குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

26.10.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மாமனிதர்-12
என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏமனுக்கு (இன்று இது தனி நாடாகவுள்ளது.) ஆளுநராக அனுப்பினார்கள். நான் ஏமன் நோக்கிப் புறப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னுடன் ஊர் எல்லை வரை வந்தார்கள். நான் வாகனத்தில் அமர்ந்திருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாகனத்திற்குக் கீழே தரையில் கூடவே என்னுடன் நடந்து வந்தார்கள்.
விடை பெறும் போது, 'முஆதே! இவ்வருடத் திற்குப் பின் அநேகமாக என்னைச் சந்திக்க மாட்டீர்! அல்லது எனது பள்ளிவாசலையோ, எனது அடக்கத்தலத்தையோ தான் சந்திப்பீர்' எனக் கூறினார்கள். இதைக் கேட்டு நான் அழலானேன். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பி மதீனாவை நோக்கி நடந்தார்கள். நூல் : அஹ்மத் 21040, 21042.

தம்மால் நியமனம் செய்யப்பட்ட ஒரு அதிகாரி வாகனத்தில் இருக்க, அவரை நியமனம் செய்த அதிபர் அவருடன் கூடவே நடந்து சென்ற அதிசய வரலாற்றை உலகம் கண்டதில்லை.

அவரிடம் பேச வேண்டியவைகளை ஊரிலேயே பேசி அனுப்பி இருக்கலாம். சாதாரண நண்பருடன் பேசுவது போல் பேச வேண்டியவைகளைப் பேசிக் கொண்டு செல்கிறார்கள் என்றால் இவர்கள் புகழுக்காக பதவியைப் பெற்றிருப்பார்கள் என்று கற்பனை கூட செய்ய முடியுமா?

சாதாரண பஞ்சாயத்துத் தலைவர் தனது ஊழியரிடம் இப்படி நடக்க முடியாது. சிறு நிறுவனத்தின் முதலாளி ஒருவர் தனது தொழிலாளியுடன் இப்படி நடக்க முடியாது.

உலக வல்லரசின் அதிபரால் இப்படி நடக்க முடிந்தது என்றால் இதிலிருந்து நபிகள் நாயகத்திற்குப் புகழாசை எள்ளளவும் கிடையாது என்பதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் கட்டிய பள்ளிவாசலில் தொழுகையின் போது முன்னோக்கும் சுவற்றில் யாரோ மூக்குச் சளியைச் சிந்தியிருந்தனர். இதனைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமே அதை நோக்கிச் சென்று தமது கரத்தால் அதைச் சுத்தம் செய்தார்கள்.நூல் : புகாரி 405, 406, 407, 409, 411, 414, 417, 6111

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இலேசாகச் சாடை காட்டினால் கூட இந்த வேலையை அவர்களின் தோழர்கள் செய்யக் காத்திருந்தனர். அல்லது யாருக்காவது உத்தரவு போட்டு அதை அப்புறப் படுத்தியிருக்கலாம். சாதாரண மனிதர் கூட பொது இடங்களில் இந்த நிலையைக் காணும் போது யாராவது அப்புறப்படுத்தட்டும் என்று கண்டும் காணாமல் இருப்பார். அல்லது மரியாதைக் குறைந்தவர்களாகக் கருதப்படும் நபர்கள் மூலம் அதைச் சுத்தம் செய்வார்.

ஆனால், மாபெரும் வல்லரசின் அதிபரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ சாதாரண மனிதன் எதிர்பார்க்கின்ற மரியாதையைக் கூட விரும்பவில்லை. தாம் ஒரு மன்னர் என்பதோ, தமது தகுதியோ அவர்களுக்கு நினைவில் வரவில்லை. தாம் ஒரு நல்ல மனிதராக நடந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் விருப்பமாக இருந்தது.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) தமது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார்.

