இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தொழுகையின் சட்டங்கள்
நூலின் ஆசிரியர்: எம்.ஐ.சுலைமான்
தொழுகையின் முக்கியத்துவம் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதும் தொழுகையாகும். இதுவே முஸ்லிம்களின் அடையாளம் ஆகும் தொழுகைகளையும் நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள் அல்குர்ஆன் எவ்வித பேரமோ நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலை நாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்கு (முஹம்மதே!) கூறுவீராக அல்குர்ஆன் 14:31 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. அல்குர்ஆன் 4:103
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரீ 8, முஸ்லிம் 21
‘இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 116
‘நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859
இதைப் போன்று ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுகின்றன.
தொழுவதால் ஏற்படும் நன்மைகள் )முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். அல்குர்ஆன் 29:45
‘உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது; அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார்; அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா? எனக் கூறுங்கள்’ என்று நபித்தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித்தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் (சிறிய) பாவங்களை அகற்றுகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 528, முஸ்லிம் 1071
‘ஐவேளைத் தொழுகை, ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களைத் தவிர’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 394
தொழாததால் ஏற்படும் தீங்குகள் கடமையான தொழுகையை ஒருவர் விடுவது அவரை நரகத்தில் கொண்டு சேர்க்கப் போதுமான காரணமாகும். அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் ‘உங்களை நரகத்தில் சேர்த்தது எது?’ என்று விசாரிப்பார்கள். ‘நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை’ எனக் கூறுவார்கள். அல்குர்ஆன் 74:41-43
ஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும் போது, ‘அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்’ என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)
நூல்: புகாரீ 1143
இஸ்லாத்தின் மிக முக்கியக் கடமையான தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்பதைப் பெரும்பாலான முஸ்லிம்கள் அறியாமல் உள்ளனர்.
தொழுகைக்கு நபியே முன் மாதிரி ஓர் ஊரில் ஒரு பள்ளிவாசல் தொழக்கூடியவர்களைக் கவனித்தால் ஒருவரின் தொழுகைக்கும் மற்றவரின் தொழுகைக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். நபிகளார் காட்டித்தந்த சரியான முறையில் எவ்வாறு தொழுவது என்பது பற்றிய அறியாமையே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)
நூல்: புகாரீ 631
இந்த நபி மொழியின் படி நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வோம்.
உளூவின் சட்டங்கள் உளூவின் அவசியம்
தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவி, தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். அல்குர்ஆன் 5:6
‘உளூ நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 135, முஸ்லிம் 330
தண்ணீர்
உளூச் செய்வதற்குத் தண்ணீர் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஆயினும் உளூ செய்யும் தண்ணீர் குறித்து தவறான நம்பிக்கைகள் சில முஸ்லிம்களிடம் நிலவுகின்றன.
ஆறு, குளம், கண்மாய், ஏரிகள், கிணறுகள் ஆகியவற்றிலும் மழை நீர், நிலத்தடி நீர் போன்றவற்றாலும் உளூச் செய்யலாம்; குளிக்கலாம் என்பதை அனைவரும் சரியாகவே விளங்கி வைத்துள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை.
கடல் நீர்
கடல் நீரால் உளூச் செய்யக் கூடாது என்ற கருத்து சிலரிடம் காணப்படுகின்றது.
‘கடல் நீரில் அதிக அளவில் உப்பு கலந்திருப்பதால் அது தண்ணீரின் கணக்கில் சேராது’ என்று அவர்கள் நினைக்கின்றனர். இது தவறாகும்.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கடல் நீரால் உளூச் செய்ய அனுமதியளித்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அதன் தண்ணீர் தூய்மை செய்யத்தக்கது;அதில் செத்தவையும் உண்ண அனுமதிக்கப்பட்டவை’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 382
எனவே கடல் நீரால் தாராளமாக உளூச் செய்யலாம். கடமையான குளிப்பு உட்பட அனைத்துக் குளிப்புகளையும் நிறைவேற்றலாம்.
பயன்படுத்திய தண்ணீர்
‘சிறிய பாத்திரங்களில் உளூச் செய்யும் போது தண்ணீர் அப்பாத்திரத்தில் தெறித்து விட்டால் அத்தண்ணீர் அசுத்தமாகி விடு’ம் என்ற நம்பிக்கை சிலரிடம் காணப்படுகின்றது. சில மத்ஹப்களிலும் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. மேலும் சிறிய பாத்திரத்தில் கைகளை நுழைத்து தண்ணீரை எடுத்தால் அத்தண்ணீர் உளூச் செய்வதற்கான தகுதியை இழந்து விடும் எனவும் நம்புகின்றனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார்கள். தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை (பாத்திரத்தில்) விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர், ‘எனது இந்த உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்று உஸ்மான் (ரலி) தெரிவித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்
நூல்: புகாரீ 160
உஸ்மான் (ரலி) அவர்கள் மணிக்கட்டு வரை கழுவிய பின் பாத்திரத்தில் கை விட்டு தண்ணீர் எடுத்துள்ளனர். அதன் மூலம் மற்ற உறுப்புகளைக் கழுவியுள்ளனர். இறுதியில் இவ்வாறு நபி அவர்கள் உளூச் செய்து காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதே கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள். (புகாரீ 192)
நபி அவர்களின் செயல்முறை விளக்கம் மட்டுமின்றி வாய் மொழியாகவும் அவர்கள் அனுமதி அளித்ததற்குச் சான்றுகள் உள்ளன.
‘உங்களில் ஒருவர் தூக்கத்திருந்து விழித்தால் உளூச் செய்யும் தண்ணீரில் கையை விடுவதற்கு முன் கையைக் கழுவிக் கொள்ளட்டும்; ஏனெனில் அவரது கை எங்கெங்கே பட்டது என்பதை அவர் அறிய மாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 162
படக் கூடாத இடத்தில் கை பட்டிருக்கும் என்பதற்காகவே கையை நபி (ஸல்) அவர்கள் கழுவச் சொல்கின்றார்கள். இவ்வாறு கழுவி விட்டால் பாத்திரத்தில் கையை விட்டு தண்ணீர் எடுத்து உளூச் செய்யலாம் என்று தெளிவான அனுமதியை அளித்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் தெளிவான அனுமதியளித்த பின் அதை நிராகரிக்க எந்தக் காரணத்தை யார் கூறினாலும் ஏற்கத் தேவையில்லை.
மீதம் வைத்த தண்ணீர்
பெண்கள் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண்களும், ஆண்கள் மீதம் வைத்த தண்ணீரில் பெண்களும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையும் தவறாகும்.
‘கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது நானும், நபி (ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் குளித்திருக்கின்றோம்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நூல்: புகாரீ 263
கடமையான குளிப்பும் உளூவைப் போலவே மார்க்க அடிப்படையிலான தூய்மைப்படுத்துதல் ஆகும். ஒரு நேரத்தில் ஒரு பாத்திரத்தில் கணவன், மனைவி இருவரும் தண்ணீர் எடுத்துக் குளிக்கும் போது இருவர் மேனியில் பட்ட தண்ணீர் துளிகள் பாத்திரத்தில் விழாமல் இருக்காது. தண்ணீரை எடுப்பதற்காகக் கையைக் கொண்டு செல்லும் போது கையிருந்து பாத்திரத்தில் தண்ணீர் விழும். அப்படியிருந்தும் அதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்தவில்லை.
எனவே உளூச் செய்யும் போதும், கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் ஒருவர் மீதம் வைத்த தண்ணீரை மற்றவர் பயன்படுத்துவது குற்றம் இல்லை என்பதை இதிருந்து விளங்கலாம்.
வீட்டுப் பிராணிகள் வாய் வைத்த தண்ணீர்
மனிதர்களை அண்டி வாழும் கோழி, சிட்டுக் குருவி, காகம், பூனை போன்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இதுவும் தவறாகும்.
அபூகதாதா (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். உடனே ஒரு பூனை வந்து அதைக் குடிக்க ஆரம்பித்தது. பூனை குடிப்பதற்கு ஏற்றவாறு பாத்திரத்தை அவர் சாய்த்தார். ‘என் சகோதரர் மகளே! இதில் ஆச்சரியப்படுகிறாயா?’ என்று கேட்டார். நான் ஆம் என்றேன். ‘இவை அசுத்தமில்லை. இவை உங்களைச் சுற்றி வரக் கூடியவையாகும்’ என்று நபி (ஸல்) கூறியதாகக் குறிப்பிட்டார்.
அறிவிப்பவர்: கப்ஷா
நூல்கள்: திர்மிதி 85, நஸயீ 67, அபூதாவூத் 68 பூனை வாய் வைத்தால் தண்ணீர் அசுத்தமாகாது என்பதும், அத்தண்ணீரில் உளூச் செய்யலாம் என்பதும் இதிருந்து தெரிகின்றது. மேலும் ‘இவை உங்களைச் சுற்றி வரக் கூடிய பிராணிகள்’ என்ற வாக்கியம், காட்டில் வசிக்காமல் வீட்டைச் சுற்றி வரும் பிராணிகள் அனைத்துக்கும் பொருந்தும் என்பதை விளக்குகின்றது.
மனிதர்களுடன் அண்டி வாழும் பிராணிகளில் நாயைத் தவிர மற்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யலாம்.
‘நாய் வாய் வைத்து விட்டால் ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவ வேண்டும்’ என்று நபி (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: புகாரீ 172
சூடாக்கப்பட்ட தண்ணீர்
சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும், வெந்நீரிலும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நினைக்கின்றனர்.
சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட தண்ணீரை நபி (ஸல்) தடுத்ததாகவும் அதனால் குஷ்ட நோய் வரும் என்று நபி (ஸல்) கூறியதாகவும் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் நபி (ஸல்) பெயரால் இட்டுக்கட்டப்பட்டவையாகும்.
காத் பின் இஸ்மாயீல், வஹப் பின் வஹப், ஹைஸம் பின் அதீ போன்றோர் தான் இது பற்றிய ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். இவர்கள் பெரும் பொய்யர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர்களுமாவர்.
எனவே சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும், நெருப்பால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும் உளூச் செய்ய எந்தத் தடையும் இல்லை.
வீட்டில் உளூச் செய்தல்
வீட்டில் உளூச் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்படுவதே சிறந்ததாகும். ஒருவர் உளூச் செய்த நிலையில் பள்ளிவாசலுக்குச் சென்றால் அவர் நடந்து செல்வது கூட வணக்கமாகக் கருதப்படும்.
‘ஒருவர் தமது வீட்டிலும், கடை வீதியிலும் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்கு ஒரு படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகின்றான். ஒரு பாவத்தை அவரை விட்டும் நீக்குகின்றான். தொழுகையை எதிர்பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் போது அவர் தொழுபவராகவே கருதப்படுவார். தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்குத் தொல்லை அளிக்காத வரையில் இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா! இவருக்கு அருள் புரி!’ என்று வானவர்கள் கூறுகின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 477, முஸ்லிம் 1059
பள்ளிவாசல் உளூச் செய்ய ஏற்பாடு செய்தல்
வீட்டில் உளூச் செய்ய வசதியுள்ளவர்கள் வீட்டிலேயே உளூச் செய்வது தான் சிறப்பு என்றாலும் அத்தகைய வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்காக, பள்ளிவாசன் சார்பில் ஏற்பாடு செய்வது குற்றமில்லை.
தொழுகை நேரம் வந்தது. பள்ளிவாசலுக்கு அருகில் யாருடைய இல்லங்கள் அமைந்திருந்தனவோ அவர்கள் உளூச் செய்ய (வீட்டிற்குச்) சென்றனர். சிலர் எஞ்சினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் கல் பாத்திரம் ஒன்று தண்ணீருடன் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தமது கையை வைத்தனர். நபி (ஸல்) அவர்களால் அதனுள் தமது கையை விரிக்க இயவில்லை. எனவே தமது விரல்களை இணைத்து அப்பாத்திரத்தில் வைத்தனர். எஞ்சிய அனைவரும் உளூச் செய்தனர்’ என்று அனஸ் (ரலி) கூறினார்கள். ‘(அப்போது) எத்தனை பேர்கள் இருந்தனர்?’ என்று அவர்களிடம் நான் கேட்டேன். ‘எண்பது பேர்கள்’ என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹுமைத்
நூல்: புகாரீ 3575
உளூச் செய்யும் முறை
நிய்யத் எனும் எண்ணம்
ஒருவர் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமலைச் செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.
ஒருவர் சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருக்கின்றார்; ஆனால் நோன்பு நோற்கும் எண்ணம் அவருக்கு இல்லை; நேரமின்மையின் காரணமாகவோ, மருத்துவர்களின் ஆலோசனைப்படியோ இவ்வாறு இருக்கின்றார் என்றால், நோன்பாளி கடைப்பிடிக்கும் அனைத்தையும் அவர் கடைப்பிடித்த போதும் நோன்பு நோற்கும் எண்ணம் இல்லாததால் அவர் நோன்பு நோற்றவராக மாட்டார்.
உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார்; ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றால் இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார். அது போல் தூக்கக் கலக்கத்தில் எழுந்து தொழுகையில் செய்யும் அனைத்தையும் ஒருவர் செய்கின்றார். ஆனால் தொழுவதாக அவருக்கு உணர்வு இல்லை என்றால் அவரும் தொழுதவராக மாட்டார்.
இது போலத் தான் ஒருவர் உளூவின் போது செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்கின்றார். ஆனால் உளூச் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
உதாரணமாக ஒருவர் வெளியே சென்று கொண்டிருக்கும் போது மழை பெய்கின்றது. உடல் முழுவதும் நனைந்து விடுகின்றது. உளூவின் போது கழுவ வேண்டிய அனைத்து உறுப்புக்களும் கழுவப்பட்டு விடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அல்லது ஆற்றிலோ, அல்லது குளத்திலோ தவறி விழுந்து விட்டார். அல்லது இறங்கிக் குளிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு உளூச் செய்யும் எண்ணம் இல்லாததால் இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530
நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். உளூ, தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றும் போது சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர்.
நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.
மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை.
ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.
நான் இப்போது உளூச் செய்யப் போகின்றேன்’ என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.
பல் துலக்குதல்
உளூச் செய்யத் துவங்கும் முன் பற்களைத் துலக்கிக் கொள்வது நபிவழியாகும்.
பல் துலக்குதல் உளூவின் ஓர் அங்கம் அல்ல! உளூச் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய தனியான வணக்கமாகும்.
நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள். உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1233
பல் துலக்குதல் உளூவுக்குள் அடங்கி விடும் என்றால் ‘உளூச் செய்தார்கள்’ என்று மட்டும் தான் கூறப்பட்டிருக்கும். உளூச் செய்தார்கள் என்பதைக் கூறுவதற்கு முன் ‘பல் துலக்கினார்கள்’ என்று கூறப்படுவதால் இது உளூவில் சேராத தனியான ஒரு வணக்கம் என்பது தெரிகின்றது.
மேலும் பல் துலக்குதல் நபி (ஸல்) அவர்களால் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல் துலக்குவது பற்றி அதிகமாக நான் உங்களை வலியுறுத்தியுள்ளேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 888
பல் துலக்குதல் வாயைச் சுத்தப்படுத்தும்; இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும்’ எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: நஸயீ 5, அஹ்மத் 23072
‘என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குவதைக் கட்டாயமாக்கியிருப்பேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 9548
பல் துலக்கும் குச்சி
குறிப்பிட்ட மரத்தின் குச்சியால் பல் துலக்குவது தான் சுன்னத் என்ற கருத்து சில முஸ்லிம்களிடம் காணப்படுகின்றது. இதை மிஸ்வாக்’ குச்சி என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
மிஸ்வாக்’ என்ற சொல்லுக்கு பல் துலக்கும் சாதனம்’ என்பது தான் பொருள். குறிப்பிட்ட மரத்தின் குச்சி என்று இதற்கு அர்த்தம் கிடையாது.
பல் துலக்க விரலைப் பயன்படுத்தினாலும், பிரஷ்ஷைப் பயன்படுத்தினாலும் அனைத்துமே மிஸ்வாக்கில் அடங்கும். அது போல் எந்த மரத்தின் குச்சியைப் பயன்படுத்தினாலும் அதுவும் மிஸ்வாக்கில் அடங்கும். அனைத்துமே இதில் சமமானவை தான்.
பல் துலக்குதல் தான் நபிவழியே தவிர குறிப்பிட்ட குச்சியாகத் தான் இருக்க வேண்டும் என்பது நபிவழியல்ல!
இந்தக் குச்சியால் தான் பல் துலக்க வேண்டும் என்று சிலர் வயுறுத்துவதால் இதை இங்கு சுட்டிக் காட்டுகின்றோம்.
பல் துலக்கிய பின்னர் உளூச் செய்ய வேண்டும். உளூச் செய்யும் போது செய்ய வேண்டிய காரியங்களை வரிசையாக உரிய ஆதாரங்களுடன் இனி அறிந்து கொள்வோம்.
அல்லாஹ்வின் பெயர் கூறுதல்
உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது முதல் பிஸ்மில்லாஹ்’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறிக் கொள்ள வேண்டும்.
நபித்தோழர்கள் உளூச் செய்வதற்கான தண்ணீரைத் தேடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் எவரிடமேனும் தண்ணீர் இருக்கின்றதா?’ என்று கேட்டார்கள். (தண்ணீர் கொண்டு வரப்பட்டவுடன்) அந்தத் தண்ணீரில் தமது கையை வைத்து, ‘அல்லாஹ்வின் பெயரால் உளூச் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அவர்களின் விரல்களுக்கு இடையிருந்து தண்ணீர் வெளியேறியதை நான் பார்த்தேன். கடைசி நபர் வரை அதில் உளூச் செய்தார்கள்.
இவ்வாறு அனஸ் (ரலி) கூறினார்கள். ‘மொத்தம் எத்தனை பேர் இருந்தீர்கள்?’ என்று அனஸ் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘சுமார் எழுபது நபர்கள்’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: கதாதா
நூல்: நஸயீ 77
முன் கைகளைக் கழுவுதல்
உளூச் செய்யும் போது முதல் செய்ய வேண்டிய செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும்.
… ‘நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி)
நூல்: நஸயீ 147
வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல்
இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிய பின் வாயையும், மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது, ‘தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்புளித்து, மூக்கையும் சுத்தம் செய்தார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
நூல்: புகாரீ 160, 164
வாய் கொப்புளிப்பதற்கும், மூக்கைச் சுத்தம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு தடவை தண்ணீர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கையளவு தண்ணீர் எடுத்து அதில் ஒரு பகுதியை வாயிலும், மற்றொரு பகுதியை மூக்கிலும் செலுத்திச் சுத்தம் செய்யலாம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது ஒரு கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலமே வாய்கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்… (பின்னர்) ‘இப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்ய நான் பார்த்தேன்’ எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார்
நூல்: புகாரீ 140
ஒரு கைத் தண்ணீர் எடுக்கும் போது வலது கையால் எடுத்து இடது கையால் சுத்தம் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, ‘தமது வலது கையைப் பாத்திரத்தில் விட்டு வாய் கொப்புளித்து, மூக்கையும் சீந்தினார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
நூல்: புகாரீ 160, 164
அலீ (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்குரிய தண்ணீரை எடுத்து வரச் செய்து, வாய்கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி, இடது கையால் சுத்தம் செய்தார்கள். பின்னர் ‘இது தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையாகும்’என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்து கைர்
நூல்கள்: நஸயீ 90, அஹ்மத் 1078, தாரமீ 696
முகத்தைக் கழுவுதல்
இதன் பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும்.
இரு கைகளால் கழுவுதல்
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போது, ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதனை மற்றொரு கையால் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார்
நூல்: புகாரீ 140
ஒரு கையால் கழுவுதல்
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா
நூல்: புகாரீ 186
தாடியைக் கோதிக் கழுவுதல்
தாடி வைத்திருப்போர் முகத்தைக் கழுவும் போது தமது விரல்களால் தாடியைக் கோத வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது தண்ணீரைக் கொண்டு தமது தாடியைக் கோதிக் கழுவுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 24779
இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல்
முகத்தைக் கழுவிய பின்னர் இரு கைகளையும் முழங்கை வரை கழுவ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்
நூல்: புகாரீ 160
முகம், கை, கால்களைச் சிறப்பாகக் கழுவுதல்
முகத்தைக் கழுவும் போது முகத்தைக் கடந்து விரிவாகக் கழுவுவதும், கைகளைக் கழுவும் போது முழங்கை வரை நிறுத்திக் கொள்ளாமல் அதையும் தாண்டிக் கழுவுவதும் விரும்பத்தக்கதாகும். இது கட்டாயம் இல்லை.
‘உளூச் செய்வதன் காரணமாக எனது சமுதாயத்தினர் முகம், கை, கால்கள் வெண்மையானவர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். யார் தமது வெண்மையை அதிகப்படுத்த விரும்புகின்றாரோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 136, முஸ்லிம் 362
எனவே முகம், கை கால்களைக் கழுவும் போது விரிவாகக் கழுவுவது சிறந்ததாகும்.
தலைக்கு மஸஹ் செய்தல்
இரு கைகளையும் கழுவிய பின்னர் ஈரக் கையால் தலையைத் தடவ வேண்டும். இது மஸஹ் எனப்படும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தம் இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டு சென்று பிறகு அப்படியே எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பித்தார்களோ அந்த இடத்திற்குத் திரும்பக் கொண்டு வந்தார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா
நூல்கள்: புகாரீ 185, முஸ்லிம் 346
இது தான் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த மஸஹ் செய்யும் முறையாகும். பெண்களும் ஆண்களைப் போலவே பிடரி வரை மஸஹ் செய்ய வேண்டும்.
தலையில் ஒரேயொரு முடியில் சிறிதளவை மட்டும் ஒரு விரலால் தொட்டால் போதும் என்று ஷாஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும், தலையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு மஸஹ் செய்தால் போதும் என்று ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும் கூறுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை.
எத்தனை தடவை மஸஹ் செய்ய வேண்டும்?
தலைக்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ மஸஹ் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, கையை (பாத்திரத்தில்) நுழைத்து இரு கைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின்பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை செய்தார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா
நூல்: புகாரீ 186
நபி (ஸல்) அவர்கள் தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
நூல்: நஸயீ 98
காதுகளுக்கு மஸஹ் செய்தல்
தலைக்கு மஸஹ் செய்யும் போது இரண்டு காதுகளுக்கும் மஸஹ் செய்வது நபிவழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த போது தலைக்கும், தமது ஆட்காட்டி விரல்களைக் காதுகளின் உட்பகுதியிலும்,கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து காதுகளுக்கும் மஸஹ் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
நூல்: நஸயீ 101
பிடரியில் மஸஹ் செய்ய வேண்டுமா?
தலைக்கு மஸஹ் செய்வது போல் சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் கிடையாது.  இரண்டு கால்களையும் கழுவுதல்
இதன் பின்னர் இரு கால்களையும் கழுவ வேண்டும். முதல் வலது காலையும், பின்னர் இடது காலையும் கழுவ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போது, ஒரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தமது வலது காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடது காலில் ஊற்றிக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார்
நூல்: புகாரீ 140
கால்களைக் கரண்டை வரை கவனமாகக் கழுவுவது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்
நூல்: புகாரீ 160
உளூச் செய்யும் தொட்டியிலிருந்து மக்கள் உளூச் செய்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற அபூஹுரைரா (ரலி) அவர்கள் (எங்களைப் பார்த்து) ‘உளூவை முழுமையாகச் செய்யுங்கள். குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்குக் கேடு தான்’ என்று நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸியாத்
நூல்: புகாரீ 165
எத்தனை தடவை கழுவ வேண்டும்?
தலைக்கு மஸஹ் செய்வதைத் தவிர மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொரு தடவையோ, அல்லது இரண்டிரண்டு தடவையோ, அல்லது மும்மூன்று தடவையோ செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி).
