குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

21.1.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜாகிரின் படிக்கட்டுகள் -9
எந்த நம்பருக்கு போட்டீங்க?...

இது இப்போதைக்கு அடிக்கடி மொபைல் ஃபோன் நம்பர் மாற்றுபவர்களின் கேள்வி. இது ஏதொ சின்ன பசங்க கேட்டால் பெரிய விசயமில்லை.
ஒரு தொழிலில் இருப்பவர்கள் அடிக்கடி நம்பர் மாற்றுவது ' என்னமோ கள்ள வேலை செய்றான்யா" எனஉங்களிடம் பேசிவிட்டு'சிகப்புபொத்தானை" அழுத்துபவர்கள் சொல்வது சிங்கப்பூர்,மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு கூட கேட்பது எப்படி உங்கள் காதில் விழாமல் போனது?.

ஏர்செல்லெ இவ்ளதான், ஏர்டெல்லெ100 SMS ஃப்ரீயாமே என மாதத்துக்கு ஒரு நம்பர் மாற்றும் யாரும் பணக்காரனாகிவிட்டார்கள் என்று நான் இதுவரை கேள்விப்படவில்லை. முதலில் இது போன்ற பிஸ்னஸ் டெக்னிக்கில் விட்டில் பூச்சி மாதிரி விழுந்து விட்டு, பங்குசந்தைக்கே அட்வைசர் மாதிரி பேசுபவர்களிடம் சொல்ல வேண்டிய வார்த்தை...”ஸ்ஸப்பா....முடியலெ!!”.

அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.!!

கடன் வாங்கி ஆடம்பர செலவுகள் செய்ய காரணம் , இனிமேல் கிடைக்கபோகும் வருமானம் கைக்கு கிடைக்குமுன் செலவு எப்படி செய்வதென்று திட்டமிடும் முட்டாள்தனம்தான். " உங்க கிட்டதான் அந்த டீலிங்...மத்தவங்க சரியா வராது' என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யும் கஸ்டமர்கூட சமயத்தில் சில காரணங்களுக்காக மாறி விடக்கூடும். இதை நான் எழுதகாரணம் நம் ஊர் போன்ற இடங்களில் அதிக இளைஞர்கள் ரியல் எஸ்டேட் செய்வதாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் ரியல் எஸ்டேட் செய்வது சரியான முறையில் நெறியாக்கம் [Regulated]செய்யப்படவில்லை. அப்படியே செய்திருந்தாலும் அதன் சட்டங்கள் ஒவ்வொரு ரியல் எஸ்டேட் ஏஜன்ட்டுக்கும் தெரிய பல வருடங்கள் ஆகும்.நமக்கு நடப்பு சட்டங்கள் தெரிய குறைந்த பட்சம் நியூஸ் பேப்பர் படிக்க வேண்டும். நம் ஊர்களில் பேப்பர் படிப்பதே முடி வெட்டிக்கொள்ளும்போது மட்டும்தான் எனும் சூழ்நிலையில் எப்படி சட்டமெல்லாம் தெரிந்து கொள்வது. நாம் முடி வெட்டிக்கொள்ளும் தேதி அரசாங்கத்துக்கு தெரியாது.

ஆனால் இந்த தொழிலில் ட்ரான்சாக்சன் ஆகும் தொகை பெரிதாக இருப்பதால் இதில் கிடைக்கும் வருமானமும் பெரிதாக தெரிவதால் இளைஞர்கள் [ரியல் எஸ்டேட் ஏஜன்ட்டு] அதிகமான மெட்டீரியல் ஆசைகளில் கவனம் சிதறி கைக்கு கிடைக்குமுன் வருமானத்தையே கடனாக செலவு செய்துவிட வாய்ப்பு அதிகம். எனவே வருமானம் வருமுன் மானம் காக்க!!

அவசரப்படும் பேச்சு

நீங்கள் விற்பனை பிரிவில் இருக்கிறீர்களா?....'ஆலாய் பரப்பதை தவிர்த்து விடுங்கள்". உங்கள் கஸ்டமர்களுக்கு ஒரு திறமை உண்டு, நீங்கள் அவர்கள் தலையில் கட்ட நினைக்கிறீர்கள் என்பதை உங்களின் அவசரமான பேச்சில் எளிதாக உணரக்கூடிய சக்தி அவர்களிடம் உண்டு. Desperateness Always Kill the sale.