நான் அதிகமாக நோன்பு நோற்று வரும் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவர்கள் என்னிடம் வந்தார்கள். கூளம் நிரப்பப்பட்ட தலையணையை அவர்கள் அமர்வதற்காக எடுத்துப் போட்டேன். அவர்கள் அதில் அமராமல் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்குமிடையே தலையணை கிடந்தது. 'மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது உனக்குப் போதுமானதில்லையா?' என்று என்னிடம் கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! ஐந்து நாட்கள் நோன்பு வைக்கலாமா?' என்று கேட்டேன். 'ஐந்து நாட்கள் நோன்பு வைத்துக்கொள்' எனக் கூறினார்கள். 'அல்லாஹ் வின் தூதரே! ஏழு நாட்கள் நோன்பு வைத்துக் கொள்ளட்டுமா?' என்று நான் கேட்டேன். 'ஏழு நாட்கள் நோன்பு வைத்துக் கொள்' என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! 'ஒன்பது நாட்கள் நோன்பு வைத்துக் கொள்ளட்டுமா' என்று கேட்டேன். 'ஒன்பது நாட்கள் நோன்பு வைத்துக் கொள்' என்றார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! பதினோரு நாட்கள் நோன்பு வைக்கட்டுமா' என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பதை விட சிறந்த நோன்பு ஏதுமில்லை' என்ற கூறினார்கள். நூல் : புகாரி 1980, 6277

இந்த நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல்வேறு குணநலன்கள் பிரதிபக்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய ஆன்மீக நெறியில் வரம்புக்கு உட்பட்டே வணக்க வழிபாடுகள் நிகழ்த்த வேண்டும். கடவுளுக்குப் பணி செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டு மனைவி மக்களை, மனித குலத்தை மறந்து விடக்கூடாது. அப்துல்லாஹ் பின் அம்ர் என்ற நபித்தோழர் எப்போது பார்த்தாலும் நோன்பு நோற்றுக் கொண்டிருக்கிறார். மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இதனால் சரி வரச் செய்யவில்லை. நபிகள் நாயகத்திடம் இவரைப் பற்றிய புகார் வந்ததும் அவர்கள் அவரை அழைத்து வரச் செய்திருக்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அழைக்கிறார்கள் என்றால் அவர் ஓடோடி வந்திருப்பார். ஆனால், அவருக்கு அறிவுரை கூறுவதற்காக அவரைத் தேடி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். தமது பதவியைப் பயன்படுத்தி அதிகாரம் செலுத்துவதை நபிகள் நாயகம் (ஸல்) விரும்பியதில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

நமது நாட்டின் அதிபதியாகிய நபிகள் நாயகம் நம்மைத் தேடி வந்து விட்டார்களே என்றெண்ணி அவர்கள் அமர்வதற்காக கூளம் நிரப்பப்பட்ட தலையணையை அப்துல்லாஹ் பின் அம்ர் எடுத்துப் போடுகிறார். கண்ணியமாகக் கருதப்படுபவர்கள் இவ்வாறு மரியாதை செய்யப்படுவது வழக்கமாகவும் இருந்தது. இன்றைக்கும் கூட நம்மை விட ஏதோ ஒரு வகையில் சிறப்புப் பெற்றவர்கள் நம்மைத் தேடி வந்தால் வெறும் தரையில் அவர்கள் அமர மாட்டார்கள்.

மாமன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதன் மீது அமர்ந்தால் பதவிக்காக பெற்ற கவுரவமாகக் கூட அது கருதப்படாது. அவ்வாறு இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தவிர்க்கிறார்கள்.

இருவர் அமரும் போது இருவரும் சமநிலையில் அமர வேண்டும் என்பதால் அந்தத் தலையணையில் அவர்கள் அமரவுமில்லை; அதன் மீது சாய்ந்து கொள்ளவுமில்லை; இருவருக்கும் நடுவில் அதை எடுத்துப் போடுகிறார்கள்.

தமக்காகச் சிறப்பான மரியாதை தரப்பட வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) விரும்பியதில்லை; அப்படியே தரப்பட்டாலும் அதை ஏற்பதில்லை என்பதையும் இந்நிகழ்ச்சியிருந்து அறிந்து கொள்ளலாம்.

மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது போதுமே என்றதும் அவர் அதைக் கேட்டிருக்க வேண்டும். மன்னர்களின் கட்டளையை அப்படியே ஏற்பது தான் மனிதர்களின் இயல்பாகவுள்ளது. ஆனால் இவரோ ஐந்து நோன்பு, ஏழு நோன்பு, ஒன்பது நோன்பு, பதினொன்று நோன்பு என்று ஒவ்வொன்றாகக் கேட்கிறார். இவ்வாறு நம்மிடம் ஒருவர் கேட்டால் நமக்கு ஆத்திரம் வராமல் இருக்காது. 'ஒரேயடியாகக் கேட்டுத் தொலைக்க வேண்டியது தானே' என்று கூறுவோம். அல்லது 'என்னப்பா கேலி செய்கிறாயா?' எனக் கேட்போம். இந்தத் தோழரின் நடவடிக்கைகள் இப்படித் தான் இருந்தன.

