இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

22/07/2011

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

குத்பா பேருரைகள்
நோன்பின் மாண்புகள்

உலகில் மனித சமுதாயத்தை அல்லாஹ் படைத்ததின் நோக்கமே அவனை வணங்குவதற்காகத் தான். வணங்குவதற்கு இறையச்சம் அவசியமாகும். (வாழ்க்கைத் தேவைகளை) தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தயார்படுத்திக் கொள்வதில் இறையச்சம் தான் சிறந்த தயாரிப்பாகும் என்று குர்ஆன் (2:187) கூறுகின்றது.

வாழ்க்கையை வணக்கமாக்கத் தேவைப்படும் இறையச்சத்தை அடைவதற்கு இஸ்லாம் பல பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கிறது. அவற்றுள் மிக முக்கியமானது நோன்பாகும்.

ஈமான் கொண்டோரே..! உங்களுக்கு முன்னுள்ளோர் மீது கடமையாக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோராகி விடுவீர்கள். (2:183)

நோன்பின் சிறப்புகள் : நோன்பின் நோக்கம் இறையச்சத்தை அடையும் பாக்கியம் கிடைப்பதுடன், இம்மையிலும் மறுமையிலும் பல வெகுமதிகள் அதன் மூலம் கிடைக்கின்றன.

மற்ற அமல்களை விட நோன்பில் அல்லாஹ்வுக்காகவே செய்யும் மனத்தூய்மை ஏற்படுகிறது. யாருக்கும் தெரியாமல் உண்ணுவதற்கும், பருகுவதற்கும் வாய்ப்புகள் இருந்தும் நோன்பை கடைபிடிப்பது, இறைப் பொருத்தத்தை பெறுவதற்காகவே இருக்கும். அதில் முகஸ்துதி கலப்பது மிகக் குறைவு. எனவே தான் அல்லாஹ்வே கூலியை வழங்குபவனாகி விடுகின்றான்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஆதமின் மகனுடைய அமல்கள் (அவனின் எண்ணத்திற்கேற்ப) பத்து மடங்கிலிருந்து 700 மடங்கு வரை இரட்டிப்பாக்கப்படும். ஆனால் நோன்பை தவிர, (நோன்பைப் பற்றி) அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.நோன்பு எனக்காகவே செய்யப்பட்ட அமல். அதற்கு நானே பகரமாகி விடுவேன். ஏனெனில் அவன் எனக்காகவே உணவையும் மன ஆசைகளையும் விட்டு விட்டான் (புகாரீ)

அமல்களிலேயே நீண்ட நேரம் தொடர்ந்து நிறைவேற்றப்படும் அமல் நோன்பு ஆகும். எனவே அந்த நேரங்களில் அவனிடமிருந்து பாவச் செயல் ஏற்படுவது குறைவாகி விடுகிறது.

நோன்பு (பாவங்களைத் தடுக்கும்) கேடயமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

தனக்காகவே வாழும் காதலி எந்த கோலத்தில் இருந்தாலும் அவளை வெறுக்காமல் காதலன் பிரியம் கொள்வான். அவ்வாறே தனக்காகவே நிறைவேற்றும் நோன்பாளியின் நிலைமை அல்லாஹ்வுக்கு பிரியமாகி விடுகிறது.

நோன்பாளியின் வாய் நாற்றம் கஸ்தூரி வாசனையை விட அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமாக உள்ளது. (புகாரீ, முஸ்லிம்)

விருப்பமான உணவை உண்பதிலும், குடிப்பதிலும் மனிதர்களுக்கு இயற்கையில் அதிக ஆசையுண்டு. சிலர் டீ குடிப்பது, வெற்றிலை போடுவது போன்ற குறிப்பான உணவை அடிக்கடி உபயோகிப்பதை பழக்கமாக்கிக் கொண்டிருப்பர். அவர்கள் நோன்பு திறந்து அவ்வுணவை உட்கொள்வதில் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. இதைத் தான் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள் :

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி உண்டு. ஒன்று நோன்பு திறக்கும் போது, மற்றொன்று மறுமையில் தனது இறைவனைச் சந்திக்கும் போது. (புகாரீ, முஸ்லிம்)

நோன்பாளிக்கு சுவனம் கிடைப்பது உறுதி என்பதை மேலுள்ள நபிமொழி சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில் சுவனத்தில் தான் அல்லாஹ்வை பார்க்கப்படும்.

