பதிவுகளில் தேர்வானவை
21.3.13
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
மெனோபாஸ் ஸ்பெஷல் கைடு
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..
அத்தனை நாட்களும் சின்னஞ்சிறுமியாக சுற்றித் திரிந்தவள் வயதுக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் செய்கிறீர்கள்? பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ? எப்போ?னு காத்திருந்தோம்’ என்று கொண்டாடுகிறதே. நாட்டுக்கோழி முட்டையும் உளுந்தங்களியும் கொடுத்துப் பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறீர்களே. ‘இனியும் ஒரு இட்லி ரெண்டு இட்லினு சாப்பிட்டுட்டிருந்தே.. பாத்துக்கோ. வாய்க்குள்ள குச்சிய விட்டாவது நாலு இட்லியத் திணிச்சிடுவேன்’ என்று கண்டிக்கிறீர்களே. இதில் ஒரு பங்கையாவது நீங்கள் மாதவிலக்கு நிற்கும் நிலையை அடையும்போது செய்கிறீர்களா?
‘ஐயய்ய.. இதையெல்லாம் பத்திப் பேசுவாங்களா?’ என்று நினைக்கிறீர்கள். ‘இந்த மனோபாவம்தான் முதல் தவறு’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
‘‘எல்லாம் ஹார்மோன் பண்ணுகிற வேலை’’ என்கிறார் ஹார்மோன் சிறப்பு மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால்.
‘‘ஒரு பெண்ணின் வாழ்க்கையில் வயதுக்கு வருவதும், டீன் ஏஜும் கல்யாணமும் குழந்தை பிறப்பும் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம்தான் மெனோபாஸ் எனப்படுகிற இந்த மாதவிலக்கு நிற்கும் காலகட்டமும். ஆனால், காலம்காலமாக, ‘இது அசிங்கம். இதைப் பற்றிப் பேசக் கூடாது’ என்றே போதிக்கப்பட்டுள்ளதால் பெண்களாகிய நாம் இழப்பது எத்தனை அதிகம்?’’ என்கிறார் மகப்பேறு நிபுணர் தமிழிசை.
‘‘இதுவும் ஒரு பருவம்தான். இது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் ஏற்படக் கூடியது. டென்ஷனற்ற, நிம்மதியான மெனோபாஸ்தான் இந்த வயதில் இருக்கிற எல்லாப் பெண்களின் தேவை’’ என்கிறார் மனநல நிபுணர் பாரதி விஸ்வேஸ்வரன். ‘‘வலிகளை கவனிக்கிறீர்களா?’’ என்று கேட்கிறார் எலும்பு சிறப்பு நிபுணர் சௌந்தரபாண்டியன். ‘‘இதயமும் முக்கியமானது. மறந்துடாதீங்க’’ என்று எச்சரிக்கிறார் இதய நோய் சிறப்பு மருத்துவர் ஆஷா குருமூர்த்தி. ‘‘கேன்சருக்கான சிறப்பு கவனமும் தேவை’’ என்கிறார் கேன்சர் சிறப்பு நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணா. ‘‘உணவு விஷயத்தில் நீங்கள் எப்படி?’’ என்று கேட்கிறார் நியூட்ரிஷியன் ஜோத்ஸ்னா ரஜ்ஜா.
‘‘தாம்பத்திய வாழ்க்கை இனி அவ்வளவுதான் என்று நினைக்க வேண்டாம்’’ என்று வழிநடத்துகிறார் செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.. இத்தனை பேரின் துணையுடன் இந்த சிறப்புப் புத்தகமே இருக்க, உங்களுக்கு நிம்மதிக்கா குறைச்சல்? வாருங்கள்.. வாழ்க்கையைச் சந்தோஷமாக எதிர்கொள்ளலாம்.
ஹார்மோன் குறைஞ்சு போச்சு!
‘‘‘இனி எல்லாம் சுகமே’ என்று மெனோபாஸை சந்தோஷமாக வரவேற்பார்கள் சிலர். ‘அடடா.. நம்மளோட இளமை ஓடிப் போயிடுச்சே’ என்று வருந்துவார்கள் பலர். வருந்தும் படியான விஷயமில்லை இது’’ என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ கோபால்.
ஓவரி எனப்படும் சினைப் பையில் முட்டை உற்பத்தி நிற்கும் பருவமான மெனோபாஸ், பொதுவாக 45 வயதுக்குமேல்52 வயதுக்குள் ஏற்படும்.
ஓவரியின் செயல்பாட்டுத் திறன் சுருங்கி அங்கிருந்து வரவேண்டிய, மாத சுழற்சிக்குத் தேவையான அத்தனை ஹார்மோன்களும் குறைந்து, சமயத்தில் தீர்ந்தும் போவதால் மாதவிலக்கு ஆவதில்லை. அவ்வளவுதானே தவிர, ‘போச்சுடா.. இனிமேல் நம் வாழ்க்கை அவ்வளவுதான் போல’ என்று பயப்படுமளவுக்கு ஒன்றுமேயில்லை.
வெளிநாட்டுப் பெண்கள் மெனோபாஸ§க்குக் கூடுதல் கவனம் தருவார்கள். அதிலும் ‘ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி‘ எனப்படுகிற ஹெச்.ஆர்.டி|க்குப் பயங்கர மரியாதை. உடலில் குறையும் ஹார்மோனை வெளியிலிருந்து தத்தெடுப்பதுதான் ஹெச்.ஆர்.டி.!
‘இது எதற்கு என்றால், ஹார்மோன் களின் உற்பத்தி குறைந்தோ, தீர்ந்தோ போவதால், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. முக்கியமாக, ஹாட் ஃப்ளஷ் எனப்படுகிற வெப்ப ஊற்றுப் பிரச்னையால் எண்பது சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவார்கள்.
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடல் முழுக்க வெப்பம் பரவுவதுபோல ஒரு உணர்வு தோன்றுவ தைத்தான் ஹாட் ஃப்ளஷ் என்கிறோம். வியர்வை ஊற்றாகப் பெருகும். ஐந்து முதல் பத்து நிமிடங்களில் இந்த உணர்வு மறைந்து உடல் நார்மலாகிவிடும். சிலருக்கு ஒரு நாளைக்கு ஒன்று முதல் பதினைந்து முறை கூட இது போல ஏற்படலாம்.
சிலர் சாதாரணமான வேலைகூட செய்ய முடியாத அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு இந்த ஹெச்.ஆர்.டி. ஒரு வரப்பிரசாதம். இதில், ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே இதற்கான மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது. அது கேன்சர் போன்ற மிகப் பெரிய பிரச்னைகளில் கொண்டுபோய் விடக்கூடும். ஜாக்கிரதை.
ஹாட் ஃப்ளஷ் ஏற்பட்டதும் உடனடியாக காற்றோட்டமான இடத்துக்குச் செல்லுங்கள். மெல்லிய பருத்தி ஆடைகளையே அணியுங்கள். காற்றோட்டமில்லாத இடத்தில் குளிக்கும்போது, மசாலாப் பொருட்களைச் சேர்க்கும்போது என்று ஹாட் ஃப்ளஷ் எப்போதெல்லாம் ஏற்படுகிறது என்பது தெரிந்தால், அவற்றைத் தவிர்க்கலாம். பெரும்பாலும் ஒரே மாதிரியான சூழலில்தான் இது வருகிறது. சிகிச்சை மூலம் இதைக் கட்டுப் படுத்தலாமே தவிர, முன்பே கண்டறிந்து தவிர்க்க முடியாது.
டென்ஷன்.. டென்ஷன்..
ஆனந்தியின் நாற்பத்தெட் டாவது பிறந்தநாள் முடிந்து சில மாதங்கள் ஆகியிருந்தன. ஒருநாள் காலை பெரும் எரிச்சலும் குழப்பமுமாய் விடிந்தது ஆனந்திக்கு.
‘‘அம்மா.. ப்ரஷ் எங்கேனு தெரியல. கொஞ்சம் தேடிக்குடேன்’’ என்றான் நரேன். வழக்கமாக அவன் கேட்பதுதான். இவள் தேடித் தருவதுதான். ஆனாலும், அன்று ஏனோ அநியாயத்துக்கு எரிச்சல் வந்தது ஆனந்திக்கு. ‘‘வயசு என்னாகுது? இன்னும் ப்ரஷ்ஷை நான்தான் தேடித் தரணுமா? ஒனக்கா தேடிக்கத் துப்பில்ல? ஒன் பொண்டாட்டி மகாராணி என்ன செய்றா? அவள்ட்ட கேளு’’ என்று எகிற, நரேனின் மனைவியும் அங்கு வர...
நிலைமை என்னவாகியிருக்கும் என்பதைவிளக்கவும் வேண்டுமா?
மெனோபாஸால்தான் இந்தப் பிரச்னை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். விளக்கமாகப் பார்ப்போம்.
பெரிமெனோபாஸ், மெனோபாஸ், போஸ்ட் மெனோபாஸ் என்று மூன்று நிலைகள் இதில் உண்டு.