நூல்: புகாரீ 157
நபி (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
நூல்: புகாரீ 158
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்
நூல்: புகாரீ 160
எனவே ஒவ்வொரு உறுப்பையும் ஒரு தடவை கழுவுவதும், இரண்டு தடவை கழுவுவதும், மூன்று தடவை கழுவுவதும் நபி வழி தான். நம் வசதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப எதை வேண்டுமானாலும் நடைமுறைப் படுத்தலாம்.
ஒரு உளூவிலேயே கூட நாம் விரும்பியவாறு செய்யலாம். முகத்தை இரு தடவை கழுவி விட்டு, கைகளை மூன்று தடவையும், கால்களை ஒரு தடவையும் கழுவலாம்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தமது இரு முன் கைகளிலும் தண்ணீரை ஊற்றி இரு முறை கழுவினார்கள். பின்னர் மூன்று முறை வாய்கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். அறிவிப்பவர்: யஹ்யா
நூல்கள்: புகாரீ 185, முஸ்லிம் 346
மூன்று தடவைக்கு மேல் கழுவக் கூடாது
உளூவின் போது ஒவ்வோர் உறுப்பையும் அதிகப்பட்சமாக மூன்று முறை கழுவலாம் என்பதைக் கண்டோம். மூன்று தடவைக்கு மேல் கழுவுவதற்குத் தடை உள்ளது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து உளூச் செய்யும் முறை பற்றிக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்து காட்டி விட்டு, ‘இது தான் உளூச் செய்யும் முறையாகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் தீங்கிழைத்து விட்டார்; வரம்பு மீறி விட்டார்; அநியாயம் செய்து விட்டார்’ எனக் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: அம்ர் பின் ஷுஐப் (ரலி)
நூல்கள்: நஸயீ 140, அஹ்மத் 6397
வரிசையாகச் செய்தல்
மேற்கூறப்பட்ட காரியங்களை மேற்கூறப்பட்ட வரிசைப்படி செய்வது தான் நபிவழியாகும். இந்த வரிசைப்படி தான் நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டியுள்ளனர். இதை மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
காலுறைகள் மீது மஸஹ் செய்தல்
உளூச் செய்யும் போது கடைசியாக இரு கால்களையும் கரண்டை வரை கழுவ வேண்டும் என்பதை உரிய ஆதாரங்களுடன் முன்னர் கண்டோம்.
காலுறை அணிந்திருப்பவர்கள் கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம் என்பது இந்தச் சட்டத்தில் உள்ள விதி விலக்காகும்.
நான் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது முகத்தையும், இரு கைகளையும் கழுவினார்கள். தலைக்கு மஸஹ் செய்தார்கள். இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள்.
அறிவிப்பவர்: முகீரா (ரலி)
நூல்கள்: புகாரீ 182, முஸ்லிம் 404
பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாமா?
பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்வது கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இது தவறாகும். நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிய எந்த வணக்கமும் இரு பாலருக்கும் உரியது தான். பெண்களுக்கு இல்லை என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் சொல்யிருக்க வேண்டும். அவ்வாறு ஹதீஸ்களில் கூறப்படாததே இச்சலுகை பெண்களுக்கும் பொருந்தும் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்.
மேலும் காலுறைகள் மீது மஸஹ் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பது அதைக் கழற்றுவதால் ஏற்படும் சிரமத்துக்காகவே! அச்சிரமம் இரு பாலருக்கும் பொதுவானது என்பதால் இச்சலுகையும் பொதுவானது தான்.
காலுறைகள் மீது மஸஹ் செய்யவதற்குரிய நிபந்தனைகள்
ஆண்களும் பெண்களும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்ற இச்சலுகைக்கு சில நிபந்தனைகள் உள்ளன.
காலுறைகளை அணிவதற்கு முன் கால்களைக் கழுவியிருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனையாகும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றிய போது அவர்களின் காலுறைகளை நான் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், ‘அவற்றை விட்டு விடு! ஏனெனில் கால்கள் தூய்மையாக இருந்த நிலையில் தான் அவற்றை நான் அணிந்திருக்கிறேன்’ என்று கூறி அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல்கள்: புகாரீ 206, முஸ்லிம் 408
காலுறைகள் அணிவதற்கு முன் கால்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிருந்து அறியலாம்.
கால்களில் வெளிப்படையாகத் தெரியும் அசுத்தங்கள் ஏதும் ஒட்டியிருந்து அதன் மேல் காலுறை அணிந்து கொண்டால் மஸஹ் செய்ய முடியாது. காலுறையை அணியும் போது உளூவுடன் இருக்க வேண்டும்.
தூய்மையாக இருக்க வேண்டும் என்பது இவ்விரண்டையும் குறிக்கும்.
ஒருவர் உளூச் செய்து கால்களைக் கழுவுகின்றார். உடனே காலுறைகளை அணிந்து கொள்கின்றார் என்றால் அதன் பின்னர் அவர் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் அவர் மலஜலம் கழித்தாலும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம்.
ஒருவர் லுஹர் நேரத்தில் உளூச் செய்கின்றார். அப்போது கால்களையும் கழுவுகின்றார். இதன் பின்னர் அஸர் வரை அவரிடமிருந்து உளூவை நீக்கும் காரியங்கள் ஏதும் நிகழவில்லை. இந்த நிலையில் அஸர் நேரத்தில் காலுறைகளை அணிகின்றார் என்றால் இவரும் இதன் பின்னர் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். காலுறை அணிவதற்குச் சற்று முன்னர் தான் கால்களைக் கழுவ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. காலுறை அணியக் கூடிய நேரத்தில் அவருக்கு உளூ இருக்க வேண்டும் என்பது தான் கட்டாயம்.
சலுகையின் கால அளவு
உளூவுடனும், கால் அசுத்தம் இல்லாத நிலையிலும் காலுறை அணிந்தவர், காலமெல்லாம் காலுறைகள் மீது மஸஹ் செய்ய முடியாது.
தினமும் ஒரு தடவையாவது காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும். இன்று காலை 10மணிக்கு உளூச் செய்த நிலையில் ஒருவர் காலுறை அணிந்தால் நாளை காலை 10 மணி வரை அவர் எத்தனை தடவை உளூச் செய்தாலும் கால்களைக் கழுவத் தேவையில்லை. காலுறைகள் மீது மஸஹ் செய்வதே போதும். 24மணி நேரம் கடந்து விட்டால் கால்களைக் கழுவி விட்டு உளூவுடன் காலுறையை அணிந்து கொள்ள வேண்டும்.
பயணிகளாக இருப்பவர்களுக்கு இதில் கூடுதல் சலுகை உள்ளது. அவர்கள் உளூவுடன் காலுறை அணிந்தால் காலுறை அணிந்த நேரத்தில் இருந்து மூன்று நாட்கள் (72 மணி நேரம்) காலுறையைக் கழற்றாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். பயணத்தில் இருப்பவர்கள் மூன்று நாட்களுக்குப் பின் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவிவிட்டு உளூவுடன் காலுறையை அணிய வேண்டும்.
காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேள்வி கேட்கச் சென்றேன். அதற்கவர்கள், ‘அலீ பின் அபீதாபிடம் சென்று கேள். அவர் தான் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராக இருந்தார்’ என்று கூறினார்கள். நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். ‘பயணிகளுக்கு மூன்று பகல் மூன்று இரவு எனவும், உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஒரு பகல் ஓர் இரவு எனவும் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்’ என்று அலீ (ரலி) விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஷுரைஹ்
நூல்: முஸ்லிம் 414
குளிப்பு கடமையானால் இச்சலுகை இல்லை
குளிப்பு கடமையாகி விட்டால் குளிக்கும் போது காலுறைகளைக் கழற்ற வேண்டும். கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது உடல் முழுவதும் கழுவி விட்டு காலை மட்டும் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்தால் கடமையான குளிப்பு நிறைவேறாது.
நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும், உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 89, நஸயீ 127, இப்னுமாஜா 471, அஹ்மத் 17396
மேற்புறத்தில் மஸஹ் செய்தல்
நபி (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 140, அஹ்மத் 699
எவ்வாறு மஸஹ் செய்வது?
நபி (ஸல்) அவர்கள் தலைக்கு மஸஹ் செய்தது பற்றி அவர்கள் வழியாக விரிவான செயல் விளக்கம் நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் காலுறையின் மேற்பரப்பில் மஸஹ் செய்தார்கள் என்று மட்டுமே கூறப்படுகின்றது. எவ்வாறு என்று விளக்கமாகக் கூறப்படவில்லை.
எனவே தான் ஐந்து விரலால் மஸஹ் செய்ய வேண்டும்; மூன்று விரல்களால் மஸஹ் செய்ய வேண்டும்;காலுறையின் அதிகமான பகுதிகள் மீது மஸஹ் செய்ய வேண்டும் என்றெல்லாம் பலவிதமாக அறிஞர்கள் கருத்துக் கூறியுள்ளனர். ஆயினும் நபி (ஸல்) வழியாக குறிப்பிட்ட அளவு எதுவும் கூறப்படாததால் மஸஹ்’ என்று சொல்லப்படும் அளவுக்கு காலுறையின் மீது தடவ வேண்டும் என்று மக்களிடமே அந்த உரிமையை விட்டு விட வேண்டும். இப்படித் தான் செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட முறையைத் திணிக்கக் கூடாது.
இது தவிர காலுறைகள் தோல் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் இன்னும் பல விதிகளைச் சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை.
தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்தல்
காலுறையின் மேல் மஸஹ் செய்யும் சலுகை போலவே தலைப்பாகை அணிந்தவர்களும், தலையை மறைக்கும் துணியை தலையின் மேல் போட்டிருக்கும் ஆண்களும் பெண்களும் தலைக்கு மஸஹ் செய்வதற்குப் பதிலாக தலைப்பாகையின் மீதும் தலைத் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும் காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: அம்ரு பின் உமய்யா (ரலி)
நூல்: புகாரீ 205
தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்வது போல் தலை முக்காட்டின் மீதும் தலையின் மேல் போட்டிருக்கும் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலை முக்காட்டின் மீதும் மஸஹ் செய்தனர்.
அறிவிப்பவர்: பிலால் (ரலி)
நூல்: முஸ்லிம் 413
முக்காடு என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில், கிமார்’ என்ற சொல் அரபு மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் ஆண்கள் அணியும் தலைத் துணியையும், பெண்கள் அணியும் தலைத் துணி – அதாவது முக்காட்டையும் குறிக்கும்.
பெண்களின் முக்காட்டைக் குறிக்க இச்சொல் திருக்குர்ஆனில் 24:31 வசனத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
இதில் இடம் பெற்றுள்ள ‘குமுரிஹின்ன’ என்பது கிமார்’ என்பதன் பன்மையாகும்.
புகாரீ 5825, 6568, 3321, 3578, 5381, 6688 ஆகிய ஹதீஸ்களிலும் கிமார்’ என்பது பெண்களின் முக்காட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதை விரிவாக நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் தலைப்பாகை மற்றும் தலைத் துணியின் மேல் மஸஹ் செய்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது போல் பலரும் எழுதியுள்ளனர். பெண்களுக்கும் இந்தச் சலுகை உள்ளது என்று எவரும் கூறியதாகத் தெரியவில்லை.
காலுறைகள் மீது மஸஹ் செய்வது எவ்வாறு ஆண்களுக்கும், பெண்களுக்கும் உரிய சலுகையோ அது போலவே தலையில் போட்டிருக்கும் முக்காட்டின் மேல் மஸஹ் செய்வதும் இருவருக்கும் பொதுவானது தான்.
மேலும் தலைப்பாகையை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கழற்ற வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. தப்ரானியில் இவ்வாறு ஹதீஸ் உள்ளது. அதை அபூஸலமா என்ற மர்வான் அறிவிக்கின்றார். இவர் ஏற்கத்தக்கவர் அல்ல என்று புகாரீ, அஹ்மத் பின் ஹம்பல், இப்னு அபீஹாத்தம் மற்றும் பலர் கூறுகின்றனர்.
எனவே காலுறைகளுக்குரிய நிபந்தனைகள் ஏதும் தலைப்பாகை மற்றும் முக்காடுகளுக்குக் கிடையாது.
உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.
உளூச் செய்து முடித்த பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓதுவது நபிவழியாகும்.
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு
பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன்.
அல்லது
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு
பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன்.
உளூச் செய்த பின் மேற்கண்டவாறு யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர் விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 345
ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் தனித்தனி துஆக்கள் இல்லை
ஷாபி, ஹனபி மத்ஹப் கிதாபுகளிலும், தப்லீக் ஜமாஅத்தினரின் வெளியீடுகளிலும் ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் ஓத வேண்டிய துஆக்கள் என்று சில வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். சிலர் இதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர்.
இத்தகைய துஆக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் கழுவும் போது எந்த துஆவையும் ஓதியதில்லை.
எவ்வித ஆதாரமும் இல்லாத கற்பனையின் அடிப்படையிலேயே மேற்கண்ட துஆக்களை ஓதுகின்றனர். இதை அறவே தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) கற்றுத் தராததை நாமாக ஓதுவது பித்அத் ஆகும். பித்அத்கள் நரகில் சேர்க்கும் என்பதை அஞ்சிக் கொள்ள வேண்டும்.
இரண்டு ரக்அத்கள் தொழுதல்
உளூச் செய்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அதிகம் நன்மையைப் பெற்றுத் தருவதாகும்.
‘எனது உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)
நூல்: புகாரீ 160
ஃபஜ்ரு தொழுகையின் போது பிலால் (ரலி)யிடம் நபி (ஸல்) அவர்கள், ‘பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த செயல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்புச் சப்தத்தை சொர்க்கத்தில் நான் கேட்டேன்’என்றார்கள். அதற்கு பிலால் (ரலி) ‘இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டும் என்று நான் நாடியதைத் தொழாமல் இருந்ததில்லை. இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல்’என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 1149, முஸ்லிம் 4497
ஒரு உளூவில் பல தொழுகைகளைத் தொழுதல்
ஒரு தடவை உளூச் செய்த பின் அந்த உளூ நீங்காத வரை எத்தனை தொழுகைகளையும் தொழலாம். ஒவ்வொரு தொழுகை நேரம் வந்ததும் உளூச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
‘நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் உளூச் செய்வது வழக்கம்’ என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.’அப்படியானால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?’ என்று அனஸ் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘உளூ நீங்காத வரை ஒரு உளூவே எங்களுக்குப் போதுமானதாகும்’ என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஆமிர் (ரலி)
நூல்: புகாரீ 214
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது ஒரு உளூவின் மூலம் பல தொழுகைகளைத் தொழுதார்கள். அப்போது தமது காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள். ‘ஒரு நாளும் செய்யாத ஒன்றை இன்றைய தினம் செய்தீர்களே!’ என்று உமர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமரே! வேண்டுமென்று தான் அவ்வாறு செய்தேன்’ என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: முஸ்லிம் 415
தயம்மும் சட்டங்கள் தொழுகை நேரம் வந்து உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீர் கிடைத்து அதைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் அதைக் காரணம் காட்டி தொழாமல் இருக்க முடியாது. மாறாக தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து அதன் பின்பே தொழ வேண்டும்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணமாகப் புறப்பட்டோம். ‘பைதா’ என்ற இடத்தை நாங்கள் அடைந்த போது எனது கழுத்து மாலை அறுந்து விட்டது. அதைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் அங்கே தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினார்கள். அவர்களின் அருகில் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை. மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, ‘(உங்கள் மகள்) ஆயிஷா செய்ததைப் பார்த்தீர்களா? நபிகள் நாயகத்தையும் மக்களையும் தங்க வைத்து விட்டார். அவர்கள் அருகில் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தலையை எனது தொடையில் வைத்து உறங்கிக் கொண்டிருந்த போது அபூபக்ர் (ரலி) வந்தார்கள். ‘நபி (ஸல்) அவர்களுக்கும் மக்களுக்கும் தடங்கலை ஏற்படுத்தி விட்டாய். அவர்களருகிலும் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை’ என்று கூறி என்னைக் கண்டித்தார்கள். அவர்கள் எதைக் கூற வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் கூறினார்கள். எனது இடுப்பிலும் தமது கையால் குத்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தொடை மீது படுத்திருந்ததால் நான் அசையாமல் இருந்தேன். தண்ணீர் கிடைக்காத நிலையில் நபி (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தார்கள். அப்போது தான் தயம்மும் பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் தயம்மும் செய்தனர். நான் அமர்ந்திருந்த ஒட்டகத்தை எழுப்பிய போது அதன் அடியில் என் கழுத்து மாலை கிடைத்தது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 334, முஸ்லிம் 550
தயம்மும் பற்றிய வசனம் திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் உள்ளது. அதைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் இங்கே குறிப்பிடுகின்றார்கள். அந்த வசனங்கள் வருமாறு:
நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ,பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும்,கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும்,  மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:43
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்பு, கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
அல்குர்ஆன் 5:6
தயம்மும் செய்யும் முறை
உள்ளங்கைகளால் தரையில் அடித்து, வாயால் அதில் ஊதி விட்டு அல்லது கைகளை உதறிவிட்டு இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவ வேண்டும்.
ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ‘எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை’ என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, ‘உங்களுக்கு நினைவிருக்கின்றதா? நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல் இருந்தீர்கள். நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, தமது உள்ளங் கைகளால் தரையில் அடித்து வாயால் அதில் ஊதி விட்டு, இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவிக் காட்டி,இப்படிச் செய்வது உமக்குப் போதுமே!’ எனக் கூறினார்கள்’ என்று தெரிவித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)
நூல்கள்: புகாரீ 338, முஸ்லிம் 552
… நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைகளால் பூமியில் ஒரு அடி அடித்து, பின்னர் இரு கைகளையும் உதறிவிட்டு தமது வலது கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தமது இடது கரத்தால் வலது புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரு கைகளால் தமது முகத்தைத் தடவி விட்டு, ‘இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாகும்’என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்மார் (ரலி)
நூல்: புகாரீ 347
புகாரீ, முஸ்லிம் உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ‘ஒரு தடவை தான் தரையில் அடிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வேறு நூல்களில் இடம் பெற்றுள்ள சில அறிவிப்புகளில் இரண்டு தடவை அடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவை ஆதாரப்பூர்மானவை அல்ல.
தயம்மும் செய்ய ஏற்றவை
தயம்மும் செய்வது பற்றிக் கூறும் மேற்கண்ட இரு வசனங்களிலும் தூய்மையான மண்’ என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மண்ணில் தான் தயம்மும் செய்ய வேண்டும்.
மண் என்பது அதன் அனைத்து வகைகளையும் குறிக்கும். களிமண், மணல், இறுகிய மண்ணாங்கட்டி, மண் சுவர் போன்ற அனைத்துமே மண்ணில் அடங்கும்.
‘நபி (ஸல்) அவர்கள் சுவற்றில் அடித்துத் தயம்மும் செய்தார்கள்’ என்று புகாரீ 337வது ஹதீஸில் கூறப்படுகின்றது.
மண் என்பது உதிரியாகக் கிடப்பவை மட்டும் அல்ல; ஒன்று சேர்த்து திரட்டப் பட்டவையும் மண்’ என்பதில் அடங்கும் என இதிருந்து விளங்கலாம்.
குளிர் தாங்க முடியாத போது தயம்மும் செய்தல்
தாங்க முடியாத குளிர் இருந்தாலும் அந்நேரத்தில் தண்ணீரைப் பயன்படுத்தாமல் தயம்மும் செய்யலாம்.
தாதுஸ்ஸலாஸில் எனும் இடத்தில் நடந்த போரில் குளிராக இருந்த ஒரு இரவில் எனக்குத் தூக்கத்தில் விந்து வெளியானது. நான் குளித்தால் நாசமாகி விடுவேன் என்று அஞ்சினேன். எனவே தயம்மும் செய்து என் சகாக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் (பின்னர்) தெரிவித்தேன். ‘அம்ரே! உமக்குக் குளிப்பு கடமையாக இருந்த போது உமது சகாக்களுக்குத் தொழுவித்தீரா?’ என்று நபி (ஸல்) கேட்டனர். குளிப்பதற்குத் தடையாக இருந்த காரணத்தை அவர்களிடம் கூறினேன். ‘உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் உள்ளவனாக இருக்கிறான்’ என்று அல்லாஹ் கூறுவதை நான் செவியுற்றுள்ளேன் (4:29) என்று விளக்கினேன். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். வேறு எதையும் கூறவில்லை.
அறிவிப்பவர்: அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 283, அஹ்மத் 17144
தொழுது முடித்த பின் தண்ணீர் கிடைத்தால்…
தயம்மும் செய்து தொழுத பின்னர் அந்தத் தொழுகையின் நேரம் முடிவதற்குள் அல்லது நேரம் முடிந்த பின் தண்ணீர் கிடைத்தால் அந்தத் தொழுகையை மீண்டும் தொழத் தேவையில்லை.
தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:43
இவ்வசனத்தில் தண்ணீர் கிடைக்காதவர்கள் தயம்மும் செய்து தொழுமாறு கட்டளையிடுகிறானே தவிர தண்ணீர் கிடைத்து விட்டால் மீண்டும் தொழவேண்டும் என்று கட்டளையிடவில்லை. எனவே தொழுது முடிந்த பின்னர் தண்ணீர் கிடைத்தால் தொழுகையைத் திரும்பத் தொழத் தேவையில்லை.
ஒரு தயம்முமில் பல தொழுகை
நாம் தயம்மும் செய்து ஒரு தொழுகையைத் தொழுகின்றோம். பின்னர் அடுத்த தொழுகையின் நேரம் வருகின்றது. அப்போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. உளூவை நீக்கும் காரியம் எதுவும் நம்மிடம் நிகழவில்லை. இந்த நிலையில் ஒரு தொழுகைக்குச் செய்த அதே தயம்மும் மூலம் அடுத்த தொழுகையையும் தொழலாமா? என்றால் இதிலும் இரண்டு கருத்துக்கள் உள்ளன.
ஒரு தயம்மும் செய்து ஒரு கடமையான தொழுகை தொழுவது தான் நபிவழி. மற்ற தொழுகைக்கு மீண்டும் தயம்மும் செய்ய வேண்டும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தாரகுத்னீ, பைஹகீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹஸன் பின் உமாரா என்பவர் வழியாக இது அறிவிக்கப்படுகின்றது. இவர் பலவீனமானவர் என்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு முடிவெடுக்கக் கூடாது.
ஒரு தடவை தயம்மும் செய்து ஒரு கடமையான தொழுகையைத் தான் தொழ வேண்டும் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் இல்லை.
எனவே ஒரு உளூவைக் கொண்டு எத்தனை தொழுகைகளையும் தொழலாம் என்பது போல் உளூவின் மாற்றாக அமைந்துள்ள தயம்முமையும் கருதுவதே சரியானதாகும். ஒரு தயம்மும் மூலம் ஒரு தொழுகை தொழுத பின் அடுத்த தொழுகை நேரத்திலும் தண்ணீர் கிடைக்காவிட்டால் அந்தத் தொழுகையையும் அதே தயம்மும் மூலம் தொழலாம்.
உளூவை நீக்குபவை உளூச் செய்த பின்னால் நம்மிடமிருந்து ஏற்படும் சில நிகழ்வுகளால் உளூ நீங்கி விடும். அவ்வாறு நீங்கி விட்டால் மீண்டும் உளூச் செய்து தான் தொழ வேண்டும் என்று திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன. அவற்றைக் காண்போம்.
மலஜலம் கழித்தல்
உளூச் செய்த பின் ஒருவர் மலம் கழித்தாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ அவர் செய்த உளூ நீங்கி விடும். அவர் மீண்டும் உளூச் செய்த பின்பே தொழ வேண்டும். நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும்,  மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:43
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
அல்குர்ஆன் 5:6
மலம் கழித்த ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து தொழ வேண்டும் என்பதையும், தண்ணீர் கிடைத்தால் உளூச் செய்வது அவசியம் என்பதையும், ஏற்கனவே செய்த உளூவை மலம் கழித்தல் நீக்கி விடும் என்பதையும் இவ்விரு வசனங்கள் கூறுகின்றன.
சிறுநீர் கழிப்பது உளூவை நீக்கி விடும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்திக்கும் போது அறிய முடியும்.
