இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

16/05/2013

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஃபாத்திமா(ரலி) பின்த் முஹம்மது(ஸல்)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கூறினார்கள் :

''சுவனத்துப் பெண்களின் தலைவியாக நீங்கள் விரும்புகின்றீர்களா?''

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

''ஒருநாள் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கள் சுவனத்துப் பெண்களின் தலைவியாக இருப்பார்கள்'' என்ற நன்மாராயத்தைக் கூறினார்கள்.ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் போலவே (குணாதிசயங்களைப் பெற்று) இருந்தார்கள். அவர்களது பேச்சு, உட்காரும் முறை, எழுந்திருக்கும் முறை மற்றும் நடக்கும் முறை - இன்னும் வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் அவர்களது அனைத்து குணநலன்களும் மற்றும் பாவனைகளும் (இறைத்தூதர் (ஸல்)) அவர்களைப் போலவே இருந்தது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இளைய மகள் மற்றும் பிரியத்திற்குரிய மகளாக ஃபாத்திமா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள், தனது அபீதாலிப் அவர்களது மகனாரான அலீ (ரலி) அவர்களை மணம் புரிந்து கொண்டார்கள். அதன் மூலம் வீரத்தியாகிகளான ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோரின் தாயார் என்ற சிறப்பையும் பெற்றுக் கொண்டவரானார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு தூதுத்துவம் கிடைத்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ஃபாத்திமா (ரலி) அவர்கள் பிறந்தார்கள். இன்னும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் கதீஜா (ரலி) ஆகிய தம்பதிகளுக்கு பாசமிகு மகளாக ஃபாத்திமா (ரலி) அவர்கள் பிறப்பதற்கு முன்பே, இந்தத் தம்பதிகளுக்கு மூன்று பெண் மக்கள் இருந்தார்கள். அன்றைய கால வழக்கப்படி, பிறந்த குழந்தையை பால் குடிப்பதற்காக பக்கத்துக் கிராமத்திற்கு அனுப்பி வைக்கின்ற வழக்கத்திற்கு மாற்றமாக, அன்னை கதீஜா (ரலி) அவர்கள் தனது இளைய மகளை தன்னுடனேயே வைத்துக் கொண்டு, பாலூட்டி வளர்த்து வந்தார்கள். கடைசி மகளை பாசத்தோடு வளர்ப்பதில் மிகவும் அக்கறை காட்டிய அன்னையவர்கள், பிறரிடம் தனது மகளை வளர்ப்பதற்காக விடுவதை ஏற்றுக் கொள்ளவில்லை. சில ஆண்டுகளிலேயே, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நபித்துவப் பட்டமும் இறைவனால் வழங்கப்பட்டது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் தனது தூதராக அல்லாஹ் பிரகடனப்படுத்தியவுடன், தனது தந்தையார் அவர்களின் மார்க்கத்தை தனது தாயார் ஏற்றுக் கொண்ட ஆரம்ப காலப் பொழுதிலேயே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் கதீஜா (ரலி) அவர்களின் அருந்தவப் புதல்விகளான ஸைனப், ருக்கையா, உம்மு குல்தூம் (ரலி) ஆகியோர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போலவே, ஃபாத்திமா (ரலி) அவர்களும் இஸ்லாத்தை அதன் ஆரம்ப காலத்திலேயே ஏற்றுக் கொண்டார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் தனது தாய் மற்றும் தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்தார்கள். எனவே சத்தியத்திற்காகப் போராடும் குணம் அவருக்கு இயல்பாகவே வளர்ந்து வந்தது. இன்னும் தன்னால் இயன்ற நேரத்திலெல்லாம் தனது தந்தையாருக்கு வந்த எதிர்ப்புகளை எதிர்த்து நடை போட்டு வந்த வீரத்திற்குச் சொந்தக்காரராகவும் அவர் திகழ்ந்தார். இன்னும் தனது வசந்த கால இளமைப் பருவத்தை சொல்லொண்ணா துயரங்கள் நிறைந்த அபீதாலிப் பள்ளாத்தாக்கினிலும் அவர் கழித்திருக்கின்றார். இந்த அபீதாலிப் பள்ளத்தாக்கில் தான், முஸ்லிம்கள் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் கடுந் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள். இதில் தனது தந்தை மற்றும் தாய், சகோதரிகள் மற்றுமுள்ள முஸ்லிம்களுடன் முஸ்லிம்களாக துயரங்களை ஃபாத்திமா (ரலி) அவர்கள் உறுதியான மனநிலை கொண்டவராக அனுபவித்த சரித்திரத்திற்குச் சொந்தக்காரராகவும் அவர் இருந்தார். இந்த சோதனைகளும், வேதனைகளும் அந்த அபீதாலிப் கணவாயோடு மட்டும் முடியவில்லை. அங்கு அவரது உடல் நிலையில் ஏற்பட்ட தாக்கமானது, அவரது மரணம் வரைக்கும் அவரைத் துரத்திக் கொண்டே வந்தது. அன்றாட அலுவல்களான மாவரைத்தல், தண்ணீர் இரைத்தல், சமையல் வேலைகள் போன்றவைகள் கூட அவரை எளிதில் களைப்படைய வைத்தன. எனவே, அன்றாட வீட்டு வேலைகளில் தனக்கு உதவிகரமாக இருக்கட்டும் என நினைத்து, தனது தந்தையாரிடம் ஒரு அடிமைப் பெண்ணைப் பெற்றுக் கொள்ள விண்ணபித்த பொழுது, பொறுப்பான தந்தையாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள். மகளே..! உங்களது வீட்டு வேலைகள் உங்களைச் சோர்வடையச் செய்யும் பொழுதெல்லாம் வல்ல இறைவனை நீங்கள் துதித்து, அதன் மூலம் உங்களது களைப்பைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

சத்தியத்திற்காக தன்னை அற்பணித்துக் கொண்ட பெண்மணிகளுள் ஃபாத்திமா (ரலி) அவர்களைப் போல நாம் வேறு பார்த்ததில்லை''. உஹதுப் போர்க்களத்தில் படுகாயம் அடைந்த நபித்தோழர்களுக்கு உதவுவதில் மற்ற அன்ஸாரி மற்றும் முஹாஜிர்ப் பெண்களோடு பெண்களாக உதவி, சிகிச்சை அளித்தார்கள். தனது தந்தையும் இறைத்தூதருமான முஹம்மது (ஸல்) அவர்கள் உஹதுப் போர்க்களத்தில் கடுமையான காயங்களைப் பெற்ற பொழுது, அதனை வெகு எளிதான ஒன்றாக எடுத்துக் கொள்ளவில்லை. தனது தந்தைக்கு ஏற்பட்ட காயங்களுக்கு விரைந்து மருந்திட்டு, அதில் கட்டுப் போட்டு சிகிச்சை அளித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னை இறுதித்தூதர் என்று பிரகடனப்படுத்திக் கொள்வதற்கு முன்பதாக, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிக் குலத்தில் மிகவும் போற்றுதற்குரியவராக போற்றப்பட்டார்கள். கௌரவிக்கப்பட்டார்கள். வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுக் கொண்ட அந்த கறுப்புக் கல்லான ஹஜருல் அஸ்வத் கல்லை கஃபாவில் பதிப்பதற்கு நீதி வழங்கிய அவரது தீர்ப்பு, இன்றும் வரலாற்றில் வைர வரிகளாகப் பதியப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் தங்களது விலை மதிப்பற்ற பொக்கிஷங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு அந்தக் குறைஷிகள் அண்ணலார் (ஸல்) அவர்களைத் தான் நாடினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது இளமைக் காலத்திலேயே தான் ஒரு தொலைநோக்குச் சிந்தனை உள்ள திறமை கொண்ட வெற்றிகரமானதொரு வியாபாரியாகவும் திகழ்ந்தார்கள். அண்ணாரின் இளமைக்காலமானது மிகவும் செல்வாக்கு வாய்ந்த, பார்ப்பவர்கள் பிரமிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவில் அவர் ஒரு போற்றத் தக்க மனிதராக மக்காவில் வலம் வந்தார்கள். ஆனால், என்றைக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தன்னை ஒரு இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டார்களோ, அன்றிலிருந்து அவரது வாழ்க்கை தலைகீழாக முற்றிலும் மாறிப் போனது. முழு மக்கா நகரமும் பூமி அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட நகரமாக காட்சியளிக்க ஆரம்பித்தது. எதிர்ப்புகளும், குற்றச்சாட்டுகளும் அவர் மீது இடி கொண்ட மழையாக வீசப்பட்டதோடு, சமூகத்தின் கடைக் கோடி மனிதனைப் போல அண்ணலார் (ஸல்) அவர்களை மக்கத்துக் குறைஷிகள் நடத்தத் துவங்கினர். இன்னும் அவர் கொண்டு வந்த தூதை தடம் தெரியாமல் ஆக்குவதற்காக, அந்தத் தூதை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு எதிராக கடுமையான துன்பங்களையும், துயரங்களையும், சித்ரவதைகளையும் மக்கத்துக் குறைஷிகள் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தார்கள். முன்பு மலர்களாலும், புகழ் மாலைகளாலும் தொடுக்கப்பட்ட வீதி வரவேற்புகள் இப்பொழுது கற்களும், முற்களாலும், கொடு மதியாளர்களின் சூழ்ச்சியினாலும் பின்னப்பட்ட வஞ்சக வளையமாகக் காட்சியளிக்க ஆரம்பித்தது. ஏன், இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்யக் கூட அந்தக் கூட்டம் தயாராகவே இருந்தது. இந்த கடுமையான சோதனையான நாட்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களது வீட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த இயலவில்லை. இந்த சோதனையான கால கட்டத்தில் தான் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தனது இளமைப் பருவத்தை கடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களது இளமை வாழ்க்கை முதிர்ச்சியான தேர்ந்த பொறுமைசாலிகளுக்கே உரிய பொறுமையோடும், தன்னம்பிக்கையோடும், உறுதியோடும் கழிந்து கொண்டிரு;நதன.

