குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

7.9.24

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

குனூத் நாஸிலா
குனூத் நாஸிலா

குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும். இதனை நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும் காலகட்டங்களில் ஓதியுள்ளார்கள்.

صحيح مسلم
299 - (677) وَحَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، وَاللَّفْظُ لِابْنِ مُعَاذٍ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: " قَنَتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ فِي صَلَاةِ الصُّبْحِ يَدْعُو عَلَى رِعْلٍ، وَذَكْوَانَ، وَيَقُولُ: عُصَيَّةُ عَصَتِ اللهَ وَرَسُولَهُ "

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் 'உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்' என்றும் கூறினார்கள்
நூல்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் தான் குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்'' என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.
நூல்: புகாரி 1002

குர்ஆனை மனனம் செய்த எழுபது ஸஹபாக்களை, இணை வைப்பாளர்கள் கொன்ற காரணத்தினால் தான் நபியவர்கள் அவர்களைச் சபித்து கடமையான தொழுகைகளில் ஒரு மாத காலம் குனூத் ஓதியுள்ளார்கள்.

நபியவர்கள் ஒருமாத காலம் ஓதினார்கள் என்பது ஒரு செய்தியாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் ஓத வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்த எல்லையாக கட்டளையாகக் குறிப்பிடப்படவில்லை.

எனவே பாதிப்பின் தாக்கம் மனதில் இருந்து நீங்கும் கால அளவிற்கு நாம் இந்த சோதனைக் கால குனூத்தினை ஓதிக் கொள்ளலாம்.

கடமையான தொழுகை அனைத்திலும் சோதனைக்கால குனூத் ஓதலாம்

சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்தக் குனூத்தை நபியவர்கள் சுப்ஹுத் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்து கடமையான தொழுகைகளிலும் ஓதியுள்ளார்கள்.

கடமையான தொழுகைகளில் கடைசி ரக்அத்தில் ருகூவிற்குப் பிறகு ஒதியுள்ளார்கள்.

இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஃரிப், ஃபஜ்ர்ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் (நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில்) இருந்தது.
நூல்: புகாரி 798, 1004

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி)நூல்: முஸ்லிம்

அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது போன்றே உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று கூறுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர் , இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளின் கடைசி ரக்அத்களில் (ருகூஉவிலிருந்து எழுந்து) சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறிய பிறகு குனூத் (சிறப்புப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் இறை நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.
நூல் : புகாரி 797

சுருக்கமாக ஓத வேண்டும்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் (சோதனைக்கால) குனூத் ஓதினார் களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஆம்' என்று பதிலளித்தார்கள். ருகூஉவுக்கு முன்பா குனூத் ஓதினார்கள்? என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ருகூஉவுக்குப் பின்பு குறைந்த நேரம் ஓதினார்கள் எனப் பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி 1001

மேற்கண்ட ஹதீஸ் சோதனைக் கால குனூத் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.

இன்றைக்கு சவூதி உட்பட சில நாடுகளில் இந்த சோதனைக் கால குனூத்தினை மிக நீண்ட நேரம் ஓதுகின்றனர். ஆனால் இதற்கு நபிவழியில் ஆதாரம் கிடையாது.

நபியவர்கள் இந்த சோதனைக் காலப் பிரார்த்தனையை மிகவும் சுருக்கமாகத்தான் ஓதியுள்ளார்கள் என்பதை அவர்களின் நடைமுறையில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். பின்வரும் ஹதீஸில் நபியவர்கள் எவ்வாறு சோதனைக் கால பிரார்த்தனை செய்தார்கள் என்பது இடம் பெற்றுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு (சோதனைக்கால) குனூத்' ஓதினார்கள். அதில்,

இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்கு வாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்
நூல் : புகாரி 6393

நபியவர்கள் செய்த பிராரத்தனையின் அளவை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

எனவே நாமும் இதே அளவிற்கு மிகவும் நீண்டு விடாமல் சோதனைக்கால பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.

