குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

6.7.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஈமானும் அமலும் இணைபிரியாதவையே

''..ஆகவே, நீங்கள் வேதத்தில் சில பகுதிகளை விசுவாசித்து (மற்றும்) சில பகுதிகளை நிராகரிக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடையாது. மேலும், மறுமை நாளில் அவர்கள் மிகவும் கடுமையான வேதனையின் பால் மீட்டப்படுவார்கள். மேலும் நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற செயல்கள் பற்றி அவ்வாறு கவனமற்றவனாய் இல்லை.'' (அல்பகறா - 85)
இது அத்தியாயம் அல் பகறா வின் 85 ம் வசனத்தில் வரும் இறுதிப் பகுதியாகும். மதீனா வில் வாழ்ந்த யூதர்களை விளிக்கும் இவ்வசனத்தில் மூன்று முக்கிய உண்மைகள் உணர்த்தப்பட்டுள்ளன.

யூதர்கள் தௌராத்தில் ஒரு பகுதியை விசுவாசித்து மற்றைய பகுதியை நிராகரிப்பதாக அல்லாஹ் குற்றம் சுமத்துகிறான்.

இவ்வாறு அரைகுறையாக விசுவாசிப்பவர்களுக்கு உலக வாழ்வில் மிகவும் கீழத்தரமான பிரதிபலனை இழிவான வாழ்வைக் கொண்டுப்பதாக எச்சரிக்கின்றான்.

இத்தகையவர்களுக்கு மறுமையிலும் கொடூரமான வேதனை கிடைக்கும் என அச்சுறுத்துகிறான்.

ஒரு சமூகத்திற்கு வழங்கப்படும் வேதத்தை அச்சமூகம் அரைகுறையாக விசுவாசிப்பதன் அபாயம் பற்றி இந்த வசனம் தெளிவாகப் பேசுகிறது. தமக்குப் பின்பற்ற வசதியான, மனதுக்குப் பிடித்தமானவற்றை மட்டும் விசுவாசிப்பது பொதுவாக எல்லாச் சமூகங்களிலும் காணப்படக்கூடிய பண்பாக இருப்பதால் இவ்வசனம் தரும் பொருளைப் பற்றி ஆராய்வது அவசியமாகிறது.

இறங்கிய பின்னணி

இனி, இவ்வசனம் தரும் பொருளை உரிய முறையில் விளங்க அது இறக்கப்பட்ட பின்னணியைச் சற்று நோக்குவோம். இவ்வசனம் மதீனாவில் வாழ்ந்த யூதர்களை விளித்து இறக்கப்பட்டதாகும். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருவதற்கு முன்னர் யூதர்களுக்கு மத்தியில் பனூ நழீர், பனூ கைனூகா, பனூ குறைழா ஆகிய மூன்று பிரிவினர் இருந்தனர். அதேவேளை மதீனாவில் சிலை வணங்கிகளான அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு கோத்திரத்தவர்களும் வாழ்ந்து வந்தனர். யூதர்களின் மூன்று கோத்திரங்களில் பனூ குறைழாக்கள் அவ்ஸ் கோத்திரருடனும், பனூ நழீரும் பனூ கைனூக்காவும் கஸ்ரஜ் கோத்திரதாருடனும் தோழமை பூண்டு உடன்படிக்கைகளைச் செய்து வாழ்ந்தனர். 'அவ்ஸ்' ற்கும் கஸ்ரஜ்க்குமிடையே தீராப் பகை நிலவியதால் இரு சாராரும் அடிக்கடி யுத்த முனையில் சந்தித்துக் கொண்டனர். அவ்வேளை உடன்பாட்டின் நிமித்தம், பனூ குறைழாக்கள் 'அவ்ஸ்' தரப்பிலும் பனூ கைனூக்காக்களும் பனூ நழ்ர்களும் 'கஸ்ரஜ்' தரப்பிலும் நின்று ஒருவரை ஒருவர் எதிர்த்து பொருந்திக் கொண்டனர். அதாவது யூதர்களை யூதர்களே கொலை செய்யும் நிலை காணப்பட்டதுடன் யுத்தத்தில் மிகைக்கும் தரப்பினர் தோற்கடிக்கப்பட்டவர்களை வீடுகளிலிருந்து வெளியேற்றி வீடுகளிலுள்ள பொருட்களை, சொத்துக்களை, செல்வங்களைச் சூறையாடுவதும் வழக்கமாக இருந்தது. இவ்வேளை தனது சமூகத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு தான் அநீதியிழைப்பதாக ஒரு யூதன் கருதவில்லை.

