குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

12.7.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ரமளான் - சபீர்
திசைகளைத் தொலைத்த
தீன் குலத்தோர்க்கு
களங்கரை விளக்கம் - ரமளான்
ஷைத்தானை விரட்ட
முஸ்லிமுக்கு வேண்டிய
கலன்களை விளக்கும்!


குர்ஆனும் மாநபி(ஸல்)யும்
போதித்தவைக் கொண்டு
புலன்களை அடக்கும் - ரமளான்
படைத்தவன் மகிழ
பலமுறை துதித்தால்
பலன்களைக் கொடுக்கும்

மண்டையில் வெயில் காய்ந்து
தொண்டை வறண்டாலும்
பருகுவதைத் தடுக்கும் - ரமளான்
குடிநீரின் மாண்புதனை
துளிநீரில் நிரப்பிவைத்து
அருந்த பின் கொடுக்கும்

ருசியான உணவே
பசிநேரம் வாய்த்தும்
புசிக்காமல் பழக்கும் - ரமளான்
குடலையும் சுறுக்கி
உடலையும் உருக்கி
வறுமையை உணர்த்தும்

கட்டாய வணக்கங்களை
தட்டாமல் நேரத்தில்
நிறைவேற்றப் பணிக்கும் - ரமளான்
உபரியான தொழுகைகளை
உவப்போடு அர்ப்பணிக்க
உள்ளமெல்லாம் இனிக்கும்

இருக்கின்ற செல்வம்
இல்லாதோர்க்கும் செல்ல
கணக்கு வரையறுக்கும் - ரமளான்
அழுக்குப் பணப்பொதியை
சதவிகிதக் கணக்கிட்டு
அசுத்தக் கறை அகற்றும்

நல்லவற்றைப் பெருக்க
தீமையதைத் தடுக்க
பிரகாச இரவு தரும் - ரமளான்
ஒன்றுக்குப் பலவாக
உளமெல்லாம் பூரிக்க
நன்மைகளை அள்ளித்தரும்

அருள் சுமந்த இரவில்
பொருள் நிறைந்த குர் ஆன்
இறங்கிய நல் மாதம் - ரமளான்
இருள் நீக்கி நெஞ்சில்
ஒளி இலங்கச் செய்ய
வழங்கியதோ இறை வேதம்

பொய்யின்றி புறமின்றி
பிறர் மனம் புண்படாமல்
பேச வலியுறுத்தும் - ரமளான்
நன்மையை ஏவி
தீமையைத் தடுக்க
வழிவகை வகுக்கும்

பசிப்பிணி தாகம்
பாவச்செயல் யாவும்
விலக்கியே விரட்டும் - ரமளான்
பொறுமைக்குப் பரிசாக
பழுதற்று கொண்டாட
பெருநாளைக் கொடுக்கும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
, ,