‘நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும் உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும்’ எனவும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 89, நஸயீ 127, இப்னுமாஜா 471, அஹ்மத் 17396
சிறுநீர் கழித்தலும் உளூவை நீக்கி விடும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
காற்றுப் பிரிதல் உளூவை நீக்கும்
மலஜலம் கழிப்பதால் உளூ நீங்குவது போலவே காற்றுப் பிரிவதாலும் உளூ நீங்கி விடும்.
‘ஹதஸ் ஏற்பட்டவனின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். அப்போது ஹள்ரமவ்த்’ என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் ‘அபூஹுரைராவே! ஹதஸ் என்றால் என்ன?’ என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி), ‘சப்தத்துடனோ, அல்லது சப்தமின்றியோ காற்றுப் பிரிவது தான்’ என்று விளக்கமளித்தார்கள்.
நூல்: புகாரீ 135, 176
காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டால்…
சிலருக்குக் காற்றுப் பிரியாவிட்டாலும் காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்படும். அல்லது சிறுநீர் ஓரிரு சொட்டுக்கள் இறங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் ஆடையில் அதற்கான எந்த அடையாளமும் இருக்காது. இவர்கள் அதற்காக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. திட்டவட்டமாகத் தெரிந்தால் மட்டுமே உளூ நீங்கி விட்டதாக முடிவு செய்து கொள்ள வேண்டும்.
‘தொழும் போது ஏதோ ஏற்படுவதாகத் தனக்குத் தோன்றுகிறது’ என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(காற்றுப் பிரியும்) சப்தத்தைக் கேட்காமல், அல்லது அதன் நாற்றத்தை உணராமல் தொழுகையை விட்டுச் செல்ல வேண்டாம்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
நூல்கள்: புகாரீ 137, முஸ்லிம் 540
சமைத்த உணவுகளை உண்பது உளூவை நீக்குமா?
பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்பதால் உளூ நீங்காது என்பதில் மாறுபட்ட ஹதீஸ்கள் எதுவும் இல்லை. எனவே இவற்றை உண்பதால் உளூ நீங்காது.
சமைத்த பொருட்களை உண்பதால் உளூ நீங்குமா? என்பதில் மாறுபட்ட கருத்துக்களைத் தரும் ஹதீஸ்கள் உள்ளன.
‘நெருப்பு தீண்டியவற்றின் காரணமாக (சமைக்கப்பட்ட உணவை உட்கொள்வதன் காரணமாக) உளூச் செய்யுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்போர்: அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்: முஸ்லிம் 528
சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் உளூச் செய்ய வேண்டும் என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறினாலும் இந்தச் சட்டம் நபி (ஸல்) அவர்களால் பின்னர் ரத்து செய்யப்பட்டு விட்டது.
சமைத்த பொருட்களைச் சாப்பிட்ட பின் (உளூச் செய்தல், உளூச் செய்யாமல் விட்டு விடுதல் ஆகிய) இரு காரியங்களில் உளூவை விட்டு விடுவதே நபி (ஸல்) அவர்கள் இறுதியாக நடைமுறைப்படுத்தியதாகும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: நஸயீ 185, அபூதாவூத் 164
‘சமைக்கப்பட்ட பொருட்களை உண்பதால் உளூச் செய்ய வேண்டும்’ என்ற சட்டம் முன்னர் நடைமுறையில் இருந்ததையும், பின்னர் அது மாற்றப்பட்டு விட்டதையும் இந்த ஹதீஸ் மூலம் விளங்கலாம். எனவே சமைக்கப்பட்ட உணவை உண்பதால் உளூ நீங்காது.
ஒட்டகத்தின் இறைச்சியை உண்பது உளூவை நீக்கும்
எதைச் சாப்பிட்டாலும் உளூ நீங்காது என்றாலும் ஒட்டகத்தின் இறைச்சியைச் சாப்பிடுவது உளூவை நீக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘ஆட்டிறைச்சியை உண்பதால் உளூச் செய்ய வேண்டுமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீ விரும்பினால் உளூச் செய்து கொள்! விரும்பினால் உளூச் செய்யாமல் இருந்து கொள்’என்று கூறினார்கள். ‘ஒட்டகத்தின் இறைச்சியை உண்பதால் நாங்கள் உளூச் செய்ய வேண்டுமா?’ என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்! ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் உளூச் செய்’ என்று நபி (ஸல்) விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
நூல்: முஸ்லிம் 539
மதீ’ வெளியானால் உளூ நீங்கும்
ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ’ – இச்சை நீர் எனப்படும். இது இச்சையினால் ஏற்படும் நீர் தானே தவிர இந்திரியம் அல்ல.
மலஜலம் கழித்தல், காற்றுப் பிரிதல் ஆகியவை உளூவை நீக்குவது போலவே இந்த மதீ’ எனும் இச்சை நீர் வெளிப்படுவதும் உளூவை நீக்கும்.
அதிக அளவில் மதீ’ வெளிப்படக் கூடியவனாக நான் இருந்தேன். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு மிக்தாத் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். ‘அதற்காக உளூச் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: புகாரீ 132, முஸ்லிம் 458
‘ஆணுறுப்பைக் கழுவி விட்டு உளூச் செய்து கொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 269வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
வாந்தி எடுத்தால் உளூ நீங்குமா?
வாந்தி எடுத்தால் உளூ நீங்கும் எனக் கூறும் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானது அல்ல. எனவே வாந்தி எடுத்தால் உளூ நீங்காது.
இரத்தம் வெளியேறுதல்
உளூச் செய்த பின்னர் உடலிலிருந்து இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்கும் எனக் கூறும் ஹதீஸ்கள் சில உள்ளன. அவையனைத்தும் பலவீனமானவையாகும். எனவே இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்காது என்பதே சரியானதாகும்.
பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?
ஆண்கள் பெண்களைத் தொட்டாலோ, அல்லது பெண்கள் ஆண்களைத் தொட்டாலோ அவர்களின் உளூ நீங்கி விடுமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ,பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும்,கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் 4:43
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும்,தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
அல்குர்ஆன் 5:6
இவ்விரு வசனங்களிலும் பெண்களைத் தீண்டினால் உளூ நீங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தீண்டுதல் என்ற சொல்லின் நேரடிப் பொருள் தொடுதல் என்பது தான். எனவே பெண்களைத் தொட்டால் உளூ நீங்கி விடும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
தீண்டுதல் என்பதன் பொருள் தொடுவது தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆயினும் தீண்டுதல் என்ற சொல்லைப் பெண்களுடன் இணைத்துக் கூறும் போது சில நேரங்களில் தொடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும். சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும்.
இந்த வசனங்களில், ‘பெண்களைத் தீண்டினால்’ என்ற சொல்லுக்கு பெண்களுடன் உடலுறவு கொண்டால் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்று மற்றும் சிலர் வாதிடுகின்றனர்.
இரண்டாவது சாராரின் கருத்தை வலுப்படுத்தும் வேறு சான்றுகள் இல்லாவிட்டால் முதல் சாராரின் கூற்றையே நாம் தேர்வு செய்தாக வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் நேரடிப் பொருளின் அடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.
இரண்டாவது சாராரின் கருத்தை வலுப்படுத்தும் புறச்சான்றுகள் பல உள்ளதால் பெண்களைத் தீண்டினால்’ என்பதற்கு பெண்களுடன் உடலுறவு கொண்டால்’ என்று இவ்விரு வசனங்களுக்கும் பொருள் கொள்வது தான் பொருத்தமானது.
‘நான் நபி (ஸல்) அவர்களுக்கும், கிப்லாவுக்கும் குறுக்கே படுத்துக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாவுக்குச் செல்லும் போது என் கால்களைக் குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ 519, முஸ்லிம் 796
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது நீங்களாகவே கால்களை மடக்கிக் கொள்ளலாமே? அவர்கள் காலில் விரலால் குத்தும் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்று எழும் கேள்விக்கும் – இக்கேள்வியை யாரும் கேட்காதிருந்தும் – ஆயிஷா (ரலி) விடையளித்துள்ளார்கள். ‘அந்தக் காலத்தில் எங்கள் வீடுகளில் விளக்குகள் கிடையாது’ என்பது தான் அந்த விடை!
பார்க்க புகாரீ: 382, 513
வீடு முழுவதும் இருட்டாக இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யப் போவதை விரலால் குத்தினால் தான் அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கின்றது.
இந்த ஹதீஸைக் கவனத்தில் வைத்துக் கொண்டு மேற்கண்ட வசனங்களை நாம் ஆராய்வோம்.
பெண்களைத் தொட்டால் உளூ நீங்கும் என்பது அந்த வசனங்களின் பொருளாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியின் கால்களைத் தொட்டிருக்க மாட்டார்கள். தொட்டவுடன் தொடர்ந்து தொழுதிருக்கவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆனின் ஒரு வசனத்திற்கு என்ன பொருள் கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களின் விளக்கம் தான் இதற்குத் தீர்வாக முடியும்.
தமது மனைவியின் மேல் தற்செயலாகக் கைகள் பட்டன என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. ‘கால்களை மடக்கிக் கொள்’ என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக வேண்டுமென்றே அவர்கள் தமது மனைவியைத் தொட்டிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. எனவே மேற்கண்ட வசனத்தில் பெண்களைத் தீண்டினால்’ என்பதற்கு, பெண்களைத் தொட்டால்’என்று பொருள் கொள்வது பொருத்தமாகாது.
இந்த ஹதீஸைப் பார்த்த பிறகும் சிலர் புதுமையான விளக்கத்தைக் கூறி தங்களின் கருத்தை நியாயப்படுத்த முனைகின்றனர்.
ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் நேரடியாகத் தொட்டார்கள் என்று இதற்கு அர்த்தம் இல்லை. அவர்கள் மீது ஆடை இருந்திருக்கும்; அந்த ஆடையின் மேல் நபி (ஸல்) அவர்கள் குத்தியிருக்கலாம் அல்லவா? என்பது இவர்கள் தரும் புதுமையான விளக்கம்.
யாரும் கணவருடன் படுத்திருக்கும் போது முழுமையாக உடலை மறைத்துக் கொள்வதில்லை. மேலும் கால்களையும் மூடிக் கொண்டு படுப்பதில்லை. அப்படியே படுத்திருந்தாலும் தூக்கத்தில் ஆடைகள் விலகியிருப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் அங்கே வெளிச்சமாக இருந்திருந்தால் ஆடையால் மூடப்பட்ட இடத்தைப் பார்த்து விரலால் குத்தினார்கள் என்று கருத முடியும். விளக்குகள் இல்லாமல் இருட்டாக இருந்ததால் காலில் ஆடை கிடக்கின்றதா?இல்லையா? என்று தேடிப் பார்த்து தமது விரலால் குத்தவில்லை என்பது தெளிவாகின்றது எனவே பெண்களைத் தொட்டால் உளூ முறியாது என்பதை அறியலாம்.
தூக்கம் உளூவை நீக்குமா?
தூங்குவதால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
சில ஹதீஸ்கள் தூங்கினால் உளூ நீங்கி விடும் என்றும் சில ஹதீஸ்கள் நீங்காது என்றும் தெரிவிக்கின்றன.
காலுறை அணிந்தவர்கள் மலஜலம் கழித்தாலோ, தூங்கினாலோ அவர்கள் மீண்டும் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்கள்: நஸயீ 127, அஹ்மத் 17396, 17401, திர்மிதீ 89, 3458, 3459, இப்னுமாஜா 471
மலஜலம் கழிப்பது எவ்வாறு உளூவை நீக்குமோ அவ்வாறே தூக்கமும் உளூவை நீக்கும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. இதற்கு மாற்றமாகப் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.
எனது சிறிய தாயார் (நபிகள் நாயகத்தின் மனைவி) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓர் இரவு நான் தங்கினேன். நபி (ஸல்) அவர்களின் இடது புறத்தில் நான் நின்று கொண்டேன். என் கையைப் பிடித்து தமது வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள். நான் தூங்கி வழியும் போது என் காது சோனையைப் பிடிப்பார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1277
இந்த இரண்டு ஹதீஸ்களையும் ஆராயும் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நின்று கொண்டு தூங்கியது நிச்சயமாக ஆழ்ந்த தூக்கமாக இருக்காது; அரைகுறை தூக்கமாகத் தான் இருந்திருக்கும். எனவே இரண்டு ஹதீஸ்களையும் இணைக்கும் வண்ணம் ‘ஆழ்ந்த தூக்கம் உளூவை நீக்கும்; அரைகுறை தூக்கம் உளூவை நீக்காது’என்று முடிவு செய்யலாம்.
மர்மஸ்தானத்தைத் தொடுவது உளூவை நீக்குமா?
ஆண்களோ, பெண்களோ உளூச் செய்த பின்னர் தங்களின் மர்மஸ்தானத்தைத் தொட்டால் உளூ நீங்குமா என்பதில் அறிஞர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
வேண்டுமென்றோ, மறதியாகவோ, நம்மை அறியாமலோ எப்படித் தொட்டாலும் உளூ நீங்கி விடும் என்று சிலர் கூறுகின்றனர்.
எப்படித் தொட்டாலும் உளூ நீங்காது என்று சிலர் கூறுகின்றனர்.
வேண்டுமென்று தொட்டால் உளூ நீங்கும்; மறதியாகத் தொட்டாலோ, நம்மை அறியாமல் மர்மஸ்தானத்தில் கை பட்டாலோ உளூ நீங்காது என்று மற்றும் சிலர் கூறுகின்றனர்.
இச்சையுடன் தொட்டால் உளூ நீங்கி விடும்; அவ்வாறில்லாமல் தொட்டால் உளூ நீங்காது என்று இன்னும் சிலர் கூறுகின்றனர்.
மர்மஸ்தானத்தை நேரடியாகத் தொட்டால் உளூ நீங்கும்; மர்மஸ்தானத்தின் மீது துணி இருக்கும் நிலையிலோ,கைகளில் உறை அணிந்துள்ள நிலையிலோ தொட்டால் உளூ நீங்காது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
இந்தப் பிரச்சனையில் மாறுபட்ட கருத்துடைய ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது தான் கருத்து வேறுபாட்டுக்குக் காரணமாகும்.
யாரேனும் தனது ஆணுறுப்பைத் தொட்டால் உளூச் செய்யாமல் தொழக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃப்வானின் மகள் புஸ்ரா (ரலி)
நூல்கள்: திர்மிதீ 77, நஸயீ 163, அபூதாவூத் 154, இப்னுமாஜா 472, அஹ்மத் 26030,
இந்த ஹதீஸ் ஆண்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது என்றாலும் இச்சட்டத்தில் ஆண்களும், பெண்களும் சமமானவர்களே என்ற கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன.
‘ஆண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவர் உளூச் செய்ய வேண்டும்; பெண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவரும் உளூச் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)
நூல்கள்: தாரகுத்னீ 1/147, பைஹகீ 1/132, அல்முன்தகா 1/18, அஹ்மத் 6779
ஆண்களாயினும், பெண்களாயினும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவர்களின் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்து விட்டுத் தொழ வேண்டும் என்பதை இந்த நபிமொழிகள் தெளிவாக அறிவிக்கின்றன.
உங்களில் ஒருவர் திரை ஏதுமின்றி தமது உறுப்பைக் கையால் தொட்டால் அவர் உளூச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: இப்னுஹிப்பான் 3/401, தப்ரானியின் அவ்ஸத் 2/237 தப்ரானியின் ஸகீர் 1/84
மேற்கண்ட ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆனாலும் இந்த ஹதீஸின் கருத்துக்கு மாற்றமான கருத்துடைய ஹதீஸ்களும் உள்ளன.
‘தொழும் போது ஒருவர் தனது மர்மஸ்தானத்தைத் தொடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதுவும் உனது மற்ற உறுப்புக்களைப் போன்ற உறுப்பு தானே?’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: தல்க் இப்னு அலீ (ரலி)
நூல்கள்: நஸயீ 165, திர்மிதீ 78, அபூதாவூத் 155, இப்னுமாஜா 476, அஹ்மத் 15700
இந்தக் கருத்துடைய ஹதீஸ் இப்னு ஹிப்பான்  3/403,  தாரகுத்னீ  1/149,  தப்ரானியின் அல்கபீர் 8/330 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதாரப்பூர்வமான இரண்டு ஹதீஸ்கள் ஒன்றோடொன்று மோதுவது போல் தோற்றமளித்தால் அவ்விரு செய்திகளையும் முறையில் இணைத்து முடிவு செய்யலாம்.
ஒருவன் தனது மர்மஸ்தானத்தைத் தொடுவது இரண்டு வகைகளில் ஏற்படலாம்.
மற்ற உறுப்புகளைப் போன்ற உறுப்பாகக் கருதி தொடுவது முதல் வகை.
அந்த உறுப்பின் தனித் தன்மையைக் கருதி தொடுவது இரண்டாவது வகை.
முதல் வகையான தொடுதலால் உளூ நீங்காது.
இரண்டாவது வகையான தொடுதலால் உளூ நீங்கும் என்று முடிவு செய்யலாம்.
உடலில் குறிப்பிட்ட இடத்தில் எறும்பு கடித்தால் அந்த இடத்தில் நம் கையை வைத்து சொறிந்து கொள்கிறோம். இது போல மர்மஸ்தானத்தில் எறும்பு கடிப்பது போன்றோ, ஏதோ ஒன்று ஊர்வது போலவோ தோன்றும் போது அந்த இடத்தையும் சொறிந்து கொள்கிறோம். அந்த உறுப்பின் தனித்தன்மை கருதி அவ்வாறு செய்வதில்லை. மற்ற உறுப்புக்களைப் போல் கருதியே இதைச் செய்கிறோம். இவ்வாறு தொட்டால் உளூ நீங்காது.
உள்ளாடை அணியும் போது நம்மையும் அறியாமல் அவ்வுறுப்பின் மீது நமது கை பட்டு விடலாம். மற்ற உறுப்புகளில் எவ்வாறு கை படுகின்றதோ அவ்வாறு பட்டு விட்டது என்று தான் இதை எடுத்துக் கொள்வோம். இவ்வாறு பட்டாலும் உளூ நீங்காது.
இவ்வாறு இல்லாமல் இச்சையுடன் தொட்டால் மற்ற உறுப்பைப் போல் தொட்டதாகக் கருத முடியாது. அவ்வுறுப்பின் தனித்தன்மை கருதி தொட்டதாகத் தான் கருத முடியும். இப்படித் தொட்டால் உளூ நீங்கி விடும்.
‘அதுவும் உனது மற்ற உறுப்புக்களைப் போன்றது தானே’ என்று நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வாசகத்திலிருந்து இந்தக் கருத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
ஆணுறுப்பைத் தொட்டால் உளூ நீங்கும் என்பது இச்சையுடன் தொடுவதைத் தான் குறிக்கின்றது.
உளூ நீங்காது என்பது சாதாரணமாகத் தொடுவதைக் குறிக்கின்றது என்று கருதும் போது இரண்டு ஹதீஸ்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
உளூ அடிக்கடி நீங்கும் நோயாளிகள்
அடிக்கடி சிறுநீர் சொட்டுக்கள் விழுதல், அடிக்கடி காற்றுப் பிரிதல், தொடர் உதிரப் போக்கு போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு உளூவை நீக்கும் காரியங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
இத்தகைய உபாதைகள் உடையவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு தடவை உளூச் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்த பின் அவர்களிடமிருந்து மேற்கண்ட உபாதைகளின் வெளிப்பாடு இருந்து கொண்டே இருந்தாலும் அதனால் உளூ நீங்காது. அடுத்தத் தொழுகை நேரம் வந்தவுடன் மீண்டும் உளூச் செய்ய வேண்டும்.
தொடர் உதிரப் போக்குடைய ஃபாத்திமா என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார்.’அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் இரத்தப் போக்குடையவளாக இருக்கின்றேன். நான் தூய்மையாவதேயில்லை. எனவே தொழுகைகளை நான் விட்டு விடலாமா?’ என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கூடாது! அது மாதவிடாய் அல்ல! மாறாக ஒரு நோயாகும். எனவே (வழக்கமான) மாதவிடாய் நேரம் வந்ததும் தொழுகையை விட்டு விடு! அது நின்றவுடன் இரத்தத்தைக் கழுவி விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து தொழு’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 228
இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட உபாதைகள் உள்ளவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து கொள்ள வேண்டும்.
கடமையான குளிப்பு
உளூச் செய்யும் அவசியம் ஏற்படும் போது உளூச் செய்து விட்டுத் தான் தொழ வேண்டும் என்பது போல, குளிக்கும் அவசியம் ஏற்பட்டால் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும். குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல் தொழக் கூடாது.
ஒரு மனிதன் குளிப்பது எப்போது கடமையாகும்? குளிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை?என்பதைக் காண்போம்.
உடலுறவு குளிப்பைக் கடமையாக்கும்
ஆணும், பெண்ணும் உடலுறவு கொண்டால் இருவர் மீதும் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத் தான் அவர்கள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.
‘ஒரு ஆண் தனது மனைவியின் கால்களுக்கிடையே அமர்ந்து பின்னர் முயற்சி செய்தால் குளிப்பு கடமையாகி விடும்’என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 291, முஸ்லிம் 525
முஸ்லிமின் 525 அறிவிப்பில் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை என்ற வாக்கியம் மேலதிகமாக இடம் பெற்றுள்ளது.
தூக்கத்தில் விந்து வெளிப்படுதல்
பெரும்பாலும் ஆண்களுக்கும் மிகச் சில பெண்களுக்கும் தூக்கத்தின் போது விந்து வெளிப்படுவதுண்டு. சில நேரங்களில் விந்து வெளிப்படுவது போன்ற கனவுகள் ஏற்படும். ஆனால் விழித்துப் பார்த்தால் விந்து வெளிப்பட்டதற்கான எந்த அடையாளமும் ஆடையில் இருக்காது.
விந்து வெளிப்பட்டது உறுதியாகத் தெரிந்தால், ஆடையில் அதற்கான அடையாளம் இருந்தால் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும்.
விந்து வெளிப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு அதற்கான எந்த அடையாளமும் தெரியாவிட்டால் குளிப்பது கடமையில்லை.
‘அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசுவதில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?’ என்று உம்மு சுலைம் (ரலி) என்ற பெண்மணி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘விந்து வெளிப்பட்டதை அவள் கண்டால் குளிப்பது அவசியம்’ என்று விடையளித்தார்கள். இதைக் கேட்ட உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ‘பெண்களுக்கும் விந்து வெளிப்படுமா?’ என்று கேட்டு விட்டுச் சிரித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘சில நேரங்களில் தாயைப் போல் குழந்தை எப்படிப் பிறக்கின்றது?’ என்று திருப்பிக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: புகாரீ 3328, முஸ்லிம் 471
நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு அருகில் நான் வசித்தேன். அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவேன். நபி (ஸல்) அவர்கள் உள்ளே வந்த போது, ‘அல்லாஹ்வின் தூதரே! தன் கணவன் தன்னுடன் உடலுறவு கொள்வது போல் ஒரு பெண் கனவு கண்டால் அவள் குளிக்க வேண்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘விந்து வெளிப்பட்டதைக் கண்டால் அவள் குளிக்க வேண்டும்’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: உம்மு சுலைம் (ரலி)
நூல்: அஹ்மத் 25869
விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பது கடமை என்பதையும், விந்து வெளிப்படுவது போல் தோன்றினால் குளிப்பது கடமையில்லை என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
மாதவிடாய் நின்றதும் குளிப்பது அவசியம்
மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழக் கூடாது என்பதை நாம் அறிவோம். மாதவிடாய் நின்றவுடன் அவர்கள் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும்.