பெரிமெனோபாஸ்
நாற்பத்தெட்டு வயதில் மெனோபாஸ் ஆகப்போகிறதெனில், நாற்பத்தைந்து வயதிலேயே அதற்கான அறிகுறிகள் ஆரம்பித்துவிடும். இதுதான் பெரிமெனோபாஸ். சிடுசிடுவென்று விழுவது, அல்ப காரியங்களுக்கு எல்லாம் மூட் அவுட் ஆவது, ஹாட் ஃப்ளஷ், மூட்டு வலி, கைகால் உளைச்சல் இவையெல்லாமேதான் இதன் அறிகுறிகள். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உடல் குழம்ப ஆரம்பிக்கும். வயதுக்கு வந்த புதிதில், என்னென்ன அறிகுறிகள் இருந்தனவோ அவையெல்லாம் இப்போது மீண்டும் ‘உள்ளேன் அம்மா..’ என்று தலை காட்டும். சரியாக இருபத்தெட்டு நாட்களில் வந்துகொண்டிருந்த மாத விடாய் சில மாதங்கள் கழித்தெல்லாம் திடீரென்று வந்து டென்ஷன் பண்ணுவது, மிக அதிகமான ரத்தப் போக்கு, ஸ்பாட்டிங் எனப்படுகிற திட்டுத் திட்டாகப் படுவது என்று எல்லாம் நடக்கும். காரணம் என்ன தெரியுமா? வயதுக்கு வந்த காலத்தில் திடீரென்று அதிகரித்த ஹார்மோன்களால் உடல் குழம்பிப் போய் தடுமாறி, சில காலம் கழித்து நார்மலானது இல்லையா? அதேபோலத்தான் இப்போதும் ஹார்மோன் குறைவதால் உடல் குழம்பிப் போகும். அதே நேரம், மேலே குறிப்பிட்ட எல்லாப் பிரச்னைகளுக்கும் தகுந்த நிவாரணமுண்டு.
(ஒழுங்கற்ற மாதவிலக்கும் திட்டுத்திட்டாகப் படிவதும் சகஜம்தான் என்றாலும், இவை கேன்சருக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். கவனம் தேவை.)
இந்த இடைப்பட்ட காலம் ஒவ்வொரு வரையும் படுத்துகிற பாடு இருக்கிறதே.. அது இந்தஅளவு என்றில்லை.
முதலாவது மனரீதி யான பிரச்னைகள். ‘ஓஹோ.. இனி நான் அவ்வளவுதான் போல’ என்கிற தன்னிரக்கம் எழுபது சதவிகிதத்தினருக்கு ஏற்படும். வேலையிலிருந்து ஓய்வுபெறுகிற ஒரு ஆண், ‘நாளையிலருந்து நான் இந்த ஆபீஸ§க்கு வரமாட்டேன்ல..’ என்கிற ஒரு கனத்த இதயத்தோடு வீட்டுக்குப் போவதற்கு இதை ஒப்பிடலாம். சிலர், ரொம்பவே பயந்து போவார்கள். ‘இனி நான் தாம்பத்திய வாழ்க்கைக்கே லாயக்கில்லை. எதற்குமே உபயோகமில்லாதவள். முன்னைப்போல் அழகாக இருக்க முடியாது. வயதாகத் துவங்கி விட்டது. தோலெல்லாம் சுருங்கும். யாரும் மதிக்க மாட்டார்கள்’ என்றெல்லாம் பல எண்ணங்கள் மனதைப் பாடாய்ப் படுத்தும்.
ஏற்கெனவே இதுமாதிரி இருக்கும்போது உடல் வேறு பல அசௌகரியங் களைச் சுமந்துவந்து நோகடிக்கும். இரண்டும் கலந்த இந்த நேரத்தில்தான் முக்கால்வாசி வீடுகளில் மகனுக்குக் கல்யாணம் செய்துவைப்பார்கள். ஏற்கெனவே, ‘நாம எதுக்கும் உபயோகமில்ல போல’ என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்களின் எண்ணத்தை உறுதி செய்வதுபோல, புதிதாக வருகிற மருமகள் பல விஷயங்களையும் கையில் எடுப்பாள்.
இந்த நேரத்தில் அந்தத் தாய்க்குத் தேவைப் படுவதெல்லாம் குடும்ப உறுப்பினர்களின் அக்கறை யும் ஆறுதலும் சரியான சிகிச்சையும்தான். ஆனால், பெரும்பாலான வீடுகளில் அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்தக் காலத்தில் புகுந்த வீடு போகிற மகளிடம் தாய், ‘எங்கியாவது வெளியில போனா, உன் மாமியார் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ’ என்பார். காரணம் இதுதான். ‘நான் உபயோகமில்லாதவள் போல’ என்ற எண்ணம் மாறி, ‘பரவால்லியே.. மருமக நம்மள மதிக்கிறாளே..’ என்கிற சந்தோஷம் ஏற்படும் அந்தத் தாய்க்கு.
‘‘இதற்கு என்னிடம் வந்த ஒரு நோயாளியே உதாரணம்...ÕÕ என்கிறார் டாக்டர். தமிழிசை.
‘‘ஒரு அம்மா, பெரிமெனோபாஸ் நிலையில் என்னிடம் வந்தார். அவருக்கு அதோடுகூட, பிபி, சர்க்கரை, கொழுப்பு, கைவலி என்று ஏகப் பட்ட பிரச்னைகள். ‘அது முடியல.. இது முடியல’ என்று சொல்பவர், திடீரென்று ÔÔஆனாக் கூட டாக்டர்.. சில நேரம்தான் இதெல்லாம். மத்தபடி சமாளிச்சிடுவேன். என் மருமக தங்கம் டாக்டர். என்னை ராஜாத்தி மாதிரி கவனிச்சுக்கிறா!Õ’ என்றார்.
உண்மையில் அவருக்கிருந்த பிரச்னைகள் எக்கச்சக்கம். மருமகளின் அன்பான பேச்சும் கவனிப்பும் மட்டுமே அந்த அம்மாவின் எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்து இருக்கிறது என்பது என்னை ஆச்சரியப் படுத்தியது’’ என்கிறார் தமிழிசை.
மெனோபாஸ்
இது, மாதவிலக்கு முற்றிலுமாக நின்றுபோன காலகட்டம். இப்போது, பெண்ணுறுப்பை வழவழப்பாக வைத்திருக்கிற திரவத்தின் சுரப்புக் குறையும். அந்த இடத்தில் இன்ஃபெக்ஷன் ஆகும். சிலருக்கு வெள்ளைப் படுதல் இருக்கும். அரிக்கும்.
இவையெல்லாவற்றுக்குமே தீர்வுண்டு. திரவத்தின் சுரப்புக் குறைவதால்தான் இந்தப் பிரச்னைகள். இதற்கு என்று க்ரீம்கள், ஜெல்கள் கிடைக்கின்றன. இன்ஃபெக்ஷன் ஏற்பட்டாலும் சரிசெய்ய முடியும். மெனோபாஸ§க்குப் பிறகு ஏற்படுகிற வெள்ளைப்படுதல் அபாயகரமானது. இதையும் உடனே கவனித்தால் குணமாக்கிவிடலாம்.
போஸ்ட் மெனோபாஸ்
இது ஒருவகையில் நிம்மதியான காலகட்டம். ஆரம்பத்தில் கவலைப்பட்டவர்கள்கூட, ‘அப்பாடா.. இத்தனை வருஷ அவஸ்தை இனி இல்லை’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இந்த நிலையில் ஒரு விஷயத்தில் கவனம் தேவை.
முற்றிலுமாக மாதவிலக்கு நின்றபிறகு, ஆறு மாதமோ ஒரு வருடமோ கழித்து ரத்தப்போக்கு இருந்தாலோ, சின்னதாகத் திட்டுக்கள் இருந்தாலோ, அது ஆரோக்கிய சீர்கேட்டுக்கான (கேன்சராகவும் இருக்கலாம்!) அலாரம். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
அடி இறங்குதலும் இந்தச் சமயத்தில் பலருக்கு ஏற்படும். கர்ப்பப்பை லூஸாகி இறங்கிவிடும். சிலருக்குப் பெண்ணுறுப்பு வழியே வெளியே வரைகூட வந்துவிடும். இப்படி ஆகிவிட்டால், சர்ஜரி செய்து பையை வெளியே எடுப்பதுதான் தீர்வு.
ஆரம்ப கட்டம் எனில், வளையம் போடுவது போன்ற சிகிச்சைகள் உண்டு. சிறுநீர் கழிக்கும்போது விட்டுவிட்டுக் கழிப்பது இதற்குச் சிறந்த சிகிச்சை.
அக்கறை காட்டுங்களேன்..
