குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

28.4.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜாகிரின் படிக்கட்டுகள் -23
almighty-arrahim.bligspot.com
வாழ்க்கையில் பணத்தேவை என்பது பெரும்பாலும் ஏற்கனவே தெரிந்ததுதான், அதை சமயங்களில் நாம் முக்கியத்துவம் கொடுக்காமல்
“வேலை”, “பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று தள்ளிப் போடுவதால் பெரிய பணத்தேவைகள் வரும்போது சில சிரமங்களுக்குள் சிக்கிக்கொள்கிறோம். பெரும் பணத்தேவை என்பது பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம், இரண்டு பிள்ளைகளுக்கு பிறகு வீடு போதாமல் வீட்டை பெரிதாக்கி கொள்ள தேவையான ரெனொவேசன் காஸ்ட் , உங்களுடைய ஓய்வு காலத்து பணத்தேவை. இப்படி அடுக்கிகொண்டே போகலாம்.

ஒரு பெற்றோராக நம் பிள்ளைகள் நல்ல படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதே பிள்ளை எல்லா சப்ஜெக்ட்டிலும் நல்ல மார்க் எடுத்து வந்து நிற்கும்போது நீங்கள் பொருளாதார ரீதியாக ரெடியாக இல்லை என்றால் அதை விட கொடுமை எனக்கு தெரிந்து எதுவும் கிடையாது. இந்த சூழ்நிலையை ஒருமுறை நானே அனுபவித்திருக்கிறேன். பிறகு என்னை மாற்றிக் கொண்டேன். உங்கள் பிள்ளை பள்ளிக்கூடத்தில் படிக்கும் பட்சத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் இந்த எக்ஸல் ஃபைல் உங்களுக்கு ஒரு உதவியாக இருக்க கூடும். இதில் நான் குறிப்பிட்டிருக்கும் வயது ஒரு உதாரணம்தான் உங்கள் / உங்கள் குடும்ப உறுப்பினர்களின் வயதுடன் இதை பொருத்தி பார்த்து உங்களுக்கு லேசாக பால்பிட்டேசன் இல்லை என்றால் எதற்கும் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிட பழகிக்கொள்ளுங்கள்.
இதில் சொல்லப்பட்டிருக்கும் வருடங்கள் எதுவும் உலகம் அழியப்போகும், சுனாமி வரும் , பூமியை பெரிய கல் வந்து தாக்கும் என்ற உட்டாலக்கடி வருடங்கள் அல்ல. இதில் குறிப்பிட்டுள்ள குடும்பத்தலைவர் 35 வயது இன்னும் 10 வருடத்துக்குள் அவர் தன்னை மிகப்பெரிய பணத்தேவைகளுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அவரது மகன் கல்லூரி செல்லும்போது அவர் தன் வயதில் 45 - 51 வரை ஏறக்குறைய 'சரியான ஏ டி எம் மெசினாக " செயல்பட ரெடியாகி விட வேண்டும். ஒரு சிறுகுறிப்பு., "ஏ டி எம் க்கு உணர்வுகள் இல்லை"...நமக்கு???

51 வயதுக்கும் 55 வயதுக்கும் அவ்வளவு தூரம் இல்லை, இருப்பினும் தன்னுடைய ஓய்வு காலமும் நெருங்குவதை நொறுங்காமல் அவதானிக்க வேண்டும்.

லேசாக பயமாக இருக்கிறதா?..பயந்தவன் சரியாக முடிவெடுத்ததாக சரித்திரம் இல்லை. சவால்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம், அதை எதிர் கொள்பவன் தன்னை பெரிதாக நினைத்தால் பிரச்சினைகள் சிறிதாகி விடும்.பிரச்சினையை பெரிதாக நினைத்தால் நாம் சிறிதாகி விடுவோம். அப்படி என்றால் உங்களைதான் நீங்கள் ரீ-ஃபார்மேட் செய்ய வேண்டும் பிரச்சினைகளை அல்ல.

மனிதனின் பணத்தேவைகளில்தான் சலனமான மனதில் தவறுகள் செய்ய முற்படுகிறான். எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கம் தவறாமல் இருப்பதே நமது எதிர்கால மகிழ்ச்சிக்கும் , முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

இந்த சூழ்நிலையில் பணம் போதுமானதாக இல்லை என்பதற்காக இயற்கையின் விதியையும் , இறைவனின் விதியையும் மீறி செயல்பட்டால் ஒரு வேலை உணவு தந்த திருப்தியை தவிர பெரிதாக ஒன்றும் கிடைத்துவிடாது.

