இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

27/03/2011

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

சுவனத்துச் ஜோடிப் புறாக்கள்!
அபுதல்ஹா (ரலி), உம்மு சுலைம் (ரலி)

ஜைத் இப்னு ஸஹ்ல் அந்நஜ்ஜாரி என்ற அபுதல்ஹா (ரலி) அவர்கள் ஒரு சின்னதொரு செய்தியைக் கேள்விப்படுகின்றார்கள். அவரைச் சந்தோஷத்திலாழ்த்திய அந்தச் செய்தி என்னவென்றால், அர்ருமைஸா பின்த் மில்ஹான் அந்நஜ்ஜாரி என்ற, உம்மு சுலைம் (ரலி) என்றும் அழைக்கப்படக் கூடிய அந்தப் பெண்மணி விதவையாக இருக்கின்றார் என்றும், இப்பொழுது தனக்கேற்ற மணமகன் ஒருவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்றும் கேள்விப்படுகின்றார்.

உம்மு சுலைம் (ரலி) அவர்களோ அன்றைய அரேபியாவில் மிகச் சிறந்த ஒழுக்கப் பண்புள்ள, நல்ல கல்வி ஞானமுள்ள, எந்தவித கெட்ட நடத்தையும் இல்லாத பெண்மணியாகத் திகழ்ந்த காரணத்தால், உம்மு சுலைம் (ரலி) அவர்களை எப்படியாவது கைப்பிடித்தாக வேண்டும் என்பதிலும், தனக்கு முன்பாக வேறு யாரும் அவரைப் பெண்கேட்டு விடக் கூடாது, தானே அவரைப் பெண்கேட்கும் முதல் ஆளாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்த அபுதல்ஹா (ரலி) அவர்கள் அவரை எப்படியாவது மணந்து விடுவது என்ற முயற்சியில் இறங்கி விட்டார்.

ஆளுமை, உயர்ந்த பண்பாடு மற்றும் வசதி வாய்ப்புகள் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் தன்னைத் தவிர்த்து வேறு யாரையும் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கைபிடிக்க மாட்டார்கள் என்ற மன உறுதியும் அவருக்கு இருந்தது. இன்னும் அதிகமாக அவரிடம் காணப்பட்ட வீரம், பனுநஜ்ஜார் கோத்திரத்தாரிலேயே மிகச் சிறந்த வீரர் என்ற பெயரையும், இன்னும் யத்ரிப் நகரிலே மிகச் சிறந்த வில்வித்தை வீரர் என்ற பெருமையையும் அபுதல்ஹா (ரலி) அவர்கள் பெற்றிருந்தது இன்னும் அவரது தகுதியை அதிகப்படுத்தியிருந்தது.

தன்னுடைய தகுதிகளையும், பெருமைகளையும் ஒரு முறை நினைத்துப் பார்த்துக் கொண்ட அபுதல்ஹா (ரலி) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது வீட்டை நோக்கிச் செல்கின்றார்கள். செல்லும் வழியில் அவர்கள் ஒரு செய்தியைக் கேட்க நேரிடுகின்றது.

மக்காவில் இருந்து வந்த முஸ்அப் இப்னு உமைர் (ரலி) என்ற இஸ்லாமிய அழைப்பாளரது அழைப்பைச் செவி மடுத்த உம்மு சுலைம் (ரலி) அவர்கள், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் தூதராகவும் ஏற்றுக் கொண்டு, முஹம்மது அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார் என்ற செய்தியை அபு தல்ஹா அவர்கள் கேள்விப்படுகின்றார்கள்.

இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல, இதற்கு முன்னர் உம்மு சுலைம் (ரலி) அவர்களது முதற் கணவர் தன்னுடைய மூதாதையர்களின் மார்க்கத்தில் தானே இருந்தார். முஹம்மது அவர்களை ஏற்க மறுத்து அவரது பழைய மார்க்கத்திலேயே இருந்ததும், முஹம்மது அவர்களின் இஸ்லாமிய அழைப்பை அவர்கள் ஏற்க மறுத்து வாழ்ந்ததும் தனக்குத் தெரிந்த ஒன்று தானே! அது ஒன்றும் உம்மு சுலைமினுடைய மணவாழ்க்கையை எந்த விதத்திலும் பாதித்ததில்லையே! என்று நினைத்துக் கொண்டு மன ஆறுதலடைந்த அபுதல்ஹா (ரலி) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது வீட்டை நெருங்குகின்றார்கள்.