ஆனால், இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று ஏற்கனவே தௌராத்தில் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையுத்தரவை யூதர்கள் ஏற்றுக் கொண்டிருந்தது மாத்திரமன்றி அது பற்றி அல்லாஹ்வுக்கு வாக்குறுதியும் கொடுத்திருந்தார்கள். இது மூஸா (அலை) அவர்களது காலத்திலிருந்து அவர்கள் மீது விதிக்கப்பட்ட தடையாக இருந்தது. இதனையே இதற்கு முன்னால் உள்ள வசனத்தில் அல்லாஹ் அவர்களுக்கு ஞாபகமூட்டினான்.

'உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள், உங்களில் ஒருவர் மற்றவரைத் தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்'' என்று நாம் உங்களிடம் உறுதி மொழி வாங்கியதை (யூதர்களே! நீங்கள் ஞாபகப்படுத்திப் பாருங்கள். பின்னர் அதை நீங்கள் ஏற்றுக் கொண்டதுடன் நீங்களே அதற்கு சாட்சியாகவும் இருந்தீர்கள். (அல் பகறா : 84)

எனவே, தமது இனத்தவர் எந்தத் தரப்பில் இருந்தாலும் அவர்களைக் கொல்வதுமில்லை. வீடுகளிலிருந்து வெளியேற்றுவதுமில்லை என யூதர்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் மதீனத்து யூதர்கள் என்ன செய்தார்கள்? அது பற்றி அல்லாஹ் :

''(இவ்வாறு ஏற்றுக் கொண்டிருந்தும் இப்போது) நீங்கள் உங்களிடையே கொலை செய்கிறீர்கள். உங்களிலேயே ஒரு சாராரை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். அவர்கள் மீது அக்கிரமம் புரியவும் பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள்.''

இந்த விபரங்களில் தௌராத்தின் கட்டளைக்கு இவர்கள் முற்றிலும் மாறு செய்த வந்தார்கள். அதேவேளை தௌராத்தில் வந்த வேறு ஒரு கட்டளையை அவர்கள் அச்சொட்டாகப் பின் பற்றி வந்தனர். அது என்ன? அல்லாஹ் அதனைப் பற்றிக் கூறும் போது : ''உங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்களில் எவராவது விரோதிகளிடம் சிக்கிக் கைதிகளாக உங்களிடம் வந்தால் (அப்பொழுது மட்டும்) மீட்புப் பணம் கொடுத்து அவர்களi விடுவிக்கிறீர்கள். (அல்பகறா : 85)

எனவே மேற்கூறப்பட்ட விடயங்களிலிருந்து இரண்டு கருத்துக்களைப் பெறலாம்.

யூதர்கள் தமது இனத்தவர்களில் எவரையாவது கொலை செய்யவோ வீடுகளிலிருந்து வெளியேற்றவோ தம் இனத்துக்குப் பாதகமான விதத்தில் எவருக்கும் உதவி ஒத்தாசை புரியவோ கூடாது என்று கூறும் அல்லாஹ்வின் தடையுத்தரவை அவர்கள் மீறியிருக்கிறார்கள். இதன் மூலம் தௌராத்தின் ஒரு பகுதியைப் பின்பற்றாத குற்றத்துக்கு ஆளாகின்றனர்.