கைகளை உயர்த்தி பிரார்த்திக்க வேண்டும்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (எழுபது நபித்தோழர்கள் கொல்லப்பட்ட போது) அவர்களுக்காக நபியவர்கள் கவலைப்பட்டது போல் வேறு எந்த ஒன்றிலும் கவலைப்பட்டு நான் பார்த்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையில் தன்னுடைய இரு கைகளை உயர்த்தி (நபித்தோழர்களை கொலை செய்தவர்களுக்கு) எதிராக பிரார்த்னை செய்ததை நான் பார்த்தேன்.
நூல் : அஹ்மத்

சோதனைக் கால குனூத்தில் நபியவர்களை கைகளை உயர்த்தி பிரார்த்தித்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

எனவே நபியவர்கள் செய்ததைப் போன்று இமாமும், பின்பற்றி தொழுபவர்களும் கைகளை உயர்த்தி பிரார்த்திக்க வேண்டும்.

சப்தமாக பிரார்த்திக்கலாமா?

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு (சோதனைக்கால) குனூத்' ஓதினார்கள். அதில்,

இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்கு வாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!
என்று பிரார்த்தித்தார்கள்
நூல் : புகாரி 6393

மேற்கண்ட செய்தியில் இமாமாக தொழுவித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனையை நபித்தோழர்கள் செவியேற்றுள்ளனர் என்பதை நாம் அறிய முடிகிறது.

எனவே இமாமாக தொழுவிப்பவர் பிரார்த்தனையை வெளிப்படுத்திச் செய்யலாம். ஆனால் மிகவும் உரத்த சப்தத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பணிவை வெளிப்படுத்தும் வகையில் இமாம் தனது பிரார்த்தனையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பற்றி தொழுபவர்கள் கைகளை உயர்த்தி பணிவாகவும், இரகசியமாகவும் பிராரத்தனை செய்ய வேண்டும்.

ஜூம்ஆ உரையில் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது ”அல்லாஹும் மஸ்கினா” (இறைவா எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக) என்ற துஆவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு கேட்கும் விதமாக செய்துள்ளார்கள். மக்களும் அதே பிரார்த்தனையை தங்கள் கைகளை உயர்த்தி சப்தமின்றி செய்துள்ளனர் (பார்க்க புகாரி 1029, 1013, 1014) இதன் அடிப்படையில் சோதனைக் கால குனூத்திலும் நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆமீன் கூற வேண்டுமா?

சோதனைக் கால குனூத்தின் போது பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் சொல்ல வேண்டும் என்பதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஒரு செய்தியை ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் தொடர்ச்சியாக ஒரு மாதம் லுஹர், அஸர், மஃரிப், இஷா, சுபுஹ் ஆகிய அனைத்து தொழுகைகளின் இறுதியில், (அதாவது) கடைசி ரக்அத்தி்ல் “சமிஅல்லாஹூ லிமன் ஹமிதஹ்” என்று கூறும் போது பனூ சுலைம் கோத்திரத்தாரில் ரிஃல், தக்வான், உஸைய்யா ஆகிய குலத்தாருக்கு எதிராக பிரார்த்தித்து குனூத் ஓதினார்கள். நபியவர்களுக்கு பின்னால் உள்ளவர்கள் ஆமீன் சொன்னார்கள்.
நூல் : அபூ தாவூத், அஹ்மத்

இன்னும் பல நூல்களில் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹிலால் பின் கப்பாப் இடம் பெற்றுள்ளார். இவர் கடைசி காலத்தில் மூளை குழம்பி விட்டார்.

ஹிலால் பின் கப்பாப் நம்பகமானவர்; ஆயினும் கடைசி காலத்தில் மூளை குழம்பி விட்டார் என்று சுஃப்யான் கூறுகிறார். ஹிலால் பின் கப்பாப் மூளை குழம்பிய நிலையில் அவரை நான் சந்தித்துள்ளேன் என்று யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் கூறுகிறார். யஹ்யா பின் சயீத் அல்கத்தான் கூறுவது பற்றை யஹ்யா பின் மயீன் அவர்களிடம் நான் கேட்ட போது அவர் மூளை குழம்பவில்லை என்று மறுத்தார்
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்

இதில் யஹ்யா பின் மயீன் அவர்களின் கருத்தை நாம் ஏற்க வேண்டியதில்லை. ஏனெனில் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் அவர்கள் ஹிலாலை மூளை குழம்பிய நிலையில் பார்த்ததாக சொல்கிறார். நேரடியாகப் பார்த்து சொல்லும் விமர்சனம் உறுதியானது. யஹ்யா பின் மயீன் அவர்கள் தாம் அறிந்தவரை அவர் மூளை குழம்பியவராக இல்லாததால் அப்படி கூறியதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்ற விமர்சனத்தை விட இருக்கிறது என்ற விமர்சனமே ஏற்கப்படும்.