இப்பொழுது அபுதல்ஹா (ரலி) அவர்கள், உம்மு சுலைம் (ரலி) அவர்களது வீட்டு வாசற்படியில் நின்று கொண்டு தான் உள்ளே வருவதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகின்றார். அப்பொழுது, உம்மு சுலைம் (ரலி) அவர்களுடன் வீட்டில் அவர்களது மகன் அனஸ் அவர்களும் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இருந்தும் எந்தவித சங்கடமும் இல்லாமல், துணிவுடன் உம்மு சுலைம் (ரலி) அவர்களைப் பார்த்து, உங்களைக் கரம் பிடிக்க வந்துள்ளேன் என்று கூறுகின்றார்கள்.

உம்மு சுலைம் (ரலி) அவர்களோ, உம்மைப் போன்ற சிறந்த மனிதரை நான் மணக்க முடியாது என்று சொல்வது நல்லதல்ல, இருந்த போதிலும் நீங்கள் ஒரு இணைவைப்பாளர் (முஸ்லிமல்லாதவர்) என்ற நிலையில் உங்களை நான் மணம் செய்து கொள்ள முடியாது என்று உம்மு சுலைம் (ரலி) அவர்கள் பதிலளிக்கின்றார்கள்.

ஒருவேளை உம்முசுலைம் தன்னை எப்படி மணக்க மறுப்பது என்று கூற முடியாமல், இப்படிக் கூறுகிறாரா? அல்லது என்னை விட வசதியான அல்லது என்னை விட வலிமை மிக்க கோத்திரத்து நபரை மணமுடிக்க விரும்புகின்றாரா? என்று குழம்பிய நிலையில் இருந்த அபுதல்ஹா (ரலி) அவர்கள், சரி அவரிடமே உண்மையைக் கூறும் படிக் கேட்டு விடுவது என்று நினைத்த அவர்,

உம்மு சுலைம் (ரலி) அவர்களே! உண்மையைச் சொல்லுங்கள்!

என்னை மணமுடிப்பதற்கு நீங்கள் மறுத்ததன் காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா? என்றார்.

நான் மறுத்ததில், இன்னுமொரு காரணம் இருக்கின்றது என்று நீங்கள் கருதுகின்றீர்களா? என்று உம்மு சுலைம் (ரலி) பதிலுக்கு ஒரு கேள்வியை வீசினார்.

உமக்கு என்ன வேண்டும்? மஞ்சளா அல்லது வெள்ளையா, தங்கமா அல்லது வெள்ளியா! எதிர்க்கேள்வியை வீசினார் அபுதல்ஹா (ரலி)!

தங்கமா வெள்ளியா..! பெருமூச்சொன்றை விட்டு தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்திய உம்மு சுலைம் (ரலி) அவர்கள்,

ஹும்! நீங்கள் நினைத்தது போல் நான் தங்கத்திற்கும் வெள்ளிக்கும் ஆசைப்படவில்லை அபுதல்ஹா (ரலி) அவர்களே!

உம்மைச் சாட்சி பகர அழைக்கின்றேன்! இன்னும் அல்லாஹ்வின் மீது விசுவாசங் கொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களை அந்த இறைவனின் தூதராக ஏற்றுக் கொண்டு, இஸ்லாத்திற்குள் நுழைந்து விடுவதற்கு உம்மை அழைக்கின்றேன்.

அவ்வாறு நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, விசுவாங் கொண்டு விட்டால், உம்மை நான் மண முடித்துக் கொள்ளச் சம்மதிக்கின்றேன், நீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்ட பின்னர், தங்கமும் வெள்ளியும் என்ன?! எனது மணக்கொடையாக உமது இஸ்லாத்தையே ஏற்றுக் கொள்கின்றேன் என்று பதில் கூறி முடித்தார்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்கள்.

