இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

16/07/2015

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மெளனம் கலையட்டும்
zakir-riyaz
மெளனம் கலையட்டும்!
தோளில் போட்ட கை
போட்டதுதான் தோழா;

மாற்றி மாற்றிப் போட
அதென்ன
கட்சித் துண்டா - அல்லது
மழுங்கிப்போக - நட்பென்ன
கட்சித் தொண்டா?

பண்டொரு காலம்
பழகி வந்த நட்பு
இன்றிந்த நிமிடமும்
இதயத்
துடிப்பிலுண்டு நண்பா;
காலப்போக்கில் மாறிப்போக
நட்பென்ன
கைவிடப்பட்ட கலாசாரமா - அல்லது
ஒதுக்கிவைக்கப்பட
நண்ப னென்ன
முதுமை யெய்தி
முக்கிமுனகும் மாமியாரா?

உன்
நட்பு வட்டம்
நாளுக்குநாள்
விட்டம் வளர்த்தாலும்
ஆதாரம்
பெரும்புள்ளி இல்லையெனினும்
இந்த
மையப்புள்ளி அன்றோ?

பரஸ்பரம்
கற்றுக்கொண்டவை வைத்துத்தானே
காலத்தை நீ
வெற்றி கொள்கிறாய்?
அரை நூற்றாண்டு நட்பு
அடக்கி வைத்தால் வலிக்காதா?
ரத்து செய்ய
நட்பென்ன விவாகமா?
ஒத்தி வைக்க
நட்பென்ன ஊழல் வழக்கா?

உப்பளக் காற்றும்
உட்காரக் குளிரும்
ரயிலடி திண்ணையும்
கடற்கரைச் சாலையும்
கண்ணி வைத்த வரப்புகளும்
கஸ்டம்ஸ் கட்டட மிச்சமும்
கல்லுடைந்த பாலமும்

உன்
ஒற்றையான வரவில் வாடிவிடாதா?
கடிகார நேரம்
டிஜிட்டலில் காட்டும்
காலம் வரும் முன்
சுற்றிச் சுற்றி ஓய்ந்த
முட்களுக்குத் தெரியும்

நம்
ஓயாத பேச்சும்
ஒழியாத ஓட்டமும்
சுபுஹூ தொழ
ஜன்னல் தட்டும் நம் ரியாஸும்
நம் வீடுகளே
கதியெனக் கிடந்த ஜாகிரும்
ஐயுபும் ஆஷிக்கும்
உன்னுடன் உரையாட
என்னினைவு எழாதா உனக்கு?
குணம் குறை இவற்றில்
மிகை நாடியே
உன்னைத் தெரிந்தேன் - இன்று
உயிர் நாடியில்
ஒரு குறை உன் நிலை!
கதை சொல்லிக்
கவரும் நீ
நம்
காமிக்ஸ் புத்தகங்களின்
கதாநாயகர்களைப் போல
கடைசி பக்கத்தில்
விடைபெற
வாழ்க்கை
இன்னும் மிச்சமிருக்கு நண்பா
இந்தத் தூண்டில்
உனக்காகத்தான் - இதில்
இரையாய்
என்னையே கொழுவியிருப்பதைக் கவனி
என்னைக் கடிப்பாயோ
இதைப் படிப்பாயோ
நீ
சிக்கினாலே போதும்
மெளனம்....
காதலர் மொழியன்றோ!
மொழிதலே....
தோழர்கள் வழி!
முகமன்தானே முஹம்மதியர் மொழி?
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), நண்பா!

-சபீர் 


, ,