குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

9.4.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பாவத்தின் பரிகாரம்
சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறதே! இதற்கு முடிவே இல்லையா? என்று தினமும்; அதிகமானோர் புலம்புவதைக் காணலாம். ஆனால் இவ்வுலகத்தின் சோதனைகளிலிருந்து தப்பியோர் யாரும் கிடையாது என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய உண்மை. அதாவது இவ்வுலகில் அல்லாஹ் நம்மைப் படைத்து, சகல வாழ்வாதார வசதிகளையும் நமக்களித்து, சீரான வாழ்க்கைப் பாதைகளையும் அமைத்துக் கொடுத்து நமக்கு இன்பங்களையும் துன்பங்களையும் மாறி மாறி வரச் செய்வதிலிருந்து இவ்வுலக வாழ்க்கையை ஒரு சோதனைக் களமாக, பரீட்சை மண்டபமாக ஆக்கியுள்ளான்.



நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான். (திருக்குர்ஆன் 29 : 2,3)

மேலும் கூறுகின்றான்:

ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவையோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் உணர மாட்டார்களா?பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை.படிப்பினை பெறுவதுமில்லை. (அல்குர்ஆன்: 9:126)

ஒரு பரீட்சை எழுதுவதாக இருந்தால் கூட கஷ்டப்பட்டு கண்விழித்துப் படித்து, பரீட்சைக்குத் தேவையான தகவல்களை திரட்டுவதில் அலைந்து திரிந்து, பொழுது போக்கு அம்சங்களான தொலைக்காட்சி, வானொலி, நண்பர்களுடனான அரட்டை, விளையாட்டு போன்றவற்றை தியாகம் செய்து, கற்றோரிடம் ஆலோசனைகள் பல கேட்டு பரீட்சைக்குத் தயாராகிறோம். படித்து வெற்றி பெற்றால் தான் நல்ல தொழில் கிடைக்கும், கஷ்டப்படாமல் சம்பாதிக்கலாம் என்று விடாமுயற்சியுடன் படிக்கின்றோம். எல்லாம் எதற்காக? இந்த உலகத்திலே கஷ்டப்படாமல் வாழ்வதற்காக. அதுவும் நிரந்தரமில்லாத, எந்நேரமும் மரணம் வரலாம் என்ற நிலையற்ற வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக எல்லாத் துன்பங்களையும் சகித்துக் கொண்டு பரீட்சையை எதிர் கொள்கின்றோம்.

ஆனால் மறுமையில் நிரந்தரமான வெற்றி பெறுவதற்காக அமைக்கப்பட்ட இவ்வுலக வாழ்க்கையில் ஏற்படுகின்ற துக்கங்களை, துன்பங்களை, சோகங்களை, கஷ்டங்களை சகித்துக் கொள்ள நம்மால் முடிகின்றதா? அதற்கு ஒரு துளி கூட நம்மிடம் பொறுமை இல்லை என்று தான் கூறலாம். அல்லாஹ் கூறுகிறான்,

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்!அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.(அல்குர்ஆன் 2 : 153)

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன்: 2:155)

அல்லாஹ் எல்லா வழிகளிலும் நமக்கு சோதனையை ஏற்படுத்துவான். வறுமையை வழங்கி, செல்வத்தை வழங்கி, நம் உயிர்களைப் பறித்து, நம் சொத்துக்களில் இழப்புகளை ஏற்படுத்தி நம்மை நிச்சயம் சோதனை செய்வான். ஆனால் நாம் நம்பிக்கை இழக்காமல் அவனிடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்று முஃமின்களுக்கு கட்டளையிடுகிறான்.