உம்மு சுலைம் (ரலி) அவர்களின் இஸ்லாமிய அழைப்பை செவிமடுத்த அபுதல்ஹா (ரலி) அவர்கள், ஒரு கணம் சற்றுச் சிந்திக்கலானார். தன்னிடம் உள்ள அரிய வகை மரத்தால் செய்யப்பட்டதும், அபூர்வமான கலைநயத்துடன் கூடிய, தன்னுடைய இனத்திற்கே பெருமை சேர்க்கக் கூடிய தன்னிடம் இருக்கும் அந்த மரச் சிலையைப் பற்றியும், அதனால் தனக்குக் கிடைத்து வரும் பெருமைகள் பற்றியும் அவரது மனம் சிந்திக்கலானது.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்! என்ற பழமொழிக்கேற்ப, அபுதல்ஹா (ரலி) அவர்களின் சிந்தனையைக் கிளற முடிவு செய்த உம்மு சுலைம் (ரலி) அவர்கள்,

அபுதல்ஹா (ரலி) அவர்களே! அல்லாஹ்வை மட்டும் வணங்குவதை விட்டு விட்டு, அதற்குப் பதிலாக நீங்கள் போற்றிப் பாதுகாத்து வணங்கி வரக் கூடிய உங்களது அந்தச் சிலை, முன்பொரு காலத்தில் இந்த பூமியில் மரமாக வளர்ந்த ஒன்று தானே என்பதை நீங்கள் அறியவில்லையா?

நிச்சயமாக! அது மரமாக வளர்ந்த ஒன்று என்பதை நான் அறிவேன் என்ற பதிலைத் தந்தார்கள் அபுதல்ஹா (ரலி) அவர்கள்.

நீங்கள் வளர்த்த ஒரு மரத்தை வெட்டி, அதனைச் சிலையாக வடித்து வணங்கிக் கொண்டிருக்க, அந்த மரத்தின் ஏனைய பாகங்கள் அடுப்பெரிக்கும் விறகுகளாகப் பயன்பட்டு, அடுப்பெரிக்கவும், ரொட்டி சுடுவதற்கும் பயன்படுத்தப்பட்டு சாம்பலாக மாறி விட்டதை நீங்கள் பாக்கவில்லையா?

இங்கே சற்றுக் கவனியுங்கள் அபுதல்ஹா (ரலி) அவர்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் உங்களை என்னுடைய கணவராக ஏற்றுக் கொள்கின்றேன். இஸ்லாத்தைத் தவிர வேறெதனையும் என்னுடைய மணக்கொடையாக உங்களிடம் கேட்க மாட்டேன். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதொன்றையே என்னுடைய மணக் கொடையாக ஆக்கிக் கொள்கின்றேன் என்று கூறி முடித்தார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள்.

நான்; முஸ்லிமாவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று அபுதல்ஹா (ரலி) அவர்கள் கேட்டார்கள்.

நான் அந்த வழியைச் சொல்கின்றேன் என்றார் உம்மு சுலைம் (ரலி). சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதற்கு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார் என்றும் சாட்சி பகர்கின்றேன் என்று கூறுங்கள். பின்னர் உங்கள் வீட்டுக்குச் சென்று உங்களது சிலைகளை உடைத்தெறிந்து விட்டு, அவற்றை தூக்கி எறியுங்கள்.

சற்று நிதானத்துடன் உம்மு சுலைம் (ரலி) அவர்களை நோக்கிய அபுதல்ஹா (ரலி) அவர்கள், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனது திருத்தூதாராக இருக்கின்றார் என்றும் நான் சாட்சி பகர்கின்றேன் என்றும் கூறி முடித்தார்.

அதன் பின்னர் உம்மு சுலைம் (ரலி) அவர்களை அபுதல்ஹா (ரலி) அவர்கள் மணமுடித்துக் கொண்டார்கள். இவர்களது இந்தத் திருமணத்தைப் பற்றி அந்த மதீனமா நகரமே இப்படிப் பேசிக் கொண்டது. இதுவரை எங்களது வாழ்நாளில் இதுபோன்றதொரு திருமணத்தைப் பார்த்ததில்லை. உம்முசுலைம் அவர்கள் கேட்டது போன்றதொரு மணக்கொடையை, இதை விட மிகத் தூய்மையானதொரு மணக்கொடையை நாங்கள் கேள்விப்பட்டதும் இல்லை, ஏனெனில் அவர் இஸ்லாத்தையை அல்லவா மணக் கொடையாகப் பெற்றிருக்கின்றார் என்று பேசிக் கொண்டார்கள்.