யூதர்கள் தமது இனத்தவர் எச்சந்தர்ப்பத்திலாவது எவரிடமாவது கைதிகளாக்கப்பட்டால் மீட்புப் பணம் கொடுத்து அவர்களை விடுதலை செய்கிறார்கள். இவ்வாறு விடுதலை செய்ய வேண்டும் என்பது தௌராத்தின் கட்டளையாகும். அதாவது தௌராத்தில் வரும் இப்பகுதியை இவர்கள் பின்பற்றுகிறார்கள்.

செயல்பாடுகளும் ஈமானும் இணைபிரியாதவை
எனவே தௌராத்தின் சில பகுதிகளைப் பின்பற்றும் இவர்கள் வேறு சில பகுதிகளைப் பின்பற்றாது விட்டு விடுகிறார்கள் என்பது அர்த்தமாகும். ஆனால், யூதர்கள் இவ்வாறு ஒரு பகுதியைப் பின்பற்றாது விட்டு விட்டதை நிராகரித்தல் என்ற சொல்லாலும் வேறு ஒரு பகுதியைப் பின்பற்றுவதை ஈமான் கொள்ளுதல் என்ற சொல்லாலும் அல்லாஹ் குறித்துக் காட்டுகிறான். நாம் விளக்க வந்த வசனத்தில் அவன் :

''அப்படியென்றால் வேதத்தின் ஒரு பகுதியை நீங்கள் நம்பி மறு பகுதியை நிராகரிக்கிறீர்களா? எனக் கண்டனம் தெரிவிக்கும் பாணியில் வினவுகிறான். எனவே, வேதத்தை முழுமையாகப் பின்பற்றுவது ஈமானையும் சிலதை மாத்திரம் ஏற்பது குப்ர் - நிராகரிப்பையும் காட்டுகிறது.

உண்மையில் யூதர்களான பனூ இஸ்ரவேலர்கள் தௌராத்தை முழுமையாக விசுவாசித்திருந்தார்கள். அது இறைவனின் கட்டளை என்று ஏற்றிருந்தார்கள். ஆனால், அந்த தௌராத்தின் சில பகுதிகளையே அதாவது தமக்கு வசதியான, மனதுக்குப் பிடித்தமான பகுதிகளை மட்டுமே நடைமுறைப்படுத்தி வந்தார்கள். தமது மனோ இச்சைக்கு முரணான பகுதிகளைப் பின்பற்றாது விட்டு விட்டனர். மறுமை வாழ்வு பற்றிய நம்பிக்கை அவர்களிடம் மிகவும் பலவீனமாக இருந்தமையாலும் உலக வாழ்வை அளவுக்கதிகம் நேசித்தமையாலுமே அளவுக்கதிகம் நேசித்தமையாலுமே இந்நிலை ஏற்பட்டது என அல்லாஹ் இங்கு விளக்குகிறான்.

ஆனால், அல்லாஹ் இந்த வசனத்தில் யூதர்கள் தௌராத்தின் சில பகுதிகளைப் பின்பற்றியமையை அவற்றை ஈமான் கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்திலும் சில பகுதிகளைப் பின்பற்றாது விட்டமையை நிராகரிக்கின்றனர் என்ற கருத்திலும் ஏன் பிரயோகித்தான் என்பதே இங்கு ஆய்வு செய்யப்பட வேண்டிய அம்சமாகும்.