இன்னும், தனது இளமைப் பருவத்தை தனது தந்தையைக் காப்பாற்றும் புலியாகவும் அவர்கள் வீரத்தோடு செயல்பட்டார்கள். அபூ ஜஹ்ல் மற்றும் உத்பா, ஷைபா போன்றோர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது தங்களது பலப் பிரயோகங்களைப் பிரயோகித்த பொழுது, ஃபாத்திமா (ரலி) அவர்கள் தனது தந்தைக்கு முன்பாக பாதுகாப்பு அரண் போல நின்றார்கள்.

ஒரு சமயம், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் கஃபா ஆலயத்திற்குள் தொழுது இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த பொழுது, அந்த நேரத்தில் தான் மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் ஒரு ஒட்டகத்தை பலி கொடுத்திருந்தனர். அறுக்கப்பட்ட அந்த ஒட்டகத்தின் மலம் மற்றும் குடலைப் பார்த்த அபூ ஜஹ்ல் என்பவனுக்கு ஒரு வித்தியாசமான திட்டம் உருவானது. தனது திட்டத்தை தனது நெருங்கிய சகாவான மனித குலம் அருவருக்கத்தக்க இழி பிறவியான உக்பா பின் முஈத் என்பவனிடம் அபூ ஜஹல் தெரிவித்தான். அபூ ஜஹ்ல் ன் திட்டத்தை நிறைவேற்ற துள்ளிக் குதித்து எழுந்த உக்பா பின் முஈத், அறுக்கப்பட்ட அந்த ஒட்டகத்தின் இரத்தம் தோய்ந்த மலத்துடன் கூடிய அந்த குடலை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரம் தாழ்த்தி தனது இறைவனைத் தொழுது கொண்டிருந்த பொழுது, கழுத்திலேயே அந்தக் குடலை தூக்கி வந்து போட்டான். உக்பா வின் இந்தச் செய்கை அங்கிருந்த ஏனைய நிராகரிப்பாளர்களுக்கு சிரிப்பையும் ஏளனத்தையும் ஊட்டியது. அந்த நேரத்தில் தனது வீட்டிலிருந்து ஃபாத்திமா (ரலி) அவர்களுக்குச் செய்தி எட்டியது தான் தாமதம், கஃபாவை நோக்கி விரைந்து வந்தார்கள். தனது தந்தையின் மீது போடப்பட்டிருந்த அந்த மலம் தோய்ந்த ஒட்டகக் குடலை, தனது பிஞ்சு விரல்களால் அப்புறப்படுத்தினார்கள். தனது தந்தையின் முதுகையும் சுத்தம் செய்து விட்டார்கள். இந்த ஈனச் செயலைச் செய்த அந்தக் குறைஷிகளைப் பார்த்து, கோபமான வார்த்தைகளால் வீசினார்கள். பின், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தொழுகையை நிறைவேற்றி முடிந்தவுடன், தன்னைப் படைத்த வல்லோனிடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள். யா அல்லாஹ்..! இந்த ஈனச் செயலுக்குக் காரணமாக அமைந்த அபூ ஜஹ்ல் பின் ஹிஷாம், ஷைபா பின் ரபீஈ உக்பா பின் முஈத் மற்றும் உமைய்யா பின் கலஃப் ஆகியோரை விட்டு விடாதே, உனது இறுக்கமான பிடியாக அவர்களைப் பிடித்துக் கொள் என்று பிரார்த்தித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பதைக் கண்ட அச்சமடைந்த அவர்கள், கஃபாவின் முன்பாக நின்று கொண்டு பிரார்த்திக்கப்படும் பிரார்த்தனையை நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான், தங்களுக்கு மிகப் பெரிய தண்டனை வரக் காத்திருக்கின்றது என்று கலவரமடைந்தார்கள். ஆம்..! அந்த ஷைத்தானிய சக்திகள் அச்சமடைந்தவாறே நடந்தது. இவர்களில் உக்பா பின் அபீ முஈத் என்பவனைத் தவிர மற்ற அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் படுகொலை செய்யப்பட்டு, வேரறுந்த மரமாக வீழ்ந்தார்கள். உக்பா பின் அபீ முஈத் என்பவன் மட்டும் சிறை பிடிக்கப்பட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் நிறுத்தப்பட்டான்.

உக்பா பின் அபீ முஈத் திற்கு மரண தண்டனை வழங்குமாறு தனது தோழர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதும், அவன் அச்சத்தால் துடிக்க ஆரம்பித்தான். 'எனக்கு அதிகமான குழந்தைகள் இருக்கின்றனர், அவர்களின் நிலை என்னாவது' என்று கெஞசினான். அதற்கு, அவர்கள் நரகத்திற்குச் செல்ல வேண்டியவர்களே..! என்றார்கள். நான் குறைஷி குலத்தின் ஒரு தலைவன் என்பதற்காகத் தானே, நீங்கள் என் மீது மரண தண்டனை விதித்திருக்கின்றீர்கள் என்றும் கேட்டான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஆம்..! என்னும் பாவனையோடு அவனைப் பார்த்தார்கள்.

பின்பு, தனது தோழர்களின் பக்கம் திரும்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், என்னருமைத் தோழர்களே..! இவன் செய்த காரியம் என்னவென்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டு விட்டு, ஒருமுறை நான் இறைவனைத் தொழுது எனது நெற்றியை நிலத்தில் வைத்து கஃபாவின் முன் வணங்கிக் கொண்டிருந்த பொழுது, எனது கழுத்தின் மீது தனது பாதங்களை வைத்து அழுத்தினான். அவன் என் கழுத்தின் மீது மிதித்து அழுத்தியதன் காரணமாக, எனது கண்கள் இரண்டு பிதுங்கி வெளியில் வந்து விடுமோ என்று அச்சம்படும் அளவுக்கு அவன் என்னைக் கொடுமைப்படுத்தினான். இன்னுமொரு முறை நான் தொழுது கொண்டிருந்த பொழுது, எனது தலை நிலத்தில் பதிந்திருந்த பொழுது, அவர்களது இணை தெய்வங்களான லாத்திற்கும், உஸ்ஸாவிற்கும் அறுத்துப் பலியிட்ட ஒட்டகத்தின் மலக் குடலை எனது பின்புறமாக என்மீது போட்டு விட்டு சிரித்து விளையாடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, என்மீது வீழ்ந்து கிடந்த அந்த அழுக்குகளை தனது பிஞ்சு விரல்களின் மூலமாக சுத்தம் செய்து விட்டார்கள் எனது அருமை மகளார் பாத்திமா (ரலி) அவர்கள் என்று கூறினார்கள்.

ஒருமுறை அபூஜஹ்ல் தனது தோழர்களுடன் கஃபாவின் முன்பதாக உட்கார்ந்து கொண்டு, ஏகத்துவப் பிராச்சாரத்தை மக்காவின் வீதிகளில் பரப்பிக் கொண்டும், தன்னை இறுதித்தூதராக அறிவித்துக் கொண்டும் இருக்கின்ற, இறைத்தூதர் (ஸல்) அவர்களை எவ்வாறு தீர்த்துக் கட்டுவது என்ற ஆலோசனையில் இருந்தனர். நமது தெய்வங்களை மறுக்கக் கூடிய குற்றத்தைப் புரிந்த இவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று அவர்கள் சூளுரைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த பாத்திமா (ரலி) அவர்களுக்கு இவர்களது திட்டம் காதில் விழுந்து விடுகின்றது. இதனால் கலவரப்பட்ட பாத்திமா (ரலி) அவர்கள், விரைந்து தன்னுடைய தந்தையாராகிய இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, இந்த அரக்கத்தனமாக மூடர்களின் சதித்திட்டத்தினை விவரிக்கின்றார்கள். இன்னும் அவர்கள் அழுது கொண்டே, தந்தையே..! அவர்கள் அவர்களது தெய்வங்களாக லாத், உஸ்ஸா, மனாத் மற்றும் நாயிலா ஆகியவற்றின் மீது சத்தியம் செய்துள்ளனர். நீங்கள் வீட்டினை விட்டு வெளியே வரும் பொழுது, அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களைத் தாக்கிக் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர் என்று கூறினார்கள்.

