குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

30.6.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

திருக்குர்ஆனை ஓதுவதின் சிறப்பும், ஒழுங்கு முறைகளும்


 உலகில் பல சமூகங்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன. ஆனால் அச்சமூகங்கள் தமது வேதங்களைத் தொலைத்து விட்டன. ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருமறை அல்-குர்ஆன் இன்று வரை எதுவித மாற்றத்துக்கும் உட்படாது முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதனை அழிக்கவோ, மாற்றவோ எவராலும் முடியாது. ஏனெனில் அது இன்று வரை பல்லாயிரக்கணக்கான மனித மனங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இது அல்-குர்ஆனுக்கேயுரிய சிறப்பம்சமாகும். மேலும்
அல்லாஹ் தானே அதனைப் பாதுகாப்பதாகவும் வாக்கருளியுள்ளான். அல்-குர்ஆனை அகிலத்தார்க்கு ஒரு அருட்கொடையாய், வழிபாடு செய்வோர்க்கு ஒரு கலங்கரை விளக்கமாய் அல்லாஹ் இறக்கியருளியுள்ளான்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமறையை ஓதுவதின் சிறப்பு குறித்து திருமறையும், நபியவர்களின் பொன் மொழிகளும் அதிகமதிகம் வலியுறுத்திக் கூறுகின்றன. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்: எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகின்றார்களோ, மேலும் தொழுகையை நிலைநாட்டுகின்றார்களோ, நாம் வழங்கியவற்றிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் கொடுக்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக என்றைக்கும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவன் முழுமையாகக் கொடுப்பான். இன்னும் தன் அருளிலிருந்தும் அவர்களுக்கு மிகுதப் படுத்துவான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும் நன்றியை ஏற்றுக் கொள்ளுபவனுமாவான். (35 : 29-30)

உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: தாமும் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் அதனைக் கற்றுக் கொடுப்பவர்தாம் உங்களில் சிறந்தவராவார்|என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவருக்கு அல்லாஹ் திருக்குர்ஆனைக் (கற்றுக்) கொடுத் தான். அதன் மூலம் அவர் இரவு-பகலில் நின்று வணங்கினார். இன்னொருவருக்கு அல்லாஹ் பொருளாதா ரத்தை வழங்கினான். அதன் மூலம் அவர் இரவு-பகலில் நல்ல வழியில் செலவு செய்கிறார். இந்த இருவர் வி'யத்திலன்றி பொறாமை கொள்ளுதல் என்பது இல்லை| (புகாரி, முஸ்லிம்). மேலும் அபூ உமாமா (ரலி) வர்கள் அறிவிக்கின்றார்கள்: குர்ஆனை ஓதுங்கள். திண்ணமாக தன்னை  ஓதக் கூடியவர்களுக்கு மறுமை நாளில் அது பரிந்துரை செய்யக் கூடியதாக வரும். (முஸ்லி;ம்)

நபியவர்கள் கூறினார்கள்: குர்ஆனை திறமையாகக் கற்றுத்தேர்ந்தவர், நல்ல கண்ணியமிக்க எழுத்தர் (மலக்கு) களுடன் இருப்பார். எவர் குர்ஆனை திக்கித் திக்கி ஓதுகின்றாரோ, மேலும் அவருக்கு அது கடினமாகவும் இருக்கின்றதோ அவருக்கு இரட்டைக் கூலி உண்டு| (புகாரி, முஸ்லிம்). ஒரு கூலி ஓதியதற்காக. மற்றொன்று சிரமத்துடன் அதை ஓதியதற்காக. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: எவர் குர்ஆனிலிருந்து ஒரே ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அதற்காக அவருக்கு ஒரு நன்மை கிடைக்கின்றது. அந்த ஒரு நன்மை அதைப் போன்று பத்து நன்மைகளாக அதிகரிக்கப்படுகின்றது. அலிஃப்-லாம்-மீம் என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். ஆனால் அலிஃப் ஒரு எழுத்து. லாம் ஒரு எழுத்து. மீம் ஒரு எழுத்து|. (திர்மிதி)