இங்கு ஈமானுக்கும் அமலுக்கும் இடையிலான இறுக்கமான உறவையும் குப்ருக்கும் வேதக் கட்டளையை நடைமுறைப்படுத்தாமைக்குமுள்ள தொடர்பையும் இவ்வசனம் தெட்டத் தெளிவாக வெளிக்காட்டுகிறது. இஸ்லாம் என்பது வெறும் நம்பிக்கைக் கோட்பாடல்ல. நம்பிக்கைக் கோட்பாடு (ஈமான்) செயல் உருவில் பரிணிக்காத போது அதில் எந்த அர்த்தமும் இல்லாது போகிறது. அல்லாஹ்வைத் தனது எஜமானனாக ஏற்பவன் அந்த எஜமானன் இடும் கட்டளைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். அவன் விலக்கியவைகளை முற்று முழுதாகத் தவிர்ந்து நடக்க வேண்டும். அந்த எஜமானனின் கட்டளைகளில் சிலவற்றை ஏற்று வேறு சிலவற்றை அந்த அடிமை புறக்கணிப்பதாயின் அவன் புறக்கணிக்கும் பகுதிகளில் எஜமானனை மதிக்காதவனாகக் கருதப்படுவதில் சந்தேகமில்லை. மதிக்காதது மட்டுமல்ல, எஜமானனின் வழிகாட்டும் தகைமைகளில் குறைபாடு கண்டவனாகவும் கருதப்படுவான்.

இதே போன்று தான் அல்லாஹ்வின் தெளிவான கட்டளைகள் சிலவற்றை ஒரு முஸ்லிம் புறக்கணித்து அவற்றை நடைமுறைப்படுத்தாத போது அக்கட்டளைகளை நிராகரித்தவனாக மாறுகிறான். இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டமாகும். அதில் நம்பிக்கைக் கோட்பாடுகள் மாத்திரமின்றி வணக்க வழிபாடுகள், ஒழுக்க மாண்புகள், தனி மனித, குடும்ப சமூக வாழ்வுக்கான சட்ட திட்டங்கள் அனைத்தும் காணப்படுகின்றன. இன்றைய முஸ்லிம்களில் பலர் பெரும்பாலும் நம்பிக்கைக் கோட்பாடுகள் (இபாதத்) என்பவற்றுடன் நிறுத்திக் கொள்கின்றனர். இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல், சமூகவியல், அரசியல், பொருளாதார நடவடிக்கைகள் போன்றன தொடர்பான வழிகாட்டல்களை அவர்கள் பின்பற்றுவது குறைவு. அல்லது இல்லை என்றே கூற முடியும். அப்படியாயின் பின்பற்றாத அம்சங்களடன் சம்பந்தமான போதனைகளை அவர்கள் நம்பவில்லை என்ற பொருளையே நாம் கொள்ள வேண்டியிருக்கின்றது. நாம் விளக்கப் புகுந்த வசனம் யூதர்களுடன் தொடர்பாக இறக்கப்பட்டிருப்பினும் அது தரும் கருத்துப் பொதுவானதாகும்.

நல்லெண்ணம் மாத்திரம் போதுமா?

அல்லாஹ் செயலுடன் இணைந்த ஈமானையே எதிர்பார்க்கின்றான். அல்லாஹ் பற்றிய நல்லெண்ணமும் விசுவாசமும் நற்கிரியைகளைத் தோற்றுவிக்க வேண்டும். வெறும் தூய எண்ணம் (நிய்யத்) மனிதனைச் செயலுக்காககத் தூண்டாத போது அந்த நிய்யத் வெறும் ஏமாற்று வித்தையாகவும் போலியாகவுமே இருக்கும். மனிதன் தனது உள ஆசையொன்றுக்கு விலங்கிட வேண்டும் என்றோ தனது பழக்க வழக்கமொன்றை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றோ தான் வாழும் சமூக அமைப்பின் பாரம்பர்யமொன்றைத் திருத்த வேண்டும் என்றோ அல்லாஹ் எதிர்பார்க்கும் போது அல்லது மக்களது வழிபிற்வை அவன் தடுத்த நிறுத்த வேண்டும் என்றோ அதற்காக அவன் சிரமங்களையும் துன்பங்களையும் முழு மனதோடு ஏற்க வேண்டும் என்றோ வேண்டும் போது அவனது ஈமான் அங்க வேலை செய்து அல்லாஹ்வின் விருப்பத்தைச் செயலுருவில் காட்டாத போது அந்த ஈமானுக்கும் நல்லெண்ணத்துக்கும் எப்பெறுமதியுமில்லை.

