குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

30.11.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மாமனிதர்-13
கடுகளவு கூட பெருமையும், புகழையும் விரும்பியதில்லை..

வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழி சலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள். நூல் : அஹ்மத் 23756, 24176, 25039.


தரையில் (எதுவும் விரிக்காமல்) அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள். நூல் : தப்ரானி (கபீர்) 12494

மதீனாவுக்கு வெளியே உள்ள சிற்றூர் வாசிகள் இரவு நேரத்தில் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைப்பார்கள். பாதி இரவு கடந்து விட்டாலும் அந்த விருந்தையும் நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுக் கொள்வார்கள்.நூல் : தப்ரானி (ஸகீர்) 41

அகழ் யுத்தத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயிற்றை மண் மறைத்தது. நூல் : புகாரி 2837, 3034, 4104, 4106, 6620, 7236

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். நூல் : புகாரி 3906

இப்படி எல்லா வகையிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரண மனிதராகத் தான் வாழ்ந்தார்கள். ஒரு தடவை கூடத் தமது பதவியைக் காரணம் காட்டி எந்த உயர்வையும் அவர்கள் பெற்றதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பத்தாண்டு கால ஆட்சியில் தமது பதவிக்காக எந்த மரியாதையையும், புகழையும் மக்களிடம் எதிர்பார்க்கவில்லை. இப்பதவியை அடைவதற்கு முன்னர் அவர்களின் நிலை எதுவோ அதுவே அவர்கள் மிகப் பெரிய பதவியைப் பெற்ற பிறகும் அவர்களின் நிலையாக இருந்தது.

மிகவும் உயர்ந்த நிலையை அடைந்து விட்ட நேரத்தில் மக்களிடம் 'மக்கா வாசிகளின் ஆடுகளை அற்பமான கூலிக்காக மேய்த்தவன் தான் நான்' என்பதை அடிக்கடி அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். நூல் : புகாரி 2262, 3406, 5453

நான் அதிகாலையில் (என் தம்பி) அப்துல்லாஹ்வை நபிகள் நாயகத்திடம் தூக்கிச் சென்றேன். அவர்கள் ஸகாத் (பொதுநிதி) ஒட்டகங்களுக்குத் தமது கையால் அடையாளமிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அறிவிப்பவர் : அனஸ் பின் மாக் (ரலி) நூல் : புகாரி 1502, 5542

பொது நிதிக்குச் செலுத்தப்பட்ட ஒட்டகங்கள் மற்றவர்களின் ஒட்டகங்களுடன் கலந்து விடாமல் இருப்பதற்காக அவற்றுக்குத் தனி அடையாளமிடும் வழக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) மேற்கொண்டிருந்தார்கள். இந்தப் பணியைத் தமது கைகளால் தாமே செய்துள்ளது அவர்களின் எளிமைக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுகளவு கூட பெருமையையும், புகழையும் விரும்பியதில்லை என்பதற்கு மற்றொரு நிகழ்ச்சியைக் காணுங்கள்!
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) கூறுகிறார்: நபிகள் நாயகத்துடன் நான் ஒரு போரில் பங்கெடுத்துக் கொண்டேன். என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னைப் பின்தங்க வைத்தது. (முன்னே சென்று கொண்டிருந்த நபிகள் நாயகம்) என்னிடம் வந்து ஜாபிரா?' என்றனர். நான் ஆம் என்றேன். 'என்ன பிரச்சினை' என்று கேட்டார்கள். 'என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னை பின்தங்கச் செய்து விட்டது' என்று கூறினேன். உடனே அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி தமது குச்சியால் குத்தினார்கள். 'இப்போது ஏறிக் கொள்' என்றார்கள். நான் ஏறிக் கொண்டேன். அது விரைவாகச் சென்றதால் நபிகள் நாயகத்தை முந்தக் கூடாது என்பதற்காக அதைத் தடுத்து நிறுத்தலானேன். 'திருமணம் செய்து விட்டாயா?' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'கன்னிப் பெண்ணா? விதவைப் பெண்ணா?' எனக் கேட்டார்கள். விதவையைத் தான் என்று நான் கூறினேன். '(நீர் இளைஞராக இருப்பதால்) கன்னிப் பெண்ணை மணந்திருக்கலாமே! இதனால் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்களே' என்றனர். 'எனக்குச் சகோதரிகள் உள்ளனர். அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண் வேண்டும் என்பதற்காக விதவையை மணந்து கொண்டேன்' என்று நான் கூறினேன். 'இதோ ஊருக்குள் நுழையப் போகிறாய். இனி மகிழ்ச்சி தான்' என்று கூறி விட்டு, 'உனது ஒட்டகத்தை என்னிடம் விற்கிறாயா?' என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். நான்கு தங்கக் காசுகளுக்கு அதை வாங்கிக் கொண்டனர். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு முன் சென்று விட்டனர். நான் காலையில் போய்ச் சேர்ந்தேன். பள்ளிவாசலுக்கு வந்த போது பள்ளிவாசலின் வாயிலில் நபிகள் நாயகம் நின்றனர். 'இப்போது தான் வருகிறாயா?' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'உனது ஒட்டகத்தை விட்டு விட்டு உள்ளே போய் இரண்டு ரக்அத்கள் தொழு' என்றார்கள். நான் உள்ளே போய் தொழுதேன். எனக்குத் தர வேண்டியதை எடை போட்டுத் தருமாறு பிலாலிடம் கூறினார்கள். பிலால் அதிகமாக எடை போட்டுத் தந்தார். அதைப் பெற்றுக் கொண்டு நான் புறப்படலானேன். 'ஜாபிரைக் கூப்பிடுங்கள்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள். ஒட்டகத்தைத் திருப்பித் தருவதற்குத் தான் அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். அது எனக்குக் கவலையாக இருந்தது. 'உமது ஒட்டகத்தையும் எடுத்துக் கொள்வீராக! அதற்காக நாம் அளித்த கிரயத்தையும் வைத்துக் கொள்வீராக' என்றனர். புகாரி: 2097, 2309, 2861, 2967, 5245, 5247, 5667