மகளே..! நீங்கள் அச்சப்பட வேண்டாம், உமது தந்தையின் பாதுகாவலனாக அல்லாஹ் இருக்கின்றான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மகளுக்கு ஆறுதல் கூறினார்கள். அதன் பின் எழுந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக தொழுகைக்காக ஒளுச் செய்து விட்டு, கஃபாவை நோக்கி நடக்கலானார்கள். அப்பொழுது அபூஜஹ்ல் மற்றும் அவனது தோழர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடந்து சென்ற பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை அன்னாந்து பார்த்தார்கள், பின்பு அவர்களது பார்வை நிலத்தை நோக்கித் திரும்பியது. அப்பொழுது அவர்கள், அல்லாஹ் அவர்களது முகங்களை புழுதி படியச் செய்யட்டும் என்று கூறினார்கள், அவ்வாறு கூறிக் கொண்டே குனிந்து கைநிறைய மண்ணை அள்ளி, அவர்கள் இருந்த திசையின் பக்கம் வீசி எறிந்தார்கள். இதனால் கலவரமடைந்த அபூஜஹ்ல் மற்றும் அவனது தோழர்கள், அவர்களில் எவரும் அந்த இடத்தை விட்டும் நகரச் சக்தி அற்றவர்களாக அல்லது பேச இயலாதவர்களாக உட்கார்ந்திருந்தார்கள். அல்லாஹ்வின் வல்லமை அவர்களை எதுவும் செய்யச் சக்தி அற்றவர்களாக ஆக்கி வைத்திருந்தது.

ஒருமுறை ஃபாத்திமா (ரலி) அவர்கள் அபூஜஹ்லைக் கடந்து சென்ற பொழுது, எந்தக் காரணமுமின்றி அந்த பிஞ்சுக் குழந்தையின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். அப்பொழுது குறைஷிகளின் தலைவராக இருந்த அபூசுப்யான் அவர்களிடம் சென்று, நாகரீகமற்ற முறையில் தனது கன்னத்தில் அபூஜஹ்ல் அறைந்து விட்டது பற்றி புகார் கூறினார்கள். அபூஜஹ்ல் இருக்கும் இடத்திற்கு ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்துச் சென்ற அபூசுப்யான் அவர்கள், இந்த கேடு கெட்ட அரக்க குணம் படைத்த அபூஜஹ்ல் உங்கள் கன்னத்தில் எவ்வாறு அறைந்தானோ, அதனைப் போலவே நீங்களும் அவனது கன்னத்தில் அறையுங்கள் என்று கூறினார். ஃபாத்திமா (ரலி) அவர்கள் வீட்டிற்குத் திரும்பி தனது தந்தையாரிடம் நிகழ்ந்தவற்றை விவரித்த பொழுது, அபூசுப்யான் அவர்களின் நீதமான நடவடிக்கையினால் கரவப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபூசுப்யான் அவர்கள் சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவனிடம் அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டது, பின்னாளில் அபூசுப்யான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு, ஏழு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. குறைஷிகள் தங்களது முழுப் பலத்தைப் பிரயோகித்தும், இஸ்லாத்தையும், அதன் தூதையும், அதற்குச் செவிமடுத்து இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கையையும் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த இயலவில்லை. கொடுமைகளுக்கு மேல் கொடுமைகளைக் கட்டவிழ்த்தும், பாலைவனச் சுடுமணலில் வெற்றுடம்புடன் தெருத் தெருவகாச் சிறுவர்களை விட்டு இழுத்துத் துன்புறுத்திய பொழுதும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், ''வணங்கத்தக்க இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருக்கின்றார்கள்'' என்றே முழங்கினார்கள். இந்தளவு கொடுமைகளைக் கண் முன்னால் கண்ட பொழுதிலும், முன்னைக்காட்டிலும் இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

இதனை விட, ஹம்ஸா பன் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களும், உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டபின், மக்காவில் பூகம்பமே வெடித்து விட்ட பிரளயமே ஏற்பட்டது. இஸ்லாத்தின் மீதும், அதன் கொள்கைகள் மீதும், அதனைப் பின்பற்றுபவர்கள் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட கூட்டம், குறைஷித் தலைவர்கள் மீது நெருக்கதல்களைக் கொடுக்க ஆரம்பித்தது. முஹம்மதையும், அவர்களைப் பின்பற்றுபவர்களையும் நாம் ஏதாவது செய்தாக வேண்டும், அவர்களையும், அவர்களது பிரச்சாரத்தையும் முடக்கிப் போட வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். இதன் பின்னணியில், மக்காவின் மிகப் பிரதான முக்கியஸ்தர்கள், செல்வந்தர்கள், செல்வாக்கு மிக்க பெருந்தலைகள் ஆகியோர்கள் கொண்டதொரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினான். அந்தக் கூட்டத்தில், நமது முன்னோர்கள் வழிவழியாகப் பின்பற்றி வருகின்ற கொள்கை செல்வாக்கிழந்து வருகின்றது, அதே நேரத்தில் முஹம்மதும் அவரது ஆதரவாளர்களின் கூட்டமோ பெருகிக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றது. இதே நிலை தொடருமானால், நாளை நம்முடைய நிலைமைகள் என்ன? இதனை தடுத்து நிறுத்துவது எவ்வாறு? என்ற கருப் பொருளில் விவாதம் தொடங்கியது.

அப்பொழுது நடைபெற்ற கூட்டத்தில், ஷைத்தானின் தோழனான நதர் பின் ஹாரித் என்பவனும் கலந்து கொண்டான். இவன் சிறுமதி படைத்த மற்றும் கேடு கெட்ட எண்ணங்களுக்குச் சொந்தக் காரனாகத் திகழ்ந்தான். அவனது எண்ணங்களும், கருத்துக்களும் கீழ்த்தரமானவைகளாகவே இருந்து வந்தன. அவன், முஸ்லிம்களை முழுமையான சமூக மற்றும் பொருளாதார பகிஷ்கரிப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தான். இவர்களுக்கு பேருதவி புரிந்து வருகின்ற பனூ ஹாஷிம் மற்றும் பனூ அப்துல் முத்தலிப் கோத்திரத்தார்களையும் பகிஷ்கரிப்பிற்குள் உட்படுத்த வேண்டும். உணவோ அல்லது தண்ணீரோ கூட அவர்களுக்கு வழங்கக் கூடாது. மேலும், அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்கக் குழு ஒன்றையும் அமைக்க வேண்டும். அதன் மூலம் இந்த புதிய மார்க்கத்தை அதன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கொக்கரித்தான். யாரும் எதிர்ப்பார்க்காத இந்தத் திட்டத்தை, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். இப்பொழுது சதித்திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக, முஸ்லிம்கள் சமூக மற்றும் பொருளாதார பகிஷ்கரிப்பிற்கு உட்படுத்தப்பட்டு, முஸ்லிம்களிடம் எந்தவித கொடுக்கல் வாங்கல்கள், திருமண உறவுகள், வியாபாரத் தொடர்புகள் என எதுவித உறவுகளும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற முடிவின் அடிப்படையில், சிஐப் அபீதாலிப் என்ற அபீதாலிப் பள்ளத்தாக்கில் ஒதுக்கப்பட்டனர்.

இவ்வாறாக சமூக பகிஷ்கரிப்பினால் ஒதுக்கப்பட்ட முஸ்லிம்கள் மூன்று வருடங்கள் துன்பத்தை அனுபவித்தார்கள். இருப்பினும், முஸ்லிம்களில் எவருடைய இதயமும் சத்தியத்தை நிராகரித்து விட்டு, அசத்தியத்திற்கு இணங்கிப் போகவில்லை. பசியினால் துடித்தன குழந்தைகள், சோபை இழந்து தவித்தனர் தாய்மார்கள், சகோதரிகள், உதவியற்ற முதியோர்கள் ஆகிய இத்தனை துன்ப துயரங்களுக்கிடையேயும், முஸ்லிம்களின் எவருடைய இதயமும் இளகி விடவில்லை. இதனை வரலாறு இவ்வாறு குறித்து வைத்துள்ளது. ''இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள் மீதும் முழுமையான சமூக பகிஷ்கரிப்பு அமுல்படுத்தப்பட்ட பொழுதும், அவர்களில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என பன்முகம் கொண்டவர்கள் இருந்த போதிலும், இவர்களில் எவரும் அந்த புதிய மார்க்கத்தைத் துறந்து விடவில்லை, அவர்களின் எவருடைய இதயத்தையும், அதன் வலிமையையும் அசைத்தும் கூடப் பார்க்க முடியவில்லை, என்ன அதிசயம்..!, ஆச்சரியம்..!'' என்று வியந்து போற்றுகின்றது.

