குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

9.9.25

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

முற்பகல்
முற்பகல்
அல்குர்ஆன் அத்தியாயம் : 93
அல்லுஹா.
 

விடிந்த நாள் வளர்ந்து,

வீழ்வதற்கு நடுவே;

வட்டச் சூரியன் – நடு

வானடையு முன்னே;

குளிருக்கு இதமான

கோடைக்கும் பதமான

முற்பகல் மீதாணை !


ஊர்வன விழுங்கிய இரைக்கு– வயிற்றுள்

வாய்த்திடும் காரிருள் போல்

நிசப்தத்தோடு நிலைபெறும்

இரவின் மீதாணை !


உம்மைப் படைத்தவன்

உயிரை நுழைத்தவன்

உணர்வை விதைத்தவன்

உலகின் ரட்சகன்

கை விட்டுவிடவில்லை

மெய்யாய் வெறுத்துவிட வுமில்லை !


சூதும் வாதும் வேதனை செய்யும்

சூழ்ச்சியும் வீழ்ச்சியும் சுழற்றி அடிக்கும்

தற்காலிகத் தங்குமிடம் – இந்த

தரணி வாழ்வைவிட


நேர்மையும் மகிழ்வும் நிரம்பிச் செழிக்கும்

நிம்மதியும் நிறைவும் நீடித்து நிலைக்கும்

மறுமை வாழ்வே

மகத்தான துமக்கு !


அருளையும் பொருளையும்

அள்ளி அள்ளி வழங்குவோன்

அன்போடு உமக்கும்

அளவின்றித் தருவான்;

அகம் மகிழ்ந்து பெறுவீர் !


ஆதரிக்க யாருமில்லா

அரவணைக்கப் பேருமில்லா

அநாதையாய் உமைக் கண்டே

அன்போடு காப்பாற்றி

அரவணைத்து ஆதரித்தான் !


மேற்கொண்டு செல்ல

வழியற்று நின்றீர்;

மீள்கின்ற இலக்கை

மறந்து விட்டிருந்தீர்;


தெளிவான பாதை

திருத்தி அவன் தந்தான்;

நேர்வழி காட்டி

நிலைப் புகழ் அளித்தான் !


பொருளென்றும் பெயரென்றும்

படைத்தவன் அருளென்றும்

தேவையுடைய உம்

தேடலை நிறைவேற்றி

தன்னிறைவைத் தந்தான் !


ஆகவே நீர்…

அன்பு காட்ட ஆளில்லா

அரவணைக்க உறவில்லா

அநாதையை வெறுக்காதீர்;

கடிந்து சொல் உதிர்க்காதீர் !


வசிப்பினில் தோற்று

பசிப்பிணி யுற்ற

யாசகரை விரட்டாதீர் !


ஆலங்களைப் படைத்தவன்

அபிவிருத்திச் செய்பவன்

ஆண்டவனின் கிருபைகளை…

அவன்தன் ஆளுமையை …

அளப்பரிய அருட்கொடையை…

அகிலத்தார் யாவருக்கும்

அறிவித்து வருவீராக!


*சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்*

, ,