குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

11.10.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அன்னை ஜைனப் பின்த் ஃகஸீமாஹ் (ரலி)
 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், சொர்க்கத்தை அனந்தரங்கொள்ளக் கூடிய பெண்களைத் தான் இறைவன் என்னை மணமுடித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளான். அன்னை ஜைனப் பின்த் ஃகஸீமாஹ் (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்களில் ஏழைகளுக்கு இரங்கக் கூடியவர்களாகவும், அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டக் கூடியவர்களாகவும் திகழ்ந்திருக்கின்றார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நபித்துவப்பட்டம் வழங்கப்படுவதற்கு சற்று 13 வருடங்களுக்கு முன் பிறந்தவர்கள் தான் அன்னையவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் தனது தூதுத்துவப் பிரச்சாரத்தைத் தொடங்கிய பொழுது, இதுவரை அவரை நன்னம்பிக்கையாளர் என அழைத்துக் கொண்டிருந்த மக்கள் ஒரே நாளில் அவரைத் தூற்றவும், ஏன் கொலை செய்யவும் கூட முயற்சி செய்தார்கள். இந்த நிலையில், மக்காவில் வாழ்ந்த அபுபக்கர் (ரலி) மற்றும் கதீஜா (ரலி) போன்ற சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அழைப்புக்குச் செவிமடுத்ததோடல்லாமல், இறைவிசுவாசிகளாகவும் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். அந்த ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்களில் ஒருவராக அன்னை ஜைனப் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

அன்னையவர்கள் அப்துல்லா பின் ஜஹ்ஸ் (ரலி) என்ற நபித்தோழருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டிருந்தார்கள். உஹதுப் போர்க்களத்தில் இந்த அருமை நபித்தோழர் தனது இன்னுயிரை இஸ்லாத்திற்காக தியாகம் செய்த பின்பு, அன்னையவர்கள் விதவையாக தனிமரமானார்கள். அன்றைய வழக்கப்படி, போரில் இறந்த நபித்தோழர்களின் மனைவிமார்களை யாராவது ஒரு தோழர் மணந்து கொள்வதோடல்லாமல், அந்தத் தோழரது குழந்தையையும் தத்தெடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அதன்படி, அன்னையவர்களின் முதற் கணவர் அப்துல்லா பின் ஜஹ்ஸ் (ரலி) அவர்கள் உயிர்த்தியாகியாக ஆனதன் பின்பு, அன்னையவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள்.

ஹம்னாஹ் பின் ஜஹ்ஸ் (ரலி) அவர்களது கணவரும் கூட உஹதுப் போர்க்களத்தில் உயிர்த்தியாகியானார். சோகமே உருவான ஹம்னாஹ் (ரலி) அவர்களைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,

ஒரு பெண்ணின் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் கணவனின் நினைவை வேறு யாராலும் அகற்றி விட முடியாது என்று கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த ஆறதல் வார்த்தையைக் கேட்ட ஹம்னாஹ் (ரலி) அவர்கள் வெட்கப்பட்டவர்களாக, அனாதைகளாகி விட்ட என்னுடைய குழந்தைகளின் தொந்தரவு தான் அதிகமாக இருக்கின்றது, பொறுமையும், துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் அதற்கான ஆற்றலையும் இறைவன் எனக்கு வழங்கிட, எனக்காக நீங்கள் பிரார்த்திக்க வேண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! என்று வேண்டிக் கொண்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை, ஹம்னாஹ் (ரலி) அவர்கள் தல்ஹா பின் அப்துல்லா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டதனால் நிறைவேறியது. இரக்க சுவாபமுள்ள தல்ஹா (ரலி) அவர்கள், ஹம்னாஹ் (ரலி) அவர்களது குழந்தைகளை பாசத்துடன், தனது குழந்தைகள் போல வளர்க்க ஆரம்பித்தார்கள்.

ஜைனப் (ரலி) அவர்களும், ஹம்னாஹ் (ரலி) அவர்களைப் போலவே உஹதுப் போர்க்களத்தில் தனது கணவரை இழந்திருந்தாலும், எந்த மனித சக்தியிடமும் தனது பிரச்னைகளைச் சொல்ல விரும்பாத ஜைனப் (ரலி) அவர்கள், தனது வேதனைகளை இறைவனிடமே முறையிட்டார்கள். தொழுகை மூலமும், திக்ருகள் மூலமும் இறைவனுடைய உதவியைக் கோரினார்கள். அவர்களது பொறுமைக்குப் பரிசாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கோரிக்கை ஜைனப் (ரலி) அவர்களின் வீட்டுக் கதவைத் தட்டியது. அன்னையவர்களை மணமுடிக்க விரும்புவதாகவும், அதற்கான சம்மதத்தைத் தரும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தூது அனுப்பி இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியாக வாழ்க்கைப்படுவதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும் என்று சந்தோசத்தில் திளைத்த அன்னையவர்கள், சம்மதத்தை தெரிவிக்க, 400 திர்ஹம்களை மணக்கொடையாகக் கொடுத்து அன்னையவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொண்டார்கள்.