நாம் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் எந்த அளவுக்கு அல்லாஹ் மீது நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று நம்மை அவன் சோதிக்கிறான். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுமாறும் கூறுகிறான். மனிதன் செல்வம் வந்தால், அல்லாஹ்வையே மறந்து ஆடம்பரமாக நடந்து கொள்கின்றானா? அல்லது அச்செல்வத்தை அல்லாஹ் தடுத்த வழிகளில் செலவிடுகின்றானா? அல்லது நன்மையான காரியங்களில் செலவிடுகின்றானா? என்றும் வறுமை வந்தால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கையிழந்து அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானா? அல்லது அல்லாஹ் அல்லாதவை களிடம் உதவி தேடுகின்றானா? அல்லது பொறுமையுடன் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுகின்றானா? என்றும் சோதிக்கின்றான்.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.(திருக்குர்ஆன் 2 : 286)

அது மட்டுமல்ல ஆரோக்கியத்தை வழங்கியும் நோய் நொடிகளை வழங்கியும் அல்லாஹ் நம்மை சோதித்துப் பார்க்கின்றான். ஆகவே நம் வாழ்க்கையில் நிகழும் அனைத்து சம்பவங்களும், நமக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்துமே சோதனை தான். அதனை ஒவ்வொரு முஃமினும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
.
அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுவீராக!(திருக்குர்ஆன் 9 : 51)

நம்மிடம் இல்லாத ஒன்றை நினைத்து புலம்புவதை விட இருப்பதை வைத்து திருப்தியடைவதே மேலானது. உலகத்தில் எல்லோரும் நம்மிடம் இருக்கின்ற, அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள குறைகளை நினைத்து சதா மனம் வருந்துகிறோம். ஆனால் அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள நிறைகளை என்றைக்காவது நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றோமா? நம்மிடம் இல்லாத ஒன்றை நினைத்து புலம்புவதை விட இருப்பதை வைத்து திருப்தியடைவதே மேலானது. உலகத்தில் எல்லோரும் சம்பூரணமாக இல்லை. ஆதலால் நாம் நம்மை விட கீழ் தரத்தில் உள்ளோரைப் பார்த்து அல்ஹம்துலில்லாஹ் நமக்கு அல்லாஹ் இவ்வளவு வசதிகளை தந்திருக் கின்றானே, அவர்களை விட நாம் பரவாயில்லையே என்று திருப்தியடைய வேண்டும். நமக்கு மேல் நிலையில் உள்ளோரைப் பார்த்தால் நிச்சயம் எமக்கு இவ்வுலக வாழ்வின் ஆசைகள் தான் அதிகரிக்குமே தவிர திருப்தி காண முடியாது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புஹாரி 6490

நாம் நம் குறைகளையும், கஷ்டங்களையும் தீர்க்கும் படி ஏக இறைவன் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும். ஏனென்றால் இவற்றை தருபவனும் அவனே! உதவி செய்பவனும் அவனே!

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். (அல்குர்ஆன் 4 : 132)

அல்லாஹ்வும், அவனது தூதரும் அவர்களுக்கு வழங்கியதில் அவர்கள் திருப்தி கொண்டு ‘அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அல்லாஹ்வும், அவனது தூதரும் எங்களுக்கு அவனது அருளைத் தருவார்கள். நாங்கள் அல்லாஹ்விடமே ஆசை கொண்டோர் என்று அவர்கள் கூறியிருந்தால் (அது நல்லதாக இருந்திருக்கும்) (அல்குர்ஆன் 9 : 59).

இறுதி நபியான முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் இன்னும் அநேக நபிமார்களும் அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்தச் சொல்வதில், வாழ்ந்து காட்டுவதில் சொல்லொன்னாத் துயரங்களை அனுபவித்தார்கள். அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்களே இந்தளவு துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளானார்கள் என்றால் அவர்கள் கூட இவ்வுலக சோதனையிலிருந்து தப்பவில்லை என்று அறிந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் மிகப் பெரும் அருளால் நம்பிக்கை இழக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் உதவி வரும் வரை பொறுமையோடு இருந்தார்கள். அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடிப் பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும் என்று மூசா தமது சமுதாயத்திடம் கூறினார் (அல்குர்ஆன்: 7:128)

(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப்படுத்தப ;பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.(அல்குர்ஆன் 6 : 34)