அபூஹுபைஷ் என்பாரின் மகள் ஃபாத்திமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் இரத்தப் போக்கிலிருந்து சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(தொழுகையை விடக்) கூடாது. அது ஒரு நோய் தானே தவிர மாதவிடாய் அல்ல! எனவே மாதவிடாய் வரும் போது (மட்டும்) தொழுகையை விட்டு விடு! மாதவிடாய் நின்றதும் குளித்து விட்டுத் தொழு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 320
மாதவிடாய் நின்றதும் குளித்து விட்டுத் தொழ வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
ஜும்ஆவுக்கு முன் குளிப்பது அவசியம்
வெள்ளிக்கிழமை குளிப்பது கட்டாயக் கடமையாகும். இது பற்றி மிகத் தெளிவான கட்டளை நபி (ஸல்) அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘பருவ வயது அடைந்த ஒவ்வொருவர் மீதும் வெள்ளிக்கிழமை குளிப்பது (வாஜிப்) கட்டாயக் கடமை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்கள்: புகாரீ 858, 879, 880, 895, 2665, முஸ்லிம் 1397
வெள்ளிக்கிழமை குளிப்பது அவசியம் என்று பொதுவாகக் கூறப்படுவதால் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆவுக்குப் பின்னர் கூட குளிக்கலாம் என்று கருதக் கூடாது. ஏனெனில் வேறு ஹதீஸ்களில் ஜும்ஆவுக்கு முன்னரே குளித்து விட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
‘உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு வருவதாக இருந்தால் அவர் குளித்து விடட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 877
குளிக்கும் முறை மர்மஸ்தானத்தையும், உடலில் பட்ட அசுத்தத்தையும் கழுவுதல்
கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, தாம்பத்தியத்தின் மூலம் உடலில் பட்ட அசுத்தங்களையும், மர்ம ஸ்தானத்தையும் முதலில் கழுவ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது (முதலில்) தங்கள் மர்மஸ்தானத்தைக் கையினால் கழுவினார்கள். பின்னர் கையைச் சுவற்றில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். குளித்து முடித்து, இரு கால்களையும் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி)
நூல்கள்: புகாரீ 260, முஸ்லிம் 476
வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி, இடது கையால் மர்மஸ்தானத்தைக் கழுவுவார்கள் என்று புகாரீ259வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
உளூச் செய்தல்
கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, அதற்கு முன்னர் உளூச் செய்வது நபிவழியாகும். அவ்வாறு உளூச் செய்யும் போது, கால்களை மட்டும் கடைசியாக (குளித்து முடிக்கும் போது) கழுவுவதும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.
நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தமது கைகளைக் கழுவிக் கொண்டு, தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 248, முஸ்லிம் 475
குளித்து முடித்ததும் தாம் நின்ற இடத்தை விட்டு சற்று விலகி, இரு கால்களையும் நபி (ஸல்) அவர்கள் கழுவுவார்கள்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி)
நூல்கள்: புகாரீ 249, முஸ்லிம் 476
தலையைக் கோதி விட்டுப் பின்னர் குளித்தல்
நபி (ஸல்) அவர்கள் கைகளைத் தண்ணீரில் நனைத்து, ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தைக் கோதி விட்டுப் பின்னர் மூன்று தடவை தலையில் தண்ணீரை ஊற்றுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 248, முஸ்லிம் 474 ….பின்னர் தமது கையால் தலை முடியைக் கோதுவார்கள். முடியின் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று அவர்கள் நினைக்கும் போது மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 273, முஸ்லிம் 474
இரண்டு, மூன்று தடவை தண்ணீர் ஊற்றுவது போதும்
கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு மணிக் கணக்கில் தண்ணீரில் ஊற வேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றிய பின்னர் உடல் முழுவதும் ஊற்றிக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது இரு கைகளிலும் தண்ணீரைச் சாய்த்து இரண்டு தடவைகள் அல்லது மூன்று தடவைகள் கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையால் இடது கை மீது தண்ணீரைச் சாய்த்து தமது மர்மஸ்தானத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைத் தரையில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள். பின்னர் முகத்தையும், கைகளையும் கழுவினார்கள். தமது தலையை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் உடலில் ஊற்றினார்கள். பின்னர் தாம் நின்ற இடத்திலிருந்து விலகி கால்களைக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி)
நூல்கள்: புகாரீ 257, முஸ்லிம் 476
நமது முடிகளில் ஒன்றிரண்டு நனையாமல் இருக்குமோ என்று சில பேர் எண்ணிக் கொண்டு குடம், குடமாகத் தண்ணீரை ஊற்றுவார்கள். இவ்வாறு அதிகம் அலட்டிக் கொள்வது தேவையில்லை.
நபி (ஸல்) அவர்கள் செய்தது போல் ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தில் தடவிக் கோதிய பின் மூன்று தடவை தலையின் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். இதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறியலாம். இது பற்றி இன்னும் தெளிவாக ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் குளிக்கும் முறை பற்றி சிலர் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சிலர், ‘நான் என் தலையை இப்படி, இப்படியெல்லாம் (தேய்த்துக்) கழுவுவேன்’ என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘நான் மூன்று கை தண்ணீர் எடுத்து என் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி’ என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
நூல்: முஸ்லிம் 493
‘நானோ இரண்டு கைகளாலும் தண்ணீர் எடுத்துத் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி’ என்று நபி (ஸல்) கூறியதாக புகாரீ 254 அறிவிப்பில் உள்ளது.
கடமையான குளிப்பு அல்லாத சாதாரண குளிப்பைப் பற்றியதாக இது இருக்குமோ என்று சிலர் நினைக்கக் கூடும். முஸ்லிமில் இடம் பெற்ற (494வது) ஹதீஸில் கடமையான குளிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே கடமையான குளிப்புக்கும் இவ்வாறு செய்யலாம் என்பதில் ஐயமில்லை.
பெண்கள் சடைகளை அவிழ்க்க வேண்டுமா?
பின்னப்பட்ட சடைகளை அவிழ்த்து விட்டுத் தான் கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அது தவறாகும். ஹதீஸ்களை ஆராயும் போது முடிக்குக் கீழே உள்ள தோல் தான் கட்டாயமாக நனைய வேண்டுமே தவிர ஒவ்வொரு முடியும் நனைய வேண்டும் என்பது கட்டாயமில்லை என்பதை அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஈரக் கையால் தலையின் அடிப்பாகத்தைத் தேய்ப்பார்கள் என்றும் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று நினைக்கும் போது தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள் என்றும் கூறப்பட்ட விளக்கத்திலிருந்து இதை அறியலாம்.
இதை இன்னும் தெளிவாகவே விளக்கும் ஹதீஸ்களும் உள்ளன.
‘அல்லாஹ்வின் தூதரே! நான் தலையில் சடை போட்டிருக்கிறேன். கடமையான குளிப்புக்காக நான் சடையை அவிழ்க்க வேண்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘வேண்டியதில்லை; உன் தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும்; பின்னர் உன் மீது தண்ணீரை ஊற்றிக் கொள்; நீ தூய்மையாகி விடுவாய்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 497
எனவே தலையின் அடிப்பாகம் நனைவது தான் கட்டாயமானது. மேலே உள்ள முடிகள் நனையாமல் இருப்பதால் குளிப்புக்கு எந்தக் குறைவும் ஏற்படாது.
சடையை அவிழ்க்காமல் குளிக்கும் போது, பாதிக்கு மேற்பட்ட முடிகள் நனைவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தும் சடையை அவிழ்க்கத் தேவையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாங்கு – இகாமத்
கடமையான தொழுகைக்கு பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டும்.
‘தொழுகை நேரம் வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் பெரியவர் தொழ வைக்கட்டும்’என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 631, முஸ்லிம் 1080
தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்பு கொடுக்கப்படும் போது பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றை வெளிப்படுத்தி ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான்….. என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 608, முஸ்லிம் 582
பாங்கு என்பது தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காக உள்ள குறிப்பிட்ட வாசகங்களாகும்.
இகாமத் என்பது கடமையான தொழுகை துவங்குவதற்கு முன் கூறப்படும் குறிப்பிட்ட வாசகங்களாகும்.
பாங்கின் வாசகங்கள்
அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்
அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
ஹய்ய அலஸ் ஸலாஹ்
ஹய்ய அலஸ் ஸலாஹ்
ஹய்ய அலல் ஃபலாஹ்
ஹய்ய அலல் ஃபலாஹ்
அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்
லாயிலாஹ இல்லல்லாஹ்
பொருள்:
அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன்.
அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.
முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்புகிறேன்.
முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்புகிறேன்.
தொழுகையின் பக்கம் வாருங்கள்
தொழுகையின் பக்கம் வாருங்கள்
வெற்றியின் பக்கம் வாருங்கள்
வெற்றியின் பக்கம் வாருங்கள்
அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன்,
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
நூல்: அபூதாவூத் 421
பாங்கில் ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும் போது பாங்கு சொல்பவர் வலது புறமும். இடது புறமும் தலையைத் திருப்பியதாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபியவர்கள் உளூச் செய்தார்கள்…. பிறகு நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள்… அப்போது பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். அவர்கள், ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று கூறும் போது இங்கும் அங்குமாக,அதாவது வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் திரும்பிய போது நான் அவர்களது வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி)
நூல்: முஸ்லிம் 866
பாங்கு சொல்லும் போது பஜ்ர் தொழுகையில் மட்டும் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறிய பின்னர் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு தடவை கூற வேண்டும்.
நான் நபி (ஸல்) அவர்களுக்கு பாங்கு சொல்பவனாக இருந்தேன். நான் பஜ்ருடைய பாங்கில் ஹய்ய அலல் ஃபலாஹ்’என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம், அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம், அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுபவனாக இருந்தேன்.
அறிவிப்பவர்: அபூமஹ்தூரா (ரலி)
நூல்கள்: நஸயீ 643, அபூதாவூத் 425, அஹ்மத்14834
பாங்கிற்கு முன்னால் ஸலவாத்துச் சொல்வதும் ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி … என்று துவங்கும் வாசகங்களைக் கூறுவதும் பித்அத் ஆகும். இவ்வாறு சொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தரவில்லை.
பாங்கின் அழைப்பிற்குப் பதில் கூறுதல்
பாங்கைக் கேட்பவர்கள் பாங்கிற்குப் பதில் அளிப்பது அவசியமாகும். பாங்கு சொல்பவர் சொல்வதைப் போன்று கூற வேண்டும். ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும் போது மட்டும் அரபி
‘லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் துணையின்றி நல்லவற்றில் ஈடுபடவோ தீயவற்றிலிருந்து விலகவோ இயலாது) என்று கூற வேண்டும்.
‘பாங்கைக் கேட்டால் பாங்கு சொல்பவர் கூறுவதைப் போன்று நீங்களும் கூறுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரலி)
நூல்கள்: புகாரீ 611, முஸ்லிம் 627
‘பாங்கு சொல்பவர் அல்லாஹு அக்பர்’ என்று கூறினால் நீங்களும் அல்லாஹு அக்பர்’ என்று கூறுங்கள்…. ஹய்ய அலஸ் ஸலாஹ்’ என்று என்று கூறினால் லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ என்று கூறுங்கள். பின்னர் அவர் ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று கூறினால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ என்று கூறுங்கள்…’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 629
பாங்கிற்கு இவ்வாறு பதில் சொல்லி முடித்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்காக ஸலவாத் எனும் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.
‘நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் பாங்கு கூறுபவர் கூறுவதைப் போலவே கூறுங்கள். பிறகு என் மீது ஸலவாத் கூறுங்கள். என் மீது எவர் ஒரு முறை ஸலவாத் கூறுகிறாரோ அவர் மீது இறைவன் பத்து முறை அருள் புரிகிறான். சொர்க்கத்தில் வஸீலா எனும் ஓர் உயர்ந்த பதவி உள்ளது. அந்தப் பதவியை இறைவன் தன் அடியார்களில் ஒருவருக்குத் தான் வழங்க இருக்கிறான். அந்த ஒருவனாக நான் இருக்க விரும்புகிறேன். வஸீலா எனும் அந்தப் பதவி எனக்குக் கிடைக்க எவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 628
ஸலவாத்தின் வாசகங்கள்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.
பொருள்: ‘இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி (பரகத்) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி (பரகத்) செய்வாயாக! நீ புகழுக்குரியவனாகவும்,  கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்’.
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)
நூல்: புகாரீ 3370
ஸலவாத் கூறிய பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.
அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்
பொருள்: ‘முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும், சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!’
என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவருக்கு மறுமையில் நாளில் என்னுடைய பரிந்துரை அவசியம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரீ 614
மேற்கூறப்பட்ட துஆவையோ, அல்லது பின்வரும் துஆவையோ ஓதிக் கொள்ளலாம்.
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லஷரீ(க்)க லஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு. ரளீத்து பில்லாஹி ரப்பன் வபி முஹம்மதி(ன்)ர் ரஸூலன் வபில் இஸ்லாமி தீனா
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள். அல்லாஹ்வை அதிபதியாகவும், முஹம்மதை (இறைத்) தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் ஏற்றுக் கொண்டேன்.
என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 631
இகாமத்
கடமையான தொழுகையை நிறைவேற்றும் முன்பு இகாமத் சொல்லி தொழுகையைத் துவங்க வேண்டும். இகாமத் என்பது பாங்கைப் போன்றது தான். எனினும் அதில் சில மாற்றங்கள் உள்ளன.
பாங்கின் வாசகங்களை இரட்டையாகவும் கத்காமதிஸ்ஸலாஹ் என்பதைத் தவிர மற்ற வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 605, முஸ்லிம் 569
இகாமத்தின் வாசகங்கள்
அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்
அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
ஹய்ய அலஸ் ஸலாஹ்
ஹய்ய அலல் ஃபலாஹ்
கத்காமதிஸ்ஸலாஹ் கத்காமதிஸ்ஸலாஹ்
அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்
லாயிலாஹ இல்லல்லாஹ்
ஐவேளைத் தொழுகையின் நேரங்கள்
இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான ஐவேளைத் தொழுகையை அதற்கென குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவது கடமையாகும்.
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
அல்குர்ஆன் 4:103
சுப்ஹுத் தொழுகையின் நேரம்
சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை உண்டு. ‘சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் முதல் சூரியன் உதிக்கும் வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1075
லுஹர் தொழுகையின் நேரம்
லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சியை விட்டு மேற்கு நோக்கிச் சாய்ந்ததிலிருந்து ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போன்ற அளவு வரும் வரை உண்டு.
‘லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகும் வரை, அதாவது அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1075
அஸ்ர் தொழுகையின் நேரம்
அஸ்ர் தொழுகையின் நேரம் ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போல ஒரு அளவு வந்ததிலிருந்து சூரியன் மறையத் துவங்கும் வரை உண்டு.
(ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரம் அதன் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்) இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கஅபாவில் இமாமத் செய்தார்கள். (முதல் தடவை) இமாமத் செய்யும் போது… ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வந்த போது அஸ்ரை தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 138
‘அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1076
மக்ரிப் தொழுகையின் நேரம்
மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் முழுமையாக மறைந்ததிலிருந்து மேற்கே செம்மை மறையும் வரை உண்டு.
‘மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மை மறையும் வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1076
இஷாத் தொழுகையின் நேரம்
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகை நேரங்கள் பற்றி வினவினார். (அவரிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘நம்முடன் தொழுகையில் கலந்து கொள்வீராக!’ என்று கூறினார்கள். இதையடுத்து நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம்… செம்மை மறைந்ததும் இஷாத் தொழுகைக்காகக் கட்டளையிட்டார்கள். மறு நாள் பிலால் (ரலி) அவர்களிடம் … இரவின் மூன்றில் ஒரு பகுதி கடந்த பின் இஷாத் தொழுகைக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர், ‘கேள்வி கேட்டவர் எங்கே? இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நேரமே தொழுகையின் நேரமாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1079
‘இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1074
இஷாத் தொழுகையின் ஆரம்ப நேரத்தில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. ஃபஜ்ரு வரை இஷாவின் நேரம் நீடிக்கிறதா?இரவின் பாதி வரை நீடிக்கிறதா? அல்லது இரவின் மூன்றில் ஒரு பங்கு வரை நீடிக்கிறதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
‘இரவில் பாதி வரை இஷா நீடிக்கிறது’ என்பதற்கும், ‘இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை இஷா நீடிக்கிறது’ என்பதற்கும் நேரடியான ஆதாரங்களை மேலே குறிப்பிட்டுள்ளோம்.
ஆனால் சுப்ஹ் வரை நீடிக்கிறது என்ற கருத்தில் நேரடியாக எந்த ஹதீஸும் இல்லை.
‘தூக்கத்தில் வரம்பு மீறுதல் இல்லை; மறு தொழுகை நேரம் வரும் வரை தொழாமல் இருப்பவர் மீது தான் வரம்பு மீறுதல் எனும் குற்றம் உள்ளது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1099
இஷாவின் நேரம் சுப்ஹ் வரை நீடிக்கின்றது என்ற கருத்துடையவர்கள் கீழ்க்கண்டவாறு தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.
மறு தொழுகை நேரம் வரை ஒரு தொழுகையின் நேரம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். இதில் சுப்ஹ் மட்டும் தான் விதி விலக்கு பெற்றுள்ளது.
‘யார் சூரியன் உதிப்பதற்கு முன் சுப்ஹுத் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்து கொள்கிறாரோ அவர் சுப்ஹுத் தொழுகையை அடைந்து விட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ 579, 556
என்று மேற்கண்ட ஹதீஸில் விதிவிலக்கு உள்ளது. எனவே சுப்ஹுத் தொழுகையின் இறுதி நேரம் லுஹர் வரை நீடிக்கும் என்று கருத முடியாது. ஆனால் மற்ற நான்கு தொழுகையின் நேரங்களும் அதற்கடுத்த தொழுகையின் நேரம் வரை நீடிக்கிறது. சுப்ஹுத் தொழுகையை சூரியன் உதிப்பதற்கு முன் தொழுது விட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இஷா தொழுகையின் நேரம் சுப்ஹ் வரை நீடிக்கிறது என்ற கருத்துடையவர்கள் இவ்வாறு தங்கள் வாதத்தை நிலை நிறுத்துகின்றனர்.
ஆனால் இந்த வாதம் ஏற்கத்தக்கதாக இல்லை. ஏனெனில் சுப்ஹுத் தொழுகையின் இறுதி நேரத்தைப் போலவே இஷாவுடைய கடைசி நேரத்திற்கும் வரையறை உள்ளது என்பதை மேற்கண்ட முஸ்லிம் 1074 ஹதீஸிலிருந்து அறியலாம்.
எனவே இஷா தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை என்பது தான் சரியானதாகும். சுப்ஹ் வரை நீடிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நம்மால் காண முடியவில்லை.
சூரியன் 6 மணிக்கு மறைகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது முதல் இரவு ஆரம்பமாகி விடுகிறது. சுப்ஹ்5 மணிக்கு வருகிறது என்றால் காலை நேரம் வந்து விட்டது என்று பொருள். இதில் இரவின் பாதி என்பது இரவு 11.30மணியாகும். இது போல் சூரிய அஸ்தமனம் மற்றும் சுப்ஹ் நேரம் ஆகியவற்றைக் கொண்டு இரவின் பாதியைக் கணக்கிட்டு அதற்குள் இஷாவைத் தொழுது விட வேண்டும் என்பதே சரியானதாக கருத்தாகத் தோன்றுகிறது.
சுத்ரா – தடுப்பு
இமாமும், தனியாகத் தொழுபவரும் தமக்கு முன் தடுப்பு வைத்துக் கொள்வது அவசியமாகும்.
‘சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தவிர நீங்கள் தொழாதீர்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! அவருடன் ஷைத்தான் இருக்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: இப்னுஹுஸைமா 800, இப்னுஹிப்பான்2362, ஹாகிம் 921, பைஹகீ 3261
தடுப்பாக ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொள்ளலாம். இன்ன பொருள் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. தூணோ அல்லது சுவரோ இருந்தால் அதைத் தடுப்பாக்கிக் கொண்டு தொழலாம். தடுப்பாக வைத்துள்ள பொருளுக்கு நெருக்கமாக இருந்து தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கும் சுவற்றுக்குமிடையே ஒரு ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்கள்: புகாரீ 496, முஸ்லிம் 786
… பிலால் (ரலி) அவர்கள் ஒரு கைத்தடியை எடுத்து நாட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து ஆயத்தமாகி அந்தக் கைத்தடியை(த் தடுப்பாக) வைத்து இரண்டு ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவித்தார்கள். அந்தக் கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் ஆடு, மாடுகளும் குறுக்கே செல்வதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி)
நூல்கள்: புகாரீ 376, முஸ்லிம் 778
‘நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைக் குறுக்கே நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள்’ என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள். ‘ஒட்டகம் மிரண்டு ஓடி விட்டால்?’ என்று கேட்டேன். ‘ஒட்டகத்தின் மீது அமைக்கப்படும் சாய்மானத்தை எடுத்து அதைத் தமக்கு நேராக வைத்துக் கொண்டு அதை நோக்கித் தொழுவார்கள்’ என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிவு
நூல்: புகாரீ 507
தடுப்பு வைத்துக் கொண்டு தொழுபவருக்கு குறுக்கே செல்வது குற்றமாகும்.
‘தொழுபவருக்குக் குறுக்கே சொல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது (நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள்) நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தேன்றும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஜுஹைம் (ரலி))
நூல்கள்: புகாரீ 510, முஸ்லிம் 785
தொழும் முறை கஅபாவை முன்னோக்குதல்
தொழுபவர் எந்தத் திசையை நோக்கியும் தொழக் கூடாது. மக்கா நகரில் உள்ள கஅபா என்ற ஆலயம் இருக்கும் திசை நோக்கித் தான் தொழ வேண்டும். கஅபா ஆலயம் தமிழகத்தின் வடமேற்குத் திசையில் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க பல நவீன சாதனங்களும் உள்ளன.
(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தைநோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! ‘இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை’ என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.
அல்குர்ஆன் 2:144
…நீ தொழுகைக்குத் தயாரானால் (முதலில்) முழுமையாக உளூச் செய்! பின்னர் கிப்லாவை (கஅபாவை) முன்னோக்கு! பின் தக்பீர் கூறு!.. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி))
நூல்கள்: புகாரீ 6667, முஸ்லிம் 602
திசை தெரியவில்லையானால்…
சில நேரங்களில் கஅபா உள்ள திசை தெரியாமல் போகலாம் அப்போது ஏதாவது ஒரு திசையை நோக்கி நாம் தொழுது கொள்ள வேண்டும். ஏனெனில் எந்த ஒரு மனிதனையும் அவரது சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அல்குர்ஆன் 2:286
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:115
நிய்யத் (எண்ணம்)
முஸ்லிம்கள் எந்த வணக்கத்தைச் செய்வதாக இருந்தாலும் வணக்கம் செய்கின்றோம் என்ற எண்ணத்துடன் தான் செய்ய வேண்டும். இந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.
உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார்; ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றால் இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார்.
எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
‘அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530
நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். குறிப்பிட்ட வார்த்தைகளை அரபு மொழியில் வாயால் மொழிவது தான் நிய்யத் என்று எண்ணுகின்றனர்.
உஸல்லீ ஸலாத்தஸ் ஸுப்ஹி… என்பன போன்ற சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.
நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.
மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை.
ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.
நான் இப்போது தொழப் போகின்றேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.
தக்பீர் தஹ்ரீமா
தொழுகைக்காக கஅபாவை முன்னோக்கிய பின், முதலில் அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். இதற்கு தக்பீர் தஹ்ரீமா (தொழுகைக்கு வெளியே நடைபெறும் காரியங்களைத் தடை செய்வதற்குரிய தக்பீர்) என்று கூறப்படும்.
… நீ தொழுகைக்குத் தயாரானால் (முதலில்) முழுமையாக உளூச் செய்! பின்னர் கிப்லாவை (கஅபாவை) முன்னோக்கு! பின் தக்பீர் கூறு!.. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 6667, முஸ்லிம் 602
இரு கால்களுக்கிடையில் உள்ள இடைவெளி
நிற்கும் போது இரு கால்களுக்கிடையே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவர்களின் செயல் முறைகளிலிருந்தும் அறிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவரவர் இயல்புக்குத் தக்கவாறு அடுத்தவருக்கு இடையூறு இல்லாத வகையில் நடுத்தரமாக நின்று கொள்ள வேண்டும்.
