குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

27.3.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அரசியல் சாக்கடை
வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் என்பது, இது வரையிலும் நடந்ததிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்ததான ஒன்றாகத்தான் பார்க்க முடிகிறது
சுதந்திரத்திற்கு முன்பான அகண்ட பாரதமானது, பிரிக்கப்பட்டு சுதந்திரம் கிடைத்து மதச்சார்பற்ற இந்தியா என்கிற நமது நாடு அடைந்திருக்கின்ற வளர்ச்சியும், நாட்டில் நிலவுகின்ற அமைதிச் சூழலும்....

bjp=admk from on Vimeo.


நிச்சயமாக நமக்கு அண்டை நாடுகளாக... மதச்சார்பு நாடுகளாக இருக்கின்ற பாகிஸ்தான், பங்களாதேஷ், நேப்பாளம் போன்ற நாடுகளில் நிச்சயமாக இல்லை என்பதை யாரும் மறுக்க இயலாது.

இத்தகைய சூழ்நிலையில் நடக்கவிருக்கின்ற வரும் நாடாளுமன்ற தேர்தலானது, இந்துத்துவாவை மிக அழுத்தமாக நிறுவ நினைக்கின்ற ஒரு இயக்கத்தினால் வார்த்தெடுக்கபட்டு அதன் கொள்கைகளை எந்த சமரசத்திற்கும் இடமளிக்காமல் செயல்படுத்திட முனையும் ஒரு நபரை பிரதமர் வேட்பாளராக பகிரங்கமாக அறிவித்து விட்டுட்டுதான் இந்தத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது.
நிற்க....

அப்படிப்பட்ட ஒரு மதவாத தலைவருக்கு சற்றும் சளைக்காத அளவிற்கான இந்துத்துவா கொள்கைகளில், அவற்றை இந்தியாவில் நிறுவுவதில் ஆழ்ந்த பற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இன்னொரு பக்கம், பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருப்பதும், அதை எந்த பிராமண லாபிகளுமே... ஏன்? அந்த பாஜகவே கூட விமர்சனம் செய்யாமலும், எதிர்க்காமலும் இருப்பதையும் நாம் கண்டுகொண்டிருக்கின்றோம்.


அதேப் போன்றே தன்னை பிரதமர் வேட்பாளராக ஓராண்டுக்கு முன்பே முன்னிலைப்படுத்திக் கொண்ட ஜெயலலிதா, ஒரு வார்த்தைக்குக் கூட பாஜகவையோ, அதன் பிரதமர் வேட்பாளர் மோடியையோ விமர்சிக்காமல், அதே சமயம், பாஜகவுக்கு நேரடி எதிர்ப்பாளர்களாகிய காங்கிரஸையும், மற்றும் உண்மையான இந்துத்துவ மதவாத எதிர்ப்பாளர்களையும் மட்டுமே மிகக் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகின்றார்.

இதை உறுதிப்படுத்துகின்ற வகையில் மதவாதத்திற்கு சற்றும் இடமளிக்காத, தன்னையே நம்பி அனைத்தையும் இழந்திருந்த கம்யூனிஸ்ட்டுகளையே கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்து வெளியேற்றியிருக்கின்றார்.

இந்த நிலைப்பாடுகளை உற்று நோக்கி நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தோமேயானால், இந்தியாவை ஒரு இந்து நாடாக நிறுவ முயற்சிக்கும் அந்த இயக்கமானது, இந்த முறை எந்த வகையிலும் அதற்கான வாய்ப்பை நழுவ விட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பது புரியும்.

நாட்டிலேயே வேறு எந்தப் பிரச்சினைகளையும் விட... அதாவது மதவாதம், ஜாதிச் சண்டைகள், தீண்டாமை, சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், நிர்வாக முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு, போன்ற விடயங்கள் எதுவுமே முற்றும் முழுமையாக சரி செய்யப்படாத நிலையில், இவற்றையெல்லாம் விட நாட்டின் தலையாய பிரச்சினை ஊழல் ஒன்றே என்பது போன்ற தோற்றத்தை தன் சார்பு ஊடகங்களால் உருவாக்கி வைத்து விட்டு....

