இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

05/06/2014

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஸூமைய்யா பின்த் கபாத் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தூதுத்துவப்பணியை ஏற்று சத்திய நெறியின் பக்கம் மக்களை அழைக்கத் தொடங்கிய போது
அன்று வரைக்கும் 'அஸ்ஸாதிக் - உண்மையாளர்' 'அல் அமீன் - நம்பிக்கைக்குரியவர்' என்று கூறி அண்ணலாரை அன்போடு போற்றிவந்த
மக்கத்துக் குறைஷிகள், அன்று முதல் அவர்களின் உயிரையே குடிக்கத் துடிக்கும் கொடிய பகைவர்களாய் மாறலானார்கள்.
அவர்கள் நபியவர்களை மட்டுமல்ல, இஸ்லாமிய நன்நெறியை ஏற்றுக் கொண்ட நன்மக்கள் அனைவரையும் ஆண், பெண் என எவ்வித பாகுபாடுமின்றிக் கொடுமைப் படுத்தினார்கள்!

இக்காலகட்டத்தில், ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் பனூமக்ஸூம் கூட்டத்தார் வசிக்கும் வழியாகச் சென்றார்கள். அங்கே ஒரு படுபாதகச் செயல் நிகழ்ந்தது! இறைமறுப்பாளர்களான குறைஷிகள் முதுமை நிலையிலுள்ள ஒரு பெண்ணை இரும்புக் கவசம் அணிவித்துக் கடும் வெயிலில், தரையில் கிடத்தியிருந்தார்கள். அவளின் அருகே கும்பலாகச் சூழ்ந்து நின்று உரக்கச் சிரித்த வண்ணம், முஹம்மதின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டாய் அல்லவா? அதன் பலனைச் சுவைத்துப் பார்!' என்று கூறி பரிகாசம் செய்தார்கள்.
கொடியவர்களின் கைகளில் சிக்கிய அப்பெண்மணியின் பரிதாப நிலையைக் கண்டு காருண்ய நபியவர்கள் கண்கலங்கி நின்றார்கள். பொறுமையுடன் இருங்கள், நீங்கள் செல்லுமிடம் சுவனம்தான்' என்று அவருக்கு ஆறுதல் கூறினார்கள்! சத்திய வழியில் இத்தகைய கொடுமைக்கு இலக்காகி, நபியவர்களால் சுவனபதியின் நற்செய்தி சொல்லப்பட்ட அப்பெண்மணியின் பெயர்தான் ஸூமைய்யா பின்த் கபாத் (ரலி)!
 ஸூமைய்யா (ரலி) அவர்கள் பிரபலமான நபித்தோழியருள் ஒருவராவார். அவர்கள் தம்முடைய முதுமைக் காலத்தில் பலவீனமான நிலையிலும் கூட எதிரிகளால் தொடர்ந்து இழைக்கப்பட்ட திகிலூட்டும் கொடுமைகள் அனைத்தையும் சத்தியத்திற்காக சகித்துக் கொண்டார்கள்! ஏன் - அவ்வழியில் தம்முடைய இன்னுயிரையும் தியாகம் செய்து இஸ்லாத்திற்காக முதன் முதலில் உயிர்த்தியாகம் செய்த மகத்தான சிறப்பினை அடைந்தார்கள்!
இஸ்லாத்தைத் தழுவுதல்
 ஸூமையா (ரலி) அவர்களின் மூதாதையருள் அவர்களின் தந்தை 'கபாத்' என்பவரின் பெயர் மட்டுமே தெரிய வருகிறது. அவர்களுடைய ஊர் எது? குலம் எது? எப்போது எப்படி மக்கா வந்தார்கள் என்பன பற்றி வரலாற்று ஏடுகளில் எந்தத் தகவலும் இல்லை!
இவர்களைப் பற்றி அறியக் கிடைத்த ஆதாரப்பூர்வமான தகவல்கள் வருமாறு:

ஸூமையா (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் மக்கா நகரத்துத் தலைவர்களில் ஒருவரான மக்ஸூமி கோத்திரத்தைச் சேர்ந்த அபூஹீதைபா இப்னுல் முகீரா என்பவரின் அடிமையாய் இருந்தார்கள். இவர் அபூ ஜஹ்லின் பெரிய தந்தையாவார். இது நபித்துவத்திற்கு ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன்புள்ள செய்தி! இதே காலகட்டத்தில் கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த யாஸிர் இப்னு அமீர் என்பவர் காணாமல் போய்விட்ட தன்னுடைய நான்காவது சகோதரரைத் தேடியவாறு ஹாரிஸ் மற்றும் மாலிக் எனும் இரு சகோதரர்களுடன் யமன் தேசத்திலிருந்து மக்கா நகர் வந்தார். பிறகு ஹாரிஸூம் மாலிக்கும் யமனுக்கு திரும்பிச் சென்று விட்டனர். ஆனால் யாசிர் மட்டும் மக்காவில் தங்குவதற்கு தீர்மானித்து அபூஹூதைஃபா இப்னு முகீரா என்பவரின் நேசராகின்றார். இப்னு முகீரா ஸூமையாவை யாஸிருக்கு மணமுடித்து வைத்தார். இருவருக்கும் அப்துல்லாஹ், அம்மார் (ரலி-அன்ஹூம்) என்று இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். கொஞ்ச நாட்களில் அபூஹூதைபா காலமானார். ஸூமையா (ரலி) அவர்கள் அவரின் வாரிசுதாரர்களுக்கு அடிமையாய் இருந்து வந்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இளமைப் பருவம் கடந்து வாலிபத்தை அடைந்திருந்தார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு முன்புள்ள காலத்தில் யாஸிர், சுமைய்யா, அப்துல்லாஹ் மற்றும் அம்மார் (ரலி-அன்ஹூம்) ஆகியோர் பழகும் இடத்தில் வாழ்ந்து வந்திருக்க வேண்டும். நபியவர்களைப் பற்றி இக்குடும்பத்தினர் நன்கு அறிந்திருக்க வேண்டும். மேலும் அவர்களின் மகத்தான ஆளுமையும் உயர்குணமும் சிறந்த பண்பும் அக்குடும்பத்தினரின் உள்ளங்களில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
 
ஆகையால்தான் நபித்துவம் அருளப்பட்டு, நபியவர்கள் சத்திய அழைப்பு விடுக்கத் தொடங்கியவுடன் இக்குடும்பத்தினர் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

கொள்கைப் பிடிப்பு

அன்றைய காலகட்டம், இஸ்லாத்தைத் தழுவிய அனைவருக்கும் மிகவும் சோதனை நிறைந்த கால கட்டமாக இருந்தது. மக்காவில் எந்த ஒரு மனிதர் ஏகத்துவக் கலிமாவை ஏற்றுக் கொண்டாலும் அவர், இணைவைப்பாளர்களான குறைஷிகளின் கடுஞ்சினத்திற்கு உரியவரானார். அவர்கள் இழைத்த கொடுமைக்கும் அக்கிரமத்திற்கும் அவர் இலக்காக வேண்டியதிருந்தது. செல்வமும் செல்வாக்கும் பெற்ற உயர் குடும்பத்தினரையும் ஏன், மிக நெருங்கிய தங்களின் உறவினர்களையும் கூட அக்கொடுமைக்காரர்கள் விட்டு வைக்கவில்லை.
ஆனால், யாஸிரும் அவருடைய இரு புதல்வர்களும் மிகவும் ஏழைகள் மட்டுமல்ல, வெளியூர்க்காரர்கள்! ஸூமைய்யா (ரலி) அவர்களோ இப்போதும் மக்ஸூம் கிளையார்களின் அடிமையாகத்தான் இருந்தார்கள். இந்நிலையில் இந்த அப்பாவி மக்கள் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுவதில் குறைஷிகளுக்கு எவ்விதத் தடையும் இருக்கவில்லை. பலவீனமான அக்குடும்பத்தினர்க்கு அவர்கள் என்னென்ன துன்பங்களெல்லாம் கொடுத்தார்கள் தெரியுமா! அவற்றைக் கேள்வியுறும் போது மேனி நடுங்குகிறது. மனித உணர்வே உறைந்து போய் விடுகிறது.

சிலபோது அவர்களுக்கு இரும்புக்கவசம் அணவித்து சுடுமணலில் கிடத்துவார்கள். சிலபோது இரும்பைப் பழுக்கக் காய்ச்சி அவர்களின் முதுகுகளில் சூடு போடுவார்கள். சில வேளைகளில் அவர்களைத் தண்ணீரில் அமிழ்த்துவார்கள். இப்படி அந்த ஏழை மக்களை விதவிதமாகத் துன்புறுத்துவது அந்த இறைமறுப்பாளர்களின் அன்றாடத் 'தொழிலாகி' விட்டிருந்தது!

யாஸிரும், ஸூமைய்யாவும் வயது முதிர்ந்த நிலையில் மிகவும் பலவீனமாய் இருந்தார்கள். ஆயினும் அவர்களின் ஈமானிய உணர்வும் கொள்கைப்பிடிப்பும் இளமையோடு உறுதியாய் இருந்தன.
குறைஷியர் அவர்களுக்கு எத்தனையோ விதமான துன்பங்களைக் கொடுத்து ஏகத்துவத்தை விட்டுவிட்டு இணைவைப்புக் கொள்கையை ஏற்றிடும்படி எவ்வளவோ நிர்பந்தித்தார்கள். எனினும் அவ்விருவரும் சத்தியப் பாதையிலிருந்து இம்மியளவும் அடிசறுக்கவில்லை. அவர்களின் இரு புதல்வர்களும் இவ்வாறே ஏகத்துவக் கொள்கையில் மழை போல் விளங்கினார்கள்.
.
ஒரு சமயம் அக்குடும்பத்தினர் கொடுமைப்படுத்தப்பட்டபோது அவ்வழியாக நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்ல நேர்ந்தது. இந்நிகழ்ச்சிகளைக் கண்டதும் நபியவர்கள் கடும் துக்கம் அடைந்தார்கள். அச்சூழ்நிலையில், 'யாஸிரின் குடும்பத்தினரே, பொறுமையுடன் இருங்கள்! உங்களுக்கு சுவர்க்கம் வாக்களிக்கப்பட்டிருக்கின்றது' என்று ஆறுதல் மட்டும் கூறிடும் நிலையில் நபியவர்கள் இருந்தார்கள்!
மற்றோர் அறிவிப்பில் யாஸிர், ஸூமய்யா மற்றும் அவர்களின் இரு புதல்வர்கள் அனைவரையும் குறைஷிகள் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த நிகழ்ச்சியை நபியவர்கள் பார்த்தபோது, 'பொறுமையுடன் இருங்கள்!' என்று ஆறுதல் கூறிவிட்டு 'இறைவா, யாஸிரின் குடும்பத்தினர்க்கு மன்னிப்பு வழங்குவாயாக!' என்று பிரார்த்தனை செய்தார்கள்!