ஆனால், இந்த மாமனிதர் குழந்தைகளின் சேட்டையைச் சகித்துக் கொள்ளும் தந்தையைப் போல் பொறுமையாகப் பதில் கூறுகிறார்கள்.

நபிகள் நாயகத்தின் இந்தப் பண்பாடு அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்ததால் அவரும் இப்படி நடந்து கொள்ள முடிந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் 'இந்த ஆட்டைச் சமையுங்கள்' என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்' என்று விடையளித்தார்கள். நூற்கள் : அபூதாவூத் 3773, பைஹகீ 14430

ஒரு உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து அமர்வதை மரியாதைக் குறைவாகவே கருதுவார்கள். பலரும் கைகளைப் போட்டுச் சாப்பிடும் தட்டில் சாப்பிடுவதை அருவருப்பாகக் கருதுபவர்களும் உள்ளனர்.

ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் கைகளைப் போட்டுச் சாப்பிடும் அதே தட்டில் தாமும் சாப்பிட்டார்கள். அது மட்டுமின்றி பொதுவாக சம்மனமிட்டு அமர்வது தான் சாப்பிடுவதற்கு வசதியானது. மண்டியிட்டு அமர்வது வசதிக் குறைவானது என்பதை அறிவோம்.

மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்குரியதாகக் கருதப்பட்டு வந்ததால் தான் கிராமவாசி அதைக் குறை கூறுகிறார். தாம் ஒரு ஆட்சியாளர் என்றோ, மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர் என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைக்கவில்லை. மற்றவர்களைப் போல் பசித்திருக்கக் கூடிய ஒரு மனிதராக மட்டும் தான் தம்மைக் கருதினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு வந்த உணவைத் தான் மற்றவர்களுக்கு வழங்கினார்கள். எனவே வீட்டில் தமக்கென எடுத்து வைத்துக் கொண்டு தனியாகச் சாப்பிட்டிருக்க முடியும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த விதமான கவுரவமும் பார்க்கவில்லை. மண்டியிட்டு அமர்ந்து சாப்பிட்டது மட்டுமின்றி இன்னொருவர் அமரக்கூடிய இடத்தை ஆக்கிரமித்து வசதியாக அமர்வதைக் கூட அடக்குமுறையாக அவர்கள் கருதுகிறார்கள். பெருந்தன்மை மிக்க அடியானாக இருப்பது தான் தமக்கு விருப்பமானது எனவும் குறிப்பிடுகிறார்கள்.

இத்தகைய பண்பாளர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனி மரியாதை பெற்றார் எனக் கூற முடியுமா?

ஒரு மனிதர் முதன் முதலாக நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். 'சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்' என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.நூல் : இப்னு மாஜா 3303

உலகம் முழுவதும் அவர்களை மாபெரும் அதிகாரம் படைத்தவராகப் பார்க்கிறது. அவர்களோ, தம்மை ஏழைத்தாயின் புதல்வன் என்றே நினைக்கிறார்கள். இந்தப் பதவி, அதிகாரத்தால் தமக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறார்கள்.

பதவியைப் பயன்படுத்தி சொத்து சுகம் சேர்க்காவிட்டாலும் இது போன்ற கவுரவத்தையாவது அவர்கள் பெற்றிருக்கலாம். அதைக் கூட விரும்பாத எளிமை அவர்களுடையது.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல் படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்த போது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். விடுங்கள் எனக் கூறி அந்தத்துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். நானும் உங்களைப் போன்ற மனிதன் தான் எனவும் கூறினார்கள். நூல் : தப்ரானி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையும் மறுத்தால் உறுதியாக மறுப்பார்கள். எனவே தான் குடையாகப் பயன்பட்ட துணியை வாங்கி மடித்து வைத்துக் கொள்கிறார்கள். மறுத்தது மட்டுமின்றி குடையைப் பிடுங்கி வைத்துக் கொண்டதிலிருந்து இந்த மறுப்பு உளப்பூர்வமானது என்பதை அறியலாம். அது மட்டுமின்றி 'நானும் உங்களைப் போன்ற மனிதனே' என்று கூறி பதவி மற்றும் அதிகாரம் காரணமாக எந்த உயர்வும் இல்லை என்பதைப் பிரகடனம் செய்கிறார்கள்.