தமிழகத்தை விட பாதி அளவே இருக்கின்ற ஒரு குட்டி மாநிலத்தை ஆளுகின்ற ஒரு மதவாதி கைப்பிள்ளையை மகா உத்தமர் போலவும், சிறந்த நிர்வாகி போலவும் கடந்த நான்கு ஆண்டுகளாக அதே ஊடகங்களைக் கொண்டு இந்தியா முழுவதிலும் பரப்புரை செய்து....

ஊழல்களுக்கு எதிரான சிறந்த நிர்வாகி இவர் தான் என்ற தோற்றத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தி விட்டு அந்த மனிதரையே தங்கள் சார்புநிலை கொண்ட கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தியிருக்கின்றது.

இதுவரையிலும் சரி தான். இதில் ஜெயலலிதாவின் பாத்திரம் எந்த இடத்தில்? ஏன்? நுழைகின்றது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

பாஜக என்பது இந்தியா முழுவதிலுமே அனைத்து மாநிலங்களிலும் பரவலாக வளர்ச்சியடைந்த ஒரு இயக்கம் கிடையாது. 543 தொகுதிகளில், கிட்டத்தட்ட 250 தொகுதிகளில், அக்கட்சி ஆட்டத்திலேயே கூட கிடையாது. 300க்கும் சற்று குறைவான தொகுதிகளில் தான் அது போட்டியிடவே தகுதி பெற்றிருக்கின்ற நிலையில்..... அதிலும் பலவற்றில் கூட்டணிக் கட்சிகளுக்கு தாரை வார்க்க வேண்டியும், அந்த தொகுதிகளில் வெற்றிக்கு மாற்றுக்கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பிருக்கின்ற நிலையில்...

மோடி அலை என்ற ஒரு மாயத்தோற்றத்தை வைத்து மட்டுமே இன்னும் கொஞ்சம் அதிக இடங்களை அறுவடை செய்ய முனைந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் 272 தொகுதிகளில் பாஜகவுக்கு மட்டுமே வெற்றி கிடைத்தோ, அல்லது மோடியைப் போன்ற அதே இந்துத்துவா மனநிலையோடு இருக்கக்கூடிய ஒரு நபரின் ஆதரவோடு கூட்டமைத்து ஆட்சியமைத்தால் மட்டுமே அந்த இயக்கத்தால் தான் நிறுவ நினைக்கின்ற இந்து சாம்ராஜ்யத்தை நிறுவ முடியும்.

நிச்சயமாக பாஜகவால் தனியாக இன்றைய சூழ்நிலையில் அந்த எண்ணிக்கையை அடைய முடியாது என்பது ஓரளவு அவர்களுக்கு உரைக்க ஆரம்பித்திருக்கும் நிலையில்.....

பற்றாக்குறையை இட்டு நிரப்ப ஜெயலலிதா மட்டுமே மிகச் சரியான தேர்வாக அவர்களுக்கு இருக்க முடியும். அந்த வகையில் தான் ஜெயலலிதாவும் தனியாக வளர்த்துவிடப்படுகின்றார். அவரும் பாஜகவை கொஞ்சமும் சீண்டுவதில்லை... மன்னிக்கவும், விமர்சிப்பதில்லை!


சிலர் கேட்கலாம்.... பிறகு ஏன் பாஜக தமிழகத்தில் தனியாக ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும்? அதிமுகவோடு சேர்ந்தே நின்று தேர்தலை சந்திக்கலாமே? என்று!

இதில் தான் சூட்சுமமே அடங்கியிருக்கின்றது!

பாஜக தமிழகத்தில் தனித்து நின்றால் அதற்கு ஒரு சீட்டுக்கூட கிடைக்காது. ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்தால், மிக மிக சொற்பமான சீட்டுக்களை மட்டுமே தருவார்.... அது கூட பரவாயில்லை. ஆனால் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால், எதிரணியில் திமுக சரிபாதி இடங்களில் மட்டுமே தான் நின்று, மிகப் பலமான கூட்டணியை அமைத்து, தமிழக அளவில் அதிக வாக்குவங்கியைக் கொண்ட கூட்டணியாக அது அமைந்து 40 தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணியை மண்ணைக் கவ்வ வைத்துவிடும்.