அந்த நாள் முதல் அபுதல்ஹா (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் மீது மிகப் பிடிப்புள்ளதொரு முஸ்லிமாகத் திகழ்ந்தார்கள். தன்னுடைய திறமைகளையும், சக்தியையும் இஸ்லாத்திற்குத் தொண்டு செய்வதிலேயே கழித்தார்கள்.

அல் அகபா என்ற இடத்தில் முஹம்மது (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்து கொண்ட அந்த எழுபது நபர்களில் இவரும், இவரது மனைவி உம்மு சுலைம் (ரலி) அவர்களும் அடங்குவார்கள். யத்ரிப்பிலே இருக்கக் கூடிய முஸ்லிம்களுக்காக நியமிக்கப்பட்ட 12 தலைவர்களின் குழுவில் அபுதல்ஹா (ரலி) அவர்களும் ஒரு தலைவராக முஹம்மது (ஸல்) அவர்களால், அந்த இரவில் நியமிக்கப்பட்டார்கள்.

அதன்பின் அபுதல்ஹா (ரலி) அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களுடன் பல போர்களில் கலந்து கொண்டார்கள். இவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களுடன் கலந்து கொண்ட போர்களிலே மிகவும் சிறப்பான முறையில் தன்னுடைய ஈமானுடைய வேகத்தை வெளிப்படுத்திக் காட்டியதொரு போர் என்று சொன்னால், இவர் கலந்து கொண்ட உஹதுப் போர் என்று சொல்லலாம்.

முஹம்மது (ஸல்) அவர்களின் மீது அபுதல்ஹா (ரலி) அவர்கள் கொண்ட அன்பானது, அவரது இதயத்தின் ஆழத்தில் உருவான அன்பு, அந்த அன்பானது அபுதல்ஹா (ரலி) அவர்களின் உயிர் நாடி நரம்புகள் அனைத்திலும், இரத்த நாளங்களிலும் கலந்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. முஹம்மது (ஸல்) அவர்களது திருவதனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதிலும், இன்னும் அவர்களது மலரிதழ்களிலிருந்து வெளி வரும் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருப்பதிலும் சற்றும் சலிப்படையாதவர்.

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன்பதாக உட்கார்ந்து விட்டால், இறைத்தூதர் (ஸல்) அவர்களே! உங்களது உயிருக்குப் பதிலாக என்னுடைய உயிரை அற்பணம் செய்யவும், கெடுதிகளிலிருந்து உங்களது முகத்தை என்னுடைய முகத்தைக் கொண்டு பாதுகாக்கவும் விரும்புகின்றேன் என்றும் கூறுவார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்த காரணத்தினால், உஹதுப் போரின் நிலைமைகள் மாறிப் போன பொழுது, எதிரிகள் நாலா பக்கங்களிலிருந்தும் முஸ்லிம்களையும், இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் சுற்றி வளைத்துத் தாக்க ஆரம்பித்தார்கள். அந்தத் தாக்குதல்களின் காரணமாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய பற்களில் ஒன்று உடைந்தது. அவர்களது முன் நெற்றி காயமடைந்தது, அவர்களது உதடும் கூட கிழிந்து விட்டது.

இந்த நிலையில், முஸ்லிம்களுடைய படையணியில் இருந்து கொண்டே வஞ்சக எண்ணத்துடன் இருந்த சிலர், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்களின் மன வலிமையைச் சிதைக்குமுகமாக, முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்து விட்டதாகக் கூக்குரலெழுப்பினார்கள்.

ஏற்கனவே தங்களது படையணியின் ஒழுங்கைத் தவற விட்டிருந்த முஸ்லிம்கள், முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற பொய்ச் செய்தியைக் கேள்விப்பட்டதும், அநேகம் பேர் போர்க்களத்தை அல்லாஹ்வின் எதிரிகளிடம் ஒப்படைத்து விட்டு ஒட்டமெடுக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது ஒரு சின்னஞ்சிறு கூட்டம் மட்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நின்று கொண்டிருந்தது. அவ்வாறு நின்று கொண்டிருந்த மிகச் சிலரில் மிகவும் பிரசித்த பெற்ற நபித் தோழராக அங்கே நின்று கொண்டிருந்தார் நம்முடைய அபுதல்ஹா (ரலி) அவர்கள்.