இரு கைகளை உயர்த்துதல்
அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னர் இரு கைகளையும் தோள் புஜம் வரை அல்லது காதின் கீழ்ப் பகுதி வரை உயர்த்த வேண்டும். அப்போது இரு கைகளையும் மடக்காமல் நீட்டிய வண்ணம் வைத்திருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தமது இரு கைகளையும் இரு தோள் புஜங்கள் வரை உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 735,முஸ்லிம் 586
நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறும் போது தம் இரு கைகளையும் இரு காதுகளின் கீழ்ப்பகுதி வரை உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 589
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது இரு கைகளையும் (மூடாமல்) நீட்டுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: திர்மிதீ 223, அபூதாவூத்643, நஸயீ 873, அஹ்மத் 8520
நெஞ்சின் மீது கை வைத்தல்
கைகளை உயர்த்தி, வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க வேண்டும்.
‘நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும் போது) தமது வலது புறமும், இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன். (தொழுகையில்) இதை நெஞ்சின் மீது வைத்ததை நான் பார்த்தேன்’ என்று ஹுல்புத்தாயீ (ரலி) கூறினார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் இதை என்று சொல்லும் போது, வலது கையை இடது கையின் மணிக்கட்டின் மீது வைத்துக் காட்டினார் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் குறிப்பிடுகின்றார்கள்.
நூல்: அஹ்மத் 20961
தொழும் போது மக்கள் தம் வலக்கையை இடது குடங்கை மீது வைக்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்: புகாரீ 740
நபி (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது முன் கை, இடது மணிக்கட்டு, இடது குடங்கை ஆகியவற்றின் மீது வைத்தார்கள்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்: நஸயீ 879
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்ற போது… தங்களது வலக்கையால் இடக்கையைப் பிடித்திருந்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்: அபூதாவூத் 624
கையைத் தொப்புளுக்குக் கீழ் வைப்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. தொப்புளுக்குக் கீழே கையை வைப்பது நபிவழி என்று அலீ (ரலி) அறிவிப்பதாக அபூதாவூத் (645) உள்ளிட்ட சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து அறிவிப்புக்களும் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல்கூஃபி என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகின்றன. இவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், புகாரீ, அபூஸுர்ஆ, அபூஹாத்தம், அபூதாவூத் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.  எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மேலும் சிலர் நெஞ்சின் இடது புறம் கைகளை வைக்கிறார்கள். இதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது.
பார்வை எங்கு இருக்க வேண்டும்?
தொழும் போது பார்வை வானத்தை நோக்கி இருக்கக் கூடாது. திரும்பியும் பார்க்கக் கூடாது. முன்னால் உள்ளவர்களைப் பார்ப்பது தவறில்லை.
‘தொழும் போது தங்கள் பார்வைகளை வானத்தின் பக்கம் உயர்த்துவோருக்கு என்ன நேர்ந்து விட்டது? இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்; இல்லை எனில் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டு விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 750, முஸ்லிம் 649
தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். ‘ஒரு அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 751
‘நபி (ஸல்) அவர்கள் லுஹரிலும், அஸரிலும் ஓதுவார்களா?’ என்று கப்பாப் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள் ஆம் என்றார்கள். ‘நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். ‘நபி (ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்’ என்று கப்பாப் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூமஃமர்
நூல்: புகாரீ 746
தொழுகையின் ஆரம்ப துஆ
கைகளை நெஞ்சில் கட்டிய பின்னர் பின் வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றை ஓத வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள்.’இறைத்தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும், கிராஅத்துக்கும் (குர்ஆன் ஓதுதலுக்கும்) இடையே தாங்கள் என்ன ஓதுகிறீர்கள்?’ என நான் கேட்டேன். அதற்கு,
‘அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்
என்று ஓதுவேன்’ என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
பொருள்: இறைவா! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும்,  ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 744
நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு பின்வரும் துஆவை ஓதி விட்டு கிராஅத் ஓதுவார்கள்.
வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவா(த்)தி வல்அர்ள ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரி(க்)கீன். இன்ன ஸலா(த்)தீ வநுசு(க்)கீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீ(க்)கலஹு வபிதாலி(க்)க உமிர்(த்)து வஅன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்(த்)தல் மலி(க்)கு லாயிலாஹ இல்லா அன்(த்)த, வஅன அப்து(க்)க ளலம்(த்)து நஃப்ஸீ, வஃதரஃப்(த்)து பிதன்பீ ஃபஃக்பிர்லீ துனூபி ஜமீஆ, லாயஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லா(க்)கி லா யஹ்தீ லிஅஹ்ஸனிஹா இல்லா அன்(த்)த, வஸ்ரிஃப் அன்னீ ஸய்யிஅஹா,லாயஸ்ரிஃபு அன்னீ ஸய்யிஅஹா இல்லா அன்(த்)த, லப்பை(க்)க வஸஃதை(க்)க வல்கைரு குல்லுஹு ஃபீயதை(க்)க வஷ்ஷர்ரு லைஸ இலை(க்)க அன பி(க்)க வஇலை(க்)க தபாரக்(த்)த வ(த்)தஆலை(த்)த அஸ்தஃபிரு(க்)க, வஅ(த்)தூபு இலை(க்)க
பொருள்: இணை வைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமல் கட்டுப்பட்டவனாக, வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்புகிறேன். என் தொழுகையும், என் இதர வணக்கங்களும், என் வாழ்வும்,என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன். இறைவனே! நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நான் உனது அடிமை. எனக்கே நான் அநீதி இழைத்து விட்டேன். என் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டேன். எனவே என் குற்றங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் குற்றங்களை மன்னிக்க முடியாது. நற்குணத்தின் பால் எனக்கு வழி காட்டுவாயாக! உன்னைத் தவிர யாரும் வழி காட்ட முடியாது. தீய குணங்களை விட்டும் என்னைக் காப்பாயாக! உன்னைத் தவிர யாரும் தீய குணங்களை விட்டும் காக்க முடியாது. இதோ உன்னிடம் வந்து விட்டேன். அனைத்து நன்மைகளும் உன் கைகளிலே உள்ளன. தீமைகள் உன்னைச் சேராது. நான் உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே சரணடைந்தேன். நீ பாக்கியம் மிக்கவன். உயர்ந்தவன். உன்னிடம் பாவமன்னிப்பு தேடுகின்றேன். உன்னை நோக்கி மீள்கின்றேன்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: நஸயீ 887
இந்த ஹதீஸ் முஸ்லிம் 1290லும் இடம் பெற்றுள்ளது.
ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க தபாரகஸ்முக்க வதஆலா ஜத்துக்க வலாயிலாஹ கைருக.. என்ற ஸனாவை சிலர் தொழுகையின் ஆரம்ப துஆவாக ஓதி வருகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் இதை ஓதினார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்மான ஹதீஸ்கள் எதுவும் இல்லை.
சூரத்துல் பாத்திஹா ஓதுதல்
தொழுகையின் முதல் துஆ ஓதிய பின்னர் சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும்.
‘சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: உபாதா (ரலி)
நூல்கள்: புகாரீ 756, முஸ்லிம் 595
சூரத்துல் ஃபாத்திஹாவின் வசனங்கள்:
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம். மாலி(க்)கி யவ்மித்தீன். இய்யா(க்)க நஅபுது வஇய்யா(க்)க நஸ்(த்)தயீன். இஹ்தினஸ் ஸிரா(த்)தல் முஸ்த(க்)கீம். ஸிரா(த்)தல்லதீன அன்அம்(த்)த அலைஹிம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்
பொருள்:
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… எல்லாப் புகழும் அகிலம் அனைத்தையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே! அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்பாளன். தீர்ப்பு நாளின் அதிபதி. இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். நீ எவர்களுக்கு பாக்கியம் புரிந்தாயோ அவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக! உன் கோபத்துக்கு ஆளானவர்களின் வழியுமல்ல; நெறி கெட்டவர்களின் வழியுமல்ல.
பிஸ்மில்லாஹ் ஓத வேண்டுமா
ஒவ்வொரு ரக்அத்திலும் சூராக்களை ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என சப்தமிட்டோ,மெதுவாகவோ கூற வேண்டும்.
‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பது சூரத்துல் ஃபாத்திஹாவின் ஒரு வசனம் என்பதால் அதையும் ஓத வேண்டும்.
‘நபி (ஸல்) அவர்களின் கிராஅத் (குர்ஆன் ஓதுதல்) எவ்வாறு இருந்தது?’ என அனஸ் (ரலி)யிடம் விசாரிக்கப்பட்ட போது’அவர்கள் நீட்டி நிறுத்தி ஓதினார்கள்’ என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் ரஹ்மான் ரஹீம் என்ற வார்த்தைகளை நீட்டி ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: கதாதா,
நூல்: புகாரீ 5046
‘நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்றே தொழுகையைத் துவங்குவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 743, முஸ்லிம் 229
நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வைச் சப்தமின்றி ஓதினார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாகும். சப்தமிட்டு பிஸ்மில்லாஹ் ஓதுவதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதேன். அவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஓதி விட்டுப் பிறகு அல்ஹம்து சூராவை ஓதினார்கள்…. ‘அல்லாஹ்வின் மீதாணையாக நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டியது போல் நான் உங்களுக்குத் தொழுது காட்டினேன்’ என்று அபூஹுரைரா (ரலி) குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: நுஐம் அல்முஜ்மிர்
நூல்: ஹாகிம் 1/357
பின்பற்றித் தொழுபவர் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டுமா?
இமாமைப் பின்பற்றித் தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாம் ஓதுவதைக் கேட்க வேண்டும். வேறு எதையும் ஓதக் கூடாது.
குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!
அல்குர்ஆன்7:204
நாங்கள் தொழுகையில், இன்னார் மீது ஸலாம், இன்னார் மீது ஸலாம் என்று கூறிக் கொண்டிருந்தோம். அப்போது தான் ‘குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!’ என்ற7:204 குர்ஆன் வசனம் வந்தது.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: தப்ஸீர் தப்ரீ, பாகம்: 9, பக்கம்: 162
‘இமாம் ஓதும் போது நீங்கள் மவுனமாக இருங்கள்!’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 612
ஆமீன் கூறுதல்
சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்ததும் ‘ஆமீன்’ கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும், பின் நின்று தொழுபவரும் ஆமீன் கூற வேண்டும்.
‘இமாம் ‘கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்’ எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன், மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 782
இந்த ஹதீஸில் கூறப்படும் கூலூ (நீங்கள் சொல்லுங்கள்) என்ற அரபி வாசகம், மெதுவாகச் சொல்வதையும் சப்தமிட்டுச் சொல்வதையும் எடுத்துக் கொள்ளும். இந்த வாசகத்திற்கு நபித்தோழர்கள் சப்தமிட்டுக் கூறுதல் என்று புரிந்துள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது. எனவே ஆமீன் என்பதைச் சப்தமிட்டும் சொல்லலாம். விரும்பினால் சப்தமில்லாமலும் சொல்லலாம்.
‘இந்தப் பள்ளிவாசலில் 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். இமாம் ‘கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்’எனக் கூறும் போது அந்த நபித் தோழர்களிடமிருந்து ‘ஆமீன்’ என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அதா
நூல்: பைஹகீ
துணை சூராக்கள்
சூரத்துல் பாத்திஹா ஓதிய பின்னர் குர்ஆனில் நமக்குத் தெரிந்த முழு அத்தியாயத்தையோ, அல்லது சில வசனங்களையோ ஓத வேண்டும்.
முதல் இரண்டு ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹாவும், துணை சூராவும் நபி (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள். பிந்திய ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதியுள்ளார்கள். சில சமயங்களில் துணை சூராவும் சேர்த்து ஓதியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தையும் துணை அத்தியாயங்கள் இரண்டையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்கும் அளவிற்கு ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும், சுப்ஹிலும் செய்வார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்கள்: புகாரீ 776, முஸ்லிம் 686
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் முப்பது வசனங்கள் அளவு ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதுவார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: நஸயீ 472
ஒரு அத்தியாயத்தை எல்லா ரக்அத்களிலும் ஓதுதல்
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் இதா ஸுல்ஸிலத்தில் அர்லு’ என்று தொடங்கும் அத்தியாயத்தை இரண்டு ரக்அத்களிலும் ஓதினார்கள். நூல்: அபூதாவூத் 693
வரிசை மாற்றி ஓதுதல்
துணை அத்தியாயங்களை ஓதும் போது குர்ஆனில் உள்ள வரிசைப்படி ஓத வேண்டும் என்பது அவசியமில்லை. வரிசை மாற்றியும் ஓதலாம். உதாரணமாக 114 வது அத்தியாயமாக உள்ள நாஸ் அத்தியாயத்தை ஓதிவிட்டு 113 வது அத்தியாயமாக உள்ள ஃபலக் என்ற அத்தியாயத்தை ஓதலாம்.
ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது முதலில் (இரண்டாவது அத்தியாயமான) ஸூரத்துல் பகராவை ஓத ஆரம்பித்தார்கள். பின்னர் (நான்காவது அத்தியாயமான) ஸூரத்துந் நிஸாவை ஓத ஆரம்பித்தார்கள். பின்னர் (மூன்றாவது அத்தியாயமான) ஸூரத்து ஆலஇம்ரானை ஓத ஆரம்பித்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: முஸ்லிம் 1291
ஒரு அத்தியாயத்தைப் பிரித்து ஓதுதல்
துணை சூரா ஓதும் போது ஒரு அத்தியாயத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்து ஓதுவதும் கூடும்.
நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் ஸூரத்துல் அஃராஃப் அத்தியாயத்தை இரண்டு ரக்அத்துகளில் பிரித்து ஓதினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 981
ருகூவு செய்தல்
நிலையில் சூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி முடித்தவுடன் அல்லாஹு அக்பர் என்று கூறி இரு கைகளையும் காதின் கீழ்ப் பகுதி வரை அல்லது தோள் புஜம் வரை உயர்த்தி ருகூவு செய்ய வேண்டும்.
ருகூவு என்பது குனிந்து இரு கைகளையும் மூட்டின் மீது வைப்பதாகும். அப்போது இரு கைகளும் விலாப்புறத்தில் படாதவாறு நேராக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தலையையும், முதுகையும் சமமாக வைக்க வேண்டும். தலையைத் தாழ்த்தியோ, உயர்த்தியோ இருக்கக் கூடாது.
‘நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவிற்கு தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தமது கைகளை தோள்புஜம் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரீ 735
நபி (ஸல்) அவர்கள் தக்பீர் சொல்லும் போதும், ருகூவு செய்யும் போதும், தம் இரு கைகளையும் தமது காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 589
அபூஹுமைத் (ரலி), அபூஉஸைத் (ரலி), ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) ஆகியோர் ஒன்று கூடி நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அபூஹுமைத் (ரலி) அவர்கள், ‘நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி உங்களை விட நான் நன்கு அறிந்தவன். நபி (ஸல்) அவர்கள் ருகூவு செய்யும் போது தமது இரு கைகளாலும் இரண்டு மூட்டுக் கால்களையும் பிடித்துக் கொள்வது போல் வைத்தார்கள். மேலும் தமது இரு கைகளையும் (வளைவு இன்றி) நேராக ஆக்கினார்கள். மேலும் இரு கைகளையும் விலாப்புறத்தை விட்டும் விலக்கி வைத்தார்கள்’ என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்பாஸ் பின் ஸஹ்ல்,
நூல்கள்: திர்மிதீ 241, அபூதாவூத் 628
நபி (ஸல்) அவர்கள் ருகூவு செய்யும் போது தலையை உயர்த்தவும் மாட்டார்கள்; ஒரேயடியாகத் தாழ்த்தவும் மாட்டார்கள்; இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வைப்பார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 768
‘ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி)
நூல்கள்: திர்மிதீ 245, நஸயீ 1017, அபூதாவூத் 729, இப்னுமாஜா 860, தாரமீ 1293
‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ‘அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?’ என நபித்தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவையும், சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: அஹ்மத் 11106
ருகூவில் ஓதவேண்டியவை
பின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ, அல்லது ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக்கூடாது.
சுப்ஹான ரப்பியல் அழீம் (மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) என்று மூன்று தடவை கூற வேண்டும்.
நூல்: நஸயீ 1121
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு)
நூல்கள்: புகாரீ 794, முஸ்லிம் 746
ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயி(க்)க(த்)தி வர்ரூஹ் (ஜிப்ரீல் மற்றும் வானவர்களின் இறைவன் பரிசுத்தமானவன்; தூய்மையானவன்)
நூல்: முஸ்லிம் 752
ருகூவு செய்யும் போதும், ஸஜ்தாச் செய்யும் போதும் குர்ஆன் வசனங்களை ஓதுவதை விட்டும் என்னை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 740
ருகூவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பிய அளவு கூடுதலாக எவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்த துஆக்களை அதிகமாகவே ஓதியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும்,  ஸஜ்தாவிலும்  ‘ஸுப்ஹான(க்) கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி’ என்று அதிகமதிகம் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 817, முஸ்லிம் 746
ருகூவிலிருந்து எழும் போது
ருகூவிலிருந்து எழும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா (புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை அல்லாஹ் கேட்கிறான்) என்று கூறி இரு கைகளையும் தோள்புஜம் அல்லது காது வரை உயர்த்தி, பின்னர் கைகளைக் கீழே விட்ட நிலையில் ரப்பனா லக்கல் ஹம்து என்று கூற வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். ருகூவு செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும் போது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ‘ரப்பனா லக்கல் ஹம்து’ என்பார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 789
‘நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவிற்கு தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தமது கைகளை தோள்புஜம் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரீ 735
நபி (ஸல்) அவர்கள் தக்பீர் சொல்லும் போதும், ருகூவு செய்யும் போதும், தம் இரு கைகளையும் தமது காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தி ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறும் போதும் அதைப் போன்றே கைகளை உயர்த்துவார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 589
ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறிய பிறகு பின்வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றைக் கூறலாம்.
ரப்பனா ல(க்)கல் ஹம்து
நூல்: புகாரீ 789
ரப்பனா வல(க்)கல் ஹம்து
நூல்: புகாரீ 732
அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து
நூல்: புகாரீ 796
அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து
(பொருள்: எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்!)
நூல்: புகாரீ 7346
ரப்பனா ல(க்)கல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபார(க்)கன் ஃபீஹீ (இறைவா! தூய்மையான அருள் நிறைந்த ஏராளமான புகழ் அனைத்தும் உனக்கே உரியது!)
நூல்: புகாரீ 799
ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று இமாம் கூறும் போது பின்பற்றித் தொழுபவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறத் தேவையில்லை. மேற்கூறப்பட்ட வாசகங்களில் ஏதாவது ஒன்றைக் கூறினால் போதுமானது. ஏனெனில் ‘இமாம், ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறும் போது நீங்கள் ரப்பனா ல(க்)கல் ஹம்து’ என்று கூறுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ 722
மறு ஆய்வு
ருகூவிற்கு பிறகு என்ன கூறவேண்டும்?
தொழுகையில் ருகூஹ்வில் இருந்து எழுந்த பிறகு “ரப்பனா லகல்ஹம்து ஹம்தன் கசீரன் தையிபன் முபாரக்கன் பீஹி”என்று கூறுவது தேவையற்றது என்றும் மேலும் “ரப்பனா லகல் ஹம்து” அல்லது “ரப்பனா வ லகல் ஹம்து” அல்லது “அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து” அல்லது “அல்லாஹும்ம ரப்பன வ லகல் ஹம்து” என்று கூறுவதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டி தந்த வழி என்று தாங்கள் கூறுகிறீர்கள் [break]. அதற்கு சாட்சியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல் என்பது தனி அந்தஸ்து உடையது என்றும் நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் தனி அந்தஸ்து உடையது என்றும் எனவே ரசூல் (ஸல்) அவர்களின் அங்கீகாரத்தை விட சொல் செயலே பிரதானமானது என்றும் வாதம் வைக்கின்றீர்கள்.
என்றால் ஒட்டகம் குர்பானி கொடுப்பதில் நபி (ஸல்) அவர்கள் சொல்லியது, செய்தது எல்லாம் ஏழு நபர்களுக்கான அனுமதிதானே. பத்து நபர்கள் என்பது அங்கீகாரம் தானே,ஆனால் த.த.ஜ. சார்பில் சமீப காலமாக தாங்கள் ஒட்டக குர்பானியில் பத்து நபர்களை வலியுறுத்தி வருவது எவ்வாறு?
தொழுகையில் ஒரு கருத்தையும் குர்பானியில் ஒரு கருத்தையும் கொண்டிருப்பது தாங்கள் கூறிய நபி(ஸல்) அவர்களின் சொல்,செயல்,அங்கீகாரம் சம்பந்தமான வியாகியானதிற்கு தாங்களே முரண்பட்டதாக ஆகாதா?
தயவு செய்து விரிவான விளக்கம் தரவும்.
குறிப்பு : தொழுகையில் “ரப்பனா …… ஹம்தன் கசீரன் …..பீஹி” என்று கூறுவதை எங்களுக்கு கூறியவரே நீங்கள் தானே.இப்போது அதனை தாங்களே குறை கூறுவது சரிதானா?
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்,செயல் என்பது பெரிய அந்தஸ்து உடையது செயல் என்பது சிறிய அந்தஸ்து உடையது என்று இருக்குமானால் அதை அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் தானே கூற வேண்டும். நகம் வெட்டுவதை கூட தம் சமூகத்தாருக்கு உரைத்து சென்ற அருமை நபிகள் (ஸல்) இதனை சொல்லாமல் விட்டு சென்றார்கள் என்பது உங்கள் கூற்றா?
பதில் :
உங்கள் கேள்விக்கு விடை அளிப்பதற்கு முன் அடிப்படையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறோம். ரப்பனா லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி என்பதை ஓத வேண்டும் என்று சொல்லித் தந்ததே நீங்கள் தான் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இத்தகைய கேள்வி இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதாகும். இப்படி கேட்பதற்கு நாம் அஞ்ச வேண்டும். நாங்கள் முதலில் சொன்ன ஒரு கருத்து தவறு என்று தெரிய வரும் போது நாங்கள் எப்படி நடக்க வேண்டும்? நாம் முன்னர் சொன்னதற்கு மாற்றமாகச் சொன்னால் நமது மதிப்பு குறையும் அல்லது இதை நடைமுறைப்படுத்தியவர்களின் அதிருப்தி ஏற்படும் என்று அஞ்சி உண்மையை மறைக்க வேண்டுமா? அல்லது அல்லாஹ்வுக்கு அஞ்சி உண்மையைச் சொல்ல வேண்டுமா? உங்களிடம் உள்ள இதே மனப்பானமை அதிகமான முஸ்லிம்கலீடம் உள்ளதால் தான் எத்தனையோ உலமாக்கள் காலம் கடந்து அறிந்து கொண்ட உண்மைகளைச் சொல்லத் தயக்கம் காட்டுகின்றனர்.
முன்பு சொன்னதற்கு மாற்றமாகச் சொல்லலாமா என்று சிந்திப்பதை விட்டு விட்டு முன்பு சொன்னது ஏற்கத்தக்கதாக உள்ளதா? இப்போது சொல்வது ஏற்கத் தக்கதாக உள்ளதா என்று சிந்திப்பது தான் சரியான் பார்வை. மனிதன் தவறு செய்பவன் என்பதன் கருத்தும் இது தான். முன்பு சொன்னதை நாங்கள் டமாற்றிக் கொள்ளக் கூடாது என்றால் தவறுக்கு அப்பாற்பட்டவர்களாக எங்களை நீங்கள் கருதுகிறீர்கள் என்பது தான் பொருள். இப்படி யாரைப்பற்றியும் கருத வேண்டாம். தக்க காரணத்துடன் மாற்றப்படுகிறதா அல்லது காரணம் இல்லாமல் மாற்றப்படுகிறதா? இரண்டு கருத்தில் எது சரியான் அபார்வையில் அமைந்துள்ளது என்பதை மட்டும் பாருங்கள்.
தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி என்று கூறுவது நபிவழி என்ற கருத்துக்கு பின்வரும் ஹதீஸ் அடிப்படையாக உள்ளது.