எனவே தான் ''ஈமான் என்பது வெறும் நப்பாசைகளோ வெளிப்பகட்டான அலங்காரங்களோ அன்று. மாறாக ஈமான் என்றால் அது உள்ளத்தின் ஆழத்தில் பதிந்திருக்க வேண்டியதும் செயல்களால் உண்மைப்படுத்தப்பட வேண்டியதுமாகும்'' என்று இமாம் ஹஸன் அல் பஸரி (ரஹ்) கூறினார்கள்.

ஈமானும், அல்லாஹ் பற்றிய நல்லெண்ணமும் மாத்திரம் போதாது. அல்குர்ஆனில் அல்லாஹ், ''ஈமான் கொண்டவர்கள்'' என்று கூறாது, ''ஈமான் கொண்டு சாலிஹான அமல்களில் ஈடுபட்டவர்கள் என்றே அவர்களைப் பற்றிக் கூறுகிறான்.'' அல்லாஹ் ஏதாவது ஒரு விசயம் சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட தீர்வை முன்வைத்து விட்டால் அதனை உதாசினம் செய்யும் உரிமை ஒரு விசுவாசிக்குக் கிடையாது. அவ்வாறு உதாசீனம் செய்வது அல்லாஹ்வின் உரிமையை மீறியதாகவே கருதப்படும்.

''அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏதேனும் ஒரு விசயம் தொடர்பாக ஒரு தீர்வைக் கூறி விட்டால், எந்தவொரு முஃமினான ஆணுக்கோ முஃமினான பெண்ணுக்கோ அவ்விசயத்தில் சுயமாக அபிப்ராயம் கொள்வதற்கு உரிமையில்லை.'' (அல் அஹ்ஸாப் : 36)

எனவே, அல்லாஹ்வின் சகல் விருப்பங்களையும் தனது விருப்பமாகவும் அவனுக்கு வெறுப்பான அம்சங்களைத் தனக்கும் வெறுப்பானவையாகவும் ஆக்கிக் கொள்ளாதவரை அடியான் முழுமையான விசுவாசியாக மாட்டான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. யூதர்கள் தமக்கிடப்பட்ட கட்டளைகளை தமது பகுத்தறிவினதும் மனோ இச்சையினதும் நிலைக்களனில் நின்றே இச்சையினதும் நிலைக்களனில் நின்றே நோக்கினர். எனவே, அல்லாஹ் இப்போக்கைக் கடுமையாகச் சாடியதுடன் அது 'குப்ர்' என்றும் தெளிவுபடுத்தினான்.

இமாம் இப்னு ஆசூர் அவர்கள் நாம் விளக்க வந்த வசனம் பற்றிக் கூறும் போது ''வேதத்தின் கட்டளைகளில் சிலவற்றை யூதர்கள் பின்பற்றுவதை 'ஈமான்' கொள்வது என்ற சொல்லாலும் சில பகுதிகளைப் பின்பற்றாதிருப்பது 'குப்ர்' என்ற சொல்லாலும் அல்லாஹ் குறித்திருப்ப ஒரு வகை உருவணி அமைப்பில் அவர்களைப் பற்றி விளக்க அல்லாஹ் கையாண்ட முறையாகும். தௌராத்தின் கட்டளைகளுக்கு மன முரண்டாக மாறு செய்வது அதனை நிராகரிக்கும் நிலைக்கு ஒருவரை இட்டுச் செல்லும் என்று எச்சரிப்பதற்காகவே இவ்வாறு பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. இரு வேறுபட்ட போக்குகள் ஒருவரிடம் இருப்பது ஆச்சரியமானது என்பதையும் அல்லாஹ் உணர்த்த விழைகிறான்'' என்றும் தெரிவிக்கிறார்.