பொதுவாக மூளை குழம்பியவரின் அறிவிப்பை ஏற்பதாக இருந்தால் அவரிடமிருந்து அறிவிக்கும் மாணவர் அவர் மூளை குழம்புவதற்கு முன் கேட்டாரா அல்லது மூளை குழம்பிய பின் கேட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைப்பதை வைத்தே முடிவு செய்யப்படும்.

இந்த அறிவிப்பில் அதைத் தெளிவுபடுத்தும் சான்றுகள் எதுவும் கிடைக்காததால் இச்செய்தி நிறுத்தி வைக்கப்படும். தெளிவு கிடைக்கும் வரை இதைக் கொண்டு அமல் செய்ய முடியாது.

எனவே சோதனைக் கால குனூத்தின் போது இமாம் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் சொல்ல உறுதியான ஆதாரம் இல்லை.

இமாமும் பிராரத்தனை செய்ய வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என இதர செய்திகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும்.

தமிழில் பிராரத்திக்கலாமா?

நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகள் இரண்டு விதமாக உள்ளன. ஒன்று நபியவர்களே அமைத்துத் தந்த பிரார்த்தனை வாசகங்கள்.

கழிப்பிடத்திற்குச் செல்லும் முன் ஓதும் துஆ, பிறகு ஓதும் துஆ, தூங்கும் முன்பும், பின்பும் ஓத வேண்டிய துஆக்கள், சாப்பிடும் முன்பும், பின்பும் ஓத வேண்டிய துஆக்கள் இது போன்ற அன்றாடம் ஒத வேண்டிய பிரார்த்தனைக்கான வாசகங்களை நபியவர்களே கற்றுத் தந்துள்ளார்கள்.

ஒவ்வொருவரும் இது போன்ற நிலைகளில் நபியவர்கள் எந்த வார்த்தைகளைக் கூறினார்களோ எந்த மொழியில் கூறினார்களோ அது போன்று தான் கூற வேண்டும். இதில் மாற்றம் செய்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் நபிகளார் கற்றுத் தந்த அரபி மொழியிலும் கூட அதே போன்ற அர்த்தமுடைய வேறு சொல்லை அந்த துஆக்களில் நாம் நமது விருப்பப்படி சேர்ப்பதற்கு மார்க்கம் தடை விதித்துள்ளது.

மற்றொரு வகைப் பிரார்த்தனை நாமாகத் தேர்ந்து எடுத்து சுயமாகச் செய்ய வேண்டிய பிரார்தனைகள் ஆகும். அதாவது பிராரத்தனையில் என்ன கேட்க வேண்டும் என்பதை பிரார்த்திப்பவரே முடிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ள பிரார்த்தனைகள்.

அத்தஹிய்யாத் இருப்பின் இறுதியில் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஒவ்வொருவரும் அவரவர் விரும்பியதைக் கேட்க வேண்டும் என்றால் அவரவருக்குத் தெரிந்த மொழியில் கேட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.

அது போன்று தொழுகையில் ஸஜ்தாவின் போது பிரார்த்தனை செய்யுங்கள் என்று நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஸஜ்தாவின் போது நமக்குத் தேவையானவற்றை நமக்குத் தெரிந்த மொழியில்தான் நாம் பிரார்த்திக்க முடியும்.

என்ன பிரார்த்திக்க வேண்டும் என்பது பிராரத்திப்பவர் முடிவு செய்ய வேண்டிய பிராரத்தனைகளாக இருந்தால் அதனை நமக்குத் தெரிந்த மொழிகளில் நாம் செய்து கொள்ளலாம்.

நபியவர்கள் காலத்தில் ரிஅல், தக்வான் உட்பட சில சமுதாயத்தினர் முஸ்லிம்களைக் கொன்றனர். எனவே அவர்களுக்கு எதிராக நபியவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

எனவே நாம் தற்போது அதே வார்த்தைகளைச் சொல்வது பொருத்தமற்றதாகும்.

யாருக்கு எதிராக, யாருக்கு ஆதரவாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை பிரார்த்திப்பவர் தான் தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளதால் இதனை அவரவர் தாய்மொழியில் செய்ய வேண்டும். தமிழ் மொழி பேசுவோர் தமிழிலும், உருது, தெலுங்கு , கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், அரபி என அவரவர் பேசும் மொழியில் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

நன்றி onlinepj.in
, ,