இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

06/10/2010

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

சுவனத்தைப் பெற ஏழைகளுக்கு உணவளியுங்கள்
சுவனத்தைப் பெற ஏழைகளுக்கு உணவளியுங்கள்


(நரகவாசியான) இவன் தான் மகத்துவமிக்க அல்லாஹ்வை நம்பாதவன், மிஸ்கீன் (ஏழை)களுக்கு உணவளிக்கத் தூண்டாதவன். (69:33-34)
(மறுமையின்)தீர்ப்பைப் பொய்யாக்குபவனை நீர் பார்த்தீரா? அவன் தான் அநாதைகளை வெருட்டுபவன். மிஸ்கீன் (ஏழை)களுக்கு உணவளிக்கத் தூண்டாதவன். (107:1-3)

ஏழைகளுக்கு உணவளித்தல் என்பது ஏன் இத்துணை முக்கியத்துவம் பெறுகிறது என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வை நம்ப மறுப்பவனும், மறுமையை நம்ப மறுப்பவனும் தான் இதனைச் செய்ய மறுக்கிறான் என்பதை இக்குர்ஆன் வசனங்கள் எமக்கு எடுத்துரைக்கின்றன.
இவ்வுலகில் ஒருவன் உயிர்வாழ வேண்டுமானால் அவனுக்கு எது இல்லாவிட்டாலும் அன்றாட உணவு, குடிப்பு அவசியம். அவையிரண்டும் இல்லையென்றால் அவனால் எதுவுமே செய்ய முடியாது. உண்பதற்கு எதுவுமே இல்லாத நிலையில், ஒருவன் தன் உயிரைக் காத்துக் கொள்ள பன்றியின் மாமிசத்தைக் கூட உண்ணுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து நாம் எதனை உணர்கிறோம்? இல்லாதவனுக்கு உணவளித்தல் என்பது அல்லாஹ்வின் பார்வையில் மிகப் பெரியதொரு பணியாகும். மிருகங்களுக்கு உணவளிப்பது கூட அல்லாஹ் இடத்தில் எவ்வளவு மகத்தான ஒரு அன்பளிப்பைப் பெற்றுத் தருகிறது என்றால்!
ஆமாம்! ஏழைகளுக்கு இரங்கி உணவளிப்போர் இருக்கின்றார்களே அவர்களிடம் நிச்சயமாகப் பின்வரும் அடிப்படைக் கண்ணோட்டங்கள் இருக்கும். அவர்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் உறுதியாக நம்புவார்கள் என்பதற்கு அடையாளமாக இப்பணியினை உணர்வுப் பூர்வமாகச் செய்து வருவார்கள்.
ஒன்று, தம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு ஆன்மா பற்றியும், இது அல்லாஹ்வின் படைப்பு எனும் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள். அது பசியுடன் இருக்கிறதா? தாகித்திருக்கிறதா? தன் சிறு சிறு தேவைகளுக்காக ஏங்கி நிற்கிறதா? என்பதை அவதானிப்பார்கள்.
இரண்டு, தமது சொத்து, சுகங்களைப் பற்றிய கண்ணோட்டம், இவை இல்லையென்றால் நானும் அந்த ஏழை போலாகி விடுவேன். என்னையும் அந்த ஏழையையும் வேறுபடுத்திக் காட்டுவதே இந்தச் சொத்துப்பத்துக்கள் தான், இவற்றை எனக்களித்தவன், இவற்றின் உரிமையாளனான அல்லாஹ்வேயன்றி வேறில்லை, இவை என்னிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நான் எத்தனை ஏழைகளின் துன்பம் போக்க முயல்கிறேனோ அவையனைத்துக்கும் அல்லாஹ் அளப்பரிய நன்மைகளை மறுமையில் எனக்கு வழங்கக் காத்திருக்கின்றான். இவ்வுலகில் அவன் படைத்துள்ள அனைத்துமே அனைத்து மக்களுக்கும் சொந்தமான பொதுவுடமை தான் எனினும் அவற்றில் சிலவற்றின் மீது எனக்கு ஆதிக்கத்தை, உரிமையைத் தந்துள்ளான். எனவே, அவை அனைத்து மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவதை நான் உறுதி செய்ய வேண்டும்.
இது ஒரு முஸ்லிம் சமூகத்தின் தலைவரது (கலீபா) கடமை மாத்திரமல்ல. ஒவ்வொரு மனிதனுமே இவ்வுலகில் அல்லாஹ்வின் பிரதிநிதி (கலீபா) என்றே அல்குர்ஆன் வலியுறுத்தி நிற்கின்றது.
யூபிரடிஸ் நதிக்கரையில் உணவின்றி ஒரு நாய் செத்துக் கிடந்தாலும் அதற்கு நான் மறுமை நாளில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் கூறியது இதனை மிகத் தெளிவாக உணர்த்துகின்றது.