அவர் சினிமாத் துறையில் மிகவும் பிரபலமான புள்ளி. அவர் மனைவியை பண்புக்கும், பணிவுக்கும் உதாரணமாகச் சொல்வார்கள். அந்தத் தம்பதியின் அந்நியோன்னியம் அவ்வளவு பிரபலம். எங்கு சென்றாலும் எத்தனை நேரமானாலும் வீட்டுக்கு வந்து மனைவி கையால் மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நல்ல தம்பதி என்ற வார்த்தைக்கு அர்த்தமாக விளங்கிய அவர்களின் வாழ்க்கையில் அந்த அம்மாவின் நாற்பத்தைந்தாவது வயதில் ஒரு வில்லி உள்ளே நுழைந்தாள், மெனோபாஸ் வடிவத்தில்.
மெனோபாஸின் எதிரொலிப்பான எரிச்சல், கோபம், ஆங்காரம்.. அதெல்லாம் அந்த அம்மாவையும் விட்டுவைக்கவில்லை. அதுவரை சாதுவாகவே அவரைப் பார்த்துப் பழக்கப்பட்ட அத்தனை பேரும், எதற்கெடுத்தாலும் கத்தி, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, வீட்டை ரணகளப்படுத்திய அவரின் புதிய முகத்தைக் கண்டு மிரண்டனர்.
‘அம்மாவுக்கு என்னமோ ஆயிடுச்சு’ என்று எல்லோருமே விலகினார்கள். அதிலும் பாசமான கணவன் என்று புகழப்பட்ட அவரது கணவரும் அவரை விட்டு விலகியதுதான் கொடுமை.
இந்த மாறுபட்ட நடவடிக்கைகள் வெறும் ஆறேழு மாதங்களில் மறைந்துவிட்டது. ஆனால், அதற்குள் அந்தப் பெண்மணியின் கணவர் இன்னொரு பெண்ணை மணந்து, இவர்களது சந்தோஷ சாம்ராஜ்யமே குப்புறக் கவிழ்ந்து, பிறரது கேலிக்கு உள்ளானதுதான் சோகம்.
‘‘குடும்பத்தினரின் அக்கறை கொஞ்சம் அதிகமாக அப்போது அந்தப் பெண்மணியின்மீது விழுந்திருந்தால், இந்த அசம்பாவிதம் நடந்திருக்குமா?! மெனோபாஸில் காலெடுத்து வைக்கப்போகும் நிலையிலுள்ள பெண்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்தினரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது’’ என்கிறார் மனநல நிபுணர் பாரதி விஸ்வேஸ்வரன்.
‘‘இப்படிப்பட்டவர்களைக் குடும்பத்தோடுதான் வரச்சொல்கிறோம். எங்களது முதல் கவுன்சிலிங் குடும்பத்தாருக்குத்தான்’’ என்கிறவர், இந்த நேரத்தில் மனதில் ஏற்படும் புதுவித உணர்வுகள், மாற்றங்கள், அதனால் உண்டாகும் பிரச்னைகள் பற்றியும் விவரிக் கிறார்.
‘‘மனதில் ஏற்படும் மாற்றங்கள் என்பதைவிடவும் குழப்பங்கள் என்பதுதான் சரியாக இருக்கும்.. எவ்வளவு தெளிவான ஆட்களையும் கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிடும் காலகட்டம் அது. பெரும்பாலான பெண்கள், அந்த நிலையை அடையும்வரை அதனைப் பற்றித் தெளிவாக ஏதும் தெரியாமல் இருக்கின்றனர். அதுதான் முதல் பிரச்னையே. முன்பே தெரிந்து, தெளிந்து இருந்தால் தலைவலி, பல்வலியைப் போல இந்தக் குழப்பங்களையும் மிகச் சுலபமாகக் கடந்துவிடலாம்.
யாரையும் பிடிக்காது. எரிச்சலும் சிடுசிடுப்பும் கோபமும் அளவுக்கு அதிகமாகத் தலைகாட்டும். எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருக்க வேண்டும்போல சோம்பலாக இருக்கும். மனதும் சோர்ந்துபோய், சாப்பிட, டி.வி. பார்க்க, அலங்காரம் செய்ய என எந்த விஷயங்களிலும் ஈடுபாடு இருக்காது. அதுவரை வெகு விருப்பமாக செய்துவந்த வேலைகள்மீதுகூட வெறுப்பு வரும். இதனால் தலைவலி, தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். மறதி அதிகமாகும். தூக்கம் வராது. எடை கூடும். அடிக்கடி மார்பு படபடப்பு வந்துபோகும். ஒரு காரணமும் இல்லாமல் வெடித்து அழத் தோன்றும்.
இவை எல்லாவற்றுக்கும் மூல காரணம் அவர்கள் மனதில் உள்ள பயம்தான். பெண்கள் உடல் தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள்.
ஒரு கதை சொல்வார்கள். ஒரு அம்மாவுக்குக் கை நடுங்கிக்கொண்டே இருந்ததாம். எத்தனையோ மருத்துவர்களிடம் அழைத்துப் போயும் குணமாக்க முடியவில்லை. கடைசியாக ஒரு டாக்டரிடம் போனபோது அவர், ‘வயசாகுதில்லையா.. அப்படித்தான் இருக்கும்’ என்றாராம். உடனே சட்டென்று கை நடுக்கம் காணாமல் போய்விட்டதாம்!
அப்படித்தான்.. மாதவிலக்கை ‘இன்னும் இளமையாக இருக்கிறோம்’ என்பதற்கான சான்றாக எடுத்துக் கொள்கிறவர்களை மெனோபாஸ் பயமுறுத்துகிறது. தோற்றத்தில் உடனே முதுமை வந்து ஒட்டிக்கொள்ளுமோ.. அழகு குறைந்து விடுமோ.. கணவர் விலகிடுவாரோ.. இனி தாம்பத்திய வாழ்க்கைக்கு நாம் லாயக்கில்லையோ.. போன்ற பயங்கள் சூழ்ந்துகொள்கின்றன (உண்மையில் இவையெல்லாமே தேவையற்ற பயம்தான்!).
அந்தக் காலகட்டத்தில் பிள்ளைகளும் திருமணம், மேல்படிப்பு என்று பெற் றோரைப் பிரிந்திருப்பார்கள். வெளிஉலகத்தோடு அதிக தொடர்பு இல்லாத, பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபாடு இல்லாத, சதா குழந்தைகளையே நினைத்துக் கொண்டிருக்கும் அம்மாக்களுக்கு இந்த வெறுமையை அவ்வளவு சுலபத்தில் ஜீரணித்துக் கொள்ள முடியாது.
தவிர, கணவருக்கும் வீட்டில் இருக்கும் வயதான பெரியவர் களுக்கும் உடல்நலக் குறைபாடுகள் வரும். இல்லத்தரசி என்ற முறையில் அதை கவனித்தாக வேண்டிய பொறுப்பும் இவர்களுடையதாகத்தான் இருக்கும்.
இவை எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படும். எல்லாமே பெரிய அளவில் செலவு வைக்கும் சமாச்சாரங்கள். அதைச் சரிக்கட்ட வேண்டிய கடமையும் அழுத்தும். ஆக, உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கிடைக்காததோடு, கூடுதல் பொறுப்புகளும் சேர மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் தங்களுடைய பிரச்னைகளைக் குடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ள முடியாமலே போய்விடுகிறது.
இவை தாண்டி கணவரின் அனுசரணை இருந்தாலே மெனோபாஸைச் சுலபமாக எதிர்கொள்ளலாம். ‘அனுசரணையான கணவர் அமையப் பெறாதவர்கள், கணவனை இழந்த, திருமணமாகாத, விவாகரத்தான பெண்கள், தாமதமாகக் குழந்தை பெற்றதால் டீன்|ஏஜ் பிள்ளைகளைக் கொண்ட அம்மாக்கள் ஆகியோர் இதுபோன்ற மன உளைச்சலுக்கு மிக மிக அதிக அளவில் ஆளாகின்றனர்’ என்கிறது உலக அளவில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரம்.
நம் ஊரில், பிரச்னையோடேயே வாழ்வதுதான் அம்மாக்கள் செய்கிற பெரிய தவறு. மன உளைச்சலை போக்க மாத்திரைகள் உள்ளன. மருத்துவரின் அனுமதியோடு எடுத்துக்கொள்ளலாம். மெடிடேஷனும் அதிகாலை நடைப்பயிற்சியும் சுலபமான நிவாரணிகள்.
மெனோபாஸில் பல கஷ்டங்கள் இருந்தாலும் அவை எல்லாமே தீர்வுள்ள பிரச்னைகள்தான். அதற்குப் பிறகான வாழ்க்கை நிம்மதியானது. மாதாந்திரத் தொல்லை இல்லை. கோயில், விசேஷங்களுக்கு நிம்மதியாகப் போய் வரலாம். குழந்தை உண்டாகுமோ என்ற பயமின்றி தைரியமாக தாம்பத்தியத்தில் ஈடுபடலாம். மீண்டும் வளர்ந்த குழந்தையாக வாழ்வை அனுபவிக்கலாம்.ÕÕ
இயற்கை தந்த வரம்!
