இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

04/09/2014

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பெற்றோரின் சிறப்பு
அல்லாஹ்வின், கட்டளைப்படி பெற்றோருக்கு எதிராக ‘சீ’ என்ற வார்த்தையைக் கூட பாவிக்கலாகாது. அந்தளவுக்கு இஸ்லாம் அவர்களை கெளரவப்படுத்தி இருக்கின்றது.
இது தொடர்பாக அல்லாஹுத்தஆலா தன் அருள் மறையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றான்.

‘உம்முடைய இறைவன், அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மைசெய்ய வேண்டும் என்றும் விதித்து இருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) ‘சீ’ என்றும் சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்டவும் வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கண்ணியமான பேச்சையே பேசுவீராக.குர்ஆன் 17 : 23

‘இன்னும் இரக்கம் கொண்டு பணிவு எனும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும் என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னைப் (பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவர்கள் இருவருக்கும் கிருபை செய்வாயாக! எனப் பிரார்த்திப்பீராக!(அல்-குர்ஆன் – 17 : 24)

இதேநேரம் இந்த இடத்தில் ஒவ்வொருவரும் ஒரு முக்கிய விடயத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும். அது தான் தம் பெற்றோருக்காக நன்மை செய்யுமாறு அல்-குர்ஆன் பல இடங்களில் வலியுறுத்தியுள்ள போதிலும், அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்குமாறு வற்புறுத்துவார்களாயின் அதனை ஏற்று நடக்கலாகாது என்பதாகும். இதனை அல்-குர்ஆன் ஸ¤ரா அன்கபூத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றது.

‘தம் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும் படியாக நாம் மனிதனுக்கு வலியுறுத்தி இருக்கின்றோம். எனினும் (மனிதனே) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் நீர் அவ்விருவருக்கும் கீழ்ப்படிய வேண்டாம். என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்குர்ஆன் 28 : 08

ஆக பெற்றோருடன் பிள்ளைகள் நடந்து கொள்ளவேண்டிய ஒழுங்குகளை அல்லாஹுத்தஆலா தன் அருள் மறையில் இவ்வாறு மிகவும் தெளிவாக விபரித்து வைத்து இருக்கின்றான்.

அல்-குர்ஆனின் இந்த வசனங்களின் படி பிள்ளைகள் தம் பெற்றோருக்கு பணிகள் செய்ய வேண்டும், அவர்களுக்கு நன்றிசெலுத்த வேண்டும், அவர்களோடு பணிவோடு நடந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு எதிராக ‘சீ’ என்ற வார்த்தையையேனும் பாவிக்கலாகாது, அவர்கள் முதுமை அடைந்து விட்டார்கள் என்பதற்காக அவர்களை விரட்டக் கூடாது அவர்களோடு பண்பாகவே அளவளாவ வேண்டும், அவர்களுக்காகப் பிரார்த்திக்க வேண்டும். எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும் என்பதைக் கூட அவன் இங்கு சொல்லித் தந்திருக்கின்றான். என்றாலும் அல்லாஹ்வுக்கு இணை வைக்குமாறு அவர்கள் வற்புறுத்தினால் அதனை ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளலாகாது.

இவை பிள்ளைகள் பெற்றோருடன் நடந்து கொள்வதற்கான வழிகாட்டல்களாக மாத்திரமன்றி அல்லாஹ்வின் கட்டளைகளாகவும் அமைந்து இருக்கின்றன. இதனை எவரும் மறுக்க முடியாது.

பெற்றோரின் சிறப்பு

மேலும் இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் பெற்றோரின் மகத்துவம் சிறப்பு, முக்கியத்துவம், அவர்களைப் பராமரிக்க வேண்டிய ஒழுங்குகள் என்பன தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

ஒருமுறை முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மகிழ்ச்சி பெற்றோரின் மகிழ்ச்சியிலேயே உள்ளது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்திலேயே உள்ளது’என்று கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் : திர்மிதி)

மற்றொரு சந்தர்ப்பத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் மனிதர் ஒருவர் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் மீது தாய் - தந்தையருக்குரிய உரிமைகள் என்ன? எனக்கேட்டார். அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘தாய் தந்தையரே உம்முடைய சுவனம் ஆவார்கள். அவர்களே உம்முடைய நரகமும் ஆவார்கள்’ என்று கூறியதாக அபூ உமாமா (ரலி) அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா)

இந்த இரண்டு நபி மொழிகளும் பெற்றோரின் சிறப்பையும் மகத்துவத்தையும் எடுத்துக் காட்டக்கூடியதாக உள்ளன. அதனால் அவர்கள் உண்மையான மன மகிழ்ச்சி மிக்கவர்களாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது ஒவ்வொரு பிள்ளையினதும் பொறுப்பு என்பதை இந்நபி மொழிகள் தெளிவுபடுத்திக்கொண்டிருக்கின்றன.

மேலும் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் மனிதரொருவர் ஒருமுறை வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! என் அழகிய நட்புக்கு மனிதர்களில் அதிக தகுதியுடையவர் யார்?’ எனக் கேட்டார். அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்று கூறினார்கள். அதன் பின்னர் ‘யார்?’ என அம்மனிதர் கேட்டார். அப்போதும் முஹம் மத் (ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்றார்கள்.