799 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلَّادٍ الزُّرَقِيِّ عَنْ أَبِيهِ عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنْ الرَّكْعَةِ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ فَلَمَّا انْصَرَفَ قَالَ مَنْ الْمُتَكَلِّمُ قَالَ أَنَا قَالَ رَأَيْتُ بِضْعَةً وَثَلَاثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ رواه البخاري
ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்)தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து  தலையை உயர்த்தியபோது “சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் “ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ” எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. (பகட்டோ பெருமையோ கலவாமல்) தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன் என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், “(இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான்தான்” என்றார். “முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் “இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்’ என (த் தமக்கிடையே) போட்டியிட்டுக்கொள்வதை நான் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேற்கண்ட இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையில் ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்து விட்டார்கள் என்றும் நாமும் ருகூவிற்குப் பிறகு அவ்வாறு கூறலாம் என்றும் நமக்குத் தோன்றுகிறது.
ஆனால் இதே சம்பவம் அனஸ் (ரலி) அவர்கள் வழியாக முஸ்லிமில் இடம் பெறுகிறது. இந்த அறிவிப்பில் அந்த மனிதர் இந்த வாசகத்தை எதற்காகச் சொன்னார்? எந்த சூழ்நிலையில் சொன்னார்? என்ற கூடுதல் விபரம் இடம்பெற்றுள்ளது.
942 و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادٌ أَخْبَرَنَا قَتَادَةُ وَثَابِتٌ وَحُمَيْدٌ عَنْ أَنَسٍ أَنَّ رَجُلًا جَاءَ فَدَخَلَ الصَّفَّ وَقَدْ حَفَزَهُ النَّفَسُ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ أَيُّكُمْ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ فَأَرَمَّ الْقَوْمُ فَقَالَ أَيُّكُمْ الْمُتَكَلِّمُ بِهَا فَإِنَّهُ لَمْ يَقُلْ بَأْسًا فَقَالَ رَجُلٌ جِئْتُ وَقَدْ حَفَزَنِي النَّفَسُ فَقُلْتُهَا فَقَالَ لَقَدْ رَأَيْتُ اثْنَيْ عَشَرَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَرْفَعُهَا رواه مسلم
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, “அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி’ (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் “உங்களில் இவ் வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), “உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை” என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் “நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்” என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே “இதை எடுத்துச் செல்பவர் யார்’எனும் விஷயத்தில் போட்டியிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்.
முஸ்லிம் (1051)
அந்த மனிதர் ருகூவுக்குப் பின் இதைக் கூற வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லவில்லை. மாறாக ருகூவு கிடைக்குமோ அல்லது தவறி விடுமோ என்று அவர் மூச்சிறைக்க வேகமாக வருகிறார். அவார் வேகமாக வந்ததால் ருகூவு கிடைத்து விடுகிறது. இந்த மகிழ்ச்சியில் அல்லாஹ்வைப் புகழ்வதற்காகத் தான் மேற்கண்ட வாசகத்தைக் கூறினார் என்பது இதில் இருந்து தெரிகிறது.
நமக்கு ஒரு நன்மை கிடைக்கும் போது அதற்கு நன்றி செலுத்துவதற்காக இந்த வாசகத்தைக் கூறுவது மிகச் சிறந்தது என்று தான் இந்த ஹதீஸிலிருந்து சட்டம் எடுக்க வேண்டும்.
ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவது மிகச்சிறந்தது என்று சட்டம் எடுப்பது கூடாது. ஏனென்றால் ருகூவிற்குப் பிறகு இதைக் கூற வேண்டும் என்று அந்த நபித்தோழர் நாடவில்லை.
இந்த வாசகத்தை கூறினால் வானவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இதை அல்லாஹ்விடம் கொண்டு செல்வதாக நபி (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
இந்த வாசகத்தை ருகூவிற்குப் பிறகு சொன்னால் தான் இந்த சிறப்பு கிடைக்குமென்றால் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இப்படிப்பட்ட சிறப்பைப் பெற்றுத் தரும் இந்த வாசகத்தை கூறாமல் இருந்திருக்கமாட்டார்கள்.
மேலும், இனிமேல் எல்லோரும் இன்று முதல் ருகூவிற்குப் பிறகு அவர் சொன்ன அதே வாசகத்தைத் தான் கூறவேண்டும் என்ற கட்டளையும் நபிகளார் பிறப்பிக்கவில்லை.
குறிப்பிட்ட அந்த நபித்தோழராவது ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இந்த வாசகத்தை சொல்லி வந்தார் என்பதற்கும் எந்த சன்றையும் நம்மால் காண முடியவில்லை.
வானவர்கள் எடுத்துச்செல்ல போட்டிபோடுகின்றார்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சிலாகித்த சொன்ன பிறகும் அந்த வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலுமோ, அல்லது எப்போதாவது, ஏதாவது ஒரு தொழுகையின் போதோ கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.
மாறாக, அவர்கள் தனது தொழுகைகளில் ருகூவிற்குப் பிறகு ரப்பனா வலகல் ஹம்து என்று மட்டுமே கூறியதாக பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்ட பிறகு இறைவனைப் புகழுவதற்காக இதே வாசகத்தைக் கூறியுள்ளார்கள்.
5458 حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ثَوْرٍ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ مَائِدَتَهُ قَالَ الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا رواه البخاري
அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தமது உணவு விரிப்பை எடுக்கும்போது “அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா” என்று பிரார்த்திப்பார்கள். பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.
புகாரி (5458)
எனவே நமக்கு ஒரு நன்மை ஏற்பட்டு அதற்காக இறைவனைப் புகழ வேண்டிய நேரங்களில் இந்த வாசகத்தைக் கூறினால் அப்போது இதை வானவர்கள் போட்டி போட்டுக்கொண்டு இறைவனிடம் கொண்டு செல்கிறார்கள் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து. மாறாக தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் இவ்வாறு கூறினால் இந்த சிறப்பு கிடைக்கும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
நபிகள் நாயகத்தின் அங்கீகாரமும் மார்க்க ஆதாரம் தான். அவர்கள் எதை அங்கீகரித்தார்கள் என்பதை நாம் சரியாக விளங்க வேண்டும். ருக்கூவுக்குப் பிறகு ஒவ்வொருவரும் இதைக் கூற வேண்டு என்பதற்காக அங்கீகரிக்கவில்லை.
அப்படியானால் ருகூவு கிடைக்காது என்ற சந்தேகத்துடன் ஓடி வருபவர் ருகூவு கிடைத்து விட்டால் மகிழ்ச்சியடைந்து இந்த துஆவைக் கூறலாமா? இதை மட்டும் பார்க்கும் போது கூறலாம் என்று தோன்றினாலும் வேகமாக ஓடி வருவதைப் பின்னர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்து விட்டார்கள். 635 ـ حدّثنا أبو نُعَيمٍ قال: حدَّثَنا شَيبانُ عن يحيى عن عبدِاللهِ بن أبي قَتادةَ عن أبيهِ قال: «بينما نحنُ نُصلِّي مع النبيِّ صلى الله عليه وسلّم إِذ سَمِعَ جَلَبةَ رجالٍ، فلما صلَّى قال: «ما شأْنُكم؟ قالوا: استَعْجلنا إلى الصلاة: قال: فلا تَفعلوا. إذا أتيتُمُ الصلاةَ فعلَيكم بالسَّكِينةِ، فما أدْرَكتم فصلُّوا، وما فاتَكم فأَتِمُّوا».
635 அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான) சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடிந்ததும், உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சந்தடி எழுந்தது)? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு )ஏற்பட்டது) என்று பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும் போது நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள் என்று கூறினார்கள்.
புஹாரி 635
  636 ـ حدّثنا آدمُ قال: حدَّثَنا ابنُ أَبي ذِئبٍ قال: حدَّثَنا الزُّهريُّ عن سعيدِ بن المسيَّبِ عن أبي هريرةَ عنِ النبيِّ صلى الله عليه وسلّم. وعنِ الزُّهريِّ عن أبي سلمةَ عن أبي هريرةَ عن النبيِّ صلى الله عليه وسلّم قال: «إذا سَمعتُمُ الإِقامةَ فامشوا إلى الصلاةِ وعليكم بالسَّكينةِ والوَقارِ، ولا تُسرِعوا، فما أدرَكتُم فصلُّلوا، وما فاتَكم فأتموا». [الحديث 636 ـ طرفه في: 908].
636 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கூட்டுத் தொழுகைக்காக) இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. புஹாரி 636
அந்த நபித்தோழரைப் போல் வேகமாக ஓடி வந்து ருக்கூவை அடைவதற்கு இனி மேல் அனுமதி இல்லை.
ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டலாமா?
சிலர் ருகூவிலிருந்து எழுந்தவுடன் மீண்டும் கைகளைக் கட்டிக் கொண்டு, பின்னர் ஸஜ்தாச் செய்கின்றனர். சவூதி அரேபியாவில் இருந்த அறிஞர் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள், ‘ருகூவிலிருந்து எழுந்தவுடன் கைகளைக் கட்ட வேண்டும்; இது விடுபட்ட நபி வழி’ என்று கூறினார். இதன் அடிப்படையில் சிலர் ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டி வருகின்றனர். இது நபி வழிக்கு மாற்றமானதாகும். நபி (ஸல்) அவர்களின் கூற்றைக் கவனித்தால் ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டக் கூடாது, கீழே விட வேண்டும் என்பதை அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தும் போது ஒவ்வொரு மூட்டும் அதனதன் இடத்துக்கு வரும் அளவுக்கு நிமிருவார்கள்.
நூல்: புகாரீ 828
நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து எழுந்து எப்படி நிற்பார்கள் என்பதை விளக்கும் நபித் தோழர்கள் ஒவ்வொரு மூட்டும் அதனுடைய இடத்துக்கு வரும் அளவுக்கு நிமிருவார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
ஒவ்வொரு மூட்டும் அதனதன் இடத்துக்கு வரவேண்டுமானால் கைகளைக் கீழே விட்டால் தான் சாத்தியம். கைளைக் கட்டினால் மூட்டுக்கள் அதனதன் இடத்துக்கு வராது. எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கீழே விடுவது தான் நபிவழி என்பதை அறியலாம்.
ஸஜ்தா ருகூவிலிருந்து எழுந்து, ரப்பனா லக்கல் ஹம்து என்று கூறிய பின்னர், அல்லாஹு அக்பர் என்று கூறி ஸஜ்தாச் செய்ய வேண்டும். ஸஜ்தாவில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைப் பார்ப்போம்.
கைகளை முதலில் வைக்க வேண்டும்
ஸஜ்தாவிற்குச் செல்லும் போது முதலில் இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்து, பின்னர் மூட்டுக்களை வைக்க வேண்டும்.
‘உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸயீ 1079
தரையில் பட வேண்டிய உறுப்புகள்
ஸஜ்தாச் செய்யும் போது நெற்றி, மூக்கு, இரு உள்ளங்கைகள், இரு மூட்டுக்கள், இரு பாதங்களின் நுனி விரல்கள் ஆகியவை தரையில் படுமாறு வைக்க வேண்டும்.
கால் விரல்களை வளைத்து கிப்லாத் திசையை முன்னோக்கும் விதமாக வைக்க வேண்டும்.
இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும்.
ஆடையோ, முடியோ தரையில் படாதவாறு தடுக்கக் கூடாது.
ஸஜ்தாவில் இரு கைகளையும் காதுகளுக்கு நேராகவோ, அல்லது தோள் புஜங்களுக்கு நேராகவோ வைக்க வேண்டும்.
இரு கைகளைத் தொடையில் படாமலும் முழங்கை தரையில் படாமலும் உயர்த்தி வைக்க வேண்டும்.
தொடையும் வயிறும் சேராமல் இருக்குமாறு வைக்க வேண்டும்.
‘நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் – நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் – ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 812
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது முன் கைகளைத் தமது காதுகளுக்கு நேராக வைத்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்கள்: நஸயீ 18115,அஹ்மத் 18115, தாரமீ 1323
நபி (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமது தொடைகளின் மீது வயிற்றைத் தாங்கிக் கொள்ளாமலும் தமது இரு தொடைகளையும் விரித்தவர்களாகவும் ஸஜ்தாச் செய்வார்கள்.
அறிவிப்பவர்: பரா (ரலி)
நூல்: நஸயீ 1093
‘நீ ஸஜ்தாச் செய்யும் போது உனது உள்ளங்கைகளை (தரையில்) வைத்து முழங்கைகளை உயர்த்திக் கொள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: பரா (ரலி)
நூல்: முஸ்லிம் 763
…நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது கைளை விரிக்காமலும் மூடிக் கொள்ளாமலும் வைப்பார்கள். தமது கால் விரல்களின் முனைகளைக் கிப்லாவை நோக்கச் செய்வார்கள்…
அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி)
நூல்: புகாரீ 828
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவில் இரு குதிகால்களையும் இணைத்து விரல்களைக் கிப்லாவை முன்னோக்கி வைத்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: இப்னுஹுஸைமா 654, இப்னுஹிப்பான் 1933, ஹாகிம் 832
நாய் விரிப்பதைப் போல் கைகளை வைக்கக் கூடாது
தொடைகளும், வயிறும் ஒட்டாமல் அகற்றி வைக்க வேண்டும். நாய் அமருவது போல் முன்கைகளைத் தரையில் பரப்பி வைப்பதைப் போன்று வைக்கக் கூடாது.
‘ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்; உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 822, முஸ்லிம் 850
ஸஜ்தாவில் ஓத வேண்டியவை
ஸஜ்தாவில் பின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ, அல்லது ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக் கூடாது.
சுப்ஹான ரப்பியல் அஃலா (உயர்வான என் இறைவன் பரிசுத்தமானவன்) என்று மூன்று தடவை கூற வேண்டும்.
புகாரீ817
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு)
நூல்கள்: புகாரீ 794, முஸ்லிம் 746
ஸுப்பூஹுன் குத்தூஸுன் வரப்புல் மலாயிக(த்)தி வர்ரூஹ் (ஜிப்ரீல் மற்றும் வானவர்களின் இறைவன் பரிசுத்தமானவன்; தூய்மையானவன்)
நூல்: முஸ்லிம் 752
ருகூவு செய்யும் போதும், ஸஜ்தாச் செய்யும் போதும் குர்ஆன் வசனங்களை ஓதுவதை விட்டும் என்னை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 740
ஸஜ்தாவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பி அளவு கூடுதலாக எவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும்,  ஸஜ்தாவிலும்  ‘ஸுப்ஹான(க்) கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி’ என்று அதிகமதிகம் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 817, முஸ்லிம் 746
ஸஜ்தாவில் விரும்பிய துஆக்களைக் கேட்கலாம்
ஒருவர் ஸஜ்தாவில் இருக்கும் போது, தான் விரும்பிய துஆவை தாய்மொழியிலேயே கேட்கலாம்.
‘…ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும்’என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 824
இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில்
முதல் ஸஜ்தாச் செய்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து அமர வேண்டும். அதில் பின்வரும் துஆவை ஓத வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே,
‘ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு; இறைவா! என்னை மன்னித்து விடு)’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: நஸயீ 1059
இந்த துஆவை ஓதி முடித்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி மீண்டும் ஸஜ்தாச் செய்ய வேண்டும். முதல் ஸஜ்தாவில் செய்த அனைத்தையும் இரண்டாம் ஸஜ்தாவிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
இரண்டாம் ரக்அத்
முதல் ரக்அத்தை முடித்த பின்னர் மீண்டும் இரண்டாம் ரக்அத்திற்காக எழ வேண்டும். எழும் போது இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அமர்ந்ததைப் போல் அமர்ந்து இரு கைகளையும் தரையில் ஊன்றி நிலைக்கு வர வேண்டும். பின்னர் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்காராமல் நிலைக்கு வர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)
நூல்: புகாரீ 823
முதல் ரக்அத்தில் ஓதிய அனைத்தையும் இரண்டாம் ரக்அத்திலும் ஓத வேண்டும். எனினும் முதல் ரக்அத்தில் ஸூரத்துல் ஃபாத்திஹாவிற்கு முன் ஓதிய ஆரம்ப துஆக்கள் இரண்டாம் ரக்அத்தில் கிடையாது. ‘நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்று ஓதத் துவங்கி விடுவார்கள். மவுனமாக இருக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 941
இரண்டாம் ரத்அத்தில் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓத வேண்டும். அத்துடன் துணை சூராவையும் ஓத வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தையும், துணை அத்தியாயங்கள் இரண்டையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்கும் அளவிற்கு ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும், சுப்ஹிலும் செய்வார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்கள்: புகாரீ 776, முஸ்லிம் 686
பின்னர் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே ருகூவு, ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். அதில் ஓதவேண்டிய துஆக்களையும் ஓத வேண்டும்.
ஸஜ்தாவிலிருந்து எழும் முறை
ஸஜ்தாவிலிருந்து எழும் போது இரு கைகளையும் மாவு குழைப்பதைப் போல் மடக்கி தரையில் ஊன்றி எழ வேண்டும் என சிலர் கூறுகின்றனர். இது தொடர்பாக ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமாதாகும்.
‘நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் எழும் போது மாவு குழைப்பவர் வைப்பதைப் போன்று கைகளைத் தரையில் வைத்து எழுவார்கள்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்ததாக ஒரு செய்தியை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸுல் ஹபீர் என்ற நூலில் குறிப்பிட்டு விட்டுப் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
‘இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல! அறியப்பட்டதும் அல்ல! இதை ஆதாரமாகக் கொள்வது கூடாது’ என்று இப்னுஸ் ஸலாஹ் கூறுகிறார். மேலும் இமாம் நவவீ அவர்கள், ‘இந்தச் செய்தி பலவீனமானதாகும்; அல்லது அடிப்படையே இல்லாத பொய்யான செய்தியாகும்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
நூல்: தல்கீஸுல் ஹபீர் பாகம்: 1, பக்கம்: 260
தரையில் கைகளை எப்படி வைப்பது என்று கூறப்படாததால் நாம் சாதாரணமாக எப்படி எழுவோமோ அதைப் போன்று இரு முன் கைகளின் உட்பகுதியைத் தரையில் ஊன்றி எழ வேண்டும்.
முதல் இருப்பு
இரண்டாவது ரக்அத்தில் இரண்டாம் ஸஜ்தாவை முடித்து, இருப்பில் அமரும் போது அதற்குத் தனியான முறை இருக்கிறது.
கடைசி இருப்பாக இருந்தால் ஒரு விதமாகவும் இருப்பிற்குப் பிறகு தொழுகை தொடர்ந்தால் வேறு விதமாகவும் அமர வேண்டும்.
மூன்று, நான்கு ரக்அத் தொழுகைகளின் போது முதலாம் இருப்பில் இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்து அதன் விரல்களை கஅபாவை நோக்கி மடக்கி வைக்க வேண்டும். பார்க்க படம் போட்டோ
கடைசி இருப்பாக இருந்தால் மண்டியிட்டுத் தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து இடது காலை, வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி, வலது காலை நாட்டி, அதன் விரல்களை கஅபாவை நோக்கி வைக்க வேண்டும். பார்க்க படம்
நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும் போது இடது கால் மீது அமர்ந்து, வலது காலை நாட்டி வைத்துக் கொண்டார்கள். கடைசி இருப்பின் போது இடது காலை வெளிப்படுத்தி, வலது காலை நாட்டி வைத்து, தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூ ஹுமைத் (ரலி)
நூல்: புகாரீ 828
இருப்பின் போது அமரும் முறைகள்
நபி (ஸல்) அவர்கள் இடது கையை இடது தொடையின் மீதும், இடது மூட்டுக் கால் மீதும் வைப்பார்கள். வலது முழங்கையின் மூட்டுப் பகுதியை வலது தொடையின் மீது வைப்பார்கள்.
நூல்: நஸயீ 879
நபி (ஸல்) அவர்கள் இடது கையை இடது மூட்டுக் கால் மீதும், வலது கையை வலது தொடையின் மீதும் வைத்தார்கள்.
நூல் முஸ்லிம்: 909
நபி (ஸல்) அவர்கள் இரு கைகளையும் இரு மூட்டுக் கால்கள் மீதும் வைத்தார்கள்.
நூல்: முஸ்லிம் 911
விரலசைத்தல்
அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டி, அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போது பார்வை ஆட்காட்டி விரலை நோக்கி இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் அமர்வில் உட்கார்ந்தால் தம்முடைய வலது முன்கையை வலது தொடையின் மீது வைத்து, தம் வலக்கையின் விரல்கைள் அனைத்தையும் மடக்கிக் கொண்டு, பெருவிரலை ஒட்டியுள்ள சுட்டு விரலால் சைகை செய்வார்கள். இடது முன்கையை இடது தொடையில் வைப்பார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1018
‘…நபி (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது விரல்களில் இரண்டை மடக்கிக் கொண்டு (நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்து, ஆட்காட்டி விரலை உயர்த்தி அதன் மூலம் (யாரையோ) அழைப்பது போல் அவர்கள் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்: நஸயீ 879
இச்செய்தி தாரமீ 1323, அஹ்மத் 18115, இப்னு ஹுஸைமா பாகம் 1; பக்கம் 354, இப்னு ஹிப்பான் பாகம் 5; பக்கம் 170,தப்ரானீ கபீர் பாகம் 22; பக்கம் 35, பைஹகீ பாகம் 1; பக்கம் 310, ஸுனனுல் குப்ரா இமாம் நஸயீ பாகம் 1; பக்கம் 376,அல்முன்தகா இப்னுல் ஜாரூத் பாகம் 1; பக்கம் 62 ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
விமர்சனமும் விளக்கமும்
விரலசைத்தல் சம்பந்தப்பட்ட ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஆஸிம் பின் குலைப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி இப்னுல் மதீனீ என்பவர் ‘இவர் தனித்து அறிவித்தால் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது’ என்று விமர்சனம் செய்துள்ளார். இதை அடிப்படையாக வைத்து சிலர் விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் பலவீனமானது’ என்று கூறுகின்றனர். இது தவறாகும்.
ஒரு அறிவிப்பாளரைப் பற்றிக் குறை சொல்லப்பட்டால் அந்தக் குறை என்ன என்று தெளிவாகக் கூறப்பட வேண்டும். அவ்வாறு கூறப்பட்டால் மட்டுமே அதைப் பரிசீலனை செய்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஒருவரைப் பற்றி நல்லவர், சிறந்தவர், நம்பகமானவர் என்று பலர் கூறியிருக்கும் போது, குறை சொல்பவர் அவரின் குறையைத் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் அவரின் விமர்சனம் நிராகரிக்கப்படும்.
இதைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் போது ஆஸிம் பின் குலைப் என்பவரை இப்னுல் மதீனீ என்பவரைத் தவிர அனைவரும் பாரட்டியுள்ளனர், நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இவரைப் பற்றி விமர்சனம் செய்யும் இப்னுல் மதீனீ அவர்கள் ‘அவர் தனித்து அறிவித்தால் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது’ என்று சொல்கிறார்கள். ஆனால் அதற்குரிய சான்றைச் சமர்ப்பிக்கவில்லை. எனவே இப்னுல் மதீனீ அவர்களின் விமர்சனம் ஏற்றுக் கொள்வதற்குரிய தகுதியை இழந்து விடுகிறது.
விரலசைத்தல் தொடர்பான செய்தி ஷாத் வகையைச் சார்ந்தது என்று காரணம் சொல்லி சிலர் மறுக்கின்றனர்.
மிக நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக, அதை விடக் குறைந்த அளவு நம்பகமான அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தியும், பல நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக, குறைவான எண்ணிக்கையிலுள்ள அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்தியும் ஹதீஸ் கலையில் ஷாத் எனப்படும்.
விரலசைத்தல் தொடர்பான செய்தியின் அறிவிப்பாளர்களை விட இஷாரா செய்தார்கள்’ என்று அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் மிக அதிகமாக உள்ளனர். எனவே விரலசைத்தல் தொடர்பான செய்தி ஷாத் என்ற மறுக்கப்பட வேண்டிய செய்தியாகிறது என்று கூறுகின்றனர்.
இந்த விமர்சனமும் தவறாகும்.