ஆயிரம் திரை கண்டு இன்றும் சளைக்காமல் நடிப்புலகில் ஓடிக்கொண்டிருக்கும் மனோரமா வுக்கு வயது அறுபதுக்கும் மேல். உடலையும் மனதையும் துவளச்செய்யும் மெனோபாஸ் பருவத்தைத் தான் கடந்துவந்த விதத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறார் ஆச்சி.
‘‘பத்து வயசா இருக்கும்போதே மெனோபாஸ்னா என்னனு தெரிஞ்சுக்கிட்டேன். அந்தளவுக்கு என் கண்ணு முன்னால கஷ்டப்பட்டாங்க எங்கம்மா. அம்மாக்கு எந்நேரமும் அனல்ல குளிச்சு முறுக்குச் சுடற வேலை. வேலை பாத்துட்டிருக்கும்போதே திடுதிப்புனு காலோட தீட்டுப் போகும். அவங்க கட்டியிருக்கற 18 முழம் புடவை மொத்தமா நனஞ்சு தொப்பலாயிடும். ஒரு நாளைக்கு நாலஞ்சு புடவை மாத்துவாங்க. நான்தான் தொவைப்பேன்.
அம்மா படற வேதனையைப் பார்த்து எனக்கு நெஞ்சு வலிக்கும். அம்மா கஷ்டப்பட்டாத்தான் எங்க வயித்துக்கு சோறு. ஆனா, ‘சேர்ந்தாப்பல அரை மணி நேரம் உக்கார முடியாதபடிக்கு கைகாலெல்லாம் விட்டுப் போகுதும்மா’னு அழுதுட்டே போய் படுத்துடுவாங்க. ஒரு வருஷம் வரைக்கும் இந்த அவஸ்தை தொடர்ந்துச்சு. அம்மாவுக்கு நான், எனக்கு அம்மா, வேற துணை இல்லேங்கறதால தன் உடம்புக்கு என்னங்கறதை எங்கிட்ட விளக்கமாச் சொன்னாங்க. அப்பலேர்ந்தே என் அடி மனசுல இந்த வயச நெனச்சு சன்னமா ஒரு பயம் ஒட்டிக்கிட்டே இருந்துச்சு.
நாற்பத்தஞ்சாவது வயசுல அந்தக் கட்டம் எனக்கு வந்துச்சு. இந்த விஷயத்துல ‘அம்மா மாதிரிதான் பொண்ணுக் கும்’னு பலபேர் சொன்னதால பயம் கூடிடுச்சு. மகமாயி தயவால எனக்கு அவ்வளவு சோதனை வரலை.
அந்த ரெண்டு வருஷமும் அடிக்கடி மூளையே குழம்பிப் போற மாதிரி ஆகிடும். திடீர்னு உடம்பு முழுக்க அனலடிக்கும். குப்புனு வேர்க்கும். அதை வெளில காட்டிக்காம, காத்தாட உக்காந்து உடம்பு பழைய நிலைமைக்கு வந்ததும் வேலையைப் பார்ப்பேன். இப்படில்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்ததால தன்னால சரியாகிடும்னு நானே என்னை சமாதானப்படுத்திக்கு வேன்.
எப்போ வரும்னு தெரியாம, திடீர் திடீர்னு விலக்காகும் பாருங்க. அதுலதான் ரொம்பவும் அவஸ்தைப்பட்டுட்டேன். அப்படித்தான் ‘வருவான் வடிவேலன்’ படத்துக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனப்போ விலக்காயிட்டேன். எல்லாரும் காத்திருக்காங்க. நான் தயங்கினா பல பேர் பொழப்பு கெட்டுடும். கடைசியா ஆத்தாமேல பாரத்தைப் போட்டுட்டு, ‘இது பொம்பள பொறப்புக்கு நீ ஏற்படுத்தின நியதி.. இதுல என் தப்பு ஒண்ணுமில்லை. தாயேÕனு கண்ணீரோட வேண்டிக்கிட்டு பிரகாரத்துக்குள்ள நுழைஞ்சு நடிச்சேன். அந்த ஒரு நாள் முழுக்கப் பச்சைத் தண்ணி பல்லுல படாம பார்த்துக் கிட்டேன். அதுதான் ஆத்தாக்கு என்னால செய்யமுடிஞ்சது.
இத்தனை அவஸ்தைப்பட்டதனாலயோ என்னமோ அப்புறமா அந்த மாதாந்தரத் தொல்லையிலிருந்து கிடைச்ச.. விடுதலை, பிரசவ வேதனையை மறக்கடிச்சு குழந்தை முகம் பாக்கிற மாதிரி அத்தனை சுகமா இருக்கு. ஒருவேளை.. இளமை போய்டுச்சேனு சங்கடப்படக்கூடாதுனுதான் இயற்கை இத்தனை கஷ்டங்களைத் தருதோ, என்னவோ..” என்கிறார் கவித்துவமாக.
இன்னும் நான்இளமைதான்ÕÕ
சிரித்த முகம் எழுத்தாளர் அனுராதா ரமணனுக்கு. வரும் ஜூனில் ஐம்பத்தேழு வயதைத் தாண்டுகிற அனுராதா, தான் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறார்.
‘‘அப்போ எனக்கு முப்பத்தேழு வயசு. எழுத்தாளரா ரொம்பப் புகழோட இருந்த நேரம். மீட்டிங், விழானு எங்கேயாவது போய்ட்டே இருப்பேன். அப்போதான் அந்தப் பிரச்னை ஆரம்பிச்சது. பதினஞ்சு நாள், இருபது நாளுக்கு ஒருமுறை விலக்காகிடுவேன். உடம்பே கரைஞ்சுபோற மாதிரி ரொம்பக் கஷ்டப்பட்டேன்.
டாக்டர்ட்ட போனப்போ ஸ்கேன் பண்ணிப் பாத்துட்டு, ‘யூட்ரஸ்ல சின்ன கட்டி இருக்கு. யூட்ரஸையே எடுக்கணும்’ னுட்டாங்க. எனக்கு சர்ஜரி பண்ணின டாக்டர் கனகவல்லி, ‘உனக்கு முப்பத்தேழு வயசுதானே ஆகுது. ஓவரிஸை எடுக்க வேணாம். அதைஎடுத்துட்டா, ரொமான்டிக்கான உணர்வுகள் செத்துப் போய்டும்’னு சொன்னாங்க. அதுக்கு எங்கம்மா, ‘அதனால என்ன டாக்டர்? அவ புருஷன்தான் உயிரோட இல்லையே’னு சொல்லவும் டாக்டர், ‘அப்படிச் சொல்லாதீங்கம்மா. உணர்வுகள் வேற. கல்யாணம், புருஷன்ங்கிறதெல்லாம் வேற. அதிலயும் அவ எழுதுறவ. ஒரு லவ்ஸ்டோரி எழுதணும்னாக்கூட இந்த உணர்வுகள் வேணும்’னு சொல்லிட்டாங்க. நல்லவேளையா, கால் உடைஞ்சு ஆஸ்டியோபொராஸிஸ் வந்து நான் கஷ்டப்பட்டப்போ, அந்த ஓவரீஸ்தான் என்னைக் காப்பாத்துச்சு. அதுலருந்து சுரக்குற ஹார்மோன்களால தான் என் உடம்புக்கு இன்னிக்கு வரைக்கும் கால்சியம் கிடைச்சிட்டிருக்கு.
யூட்ரஸ் எடுத்ததுக்கப்புறமா, நாற்பத்தோரு வயசுல எனக்கும் மெனோபாஸ் வந்தது. திடீர்னு தலைக்குள்ள என்னவோ கொதிக்கிற மாதிரி இருக்கும். சட் சட்னு கோபம் வரும். பிபி|தான் அதிகமாகிடுச்சு போலனு டாக்டர்ட்ட போனா, பிபி நார்மலா இருக்கும். அப்போதான், டாக்டர், ‘இது மெனோபாஸ். உங்க விஷயத்துல மாதவிலக்கு இருக்காதே தவிர, மத்த எல்லாக் குழப்பங்களும் இருக்கும்’னாங்க. இப்போ யோசிச்சுப் பாத்தா, ‘நான்தானா அப் படி எரிச்சல் பட்டேன்’னு ஆச்சரியமா இருக்கு. அது ஒருமாதிரி, ‘நம்மள நாமே இழந்துடற’ நிலைமை. மத்தவங்களுக்கு அந்த நேரத்துல ஆறுதல் சொல்ல, வீட்டுக்காரர் இருப்பாங்க. என் விஷயத்துல வீட்டுக்காரனும் நானே. வீட்டுக்காரியும் நானே. என்னை நானேதான் தேத்திக்கணும்.
சின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு புத்தி. எதுக்காகவும் ரொம்ப நேரம் அழவோ வருத்தப்படவோ மாட்டேன். கொஞ்ச நேரம் மனசு விட்டு அழுதிட்டு விட்டுடுவேன்.