உயிர்த் தியாகம்

முதியவரான யாஸிர் இக்கொடுமைகளையெல்லாம் சகித்துச் சகித்து ஒருநாள் சத்திய வழியில் உயிர் துறந்தார். அதன் பிறகாவது அக்கொடுமைக்காரர்களுக்கு அக் குடும்பத்தினர் மீது இரக்கம் வரவேண்டுமே! ஊஹூம்! கல்லாய் இறுகிவிட்ட அவர்களின் இதயங்களில் அறவே இரக்கம் வரவில்லை! ஸூமைய்யா அவர்களையும், அவருடைய இரு புதல்வர்களையும் கொடுமைப்படுத்துவதைத் தொடர்கதையாக்கினார்கள் அக்கல்நெஞ்சக்காரார்கள்.

ஒருநாள்,ஸூமைய்யா (ரலி) அவர்கள் பகல் முழுவதும் துன்பங்களைத் தாங்கிக் கொண்டிருந்துவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார்கள். அங்கே  அபூஜஹில் நின்று கொண்டு அவர்களைக் கடுமையாகத் தூற்றலானான். அப்படி ஏசிப் பேசிக் கொண்டே பெரிதும் கோபாவேசம் கொண்ட அவன் தன்னுடைய கூர்மையான ஈட்டியினால் ஸூமைய்யா (ரலி) அவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கினான். அந்தோ! ஸூமைய்யா (ரலி) அவர்கள் கீழே சாய்ந்து அதே இடத்தில் தமது இன்னுயிரைத் துறந்தார்கள்! இரவிலாவது அமைதியும் நிம்மதியும் கிடைக்கும் என்று இல்லம் திரும்பிய அவர்கள் இறைவனிடம் போய்ச் சேர்ந்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில் இப்படி உள்ளது: கொடியோன் அபூஜஹில் ஸூமைய்யா (ரலி) அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ்வையும் தன்னுடைய அம்பினால் தாக்கி ஷஹீதாக்கினான். இப்போது அக்குடும்பத்தில் அம்மார் (ரலி) அவர்கள் கடும் துயரத்தில் மூழ்கினார்கள். அழுதுகொண்டே அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சமூகம் வந்து நடந்த நிகழ்ச்சியை எடுத்துரைத்து 'அல்லாஹ்வின் தூதரே, இப்போது கொடுமை இந்த அளவுக்கு வந்துவிட்டதே! என்று முறையிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பொறுமையைக் கைக்கொள்ளும்படி அவரை வேண்டிக் கொண்டு, 'அல்லாஹ்வே யாஸிரின் குடும்பத்தினரை நரகத்திலிருந்து காப்பாற்று' என்று பிரார்த்தித்தார்கள்.
அம்மார் (ரலி) அவர்களின் உள்ளத்தில் அவரின் தாயார் கொடுமையாகக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி எப்போதும் பசுமையாய் இருந்தது. ஏன், அநியாயமாக நிகழ்ந்த அந்தக் கொலையும் அதனைச் செய்யத் துணிந்த அபூஜஹ்லின் துர்பாக்கியமும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் நினைவில் இருந்தது.
ஹிஜ்ரி 2ம் ஆண்டு நடந்த பத்ரு யுத்தத்தில் அபூஜஹ்ல் கொலையுண்டபோது நபியவர்கள் அம்மாரை அழைத்து 'உம்முடைய தாயாரைக் கொன்றவனிடம் அல்லாஹ் பழிவாங்கி விட்டான் என்று கூறினார்கள்.
 ஸூமையா ஷஹீதாக்கப்பட்டது ஹிஜ்ரி சகாப்தத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகும். ஆகையால் வரலாற்றாசிரியர் அனைவரும் இஸ்லாத்தில் முதன் முதலாக ஷஹீதாக்கப்பட்டவர்கள் ஸூமைய்யா (ரலி) அவர்களே என்று ஏகோபித்துக் கூறியுள்ளார்கள்.
, ,