அவர்களின் எளிமைக்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்.

அறுக்கப்பட்ட ஆட்டின் தோலை ஒரு இளைஞர் உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஒதுங்கிக் கொள்! உனக்கு எப்படி உரிப்பது என்று காட்டித் தருகிறேன்' என்றார்கள். தோலுக்கும், இறைச்சிக்குமிடையே தமது கையை அக்குள் வரை விட்டு உரித்தார்கள். நூற்கள் : அபூதாவூத் 157, இப்னுமாஜா 3170

ஒருவருக்கு ஆடு உரிக்கத் தெரியாவிட்டால் அவர்கள் கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டிருக்கலாம். அல்லது இப்படித் தான் உரிக்க வேண்டும் என்று வாயால் கூறலாம். போலியான எந்தக் கவுரவமும் பார்க்காமல் தாமே ஆட்டுத் தோலை உரித்துக் காட்டிக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்களின் மொத்த வாழ்க்கையே எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறது எனலாம்.

வீதியில் செல்லும் போது சிறுவர்களைக் கண்டால் அவர்கள் முந்திக் கொண்டு சிறுவர்களுக்கு சலாம் கூறுவார்கள். நூல் : புகாரி 6247

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவர்களாகிய எங்களுடன் கலந்து பழகுவார்கள். எனது தம்பி அபூ உமைரிடம் 'உனது குருவி என்ன ஆனது?' என்று விசாரிக்கும் அளவுக்கு சிறுவர்களுடன் பழகுவார்கள். நூல் : புகாரி 6129

நான் அபீஸீனியாவிலிருந்து வந்தேன். அப்போது நான் சிறுமியாக இருந்தேன். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடையை அவர்கள் எனக்கு அணிவித்தார்கள். அந்த வேலைப்பாடுகளைத் தொட்டுப் பார்த்து 'அருமை அருமை' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு காலித் (ரலி), நூல் : புகாரி 3874

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் முதல் தொழுகையைத் தொழுதேன். பின்னர் அவர்கள் தமது குடும்பத்தாரிடம் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது எதிரில் சிறுவர்கள் சிலர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரின் கன்னத்தையும் தடவிக் கொடுத்துக் கொண்டே சென்றனர். அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமூரா (ரலி) நூல் : முஸ்லிம் 4297

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த நற்குணம் கொண்டவர்களாக இருந்தனர். ஒரு நாள் என்னை ஒரு வேலைக்கு அனுப்பினார்கள். நபிகள் நாயகம் கூறிய வேலையைச் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு 'அல்லாஹ்வின் மீது ஆணையாக போக மாட்டேன்' எனக் கூறினேன். நான் புறப்பட்டு கடை வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கருகில் வந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் பின்புறமாக எனது பிடரியைப் பிடித்தனர். அவர்களை நான் நோக்கிய போது அவர்கள் சிரித்தனர். 'அனஸ்! நான் கூறிய வேலையைச் செய்தாயா?' எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! இதோ செய்கிறேன்' என்று கூறினேன். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒன்பது வருடங்கள் அவர்களுக்கு நான் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த ஒரு காரியம் குறித்து ஏன் இப்படிச் செய்தாய்?' என்றோ, நான் செய்யாத ஒரு காரியம் குறித்து இப்படிச் செய்திருக்க மாட்டாயா?' என்றோ அவர்கள் கடிந்து கெண்டதில்லை' என அனஸ் (ரலி) அறிவிக்கிறார். நூல் : முஸ்லிம் 4272

சிறுவர்கள் மீது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்பு செலுத்திய நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. இத்தகைய பண்பாளர் தமது பதவியைப் பயன்படுத்தி மரியாதையையும், புகழையும் எதிர்பார்த்திருக்க முடியுமா?

நபிகள் நாயகம் ஸல் வாழ்கை வரலாறு 12
, ,