குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

20.12.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அன்னை ஜுவைரிய்யா பின்த் ஹாரித் (ரலி)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஜுவைரிய்யா (ரலி) அவர்களது குலத்தவர்கள், ஜுவைரிய்யா (ரலி) அவர்களிடமிருந்து அருட்கொடைகளைப் பெற்றுக் கொண்டதைப் போல இன்னொரு பெண்ணிடம் பெற்றுக் கொண்டதை நான் பார்த்ததே இல்லை. ஏனென்றால், ஜுவைரிய்யா (ரலி) அவர்கள் மூலமாக நூற்றுக்கணக்கான அவர்களது குலத்தவர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றார்கள்.

ஹிஜ்ரி 5 ம் ஆண்டு, அரேபியத் தீபகற்பத்தின் பெரும்பாலான பாகங்களில் இஸ்லாத்தின் வெளிச்சம் அதிவேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. இப்பொழுது மதீனா நகரம், இஸ்லாமியத் தலைநகரமாக மாற்றம் பெற்று, விரிந்து வளர்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆளும் மையப் புள்ளியாக மாறி விட்டிருந்தது. மேலும், இஸ்லாமியப் படை நாலா பக்கங்களிலும் சென்று, இஸ்லாமிய உந்துதல்களினால் மாற்றம் பெற்ற அவர்களது உள்ளங்கள், வெற்றியைத் தவிர வேறு எதனையும் ஆசிப்பதாக இல்லை என்ற நிலை உருவாகி விட்டிருந்தது.

இந்த நிலையில், பனூ குஸாஆ என்ற கோத்திரத்தவர்கள் இஸ்லாத்தின் மீதும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீதும் பற்றுக் கொண்டிருந்தாலும், அவர்களது கிளைக் கோத்திரத்தார்களான பனூ முஸ்தலக் மதீனாவின் மீது தாக்குதல் தொடுக்கத் திட்டமிட்டனர். பனூ முஸ்தலக் கோத்திரத்தின் தலைவனாக இருந்த ஹாரித் பின் அபீதர் என்பவன் பயங்கரமான குடிகாரனாகவும், தனது செல்வம் மற்றும் பலத்தைக் கொண்டு கர்வம் பிடித்தவனாகவும் இருந்தான். இவனது மகள் ஜுவைரிய்யா என்ற அழகு மங்கை இஸ்லாமிய எழுச்சிக்கு சற்று முன்பு தான் பிறந்திருந்தார். அவரது தந்தையாரின் வளமும், வசதிகளும் இவரை ஒரு இளவரசியாகவே மாற்றியிருந்தது. அந்தளவு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தார். புத்திக்கூர்மையுள்ள மற்றும் நேர்மை மிக்கவரான இவர், மொழிகளிலும், இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். இத்தகைய குணங்கள் அரபுக்கள் மத்தியில் மிகவும் போற்றுதற்குரிய மரியாதைக்குரியனவாக இருந்தன. இத்தகைய நற்குணங்களைப் பெற்ற இவர், பனூ குஸாஆ கோத்திரத்து வாலிபரான முசாஃபா பின் ஸஃப்வான் என்பவருக்கு மணமுடித்து வைக்கப்பட்டார்கள்.

ஹாரித் பின் அபீதர் மதீனாவிற்கு எதிராகப் படைகளைத் திரட்டிக் கொண்டு வருவதாக இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், தனது ஆருயிர்த் தோழர்களில் ஒருவரான புரைதா பின் ஹஸீப் (ரலி) என்பவரை அழைத்து, ஹாரித் திரட்டிக் கொண்டிருக்கும் படைகளின் எண்ணிக்கை மற்றும் ஏற்பாடுகள் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டு வரும்படி அனுப்பி வைத்தார்கள். இதன் மூலம் போர்த்திட்டங்களைத் திறம்பட வகுத்துச் செயல்பட முடியும் என்பது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் எண்ணமாக இருந்தது. புரைதா (ரலி) அவர்கள் ஹாரித் அவர்களையும் இன்னும் அந்தக் குலத்து முக்கியஸ்தர்களையும் சந்தித்து, அதன் மூலம் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்த் தயாரிப்பு ஏற்பாடுகளை உளவு பார்க்க ஆரம்பித்தார்கள்.

அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பரபரப்புகளைக் கண்ணுற்ற புரைதா (ரலி) அவர்கள், போர்க்கான ஆயத்தங்கள் பலமாக செய்யப்பட்டுக் கொண்டிருப்பதையும், அதற்காக ஆயுதங்களைத் தயார் செய்து வைத்துக் கொண்டிருப்பதையும், கண்ணால் கண்டதோடு, இன்னும் இந்த ஏற்பாடுகள் யாவும் மதீனாவின் மீது போர் தொடுப்பதற்காகத் தான் என்பதையும் அவர்களது பேச்சின் மூலமாகவும் அறிந்து கொண்டார்.

