியாதிருத்தல்
பேசக் கடினமாக இருத்தல்
வழக்கத்துக்கு மாறாண நித்திரைக் குணம், விழிக்கச் செய்வதில் சிரமம்
உதடுகள் அல்லது சருமம் நீலமாகக் காணப்படுதல்
பிள்ளை மூச்செடுக்கும்போது கழுத்துத் தோல் அல்லது மார்பு உள் உறிஞ்சப்பட்டிருத்தல் (உள்ளிழுக்கப்பட்டு)

பிள்ளைகளின் செயல்த் திட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்றபடி உங்கள் பிள்ளை நிவாரண மருந்தை எடுக்கச் செய்யவும்.

மிக அருகிலுள்ள அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குச் செல்லவும், அல்லது ஒரு அம்புயுலன்ஸை அழைக்கவும்.
ஆஸ்துமாவும் உடற்பயிற்சியும்

ஆஸ்துமா கொண்டுள்ள உங்கள் பிள்ளை சுறுசுறுப்பாக இயங்கவும் விளையாட்டுகளில் ஈடுபடவும் முடியும். எல்லாப் பிள்ளைகளும் விளையாடவும் உடற்பயிற்சி செய்யவும் வேண்டும். உங்கள் பிள்ளை ஆரோக்கியமாக இருப்பதும் மற்றப் பிள்ளைகளுடன் விளையாடுவதும் அவசியம்.
உடற்பயிற்சி சில பிள்ளைகளின் ஆஸ்துமாவை மோசமடையச் செய்யலாம்

உடற்பயிற்சியானது சில பிள்ளைகளின் ஆஸ்துமாவை மோசமாக்கும் என்பதை நாங்கள் அறிவோம். பிள்ளைகளில் ஆஸ்துமாவிற்கான எச்சரிக்கை அறிகுறிகள் உடற்பயிற்சியின்போது அல்லது உடற்பயிற்சியின் பின்னர் தோன்றலாம்.

உடற்பயிற்சியின் போது உங்கள் பிள்ளை அவனுடைய ஆஸ்துமாவிற்காக செய்யக்கூடிய சில விடயங்கள் இருக்கின்றன:
வழக்கமாக, கட்டுப்படுத்தும் மருந்துகளை உங்க பிள்ளை எடுப்பாராக இருந்தால் உடற்பயிற்சியின்போது குறைவான பிரச்சனைகள்தான் இருக்கும்.
எந்த ஒரு உடற்பயிற்சியையும் எப்போதும் உங்கள் பிள்ளை இலகுவான, மென்மையான உடற்பயிற்சிகளுடன் ஆரம்பிப்பதையும் முடிப்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள். இவை வாம்-அப் மற்றும் கூள்-டவுன் பயிற்சிகள் எனப்படும்.
உடற்பயிற்சி செய்யுமுன் அவனுடைய ஆஸ்துமா அறிகுறிகளுக்கு நிவாரணமளிக்கும் மருந்தை எடுக்கும்படி உங்கள் மருத்துவர் உங்கள் பிள்ளையிடம் கூறலாம். இறுமல் மற்றும் வீசிங் போன்ற ஆஸ்துமாவிற்கான அறிகுறிகளைத்தான், நிவாரணி மருந்து கட்டுப்படுத்தும் என்பதை நினைவில் வையுங்கள். உடற்பயிற்சிக்கு 15 அல்லது 20 நிமிடங்களுக்கு முன் இதை பாவித்தால், ஆஸ்துமா அறிகுறிகள் குறையலாம்.
உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா உடற்பயிற்சியின்போது மோசமடையும் என்றால், உங்கள் பிள்ளை சிறிது நேரத்திற்கு உடற்பயிற்சி செய்துவிட்டு உடற்பயிற்சிகளுக்கிடையே ஓய்வெடுக்க வேண்டும்.
உடற்பயிற்சியின்போது உங்கள் பிள்ளை மூச்சிரைக்க ஆரம்பித்தால், அவன் அதை உடனடியாக நிறுத்த வேண்டும். பின்னர் நீங்கள் உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் உருவாக்கிய செயல்த் திட்டத்தை உங்கள் பிள்ளை பின்பற்றவேண்டும்.
நினைவில் வைக்கவேண்டிய முக்கிய விடயங்கள்

உங்கள் பிள்ளை முன்னேற்றமடைந்து காணப்பட்டாலும்கூட, ஆஸ்துமா பிரச்சனை ஒன்றின் பின் 6 தொடங்கி 8 வாரங்கள் அல்லது அதற்கும் அதிக காலத்திற்கு அவனுடைய மூச்சுக்குழாய்கள் வீங்கியிருக்கக்கூடும். கட்டுப்படுத்தும் மருந்தை உங்கள் பிள்ளை தொடர்ந்து உட்கொண்டுவர வேண்டும்.

உங்கள் மருத்துவருடன் உருவாக்கிய செயல்த் திட்டத்தை நீங்கள் பின்பற்றவேண்டும். செயல்த் திட்டமென்பது, ஆஸ்துமாவைச் சமாளிக்க அன்றாடம் என்ன செய்வதென எழுதப்பட்ட ஒரு திட்டமாகும். உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா மோசமாகும்போது என்ன செய்ய வேண்டுமென்பதையும் இத்திட்டம் விளக்குகிறது.

ஆஸ்துமாவை மோசமடையச் செய்யும் பொருட்களிலிருந்து(ஆஸ்துமா தூண்டுவிசைகள்) உங்கள் பிள்ளையை தூர விலக்கிவைப்பதன் மூலம், வரக்கூடிய மற்றொரு ஆஸ்துமா பிரச்சனையை நீங்கள் தடுக்க உதவலாம்.

உங்கள் பிள்ளை 6 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையதென்றால், சுவாசப்பை செயற்பாட்டு சோதனை என்றழைக்கப்படும் ஆஸ்துமாவிற்கான “ஊதும்” சோதனைபற்றி மருத்துவரிடம் பேசுங்கள். ஆஸ்துமாவை அடையாளம் காண்பதற்கும் கண்காணிப்பதற்கும் இச் சோதனை பயன்படுத்தப்படுகின்றது.
, ,