சத்தியமும் அந்த சத்தியத்திற்காகவே நாம் இத்தகைய கொடுமைகளைத் தாங்கிக் கொண்டிருக்கின்றோம் என்ற அவர்களது மனவலிமையும், இன்னும் நம்முடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உடனிருக்கின்றார்கள் என்ற உள வலிமையும், அந்தத் தோழர்கள் மற்றும் தோழியர்களை எந்தவிதக் கஷ்டத்தையும் நாங்கள் தாங்க வல்லவர்கள் என்று பறைசாட்ட வைத்தது. இன்னும் இந்த சிஐப் பள்ளத்தாக்கில் சமூக பகிஷ்காரத்திற்கு உட்படுத்தப்பட்டமையால், அவர்களிடமிருந்த சில தீய குணங்கள் அவர்களிடமிருந்து அகன்றன, இறைநம்பிக்கையில் புடம் போடப்பட்ட தங்கங்களாக அவர்கள் மாறினார்கள். நாட்கள் செல்லச் செல்ல அவர்களது இறைநம்பிக்கையும், அதில் உறுதியும் சேர்ந்தே வளர்ந்ததே ஒழிய, அணுவளவு கூட குறையவில்லை. மக்காவின் செல்வச் சீமாட்டியான கதீஜா (ரலி) அவர்களின் ஆருயிர் மகளான பாத்திமா அவர்களுக்கு அப்பொழுது பத்து வயதே ஆகியிருந்த பொழுதும், அவர்களும் சிறிதும் இறைநம்பிக்கையில் அசைந்து கொடுக்காமல், மலை போல உறுதியாக இருந்தார்கள். சத்தியத்திற்காகவும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காகவும் தங்களது உயிர்களையும் கூட அவர்கள் தத்தம் செய்ய சித்தமாகவே இருந்தார்கள். அவர்கள் இந்த சமூக பகிஷ்கரிப்பின் காரணமாக பட்ட துன்பங்கள், பின்னாளில் அவர்களது வாழ்நாளின் எஞ்சிய நாட்களை உடல் ரீதியாகப் பாதிக்கவும் செய்தது.

சத்தியத்திற்குச் சான்று பகர்ந்த மக்களை இறைவன் ஏன் தான் இவ்வாறு சோதனை செய்கின்றானோ? இதற்குப் பின்னால் உள்ள இறைக் கட்டளை தான் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளை மனித மனங்களால் மிகச் சிறிதளவே கணக்கிட இயலும். அதற்குப் பின்னால் உள்ள இறைநியதிகள் என்னவென்பதை மனிதனால் கணக்கிட இயலாததொன்றாகும்.

இந்த அற்பமான உலகத்தின் இன்ப துன்பங்களை அற்பமெனக் கருதி அதனைப் பற்றிய ஆசை எதுவும் கொள்ளாமல் வாழ்கின்ற ஆத்மாக்களைப் பற்றி, இந்த உலக வாழ்க்கையின் அற்ப சுகங்களே கதி என்று கிடப்பவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் படுகின்ற கஷ்டங்களும், துன்பங்களும் அவர்களது இறைவேட்கயை அதிகரிக்கச் செய்கின்றன, அதில் கிடைக்கின்ற அலாதியான இன்பத்தைப் பற்றி இந்த உலக வாழ்வே கதியென்று கிடப்பவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள், அதனைக் கணக்கிடவும் இவர்களால் இயலாது. அந்த சத்தியத்திற்குச் சான்று பகர்பவர்கள் வடிக்கின்ற கண்ணீர் அவர்களது பாவக் கறைகளைப் போக்குகின்றன, இன்னும் இதயங்களையும் மனங்களையும் சூழ்ந்து கிடக்கின்ற அழுக்குகளை அவை சுத்தம் செய்கின்றன. இறைவனையும் அவனது தண்டனையையும் பற்றி அஞ்சுகின்ற அந்த இதயங்கள், தனது இறைவனின் முன்னால் சிரம் பணிந்து விடுகின்றன, அவ்வாறு அவர்கள் தங்களது நெற்றிகளை இறைவன் முன் சரணடைந்து விட்டபின் அவர்களது கண்கள் கண்ணீரை வடிக்கின்றன, அவ்வாறு அவர்கள் தங்களை வருத்திக் கொள்வதன் மூலம் இறைவனுக்கு மிக நெருக்கமான அடியானாக அவன் மாறி விடுகின்றான், அதனைத் தானே ஒவ்வொரு நம்பிக்கை கொண்ட ஆத்மாவும் விரும்புகின்றது.

நிச்சயமாக, ஏக இறைவன் மீது யார் யாரெல்லாம் நம்பிக்கை கொண்டார்களோ அவர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுகின்ற அந்த நாளிலே, நிச்சயமாக அவனது பேரருட் கொடைகளைப் பெற்றுக் கொள்வார்கள், இன்னும் யார் யாரெல்லாம் அவனது சத்திய வேதத்தையும், அவனது கட்டளைகளையும் மீறினார்களோ அவர்கள் அந்த நாளிலே கெட்டதையே பெற்றுக் கொள்வார்கள்.

சமூக பகிஷ்காரத்தைக் குறைஷிகள் நீக்கிக் கொண்டு விட்டதன் பின்னாள், இறைவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும், அவர்களது மகள் ஃபாத்திமா அவர்களும், அன்னை கதீஜா (ரலி) அவர்களை இழந்த சோகத்திற்கு ஆளானார்கள். சமூக பகிஷ்காரத்தினுடைய முற்றுகையில் இருந்த பொழுது ஃபாத்திமா (ரலி) அவர்கள் நோய்ப்பட்டவர்களானார்கள். இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னை இறைவனுடைய திருத்தூதர் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டதன் பத்து வருடம் பூர்த்தியாகி இருந்தது. இன்னும் இந்த கால கட்டத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக குறைஷிகள் சொல்லொண்ணா கொடுமைகளை அவிழ்த்து விட்ட பொழுது, அதற்கெல்லாம் மருந்து தடபுபவராக, குறைஷிகளின் தாக்குதல்களிலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பாதுகாக்கின்ற கேடயமாகத் திகழ்ந்த அபூதாலிப் அவர்களும் மரணமடைந்து விட்டார்கள். இதன் காரணமாக, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உதவி செய்வதற்கு யாருமற்ற அநாதையாகி விட்டார் என்று கருதி, அண்ணலார் (ஸல்) அவர்கள் மீது சொல்லொண்ணா கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடத் துணிவு கொண்டார்கள் இந்தக் குறைஷிகள்.

அப்பொழுது ஃபாத்திமா (ரலி) அவர்கள் மிகவும் இளமையாக இருந்த கால கட்டமாக இருந்தாலும் கூட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுபவித்து வந்த சொல்லொண்ணா துன்பங்களையும், இவர்களும் அனுபவித்து மிகவும் பொறுமையுடன் இருந்து வந்தார்கள். இந்த கால கட்டத்தில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு அருகில் உள்ள தாயிஃப் நகரத்து மக்களுக்கு சத்தியத்தை எடுத்து வைப்பதற்காகச் சென்றார்கள். மக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த குறைஷிகளைப் போலவே இந்த தாயிஃப் நகரத்து மக்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை மலர் கொடுத்து வரவேற்பதற்குப் பதிலாக கல்லால் துவம்சம் செய்தார்கள், அதனால் ஏற்பட்ட காயத்துடன் இரத்தம் சொட்டச் சொட்ட அந்த தாயிஃப் நகரத்தை விட்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். தனக்குச் சொல்லொண்ணா துன்பத்தைக் கொடுத்து விட்ட தாயிஃப் மக்களை சாபமிடாத இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவர்களது அறியாமையை எண்ணி, அவர்கள் நேர் வழியை விரைவில் கண்டு கொள்ள வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்திலிருந்து திரும்பி வந்த கோலத்தைக் கண்ட, ஃபாத்திமா (ரலி) அவர்களும் அவர்களது தமக்கை உம்மு குல்தூம் (ரலி) அவர்களும் வேதனை தாளாமல் கண்ணீர் விட்டு அழலானார்கள். அவர்களது கண்ணீரைத் துடைத்து விட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவர்களைப் பொறுமையுடன் இருக்குமாறு ஆறுதலும், தேறுதலும் கூறினார்கள். சத்தியப் பாதையில் இவையெல்லாம் தவிர்க்க முடியாதவைகள், விரைவில் அல்லாஹ் இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்வான், தனது சத்திய மார்க்கத்தை மற்ற மார்க்கங்களை எல்லாம் மிகைக்கும் படிச் செய்வான் என்றும் கூறினார்கள். கஷ்டத்திற்குப் பின் தான் இலேசு இருக்கின்றது, கஷ்டத்திற்குப் பின் தான் இலேசு இருக்கின்றது என்றும் கூறினார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