இஷரா செய்தார்கள் என்ற செய்தியும், அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்று அவர்கள் எண்ணுவதால் வந்த கோளாறாகும்.
இஷாரா என்ற வார்த்தைக்கு, சைகை செய்தல் என்பது பொருள். அதாவது வார்த்தையைப் பயன்படுத்தாமல் ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்கு இஷாரா எனப்படும்.
சில நேரங்களில் அசைவுகள் மூலமாகவும் இஷாரா அமைந்திருக்கும். அசைவுகள் இல்லாமலும் இஷாரா அமையலாம்.
பள்ளிவாசல் எங்கே இருக்கிறது? என்று ஒருவரிடம் கேட்கும் போது, பள்ளிவாசல் இருக்கும் திசையை நோக்கி அவர் விரலை நீட்டுவார். எவ்வித அசைவும் இல்லாமல் விரலை நீட்டியவாறு பள்ளிவாசல் இருக்கும் திசையைத் தெரியப்படுத்துகின்றார். இது அசைவு இல்லாத இஷாராவாகும்.
ஒருவரை எச்சரிக்கும் போது, தொலைத்து விடுவேன் என்பது போல் ஆட்காட்டி விரலை பல முறை திரும்பத் திரும்ப ஆட்டி எச்சரிப்பார்கள். இது அசைவுடன் கூடிய இஷாராவாகும்.
‘நபி (ஸல்) அவர்கள் இஷாராச் செய்தார்கள்’ என்ற ஹதீஸ் ‘விரலசைத்தார்கள்’ என்ற ஹதீஸுக்கு முரணாக இருந்தால் அந்த ஹதீஸ் ஷாத் என்ற நிலைக்கு செல்லும். ஆனால் இஷாராச் செய்தார்கள் என்ற ஹதீஸ் விரலசைத்தார்கள் என்ற ஹதீஸுக்கு எவ்விதத்திலும் முரண்படவில்லை.
இஷாரா என்பதற்கு ‘அசைக்கவில்லை’ என்று இவர்கள் தவறாகப் பொருள் செய்வதால், ‘விரலசைத்தார்கள்’ என்ற ஹதீஸுக்கு இது முரண்படுவதாகக் கூறி ஷாத் என்கின்றனர்.
இஷாரா என்ற சொல்,
அசைவு மூலம் ஒரு கருத்தைத் தெரிவித்தல்
அசைக்காமல் ஒரு கருத்தைத் தெரிவித்தல்
ஆகிய இரண்டு அர்த்தங்களைக் கொண்டதாகும். இஷாரா செய்தார்கள் என்ற ஹதீஸுக்கு இவ்விரண்டு அர்த்தங்களில் எந்த அர்த்தம் கொடுக்க வேண்டும் என்பதை, ‘விரலசைத்தார்கள்’ என்ற ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
இஷாரா என்ற விரிந்த பொருள் உள்ள வார்த்தைக்கு நபி (ஸல்) அவர்கள் எந்த அர்த்தத்தில் நடைமுறைப்படுத்தினார்கள் என்ற கூடுதல் விவரத்தையே விரலசைத்தார்கள் என்ற ஹதீஸ் தருகிறது.
எனவே இரண்டு ஹதீஸ்களும் ஒன்றுடன் ஒன்று மோதவில்லை என்பதால் இது ஷாத் என்ற வகையைச் சார்ந்தது அல்ல.
‘விரலை அசைக்க மாட்டார்கள்’ என்று ஒரு செய்தி அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து சிலர் விரலை அசைக்கக் கூடாது என்று வாதிடுகின்றனர்.
அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறும் அந்த ஹதீஸில் முஹம்மத் பின் அஜ்லான் என்ற நபர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி இமாம் ஹாகிம் உட்பட பலர், ‘இவர் நினைவாற்றல் குறைவுடையவர்’ என்று விமர்சனம் செய்துள்ளனர். இதனால் தான் இமாம் முஸ்லிம் அவர்கள் இவர் இடம் பெறும் ஹதீஸ்களைத் தனி ஆதாரமாகப் பதிவு செய்யவில்லை. இவருடைய அறிவிப்புக்கு ஏற்றவாறு நம்பகமானவர்கள் ஹதீஸ்களை அறிவித்திருந்தால் மட்டுமே இவருடைய செய்திகளைப் பதிவு செய்வார்கள். எனவே விரலசைக்க மாட்டார்கள் என்ற செய்தி பலவீனமாக இருப்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு, ‘விரலசைக்கக் கூடாது’ என்று வாதிட முடியாது.
முதல் இருப்பில் ஓத வேண்டியவை
முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும்.
அத்தஹிய்யாத் துஆ
அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு
பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும்,  வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
எனத் தொழுகையில் அமரும் போது நபி (ஸல்) அவர்கள் கூறச் சொன்னார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரீ 1202, முஸ்லிம் 609
மற்றொரு அத்தஹிய்யாத் துஆ
‘அத்தஹிய்யா(த்)துல் முபார(க்)கா(த்)துஸ் ஸலவா(த்)துத் தய்யிபா(த்)து லில்லாஹி அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் நபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஆலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹி’
என்று நபி (ஸல்) அவர்கள் இருப்பில் ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 610
மேற்கூறிய இரண்டில் ஏதாவது ஒன்றை ஓதிக் கொள்ளலாம்.
ஸலவாத்
அத்திஹிய்யாத் ஓதிய பின்னர் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓத வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்தார். அந்நேரத்தில் நாங்கள் நபிகளாரிடம் இருந்தோம். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரே! உங்களின் மீது ஸலாம் எவ்வாறு சொல்வது என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் எங்களின் தொழுகையில் எவ்வாறு உங்கள் மீது ஸலவாத் சொல்வது?’ என்று கேட்டார். இந்த மனிதர் இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே’ என்று நாங்கள் நினைக்கும் அளவு நபி (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். (பின்னர்) ‘நீங்கள் என் மீது ஸலவாத் சொல்வதாக இருந்தால்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி வலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்
(பொருள்: இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது உன் அருளைப் பொழிவாயாக! இப்ராஹீம் நபியின் மீதும் இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அபிவிருத்தி செய்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது நீ அபிவிருத்தி செய்வாயாக!)
என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் அம்ர் (ரலி)
நூல்: அஹ்மத் 16455
மற்றொரு ஸலவாத்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.
பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும்,  கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.
இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும்,  கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)
நூல்: புகாரீ 3370
இரண்டாம் ரக்அத் இருப்பில் விரும்பிய அனைத்து துஆவையும் கேட்கலாம்.
‘நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்) லில்லாஹி… கூறுங்கள். (பின்னர்) தமக்கு விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: நஸயீ 1151
மூன்றாம் ரக்அத்
இரண்டாம் ரக்அத் முடித்து மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறி, எழுந்து இரு கைகளையும் காது வரை அல்லது தோள்புஜம் வரை உயர்த்திக் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதினால் போதுமானது. விரும்பியவர் வேறு துணை சூராக்களை ஓதிக் கொள்ளலாம். இதற்குரிய ஆதாரங்களை பக்கத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போது தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 739
நிலையில் ஓத வேண்டியதை ஓதிய பின்னர் ஏற்கனவே கூறிய படி ருகூவு, ஸஜ்தாக்களை நிறைவேற்ற வேண்டும்.
நான்காம் ரக்அத்
மூன்றாம் ரக்அத் முடித்த பின்னர் நான்காம் ரக்அத்திற்காக அல்லாஹு அக்பர் என்று கூறி எழ வேண்டும். மூன்றாம் ரக்அத்தில் கைகளை உயர்த்தியதைப் போல் நான்காம் ரக்அத்துக்கு எழும் போது கைகளை உயர்த்தாமல் நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். மூன்றாம் ரக்அத்தில் செய்ததைப் போன்றே அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.
நான்காம் ரக்அத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்த பின்னர் இருப்பில் அமர வேண்டும். இருப்பில் அமரும் போது மண்டியிட்டுத் தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து, இடது காலை வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைக்க வேண்டும். இதற்குரிய ஆதாரங்களை 00பக்கத்தில் விளக்கியுள்ளோம்.
பின்னர் முதல் இருப்பில் ஓதிய அத்தஹிய்யாத், ஸலவாத் ஆகியவற்றை ஓத வேண்டும். அத்துடன் பின் வரும் துஆக்களையும் ஓத வேண்டும்.
இருப்பில் ஓதும் துஆக்கள்
‘உங்களில் ஒருவர் கடைசி தஷஹ்ஹூதை ஓதி முடித்த பின், நரக வேதனை, கப்ரு வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை, தஜ்ஜால் மூலம் ஏற்படும் தீங்கு ஆகிய நான்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 926
அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்.
‘அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாத், வமின் ஷர்ரி ஃபித்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால். பொருள்: இறைவா! நான் உன்னிடம் நரகத்தின் வேதனையிலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 924
‘அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் ஓதுவதற்குரிய ஒரு துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள்’ என்று நான் கேட்டேன்.
‘அல்லாஹும்ம இன்னீ ளலம்(த்)து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்.
(பொருள்: இறைவா! எனக்கே நான் அதிகம் அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய்) என்று கூறுவீராக’ என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ர் (ரலி)
நூல்கள்: புகாரீ 834, முஸ்லிம் 4876
அத்தஹிய்யாத் ஓதிய பின்னரோ, அல்லது மேற்கூறிய துஆக்கள் ஓதி முடித்த பின்னரோ நமக்கு ஏற்படும் தேவைகளை நமது தாய் மொழியிலேயே கேட்டு துஆச் செய்யலாம்.
‘(அத்தஹிய்யாத் ஓதிய பின்னர்) உங்களுக்கு விருப்பமான துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் துஆச் செய்யுங்கள்’என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரீ 835, முஸ்லிம் 609
ஸலாம் கூறி முடித்தல்
இதன் பின்னர் தொழுகையின் இறுதியாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று வலது புறமும்,இடது புறமும் கூற வேண்டும்.
வலது புறமும், இடது புறமும் திரும்பி ‘அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ்’ என்று நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 272, அபூதாவூத் 845, இப்னுமாஜா 904, அஹ்மத் 3516
நபி (ஸல்) அவர்கள் தமது வலது பக்கமும், இடது பக்கமும் ஸலாம் கூறும் போது அவர்களது கன்னத்தின் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்குத் திரும்பியதைக் கண்டேன்.
அறிவிப்பவர்: ஸஅது (ரலி)
நூல்: முஸ்லிம் 916
நிதானமாகச் செய்தல்
தொழுகையில் மேற்கூறிய காரியங்கள் அனைத்தையும் நிதானமாகச் செய்ய வேண்டும். அவசரம் காட்டக் கூடாது. அவ்வாறு அவசரமாகத் தொழும் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதர் பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு ‘திரும்பிச் சென்று நீர் தொழுவீராக! நீர் தொழவே இல்லை’ என்று கூறினார்கள். அந்த மனிதர் முன்பு தொழுதது போலேவே மீண்டும் தொழுது விட்டு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். ‘திரும்பிச் சென்று தொழுவீராக நீர் தொழவே இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர்’சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக! இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்’ என்று கேட்டார்.
‘நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் நிதானமாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து நேராக நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே தொழுகை முழுவதும் செய்வீராக!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 757, முஸ்லிம் 602
தொழுகைக்குப் பின் ஓத வேண்டிய துஆக்கள்
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து விட்டார்கள் என்பதைத் தக்பீர் மூலம் நான் அறிந்து கொள்வேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 842, முஸ்லிம் 917
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர்,
(அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறி) மூன்று முறை பாவமன்னிப்புத் தேடுவார்கள். மேலும்
அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம், வமின்(க்)கஸ் ஸலாம், தபாரக்(த்)த தல் ஜலாலி வல்இக்ராம்
(பொருள்: இறைவா! நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது, மகத்துவமும், கண்ணியமும் உடையவனே! நீ பாக்கியமிக்கவன்!) என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: முஸ்லிம் 931
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃ(த்)தய்(த்)த வலா முஃ(த்)திய லிமா மனஃ(த்)த வலா யன்ஃபவு தல் ஜத்தி மின்(க்)கல் ஜத்து
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது) என கடமையான தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி)
நூல்கள்: புகாரீ 844, முஸ்லிம் 933
‘அல்லாஹும்ம இன்னீ அவூதுபி(க்)க மினல் புக்லி, வஅவூதுபி(க்)க மினல் ஜுப்னி, வஅவூதுபி(க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வஅவூது பி(க்)க மின் பித்ன(த்)தித் துன்யா, வஅவூது பி(க்)க மின் அதாபில் கப்ர்.
(பொருள்: இறைவா! உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புத் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என இறைவனிடம் தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடினார்கள்.
அறிவிப்பவர்: சஅத் (ரலி)
நூல்: புகாரீ 5384, 2822
‘அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி இபாத(த்)திக்
(பொருள்: இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டுவிடாதே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1301, அஹ்மத் 21109
‘லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ். வலா நஅபுது இல்லா இய்யாஹு லஹுன் னிஃம(த்)து வலஹுல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ்கரிஹல் காஃபிரூன்
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன். நல்லவற்றைச் செய்வதற்கோ, தீயவற்றிலிருந்து விலகுவதற்கோ அல்லாஹ்வின் துணையின்றி இயலாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத் தவிர வேறெவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருள் அவனுடையது. உபகாரம் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. நிகராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன) என ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஸலாம் கூறும் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்: முஸ்லிம் 935
‘யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று  33  தடவைகளும், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் என்று 33 தடவைகளும் ஆக மொத்தம் 99தடவைகள் கூறிவிட்டு 100 வதாக
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்)
எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 939
நபி (ஸல்) அவர்கள் வித்ர் தொழுகைக்கு ஸலாம் கொடுக்கும் போது
ஸுப்ஹானல் மலி(க்)குல் குத்தூஸ்
(பரிசுத்தமான அரசன் (அல்லாஹ்) தூய்மையானவன்) என்று மூன்று முறை கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)
நூல்கள்: அஹ்மத் 14814, நஸயீ 1717, அபூதாவூத் 1218
ஸஜ்தா ஸஹ்வு
தொழுகையில் ஏற்படும் மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் ஸஜ்தா ஸஹ்வு (மறதிக்குரிய ஸஜ்தா) என்று சொல்லப்படும்.
முதல் இருப்பை விட்டு விட்டால்….
நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுவித்தனர். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காராமல் எழுந்து விட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்து விட்டார்கள். தொழுகை முடிக்கும் தருணத்தில் நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து விட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி)
நூல்கள்: புகாரீ 829, முஸ்லிம் 885
ரக்அத்தை அதிகமாக்கினால்….
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்துகள் தொழுதார்கள். உடனே அவர்களிடத்தில் ‘தொழுகை அதிகமாக்கப்பட்டு விட்டதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள்.’நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள்’ என்று ஒருவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரீ 1226
ரக்அத்தைக் குறைத்து விட்டால்….
நபி (ஸல்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒரு தொழுகையை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுவித்து விட்டு ஸலாம் கொடுத்து விட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்து கொண்டார்கள். தமது வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்துக் கொண்டார்கள். தமது வலது கன்னத்தை இடது கை மீது வைத்துக் கொண்டார்கள். அவசரக்காரர்கள் பள்ளியில் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டு ‘தொழுகை குறைக்கப்பட்டு விட்டது’ என்று பேசிக் கொண்டார்கள். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் அக்கூட்டத்தில் இருந்தனர். (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் இரு கைகளும் நீளமான ஒரு மனிதர் இருந்தார். துல்யதைன் (இரு கைகள் நீளமானவர்) என்று அவர் குறிப்பிடப்படுவார். அவர், ‘அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா?அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா?’ என்று கேட்டார். ‘குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (மக்களை நோக்கி) ‘துல்யதைன் கூறுவது சரி தானா?’ என்று கேட்க, மக்கள் ஆம் என்றனர். தொழுமிடத்திற்குச் சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தாவைச் செய்து பின் தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 482
ரக்அத் எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால்…
தொழுகையில் மூன்று ரக்அத் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத் தொழுதோமா என்ற சந்தேகம் ஏற்பட்டால் குறைந்ததை, அதாவது மூன்று தான் தொழுதுள்ளோம் என்று கணக்கிட்டு மேலும் ஒரு ரக்அத் தொழ வேண்டும். மேலும் இதற்காக இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்.
‘உங்களில் ஒருவருக்கு, மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா?’ என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு, ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: முஸ்லிம் 990
‘உங்களில் ஒருவர் தொழும் போது ஷைத்தான் அவரிடம் வந்து எத்தனை தொழுதார் என்பதை அறியாத அளவிற்கு அவருக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான். இந்த நிலையை ஒருவர் அடைந்தால் உட்கார்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 363 புகாரீ 401
நான்கு ரக்அத் தொழுகையில் மூன்று ரக்அத் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத்துகளும் தொழுது விட்டோமா என்று ஒருவருக்குச் சந்தேகப்பட்டால் அவர் மூன்று ரக்அத்கள் தொழுததாக எடுத்துக் கொண்டு, நான்காம் ரக்அத்தை நிறைவு செய்ய வேண்டும். நான்காம் ரக்அத்தின் இறுதியில் ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறி இரண்டு தடவை ஸஜ்தாச் செய்ய வேண்டும். அல்லது ஸலாம் கொடுத்த பின்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யலாம். மறதிக்காகச் செய்யும் ஸஜ்தாவில் ஓதுவதற்கென குறிப்பிட்ட துஆ எதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவுமில்லை. எனவே ஸஜ்தாக்களில் எப்போதும் ஓதும் துஆக்களை ஓத வேண்டும்.
களாத் தொழுகை ஐவேளைத் தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரங்களில் தொழுது முடித்து விடவேண்டும். அதைப் பிற்படுத்துவது கூடாது. கடமையான தொழுகையைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழாமல், அந்தத் தொழுகையின் நேரம் முடிந்த பின் தொழலாம் என்று சிலர் கருதுகின்றனர். இதைக் களாத் தொழுகை என்றும் குறிப்பிடுகின்றனர். இது தவறாகும்.
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
அல்குர்ஆன் 4:103
நபி (ஸல்) அவர்களும் ஐவேளைத் தொழுகையின் ஆரம்ப நேரம் மற்றும் இறுதி நேரம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே அந்த நேரங்களில் தொழுகைகளை முடித்துவிட வேண்டும்.
ஒருவர் மறந்து தொழாமல் இருந்து விட்டால் அவர் நினைவு வந்ததும் தொழுது விடவேண்டும். உறங்கி விட்டால் விழித்ததும் தொழ வேண்டும். இது தான் அதற்குரிய பரிகாரம்.
‘யாரேனும் ஒரு தொழுகையை மறந்து விட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர வேறு பரிகாரம் எதுவுமில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 597, முஸ்லிம் 1104
‘யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1103
மறதி, தூக்கம் இந்த இரண்டைத் தவிர வேறு காரணங்களுக்காகத் தொழுகையை விடுவதற்கு அனுமதியில்லை. அவ்வாறு தொழுகையை விட்டவர் வல்ல அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு, திருந்திக் கொள்வதே வழியாகும்.
அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நரகத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
அல்குர்ஆன் 19:59,60
இந்த வசனத்தில் பிற்காலத்தில் வரும் சிலரைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அவர்கள் தொழுகையைத் தொழாமல் இருப்பார்கள் என்று குறிப்பிடுகின்றான். இவர்களுக்கு மன்னிப்புக் கிடைக்க வேண்டுமானால் அவர்கள் தங்கள் தவறைத் திருத்திக் கொண்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டுமென கட்டளையிடும் இறைவன்,விட்ட தொழுகையைத் திரும்பத் தொழ வேண்டும் என்று கட்டளையிடவில்லை. எனவே தூக்கம், மறதி அல்லாத வேறு காரணங்களுக்காகத் தொழுகையை விட்டவர் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டு விட்டு, இனி வரும் காலங்களில் தொழுகையை விடாமல் தொழ முயற்சிக்க வேண்டும்.
கூட்டுத் தொழுகை (ஜமாஅத் தொழுகை) கடமையான ஐவேளைத் தொழுகையை ஆண்கள் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தான் தொழ வேண்டும்.
‘தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 645, முஸ்லிம் 1038
‘எனது உயிர் எவனது கரத்திலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! விறகுகளைக் கொண்டு வருமாறு நான் கட்டளையிட்டு, அதன்படி விறகுகள் கொண்டு வரப்பட்டுப் பின்னர் தொழுகைக்கு அழைக்குமாறு நான் உத்தரவிட்டு, அதன்படி அழைக்கப்பட்டு, பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டு, அதன்படி அவர் தொழுகை நடத்திய பின்னர் தொழுகைக்கு வராமலிருக்கின்ற அவர்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டோடு அவர்களை எரித்து விட நான் நினைத்ததுண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 644, முஸ்லிம் 1040
ஜமாஅத் தொழுகையின் ஒழுங்குகள் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் போது முதல் வரிசையில் மார்க்கச் சட்டங்கள் தெரிந்தவர்களும்,பெரியவர்களும், அதற்கடுத்து சிறியவர்களும், கடைசி வரிசையில் பெண்களும் நிற்க வேண்டும்.
என் பாட்டி முளைக்கா, நபி (ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டுப் பின்னர் ‘எழுந்திருங்கள்! உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்’ என்று கூறினார்கள். பயன்படுத்தப்பட்டதால் கருத்துப் போய் விட்ட எங்களுடைய ஒரு பாயை எடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து விரித்தேன். அப்பாயில் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் (எங்களுடன் வசிக்கும்) அனாதையும் நின்றோம். எங்களுக்குப் பின்னால் பாட்டி (முளைக்கா) நிற்குமாறு வரிசைகளை ஒழுங்குபடுத்தினேன். நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் தொழுகை நடத்தி விட்டுச் சென்று விட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 380, முஸ்லிம் 1053
‘உங்களில் பருவம் அடைந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் எனக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)
நூல்: முஸ்லிம் 739
ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதற்குக் கூடுதல் நன்மை உண்டு.
‘பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும், (தொழுகையில்) முதல் வரிசையில் நிற்பதன் நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கி எடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 615, முஸ்லிம் 611
வரிசையில் இடைவெளியின்றி நெருக்கமாக இருக்க வேண்டும் ‘வரிசையை நேராக்குங்கள்! ஏனெனில் வரிசைகளை நேராக்குவது தொழுகையை நிலை நாட்டுதலில் உள்ளதாகும்’என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 723, முஸ்லிம் 656
‘வரிசைகளைச் சரி செய்யுங்கள்! நெருக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்! கழுத்தைக் கவனித்து சரி செய்து கொள்ளுங்கள்! முஹம்மதின் உயிர் எவன் கை வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக ஷைத்தான் வரிசைகளின் இடையில் சிறிய ஆட்டுக் குட்டிகளைப் போல் நுழைவதை நான் காண்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: நஸயீ 806, அபூதாவூத் 571
‘உங்களது வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்கள்: புகாரீ 717, முஸ்லிம் 659
இருவர் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழும் போது… இருவர் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழும் போது இமாமும் பின்பற்றித் தொழுபவரும் முன் பின்னாக நிற்காமல் சேர்ந்து நிற்க வேண்டும். பின்பற்றித் தொழுபவர் இமாமின் வலப்புறம் நிற்க வேண்டும்.
ஒரு இரவு நான் நபி (ஸல்) அவர்களின் இடப்புறம் நின்று தொழுதேன். அவர்கள் பின்புறமாக எனது கையைப் பிடித்து தமது வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரீ 728, முஸ்லிம் 1274
ஜமாஅத் தொழுகைக்கு வரும் போது நிதானமாக வருதல் ஜமாஅத் தொழுகைக்கு வரும் போது தொழுகையில் சேர வேண்டும் என்பதற்காக அவசப்பட்டு ஓடி வரக்கூடாது. நிதானமாகவே வர வேண்டும்.