ஜாபிர் என்பவர் முக்கியமான பிரமுகர் அல்ல. ஒரு இளைஞர். அவரது ஒட்டகம் சண்டித்தனம் செய்து உட்கார்ந்து விட்டதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) யாரையாவது அனுப்பி அவருக்கு உதவுமாறு கூறியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவரை நோக்கி தாமே வருகிறார்கள். வந்தவுடன் ஜாபிரா? என்று கேட்கிறார்கள். சாதாரணமானவரையும் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கும், பெயரைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கும் அவர்கள் மக்களுடன் நெருங்கிப் பழகி வந்தார்கள் என்பது தெரிகிறது.

தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி அவரது ஒட்டகத்தை எழுப்பி விடுகிறார்கள். எழுப்பி விட்டது மட்டுமின்றி அவருடைய பொருளாதார நிலை, குடும்ப நிலவரம் ஆகிய அனைத்தையும் சாவகாசமாக விசாரிக்கிறார்கள்.

அவரது ஒட்டகம் எதற்கும் உதவாத ஒட்டகம் என்பதை அறிந்து கொண்டு அவர் வேறு தரமான ஒட்டகத்தை வாங்குவதற்காக அதை விலைக்குக் கேட்கிறார்கள்.

அவர் மற்றவர்களுடன் சேரும் வரை கூடவே வந்து விட்டு அதன் பின்னர் வேகமாக அவர்கள் புறப்படுகிறார்கள்.

ஊர் சென்றதும் தாம் கொடுத்த வாக்குப் படி ஒட்டகத்திற்குரிய விலையைக் கொடுப்பதற்காக இவரை எதிர் பார்த்துக் காத்திருக்கிறார்கள். தாம் சொன்ன படி அதற்கான விலையையும் கொடுத்து விட்டு அந்த ஒட்டகத்தையும் அவரிடம் கொடுத்து விடுகிறார்கள்.

இது அவர்களின் வள்ளல் தன்மைக்கும், அவர்கள் ஆட்சி எவ்வளவு செழிப்பாக இருந்தது என்பதற்கும், தேவையறிந்து தாமாகவே உதவி செய்யும் அளவுக்கு அவர்கள் மக்கள் நலனில் அக்கரை செலுத்தினார்கள் என்பதற்கும் சான்றாக உள்ளது.

இவ்வளவு எளிமையாகவும், மிகச் சாதாரண மனிதரைப் போன்றும் நடந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி புகழ் சம்பாதித்திருப்பார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிட்டதையோ, அவர்களுக்குப் பின்னால் இரண்டு பேர் அடியொற்றி நடப்பதையோ எவரும் பார்த்ததில்லை என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) கூறுகிறார். நூற்கள்: அபூதாவூத் 3278, இப்னுமாஜா 240 அஹ்மத் 6262

மிகவும் சாதாரண பொறுப்பில் உள்ளவர்கள் கூட தனியாக எங்கும் செல்வதைப் பார்க்க முடிவதில்லை. குறைந்த பட்சம் முன்னால் இருவர், பின்னால் இருவர் இல்லாமல் இவர்கள் வெளியே கிளம்ப மாட்டார்கள். ஆனால், நபிகள் நாயகத்தை அடியொற்றி இரண்டு பேர் சென்றதே கிடையாது.