நீங்கள் தரும் பொருளை வாங்கினால் என்ன நன்மை என்பதை நிதானமாக விளக்கினாலே போதும். உங்களுக்கு இது தெரியுமா என சவால் விட வேண்டாம், பிசினசில் சவால்கள் உறவை முறிக்கும். உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் பொறுமையாக மற்றவர்களும் உங்களிடம் வாங்குகிறார்கள் என்பதை உணர்த்துங்கள். 'எங்கே பிசினஸ் அப்படி ஒன்னும் விசேசமா இல்லை...முன்னமாதிரி கூட்டம் இப்ப எங்கெ இருக்கு" எனும் நெகட்டிவ் ஆன வார்த்தைகள் கொசுமருந்து மாதிரி கஸ்டமர்களைவிரட்டிவிடும்.

வாய்ப்புகள் மீது கவனம் தேவை:


நம் ஊர் போன்ற கீழ்தஞ்சை மாவட்ட பெண்களின் தொழில்திறன் & Human Capital அனாவிசயமாக வீணாவதாக நான் நினைக்கிறேன். வருமானம் தேவைப்படும் பல பெண்கள் சரியான வாய்ப்புகள் இல்லாததால் அவர்களால் சம்பாதிக்க முடியாது என்றும்'காசுக்கும், பணத்துக்கும் என் காலில்தானே கிடக்க வேண்டும்'என்ற எழுதாத ஆண் ஆதிக்க சட்டங்கள் பெண்களை தொடர்ந்து அடிமையாக்கி வைத்திருக்கிறது. நம் ஊர் போன்ற இடங்களில் எந்த தொழிலும் செய்ய முடியாது என்று நினைப்பதால் ஆண்களும் இருந்தால் சும்மா இருப்பேன்,இல்லாவிட்டால் "விசா வருது" என சொல்லிக்கொண்டிருப்பேன் என்று எதையும் தொடங்காமல் 10 , 15வருடத்தை ஒட்டிவிடுகின்றனர். பிள்ளைகளின் தேவைகள் அதிகரிக்கும்போது இதுவரை காப்பாற்றிய குடும்ப கெளரவம்,தனிமனித மரியாதை எல்லாவற்றிற்கும் ஒரு "டாட்' வைக்க வேண்டியிருக்கிறது.

நம்மை போன்ற ஒரு மனிதர் பன்க்கர் ராய், ராஜஸ்தானில் எந்த வசதிகளும் அற்ற ஒரு ஊரை எப்படி உலகுக்கு எடுத்துச்சென்றிருக்கிறார் என பார்ப்போம். இப்போது இருக்கும் மின்சாரத்தட்டுப்பாட்டுக்கு எவ்வளவு அழகாக தீர்வு சொல்லியிருக்கிறார். நம் ஊரில் மட்டும் 25000 பெண்கள் இருக்கலாம் அதில் 2000 பேர் இந்த சோலார் பேனல்களை செய்ய ஆரம்பித்தால்.......நம் ஊரிலும் ஒரு பன்க்கர் ராய் உருவாகும் நேரம் வந்து விடாதா?

எதிர்ப்புகள் எல்லாம் நம்மை தாக்கும் அம்புகளல்ல

சிலர் தொழில் செய்யும்போது, அல்லது அவர்களது பொருள்களைக் குற்றம் சொல்லி விட்டால் தன்னை ஏதொ லைட்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மாதிரி ஃபீலிங்கில் இருப்பார்கள். இது சில அனுபவசாலிகளிடம் கூட இருக்கும் விசயம். முதலில் உங்கள் கஸ்டமர் சொல்லும் விசயத்தில் உண்மை இருக்கிறதா என பார்க்க வேண்டும். அதில் உண்மை இல்லாத போது ஏன் கவலைப்பட வேண்டும். அப்படியே உண்மை இருந்தாலும் திருத்தி கொள்வதுதான் நல்லது.அதை விட்டு ஒரே டென்சனாக கஸ்டமரிடமே கொட்டித்தீர்ப்பது "நாக்கில் சனி" என்ற பட்டம் வாங்க அடித்தளம்.

சிலர் ஆபிசில் /கடையில் நுழையும்போதே மற்றவர்களுக்கு ஒரு அசெளகரியம் இருக்கும்,நீங்கள் தீயணைக்கும் வண்டி மாதிரி வந்தால் அப்படித்தான்.... எல்லோரும் 'தெறிச்சி' ஒடுவதில் சாதனையில்லை. எவ்வளவு பேரை உங்களின் அருகாமையில் கொண்டுவர முடியும் என்பதே எப்போதும் நல்லது.

கொஞ்சம் லைட் ரீடிங் ஆக எழுதலாம் என்ற முயற்சியில் இந்த படிக்கட்டு..அடுத்த படிக்கட்டு எப்படி என்று எனக்கே தெரியாது.

See you next week
ஏற்றம் தொடரும்...
ZAKIR HUSSAIN
நன்றி அதிரை நிருபர்
, ,