இப்பொழுது அபுதல்ஹா (ரலி) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் நின்று கொண்டு, அவர்களது உடம்பை தன்னுடைய உடம்பைக் கொண்டு பாதுகாப்பு வளையம் போல அமைத்துக் கொண்டவர்களாக, முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் ஒரு மலை நின்று கொண்டிருந்தால் எவ்வாறு அவர்களை தாக்குவது கடினமாக இருக்குமோ அது போல அபுதல்ஹா (ரலி) அவர்கள் உறுதியாக நின்று கொண்டிருந்தார்கள்.

அபுதல்ஹா (ரலி) அவர்கள் தன்னுடைய வில்லை மிகவும் உறுதியாகப் பிடித்துக் கொண்டு, குறி தவறாமல் எதிரிகளை நோக்கி அம்பெய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் எய்யக் கூடிய ஒவ்வொரு அம்பும் சரியான இலக்கை நோக்கிச் சென்று எதிரிகளைத் துளைத்தெடுத்தது மட்டுமல்லாமல், அவற்றில் எதுவுமே குறி தவறிச் சென்றதுமில்லை. அம்புகளை எய்து எதிரிகளில் ஒவ்வொருவராக மாய்த்துக் கொண்டிருந்த பொழுதும், முஹம்மத் (ஸல்) அவர்களது பாதுகாப்பிலும் மிகவும் கவனமாகவும் இருந்தார்கள்.

அபுதல்ஹா (ரலி) ஒவ்வொரு முறை அம்பைக் குறி வைக்கும் பொழுதும், அவர் சரியான முறையில் குறி பார்க்கின்றாரா என்பதை தன்னுடைய தலையைத் தூக்கி அவரது புஜங்களுக்கிடையே முஹம்மத் (ஸல்) அவர்கள் பார்க்கும் பொழுதெல்லாம், முஹம்மத் (ஸல்) அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்! நீங்கள் இப்படி பார்க்க முயற்சி செய்யாதீர்கள்!! அவ்வாறு செய்தால், எதிரிகள் உங்களை நோக்கி அம்பெய்துவார்கள். உங்களை அவர்களது அம்புகள் துளைத்தெடுப்பதை விட என்னுடைய கழுத்தையும் மார்பையும் துளைத்தெடுத்து விடுவதையே நான் விரும்புகின்றேன், உங்களுக்காக என்னையே அற்பணிக்க விரும்புகின்றேன் யா ராசூலுல்லாஹ்! என்று கூறினார்கள் அபுதல்ஹா (ரலி) அவர்கள்.

ஒவ்வொரு முறையும் முஹம்மது (ஸல்) அவர்களைக் கடந்து நிறைய அம்புகளுடன் ஒரு முஸ்லிம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதெல்லாம், இறைத்தூதர் (ஸல்) அவர்களை அழைத்து, உங்களது அம்புகளை அபுதல்ஹா (ரலி)வுக்காக போட்டு விட்டுச் செல்லுங்கள், போர்க்களத்தை விட்டுச் செல்பவர்கள் அம்புகளை எடுத்துக் கொண்டு செல்லாதீர்கள் என்று கூறுவார்கள்.

தன்னுடைய நிலையை உறுதியாக்கிக் கொண்டும், இறைத்தூதர் (ஸல்) அவர்களை பாதுகாத்துக் கொண்டும் போரிட்டுக் கொண்டிருந்த அபுதல்ஹா (ரலி) அவர்கள் இறுதியாக, மூன்று உடைந்த அம்புகள் மீதமாகும் வரைக்கும் போரிட்டு, எதிரிகளில் பலரைக் கொன்றிருந்த நிலையில், இறுதியாக போர் முடிவுக்கு வந்தது. இறைவனுடைய விதியின்படி, இறைவனுடைய பாதுகாவலினால், முஹம்மத் (ஸல்) அவர்கள் மிகவும் பாதுகாக்கப்பட்டவர்களாக இருந்தார்கள்.

இறைவனுடைய திருப்பொருத்தத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாக அபுதல்ஹா (ரலி) அவர்கள் அந்த சோதனையான நேரத்திலும் மிகவும் உறுதியாக இருந்து போராடினார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவும் இருந்தார்கள்.

