குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

19.6.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தொழுகை
 தொழுகையை  உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நண்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்? உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் இறைவனுக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு - அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் எண்ணத்தில் 
தன்னிறைவு கண்டுவிட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில், துன்பங்களில் அவனது உதவியே தேவையில்லாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்றுவிட்டாயோ? அல்லது உன்னை பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ? நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ? அல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்துவிட்டானோ? உனது மனச் சாட்சியை சாகடித்துவிட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ?



நீ அவனைச் சந்திக்கும் நாள் - அதுதான் நீ மரணிக்கும் நாள் - எப்போதென்று நீ அறிவாயா? இல்லையே! அது நாளையாகவும் இருக்கலாம். ஏன்? இன்றாகக் கூட இருக்கலாம். அந்த நாள் வந்துவிட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உன்னால் முடியுமா? இல்லை, கொஞ்சம் தாமதப்படுத்தவாவது முடியுமா? முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்து வாழ்ந்த இவ்வுலகை விட்டுச் செல்லும்போது உனக்கு வழித் துணையாக வருவது எது? துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னை காப்பாற்றுவது எது? உனது பணமா? பட்டமா? பதவியா? சொத்து செல்வங்களா? எதுவுமேயில்லை. ஒரேயொன்றைத் தவிர - அதுதான் நீ செய்த நல்லமல்கள். நீ புரிந்த தொழுகை, நோன்பு இன்ன பிற வணக்கங்கள். அதைத்தான் நீ உலகத்தில் சேமிக்கவில்லையே! நீ உண்டாய், உடுத்தாய், உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னை படைத்தவனை நினைக்கவில்லையே! அவனுக்காக உன்சிரம் பணியவில்லையே! அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்லவில்லையே! அவனைப் பயந்து உன் விழிகள் அழவில்லையே! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்யவில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாதபோது, உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா? உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காதபோது பிறர் உனக்காக பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா? அது ஒருபோதும் நடக்காது.. நடக்கவும் முடியாது...
என்னருமைச் சகோதரனே! நிச்சயம் மரணம் வரும். நீ என்றோ ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையைப் பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்டத்துக்கும், கை சேதத்திற்குமுரியவன் வேறு யார்? கப்ரிலே உனக்கு எப்படி வரவேற்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில் எழுப்பப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாயா?

போதும் நண்பனே! போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம் துன்பத்தில் முடிகின்றது; அன்பு பிரிவில் முடிகின்றது; வாழ்வு மரணத்தில் முடிகின்றது. மரணத்தின் பின் உன் நிலை என்ன? என்பதற்கு நீதான் விடை காண வேண்டும்.

ஆகவே நண்பா! நீ இன்று, இப்போதே நல்லதொரு முடிவெடுக்க வேண்டும். நீ போகும் பாதையை மாற்ற வேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ உபயோகப் படுத்தக் கூடாதா? காலம் பொன்னானது. அதை இதுவரைக்கும் மண்ணாக்கி விட்டாய்! இதுவரை தூங்கியது போதும், இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்துவதற்காக உனக்களித்த இறுதி சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு. அதையும் வீணாக்கி விடாதே!
போதும் நண்பா! போதும்! இத்தோடு நிறுத்திக் கொள். நான் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதி கொள். பாவச் சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை. ஆம் .. தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக மன்னிப்பு கோரிடு. அழு, அழு - நன்றாக அழு.. உன் இதயச் சுமை குறையும் வரைக்கும் அழுதிடு. இனிமேல் பாவஞ் செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளை ஜமாஅத் தொழுகையைத் தவற விடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதிமொழி எடுத்துக் கொள்.

தொழுகைகளை உரிய முறையில் பேணித் தொழுதவர்களாக வாழ்ந்து மரணிக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக...

நன்றி:தமிழ் இஸ்லாம் 
, ,