இப்பொழுது மதீனாவிற்கு சத்தியத்தை பரப்புவதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்கள், மதீனத்து மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்ற சுபச் செய்தியை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எத்தி வைத்தார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை தங்களது மதீனத்து நகரத்தில் வந்து குடியேறி விடும் படியும், இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்புகின்ற எத்தகயை உதவியையும் தாங்கள் செய்வதற்கு சித்தமாக இருக்கின்றோம் என்றும் அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். அல்லாஹ்வின் கட்டளைப் படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனத்து மக்களின் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதுடன், மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். அதற்கு முன்பாக, தனது தோழர்களை மதினாவை நோக்கிப் பயணப்படுமாறு கட்டளையிட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவர்களை அடுத்து தனது ஆருயிர்த் தோழரான அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுடன் பயணப்பட்டார்கள். கதீஜா (ரலி) அவர்களது மறைவுக்குப் பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணந்து கொண்ட சௌதா பின்த் ஸமஆ (ரலி) அவர்களுடன், தனது இரண்டு பெண் மக்களையும் மக்காவில் உள்ள தனது இல்லத்தில் விட்டு விட்டு மதீனா சென்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

அதன் பிறகு சில காலங்கள் கழித்து, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த மூன்று பெண்களையும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வரும்படி கட்டளையிட்டதற்கு இணங்க, ஹிஜ்ரத் செய்தவர்களின் பட்டியலில் இந்த மூன்று பெண்களும் தங்களது பெயர்களை வரலாற்றுப் பக்கங்களிலே பதித்துக் கொண்டார்கள். ஆனால், ஒருவர் பின் ஒருவராக மக்காவை விட்டும் மக்கள் இடம் பெயர்ந்து மதீனாவிற்குச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்த மக்கத்துக் குறைஷிகளுக்குப் பொறுக்கவில்லை. இதனை எப்பாடு பட்டாகிலும் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று, மக்காவின் புறநகர்ப் பகுதியில் கண்காணிப்பை அதிகப்படுத்திக் கொண்டனர். இவ்வாறு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மக்காவின் சில கொடூர மதி படைத்த குறைஷிகளில் சிலர், இந்த மூன்று பெண்கள் சென்ற ஒட்டகத்தை வழி மறுத்து நின்றனர். இவ்வாறு வழி மறித்து நின்றவர்களில் முக்கியமானவன், குறைஷி குலத்தைச் சேர்ந்த, ஹவைரத் பின் நகீத் என்பவனாவான். இவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகள்கள் பயணித்த ஒட்டகத்தை அதட்டி அடிக்கத் துவங்கவும், அவர்கள் பயணம் செய்த அந்த ஒட்டகம் எகிறிக் குதிக்க ஆரம்பித்தது, இதன் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இரண்டு பெண்மக்களும் ஒட்டகத்திலிருந்து தவறிக் கீழே விழுந்தனர். இதனைப் பார்த்த அவன் ஓட்டமெடுக்க ஆரம்பித்தான். இவ்வளவு நடந்ததன் பின்பும், அவர்களது இறைநம்பிக்கையும் அந்த இறைநம்பிக்கை தந்த தைரியமும், உள வலிமையும் பயணத்தை நிறுத்த இடம் கொடுக்கவில்லை, மாறாக அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர ஆரம்பித்தார்கள் மதீனத்து மாநகரை நோக்கியவர்களாக..!

மதீனாவின் எல்லையை அடைந்ததும், இறைத்தூதர் (ஸல்) அவர்களே முன்வந்து தங்களது இளவல்களை வரவேற்றார்கள். அவர்கள் உயிருடன் மீண்டு வந்தது குறித்து மிகவும் சந்தோஷமடைந்தார்கள். இறைநம்பிக்கையுடன் தங்களது பயணத்தைத் தொடர்பவர்களுக்கு இறைவனே மிகச் சிறந்த பாதுகாவலனாக இருக்கும் பொழுது, யார் தான் அவர்களுக்கு தீங்கிழைத்து விட முடியும்..!

ஹிஜ்ரி 2 ம் ஆண்டில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிறித்தறிவிக்கக் கூடிய பத்ரு யுத்தம் நிகழ்ந்தது. இந்த யுத்தத்தில் அலி (ரலி) அவர்கள் மிகத் தீரமாக போரிட்டுத் தனது வீரத்தை வெளிப்படுத்திக் காட்டினார்கள். இந்தப் போரில் இறைநம்பிக்கையாளர்கள் பெரு வெற்றி பெற்றதோடு, இறைநிராகரிப்பாளர்களும் அவர்களின் மிக முக்கிய தiலைவர்களாக அபூஜஹ்ல் போன்றோர்கள் இந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டு, படுகொலையும் செய்யப்பட்டார்கள். எதிரிகளில் பலர் உயிருடன் பிடிக்கப்பட்டு, யுத்தக் கைதிகளாக மதீனா நகருக்குக் கொண்டு வரப்பட்டார்கள். முன்பைக் காட்டிலும் இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த யுத்தத்தின் மூலமாக இறைநம்பிக்கையாளர்கள் மிகச் சிறந்த ஆன்மீக பலத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

இப்பொழுது ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு பதினெட்டு வயது பூர்த்தியாகியிருந்தது, மேலும் முக்கிய நபர்களாகக் கருதப்பட்ட பலர், ஃபாத்திமா (ரலி) அவர்களை மணந்து கொள்வதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அணுக ஆரம்பித்தார்கள். ஆனால் இறைத்தூதர் (ஸல்) அவர்களோ, இறைவன் தரப்பிலிருந்து அதற்கான சம்மதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

ஒருநாள் அலி(ரலி) அவர்கள் மிகவும் வெட்கப்பட்டவராக, தனது முதுகுப் பின்னால் எதையோ மறைத்து கொண்டவராக முன்னெப்பொழுதும் இல்லாத பாங்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்பதாக வந்து நின்றார்கள். அலி (ரலி) அவர்களின் வித்தியாசமான அந்த கோலத்தைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அலி (ரலி) அவர்களது உள்ளத்தில் ஓடுகின்ற வரிகளை வாசித்துக் காட்டுபவர்கள் போல, அலியே..! நீங்கள் எனது மகளை மணந்து கொள்வதற்குச் சம்மதம் கேட்டுத் தான் இங்கே வந்திருக்கின்றீர்கள் என்றார்கள். அதற்கு அலி (ரலி) அவர்கள், நீங்கள் நினைத்தபடியே தான்.., அதற்குத் தான் இங்கே உங்கள் முன்னால் வந்து நிற்கின்றேன் என்று கூறினார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது அருமை மகளார் பாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, தங்களுக்கு அலி அவர்களை மணமுடித்து வைக்க நான் நாடுகின்றேன், நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? என்று கேட்டார்கள். இதனைக் கேட்ட மாத்திரத்திலேயே மிகவும் அமைதியாக ஃபாத்திமா (ரலி) அவர்கள் விம்மி அழ ஆரம்பித்தார்கள்.

ஃபாத்திமாவே..! அலி மிகவும் கற்ற ஞானமுள்ள மனிதர், இன்னும் இரக்க சுபாவமுள்ளவரும், வீரமுள்ள ஆண்மகனுமாவார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தேர்வை ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டு, திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தார்கள்.

இப்பொழுது அலி (ரலி) அவர்களிடம் வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அலியே..! எனது மகளுக்கு மஹர்ப் பணமாக நீங்கள் என்ன வைத்திருக்கின்றீர்கள், வைத்திருந்தால் அதனைக் கொண்டு வாருங்கள் என்றார்கள். அலி (ரலி) அவர்களின் இளமைப் பருவம் முதலே அவர்களையும், அவர்களது பொருளாதார நிலைமையையும் நன்கு அறிந்தவர்களான இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சரி..! உங்களிடம் எதுவுமே இல்லாயென்றால், உங்களது பாதுகாப்புக் கவச உடை இருக்கின்றதல்லவா, அதனையே எனது மகளுக்கு மஹராகக் கொடுத்து விடுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தனது கவச உடையை தனது அடிமையிடம் கடைத்தெருவுக்குக் கொடுத்து விட்ட அலீ (ரலி) அவர்கள், அதன் மூலம் நானூறு திர்ஹம்களைப் பெற்றுக் கொண்டார்கள். கவச உடையை விற்ற பணத்தைக் கொண்டு வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்த பொழுது, அதனைப் பெற்றுக் கொள்ளாமல், இதனை நீங்களே வைத்துக் கொண்டு திருணமத்திற்கு தேவையான பொருட்களையும், இன்னும் வாசனைத்திரவியங்களையும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள்.