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. ‘அல்லாஹ்வின் உதவி எப்போது? என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. (திருக்குர்ஆன் 2 : 214)

அன்று முஹம்மது நபியும் ஸஹாபாக்களும் பட்ட துன்பங்களையும், துயரங்களையும் போன்றதை இன்று நாம் யாரும் அனுபவிக்கவில்லை. அதுவும் அல்லாஹ்வின் மார்க்கத்தை கொண்டு செல்வதில், கடைப்பிடிப்பதில், ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டுவதில் கஷ்டப்பட்டார்கள். இன்று நமக்கு எமது மார்க்கத்தை அதன் தூய வடிவில் செயல்படுத்துவதற்கு எந்தவிதமான கஷ்டமும் இல்லை. ஆனால் மார்க்க விடயங்களில் பொடுபோக்காகவும், வாழ்க்கையில் ஏற்படுகின்ற சோதனைகளில் நம்பிக்கை இழந்தும் நாம் இருக்கின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:அபூசயீத் அல்குத்ரீ (ரலி)முஸ்லிம் 5030)

ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு எந்தத் துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)முஸ்லிம் 5023

ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால

அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)திர்மிதீ 2319)

ஒரு சிறிய தலைவலியைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதற்கும் திட்டித் தீர்க்கின்றோம். என்ன துன்பம் ஏற்பட்டாலும் முதலில் கோபப்படுகின்றோம். ஆக மொத்தத்தில் பொறுமையிழந்து, அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையிழந்து சபிப்பதாலும் திட்டுவதாலும் பாவத்தையே தேடுகின்றோம். இது நமது ஈமானை பலமிழக்கத் தான் செய்யுமே தவிர நன்மையைப் பெற்றுத் தராது. ஆனால் அல்லாஹ் நாம் படும் துன்பங்களுக்கு எம் பாவங்களையே மன்னிக்கின்றான்.

எங்களில் பலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கலாம், தீராத நோய்கள் இருக்கலாம், மீள முடியா வறுமை குடி கொண்டிருக்கலாம், உடல் உறுப்புக்களில் குறைபாடு இருக்கலாம், இயற்கை அனர்த்தங்களில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம், சொந்த வீடு இல்லாமல் இருக்கலாம், இன்னும் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால் உண்மையிலேயே அல்லாஹ்வை உறுதியாக ஈமான் கொண்டவர்களாக இருப்பின் இவ்வனைத்து சோதனைகளையும் அல்லாஹ்வுக்காக பொறுத்து, அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடி, அல்லாஹ் கூறிய வழிகளில் முயற்சி செய்து ஈருலகிலும் வெற்றி பெற முயல வேண்டும். ஏனெனில் இவ்வுலகம் அழியக்கூடியது, நிரந்தரமற்றது. மறுமையில் கிடைக்கக் கூடிய நற்பேற்றிற்காக இவ்வுலகில் பொறுமையை மேற்கொண்டு இவ்வுலக துன்பங்களை துச்சமென நினைத்தால் நிச்சயம் ஈருலகிலும் வெற்றி பெற முடியும். இவ்வுலக இன்பத்திற்காக மார்க்கத்தையும் புறந்தள்ளி, பொறுமையையும் இழந்து, ஈமானையும் இழப்போமாயின் ஈருலகிலும் நஷ்டப்பட்டவர்களாகி விடுவோம் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ‘நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.(அல்குர்ஆன் 2 : 156, 157)

அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளிலேயே மிகப் பெரும் அருட்கொடை எம்மை இஸ்லாம் மார்க்கத்தில் படைத்தது. அது மட்டுமல்லாமல் அவனை மட்டுமே வணங்க வேண்டும், அவனிடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்ற ஏக இறைவனின் ஏகத்துவப் பாதையில் நமக்கு நேர் வழிகாட்டியது. அந்த நேரான வழியில் வெற்றி பெறுவதே எமது இலட்சியமாக உயிருள்ள வரை இருக்க வேண்டும். அப்போது தான் ஈருலகிலும் வெற்றி பெற முடியும்.
, ,