அல்லாஹ்வைப் பற்றியும் மறுமைநாளைப் பற்றியும் இவ்வாறு உறுதியாக நம்பும் ஒருவன் எவ்வாறு அல்லாஹ்வின் படைப்பினங்கள் பசித்திருப்பதை பார்த்திருக்க முடியும்?!
இப்பணியை மறுப்பவர்கள் யார் என்பது பற்றியும் அல்குர்ஆன் அழகாகக் கூறுகின்றது. ஆனால் மனிதனின் நிலை எப்படி இருக்கின்றதெனில் அவனுடைய இறைவன் அவனைச் சோதிக்க நாடினால் - மேலும், அவனை கண்ணியப்படுத்தி, அருட்கொடைகளையும் வழங்கினால், என்னுடைய இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் எனக் கூறுகின்றான். மேலும் அவனைச் சோதிக்க நாடினால் - மேலும் அவனுடைய வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால், என் இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று கூறுகிறான். ஒரு போதும் இல்லை! ஆனால், அநாதையுடன் நீங்கள் கண்ணியமாய் நடந்து கொள்வதில்லை, மேலும் வறியவர்க்கு உணவளிக்க ஒருவரை ஒருவர் தூண்டுவதுமில்லை. மேலும் வாரிசுச் சொத்தை முழுமையாக நீங்களே விழுங்கி விடுகின்றீர்கள். மேலும் செல்வத்தின் மீது அளவுகடந்த மோகம் கொண்டுள்ளீர்கள். (89:15-20)
அளவு கடந்து பொருளை நேசிக்கும் தன்மை என்பது ஓர் அடிப்படை எண்ணத்தின் பிரதிபலிப்பே. அவ்வெண்ணம் தான் என்ன? இவ்வுலகும், அதிலுள்ள பொருட்களும் நிலையானவை, இருக்கும் வரை அனுபவிக்க வேண்டும். உயிர் போய் விட்டால் எதுவும் இல்லை. அதற்கு முன் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடித்து விட வேண்டும். மறுமை என்று என்று இருக்கிறதோ, இல்லையோ யாரறிவார்? நாம் உழைத்துச் சேர்த்தவைகளை நாம் அனுபவிப்பதில் தவறில்லையே! எனது பணத்தைக் கொண்டு தானே மாளிகை கட்டுகிறேன். எனது பிள்ளைகள், பிள்ளையின் பிள்ளைகள் நாளை கஷ்டப்படக் கூடாது என்பதற்காகத் தானே சேகரிக்கின்றேன்.
இவ்வாறு உலகின் மீது ஆசைகளை உருவாக்கிக் கொள்ளும் மனிதன் பிறருக்கு அள்ளி வழங்குவதை எவ்வாறு விரும்புவான்? ஆனால் இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று, நான் எவ்வளவு பொருளை அழித்திருக்கிறேன் தெரியுமா? எனப் பெருமையடிக்கும் அளவு அவனது பொருளாசை, பொருள் தன்னுடையதே, அது வேறு யாருக்கும் உரித்தானதல்ல எனும் குரூர எண்ணம் உள்ளத்தில் ஊறி தலைத்து விட்டதை அல்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாற சுட்டிக் காட்டுகிறான்.
ஏராளமான செல்வங்களை வாரி இறைத்து விட்டேன் என்று அவன் கூறுகிறான். யாருமே அவனைப் பார்க்கவில்லை என்று அவன் கருதுகின்றான்? (90:6-7)
மேலும் (நன்மை, தீமையின்) தெளிவான ஒரு வழிகளை அவனுக்கு நாம் காட்டி விட்டோம். ஆயினும், அவன் கடினமான மலைப்பாதையைக் கடந்து செல்லத் துணியவில்லை. அந்த அகபா என்பது என்ன? (அது தான்) ஒருவனை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதாகும். அல்லது பட்டினி நாளில் உறவினரான அனாதைக்கோ, அல்லது வறுமையில் வாடும் எழைக்கோ உணவளிப்பது ஆகும்! (90:10-16)
இவ்வாறான மனோநிலையை வளர்த்துக் கொண்டவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வையும், மறுமை நாளையும் மறுப்பவர்கள் தான். கண்கள் காண்பவற்றைத் தவிர, மற்றெதனையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள்.