மீண்டும் தேட ஆரம்பிக்கும் முடிவில்லா பசி- உலக வாழ்க்கை

என் வாழ்க்கையிலும் ஒரு சோதனை எனக்கு நடந்தது, 21 வருடத்துக்கு முன் 700 சம்பளத்தில் இருக்கும்போது 30,000 [ மலேசிய ரிங்கிட்] கீழே கிடந்த பணத்தை உரியவரிடம் சேர்த்தேன். மிகவும் கஷ்டமான சூழ்நிலை அப்போது. அந்த பணத்தை உரியவரிடம் சேர்த்தற்காக நான் சிலரால் அதிகம் விமர்சிக்கப்பட்டேன், வழக்கமான டயலாக்தான் 'பிழைக்க தெரியாதவன்,- நாமாக எடுக்க கூடாது, கீழே கிடந்ததுதானே" போன்ற வசனங்கள். ஆனால் இன்றுவரை எப்போதும் தூங்கப்போனால் மனதை உறுத்தாமல் இன்றுவரை எனக்கு நிம்மதியான தூக்கம்தான். எனக்கு அறிவுரை வழங்கி விமர்சித்தவர்கள் யாரும் பில்கேட்ஸ் அளவுக்கு உயர்ந்ததாக தெரியவில்லை. என் வாழ்க்கையில் நடந்ததை ஏன் எழுதுகிறேன் என்றால் யாருக்காவது உதவுமே என்றுதான். சுய தம்பட்டம் அடித்து என் இமேஜை உயர்த்த எனக்கு எப்போதும் அவசியம் இருந்ததில்லை.

உங்கள் வாழ்க்கையில் திட்டமிடும்போது பற்றாக்குறை இருப்பது சகஜம். அதற்காக அது உங்கள் கன்ட்ரோலில் இல்லை. விதி / சூன்யம் / மனைவி சரியில்லை / பிள்ளைகள் சரியில்லை ராகம் பாட ஆரம்பித்தால் வாழ்க்கையில் உங்கள் கண் முன்னே வரும் வாய்ப்பைகூட சர்கஸில் கோமாளியை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அதற்காக எதுவும் செய்ய மாட்டீர்கள்.

எப்போது பற்றாக்குறை இருக்கிறதோ அன்றிலிருந்து ஆக்கபூர்வமாக (Constructive) உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள். எப்போது Destructive மாற்றினீர்களானால் கால ஓட்டத்தில் எல்லாமே எரிச்சலைத்தரும் ரிசல்ட்தான் கிடைக்கும்.

சந்திரனிலும் , செவ்வாயிலும் இறங்கியவர்கள் அதில் போய் இறங்கும் வரை அவர்களுக்கு புதியதுதான். இருப்பினும் தன்னால் முடியும் என்று சரியாக திட்டம் தீட்டியே இறங்கினார்கள். இதில் யாரும் 'சும்மா" நின்று கொண்டிருந்தவனை கூட கம்பெனிக்காக அழைத்து கொண்டுபோய் விட்டவர்கள் இல்லை. எனவே திட்டமிடலும் , பாசிட்டிவ் அப்ரோச்சும் இருந்தால் பணத் தேவைகளின் பற்றாக்குறை நம்மை விட்டு அகலும்.

உங்கள் ஓய்வு காலத்தில் இவ்வளவு தேவை , உங்கள் பிள்ளையின் படிப்புக்கு இவ்வளவு தேவை என்பதை யாரும் சொன்னால் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள். முடிவை நீங்கள் தாராளமாக எடுக்கலாம். ஆனால் உடனே "கேட்" போட்டு தடுக்காதீர்கள். [Law Of Resistance] இப்படி எதற்கெடுத்தாலும் "கேட்" போட்டு தடுப்பவர்களின் மூளையில் "லேர்னிங்" சர்க்யூட் பழுதாகி கிடக்கும்.

லேர்னிங் சர்க்யூட் பழுதாகி விட்டாலே எதுவும் உள் வாங்கி கொள்ளாது. பிறகு ஒரு 10 வருடம் கழித்தாலும் இன்றைக்கு நடந்த விசயமே அவர்கள் 10 வருடம் சென்றும் சொல்வார்கள் [ உதாரணம்: "ராயப்பேட்டையில் ஆட்டோகாரனுக்கு 5 ருபாய் கொடுத்தால் எக்மோர்லெ விட்டுடுவான்"- "உடுப்பிலே 5 ருபாய்க்கு லன்ச் சாப்டுட்டு" - ஏன் டாக்டர் இந்த மருந்து / ஊசியெல்லாம் 50 ரூபாய்க்குள்ளே வாங்கிடலாமா? ].

எனவே திறந்த மனதுடன் கற்றுக் கொள்ள நினைத்தால் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளலாம்.

திட்டமிடலில் மிகவும் முக்கியமானது இறைவன் மீதான நம்பிக்கையும் அந்த மாபெரும் ஆட்சியாளனின் வழிகாட்டலுடன் கூடிய கருணையும்.

முன் காலத்தில் மிகப்பெரிய தொழில்களை செய்து நொடித்து போனவர்கள் மீண்டும் அதே நல்ல நிலைக்கு வந்தார்கள். சிலர் அப்படி வர முடியவில்லை. மீண்டும் வெற்றியடைந்தவர்கள் சிலரே என்றாலும் அவர்களிடம்ஒற்றுமையாக காணப்பட்ட ஒரே காரணம். அவர்கள் அனைவரிடமும் இறைவன் மீது நம்பிக்கை இருந்தது. இதை நான் சொல்லவில்லை. ZizZiglar ன் மேனேஜ்மென்ட் ஆய்வு மையம் சொல்கிறது.

நான் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவன், எப்படியிருந்தாலும் திட்டம் போட்டெல்லாம் நான் மாற்றங்களை கொண்டு வர முடியாது என நினைக்கிறீர்களா?

முடியும்.... அடுத்த படிக்கட்டில் சந்திப்போம்.


ZAKIR HUSSAIN
நன்றி அதிரை நிருபர்
, ,