இன்னும் அதிகமாக, பொருளுதவி தேவைப்பட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்திலும் மிகவும் தாராளத்தன்மையுடனும் நடந்து கொண்டார்கள் என்பதை பின்வரும் வரலாற்றுச் சம்பவம் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

அபுதல்ஹா (ரலி) அவர்களிடம் ஒரு பேரீத்தம்பழத் தோட்டமும், திராட்சைப்பழத் தோட்டமும் இருந்தது. அவருடைய தோட்டத்தில் இருக்கின்ற மரங்கள் தான் மதீனாவில் இருப்பதிலேயே மிகவும் உயரமான மரங்களைக் கொண்டதும், மிகவும் தரமான பழங்களைக் கொண்டதும் இன்னும் சுவையான தண்ணீரைக் கொண்ட தோட்டமுமாகும்.

ஒருநாள் அபுதல்ஹா (ரலி) அவர்கள் தன்னுடைய தோட்டத்தின் நிழலில் நின்று கொண்டு தொழுது கொண்டிருந்த பொழுது, பாடிக் கொண்டு மரம் விட்டு மரம் தாவிக் கொண்டிருந்த அடர்த்தியான நிறமுள்ள கால்களைக் கொண்டதொரு பறவையைக் கண்டதும் அவர்களது கவனம் தொழுகையிலிருந்து திசைமாறி அந்தப் பறவையின் மீதே கவனம் சென்று கொண்டிருந்தது.

திடீரென்று கவனம் திரும்பியவர்களாக தன்னுடைய சுயநினைவிற்கு வந்த அபுதல்ஹா (ரலி) அவர்கள், தான் தொழுதது இரண்டா அல்லது மூன்று ரக்அத்துக்களா? என்பதைக் கூட மறந்து விட்டிருந்தார்கள். அந்தளவுக்கு அந்தப் பறவையின் மீது அவரது கவனம் லயித்திருந்த காரணத்தினால்.., தான்எத்தனை ரக்அத்துக்கள் தொழுது முடித்திருக்கின்றோம் என்பதைக் கூட அவரால் நிச்சயிக்க முடியாதிருந்தது. தொழுகை முடித்ததும், உடனே அபுதல்ஹா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சென்று சந்தித்து, தன்னுடைய தோட்டத்தின் மீதும் அதன் அழகின் மீதும் அதில் பாடிக் கொண்டு திரியக் கூடிய பறவைகள் மீதும் என்னுடைய மனம் லயித்ததன் காரணமாக, இறைவனுடைய நினைவை விட்டும் அவை என்னைத் தடம் புறழச் செய்து விட்டன என்பதைப் பார்த்தீர்களா? என்று கூறி முடித்த அவர்,

இறைத்தூதர் (ஸல்) அவர்களே! நீங்கள் சாட்சியாக இருங்கள்! இந்த என்னுடைய தோட்டத்தை இறைவனுக்காக நான் அற்பணம் செய்கின்றேன். அல்லாஹ்வும், அவனது தூதரும் விரும்புகின்ற வழியில் அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.

அபுதல்ஹா (ரலி) அவர்கள் அடிக்கடி நோன்பு நோற்றுக் கொண்டும், ஒரு இறைப் போராளியாகத் தன்னுடைய வாழ்நாளின் இறுதிப் பகுதியைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்ததற்குப் பின்னாள், அபுதல்ஹா (ரலி) அவர்கள் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பெழுதியிருக்கின்றார்கள். அவர் தன்னுடைய முதுமைக் காலம் வரைக்கும் உயிர் வாழ்ந்தார். அவரது அந்தத் தள்ளாத வயதானது இறைவழியில் போராடக் கூடிய போர்வீரன் என்ற கடமையிலிருந்து அவரை பராக்காக்கி முடமாக்கி விடவில்லை, இன்னும் வெகுதூரம் பயணம் சென்று அல்லாஹ்வின் மார்க்கத்தினை சுதந்திரமாகக் கடைபிடிப்பதற்கும், இன்னும் அவனுடைய மார்க்கத்தைப் பரப்புவதற்கும் தடையாக உள்ளவற்றை எதிர்த்துப் போர் புரிவதற்கும் அவரது வயது ஒரு தடையாக இருந்ததில்லை.