அப்படிப்பட்ட நானே அந்த நேரத்துல ‘நானுறங்கும் நாள் வேண்டும்.. சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்.. என் கண்ணில் நீர் வேண்டும்.. சுகமாக அழ வேண்டும்’னு ஒரு சினிமா பாட்டுல வருமே அது மாதிரி, எனக்குனு யாருமே இல்லையேனு ரொம்பத் தவிச்சுப் போய்ட்டேன். அந்த நேரம் என் தங்கை என்கூடவே ஆறுதலா இருந்தா.
இப்போ பாருங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நேத்து பெய்த மழையில ஒரு பையனும் பொண்ணும் வீட்டுக்குத் தெரியாம வந்திருக்குங்க போல.. ஸ்கூட்டர்ல நனைஞ்சுட்டு, என் வீட்டு வழியா போச்சுங்க. எனக்கு அதுங்கள பாக்க ஆசையா இருந்தது. என்னோட உணர்வுகள நல்லபடியா வெச்சிருக்கிற கடவுளுக்கு நன்றி சொன்னேன்.
என் உடலுக்குத்தான் வயசாச்சே தவிர, மனசு இன் னும் இளமைத்துள்ளலோட தான் இருக்கு’’
சந்தோஷத்தை மீட்க முடியும்..
வசுமதிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஏன் தன் கணவரின் புத்தி இப்படிப் போனது? இத்தனை வருடங்களாகத் தன்னைத் தவிர வேறொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத மனிதர் திடீரென்று வேலைக்காரியிடம் போய் இப்படி நடந்து கொள்வார் என்பதை வசுமதி நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. முதலில் வேலைக்காரியின் மீதுதான் சந்தேகம் வந்தது. ஆனால், கணவரிடம் கேட்டபோது அவர் அதை மறுக்காததும் வேலைக்காரியின் முகம் பார்க்கக் கூசியதும் உண்மையை டமாரம் அடித்தன. கூசிப் போனார் வசுமதி. நல்லவேளையாகத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்ட வேலைக்காரி, ‘இனிமே ஒன் சங்காத்தமே வாணாம்மா.. நாங்க வயித்துக்கு இல்லேன்னாலும் ஈனப் பொழப்புப் பொழக்கிறவங்க இல்லÕ என்று தூற்றி வாரிப் பேசியது மனதை என்னவோ செய்தது. ‘தன் கணவன் இப்படியா?Õ என்று குறுகிப் போய் இருந்தவளை மேலும் குறுக்கின கணவனின் வார்த்தைகள்.
‘‘வசு.. என்னை மன்னிச்சிடும்மா.. ஒரேடியா எல்லாத்தையும் சொல்லிடுறேன்’’ என்று ஆரம்பித்தபோதுகூட இப்படியான விஷயங்கள் அவர் வாயிலிருந்து வரும் என்று எதிர்பார்த்திருக்க வில்லை.
‘‘நான்.. ரெண்டு மூணு தடவ சிவப்பு விளக்குப் பகுதிக்குக்கூடப் போய்ட்டு வந்தேன் வசு..’’ என்று அவர் சொல்லி முடித்தபோது வசுமதிக்குத் தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோமா என்கிற சந்தேகம் வந்தது. ஆத்திரம், அழுகை, கோபம் எல்லாம் முடிந்து யோசித்துப் பார்த்தபோது ‘இது சாதாரணமாக விடக்கூடிய விஷயமில்லை’ என்பது புரிந்தது.
‘‘உடனடியாக என்னிடம் வந்தார்கள்’’ என்று தொடங்கினார் டாக்டர் நாராயண ரெட்டி.
‘‘ ‘இவருக்கு கவுன்சிலிங் பண்ணுங்க டாக்டர்’ என்றுதான் அந்த அம்மா கேட்டார்கள். ஆனால், கவுன்சிலிங் தேவைப்பட்டது அந்த அம்மாவுக்குத்தான். மெனோபாஸை அடைந்திருந்த அவருக்கு தாம்பத்திய உறவு பெரும் வலி தரும் விஷயமாக மாறிவிட்டது. காரணம்.. பெண்ணுறுப்பை வழவழப்பாக வைத்திருக்கிற திரவம் சுரக்காமல் போனதுதான். பயத்தில் அந்த அம்மா தன் கணவரை நெருங்கவே விடவில்லை. அதன் விளைவுதான் இது. குறைந்தபட்சம் தன் கணவருடன் இந்தப் பிரச்னைகளை அவர் பகிர்ந்து கொண்டிருந் தால்கூட, அவருக்குப் புரிந்திருக்கும். இவர் காரணமே சொல்லாமல் நெருங்கவும் விடாமல் முரண்டு பிடிக்கவும் தான் இப்படி ஒரு தவறைச் செய்திருக்கிறார்.
தான் மாதவிலக்கு நிற்கிற நிலையில் இருப்பதைச் சொன் னால், எங்கே தன்னைக் கணவருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்கிற பயம் தான் பகிர்ந்து கொள்ளாததற்குக் காரணம். பிறகு, அவர்கள் இருவருக்குமே கவுன்சிலிங் செய்து, ஹெச்.ஆர்.டி. (ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி) பற்றிச் சொல்லி, சிகிச்சையும் எடுத்த பிறகு இப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள்’’ என்றார்.
ÔÔஇந்தச் சமயத்தில் தாம்பத்தியம் தொடர்பான என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன?ÕÕ என்று கேட்டோம்.
ÔÔமனரீதியான, உடல்ரீதியான என்று இரண்டு வித பிரச்னைகள் ஏற்படும். மனரீதியாக, செக்ஸ் மேல் ஒரு வெறுப்பு ஏற்படும். சிலருக்கு நார்மலாக இருந்த காலகட்டத்திலேயே செக்ஸ் மேல் பெரிய ஆர்வம் இருந்திருக்காது. அதற்கு அவருடைய கணவர்தான் முக்கியக் காரணம். ‘ஃபோர்ப்ளே’ எனப்படுகிற தாம்பத்தியத்துக்கு முந்தின விளையாட்டுக்கள் பற்றியெல்லாம் தெரியாமல் தாம்பத்திய சுகம் பற்றிய உணர்வே இல்லாமல் இத்தனை காலமும் அதை ஒரு சுமையாகவும் வலியாகவும் பயம் தரக்கூடிய நிகழ்வாகவுமே நினைத்தவர்கள் இப்போது மிகப் பெரிய விடுதலையை அடைந்து விட்டதாகவே நினைப்பார்கள். ‘இனி, கணவரிடம் சொல்வதற்கு ஒரு சாக்குக் கிடைத்து விட்டது’ என்று சந்தோஷப்படுவார்கள். இவர்கள் தாம்பத்தியத்தை மன ரீதியான சந்தோஷமாகவே உணரவே முடியாமல் போனவர்கள். இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து இனியும்கூட சந்தோஷத்தை உணரச் செய்ய முடியும்.
இன்னொரு விதத்தினர், மனதில் ஆர்வமிருந்தாலும் பல வருடங்களாகி விட்டதால் ஒரே மாதிரியான விதத்தில் தாம்பத்தி யம் இருப்பதால் போரடித்துப் போய் சுவாரஸ்யம் காட்ட மாட்டார்கள். வருடம் ஒருமுறை வெளியூருக்குப் போவது, விதம்விதமான ஃபோர்ப்ளேயில் ஈடுபடுவது, உறவுக்கான பொசிஷன்களை மாற்றுவது போன்றவை இவர்களை கடைசி வரைக்கும் சந்தோஷமான தாம்பத்திய வாழ்க்கையில் வைத்திருக்கும்.
இனி, உடல்ரீதியான பிரச்னை களைப் பார்க்கலாம். முதலாவது, வெஜைனிஸ்மஸ்.
பெண்ணுறுப்பு வறண்டு போனதால் தாம்பத்தியத்தின்போது திடீரென்று பயங்கர வலி இருந்திருக் கும் இவர்களுக்கு. இரண்டாவது முறை அப்படி வலித்து விடுமோ என்கிற பயத்தில் பெண்ணுறுப்பின் சதையைக் கையால் இறுக்கப் பிடித்துக் கொள்வார்கள் இவர்கள். இதனால், உறவு சாத்தியமற்றுப் போய் விடும். கை வலி, கால் வலி என்றால் மருத்துவரிடம் போகிறவர்கள் இதற்கும் முதலிலேயே மருத்துவரிடம் போயிருந்தால் மருந்து கொடுத்திருப்பார். சரியாகியிருக்கும்.
இரண்டாவது, ஆர்காஸ்மிக் டிஸ்ஃபங்ஷன் எனப்படுகிற பெண் உச்ச நிலையை அடையாதிருக்கும் பிரச்னை. இது பொதுவாக நிறையப் பெண்களுக்கு ஏற்படுவது. இவர்களுக்கு ஹெச்.ஆர்.டி. தர வேண்டும். கூடவே பெண்ணுறுப்புப் பகுதியில் செயற்கையான வழவழப்புத் தன்மையைத் தருகிற ஜெல் தடவ வேண்டும். சிலர், தாங்களாகவே விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெயைத் தடவுவார்கள். இது ரொம்பத் தப்பு. ஏற்கனவே இருக்கிற பிரச்னை போதாதென்று புதிதாக இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தி விடும் இந்த சுய மருத்துவம்.