அரசாங்கம் தனது கோரிக்கையை ஏற்க முன் வராத போது கோரிக்கை விடுப்போர் உண்ணா விரதப் போராட்டம் மேற்கொள்கிறார்கள். போரட்டம் நீடிக்க நீடிக்க தானாகவே அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கு முன் வந்து விடுகின்றது. மனிதன் பசித்திருப்பதைப் பார்த்து மனிதனே இரக்கப்படும் போது தாயை விட எழுபது மடங்கு இரக்கமுள்ள இறைவன் நோன்பு வைத்திருக்கும் மனிதனைப் பார்த்து இரக்கப்படாமல் இருப்பானா? நிச்சயம் கோரிக்கையை ஏற்பான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நியாயம் காக்கும் தலைவன், அநீதி இழைக்கப்பட்டவன், நோன்பாளி ஆகிய மூவரின் பிரார்த்தனைகள் இறைவனிடம் மறுக்கப்படுவதில்லை. அந்தப் பிரார்த்தனைகளை இறைவன் மேகத்துக்கு மேலாக உயர்த்துகின்றான். ஏழு வானங்களின் கதவுகளும் திறந்து அந்த பிரார்த்தனைக்கு வழி விடுகின்றன. எனது கண்ணியத்தின் மீதும் கம்பீரத்தின் மீதும் ஆணையாக (காலம் கடந்தாலும்) நான் உனக்கு உதவி செய்தே தீருவேன் என இறைவன் கூறுகிறான். (திர்மிதீ)

மற்றொரு ஹதீஸில் இப்படி வந்துள்ளது, நோன்பு திறக்கும் வேளையில் நோன்பாளிகள் கேட்கும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. (நூல் : பைஹகீ)

பாவத்திற்குப் பரிகாரம்:

நோன்பின் மூலம் மனிதன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : எவர் ரமளான் மாதத்தின் நன்மையை நாடி அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட நிலையில் நோன்பு நோற்பாரோ அவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரீ, முஸ்லிம்)

நோன்பின் மூலம் மனிதன் செய்த பாவங்கள் உடனே மன்னிக்கப்படுவதினால் தான் பல குற்றங்களுக்குப் பரிகாரமாக அல்லாஹ் நோன்பை ஆக்கியுள்ளான்.

ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிய ஒருவருக்கும் தலையில் நோய் ஏற்பட்டு அதனால் முடி வெட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முடி களைந்து விட்டு அதற்குப் பரிகாரமாக நோன்பு வைத்துக் கொள்ளுமாறு குர்ஆன் (2:196) கட்டளையிடுகிறது.

ஆடு அறுக்க அவசியமான ஹஜ்ஜில் ஆடு அறுக்கவில்லையெனில் ஹஜ்ஜுக் காலத்தில் 3 நோன்பும், ஊருக்கு வந்து 7 நோன்பும் நோற்க வேண்மென 2:196 வசனம் கூறுகின்றது.

சத்தியம் செய்து அதை முறித்து விட்டால் அதற்குள்ள குற்றப்பரிகாரங்களில் ஒன்று மூன்று நாட்கள் நோன்பு வைப்பது என 5:69 வசனம் கட்டளையிடுகிறது.

இஹ்ராம் கட்டியோர் வேட்டைப் பிராணிகள் எதையும் கொல்லக் கூடாது. அப்படிக் கொன்று விட்டால், அந்தப் பிராணிக்கு ஈடாக நோன்பு வைப்பது அதன் பரிகாரங்களில் ஒன்று என அல்குர்ஆன் (5:95) அருள்கிறது.

வேண்டுமென்று நோன்பை முறித்து விட்டால் தொடர்ந்து 60 நாட்கள் நோன்பு நோற்க வேண்டுமென நபிமொழி கூறுகிறது.

நோன்பின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதற்கு குற்றப் பரிகாரங்களில் ஒன்றாக இறைவன் நோன்பைக் கூறுவதே சிறந்த சான்றாகும். நோன்பின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருளும், அவனது திருப் பொருத்தமும் சுவனமும் கிடைப்பதுடன் உடல் ரீதியான நலனும் கிடைக்கின்றன. எனவே தான் அல்லாஹ் இப்படிக் கூறுகிறான். (2:184)

நோன்பின் பலனை) விளங்குபவர்களாக இருந்தால் நோன்பு நோற்பது தான் உங்களுக்குச் சிறந்ததாகும். (2:184)

நமது உடலின் செரிமானப் பகுதியுடன் பல உறுப்புக்கள் இணைந்துள்ளன. வாய், தாடையிலுள்ள எச்சில் சுரக்கும் பகுதியில் ஒன்றோடொன்று இணைந்து சேர்கின்றன. இப்பகுதி தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாலும், கரடு முரடான உணவை உட்கொள்வதாலும் அப்பகுதியில் இணைந்துள்ள உறுப்புக்களில் பழுதும், பாதிப்பும் உண்டாகி விடுகின்றன. குறிப்பாக ஈரலுக்கு அதிக பாதிப்பு உண்டாகிறது. ஒரு கிராமை விட மிகச் சிறிய அளவுள்ள உணவை விழுங்கினாலும் இரைப்பையிலுள்ள செரிமானப் பகுதியில் சம்பந்தப்பட்ட அனைத்து உறுப்புகளும் இயங்க ஆரம்பித்து விடும். ஈரலும் தனது பணியைத் தொடங்கி விடும். நோன்பின் மூலமாக ஈரலுக்கு செரிமானப் பகுதிக்கும் நான்கு மணி முதல் ஆறு மணி வரை முழுமையான ஓய்வு கிடைக்கிறது. நோன்பில்லாமல் மற்ற விரதங்கள் மூலமாக இந்த முழு ஓய்வு கிடைப்பதில்லை. இந்த ஓய்வின் மூலமாக நூற்றுக்கணக்கான நோய்கள் உருவாகாமல் தடுக்கப்படுகின்றன.

தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு நோற்பதின் மூலமாக உடல் வலிமை குன்றி பலவீனமாகி விடுவோம் என பலர் பயப்படுகின்றனர். ஆனால் பசித்திருந்து உடலை பழக்கப்படுத்துவதால், தேவையான நேரத்தில் உடல் வலிமை பெறுகிறது என்பதற்கு வரலாறு சான்றாக உள்ளது.

அநியாய அரசனான ஜாவீதை எதிர்கொள்வதற்குப் புறப்பட்ட தாலூத்தின் படையில் தண்ணீர் அருந்தாமல் தாகத்துடன் இருந்தவர்கள் தைரியமாக யுத்தம் செய்தார்கள். வயிறு நிரம்ப தண்ணீர் அருந்தியவர்கள் இடைவழியிலேயே கோழையாகி பின் தங்கினார்கள் என குர்ஆன் கூறுகின்றது.

பசித்திருந்து நோன்பு நோற்பதின் மூலமாக மனிதன் தனது சக்திக்கு அப்பாற்பட்ட மனவலிமை பெறுகிறான். மூஸா (அலை) அவர்கள் தன்னை சந்திக்க வருவதற்கு முன் 10 நாட்கள் நோன்பு நோற்க வேண்டுமென இறைவன் கட்டளையிட்டிருப்பதற்கு காரணம் அதற்குரிய மனவலிமையை பெற வேண்டுமென்பதற்காகத் தான்.

இஸ்லாமிய வரலாற்றில் பல போர்கள் நோன்புக் காலத்திலேயே நடைபெற்றிருக்கின்றன.

நோன்பின் மூலமாக உடல் ஆரோக்கியமும் மனவலிமையும் கிடைக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை. ஆனால் நோன்பாளியின் எண்ணம் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதாகவும் நன்மையை நாடுவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறில்லையெனில் மறுமையில் நன்மை கிடைக்காது.

எப்போது பலன் :

இம்மையிலும் மறுமையிலும் நோன்பின் பலன்கள் முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் அதற்குரிய கட்டுப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும். வயிற்றுடன் மட்டும் நோன்பு சம்பந்தப்பட்டதல்ல. மாறாக ஐம்புலன்களுக்கும் சம்பந்தமுண்டு. உடல் உறுப்புக்களை ஹராமான வழியில் பயன்படுத்தக் கூடாது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : நோன்பு என்பது ஒரு கவசம். உங்களில் ஒருவர் நோன்பாளியாக இருந்தால் முட்டாள்தனமான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம். வேறு எவராவது அவரிடம் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி என்று கூறி ஒதுங்கிச் சென்று விட வேண்டும். நோன்பின் உரிமைகளை மீறவில்லையாயின் அது நரகத்திலிருந்து ஒருவனைக் காக்கும் கேடயமாகும்.

அதன் உரிமை மீறல் என்றால் என்ன? என ஒருவர் விளக்கம் கேட்ட போது பொய் பேசுவதும், புறம் பேசுவதுமாகும் என அண்ணலார் பதிலுரைத்தார்கள் (புகாரீ)

நோன்பு வைத்துக் கொண்டு பொய் பேசுவது, சினிமாப் பார்ப்பது, அன்னியப் பெண்களைப் பார்ப்பது, ஆபாச இசைப் பாடல்களைக் கேட்பது, வீண் விளையாட்டுக்கள் விளையாடுவதால் நோன்பின் பலனை அடைய முடியாது. எனவே தான் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள் :

நோன்பாளிகள் பலருக்கு தாகித்திருப்பதைத் தவிர நோன்பின் பலன்களில் எதுவும் கிடைப்பதில்லை. (தாரமீ)

நோன்பை விடுவதால் :

இம்மை மறுமையின் நற்பலனை தருவதுடன் பாவத்திற்குப் பரிகாரமாக அமைந்திருக்கும் நோன்பின் மாண்புகளை உணராமல் யார் ரமளான் மாதத்தில் எவ்வித தக்க காரணமின்றி நோன்பை விட்டு விடுவாரோ அவர் உண்மையிலேயே நஷ்டவாளி தான். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றிருந்த போது, நோன்பு நோற்காதவருக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் சாபமிட நபி (ஸல்) அவர்கள் 'ஆமீன்' கூறினார்கள்.

முழு உலகிற்கும் ரஹ்மத்தாக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் சர்வசாதாரண விசயத்திற்காக அடுத்தவர்களை சாபமிட மாட்டார்கள். பெரும் பாவமான காரியமாக இருந்தால் தானே சாபமிடுவார்கள்.

நோய் மற்றும் தங்கடமின்றி ரமளான் மாதம் ஒரு நாள் யார் நோன்பை விடுவாரோ அவர் அதற்கு பகரமாக காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும் (அதன் அருளுக்கு) ஈடாகாது. (அஹ்மது)
எனவே, ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக..!, ,