தான் கண்டதையும், இன்னும் கேட்டதையும் அப்படியே இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லி முடித்த, புரைதா (ரலி) அவர்கள், போருக்கான ஆயத்தம் பலமாகச் செய்யப்பட்டு வருவதையும் தனது உளவு நடவடிக்கைகள் மூலமாகத் தெரிந்து கொண்டதையும் தெரிவித்தார்.

இதனைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை அழைத்து போருக்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி உத்தரவிட்டதோடு, 700 படைவீரர்கள் தயாரானார்கள். அந்த 700 படை வீரர்களுடன் புறப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன், ஆயிஷா (ரலி) அவர்களும் உடன் சென்றார்கள்.

மரிசா என்ற இடம் பனூ முஸ்தலக் குலத்தவருக்கு மிகவும் முக்கியத்துவமான இடமாகும். இங்கிருந்து தான் இவர்களது குடிப்பு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான தண்ணீரை அவர்கள் பெற்று வந்தார்கள். இந்த முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை முன்னரே அடைந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அங்கிருந்து பனூ முஸ்தலக் கோத்திரத்தவருக்கு ஒரு செய்தியை அனுப்பி, அதில் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளும்படி அறிவித்திருந்தார்கள்.

இன்னும் இந்த அறிவிப்பின்படி, இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டால் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தப் பூமியில் வழக்கம் போல அமைதியுடனும், சுபிட்சத்துடனும் நீங்கள் வாழ்ந்து வரலாம் என்றும் தெரிவித்திருந்தார்கள்.

இதனை ஏற்றுக் கொண்டு, அமைதியான வாழ்வு வாழ்வதை விட்டு, சமவெளிப்பகுதியில் வெளிப்பட்ட அந்தக் கோத்திரத்தவர்கள் போருக்கான அறிவிப்பை அறிவித்தார்கள். இந்த நிலையில், பனூ முஸ்தலக் கோத்திரத்தவர்களில் ஒருவன் எறிந்த அம்பு ஒன்று முஸ்லிம்களில் ஒருவரது மீது பட்டவுடன், போர் வெடிக்க ஆரம்பித்தது. இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது துணைத் தளபதிகளுக்கு உத்திரவிட ஆரம்பித்தார்கள்.

தோழர்களே.., ஒவ்வொருவரும் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து செயல்படுங்கள், எதிரிகளுக்கு எந்தவித வாய்ப்பையும் அளிக்காதீர்கள். அவர்களை இங்கிருந்த தப்பித்து விடவும் விட்டு விடாதீர்கள் என்று உத்தரவிட்டார்கள்.

பத்து பனூ முஸ்தலக் கோத்திரத்தவர்கள் கொல்லப்பட்டார்கள், இன்னும் 700 பேர் கைதிகளாகப் பிடிபட்டார்கள். அன்னை ஜுவைரிய்யா (ரலி) அவர்களது கணவரான முசாஃபா பின் ஸஃப்வான் அவர்களும் கொல்லப்பட்டார்கள். பிடிபட்ட கைதிகளில் பெண்களும் இருந்தார்கள். முஸ்லிம்கள் இரண்டாயிரம் ஒட்டகங்களையும், ஐயாயிரம் ஆடுகளையும் கைப்பற்றினார்கள்.

வெற்றி பெற்று மதீனா திரும்பியவுடன், கைப்பற்றப்பட்ட பொருட்கள் முஸ்லிம்களுக்கிடையே பங்கு வைக்கப்பட்டன. அன்றைய நாளின் வழக்கப்படி, கைதிகளாகப் பிடிபட்ட ஆண்களும், பெண்களும் அடிமைகளாகப் பங்கு வைக்கப்பட்டார்கள். அதன்படி ஜுவைரிய்யா (ரலி) அவர்கள், புகழ்மிக்க நபித்தோழரான தாபித் பின் கைஸ் அன்ஸாரி (ரலி) அவர்களுக்கு அடிமையாகக் கொடுக்கப்பட்டார்கள். ஜுவைரிய்யா (ரலி) அவர்களின் அழகினால் அனைவரும் பிரமித்துப் போய் நின்றார்கள். அழகு மட்டுமல்ல, ஒரு உயர் குலத்தில் பிறந்து, அந்தக் குலத்தின் தலைவனின் மகளாக வாழ்ந்து வந்தவரும் ஆகையால், பார்ப்பதற்கு அழகாகவும், வனப்பு மிக்கவராகவும் இருந்தார்கள். இந்த நிலையில், தான் அடிமையாகக் கொடுக்கப்பட்டது குறித்து, ஜுவைரிய்யா அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் முறையீடு செய்தார்கள்.

