குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

22.10.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு கட்டப்பஞ்சாயத்தா?
லிப்ரஹான் அவர்கள் பேட்டி

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அந்த தீர்ப்பை பற்றி "இது நீதியற்ற தீர்ப்பு என" உலக அளவில் பல்வேறு விமனர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ் லிப்ரஹான்
அவர்கள் இந்த தீர்ப்பு அரசியல் தனமானது நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல என்றும் மேலும் இந்த தீர்ப்பை பார்க்கும் போது குரங்குகள் தங்களுக்கு பங்கிட்டு கொடுத்து கொள்வதை போன்று உள்ளது என பேட்டியளித்துள்ளார்.

லிப்ரான் அவர்கள் பாபர் மஸ்ஜித் இடிப்பு பற்றி விசாரிப்பதற்கு மத்திய அரசாங்கத்தால் கடந்த 16-12-1992 அன்று நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.

எம்.எஸ் லிப்ரஹான் அவர்கள் பேட்டியளித்த வீடியோ!
http://www.tntj.net/?p=19325

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: தீர்ப்பா? கட்டப்பஞ்சாயத்தா? சகோ: பிஜே அவர்கள்
http://www.tntj.net/?p=19314



இந்திய நீதித்துறையின் பாரபட்சப் போக்கை வண்மையாக கண்டித்த தினமனியின் தலையங்கம் முஸ்லீம்களின் புண்பட்ட நெஞ்சுக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

தலையங்கம்: அரசியல்தனமான தீர்ப்பு!

First Published : 01 Oct 2010 03:12:45 AM IST
Last Updated : 01 Oct 2010 03:15:36 AM IST

ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.
கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும் என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை உணர்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதுபோல இருக்கிறது.

நீதித்துறை வரம்பு மீறுகிறது, நிர்வாக முடிவுகளை நீதித்துறை எடுக்க எத்தனிக்கிறது என்றெல்லாம் அரசியல்வாதிகள் குரலெழுப்பி வந்தனர். இப்போது, அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் அவர்கள் சார்பில் செய்து முடித்திருக்கிறது, யாரும் மூச்சுவிடவில்லையே, ஏன்?

அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, "ராமஜென்மபூமி' என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நீதிபதி எஸ்.யு. கானும், நீதிபதி சுதிர் அகர்வாலும் வழங்கி இருக்கும் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே இருக்கிறது.

தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.

அதன் அடிப்படையிலும், "நம்பிக்கை'யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, "இது ராமர் ஜென்மபூமிதானா?' என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் என்ன செய்வது? அரசியல் தலைமையின் கையாலாகாத்தனம், நீதிமன்றம் நம்பிக்கைப் பிரச்னைகளில் தீர்ப்பெழுத வேண்டியிருக்கிறது.

அடுத்த கேள்வி, ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும், பாப்ரி மஸ்ஜித் என்று இஸ்லாமியர்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது. ஒரு நீதிமன்றத்தின் பணி நம்பிக்கைக்குத் தீர்ப்புக் கூறுவதல்ல. சட்டப்படி, இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல.

மகந்த் ரகுவர்தாஸ் என்பவர் 1885-லேயே ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் பாபர் மசூதிக் கட்டடத்தின் அருகில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். 1949-ல் ராமர் விக்கிரகங்கள் உள்ளே வைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சொத்து ஆளுநர் (ரிசீவர்) நியமிக்கப்பட்டு, பிரச்னைக்குரிய இடம் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி பூஜை செய்ய உரிமை கோரிய கோபால்சிங் விஷாரத், ராம் சபூத்ரா பகுதிக்குச் சொந்தக்காரர்களான நிர்மோகி அகாராக்காரர்கள், உத்தரப் பிரதேச சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் ஆகிய மூவரும் உரிமை கொண்டாடித் தொடர்ந்த வழக்குதான், இப்போது அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகி இருக்கிறது.

நல்லவேளை, இதேபோல இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்துக்கு வழிவகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ? இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குத் தொடர்ந்த மூன்று தரப்பினரிடமும், முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும், தெளிவாக இடம் இன்னாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பெழுதி அதன்மூலம் அரசுக்குப் பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கருதினார்கள் என்பதும் தெளிவாகிறது.

நீதிமன்றத்தில் நாம் எதிர்பார்ப்பது சமரசமல்ல. சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். ராமர் கோயில் அப்படியே இருக்கும். 90 சென்ட் இடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டு அங்கே மசூதி கட்டிக் கொள்ளலாம். இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. பிரச்னை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு நீதிமன்றமும் தீர்ப்பும் தேவையில்லையே... ராஜீவ் காந்தியோ, வி.பி. சிங்கோ, சந்திரசேகரோ, நரசிம்ம ராவோ பிரதமராக இருந்தபோதே இந்த சமரச முடிவை ஏற்படுத்தி இருக்கலாமே...

அரசியல்தனமான இந்தத் தீர்ப்பைக் கேட்க முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இல்லாமல் போய்விட்டார். அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன... வேறென்ன...!

இந்துக்களுக்கு சாதகமான தீர்ப்பை எழுதி நீதிபதிகளை வாசிக்கச் சொன்ன காங்கிரஸ் அரசு சிதம்பரத்தை ஏவி பாதுகாப்பை பலப்படுத்த சொல்லி நாடகமாடி உள்ளது.

ராமஜென்ம பூமியின் பெயரை பயன்படுத்தி அரசியல் செல்வாக்கு பெற்று காங்கிரஸூக்கு நிகராக வந்த பிஜேபி யை அடியோடு ஒழித்துக் கட்டுவதற்காக காங்கிரஸின் நரசிம்மராவ் பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கினார், அதன் பின்னரும் ஒழிந்து போகாமல் அதே இடத்தில் கோயிலை கட்டியேத் தீருவோம் என்று மீண்டும் அரசியல் பரினாமம் பெற்ற பிஜேபி யை வேறோடும், வோறடி மண்ணோடும் ஒழித்து விடுவதற்காக அதே காங்கிரஸ் அரசு பள்ளி இடிக்கப்பட்ட இடத்தை அதுவும் எந்த இடத்தில் ராமர் சிலை வைக்கப்டதோ அதே இடம் இந்துக்களுக்கு கொடுத்து பிஜேபிக்கு சாவு மணி அடிக்க முயன்றுள்ளது காங்கிரஸ்.

பள்ளி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ஒருவருடத்தில் மீண்டும் பள்ளியை கட்டித்தருவோம் என்று வாக்குறுதி அளித்து கோமாவில் வீழ்ந்து விட்ட நரசிம்மராவுடன் அவரின் வாக்குறுதியையும் கோமாவில் தள்ளியது

இது தான் காங்கிரஸ் !!!

முஸ்லீம்கள் தங்களின் வாக்குகளை என்ன செய்யப்போகின்றனர் தெரியவில்லை ?

முகத்தில் அறையும் பிஜேபியா ? முதுகில் குத்தும் காங்கிரஸா ?

இனியும் முஸ்லிமகள் குர்ஆன் கூறும் ஒற்றுமையின் கீழ் வரமறுத்தால் குர்ஆன், ஹதீஸ் வழியில் மக்களை ஒருங்கிணைக்கும் தலைமையின் கீழ் இணைய மறுத்தால் இந்தியால் முஸ்லீம்கள் வாழும் உரிமை கேள்விக் குறியாகலாம்.

3:103 அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்!98 பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிரிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.


அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்
, ,