ஆகவே தான், நடப்பு அதிமுக ஆட்சியினால் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு வாக்குகள் முழுமையாக திமுக பக்கம் சென்று விடாதவாறு, மற்ற அனைத்து முக்கிய சிறு சிறு எதிர்க்கட்சிகளையும் சேர்த்து பாஜகவே ஒரு கூட்டணியை அமைத்து தேர்தல் களத்தை எதிர்கொள்ள வருகின்றது.

பாஜக தலைமையிலான கூட்டணி என்றாலும், இதில் பாஜக தேமுதிகவை விட குறைவான தொகுதிகளிலேயே நிற்கும் சூழலையும் அக் கட்சி பொருட்படுத்தவில்லை. காரணம், தமிழகத்தில் இருக்கின்ற இந்துத்துவா ஆதரவு வாக்குகள் பாஜக நிற்கின்ற குறைவான தொகுதிகளில் பாஜகவுக்கு ஆதரவாகவும், ஏனைய தொகுதிகளில் அதிமுகவிற்கு ஆதரவாகவே விழும் அளவிற்கு ஆரிய மனநிலை என்பது ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கும், அதன்படியே செயல்படவும் செய்யும்.....

ஆகவே, திமுக கூட்டணிக்கு, நடப்பு ஆட்சிக்கு எதிரான மனநிலை கொண்டவர்களின் வாக்குகளும், பொதுவான நடுநிலையாளர்கள் வாக்குகளும் முழுமையாக சென்று விடாமல் அதை அப்படியே சேதாரமில்லாமல் பாஜக அணிக்கு செல்லும் பாதை மிகத்தெளிவாக வகுக்கப்பட்டிருப்பது தான் இங்கே பாஜக தனி அணி அமைத்து நிற்பதற்கான முக்கிய காரணம்.

இதனால் கிட்டத்தட்ட திமுகவுக்கும் அதிமுகவுக்குமான நேரடிப் போட்டி என்ற நிலை தமிழகத்தில் வரும் தேர்தலில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த இடத்தில் மீண்டும் ஒரு முறை இந்தக் கட்டுரையின் நான்கு மற்றும் ஐந்தாம் பத்தியை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு தொடரவும்....

ஆகவே இந்துத்துவ மத அடிப்படைவாதிகள் அகில இந்திய அளவில் ஒரு பெரும் திட்டத்துடன் செயல்படும் இத்தேர்தலில், சிறுபான்மை சமூகத்தினர், குறிப்பாக இஸ்லாமிய சகோதரர்கள் தங்களுக்குள் இருக்கின்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக, இங்கே இவர் இருந்தால் அவர் இயல்பாகவே அதிமுகவுக்குத் தான் செல்வார் என்ற நிலைப்பாட்டோடு செயல்படுவது என்பது.....

ஒட்டுமொத்த இஸ்லாமிய சகோதரர்களுக்கும் செய்கின்ற துரோகமாகத்தான் எதிர்காலத்தில் அமையும். மதச்சார்பற்ற ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்று எண்ணுகின்ற ஒவ்வொரு இஸ்லாமிய சகோதரரும், வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுத்துவிடாமல், தமிழகத்தைப் பொறுத்தவரை தங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு அளிப்பதே புத்திசாலித்தனமான அல்லது தங்கள் இனத்திற்கு ஆதரவான செயலாக இருக்க முடியும்.
அதைத்தவிர்த்து அதிமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற ஒவ்வொரு சிறுபான்மையினரின் வாக்குகளும் தங்கள் தலையில் தாங்களே ஒரு பிடி மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளுகின்ற ஒரு முடிவாக மட்டுமே இருக்க முடியும் என்பதை கொஞ்சம் அமைதியாக யோசித்துப்பார்த்தால் புரியும்.






Kokkarakkoo.blogspot.com
, ,