‘இகாமத் சொல்வதை நீங்கள் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்; அப்போது நீங்கள் அமைதியான,கண்ணியமான முறையிலும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 636, முஸ்லிம் 944
கடமையான தொழுகையை நிறைவேற்றியவர் பள்ளிக்கு வந்தால் பள்ளியில் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் அங்கு வந்தால் அத்தொழுகையை வேறு இடத்தில் நிறைவேற்றியிருந்தாலும் அந்த ஜமாஅத்துடன் சேர்ந்து மீண்டும் தொழ வேண்டும்.
ஆதாரம் திர்மிதீ 203
இகாமத் சொல்லப்பட்ட பின் வேறு தொழுகை இல்லை கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் கடமையான அந்தத் தொழுகையைத் தவிர வேறு தொழுகையைத் தொழக் கூடாது.
‘(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1160
இமாமின் தகுதிகள் ஜமாஅத் தொழுகையில், தொழுகை நடத்துபவர் திருக்குர்ஆனை நன்றாக ஓதக் தெரிந்தவராகவும் தொழுகையின் சட்டங்களை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட வயதுள்ளவராகத் தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
‘அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தொழுவிப்பார். மக்கள் அனைவரும் சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாக இருந்தால் அவர்களில் நபி வழியை நன்கு அறிந்தவர் (தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சம அளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் ஹிஜ்ரத் செய்தவர் (தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தொழுவிப்பார்). ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அனுமதியின்றி அமர வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்ஸாரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1192
…என் தந்தை, தனது குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். இன்னின்ன தொழுகைகளை இன்னின்ன வேளைகளில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்’ எனக் கூறினார். ஆகவே மக்கள் தேடிப் பார்த்த போது, நான் பயணிகளிடம் கேட்டு அறிந்து கொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் இருக்கவில்லை. ஆகவே (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன்.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஸலமா (ரலி)
நூல்: புகாரீ 4302
சுருக்கமாகத் தொழுவித்தல் இமாமாக இருப்பவர் தொழுவிக்கும் போது பின்பற்றித் தொழுபவரின் நிலையைக் கவனத்தில் கொண்டு தொழுகையைச் சுருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
‘அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் ஃபஜ்ருத் தொழுகையின் ஜமாஅத்திற்குச் செல்வதில்லை’ என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் முன் எப்போதும் அடைந்திராத கோபத்தை அன்றைய தினம் அடைந்தார்கள். ‘(வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துபவர்களும் உங்களில் உள்ளனர். உங்களில் எவரேனும் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் சுருக்கமாக நடத்தட்டும்! ஏனெனில் மக்களில் பலவீனர்கள், முதியோர், அலுவல்கள் உள்ளவர்கள் இருக்கின்றனர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரீ 702, முஸ்லிம்713
பின்பற்றித் தொழுபவர் பேண வேண்டியவை இமாமைப் பின்பற்றி தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாம் ஓதுவதைக் கேட்க வேண்டும்; வேறு எதையும் ஓதக் கூடாது.
குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!
அல்குர்ஆன்7:204
நாங்கள் தொழுகையில், இன்னார் மீது ஸலாம், இன்னார் மீது ஸலாம் என்று கூறிக் கொண்டிருந்தோம். அப்போது தான் ‘குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!’ என்ற7:204 குர்ஆன் வசனம் வந்தது.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: தப்ஸீர் தப்ரீ, பாகம்: 9, பக்கம்: 162
‘இமாம் ஓதும் போது நீங்கள் மவுனமாக இருங்கள்!’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 612
இமாமை முந்தக் கூடாது இமாமைப் பின்பற்றித் தொழுபவர், தொழுகையின் எந்தச் செயலையும் இமாமை விட முந்திச் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது மிகப் பெரிய குற்றமாகும்.
‘இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள்; அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 688, முஸ்லிம் 623
‘உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தமது தலையை உயர்த்துவதால் (மறுமையில்) அவருடைய தலையை கழுதையின் தலையாகவோ, அல்லது அவருடைய உருவத்தைக் கழுதையின் உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 691, முஸ்லிம் 647
தாமதமாக வந்தால்… ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் தாமதமாக வந்தால் இமாம் எந்த நிலையில் இருக்கிறோரோ அந்த நிலையில் அல்லாஹு அக்பர் என்று கூறி சேர்ந்து கொள்ள வேண்டும்.
‘நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்; அப்போது நீங்கள் அமைதியாகவும்,கண்ணியமாகவும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 636, முஸ்லிம் 944
தாமதமாக வந்தாலும் தொழுகையில் நுழைவதற்கு அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னரே சேர வேண்டும்.
‘தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன் துவக்கம் தக்பீர் (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு தஸ்லீம் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்) ஆகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: திர்மிதீ 3, அபூதாவூத் 56, இப்னுமாஜா 271, அஹ்மத் 957
ரக்அத்தை அடைவது… இமாம் ருகூவில் இருக்கும் போது ஒருவர் தொழுகையில் இணைந்தால் அந்த ரக்அத்தைத் திரும்பத் தொழத் தேவையில்லை. அவர் அந்த ரக்அத்தை அடைந்தவராகக் கருதப்படுவார்.
‘தொழுகையில் இமாம் முதுகை உயர்த்துவதற்கு முன்னதாக யார் ருகூவை அடைந்து கொள்வாரோ அவர் அந்த ரக்அத்தை அடைந்து கொண்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னு ஹுஸைமா 3/45
இமாமின் தவறைச் சுட்டிக் காட்டுதல் தொழுகையில் இமாம் ஏதேனும் தவறு செய்து விட்டால் ஆண்கள் ஸுப்ஹானல்லாஹ்’ என்று கூறுவதன் மூலமும்,பெண்கள் கை தட்டுதல் மூலமும் சுட்டிக் காட்ட வேண்டும்.
‘(தொழுகையில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட) தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்கும், கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 1203, முஸ்லிம் 641
குர்ஆன் ஓதுதலில் தவறு ஏற்பட்டால்… இமாமிற்கு திருக்குர்ஆன் ஓதுதலில் தவறு ஏற்பட்டால் பின்னால் தொழுபவர் அதைத் திருத்திக் கொடுக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள். அதில் ஓதினார்கள். அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. தொழுகை முடித்தவுடன் உபை (ரலி) அவர்களிடம், ‘நம்முடன் நீர் தொழுதீரா?’ என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்போது ‘(தவறைத் திருத்திக் கொடுப்பதற்கு) உம்மைத் தடுத்தது எது?’ என்று நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அபூதாவூத் 773
பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா? பள்ளிவாசலில் ஆண்கள் ஜமாஅத்துடன் தொழுவது போல் பெண்களும் பள்ளிக்கு வந்து தொழலாம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
‘உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 5238, முஸ்லிம் 666
முஃமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 578, முஸ்லிம் 1021
‘நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: புகாரீ 707
காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)
நூல்: முஸ்லிம் 1442
உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ் மற்றும் இஷாத் தொழுகைகளில் பள்ளியில் ஜமாஅத்தில் கலந்து கொள்வார். அவரிடம், ‘(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்பெண்மணி, ‘அவர் என்னைத் தடுக்கக் முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் சொல் (என்னைத் தடுப்பதை விட்டும்) அவரைத் தடுத்து விடும்’ என்று கூறினார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 900
பெண்கள் பள்ளிக்கு வரலாம் என்றாலும் இரவில் பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது.
‘நறுமணம் பூசிக்கொண்ட பெண் நம்முடன் இஷாத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 675
நோயாளியின் தொழுகை சிலர் உடல் நலக் குறைவால் குறிப்பிட்ட முறையில் தொழ முடியாமல் போகலாம். அவர்களுக்கு இஸ்லாம் சில சலுகைகளைத் தந்துள்ளது. நின்று தொழ முடியாதவர் அமர்ந்தும், அமர்ந்து தொழ முடியாதவர் படுத்தும் தொழலாம்.
எனக்கு மூல நோய் இருந்தது. ‘எவ்வாறு தொழுவது?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீ நின்று தொழு! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல்: புகாரீ 1117
சுன்னத் தொழுகைகள் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் காட்டித் தந்த, கடமையல்லாத தொழுகைக்கு சுன்னத் தொழுகை என்று கூறப்படும்.
முன் பின் சுன்னத்துகள்
கடமையான ஐவேளைத் தொழுகைக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நபி (ஸல்) தொழுது காட்டியுள்ளார்கள்.
சொர்க்கத்தில் மாளிகை ஹதீஸ் அஹமது 18877
கடமையல்லாத, உபரியான தொழுகைகளைப் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே சிறந்தது.
‘கடமையான தொழுகையைத் தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்கள்: புகாரீ 731, முஸ்லிம் 1301
பஜ்ருடைய சுன்னத்
முன் பின் சுன்னத்துக்களில் பஜ்ருடைய முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்திற்கு நபி (ஸல்) அவர்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உபரியான தொழுகையில் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போல் வேறு எதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1163, முஸ்லிம் 1191
சுப்ஹுத் தொழுகை தொழுது விட்டால் சூரியன் உதிக்கும் வரை எந்த உபரியான தொழுகையையும் தொழக் கூடாது. ஆனால் ஃபஜ்ருடைய முன் சுன்னத் தொழாமல் இருந்தால் அதைத் தொழுவதற்கு அனுமதி உள்ளது.
சுப்ஹுத் தொழுகைக்குப் பின் சூரியன் உதிக்கும் வரை தொழுவதற்கும் அஸர் தொழுகைக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழுவதற்கும் நபி (ஸல்) தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 581, முஸ்லிம் 1367
நபி (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன் சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
அறிவிப்பவர்: கைஸ் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 2471
ஃபஜ்ருடைய ஜமாஅத் நடக்கும் போது பள்ளிக்கு வருபவர் முன் சுன்னத்தைத் தொழுது விட்டுப் பின்னர் ஜமாஅத்துடன் சேர்ந்து ஃபஜ்ரு தொழும் வழக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. ஆனால் இது தவறாகும். ஏனெனில் இகாமத் சொல்லப்பட்ட பிறகு வேறு தொழுகைகள் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
‘(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1160
லுஹருடைய சுன்னத்
லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு அல்லது நான்கு ரக்அத்கள் தொழலாம். இது போல லுஹருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழலாம்.
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 937, முஸ்லிம் 1200
‘லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் சுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டுவிடாதே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 1182
அஸருடைய சுன்னத்
அஸருடைய முன் சுன்னத் நான்கு ரக்அத்களாகும்.
நபி (ஸல்) அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மூஃமின்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை (இரண்டிரண்டாக) பிரிப்பார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: திர்மிதீ 394
மஃரிபுடைய சுன்னத்
மஃரிப் தொழுகைக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள், பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள் ஆகும்.
‘மஃரிபிற்கு முன்னர் தொழுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு மூன்றாவது முறை ‘விரும்பியவர் தொழட்டும்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)
நூல்: புகாரீ 1183
அபூதாவூதின் 1089 அறிவிப்பில் ‘மஃரிபிற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுங்கள்’ என்று இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 937
இஷாவுடைய சுன்னத்
இஷாத் தொழுகைக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் அல்லது நான்கு ரக்அத்கள் ஆகும். இஷாவுக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள் ஆகும்.
‘ஒவ்வொரு பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு’ என்று மூன்று முறை கூறினார்கள். (மூன்றாம் முறை) ‘விரும்பியவர்கள் தொழலாம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)
நூல்கள்: புகாரீ 624, முஸ்லிம் 1384
நபி (ஸல்) அவர்கள் பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று கூறியுள்ளார்கள். ஆனால் எத்தனை ரக்அத்கள் என்று தெளிவுபடுத்தவில்லை. நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான தொழுகைகளைக் கவனித்தால் இரண்டும், நான்கும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இதன் அடிப்படையில் நாம் இஷாவுடைய முன் சுன்னத்தை இரண்டாக அல்லது நான்காகத் தொழுது கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவராக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 937
லுஹா தொழுகை
முற்பகல் நேரத்தில் தொழும் தொழுகைக்கு லுஹா தொழுகை என்று கூறப்படும். இத்தொழுகையை இரண்டு ரக்அத்களிலிருந்து நாம் விரும்பும் ரக்அத்கள் வரை தொழுது கொள்ளலாம்.
இத்தொழுகையின் நேரம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை.
முஸ்லிமில் லுஹாத் தொழுகையின் நேரம் பற்றி ஒரு ஹதீஸ் (1237) இடம் பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளரில் இடம் பெற்றுள்ள அல்காஸிம் அஷ்ஷைபானீ என்பவர் பலவீனமானவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது. எனினும் லுஹா என்ற சொல்லின் பொருளிலிருந்து அதன் நேரத்தை நாம் அறிந்து கொள்ளலாம். லுஹா என்பதற்கு முற்பகல் என்று பொருள். எனவே இத்தொழுகையை முற்பகலில் தொழ வேண்டும் என்று முடிவு செய்யலாம். இரண்டு ரக்அத்கள்
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுமாறும்,உறங்குவதற்கு முன் வித்ரு தொழுகையைத் தொழுமாறும் ஆகிய இம்மூன்று விஷயங்களை என் தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 1981, முஸ்லிம் 1182
நான்கு ரக்அத்கள் ‘ஆதமின் மகனே! எனக்காகப் பகலின் ஆரம்பத்தில் நான்கு ரக்அத்கள் தொழு! பகலின் கடைசிக்கு நான் உனக்குப் பொறுப்பேற்கிறேன்’ என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 438, அஹ்மத் 26208
எட்டு ரக்அத்துகள்
‘நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது எனது இல்லத்தில் குளித்து விட்டு எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதை விடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும் ருகூவையும், ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள்’ என்று உம்மு ஹானி குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா
நூல்கள்: புகாரீ 1103, முஸ்லிம் 510
ஜுமுஆத் தொழுகை வெள்ளிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பதிலாக இமாம் மிம்பரில் பயான் நிகழ்த்திய பின்னர் தொழப்படும் இரண்டு ரக்அத்கள் தொழுகையே ஜுமுஆத் தொழுகையாகும்.
நேரம்
ஜுமுஆத் தொழுகை லுஹர் நேரத்திலும் தொழலாம். சூரியன் மேற்குத் திசையில் சாய்வதற்குச் சற்று முன்பாகவும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸில் ஆதாரம் உள்ளது.
சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 904
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜுமுஆத் தொழுது விட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குச் சுவர்களுக்கு நிழல் இருக்காது. அறிவிப்பவர்: ஸலமா (ரலி)
நூல்கள்: புகாரீ 4168, முஸ்லிம் 1424
ஜுமுஆ தொழுகைக்குச் சீக்கிரமாகச் சென்று விட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 940
ஜுமுஆவிற்குப் பிறகு தான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும், காலை உணவையும் கொள்வோம்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) நூல்கள்: புகாரீ 939, முஸ்லிம் 1422
ஜுமுஆக்குக் குளிப்பது
ஜுமுஆத் தொழுகைக்காக வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது கட்டாயக் கடமையாகும். தலைக்கு எண்ணெய் மற்றும் நறுமணமும் பூசிக் கொண்டு பள்ளிக்கு வரவேண்டும்.
‘உங்களில் எவரும் ஜுமுஆத் தொழுகைக்கு வந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 894
‘ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்கள்: புகாரீ 895, முஸ்லிம் 1397
‘ஜுமுஆ நாளில் குளித்து விட்டு, இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு, தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து, (அங்கு நெருக்கமாக அமர்ந்து கொண்டிருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல் தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜுமுஆவிற்கும் அடுத்த ஜுமுஆவிற்கும் இடையிலான (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் பாரிஸீ (ரலி)
நூல்: புகாரீ 880
குத்பாவிற்கு முன்பே வருதல்
ஜும்ஆவில் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பாகப் பள்ளிக்கு வர வேண்டும்.
‘ஜுமுஆ நாள் வந்து விட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும்,அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும், அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும், அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போன்றவரும் ஆவார்கள். இமாம் வந்து விட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டி விட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 929, முஸ்லிம் 1416
வியாபாரத்தை விட்டு விடுதல்
ஜுமுஆ நாள் அன்று தொழுகை நேரத்தில் வியாபாரம் செய்வது கூடாது. பாங்கு சொல்லப்பட்டு விட்டால் உடனடியாகத் தொழுகைக்கு விரைய வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. அல்குர்ஆன் 62:9
ஜுமுஆவில் பெண்களும் கலந்து கொள்ளுதல்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொண்டுள்ளார்கள்.
காஃப் வல்குர்ஆனில் மஜீத் என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)
நூல்: முஸ்லிம் 1442
ஜுமுஆத் தொழுகைக்கு விதிவிலக்குப் பெற்றவர்கள்
ஜுமுஆத் தொழுகையில் விதிவிலக்குப் பெற்றவர்கள் நான்கு நபர்கள். 1. பருவ வயதை அடையாதவர்கள். 2. பெண்கள்3. நோயாளி 4. பயணி
‘அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல்: அபூதாவூத் 901
ஜுமுஆ பாங்கு
ஐவேளைத் தொழுகைக்கு உள்ளது போல் ஜுமுஆ தொழுகைக்கும் ஒரு பாங்கு சொல்லப்பட வேண்டும். அந்த பாங்கு இமாம் மிம்பரில் அமரும் போது சொல்லப்பட வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை பெற்று விட்டது.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)
நூல்: புகாரீ 916
உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் சொல்லப்பட்டது இப்போது சொல்லப்படும் முதலாவது பாங்கைப் போன்றது அல்ல! மக்கள் அதிகமானதால் உஸ்மான் (ரலி) அவர்கள் ஸவ்ரா என்ற இடத்தில் ஒரு அறிவிப்பை சொல்லச் சொன்னார்கள். ஸவ்ரா என்பது மதீனாவில் உள்ள ஒரு வீடாகும் (இப்னுமாஜா 1125)
உஸ்மான் (ரலி) அவர்கள் ஏற்படுத்திய அந்த அறிவிப்பைக் கூட பள்ளிவாசலில் செய்யவில்லை. எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் இரண்டாம் பாங்கை ஏற்படுத்தவில்லை என்பதே சரியானதாகும்.
ஒரு வேளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆவிற்கு இரண்டாவது பாங்கைத் தான் ஏற்படுத்தினார்கள் என்று வைத்துக் கொண்டாலும் நபிவழியைத் தான் முஸ்லிம்கள் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளனர். நபி (ஸல்) அவர்களது நடைமுறைக்கு முரணாக யார் செய்திருந்தாலும் அது மார்க்கமாகாது. எனவே ஜும்ஆவிற்கு ஒரு பாங்கு சொல்வதே நபிவழியாகும்.
குத்பாவின் போது பேசக் கூடாது
ஜுமுஆத் தொழுகையில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவரது சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பேசக் கூடாது.
‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம் வாய் மூடு’ என்று நீ கூறினால் வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 934, முஸ்லிம் 1404
ஓத வேண்டிய சூராக்கள்
முஸ்லிம் 1451, 1452, 1453
ஜுமுஆவுடைய சுன்னத்
ஜுமுஆத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இமாம் பயான் செய்து கொண்டிருந்தாலும் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுது விட வேண்டும்.
ஜுமுஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘நீர் தொழுது விட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். ‘(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: புகாரீ 931, முஸ்லிம் 1449
முஸ்லிம் அறிவிப்பில் கூடுதலாக ‘அந்த இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழு!’ என்று இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆவிற்குப் பின்னர் (வீட்டிற்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 937, முஸ்லிம் 1462
‘உங்களில் ஒருவர் ஜுமுஆத் தொழுதால் அதன் பின்னர் நான்கு ரக்அத்கள் தொழட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1457
பயணத் தொழுகை கடமையான தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும். ஆனால் பயணத்தில் இருப்பவர் குறிப்பிட்ட இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துகளாகவும் சுருக்கித் தொழலாம்.
இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழுவதற்கு அரபியில் ஜம்வு என்றும், நான்கு ரக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கு அரபியில் கஸ்ர் என்றும் கூறுவர்.
ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.
கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்
நூல்: முஸ்லிம் 1116
இந்த செய்தியின் அறிவிப்பாளர், நபி (ஸல்) அவர்கள் கஸ்ர் செய்த அளவை குறிப்பிடும் போது மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ என்று ஐயத்துடன் அறிவிக்கிறார். இதில் மூன்று பர்ஸக் என்பது ஒன்பது மைல்களாகும். எனவே பேணுதலின் அடிப்படையில் கூடுதல் அளவை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றைய கால மூன்று பர்ஸக் என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கி.மீ. ஆகும்.
ஒருவர் 25 கி.மீ. தூரமுள்ள ஊருக்குப் பயணம் செல்ல நாடி ஊர் எல்லையை அவர் கடந்து விட்டால் அவர் ஜம்வு,கஸ்ர் செய்யலாம்.
‘மதீனாவில் நபி (ஸல்) அவர்களுடன் லுஹர் தொழுகையை நான்கு ரக்அத்களாகத் தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் மக்கா புறப்பட்டார்கள். (இடையில் உள்ள ஊரான) துல்ஹுலைஃபாவில் அஸர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.’
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 1089, முஸ்லிம் 1113
பயணத்தில் இருப்பவர் விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் லுஹருடைய நேரத்தில் தொழலாம்.
விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் அஸருடைய நேரத்தில் தொழலாம்.
அதே போல் மஃரிப் தொழுகையையும் ,இஷா தொழுகையையும் மஃரிபுடைய நேரத்தில் தொழலாம்.
அல்லது இஷாத் தொழுகையின் நேரத்தில் தொழலாம். அப்போது நான்கு ரக்அத் தொழுகைகளை (லுஹர், அஸர்,இஷா) இரண்டு ரக்அத்களாகச் சுருக்கியும் தொழலாம். சுப்ஹுத் தொழுகையை இரண்டு ரக்அத்தாகவும், மஃரிப் தொழுகையை மூன்று ரக்அத்களாவும் தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் தொழுகையையும், இஷாத் தொழுகையையும் சேர்த்து தொழுதார்கள். மஃரிப் மூன்று ரக்அத்களாகவும் இஷா இரண்டு ரக்அத்களாகவும் ஒரே இகாமத்தைக் கொண்டு தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2268
சூரியன் சாய்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும் வரை தாமதப்படுத்தி பின்னர் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். (பிரயாணத்தைத் துவங்கும் முன்) சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரைத் தொழுது விட்டுப் புறப்படுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 1111
நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 1091, முஸ்லிம் 1142
இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழும் போது இரண்டு தொழுகைக்கும் சேர்த்து ஒரு பாங்கு சொல்ல வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியாக இகாமத் சொல்லியோ, அல்லது இரண்டு தொழுகைக்கும் ஒரேயொரு இகாமத் மட்டும் சொல்லியோ தொழலாம்.
நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவில் மஃரிபையும், இஷாவையும் ஒரு பாங்கு இரண்டு இகாமத் சொல்லி தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் தொழுகையையும், இஷாத் தொழுகையையும் சேர்த்துத் தொழுதார்கள். மஃரிப் மூன்று ரக்அத்களாகவும் இஷா இரண்டு ரக்அத்களாகவும் ஒரே இகாமத்தைக் கொண்டு தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2268
சுருக்கித் தொழுவது கட்டாயம் இல்லை
பயணியாக இருப்பவர் தொழுகையைச் சுருக்கித் தொழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. விரும்பினால் முழுமையாகவும் தொழலாம்.
நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்த போது, ‘அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை. நான் நோன்பு நோற்கிறேன்’ என்று நான் கேட்ட போது ‘ஆயிஷாவே! சரியாகச் செய்தாய்!’ என்றார்கள். என்னைக் குறை காணவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1439
எத்தனை நாட்கள்
ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபி (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை. உள்ளூரில் ஜம்வு செய்தல்
ஒருவர் உள்ளூரில் இருக்கும் போதும் எப்போதாவது ஜம்வு செய்து (சேர்த்துத்) தொழுவதற்கு அனுமதி உள்ளது. எனினும் இதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் தொடர்ந்து ஜம்வு செய்து வந்தால் தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும் என்ற இறைவனின் கட்டளைக்குப் பொருள் இல்லாமல் போய்விடும்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும்,  அஸ்ரையும்,  மஃரிபையும்,  இஷாவையும் ஏழு, எட்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.