குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

15.4.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

என்னைக் கண்டெடுத்தேன்
almighty-arrahim.blogspot.com
இந்த இருவரிடமும் ஏதோ
ஈர்ப்பு சக்தி இருக்கிறதோ ?!

பார்த்ததும்
பத்து வயது குறைகிறதே!
பார்வையில்

பச்சை வயல் விரிகிறதே!


இவ்விருவரும்
நட்பென்ற உறவை -எனக்கு
நச்சென்று உணர்த்தியவர்கள்

உயிரூட்டப்பட்டப் புத்தகங்களாய்
என்னோடு வளர்ந்து
எனக்குள்
அறிவைப்
பயிரிட்டு வளர்த்த பண்பாளர்கள்

கால்க்காசு அரைக்காசுவென
காசில்லாக் காலத்திலும்
கோடீஸ்வரக் கொண்டாட்டத்தைக்
குறைவின்றித் தந்தவர்கள்

ஒருவன் துவக்கி
ஒருவன் முடிக்கும்
இந்தப்
பள்ளிப் பருவ
தொடர் ஓட்ட வீரர்களால்
இடையோட்டக்காரனான
என் தொய்வான பிள்ளைப் பிராயம்
வெற்றியையே எட்டி மீண்டது

வயற்காட்டு நடுவில்
குளிர் நீர்க் குளம்
கடற்காற்று வீசும்
ரயில் ஊரும் தடம்

உடல் வேர்க்க ஆடும்
விளையாட்டுத் திடல்
உடை மாற்ற நாடும்
குளக்கரை இடம்

அதிகாலை தொழ
சாளரக் கதவு தட்டவும்
அடைமழை காலம்
கூடவே கச்சல் கட்டவும்

என
இறக்கைக் கட்டிப் பறந்த
வாழ்க்கையில்...

ஆளுக்கொரு வேகத்தடை
ஆங்காங்கே சிரித்தாலும்
அழகாய்ப் போய்ச் சேர்ந்தோம்
அவரவர் இணையோடு

சந்தோஷம்
சர்வ பலத்தோடு
என்னுள் நிலவ
சகலமும் இவர்கள் நட்பே

எங்களின்
அன்றாட உரையாடல்களைக்
காற்புள்ளி வைத்தே
கலைந்து செல்வோம்;
முற்றுப்புள்ளி இல்லாத
உரையாடல்கள்,
இறுதிச்சுற்றிலாத விளையாட்டுகள்
என
நட்பில் திளைத்த
நாட்கள் அவை

ஒத்த ரசனையும்
மெத்த ஒழுக்கமும்
ஒன்றிணைத்த எங்களை
எந்த விஷமமும்
சீண்டியதில்லை
எந்த இச்சையும்
தூண்டியதுமில்லை

புன்னகையைக் கூட
பற்கள் தெரிய
பிரமாண்டமாகவே பூப்போம்

எல்லையற்ற இந்த
இன்பக் கடலில்தான்
என் நண்பர்களிடம்
என்னை நான் கண்டெடுத்தேன்

வீடென்றும்
தெருவென்றும் - பின்னாளில்
நாடென்றும் - எங்களைப்
பிரித்துப்போடாமல் விட்டிருந்தால்
உறக்கத்தைக்கூட
முடிச்சுப்போட்டு வைத்து
விலகாமல் வாழ்ந்திருப்போம்

காலக் கத்தியில் நடந்து
தூரதேசம் பயணித்து
தோழர்களைத் தோளணைக்க
தொலைந்துபோன காலங்களின்
திகட்டாத
மகழ்ச்சி மட்டுமே
மறுபடியும் மீள்கிறது

இந்த மீட்சியே
தலையாய பிடிமானம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்
, ,