இவ்வசனம் பற்றிக் கூறும் நவீன கால அறிஞர் அபூபக்கர் அல் ஜஸாயிரீ அவர்கள் ''ஷரீஅத் சட்டங்களில் ஒருவர் தனது நலன்களுடனும் மனோஇச்சையுடனும் பொருந்தி வருபவற்றை மட்டும் செயலுருப்படுத்தித் தனக்குப் பொருத்தமிலi;ல எனக் கருதுபவற்றை உதாசீனம் செய்வது 'குப்ர்' நிராகரிப்பாகும் என்பதை இவ்வசனங்கள் உணர்த்துகின்றன. அல்லாஹ்வின் தீனை நிலைநிறுத்தாது அதனைப் புறக்கணித்து அதனைப் பொருட்படுத்தாது விட்டு விடுவது 'குப்ர்' என்றே இவ்வசனங்கள் காட்டுகின்றன என்கிறார்.

எனவே, மேற்கூறப்பட்ட விளக்களிலிருந்து வேதத்தின் எந்த ஒரு பகுதியையாவது பின்பற்றாது விட்டு விடுவது பாரதூரமான குற்றம் என்பதைப் புரிய முடிகிறது. இவ்வாறு செய்வதால் ஒருவன் காபிராகி விட மாட்டான் என அஹ்லுஸ் ஸுன்னாக்கள் கூறியிருந்தாலும் மன முரண்டாக, நிர்ப்பந்தங்கள் எதுவுமின்றி அவன் அதனைச் செயற்படுத்தத் தவறும்பட்சத்தில் இறை நிராகரிப்புக்கு அவனை அது இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

அல்லாஹ்வின் சட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்யாதவன் அல்லாஹ்வின் 'உலூஹிய்யத்'தையும் அவனது தனிப்பண்புகளையும் மறுப்பது ஒரு புறமிருக்க தனக்கு அந்த உலூஹிய்யத் இருப்பதாக வாதாடுகிறான். மனித வாழ்வுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்துடையதாக இருக்கையில் அது தனக்கிருப்பதாக வாதாடுவதைக் குப்ர் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது? ஈமானும் இஸ்லாமும் இருப்பதாக நாவால் மொழியும் ஒருவனது செயல் குப்ரைப் பிரதிபலிக்கிறது எனின் அவன் தன்னிடம் ஈமான் இருப்பதாகக் கூறுவதில் எப்பெறுமதியுமில்லை என ஷஹீத் செய்யத் குதுப் கூறுகிறார். அவர் சூரா அல்-மாயிதாவில் வரும் ''யார் அல்லாஹ் இறக்கிய சட்ட திட்டங்களை வைத்து ஆட்சி செய்யவில்லையோ அவர்கள் தான் காபிர்கள்'' (5:44) என்ற வசனத்திற்கு விளக்கம் தருகையில் இவ்வாறு தெரிவிக்கிறார்.

மோசமான தண்டனை

இனி, வேதத்தின் கட்டளைகளில் சிலதைப் பின்பற்றி வேறு சிலவற்றை நடைமுறைப்படுத்தாதிருப்போர்க்கு உலகிலும் மறுமையிலும் கிடைக்கவுள்ள தண்டனைகளைப் பற்றி அல்லாஹ் தெரிவிக்கிறான் : ''உங்களில் இவ்வாறு செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. மேலும் மறுமை நாளில் அவர்கள் மிகவும் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்.''

வேதத்தை அரைகுறையாகப் பின்பற்றுபவர்கள் நிராகரிப்புக் குற்றத்துக்கு ஆளாகுவது மட்டுமல்ல. அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் கீழ்த்தரமான வாழ்க்கையையே கொடுப்பான் எனவும் அவன் எச்சரிக்கிறான்.

