குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

9.7.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இறுதி மூச்சு
சுவாசம் சுகமானால் சுற்றமே சொர்கமான உணர்வு கொள்ளும் அற்ப வாழ்வில் படைத்தவன் அளித்த அருட்கொடைகளுக்கு நன்றியுடையவர்களாக இருக்க மறந்த
தருணங்களைச் சொல்லும் காட்சிக் காணொளி படைக்கும் உயிரோட்டமான கவிதை உரை அமைத்து இங்கே பதிக்கப்பட்டிருக்கிறது.

மனதில் பதிக்கும் கவிதை வரியாக வழங்கவும் அதனை அப்படியே காட்சிகளுக்குள் நடைபோட எழுத்தோடையாக்கிட உதவிய சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக !

நன்மை நாடி, நலன் வேண்டி பகிர்ந்தளியுங்கள் அதற்கான கூலியை அல்லாஹ்விடமே வேண்டிப் பெற்றிடுவோம் இன்ஷா அல்லாஹ் !

இறுதி மூச்சு!


யா அல்லாஹ்...யா ரஹ்மானே!

பார்வை இருண்டுவிட்டிருக்க
அகக் கண்கள்
இன்னும் விழித்திருக்க
என்னைச்
சுற்றியிருப்போரை உணர்கிறேன்

அவர்களின்
இழவு தோய்ந்த
மரண ஓலம்
மெளனச் சுவர்களை உடைத்துக்கொண்டு
அமைதியற்று ஆர்ப்பரிக்கும்
அலைகடலென எனக்குக் கேட்கிறது;

என்
இருப்பின் மீதான பிடிப்பை
நழுவவிட்டுப் புலம்பும் அவர்களின்
காலடி ஓசை
மெல்ல மெல்ல விலகிக் கரைய
என்
உயிர் பிரியும் தருணம்
அருகி வருவதை அறிகிறேன்

கூரான குளிர்க்காற்று
என் ஆத்மாவுக்குள் வியாபித்து
சிரம் முதல் - பாதங்களின்
விரல் வரை பயணிக்க
இறுதி மூச்சொன்று
என்
உதடுகள் பிரித்து வெளியாயிற்று

புறப்படும் தருணம் இது
நான்
போயே தீர வேண்டும்

எனவே
இறப்பு,
எத்துணை சாசுவதம்!!!
(இதை
இந்த விளிம்பில் உணர்வது கைசேதமே!)

ஏற்கனவே சொல்லப்பட்டதுதானே:
ஒவ்வொரு ஆத்மாவும்
அவற்றிற்கான
உடற்கூட்டைப் பிரிய
தேதி குறிக்கப்பட்டவையே;
அத்தேதியில்
நிலையான
மறுமையைச் சந்திக்கத்
தயாராகியே தீரவேண்டும்

குறித்து வைத்துக் கொள் சகோதரா
இந்நிலை
நாளையேகூட
உனக்கு நேரும், யாரறிவர்?

அந்த
நிலையான வாழ்வில்
நீ வேண்டுவது எவ்விடம்?
சொர்க்கச் சுகமா நரக நெருப்பா?
இப்போதே தீர்மாணித்துக் கொள்;
அது
சட்டென நிகழ்ந்து விடலாம், தாமதிக்காதே,
தீர்மாணித்துவிடு!

வாருங்கள் சகோதரர்களே
வல்லவனைப் புகழ்ந்து
வணக்கத்தில் இணைவோம்;
அது
சட்டென நிகழ்ந்து விடலாம்,
தாமதிக்காது
தீர்மாணித்து விடுங்கள்!


அது
சட்டென நிகழ்ந்து விடலாம்,
தாமதிக்காது
தீர்மாணித்து விடுங்கள்!

யா அல்லாஹ்...யா ரஹ்மானே...
பார்வையற்றுப் போனேனே

என்
கண்கள் குருடாகிவிட்டனவே
இன்னும் இது நான்தானா?
அல்லது
வழி பிறழ்ந்தலைந்த
என் ஆத்மா
கணித்தறிந்துவிட இயலாத
தண்டனைக்கு
என்னை உள்ளாக்கி விட்டதா?

துரதிர்ஷ்டவசமாக  நாம்
மண்ணுக்கே மீள்கிறோம்
சிலர் சுபித்திருக்க
ஏனையோர் நரக நெருப்பில்
எரிந்து கொண்டிருப்பர்,
இதை
முன்பே உணரத்தவறினேனே!
வரிசை சுருங்கி
இதோ
என் முறை வந்தே விட்டதே

பிறகென்ன?
இதோ
(செய்வினைப் பட்டியலோடு)
என் உடலை மண்ணில் புதைத்து
அவர்கள் அழுகிறார்கள்
அவர்களைவிட மோசமாக
நான் அழுவதை அறியாமலே

அவர்களுக்கென்ன
தற்காலிகமாக
வீடுகளுக்குத் திரும்பிவிடுவர்
நானோ
என் இறைவனைச்
சந்தித்தாக வேண்டும்

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்
குறித்து வைத்துக் கொள் சகோதரா
இந்நிலை
நாளையேகூட
உனக்கு நேரும், யாரறிவர்?

இறுதி இலக்கு
சொர்க்கமா நரகமா?
இப்போதே தீர்மாணித்துவிடு
தாமதிக்காதே

வாருங்கள் சகோதரர்களே
வல்லவனைப் புகழ்ந்து
வணக்கத்தில் இணைவோம்;
இப்போதே தீர்மாணியுங்கள் - காலத்தை
இழுத்தடிக்காமல்!


வாருங்கள் சகோதரர்களே
வல்லவனைப் புகழ்ந்து
வணக்கத்தில் இணைவோம்;
இப்போதே தீர்மாணியுங்கள் - காலத்தை
இழுத்தடிக்காமல்!


ஆக்கம்: அஹமது அல்புகாதிர்

தமிழில்: சபீர் அஹமது அபுஷாரூக்

, ,