நான் ஒரு குலத்தலைவனின் மகள், எனது போதாத நிலைமை மணிமுடி தலைகுப்புற விழுந்து, மணலில் புதைந்து போய் விட்டது. தாபித் பின் கைஸ் அவர்களிடம் நான் விடுதலையாவதற்காக தங்கத்தை மாற்றாகக் கொடுத்திருக்க வேண்டும், நான் அந்தத் தங்கத்தை எங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும்? என்று வாதிட ஆரம்பித்தார்கள். இன்னும் நான் எவ்வாறு ஒரு அடிமை வாழ்வை வாழ முடியும்? என்று அவர்கள் கேட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஜுவைரிய்யா அவர்களின் கையாலாகாத அந்த நிலையை உணர்ந்தார்கள்.

ஜுவைரிய்யா அவர்களின் நிலைமையை உணர்ந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், கேட்டார்கள்..,

உங்களது மீட்டுபுத் தொகையை நான் செலுத்தி விடும்பட்சத்தில், நீங்கள் சுதந்திரமான பெண்ணாகவும், இன்னும் எனது குடும்பத்தவர்களின் ஒருவளாகவும் ஆகச் சம்மதித்துக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். இந்த மாதிரியானதொரு கோரிக்கையை அவர் தனது கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த கோரிக்கையை நினைத்து நெஞ்சம் மகிழ்ந்த ஜுவைரிய்யா அவர்கள், உடனே அதற்குச் சம்மதித்தார்கள். அதன் பின் அவர்கள் அடிமை என்ற நிலையிலிருந்து சுதந்திரமானவராக விடுதலை செய்யப்பட்டதோடு, இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவரை மணமுடித்துக் கொண்டார்கள்.

ஜுவைரிய்யா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தியை அறிந்த நபித்தோழர்கள், மிகவும் சந்தோஷமடைந்தவர்களாக பனூ முஸ்தலக் கோத்திரத்து அடிமைகளாக தங்களிடம் இருந்தவர்கள் அனைவரையும் விடுதலையும் செய்து விட்டார்கள். இதன் மூலம், அன்னையவர்கள் சுதந்திரமான பெண்மணியாக மட்டும் மாறவில்லை, இறைநம்பிக்கையாளர்களின் தாயாகவும் ஆனார்கள். இன்னும் அன்னையவர்களின் இந்த முடிவால் அவர்களது கோத்திரத்தவர்கள் அனைவரும் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டார்கள். இதன் மூலம் அவர்களது கோத்திரத்திரத்தாருக்கு ஒரு அருட் கொடையாகவே திகழ்ந்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் முதன் முதலில் ஜுவைரிய்யா (ரலி) அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களது அழகைக் கண்டு பிரமித்துப் போனார்கள். இன்னுமொரு முறை இவ்வாறு கூறினார்கள். அவரைப் போன்றதொரு தனது குலத்தவர்களுக்கு அருட்கொடையாக வந்த ஒருவர் யார் தான் இருக்கின்றார்கள், அவரால் இறைவன் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் விடுதலையாவதற்கு அருட்கொடைகளைப் பொழிந்தான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணமுடித்துக் கொள்ளுமுன் அன்னையவர்களின் பெயர் பரா என்றிருந்ததை, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தான் ஜுவைரிய்யா என்று மாற்றினார்கள். ஸைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி), ஸைனப் பின்த் உம்மு ஸலமா (ரலி), மைமூனா பின் ஹாரித் (ரலி) ஆகியோர்களின் பெயர்களும் பரா என்றிருந்தான் இருந்தது, இவர்களது பெயர்களையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.

தனது நூலான தலால் அல் நபுவ்வா என்ற நூலில் இமாம் பைஹகி அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அன்னை ஜுவைரிய்யா அவர்கள் கண்ட கனவில், மதீனாவின் திசையிலிருந்து உதித்த சந்திரன் ஒன்று அவர்களது மடியில் இறங்குவது போலக் கனவு கண்டார்கள். இதனை அவர்கள் எவரிடமும் கூறவில்லை, அவர்களது கோத்திரத்தவர்கள் முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டு, அடிமைகளாகப் பிடிபட்ட பின்னர் தான், தனது கனவு நிறைவேறக் கூடிய நிலைமை உருவாகி இருப்பதை அன்னையவர்கள் உணர்ந்தார்கள். பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னையவர்களை விடுதலை செய்ததுடன், தானே மணமுடித்துக் கொண்டார்கள்.