அன்னை ஹஃப்ஸா (ரலி) மற்றும் ஆயிஷா (ரலி) ஆகியோர்களின் இல்லத்திற்கு அருகே அன்னை ஜைனப் (ரலி) அவர்களுக்கு இல்லம் கட்டி கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அன்னையவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்களில் ஒருவராக மலர்ந்தார்கள். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (33:33)

மேலும்,

நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல. (33:32)

என்ற மேற்கண்ட வசனத்திற்கு இலக்கணமாக பிறருக்குக் கொடுத்தவி வாழ்ந்தார்கள் அன்னையவர்கள். ஏன்..! இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாகவே, அன்னையவர்களை – ஏழைகளின் தாய் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படக் கூடியவர்களாக இருந்தார்கள். பசியுடன் அல்லது தேவையுடையவர்களாக யாரையும் காண அன்னையவர்கள் சகிக்க மாட்டார்கள். இன்னும் ஏழைக்கு இரங்கும் இவர்களது தயாள குணத்தை அன்றைய கவிஞர்கள் கூட சிலாகித்துத் தங்களது பாடல்களில், உதாரணங் கூறிப் பாடியுள்ளனர்.

இப்னு கதீர் அவர்களின் கூற்றுப்படி, மேற்கண்ட சிறப்பை அன்னையவர்கள், தனது தயாள குணத்தின் காரணமாகவே பெற்றுக் கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.

கஸ்தலானி என்பவரது கூற்றுப்படி, இஸ்லாம் தனது வெளிச்சப் புள்ளிகளை விதைக்கு முன்பே அன்னையவர்கள் தயாள குணம் மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள் என்று கூறிப்பிடுகின்றார்.

பிறவியிலேயே அவரிடம் காணப்பட்ட இந்த தயாள குணம் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவுடன், இன்னும் அதிகப்படியாக தாராளமாக பிறருக்கு வாறி வழங்கக் கூடியவர்களாக அவர்கள் மாற்றியது.

அன்னையவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்வதற்கு முன்பாகவே, ஆயிஷா (ரலி) அவர்களும், ஹஃப்ஸா (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களாக வாழ்ந்து வந்தார்கள். ஜைனப் (ரலி) அவர்கள் கணவiரை இழந்து கைம்பெண்ணாக வாழ்ந்து பின்பு இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொண்டதன் காரணத்தினால், அன்னையவர்களின் மீது இருவரும் அதிக பாசமும், நேசமும் கொண்டார்கள். இன்னும் முதல் கணவரை இழந்த துக்கத்தில் இருந்த அவர்களுக்கு, மேற்கண்ட இருவரின் துணையும், ஒத்துழைப்பும் ஆறுதலைத் தந்தது. இன்னும் அன்னையவர்களிடம் காணப்பட்ட அந்த அருங்குணமான ஏழைகளுக்கு இரங்கும் தன்மை அவர்களது கவலையைப் போக்கும் மருந்தாகவும் அமைந்து விட்டது. பிறரது துன்பத்தைக் கண்டு இரங்குவதன் மூலம், தனது துன்பத்தை மறந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்ததன் பின்பு வெறும் எட்டு மாதங்களே அன்னையவர்கள் உயிருடன் இருந்தார்கள். அவர்கள் மரணமடைந்த பொழுது, அவர்களுக்கு வெறும் 30 வயது தான் ஆகியிருந்தது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னின்று ஜனஸாத் தொழுகையை நிறைவேற்ற, அன்னையவர்கள் ஜன்னத்துல் பக்கீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் முதன் முதலாக அன்னை கதீஜா (ரலி) அவர்களை இழந்தார்கள். அதன் பின் அன்னை ஜைனப் (ரலி) அவர்களை இரண்டாவதாக இழந்தார்கள்.

அல்லாஹ்..! அவர்களின் மீது கருணை மழையைப் பொழிவானாக..! அவர்கள் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள், அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான்.

அடுத்ததாக..! உம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா (ரலி) (இன்ஷா அல்லாஹ்)


, ,