உண்மையில் இந்த வசனம் மதீனாவில் வாழ்ந்த யூதர்களைப் பற்றி இறக்கப்பட்டது என ஏற்கனவே விளக்கப்பட்டது. அவர்கள் தௌராத்தை அரைகுறையாகப் பின்பற்றியதால் உலகிலேயே தண்டிக்கப்பட்டார்கள். இமாம் சுயூதி அவர்கள் கூறுகையில் மதீனத்து யூதர்களுக்கு உலக வாழ்வில் இழிவு கிட்டியது. அதாவது அவர்களில் பனூ குறைழாக்கள் முஸ்லிம்களால் கொலை செய்யப்பட்டார்கள். பனூ நழீர்கள் ஷாம் தேசத்துக்கு நாடு கடத்தப்பட்டார்கள். இந்த யூதர்கள் முஸ்லிம்களுக்குத் திறை (ஜிஸ்யா) செலுத்தி இழிந்த பணிந்து வாழும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என விளக்குகிறார்கள்.

முஸ்லிம்களும் கூட உலகில் மகோன்னதன நிலையிலிருந்து வீழ்ச்சி கண்டு பலவீனமுற்றுப் பிறரால் அடிமைப்படுத்தப்படுமளவுக்கு மாறியமைக்கு அல்குர்ஆஐன அவர்கள் முழுமையாகப் பின்பற்றாமையே காரணமாகும். அரை குறையாக வேதத்தைப் பின்பற்றுவோருக்கு மறுமையிலும் கொடூரமான வேதனையே வழங்கப்படும் என அல்லாஹ் கூறுகிறான்.

காரணம் இது தான்!

யூதர்கள் ஏன் தமது வேதத்தின் சில பகுதிகளைப் பின்பற்றாது விட்டு விட்டார்கள் என்பதற்கு அல்லாஹ்வே காரணத்தையும் தெரிவிக்கிறான். ''இவர்கள் தான் மறுமை வாழ்வை விற்று விட்டு அதற்குப் பகரமாக உலக வாழ்வை வாங்கிக் கொண்டவர்கள்.'' ஆம், உலக இலாபமே இதற்குப் பின்னணியில் இருந்தது என்பது அல்லாஹ் தெரிவிக்கும் காரணமாகும்.

தமது மார்க்கத்திற்கும் வேதக் கட்டளைக்கும் மாற்றமாக யூதர்கள் முஷ்ரிக்குகளுடன் உடன்படிக்கை செய்திருந்தார்கள். இந்த யூதர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து இரு வேறுபட்ட உடன்பாடுகளுக்குள் தம்மைப் பிணதை;துக் கொண்டார்கள். இது தான் இவர்கள் வழக்கமாகக் கைக் கொள்ளும் திட்டமாகும். தடியின் மத்திய பகுதியைப் பிடித்துக் கொள்வார்கள். மோதிக் கொள்ளும் அனைத்துத் தரப்பினருக்குள்ளும் தமது ஆட்களைப் புகுத்திக் கொள்வார்கள். இது தற்காப்புக்காக இவர்கள் செய்யும் வேலையாகும். எந்த வேளையிலும் ஏதாவது இலாபமீட்டிக் கொள்ளலாமே என்பதற்காக எந்த முகாமிலுள்ளவராக இருந்தாலும் யூத நலன்களில் ஏதாவதொன்று பேணப்படும் என்பதற்காக, இவ்வாறு செய்தார்கள். இது அல்லாஹ்வை நம்பாத, அவனுடன் செய்து கொண்ட உடன்பாட்டை எடுத்து நடக்காத, உலக உடன்பாடுகளிலும் தந்திரங்களிலும் நம்பிக்கை கொள்பவர்களது திட்டமாகும். தமது இரட்சகனுடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு மாற்றம் செய்து கொண்ட உடன்படிக்கை;கு மாற்றம் செய்யும் எந்த ஒப்பந்தத்திலும் யூதர்கள் இணையலாகாத என்று அவர்களது ஈமான் கண்டிப்பாகக் கூறுகிறது. அப்படியிருக்க நலன், தற்காப்பு என்ற பெயரில் இதனை மீறுவது ஈமானை மதிக்காத போக்காகும். உண்மையில் மார்க்கத்தைப் பின்பற்றுவதில் தான் நலன் இருக்கிறது. இறைவனுடன் செய்யும் உடன்பாட்டைப் பேணுவதனாலேயே தற்காப்புக் கிடைக்கிறது.