மூன்றாவது, உடல்நலமில்லாததால் ஏற்படுகிற ஈடுபாட்டின்மை. ஏற்கெனவே, உடல் வலி, மூட்டு வலி என்று சிரமப்படுகிறவர்களுக்கு மனதில் ஆர்வம் இருந்தாலும் வலிகளால் உடலில் ஆர்வம் இருக்காது. இப்படியே ஈடுபடாமல் விடும்போது பெண்ணுறுப்பு சுருங்கிப் போகும். பிறகு, நினைத்தால்கூட தாம்பத்தியத்தில் ஈடுபடவே முடியாமல் போகலாம். இந்த நிலைவரை விடாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.
மெனோபாஸ் என்பதைப் பல பெண்கள் தாம்பத்தியத்துக்கான முற்றுப்புள்ளி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. இது குழந்தைப் பிறப்புக்கான முற்றுப் புள்ளிதானே தவிர, தாம்பத்தியத்துக்கானதல்ல.சொல்லப் போனால், மெனோபாஸ§க்குப் பிறகுமுன்னைவிடவும் அதிகமாக தாம்பத்திய சந்தோஷத்தை அனுபவிக்கிறவர்களும் உண்டு. வாக் போவது,யோகா செய்வது, சரிவிகித உணவு சாப்பிடுவது, எந்த வலியையும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக உடலுக்கு முக்கியத்துவம் தருவது, முழு உடல் பரிசோதனைகளைச் செய்வது இவற்றைத் தொடர்ந்து செய்தாலே கடைசி வரையிலும் இயல்பான சந்தோஷமான தாம்பத்தியம் எல்லாருக்குமே சாத்தியம்தான்ÕÕ என்றார் டாக்டர் நாராயணரெட்டி.
இதயத்துக்கு இதமானது எது?
‘‘‘இந்த உலகத்தில் அம்மாவின் இதயத்தை விட இனிமையானது எதுவுமே இல்லை’ என்பார்கள். அம்மாதான் மொத்தக் குடும்பத்தையும் பாதுகாப்பவர். அவருடைய இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும்.
இந்த அம்மாக்கள்தான் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார்கள் என்றால்.. பிள்ளைகள் அவர்களை அப்படியே விட்டு விடக்கூடாது. தன்னுடைய உடம்புக்கு ஏதேனும் வந்தால் வற்புறுத்தி, வலியுறுத்தி மிரட்டியாவது மருத்துவரிடம் அழைத்துப் போகும் அம்மாவை அதே முறையில் ரெகுலர் செக்கப்புகளுக்கு அழைத்துச் செல் வது ஒவ்வொரு பிள்ளையின் கடமை’’ என்கிறார் டாக்டர் ஆஷா குருமூர்த்தி.
‘‘மாதவிலக்கு ஏற்படும் காலகட்டங்களில் பெண் களாகிய நாம் கிட்டத்தட்ட எல்லாவிதமான இதய நோய்களிலிருந்தும் பாதுகாக்கப் படுகிறோம். அந்த வகையில் மெனோபாஸ் சற்று சிக்கலான பருவம்தான்.
சரியாக, மெனோபாஸை அடைந்ததும் இதயநோய் ஏற்பட ஆணுக்கு இருக்கிற அதே அளவு ரிஸ்க்.. சமயத்தில் ஆணை விடவும் இரண்டு மடங்கு ரிஸ்க் நமக்கு இருக்கிறது. திடீரென்று ஹார்மோன்கள் சுரக்காமல் போவதுதான் இதன் காரணம்ÕÕ என்கிறார் டாக்டர் ஆஷா.
‘‘நம் உடலில் சுரக்கின்ற விசேஷ ஹார்மோன்கள்தான் நம்மை ஆணை விடவும் வலிமை மிக்கவர்களாக வைத்திருக்கின்றன. அவர்களை விடவும் வலி தாங்குகிறோம். வீடு, அலுவலகம் என்று இரண்டையும் அநாயாச மாகக் கையாளுகிறோம். ஆனால், இதிலும் ஒரு விநோதம் இருக்கிறது. இயற்கையாக இந்த ஹார்மோன்கள் சுரக்கும்போது அவை இதயநோயைத் தள்ளி வைக்கின்றன. செயற்கை யாக இவை தரப்படும்போது இவையே இதயநோயை வரவைக்கின்றன.
கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.கர்ப்பத் தடைக்கு,மாதவிலக்கைத் தள்ளிப்போடுவதற்கு என்று ஹார்மோன் மாத்திரை எடுத்துக் கொள்கிறவர்களுக்கு இதய நோய்க்கான வாய்ப்பு அதிகம்.
மாதவிலக்கு வரும் காலத்தில் இந்த விஷயங்களில் கவனம் தேவை. சும்மா எதற்கெடுத்தாலும் மாதவிலக்கைத் தள்ளிப்போட ஹார்மோன் மாத்திரை சாப்பிடக் கூடாது. அதேபோல, கர்ப்பத் தடைக்கும் மாத்திரை தவிர்த்து மற்ற வழிகளை முயற்சிக்கலாம்.
மெனோபாஸ் சமயத்தில்தான் முன்பு எடுத்த ஹார்மோன் மாத்திரைகளின் தாக்கம் தெரியும். அப்படியெனில், ‘மெனோபாஸ§க் குப் பிறகு, ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி’ எடுப்பதும் இதயத்துக்கு ஆபத்தை விளைவிக்குமா?’ என்றொரு கேள்வி உங்களுக்கு எழும்.
இல்லவே இல்லை. ஹெச். ஆர்.டி. இதய நோயைத் தள்ளிப் போடும்.
‘என்னங்க.. டாக்டர் குழப்புறீங்களே..’ என்கிறீர்களா? முன்பு எடுத்தது ஏற்கெனவே இருக்கிற ஹார் மோனுடன் கூடுதலாக. இப்போது எடுப்பது இல்லாத ஹார்மோனை ஈடுசெய்ய.
ஹார்மோன் இல்லாததால்தான் இதயநோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. ஈடுசெய்வதால் அந்த வாய்ப்புக் குறைகிறது. வெளி நாட்டவர்கள் மெனோபாஸ் நிலையில் பதறியடித்துப் போய் ஹெச்.ஆர்.டி. சிகிச்சைக்கு ஓடுவது இளமைத் தோற்றம் தர மட்டுமல்ல. இதயநோயைத் துரத்தவும்தான்.
இதயநோயைத் துரத்த வேறு என்னவெல்லாம் செய்யலாம்?
தினம் தினம் கண்டிப்பாக 15 நிமிடமாவது நடக்க வேண்டும். வெளியில் போய் நடக்க சங்கடமெனில் வீட்டிலேயே ‘ட்ரெட் மில்’ வாங்கி வைத்து நடக்கலாம். சாப்பாட்டு முறையையே மாற்ற வேண்டும். ‘முன்னே சாப்பிட்ட அதே அளவுதான் இப்பவும் சாப்பிடுறேன். திடீர்னு ஏன் குண்டானேன்?Õ என்பார்கள் சிலர். முன்பு செரித்த அளவுக்கு இப்போது செரிப்பதில்லை என்பதுதான் காரணம்.
சுலபமாக செரிக்கக்கூடிய பச்சைக் காய்கறிகள், பழங்களை உணவில் சேர்க்க வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட் கடைகளுக்குப் போவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் மூழ்கடிக்கப்பட்டு, பொரித்தெடுக் கப்பட்ட ஐட்டங்களை மறக்க வேண்டும்.
அப்புறம்.. மிக முக்கியமானது டென்ஷனுக்கு பை சொல்ல வேண்டும். இந்தச் சமயத்தில் சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிதாகக் கோபம் வரும். பிபி எகிறும். இதைக் கட்டுப்படுத்த, யோகா, மெடிட்டேஷன் செய்ய லாம். இவை மனதுக்கு அமைதி தருகின்றன. எக்கச்சக்கமாகத் துடிக்கிற இதயத்தை ‘கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோப்பாÕ என்று கட்டுப்படுத்துகின்றன இவை.
‘சரி.. இதயத்தில் பிரச்னை ஏற்பட்டால்தான் என்ன? இப்போதெல்லாம் பைபாஸ் சர்ஜரி என்பது மிகச் சாதாரண விஷயமாகி விட்டதே’ என்கிறீர்களா?
அது ஆண்களுக்கு. இயல்பாகவே அவர்களுக்கு பைபாஸ் செய்யப்படுகிற ரத்த நாளம் பலமாக இருக்கிறது. பெண்களுக்கு இது ரொம்ப வீக். இதனால், பைபாஸ் ஆண்களுக்கு ரொம்பச் சாதாரணமாகி விட்டாலும் பெண்களைப் பொறுத்தவரையில் அது இன்னமும் சற்று சீரியஸ் ரகம்தான். வரும்முன் காப்பது எப்போதுமே நல்லது. அதிலும், பெண்களின் இதய விஷயத்தில் ரொம்ப ரொம்ப நல்லது’’ என்கிறார் டாக்டர் ஆஷா.
