குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

24.12.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜாகிரின் படிக்கட்டுகள் -5
almighty-arrahim.blogspotcom
நம்பிக்கை & நாகரீகம்... இது இரண்டும் தூர நோக்கு உள்ள அனைவருக்கும் தேவை [தொழில் செய்தாலும் சரி , அல்லது வேலை செய்தாலும் சரி] இது போன்ற
வார்த்தைகள் ஜவுளிக்கடை விளம்பரங்களில் மட்டும் கேட்கலாம். [ஸ்பீக்கர் வைத்து "காட்டுகத்து" கத்தும் நடைமுறை இன்னும் இருக்கிறதா?]

உங்களின் எதிர்காலம் சரியாக அமைய வேண்டுமானால் முதலில் உங்களை நம்ப கற்றுக்கொள்ளுங்கள். சிலரிடம் பேசும்போது அவர்களிடம் என்ன இல்லையோ அதில் தான் அவர்களின் பேச்சு "சுத்தி சுத்தி" வரும். சில தன்னிலை மறந்த டயலாக்ஸ்...

1. நான் அவ்வளவு படித்தவன் இல்லை
2. எனக்கு குடும்ப சப்போர்ட் இல்லை
3. வாய்த்த மனைவி/மக்கள் சரியில்லை
4. நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன், அதனால் எனக்கு ஆதரவு இல்லை.
5. உடம்பு முன்பு மாதிரி ஒத்துழைக்கிறதில்லே....

படிப்பை காரணம் காட்டுபவர்களுக்கு...

"இன்றைய தேதியில் தமிழ்நாடு முழுக்க Commerceல் Ph.D வாங்கிய புரபொசர்களை விட அந்த புரபொசர் வீட்டுக்கு மளிகைக்கடை பொருள்களை அனுப்பி வைக்கும் மளிகைக்கடை முதலாளி அதிகம்சம்பாதிக்கிறார்.

எனக்கு குடும்ப சப்போர்ட் இல்லை என்பவர்களுக்கு, உலகத்தில் சாதிக்கப்படும் அனைத்து சாதனைகளும் குடும்ப சப்போர்ட்டுடன் நடக்கிறதா? அலைகளில் நீச்சல் கற்றுக்கொள்ள நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அமைதியான குளத்தில் நீச்சல் அடிக்க கடலில் உங்களுக்கு இலவச பயிற்சி என எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிடும்.

பிரச்சினைகளை கண்டு அழுதவன் சாதித்ததாக சரித்திரம் இல்லை. பிரச்சினைகளுக்கும்,தன்னம்பிக்கை வரும் அந்த நெருப்பு நிமிசத்துக்கும் ஒரு சின்ன கால அவகாசம்தான். அந்த நிகழ்வு நடக்க உங்கள் முயற்சி உங்கள் ஆதங்கம் உங்களின் மனதுக்குள் எரியும் அணையாத நெருப்பு மிக மிக தேவை. அது ரெடிமேட் ஆக எங்கேயும் கிடைக்காது. அது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் உருவாக்க கூடிய வார்த்தைகளுக்குள் அடங்காத மனிதக்கோட்பாடு. இது கருவில் நீங்கள் உருவான நேரத்திலேயே உங்களுக்குள் இறைவன் அழகாக இணைத்திருக்கிறான். நாம் வளர்ந்து பல குப்பைகளை படித்து,பல "பொறெக்கிறுக்கு" ஆட்களின் அட்வைசில் படைத்த இறைவனைக்கூட குறை சொல்ல ஆரம்பித்து விட்டோம். நம் நுண்ணறிவு ஒரு 'ஈ' தவறாக ரூமுக்குள் வந்து திறக்க முடியாத ஜன்னல் கண்ணாடியில் முட்டி மோதி வெளியேற நினைக்கும். அதேசமயம் கொஞ்சம் திரும்பி உள்ளே வந்த திறந்த வாசல் வழியிலும் வெளியேறலாம் என "சுத்தமா" மறந்து போகும் அறிவு. இந்த so called கொசு அறிவை வைத்துதான் நாம் சில சமயங்களில் பிரபஞ்சத்தையே கட்டிக்காக்கும் இறைவனை விமர்சிக்கிறோம்.

உடம்பு சரியில்லை என்று தனக்குத்தானே கற்பனை செய்து கொள்ளும் ஆட்களுக்கு....முதலில் பெரும்பாலான விசயஙகள் சாதாரண சோம்பேரித்தனமாக இருக்கும். உங்கள் உடம்பை உங்கள் சொல் கேட்காமல் வளர்த்து அதற்கு நீங்கள் அடிமை ஆகி விட வேண்டாம். எனக்கு தெரிந்த ஒரு நண்பர் சொல்வது “ until you are bedridden , you can work” நீங்கள் படுக்கையில் [நோயாளி] இருக்கும் சூழ்நிலை வரை நிச்சயம் உழைக்களாம்.

உடம்பில் குறை உள்ளவர்கள் எப்படியெல்லாம் தன் சாதனைகளை செய்கிறார்கள், எப்படியெல்லாம் அவர்கள் இயங்குகிறார்கள் என்பதற்கான காணொளி இன்னும் சில தெளிவைத்தரலாம்.


ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் தனது இளமைப்பருவத்தில் சரியாக கற்றுக்கொள்ளும் திறன் இல்லாதவர். பிறகு அவரின் சாதனைகள் சரித்திரம் படைத்தது.