உதுமான் (ரலி) அவர்கள் கலிஃபாவாக இருந்த காலத்தில் ஒரு நாள், முஸ்லிம்கள் கடல் வழிப்பயணமாக ஒரு போருக்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்பொழுது அந்தப் படையணியில் கலந்து கொள்வதற்கான தயாரிப்பில் அபுதல்ஹா (ரலி) அவர்கள் ஈடுபட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அவரது பயணத்தைக் கைவிடுவதற்காக வேண்டி முயற்சி செய்த அவரது மகன்கள், தங்களது தந்தையைப் பார்த்து, தந்தையார் அவர்களே! உங்கள் மீது இறைவன் கருணை புரிவானாக! உங்களுக்கோ வயதாகி விட்டது! நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் போரில் கலந்து கொண்டிருக்கின்றீர்கள். இன்னும் அபுபக்கர் (ரலி) அவர்களது காலத்திலும், உமர் (ரலி) அவர்களது காலத்திலும் கூட நடந்த போர்களில் கலந்து கொண்டிருந்திருக்கின்றீர்கள். வயதாகி விட்ட இந்த காலத்தில் நீங்கள் ஏன் ஓய்வெடுத்துக் கொள்ளக் கூடாது? நீங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு உங்களுக்குப் பதிலாக எங்களைப் போருக்கு அனுப்பி வைக்கக் கூடாதா? என்று கூறினார்கள்.

அதிகாரமும், கண்ணியமும் மிக்க அந்த இறைவன் கூறுகின்றான் : (போருக்கு நீங்கள்) புறப்படுங்கள், (உங்களிடம் இருப்பது) சிறிய அல்லது வலிமைமிக்க ஆயுதங்களுடன்! மேலும் இதன் மூலம் அல்லாஹ் நம்மை போருக்குப் புறப்படச் சொன்ன அல்லாஹ், அவ்வாறு போருக்குப் புறப்படக் கூடியவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டுமா? அல்லது முதியவர்களாக இருக்க வேண்டுமா? என்று குறிப்பிட்டோ, அல்லது அதற்காக ஒரு குறிப்பிட்டதொரு வயதை நிர்ணயித்து இந்த வயது வரை உள்ளவர்கள் தான் போருக்குச் செல்ல வேண்டும் என்றோ நிர்ணயிக்கவும் இல்லை என்று தனது மகன்களுக்குத் தெளிவானதொரு பதிலைக் கூறினார்கள்.

அதன்பின் அபுதல்ஹா (ரலி) அவர்கள் முஸ்லிம் படையணியினருடன் தன்னை இணைத்துக் கொண்டு, தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். படையணியினருடன் கடலில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, அபுதல்ஹா (ரலி) அவர்கள் சுகவீனமுற்று, அதன் காரணமாக அவர்கள் கடல் பயணத்திலேயே மரணமடைந்து விட்டார்கள்.

அபுதல்ஹா (ரலி) அவர்களை நல்லடக்கம் செய்வதற்காக ஒரு தீவைக் கண்டு விட மாட்டோமா என்று தேடிக் கொண்டிருந்த முஸ்லிம் படைவீரர்களுக்கு, ஒரு வாரம் கழித்துத் தான் ஒரு தீவுத் திடலைக் கண முடிந்தது. இறந்து ஒரு வாரமாக கடல் பயணித்தில் கப்பலிலேயே இருந்த அபுதல்ஹா (ரலி) அவர்களது உடல், எந்த வித மாற்றமும் இல்லாமல், அவர் தூங்குவது போலவே இருந்தது.

இறுதியாக, சொந்த நாட்டை விட்டு, தன்னுடைய குடும்பத்தை விட்டு விட்டு, அவரது உடல் நடுக் கடலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி இடமானது உறவுகளை விட்டும், சொந்த வீட்டை விட்டும் வெகுதூரமானதொரு மண்ணில் அமைந்து விட்டதே என்று யாரும் வருத்தப்படவில்லை.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும், நெருக்கத்தையும் நாடிச் சென்று விட்ட ஒருவருக்கு, அவரது இறுதி இடம் எந்த இடமாக இருந்தால் என்ன?!
, ,