இந்த ஆரம்ப கட்ட வேலைகள் முடிந்ததன் பின், தனது உதவியாளரான அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபுபக்கர் (ரலி), உதுமான் (ரலி), உமர் (ரலி), தல்ஹா (ரலி), சுபைர் (ரலி) போன்றவர்களையும், அன்ஸார்கள் மற்றும் முஹாஜிர் தோழர்களையும் இந்தத் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள அழைத்து வருமாறு அனுப்பி வைத்தார்கள். அனைத்துத் தோழர்களும் அங்கே குழுமியதன் பின்னால், அலீ (ரலி) அவர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நீங்களே உங்களது திருமண உரையை வாசியுங்கள் என்றார்கள். பின் எழுந்து நின்ற அலி (ரலி) அவர்கள் கீழ்கண்ட வாசகத்தை வாசிக்க ஆரம்பித்தார்கள் :

எல்லாப் புகழும் ஏக இறையோனாகிய வல்ல அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். அவன் நம் மீது சொறிந்திருக்கக் கூடிய பூரணமான அருட்கொடைகளுக்காகவும், அவனால் ஆசிர்வதிக்கப்பட்ட மக்களாகவும் நாம் இருந்து கொண்டிருப்பதற்காகவும் அவனுக்கு நன்றிக் கடன் செலுத்தக் கூடியவர்களாக நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன், இன்னும் அவனை நான் கண்ணியப்படுகின்றேன், அது அவனது கருணையின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை எனக்கு மணமுடித்துக் கொடுக்கின்றார்கள், மணக்கொடையாக 400 திர்ஹம்கள் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல வருகின்றவற்றைக் கவனமாகச் செவிமடுத்துக் கொள்ளுங்கள், அதற்கான சாட்சியங்களாகவும் இருந்து கொள்ளுங்கள்.

இதன் பின்னர் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தவர்களாக திருமண வாசகத்தை மொழிய ஆரம்பித்தார்கள். மஹர் தொகையை அறிவித்தவுடன், அங்கு கூடியிருந்த தனது தோழர்களை நோக்கி இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களுக்கு ஃபாத்திமா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொடுக்குமாறு இறைவன் தான் எனக்கு கட்டளையிட்டான். இதன் பின்னர், தம்பதிகளின் சந்தோஷமான வாழ்க்கைக்காகவும், நல்ல எதிர்காலத்திற்காகவும் பிரார்தித்தார்கள். பின்னர் விருந்தினர்களுக்கு பேரீத்தம் பழம் வழங்கப்பட்டது. இறைவன் புதுமணத்தம்பதிகளுக்கு சந்தோஷமான வாழ்க்கை அமைவதற்காக அங்கு கூடியிருந்த அனைவரும் பிரார்த்தனை செய்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள். தனது சகோதரனின் மகனாகிய அலீ (ரலி) அவர்களின் திருமணம் நடந்ததன் மறுநாள் ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் ஒரு ஒட்டகத்தை அறுத்து தோழர்கள் அனைவருக்கும் விருந்தளித்தார்கள்.

புதுமணத்தம்பதிகளாக புது வீட்டுக்கு குடிபோகவிருக்கின்ற தம்பதிகளுக்கு சில அடிப்படையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஒரு படுக்கை, காய்ந்த பேரீத்தம் மர மட்டைகளால் ஆன தலையணை, ஒரு தட்டு, ஒரு தம்ளர், தோலால் செய்யப்பட்ட தண்ணீர்ப் பை ஒன்று மற்றும் மாவு அரைக்கக் கூடிய திருகை ஒன்று - இவை தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அன்புக்கினிய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் திருமணத்திற்காக வாங்கப்பட்ட பொருட்களின் பட்டியலாகும். இந்த புதுமணத்தம்பதிகளின் இல்லம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பள்ளிக்குச் சற்றுத் தொலைவில் இருந்தது. தனது பிரியத்திற்குரிய மகள் இன்னும் தனக்கு மிகவும் நெருக்கமான இடத்தில் இருந்தால் தன்னால் அடிக்கடி பார்த்துக்கொள்ள முடியுமே என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருப்பத்தை அறிந்துகொண்ட ஹாரிதா இப்னு நுஃமான் (ரலி) என்ற அன்ஸாரித் தோழர் மிகவும் மரியாதையாக இறைத்தூதர் (ஸல்) அவர்களை அணுகி, இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! உங்களது பள்ளிக்கு அருகில் எனக்குச் சொந்தமான வீடுகள் பல உள்ளன. இவற்றில் ஏதாவதொன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்களேன்..! என்று கூறினார்கள். மிகவும் அருகில் அமைந்த வீடு ஒன்று இறைத்தூதர் (ஸல்) அவர்களை மிகவும் கவர்ந்திருந்தது. தனது தோழரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்த வீட்டைத் தனது பிரிய மகளுக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். இன்னும் தனது மகளுக்காகத் தனது வீட்டை விட்டுக் கொடுத்த அந்தத் தோழரின் செல்வம் பெருகுவதற்கும், அவருக்காகவும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டார்கள். இந்த இல்லத்தில் அலீ (ரலி) அவர்களும் ஃபாத்திமா (ரலி) அவர்களும் தங்களது புது வாழ்க்கையைத் துவங்க ஆரம்பித்தார்கள். மாபெரும் சாம்ராஜ்யத்தின் தலைவரது மகளாக இருப்பினும், மாவு அரைத்தல், கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வருதல் இன்னும் சமைத்தல் ஆகிய அனைத்து வீட்டு வேலைகளையும் ஃபாத்திமா (ரலி) அவர்களே செய்தார்கள்.

அபீதாலிப் கணவாயில் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்ட பொழுது அவர்களது உடலில் ஏற்படுத்தியிருந்த பலவீனங்கள் இதனூடே தொடர்ந்து கொண்டே இருந்தன. இதன் காரணமாக வீட்டு வேலைகளுடன் மிகவும் களைப்படைய ஆரம்பித்தார்கள். ஒரு போரின் பொழுது அதிகமான செல்வங்களும், போர்ப் பொருட்களும், கைதிகளாக ஆண்களும், பெண்களும் முஸ்லிம்கள் வசமாகின. அப்பொழுது தனது துணைவியாரான ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்த அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா அவர்களே..! வீட்டு வேலைகளின் நிமித்தம் நீங்கள் அதிகக் களைப்படைந்து விடுகின்ற காரணத்தால், உங்கள் தந்தையிடம் சென்று, கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வந்துள்ளவர்களில் உங்களுக்கென ஒரு வேலைக்காரியைத் தருமாறு கேளுங்களேன் என்றார்கள்.

அலீ (ரலி) அவர்களின் ஆலோசனையைக் கேட்ட பின், நேராகத் தனது தந்தையைத் தேடி வீட்டிற்குச் சென்றார்கள். இவர்கள் தேடிச் சென்ற நேரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாத காரணத்தால், தான் வந்த நோக்கத்தை இறைத்தூதர் (ஸல்)அவர்களிடம் தெரிவித்துவிடுமாறு ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவித்து விட்டு வந்து விடுகின்றார்கள். அன்றைய இரவு, தூங்கச் செல்வதற்கு சற்று முன்னால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மகளாரைத் தேடி மகளின் வீட்டிற்கு வருகின்றார்கள். அப்பொழுது, மகளே..! ஒரு அடிமைப் பெண்ணை விடச் சிறந்த ஒன்றை நான் உங்களுக்கு தரட்டுமா..! என்று கேட்டு விட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்து கூறக் கூடிய சில வசனங்களை தனது மகளாருக்குக் கற்றுக் கொடுக்கின்றார்கள். மகளே..! நான் சொல்லித்தரக் கூடிய இந்த வசனங்கள் ஒரு வேலைக்காரியை விடச் சிறந்தது. நீங்கள் 33 தடவை சுப்ஹானல்லாஹ் என்றும், 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் என்றும், இன்னும் 34 முறை அல்லாஹு அக்பர் என்று கூறுங்கள் என்று கற்றுக் கொடுத்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் தனது வாழ்நாளை இறையச்சத்துடன், இறைவனுக்கு உகந்த நல்லடியார்களின் வாழ்வினை வாழ்ந்தார்கள். எப்பொழுதும் அவர்கள் பொறுமையுடையவராகவும், படைத்தவனுக்கு நன்றியுடைய நல்லடியாராகவும் வாழ்ந்து காட்டினார்கள். எத்தகைய கஷ்;டமான சூழ்நிலையிலும் கூட எந்த முனுமுனுப்பும் காட்டாதவர்களாக இருந்தார்கள். இந்த உலகமும், அதன் அலங்காரங்களும் எந்த வகையிலும் அவரது வாழ்வை திசை மாற்றிடவில்லை. அவரது முழு வாழ்க்கையும் இஸ்லாத்திற்கு சேவை செய்வதற்காகவும், இறைவழியில் போராடக் கூடிய முஜாஹிதுகளுக்குப் பணிவிடை செய்வதற்காகவுமே அற்பணிக்கப்பட்டதாக இருந்தது. போர் முனைகளில், காயம்பட்டவர்களுக்குச் சேவை செய்யக் கூடிய தாதியாக முன்னணியில் நின்றார்கள். உஹதுப் போர்க்களத்தில் ஃபாத்திமா (ரலி) அவர்களது தந்தையாரான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காயம்பட்ட பொழுது, தனது படுக்கை விரிப்பை தீயில் கரிக்கி, அந்த சாம்பலைக் கொண்டு மடை திறந்த வெள்ளம் போல் பாய்ந்து கொண்டிருந்த இரத்த ஒழுக்கை நிறுத்த உதவினார்கள். ஸஹீஹ் புகாரியில் காணக்கிடக்கின்றதொரு நபிமொழியில், ''இந்த உலக வாழ்வில் உங்களது அதிகமான விருப்பத்திற்குரியவர் யார் என இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட பொழுது, தனது இளைய மகளாரான ஃபாத்திமா (ரலி) அவர்களது பெயரையே மொழிந்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ''ஃபாத்திமா (ரலி) அவர்கள் தனது தந்தையைப் போன்ற குணநல அம்சங்களைப் பெற்றவர்களாக இருந்தார்கள்'' என்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் போன்ற உருவ அமைப்பில் அல்ல, மாறாக அவர்களது பேச்சு, நடை, பாவனை, உட்காருவது, நிற்பது, மற்றும் நடப்பது ஆகிய அனைத்தும் - சுருங்கச் சொன்னால் அவர்களது மொத்த பண்புநலன்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் போன்றே இருந்தது. தனது மகளாரைச் சந்திக்கச் செல்லும் நேரமெல்லாம், தனது தந்தையார் அவர்களை மனதார வரவேற்று அவர்களை அனைத்து உச்சி முகர்ந்து முத்திமிட்டு வரவேற்கக் கூடியவர்களாகவும் மரியாதை செய்யக் கூடியவர்களாகவும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். இருவரும் மிக நெருக்கமான பாசப்பிணைப்புடன் இருந்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்கள் சந்திக்கச் செல்லும் பொழுதெல்லாம், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்திருந்து தனது மகளை ஆசையோடு வரவேற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் செல்லுமிடமெல்லாம், தனது பண்பு முத்திரைகளை பிறரது மனங்களில் பதிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களை பாதிக்கக் கூடிய அத்தனை அம்சங்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களை பாதித்தது, கவலையடையச் செய்தது. இன்னும் செல்ல மகளை சந்தோஷப்படுத்தக் கூடிய அனைத்தும், இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் சந்தோஷமடையச் செய்தது.