ஜான் மில்ட்டன் தனது 43 வயதில் கண் பார்வையை இழந்தாலும் உலகில் சிறந்த கவிஞர்களில் ஒருவராக இன்னும் நினைவுகூறப்படுகிறார்.
தாமஸ் ஆல்வா எடிசன் காது கேளாத மனிதனாய் இருந்தாலும் தனது கண்டுபிடிப்பில் உயரத்தில் நிற்கிறார்.

எல்லா சாதனைகளும் குறைகளோடுதான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சாதித்த பிறகு குறைகளுக்கு கூட மரியாதை கிடைத்துவிடுகிறது.

நாகரீகம் என்பது சிந்து சமவெளி சம்பந்தப்பட்ட விசயம் என்பது மாதிரி அதற்கும் தொழிலுக்கும் சம்பந்தமில்லை என சிலபேர் தொழில் செய்ய பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் 'டச் ஸ்க்ரீன்'போன் வந்து விட்டது, உங்கள் கஸ்டமரிடம் பேசி வைத்து விட்டு [நல்லபடியாக] பிறகு உங்கள் கை பட்டு ரீ-டயல் ஆகி அதே கஸ்டமருக்கு தானாகவே லைன் கிடைக்க... இந்த மூலையில் அவரைப்பற்றி 'ஆத்து ஆத்து' என ஆத்திக் கொண்டிருந்தால். ஏன்யா நான் முன்னேறல என புலம்பினாலும் புண்ணியமில்லை.எப்போதும் பேச்சில் நாகரீகம் இருந்தால் இது பற்றிய கவலையே தேவை இல்லை. எனக்கு தெரிந்து ஒரு நண்பர் இருக்கிறார் அவரிடம் யாரும் மற்றவர்களைப்பற்றி குறை சொன்னால் ' அப்புரம். சட்டை எங்கே வாங்குனீங்க. நல்ல டிசைனா இருக்கே..../ வாட்ச் என்ன புதிசா.. என பேச்சை வேறு திசைக்கு திருப்பிவிடுவார். குறை சொல்ல ஆரம்பித்தவரும் அதை தொடர மாட்டார். நாவடக்கம் தொழிலில் /வேலையில் மிக மிக முக்கியம்.

அவரு எனக்கு பல வருச கஸ்ட்டமரு என்ன சொன்னாலும் தப்பா நினைக்க மாட்டாரு என நீங்கள் நினைத்தாலும் அவர் நாகரீகம் கருதி நீங்கள் எடுப்பது 'வாந்தி' என தெரிந்தும் அமைதிகாக்கும் நல் உள்ளமாக இருக்கும் என்பது உங்களுக்கு யாராவது வந்து சொல்ல வேண்டியிருக்கும். அப்போதுதான் நமக்கும் அது"எருமை மரத்து ஆணி போல் பதியும்" (பசு(மையான) மரத்து ஆணி என்று எத்தனை நாட்களுக்கு சொல்வது), மற்றவர்களின் ப்ராடக்டை / சேவையை குறை சொல்லி நம் ப்ராடக்டை / சேவையை விற்க முடியாது. அப்படி செய்பவர்கள் தனக்கும் அப்படி நடக்கும் எனும் "முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்" 'தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்று தமிழாசிரியர் பாடம் நடத்தும்போது கஸ்டம்ஸ் ரோட்டில் போய்க்கொண்டிருந்த லாரியை வேடிக்கை பார்த்திருப்பீர்கள் என்று யார் தலையில் வேண்டுமானாலும் அடித்து சத்தியம் செய்யலாம்.

உங்கள் ப்ராடக்டை / சேவையை உங்கள் கஸ்டமர் உங்கள் ஆபிஸ் சகா குறை சொன்னால் 'People in your position won’t simply comment like this, there must be some valid reason behind this, May I know the reason sir?’ உங்களைப்போல் அனுபவசாலிகள் குறை சொல்வதாக இருந்தால் நிச்சயம் ஏதாவது காரணம் இருக்க வேண்டும், அதை நான் தெரிந்து கொள்ளலாமா?' என முற்றுபுள்ளி வைத்து விடலாம்.நான் 20 வருசம் செய்ரேன், எனக்கு தெரியாதா என்ற மனப்பக்குவம் சண்டையை மூட்டிவிடும். விவாதத்தில் ஜெயிப்பது முக்கியமல்ல,வேலையில் ஜெயிப்பதே முக்கியம்.

ஒவ்வொரு நாளும் உங்கள் தொழில் / வேலையை ஆரம்பிக்கும்போது ஒரு நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள். உங்கள் தேவைகள் அனைத்தும் உங்கள் நம்பிக்கையின் அடர்த்தியில் நிச்சயிக்கப்படுகிறது. முஸ்லீம்களுக்கு அது மனம் ஒன்றி கேட்கும் ;சுபுஹு தொழுகையின் துவா'வில் ஆரம்பிக்கிறது நம்பிக்கையின் முதல் படி..

சிலருக்கு தனது இலக்கின் மீதான பார்வை அடிக்கடி வந்து போகும் அதில் நிரந்தரம் இருக்காது, காரணங்கள் பல இருக்கின்றன .

we will see in next episode..

தொடரும்...
ZAKIR HUSSAIN
நன்றி அதிரை நிருபர்
, ,