ஆனால், யூத குழுக்கள் ஒவ்வொன்றும் தாம் உடன்பாடு செய்து கொண்ட கோத்திரங்களுக்கு உதவா விட்டால் அது பெரும் அவமானமாகும் எனக் கூறி பரஸ்பரம் கொலை செய்யவோ வீடுகளிலிருந்து வெளியேற்றவோ கூடாது என்ற கட்டளையை உலக இலாபத்தினை கருத்திற் கொண்டு உதாசீனம் செய்து விட்டார்கள்.

சிறுபான்மையாக வாழ்வோர்

எனவே, ஈமான் என்பது வேதத்தை முழுமையாக விசுவாசிப்பதை மாத்திரமன்றி அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதையுமே குறிக்கும். மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு வேதத்தின் சில பகுதிகளை விட்டு விடுவது அல்லது காலத்துக்கு ஒவ்வாதவை என சில பகுதிகளை ஒதுக்கி வைப்பது சுயலாபத்தை ஈட்டித் தராது என நினைத்துப் புறக்கணிப்பது உலகிலும் மறுமையிலும் இறைவனின் தண்டனைக்கு இலக்காகும் மாபெரும் குற்றமாகும். ஆனால், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் அல்குர்ஆஐன முழுமையாகச் செலுருப்படுத்துவதில் பல சிரமங்கள் இருப்பினும் முடியுமானவரை நடைமுறைப்படுத்துவதுடன் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குண்டான சூழலை உருவாக்குவதற்குத் தீவிர முயற்சிகளை எடுப்பதும் அவசியமாகும். நிர்ப்பந்த சூழல்களைத் தவிர்க்க முடியாது என்று வாழ்நாள் முழுவதும் நியாயம் கூறிக் கொண்டு இருப்பது அதனை அகற்ற முயற்சிக்காமலேயே வாழ்ந்து விட்டுப் போவது ஒருபோதும் இஸ்லாமியப் போராட்ட வாழ்வின்பாற்பட்டதாக இருக்காது என்பதுடன் இறைவனின் வெறுப்பையும் சம்பாதித்துத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

துணைநின்றவைகள் :

பேராசிரியர் முஹம்மது குதுப் : ஹல் நஹ்னு முஸ்லிமூன், தாருஸ் ஸுரூக். பெய்ரூத், 1983. பக் 10-18.

இமாம் இப்னு ஆசூர், தப்ஸீருத் தஹ்ரீர் வத்தன்வீர், முதலாம் பாகம் பக் :591

அபூபக்கர் அல் ஜஸா இரீ, ஜஸருத் தபாஸீர், முதலாம் பாகம், 1987, பக்.

ஷஹீத் சையித் குதுப், பீ ழிளாலில் குர்ஆன், பாகம் :2, 12 ம் பதிப்பு, தாருல் இஸ்ம், ஜித்தா, 1986, பக்.898

இமாம் ஜலாலுத்தீன் சுயூதி, தப்ஸீருல் ஜலாலைன், மக்தபதுல் மல்லாஹ், டமஸ்கஸ், பக். 18.

ஷஹீத் சையித் குதுப், பீ ழிளாலில் குர்ஆன் பாகம்-1, பக்.82.
, ,