ஒருமுறை ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும், அவரது கணவர்அலி (ரலி) அவர்களுக்குமிடையே ஏதோ கருத்துவேறுபாடு எழுந்து விட்டதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிய வந்தவுடன், தனது மகளைச் சந்திக்கக் கிளம்பினார்கள். அவர்கள் செல்லும் வழி நெடுகிலும் கலங்கிய மனதுடனும், கவலை தோய்ந்த முகத்துடனும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள், தனது மகளாரின் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு தான் அவர்களது முகத்தில் அமைதி தவழ்ந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த மாற்றத்தைக் கண்ணுற்ற அவரது தோழர்கள், '' இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மகளாரின் வீட்டிற்குச் செல்லும் பொழுது ஒரு மனிதராகவும், அங்கிருந்து திரும்பி வரும் பொழுது இன்னொரு மனிதாரகவுமே வந்தார்'' என்று குறிப்பிடுகின்றார்கள். இதைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அவரது தோழர்கள் வினவிய பொழுது, எனது பிரியத்திற்குரிய எனது இரண்டு இளவல்களிடம் காணப்பட்ட கருத்துவேறுபாட்டைத் தீர்த்து விட்டு வருகின்றேன் என்று கூறினார்கள். கருத்துவேறுபாடுகள் களையப்பட்டவுடன், அதன் நிம்மதிப் பெருமூச்சால் அண்ணலார் (ஸல்) அவர்களின் வதனங்களில் மகிழ்ச்சிப் பூக்கள் பூத்திருந்தன. இன்னொரு முறை அலி (ரலி) அவர்கள் அபூஜஹ்ல் ன் மகளை மணக்க விருப்பம் கொண்டார்கள். இதனை அறிந்து கொண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள், தனது தந்தையாரிடம் வந்து அலி (ரலி) அவர்கள் அபூஜஹ்ல் ன் மகளை அலி (ரலி) அவர்கள் மணந்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றார்கள். இதனைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் கலவரமடைந்தார்கள். நேரே பள்ளிவாசலுக்கு விரைந்து சென்ற இறைத்தூதர் (ஸல்) அவர்கள், எனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் எனது இதயத்தின் ஒரு பகுதியாவார், அவருக்கு யார் துன்பம் கொடுக்கின்றார்களோ அந்தத் துன்பம் என்னையும் பாதிக்கும். அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய அடியாரின் மகளும், அல்லாஹ்வின் எதிரியின் மகளும் ஒரே மனிதனை எவ்வாறு மணந்து கொள்ள இயலும். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உரையைக் கேட்ட அலி (ரலி) அவர்கள் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டவராக, தன்னால் விளைந்த துன்பத்திற்கு ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் மன்னிப்புக் கோரினார்கள். அதன் பின் அவர்களது வாழ்வு மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியது.

ஒரு முறை, ''உங்களது நெருக்கத்திற்கு மிகவும் உரித்தானவர் நானா? அல்லது ஃபாத்திமாவா? என்று அலி (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினார்கள். அதற்கு, நான் ஃபாத்திமா (ரலி)அவர்களிடம் அதிகமான அன்பு வைத்திருக்கின்றேன், ஆனால் அலியே..! நீங்கள் எனது மகளைக் காட்டிலும் எனக்கு நெருக்கமானவராக நேசத்திற்குரியவராக இருக்கின்றீர்கள் என்று கூறினார்கள். இதுவே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மிகச் சிறந்த பண்புநலனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இதுவே உண்மையுமாகும். ஏனெனில், இருவரையும் மிகவும் ஆழமான முறையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நேசித்தார்கள்.

அலி (ரலி) மற்றும் ஃபாத்திமா (ரலி) தம்பதிகளுக்கு ஹிஜ்ரி 3 ம் ஆண்டு ரமளான் மாதத்தில் முதல் குழந்தை பிறந்தது. தனக்குப் பேரக் குழந்தை பிறந்திருப்பதை அறிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மகளையும், பேரனையும் காண விரைந்து சென்றார்கள். பேரனுக்கு ஹஸன் என்ற பெயரைச் சூட்டி, அதானும் கூறினார்கள். (குயவாiஅயா டீiவெ ஆராயஅஅயன (Pடிரா) Pயபந 157இ ஆயமவயடிய னுயசரளளயடயஅ) பிறந்ததிலிருந்து ஏழாவது நாளில் தலை முடியைச் சிரைத்து சுத்தமாக்கி, அந்த முடியின் எடையின் அளவுக்கு வெள்ளியை நிறுத்து, அதனை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினார்கள்.

ஹிஜ்ரி 4 ம் வருடம் ஷஃபான் மாதம் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஹுஸைன் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள். அந்தக் குழந்தையின் காதிலும் பாங்கு சொன்னார்கள். மூன்றாவது குழந்தையாக முஃஸின் என்பவர் பிறந்தார், அவர் குழந்தையாக இருந்த பொழுதே இறந்து விட்டார் என்று கூறப்படுகின்றது. தனது இரண்டு பேரக் குழந்தைகளையும் மிகவும் நேசித்தார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். மேலும், அவர்களைக் குறித்து, ''இவர்கள் எனது வாச மலர்கள், இன்னும் சுவனத்தின் இளைஞர்களது தலைவர்கள்'' என்று பெருமை படக் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கைகளில் ஏதோ ஒன்றைச் சுற்றி எடுத்துக் கொண்டு செல்வதைக் கண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! தங்களது கைகளில் என்ன இருக்கின்றது என்று கேட்டார்கள் உஸாமா (ரலி) அவர்கள். தனது கைகளில் சுற்றப்பட்டிருந்த துணியை விலக்கி உஸாமா (ரலி) அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காண்பித்த பொழுது, அதில் அவர்களது இரண்டு பேரக் குழந்தைகளைத்தான் அவ்வாறு சுற்றி எடுத்துச் செல்கின்றார்கள் என்பதைக் கண்டு கொண்டார்கள். அப்பொழுது, இவர்கள் என்னுடைய மகள் வயிற்றுப் பிள்ளைகள், இவர்களை யார்யாரெல்லாம் நேசிக்கின்றார்களோ, அவர்கள் அனைவரையும் நான் நேசிக்கின்றேன் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

ஹிஜ்ரி 5 ம் ஆண்டு, ஃபாத்திமா (ரலி) அலி (ரலி) தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஸைனப் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள். மீண்டும் ஹிஜ்ரி 7 ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு உம்மு குல்தூம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள். ஸைனப் பின்த் அலி (ரலி) அவர்கள் பருவமடைந்ததன் பின்னர், அப்துல்லா பின் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள். உம்மு குல்தூம் (ரலி) அவர்களை உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் மணந்து கொண்டார்கள். இவர்களுக்கு ஸைத் மற்றும் ருக்கைய்யா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தன. உம்மு குல்தூம் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் மணந்து கொண்டதன் பின்னர், தனது தோழர்களாக அன்ஸார்களையும், முஹாஜிர்களையும் அழைத்து, தனக்கு வாழ்த்துக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதற்கான காரணத்தை அந்தத் தோழர்கள் வினவிய பொழுது, அலி (ரலி) அவர்களது மகளாரான உம்மு குல்தூம் (ரலி) அவர்களை நான் மணந்து கொண்டதன் மூலம், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருடன் நான் சம்பந்தம் என்ற தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு விட்டேன் அல்லவா..! அத்தகைய சந்தோஷமான, சிறப்பு மிக்க கௌரவத்தை நான் அடைந்து கொண்டதற்காக, என்னை வாழ்த்துங்கள் என்று உமர் (ரலி) அவர்கள் சந்தோஷமாகக் கூறினார்கள்.