இதன் அளவுகடந்த எல்லை தான், தனிமனித சுதந்திரம் எனும் தத்துவம் இன்று உலகை ஆட்சி செய்யும் இத்தத்துவத்தின் விளைவாக மனிதன் இன்று பச்சை சுயநலவாதியாகி விட்டான். உண்ண உணவின்றி உயிர்விடும் மக்கள் ஒரு புறம், அபரிமித உற்பத்தியைக் கடலில் கொண்டு போய்க் கொட்டும் மனிதன் மறுபுறம். செல்வந்தன் ஏழைகளைச் சுரண்டி வாழ்கிறான். செல்வந்தக் குடும்பங்கள் ஊhகளை கட்டியாள்கின்றன. நாட்டின் செல்வங்களைத் தம் வசமாக்கிக் கொண்ட ஆட்சியாளர்கள், அரசர்கள் மக்களை அடக்கி ஒடுக்குகின்றார்கள். ஊழல்களில் பணம் குவிக்கின்றார்கள். ஏழை நாடுகளின் செல்வங்களைச் சூறையாடித் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்ட செல்வந்த நாடுகள், அவ்வறிய நாடுகளை ஆக்கிரமித்து அடக்கியாள முனைகின்றன. முடியாதவிடத்து யுத்தங்களைத் தோற்றுவித்து அந்நாடுகளை நிரந்தர பஞ்சத்திலாழ்த்துகின்றன. இவையனைத்திற்கும் அடிப்படையாக அமைந்திருப்பது பொருளாசை, உலகாசை தவிர வேறொன்றுமில்லை.
இன்று ஐ.நா. சபை உலகில் 130 கோடி மக்கள் வறுமையில் வாடுவதாகக் கூறி நீலிக் கண்ணீர் வடிக்கின்றது. ஆனால் இன்றுள்ள வட்டியமைப்பினாலான பொருளாதாரக் கொள்கையால் இந்த வறுமையை ஒழிக்கவே முடியாது. ஏனெனில் அல்லாஹ், மறுமை இவையிரண்டின் மீதும் நம்பிக்கையற்றவர்களால் இதனைச் சாதிக்க முடியாதென குர்ஆன் வசனங்கள் தெளிவாக்கவில்லையா! அல்லாஹ்வை நம்பாதவனும், மறுமையைப் பொய்யாக்குபவனும் ஏழைகளுக்கு உணவளிக்க மாட்டார்கள் என்பது மாத்திரமல்ல, அதனைத் தூண்டவும் மாட்டார்கள் என்றல்லவா அல்குர்ஆன் கூறி நிற்கின்றது! இஸ்லாமிய ஷரீஅத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் சூடான் போன்ற நாடுகள் உணவில் தன்னிறைவைக் காண விளையும் இவ்வேளையிலே, அவர்கள் மீது பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தது இதே ஐ.நா.சபை தானே!
அதேவேளை, ஒருவேளை உணவுக்கு வழியில்லாதவன் என்ன செய்வான்? வறுமை இறைநிராகரிப்புக்கு இட்டுச் செல்லும் என நபிகளார் நவின்றுள்ளார்கள். இதனால் தன் பசி போக்க, மனிதன் யாசிக்க முனைகிறான். களவெடுக்கத் தூண்டப்படுகின்றான். ஹராமான சம்பாத்தியங்களை மேற்கொள்ள முனைகிறான். இன்று இந்த ஏழ்மையை முதலீடாகக் கொண்டே மதமாற்றங்கள் நிகழ்கின்றன. வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியவயதுப் பெண்கள் வேலை தேடியலைகிறார்கள். விமானமேறி அந்நிய நாடுகளுக்குப் பணிப் பெண்காளாகச் செல்கிறார்கள். சிலர் த் உடலை விற்றே வாழ முற்படுகிறார்கள். இவையனைத்திற்கும் பொறுப்பாளிகள் யார்?
ஏழ்மை நிலையும், செல்வந்த நிலையும் நிரந்தரமானவையல்ல. இன்று செல்வந்தராயிருப்பவர்கள் நாளை ஏழையாகலாம். எனவே ஏழைகளின் மிக அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இல்லம் இம் மூன்றும் நிறைவேற்றப்பட வேண்டும். இது சமூகத்தில் செல்வந்தர்களாயிருப்பவர்களின் பாரிய பணியாகும். இதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் ஏற்படும் விளைவுகள் அனைத்துக்கும் அல்லாஹுத்தஆலா நாளை மறுமையில் எம்மிடம் கேட்கத் தான் போகிறான்.
மேலும் தன்னுடைய இடக் கரத்தில் செயலேடு கொடுக்கப்படுபவர் கூறுவார், அந்தோ! என்னுடைய செயலேடு எனக்குத் தரப்படாமல் இருந்திருக்கக் கூடாதா? என் கணக்கு என்னவென்று நான் அறியாமல் இருந்திருக்கக் கூடாதா? அந்தோ! (உலகத்தில் வந்த) அந்த மரணமே இறுதியானதாய் இருந்திருக்கக் கூடாதா? இன்று என்னுடைய செல்வம் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்கவில்லையே! என்னுடைய அதிகாரம் அனைத்தும் முடிந்து போய் விட்டதே! (69:25-29).


மௌலவியா ஆ.யு.ரு.குத்ஸியா
, ,