குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

10.5.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஊரில் மழையாமே?! -சபீர்
மற்றொரு 
மழை நாளில்...
மடித்துக் கட்டிய லுங்கியும்
மடக்குக் குடையுமாய்
தெருவில் நடந்த தினங்கள்...



கச்சலில் கட்டிய 
புத்தக மூட்டையும்.. 
"அடை மழை காரணமாக
பள்ளி இன்று விடுமுறை"யென- 
தேனாய் இனித்த
கரும்பலகையும்...

சற்றே ஓய்ந்த
மழை வரைந்த
வாணவில்லும்...

சுல்லென்ற ஈர வெயிலும்...
மோதிரக்கல் தும்பியும்...
கருவேலும் 
புளிய மரமும்
சேமித்த மழையும் 
கிளையை இழுக்க
சட்டென கொட்டி
நனைந்த உடையும்...


க்ஷைத்தானுக்கு கல் எறிந்த பின்
சுப்ஹுத் தொழ
ஜன்னல் தட்டிய நண்பனும்...
வரப்பு வழியும் 
பல்ல குளமும்
வேட்டி அவிழ்த்து
உடம்பு தேய்க்கையில்
சட்டென தெரிந்த
நண்பனில் ...

மழையில் நனைந்த
"இன்று இப்படம் கடைசி"யும்...
கன்னி வைத்து காதிருந்த உப்பளங்களும்...
பள்ளியில் போட்ட 
குட்டை போல
கால்களை இழுத்து நடந்த
தற்காலிக ஓடைகளும்...

முட்டாள் சாதகத்தால்
பாம்பை அழைக்கும் நுழலும்...
மழையில் நணைந்த இரவில்
குழல் விளக்கில் 
முட்டி முட்டி பால் குடிக்கும் 
விட்டிலும்...

மழை நீருடன்
முயங்கிச் சிவந்த
தண்டவாளத் தடமும்...
தட்டுத் தடுமாறிய நடையும்... 
சென்னை ரயிலுக்கு 
வழிவிடுகையில் 
கை காட்டிய குழந்தையும்...

ஜில்லிட்ட இரவு
என்ன பாடு படுதியதோ-
மறுநாள் காலை
வெட்டிக் குளத்தில் 
மிதந்த நிரோத்களும்...

மழையால் ஊரில் 
இயல்பு வாழ்க்கை பாதிப்பாமே?
பொய்யும் புறமும்-
கடனும் பற்றாக் குறையும்-
சன்டையும் சச்சரவும்- 
வெட்டிப்பேச்சும் வீண் வம்பும்
என்ற-
இயல்பு வாழ்க்கையை விட
மழையால் பாதிக்கப்பட்ட
வாழ்க்கை மேல் அல்லவா? 

                                        -sabeer
, ,