வரும்முன் காப்போம்!
‘‘மாதவிலக்கு முற்றிலும் நின்றுபோன பிறகு திடீரென்று ஒரு வருடம் கழித்து ரத்தப்போக்கு இருந்தால், அது கேன்சர் முற்றிய நிலையாக இருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம். அதனால்தான் மெனோபாஸ் நிலையில் சில பரிசோதனைகளை செய்ய வேண்டியது அவசியம்’’ என்கிறார் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா.
மேமோக்ராஃபி, வெஜினல் அல்ட்ராசவுண்ட் எனப்படுகிற பிறப்புறுப்பில் ஸ்கேன் செய்வது, பாப்ஸ்மெர் டெஸ்ட்.. இந்த மூன்றும் அத்தியாவசியப் பரிசோதனைகள். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
மேமோக்ராஃபி, மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்று பார்ப்பதற்கான பரிசோதனை. வருஷா வருஷம் ஒரே சென்டரில் இதைச் செய்ய வேண்டியதும் ஒவ்வொரு வருடத்துக்கான ரிசல்ட்டுகளையும் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.
இது தவிர, மார்பகங்களில் கட்டி இருக்கிறதா என்று பார்க்கிற சுய பரிசோதனையையும் தவறாமல் மாதாமாதம் மேற்கொள்ள வேண்டும்.
இரண்டாவது பரிசோதனை வெஜினல் அல்ட்ராசவுண்ட். இது எதற்கு பயன்படுகிறது என்று பார்க்கலாம்.
கர்ப்பப்பையின் உள்ளே இருக்கிற எண்டோமெட்ரியம்தான் மாதவிலக்காக வெளிப்படுகிறது. மெனோபாஸ§க்குப் பிறகு இந்த எண்டோமெட்ரியம் வளர்வதில்லை. மாதவிலக்கும் ஆவதில்லை. இது நார்மல்.
சிலருக்கு, மெனோபாஸ§க்குப் பிறகும் இந்த எண்டோமெட்ரியத்தின் வளர்ச்சி இருக்கும். ஆனால், மாதவிலக்கு ஏற்படாது. இப்படி வளர்ச்சியடைகிற எண்டோமெட்ரியம், எண்டோமெட்ரியல் கேன்சராக மாறுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.
இந்த வளர்ச்சியை டக்கென்று காட்டிக் கொடுத்து விடும் வெஜினல் அல்ட்ராசவுண்ட்.
இந்த வளர்ச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் எண்டோமெட்ரியத்திலிருந்து கொஞ்சம் வெட்டி எடுத்து பயாப்ஸிக்கு அனுப்புவார்கள்.. கேன்சராக இருக்குமோ என்று பார்க்க. கேன்சராக இல்லாவிட்டாலும்கூட, இதை அகற்றி விடுவதும் தொடர்ந்து சிகிச்சை எடுப்பதும் அவசிய மானது.
அடுத்தது பாப்ஸ்மெர் டெஸ்ட்.
இதில் பிரமாதமான விஷயம் என்ன தெரியுமா? கேன்சரை மிக மிக ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுவதுதான். இதனால் கேன்சரை முற்றிலும் குணப்படுத்துவதும் சுலபம். முப்பதாவது வயதிலிருந்தே இந்த டெஸ்ட்டை செய்து பார்க்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் இந்த மெனோபாஸ் நிலையிலாவது செய்வது மிக மிக அவசியம்.
இன்னொரு முக்கியமான விஷயம்.. ஹெச்.ஆர்.டி. எடுக்கிறவர்கள் கேன்சர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கேன்சர் வருவதற்கான சாத்தியம் உண்டு. அதற்காக, ஹெச்.ஆர்.டி. எடுக்கவே கூடாது என்று அர்த்தமில்லை. நம் ஊரில் ஒரு வழக்கம் இருக்கிறது. ஐம்பது வயதில் எடுக்கிற ஹெச்.ஆர்.டி. மாத்திரைகளை அடுத்த ஐந்து வருடங்களுக்கு டாக்டரின் ஆலோசனையின்றி சாப்பிடுவார் கள். இதுதான் தவறு. ஆறு மாதங்களுக்கொருமுறை டாக்டரை சந்தித்து அவர் அனுமதியுடன் எடுத்தால் ஒரு பிரச்னையு மில்லை.
கூடாகும் எலும்பு!
மெனோபாஸ் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் பெரிமெனோபாஸ் நிலையில் இருப்பவர்கள் கண்டிப்பாக ‘ஆஸ்டியோபொராஸிஸ்’ பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
‘‘நமது உடலில் இரும்புபோல உறுதியாக இருக்கும் எலும்புகள் உறுதியிழந்து பேப்பர் சுருள் போல மாற ஆரம்பிப்பதுதான் ஆஸ்டியோபொராஸிஸ்’’ என்கிறார் டாக்டர். சௌந்தரபாண்டியன்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் அழுத்தமாகக் கையூன்றி எழுந்தாலே மணிக்கட்டு எலும்புகள் முறிந்துவிட வாய்ப்பு உண்டு. அவ்வளவு ஏன்? ஆட்டோவில் சென்றால் அதன் குலுக்கலிலேயே இடுப்பு எலும்பும் முதுகெலும்பும் முறிந்துவிடலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஆண்களுக்கும் வரும் என்றாலும் இது பெண்களைத்தான் அதிகமாகக் குறிவைத்துத் தாக்குகிறது. அதிலும் குறிப்பாக, மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்ட நால்வரில் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆஸ்டியோபொரோஸிஸ் பற்றி இங்கே விரிவாக விளக்குகிறார் டாக்டர் சௌந்தர பாண்டியன்.
‘‘நம் உடல் எலும்பு தேனடை மாதிரியான ஒரு அமைப்பில் இருக்கிறது. புரோட்டினால் ஆன தேனடை என்று சொல்லலாம். தேனீக்கள் தேனடையின் ஒவ்வொரு இடைவெளியிலும் தேனை சேகரித்து வைப்பதுபோல நம் உடம்பில் சேர்கிற மொத்த கால்சியமும் இந்த புரோட்டீன் தேனடையின் இடைவெளியில்தான் சேகரித்து வைக்கப்படுகிறது. அங்கு கால்சியம் சேர்ந்திருக்கும்போது எலும்பு உறுதியாக இருக்கும். அந்த கால்சியம் நம் உடம்பின் தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலக்கும்போது எலும்பில் இருக்கும் கால்சியம் மெதுமெதுவாகக் குறைந்து உள்ளே வெறும் கூடாக எலும்பு மாறிப் போகிறது.. அதனால்தான் சின்ன அதிர்வு என்றால்கூட அத்தனை பாதிப்பு.
இந்த ஆஸ்டியோபொரோஸிஸ் இளமையில் வருவதில்லை. காரணம், குழந்தை வளரும்போது அதன் எலும்பில் கால்சியம் அதிகமாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கும். அப்போது உடல் தேவைக்காக கால்சியம் ரத்தத்தில் கலந்தாலும், நாம் சாப்பிடும் உணவின் மூலம் திரும்பவும் எலும்புகளை அடைந்து அதன் உறுதியை ஈடுகட்டிவிடும். முப்பத்தைந்து வயதிற்குப் பிறகுதான் பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன.
ஏனென்றால், அதன்பிறகுதான் நாம் உணவாக எடுத்துகொள்ளும் கால்சியத்தின் அளவு மெதுவாகக் குறைகிறது. இன்னொரு பக்கம் கால்சியத்தை எலும்பில் சேர்த்து வைக்க உதவும் ஹார்மோன்களின் சுரப்பும் குறைய ஆரம்பிக்கிறது. அதனால் இந்தப் பிரச்னை இன்னும் கொஞ்சம் பெரிதாகிறது. வயதானவர்கள் கூன் போட்டு நடப்பது இதனால்தான். முதுகுத்தண்டு எலும்புகள் வலுவிழந்து கொஞ்சம் கொஞ்ச மாக நுனியிலிருந்து நொறுங்கிக் கொண்டே வருகின்றன.
மெனோபாஸான பெண்களுக்கு இந்த நோய் அதிகமாக வரும். வயதாக ஆக இந்த நோய் தாக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். அதிலும் சில பெண்களுக்கு ஏற்கெனவே எலும்பு மென்மையாக இருக்கும். எலும்பு தன் எடையை இழக்கும்போது இன்னும் மென்மையாகி வலுவிழந்து விடும்.
அதற்காக, ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு இந்த ஆபத்து இன்னும் அதிகம் என்று அர்த்தமல்ல. ஒல்லி எலும்பு உள்ளவர்கள், பார்க்க பருமனாகவும் இருக்கலாம். உடல் தோற்றத்தை வைத்து கணிக்க முடியாது. எக்ஸ்ரேயின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும்.