இமாம் அஹ்மத் அவர்களிடம் அலி (ரலி) மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், அவர்களது வரலாறு ஈடுஇணையற்றது. அல்லாஹ் தனது திருமறையில் கூறியவாறு, அனைத்துவிதமான பாவங்களிலிருந்தும் இறைவனால் தூய்மைப்படுத்தப்பட்டவர்களாக, இறைநம்பிக்கையில் கலப்படமற்றவர்களாக, இறைவனது விதிக்கு மாறு செய்யாதவர்களாக, மற்றும் சமூகப் பாவங்களிலிருந்தும் விலகியவர்களாக அவர்கள் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து காட்டிச் சென்றவர்கள் என்று குறிப்பிட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்தோ அல்லது போரிலிருந்தோ எப்பொழுதெல்லாம் அவர்கள் திரும்பி வருகின்றார்களோ அப்பொழுதெல்லாம் முதலில் தனது பள்ளிக்குச்சென்று இரண்டு ரக்அத் தொழுது விட்டு, முதலில் தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களது வீட்டிற்குச் சென்று அவர்களைச் சந்தித்து விட்டுத்தான், தனது மனைவிமார்களைக் காணச் செல்பவர்களாக இருந்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்களது வாழ்வில் நிகழ்ந்ததொரு அற்புத நிகழ்ச்சி ஒன்றை பிதாயா வந் நிஹாயா என்ற நூல் இவ்வாறு விவரிக்கின்றது. ஒருசமயம் ஒரு பெண் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்காக சிறியதொரு தட்டில் சில ரொட்டித் துண்டுகளையும், சில இறைச்சித் துண்டுகளையும் அனுப்பி வைத்தார்கள். அதனை ஒரு பெரிய தட்டில் வைத்து, அதனை ஒரு துணியினால் மூடி வைத்து விட்டு, தனது தந்தையாரான இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு செய்தியனுப்பி, தன்னுடைய வீட்டில் வந்து சாப்பிட வருமாறு அழைத்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் தனது அன்பு மகளின் அழைப்பை ஏற்று ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டிற்கு சாப்பிட வந்ததன் பின்னர், அந்தத் தட்டை மூடியிருந்த துணியினை ஃபாத்திமா (ரலி) அவர்கள் விலக்கிய பொழுது, அந்தத் தட்டு முழுவதும் ஏராளமான ரொட்டித் துண்டுகளும், இறைச்சித் துண்டுகளும் நிறைந்திருக்கக் கண்டு, அதிசயத்துப் போனார்கள். இறைவனுக்கு நன்றி தெரிவித்தவர்களாக, இது இறைவன் தனது தூதர் (ஸல்) அவர்களுக்குச் செய்த பேருபகாரம் என்றெண்ணிக் கொண்டவர்களாக, இறைவனின் திருப்பெயரை மொழிந்தவர்களாக தனது தந்தையாருக்கு அந்த உணவைப் பரிமாற ஆரம்பித்தார்கள். தட்டில் காணப்பட்ட ஏராளமான உணவைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது மகளைப் பார்த்து புன்னகை பூத்தவர்களாக, இவ்வளவு உணவை தங்களுக்கு அனுப்பி வைத்தவர் யாரம்மா? என்று கேட்டார்கள். அல்லாஹ் தான் இந்த அருட்கொடைகளை தனக்கு வழங்கினான் என்று கூறியவர்களாக, ''அவன் தான் விரும்பியவர்களுக்கு வாழ்வாதாரங்களை கணக்கின்றி தாரளமாக வாரி வழங்கக் கூடியவனாக இருக்கின்றான்'' என்றும் தனது தந்தையை நோக்கிக் கூறினார்கள். மீண்டும் புன்னகை பூத்தவர்களாக இறைவனுக்கு நன்றி கூறிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''மகளே..! நீங்கள் அந்த மரியம் (அலை) அவர்களைப் போலப் பேசுகின்றீர்கள்'' என்று கூறினார்கள். பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மகளுடனும், தனது மருமகனார் அலி (ரலி) அவர்களுடனும் இன்னும் தனது பேரக் குழந்தைகளுடனும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள். அவர்கள் உண்டது போக ஏராளமான உணவு இன்னும் எஞ்சியிருந்தது. அதனை இறைத்தூதர் (ஸல்)அவர்களின் மனைவிமார்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, அவர்களும் அதனை உண்டதன் பின் எஞ்சியிருந்ததை அக்கம் பக்கத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், திருமறைக்குர்ஆனின் ஒரு அத்தியாயமான சூரா அந்நஸ்ர் இறங்கியதன் பின்னர், தனது மகளை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இறைவன் தன்னை மிகவும் நெருக்கமாக்கி வைக்கவிருப்பதாகவும், இன்னும் தனக்கு இந்த உலக வாழ்க்கையின் இறுதி நேரம் மிகவும் அண்மித்து விட்டதாகவும் தெரிவித்தார்கள். இஸ்லாம் இப்பொழுது நாலா பக்கமும் பரவ ஆரம்பித்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்குள் நுழைய ஆரம்பித்திருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அந்தச் செய்தியைக் கேட்ட மாத்திரத்திலேயே தனது பிரியமுள்ள தந்தையின் நெருக்கத்தை விட்டும் தான் பிரிய இருப்பதை எண்ணி, ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அதனை அடுத்து, நான் இறந்ததன் பின்னாள் எனது குடும்பத்தவர்களில் எல்லாம் என்னை முதலில் வந்து சந்திக்கக் கூடிய நபர் நீங்களாகத் தான் மகளே இருப்பீர்கள் என்ற நற்செய்தியையும் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். அதனைக் கேட்ட மாத்திரத்திலேயே ஃபாத்திமா (ரலி) அவர்கள் புன்னகை பூக்க ஆரம்பித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது இறுதிக் கட்டத்தை அடைந்த பொழுது, நோய்வாய்ப்பட்டதன் காரணமாக அவர்கள் மிகுந்த அவஸ்தைகளுக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பார்த்த ஃபாத்திமா (ரலி) அவர்களது மனது மிகுந்த கவலைக்குள்ளானது. இதனைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''மகளே..! இந்த நாளைக்குப் பின்னர் வேறு எப்பொழுதும் உனது தந்தை இதுபோன்ற வேதனைகளை அனுபவிக்க மாட்டார் என்றும், மறுமையின் உன்னதமான சுகந்தங்களை அடைந்து கொள்வதற்காக நான் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்'' என்று கூறினார்கள்.

இப்னு கதீர் அவர்கள் தனது அஸத் அல் காஃபா என்னும் நூலில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்த அந்த நாளைக்குப் பின், எந்த நாளிலும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் புன்னகையே பூத்ததில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். அவர்கள் மரணமடையும் வரையிலும், அவர்களது தந்தையின் பிரிவுத் துக்கம் அவர்களது முகத்தில் காணப்படக் கூடியதாகவும் இருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்ததன் பின், ஆறு மாத காலம் கழித்து ஃபாத்திமா (ரலி) அவர்களும் மரணத்தைச் சந்தித்தார்கள்.

''இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்''

அலி (ரலி) அவர்களும், அவர்களது நான்கு குழந்தைகளான ஹஸன், ஹுஸைன், ஸைனப் மற்றம் உம்மு குல்தூம் (ரலி- அன்ஹுமா) ஆகியோர்கள் தங்களது இளமைக் காலத்திலேயே தனது தாயை இழந்தவர்களானார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களது உடலை அலி (ரலி) அவர்களும், இன்னும் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும், இன்னும் ஸலமா உம் ராஃப் (ரலி) அவர்களும் குளிப்பாட்டி, கபனிட்டார்கள். அவர்களது உடல் ஜன்னத்துல் பக்கியில் இரவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அலி (ரலி) அவர்களும், அப்பாஸ் (ரலி) அவர்களும் இன்னும் ஃபதல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களும் ஃபாத்திமா (ரலி) அவர்களை அவர்களது இறுதித் துயில் கொள்ளும் இடத்தில் - மண்ணறையில் வைத்தார்கள். சுவனத்து இளைஞர்களின் தலைவர்களது தாயாரும், இன்னும் சுவனத்துப் பெண்களின் தலைவியுமான ஃபாத்திமா (ரலி) அவர்களின் சுவனத்தை நோக்கிய பயணம் தொடர்ந்தது.

(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (89:27-30)
, ,