அதனைத் தொடர்ந்து அம்மனிதர் மீண்டும் 3வது தடவையாகவும் ‘யார்?’ எனக் கேட்டார். அதற்கும் முஹம்மத் (ஸல்) அவர்கள்‘உன் தாயே!’ என்றார்கள். எனினும் அம்மனிதர் நான்காவது தடவையாக ‘யார்?’ என வினவினார். அப்போது ‘உனது தந்தை’ என்றார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் : புகாரி, முஸ்லிம்

இந்த நபி மொழியும் ஒவ்வொரு தாயினதும், தந்தையினதும் சிறப்பையும் மகத்துவத்தையுமே சொல்லிக் கொண்டிருக்கின்றது. உலகில் நட்புக்கொள்வதற்கு மனிதர்களிலேயே அதிக தகுதி மிக்கவர்களாக அவரவது தாய், தந்தையரே விளங்குகின்றனர். இஸ்லாம் தாய் - தந்தையரை எவ்வளவு தூரம் சிறப்பித்து இருக்கின்றது என்பதற்கு இந்த நபி மொழி மாத்திரம் நல்ல எடுத்துக்காட்டாகும்.

பெற்றோருக்கு பணி செய்தல்

அதேநேரம் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது?’ என்று கேட்டேன். அதற்கு அன்னார், ‘உரிய நேரத்தில் தொழுவது’ எனப் பதிலளித் தார்கள். அப்போது நான், ‘அதற்கு அடுத்தபடி யாக எது?’ என வினவினேன். அப்போது, ‘பெற்றோருக்கு நன்மை செய்தல்’ என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து எது என வினவினேன். அப்போது முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘இறைவழியிலே போர் புரிதல்’ என்று கூறினார்கள். என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் : புகாரி, முஸ்லிம்

மற்றொரு சந்தர்ப்பத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் மனிதரொருவர் வந்து ‘நான் ஜிஹாதில் ஈடுபட வேண்டும்’ என்பதில் அதிக விருப்பம் கொண்டவனாக இருக்கின்றேன். ஆனால் என்னிடத்தில் அதற்கான வசதிகள் இல்லை’ எனக் கூறினார். அப்போது முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘உமது பெற்றோரில் எவராவது உயிருடன் இருக்கின்றனரா?’ என வினவினார்.

அச்சமயம் அம்மனிதர் ‘ஆம் எனக் கூறி ‘எனது தாய் உயிருடன் இருக்கின்றார்’ என்றார். அப்போது முஹம்மத் (ஸல்) அவர்கள், அவருக்கு (தாய்க்கு) உபகாரம் செய்வதின் ஊடாக அல்லாஹ்வை எதிர்கொள்’ நீர் அவ்வாறு செய்தால் ஹஜ் செய்து, உம்ராவையும் நிறைவேற்றி அல்லாஹ்வின் பாதையில் போராடியவனாகக் கருதப்படுவாய்’ என்று கூறினார்கள். தபரானி

இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு மனிதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாக ஜிஹாத் செய்யவும், ஹிஜ்ரத் செல்லவும் உங்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்கின்றேன்’ என்றார். அப்போது முஹம்மத் (ஸல்) அவர்கள் உன் பெற்றோரில் எவராவது உயிருடன் இருக்கின்றனரா?’ என வினவினார்கள்.

அதற்கு அம் மனிதர் ‘ஆம். இருவரும் உயிருடன் உள்ளனர்’ என பதிலளித்தார். ‘அப்படியாயின் நீர் அல்லாஹ்விடமிருந்து கூலியை எதிர்பார்க்கிaரா?’ என முஹம்மத் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அம் மனிதர் ‘ஆம்’ என பதிலளித்தார். அப்போது முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் நீர் உம் பெற்றோரிடம் செல். அவ்விருவரிடமும் உன் நட்பை அழகுபடுத்து’ என்று கூறி அனுப்பியதாக அப்துல்லா இப்னு அம்ரிப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவித்து இருக்கின்றார்கள் புகாரி,முஸ்லிம்

இதேவேளை யமன் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்தார். அவரை முஹம்மத் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ‘யமன் நாட்டில் உமக்கு உறவினர்கள் எவராவது இருக்கின்றாரா?’ என வினவினார்கள். அப்போது அந்நபர் ‘ஆம் என் பெற்றோர் இருக்கின்றனர்’ என்றார். அப்போது முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘நீர் இங்கு வருவதற்கு அவர்கள் அனுமதி வழங்கினாரா?’ எனக்கேட்டார். அச்சமயம் அந்நபர், ‘இல்லை.

நான் அனுமதி கேட்கவில்லையே!’ என்றார். அப்படியென்றால் நீர் திரும்பிச் செல்லும். இங்கு வரவென அவர்களிடம் (பெற்றோர்) அனுமதி கேளும். அவர்கள் அனுமதி அளித்தால் இங்கு வந்து ஜிஹாதில் கலந்துகொள்ளலாம். இல்லையெனில் அவர்களுக்குச் சேவை புரிந்த வண்ணம் இருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வீராக! எனக் கூறி அனுப்பியதாக அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.அபூதாவூத்

மேற்சொன்ன நபி மொழிகளைப் பொதுவாக எடுத்து பார்த்தால் பெற்றோருக்கு பணிவிடை செய்வதானது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல்களில் ஒன்றாக விளங்குவதைக் காணக்கூடியதாகவுள்ளது. அதேநேரம் அது இறைவழியில் போராடுதல் (ஜிஹாத்) ஹிஜ்ரத் செய்தல் போன்ற நற்காரியங்களை விடவும் மேலான ஒன்றாகவும் விளங்குகின்றது.

மர்லின் மரிக்கார்
, ,