திருக் குர்ஆன் ஓதுவதின் ஒழுங்கு முறைகள்

அல்லாஹ்வுக்காக ஓதுகிறோம் என்ற தூய எண்ணத்துடன் ஓத வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: உங்க ளது கீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கிய வண்ணம் அவனை அழையுங்கள். (40 : 14)

கவனத்துடனும் மனஓர்மையுடனும் ஓத வேண்டும். ஏனெனில் குர்ஆன் அல்லாஹ்வின் வாக்காகும். சுத்தமான நிலையில் அதனை ஓத வேண்டும். இது அல்லாஹ்வின் வேதத்திற்கு நாம் அளிக்கும் கண்ணியமாகும். எனவே பெருந்துடக்கு போன்றவற்றிலிருந்து சுத்தமான நிலையில்தான் அதனை ஓதவேண்டும். அறுவறுப்பான இடங்களில் குர்ஆனை ஓதலாகாது. ஏனெனில் இது போன்ற இடங்களில் திருமறையை ஓதுவது கண்ணியக் குறைவானதாகும். மேலும் மல-ஜலம் கழிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களிலும் குர்ஆனை ஓதுதல் கூடாது. கண்ணியமிக்க குர்ஆனுக்கு இத்தகைய இடங்கள் ஒருபோதும் உகந்தவையல்ல.

திருக்குர்ஆனை ஓதுவதற்கு முன்பாக சபிக்கப்பட்ட i'த்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறியுள்ளான்: நீர் குர்ஆனை ஓதத் தொடங்குவீராயின் சபிக்கப்பட்ட i'த்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!. (16 : 98)

குர்ஆனை அழகான முறையில் ராகமிட்டு ஓத வேண்டும்.  ஜுபைர் பின் முத்இம் (ரலி)  அவர்கள் அறிவிக்கி றார்கள்: நபியவர்கள் மஃரிப் தொழுகையில் அத்தூர் அத்தியாயத்தை ஓதிடக் கேட்டேன். நபியவர்களை விட அழகிய குரலுடைய ஒருவரை அல்லது அழகாக ஓதுபவரை நான் கேட்டதில்லை|. (புகாரி, முஸ்லிம்)

தொழுபவர், தூங்குபவர் போன்றோருக்குத் தொல்லை தரும் வண்ணம் குரலுயர்த்தி ஓதலாகாது. ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். அங்கே மக்கள் குர்ஆனை சப்தமிட்டு ஓதிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுபவர் தன் இறைவனுடன் மெதுவாக உரையாடுகிறார். எனவே எதைக்கொண்டு அவனுடன் உரையாடுகிறார் என்பதைக் கவனித்துக் கொள்ளட்டும். மேலும் உங்களில் ஒருவர் மற்றவருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் முறையில் குர்ஆனை சப்தமிட்டு ஓத வேண்டாம்| (முஅத்தா). குர்ஆனை ஓதும்போது நிறுத்தி, நிதானமாக ஓத வேண்டும். அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்: மேலும் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (73 : 3). அத்தோடு திருக்குர்ஆனை ஓதுபவர் ஸஜ்தா வசனத்தைக் கடந்து சென்றால் ஸுஜூது செய்தல் வேண்டும்.

யா அல்லாஹ்! உனது வேதத்தை உனக்கு திருப்தியளிக்கின்ற வகையில் ஓதுகின்ற பாக்கியத்தைத் தந்தருள்வாயாக! மேலும் குர்ஆனை எங்களுக்குப் பாதகமாக அன்றி சாதகமாக ஆக்கி குர்ஆனை ஓதுவதன் மூலம் எங்களின் நன்மைகளை அதிகரித்து அந்தஸ்தை உயர்த்துவாயாக!
, ,