ஆஸ்டியோபொராஸிஸ் தாக்குதலுக்கு உள்ளாக சந்தர்ப்பம் இருக்கும் அடுத்த ரகத்தினர், அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப் பையுடன் ஓவரியையும் எடுத்த இளம் பெண்கள். பொதுவாக, கர்ப்பப்பை நீக்கும்போது ஓவரியை எடுக்க மாட்டார்கள். காரணம், ஓவரியிலிருந்து தான் பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் இரண்டும் சுரக்கின்றன. ஓவரியை எடுப்பதன் மூலம் அந்த ஹார்மோன்களின் சுரப்பு தடுக்கப்படுகிறது.
இயல்பாகவே இந்த ஹார்மோன்கள் குறைவாகச் சுரக்கும் பெண்களும்கூட (மாதவிலக்கு மூன்று மாதம் ஆறுமாதம் என்று விட்டுவிட்டு வரும் பெண்கள்) இந்த நோயின் பிடிக்குச் சுலபமாக ஆளாகிறார்கள். பாட்டியோ, அம்மாவோ இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உணவில் தேவையான கால்சியம் சேர்க்காதவர்கள், வெயிலுக்கே முகம் காட்டாதவர்கள், சாதாரண உடற் பயிற்சிகூட இல்லாமல் சும்மாவே உட்கார்ந்திருப்பவர்கள் போன்றவர்களுக்கும் இந்த ரிஸ்க் உண்டு.
இந்த நோய் தாக்குவது பெரும்பாலும் மெனோபாஸ§க்கு பிறகுதான் என்பதால், எலும்பு முறிவு ஏற்பட்டால் அந்த வயதில் எலும்புகள் திரும்ப ஒன்று சேர்வது கடினம். இளம் வயதில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுக்கையில் இருப்பவர்களைவிட, இவர்கள் இன்னும் சீக்கிரமே படுக்கையைவிட்டு எழுந்து நடமாட முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், நோயின் தீவிரம் அதிகமாகும். எந்த அளவுக்கு உடல் ஆக்டிவாக இருக்கிறதோ அந்தளவுக்கு ஆஸ்டியோபொரோஸிஸின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.
இதை வர விடாமல் தடுக்க, கால்சியம், புரோட்டீன் கலந்த உணவுகளைத் தினமும் உணவில் சேர்க்க வேண்டும். மெனோபாஸான பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 1500 மி.லி கிராம் கால்சியம் தேவை.
விட்டமின் டி ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு தினமும் மாலை நேரத்தில் வெயில் உடம்பில் படுமாறு ஒரு வாக் போய் வாருங்கள்.
உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலும் எலும்பும் வலுவேறும். சைக்கிள் ஓட்டுவது, பாட்மிட்டன், டென்னிஸ் போன்ற விளை யாட்டுக்களும் எலும்பின் அடர்த்திக்கு உரம் சேர்க்கும். கால்சிடோனின் என்ற ஹார்மோன் எலும்பின் அடர்த்திக்கு உதவுகிறது. இது ஊசியாகவும் மூக்கினால் உறிஞ்சக்கூடிய வகையில் மருந்தாகவும் கிடைக்கிறது.
எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி ஆஸ்டியோபொரோஸிஸ் வந்தேவிட்டால், கால்சியம், புரோட்டீன் நிறைந்த சாப்பாடு, உடற்பயிற்சி, மாலை வெயில் என்று அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கால்சியம் பற்றாக்குறை ஏற்படும் என்ற சூழ்நிலையில் கால்சியம் மாத்திரைகளையும் விட்டமின் டி மாத்திரைகளையும் மருத்துவரின் ஆலோசனையோடு சாப்பிடலாம்.
இதுதவிர, ஈஸ்ட்ரோஜென் ரீப்ளேஸ்மெண்ட் தெரபியையும் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கவென்றே இருக்கிற சிறப்பு மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த நோய் வருவதற்கு முன்பே கண்டுபிடிக்க முடியாதா என்று கேட்டால், முடியும். செலவு கம்மியான சுலபமான விஷயம் இது. எக்ஸ்ரே மூலம் எலும்பின் அமைப்பு எப்படி இருக்கிறது என்று எலும்பு நோய் சிகிச்சை நிபுணரால் ஓரளவு கண்டுபிடிக்க முடியும். அதில் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் டெக்ஸா (DEXA) எனப்படுகிற ஒருவகை சிறப்பு டெஸ்ட் செய்து தெரிந்து கொள்ளலாம்.
அல்ட்ரா சவுண்டு, சி.டி.ஸ்கேன் போன்றவற்றாலும் இந்த நோயை கண்டுபிடிக்க முடியும். இந்தப் பரிசோதனை முறைகள் வலியோ பக்க விளைவுகளோ இல்லாதவை.எதிர்காலத்தில் ஆஸ்டியோ பொரோஸிஸ் தாக்கும் வாய்ப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை துல்லியமாககணித்துச் சொல்பவை.
மெனோபாஸ§க்குப் பிறகு இவற்றை வருடம் ஒருமுறை செய்து வந்தால் ‘ஆஸ்டியோபொராஸிஸா அப்படினா?!’ என்று கேட்கலாம்..”
உணவே மருந்து!
கால்சியம் இல்லாததால் என்னென்ன பிரச்னைகள் என்று பார்த்தோம்.
‘‘சரியான உணவுப் பழக்கம் இருந்தாலே எந்தப் பிரச்னையும் வராமல் பாதுகாக்க முடியும்’’ என்கிறார் நியூட்ரிஷியன் ஜோத்ஸ்னா ரஜ்ஜா.
‘பெரிமெனோ பாஸ்’ சமயத்தில் இருந்தே தினமும் உணவில் 600 மில்லிலிட்டர் தயிர் சேர்த்து வர வேண்டும். பாலை விடவும் தயிரில்தான் அதிக கால்சியம் இருக்கிறது. கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலால் ஆன தயிர்தான் சேர்க்க வேண்டும். அல்லது, தயிரில் உள்ள கொழுப்பு, எலும்பின் மேல் எடையாகச் சேரத் தொடங்கி வேறு பிரச்னைகளில் கொண்டு போய் விட்டுவிடும். தயிருடன் பாலும் ஒருநாளுக்கு 300 மில்லி சேர்க்க வேண்டும். இதோடுகூட, சீஸ், பனீர், பால்கோவா, நெல்லிக்காய் போன்றவையும் சாப்பிடலாம்.
எள் நிறையச் சேர்க்கலாம். வெள்ளை, கறுப்பு இரண்டு எள்ளிலுமே கால்சியம், மெக்னீசியம், இரும்புச் சத்துக்கள் உள்ளன. கறுப்பு, வெள்ளை எள் இரண்டையும் சம அளவு கலந்து பொடி செய்து தினமும் மதிய, இரவு உணவின்போது ஒரு டீஸ்பூன் சேர்த்து வந்தால் ஹார்மோன்களால் உடல் இழக்கிற சத்துக்களை இது ஈடு செய்யும்.
ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, கொழுப்புச் சத்து இருக்கிறவர்களும் எள் சாப்பிடலாம். இதில் இருப்பது ஈ.எஸ்.ஏ. எனப்படுகிற எஸன்ஷியல் ஃபேட்டி ஆசிட்தான்.
பச்சைக் காய்கறிகளும் பழங்களும் எக்கச்சக்கம் சேர்க்க வேண்டும். அளவோடு சோயா சேர்க்கலாம். இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் குறைவை ஈடுசெய்யும். கைக்குத்தல் அரிசி மற்றும் முழு கோதுமை மாவாலான உணவைச் சாப்பிடுங்கள்.
பூசணி,வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றின் விதைகளையும் உணவில் சேர்க்க வேண்டும். விட்டமின் ஈ இருக்கிற டானிக்கு கள், மீன் சேர்க்க வேண்டும்.
வெற்றிலை, பாக்கு போடுவதின் மூலம் சுலபமாக கால்சியம் கிடைக்கும்.
அடுத்தது வாக்கிங்! தொண்ணூறு சதவிகித வியாதிகளை அண்டவே விடுவதில்லை வாக்கிங்! ‘நானெல்லாம் வீட்டிலேயே அங்கயும் இங்கயுமா நடந்துட்டேதான் இருக்கேன்..’ என்று சொல்கிறவரா நீங்கள்? ஒரு நிமிஷம் ப்ளீஸ்.. ஒரு நாளுக்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் அடிகள் மிக வேகமாக நடப்பதுதான் சரியான பயிற்சி. இப்போது யோசியுங்கள்.. வீட்டுக்குள் நீங்கள் எத்தனை அடிகள் நடக்கிறீர்கள்? நடக்க ஆரம்பியுங்கள். சந்தோஷ மாக, அமைதியாக, சிரித்த முகத்துடன் மெனோபாஸை வரவேற்கும் உற்சாகத்தை அந்த நடையும் நீங்கள் சாப்பிடுகிற உணவும் தரும்.
தொகுப்பு: தயாமலர், ஜி.கோமளா
nantri-avalvikatan