பலருடன் செல்ல வேண்டிய வேலை இருந்தால் அவர்களும் சேர்ந்து சென்றிருக்கிறார்கள். நபிகள் நாயகத்தின் பாதுகாப்புக்கோ, பகட்டுக்கோ குறைந்தது இருவர் கூட சென்றதில்லை என்பது நபிகள் நாயகத்தின் தன்னடக்கத்திற்கும், துணிச்சலுக்கும் சான்றாக உள்ளது.

'நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்ததுண்டா?' என்று ஜாபிர் பின் ஸமுரா (ரலி) இடம் கேட்டேன். அதற்கவர் 'ஆம்' என்றார். மேலும் தொடர்ந்து 'வைகறைத் தொழுகை முடிந்ததும் சூரியன் உதிக்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள். சூரியன் உதித்த பின்னர் எழுவது தான் அவர்களின் வழக்கம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு அமர்ந்திருக்கும் போது நபித்தோழர்களும் அமர்ந்திருப்பார்கள். அப்போது அறியாமைக் காலத்தின் (இஸ்லாத்தை ஏற்காத காலத்தின்) தமது நடவடிக்கைகள் குறித்து நபித்தோழர்கள் பேசுவார்கள். அதை நினைத்துச் சிரிப்பார்கள். இதைப் பார்க்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புன்னகைப்பார்கள். நூல் : முஸ்லிம் 1074, 4286

இந்த நிகழ்ச்சியைக் கவனியுங்கள்! மாபெரும் வல்லரசின் அதிபரும், ஆன்மீகத் தலைவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அவையில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி இங்கே கூறப்படுகிறது.


தொழுகையை முடித்ததும் மக்கள் தமது அறியாமைக் காலத்தில் செய்த கிறுக்குத்தனங்களையும், மூடச் செயல்களையும் ஒருவருக் கொருவர் பேசிச் சிரிப்பார்கள்! நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்கிறார்களே என்பதற்காக மௌனமாக இருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஏதேனும் கூறும் போது மிகவும் கவனமாகச் செவிமடுக்கும் அவர்களின் தோழர்கள் சாதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்கும் போது இயல்பாகவே நடந்து கொள்வார்கள்.

நபிகள் நாயகத்துக்கு மரியாதை தரக் கூடாது என்பதற்காக அவர்கள் இவ்வாறு நடக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டால் உயிரையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு முன்னால் சாதாரணமாக அமர்ந்தால் போதுமானது என்று பயிற்றுவித்ததன் அடிப்படையிலேயே அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர்.

மழலைகளுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர் கூட பாடம் நடத்தாத நேரங்களில் தமக்கு முன்னால் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதை ஏற்க மாட்டார். தனக்குக் கீழே உள்ளவர் தன் முன்னே இவ்வாறு நடப்பதை உயர் அதிகாரி விரும்ப மாட்டார். எந்த ஒரு ஆன்மீகத் தலைவரின் முன்னிலையிலும் அவரது சீடர்கள் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள். நடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த மாமனிதரின் உள்ளம் எந்த அளவுக்குப் பக்குவப்பட்டிருந்தால் அவரால் இவ்வாறு நடந்து கொள்ள முடியும்!

நம்மை விடச் சிறியவர்கள், நமக்குக் கீழே இருப்பவர்கள் நம் முன்னே இப்படி நடந்து கொள்ள நாம் அனுமதிக்க மாட்டோம். அப்படியே நடந்து கொண்டால் நமது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள பக்குவமாக நாம் அந்த இடத்திருந்து நழுவி விடுவோம்.

சராசரி மனிதர்களாகிய நமக்கே இது மரியாதையைப் பாதிக்கும் செயலாகத் தெரிகிறது. இந்த மாமனிதரோ சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் சகாக்களை விட்டு நழுவாமல் அங்கேயே இருக்கிறார்கள். அது மட்டுமின்றி மழலைகள் செய்யும் சேட்டைகளைக் கண்டு மகிழும் பெற்றோரைப் போல் தாமும் அந்த மக்களுடன் சேர்ந்து புன்னகை சிந்துகிறார்கள். ஒரு நாள், இரு நாட்கள் அல்ல. இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்துள்ளது.

நபிகள் நாயகம் ஸல் வாழ்கை வரலாறு 13
, ,