சியார் ஆலம் நுபுலா என்ற தனது நூலில் இமாம் தஹபி அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களை அன்னை மணமுடிக்கும் பொழுது, அன்னையவர்களுக்கு இருபது வயது தான் ஆகி இருந்தது. மேலும், அன்னயைவர்கள் மிகச் சிறந்த அழகு மங்கையாகத் திகழ்ந்தார்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

பின் சில நாட்கள் கழித்து, விடுதலை செய்யப்பட்ட பனூ முஸ்தலக் கோத்திரத்தினரும், இன்னும் அன்னையவர்களின் தந்தையார் அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்பாகக் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விடுதலை செய்ததுடன், பின் அவர்கள் அனைவரும் மனமுவந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். இதன் மூலம், தனது கோத்திரத்தவர்களை விடுதலை செய்வதற்குக் காரணமாக இருந்ததுடன், அவர்கள் இஸ்லாத்திற்கும் கொண்டு வந்த பெருமை அன்னையவர்களைச் சாரும்.

அதிகமான தன்னுடைய நேரங்களைத் தொழுகையில் கழித்துக் கொண்டிருக்கக் கூடியவர்களாக அன்னையவர்கள் திகழ்ந்தார்கள். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பும் பொழுது அன்னையவர்கள், தொழுகையில் இருந்து கொண்டிருந்தவர்கள், பின்பு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்த பொழுதும் அன்னையவர்கள் தொழுகையிலும், பிரார்த்தனையிலும் இருந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். இதனைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நான் வீட்டை விட்டுக் கிளம்பும் பொழுதிலிருந்து நீங்கள் தொழுது கொண்டே... இருக்கின்றீர்களா? என்று கேட்டார்கள். அதற்கான பதிலை அமைதியாகச் சமர்ப்பித்த அன்னையவர்களிடம், நீங்கள் மிகச் சிறியதொரு பிரார்த்தனை ஒன்றை நான் கற்றுத் தருகின்றேன், அதனை நீங்கள் சொல்லி வருவது காலை முழுவதும் நீங்கள் தொழுது கொண்டிருப்பதை விடச் சிறந்தது என்று கூறி விட்டு, மேலே உள்ள வாக்கியத்தைப் போன்றே உள்ளதொரு அறிவிப்பு அன்னையவர்களின் பெயரில், முஸ்லிம் மற்றும் அபூ தாவூது ஆகிய நபி மொழித் தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. காலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பியதன் பின்பு, இதனை மூன்று முறை கூறும்படி எனக்குக் கற்றுத் தந்தார்கள். இதனைக் கூறுவதன் மூலம், காலை முழுவதும் நின்று தொழுவதைக் காட்டிலும் அதிகமான நன்மைகளை இறைவன் தந்தருள்வான் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக, அந்த நபிமொழியில் அன்னையவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் பதிவு செய்திருக்கின்றதொரு அறிவிப்பில், கைபர் போரில் கைப்பற்றிய பொருட்களில், அன்னையவர்களுக்கு 80 வஸக் பேரீத்தம் பழமும், இன்னும் 20 வஸக் பார்லியையும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்பு, கலீஃபாவாகப் பதவியேற்ற அபுபக்கர் (ரலி) அவர்கள், அன்னையவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்டதொரு தொகை ஒன்றை நிர்ணயித்து, அவர்கள் செலவினங்களுக்காகக் கொடுத்து வந்தார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்களது காலத்தில், மற்ற அன்னையவர்களுக்கு 12 ஆயிரம் திர்ஹம்கள் என்றும், அன்னை ஜுவைரிய்யா (ரலி) அவர்களுக்கும், அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கும் 6 ஆயிரம் திர்ஹம்கள் என்றும் பிரித்தார்கள். ஆனால் இதனை அன்னையவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். மற்றவர்கள், ஹிஜ்ரத் செய்து வந்ததன் காரணமாக இவர்களைக் காட்டிலும் இருமடங்கு அதிகப் பங்கு பெறத் தகுதியுடையவர்கள் என்று உமர் (ரலி) அவர்கள் இதற்கு விளக்கமளித்தார்கள். ஆனால், தங்களைக் காட்டிலும் மற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக அன்னையவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.

இதில் தலையிட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களது மனைவிமார்களுக்கிடையில் எந்தவித பாரபட்சத்தையும் காட்டவில்லை என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களது விளக்கத்தை அடுத்து, உமர் (ரலி) அவர்கள் தனது முடிவை விளக்கிக் கொண்டு, எல்லோருக்கும் ஒரே மாதிரியான உதவித் தொகையை வழங்கினார்கள்.

அன்னையவர்கள் தனது 65 வது வயதில் ரபிய்யுல் அவ்வல் மாதம் ஹிஜ்ரி 50ல், முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தின் பொழுது மரணமடைந்தார்கள். மதீனாவின் ஆட்சித் தலைவராக இருந்த மர்வான் பின் ஹகம் அவர்கள், அன்னையவர்களுக்கு இறுதித் தொழுகையை ஜன்னத்துல் பக்கீயில் வைத்து முன்னின்று நடத்தினார்கள்.

(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (89:27-30)



, ,