குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

18.6.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நோன்பிலிருந்து விலக்குப் பெற்றவர்கள்
almighty-arrahim
நோன்பிலிருந்து விலக்குப் பெற்றவர்கள்

நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்றாலும் சிலர் நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.இந்த விதிவிலக்கு நிரந்தர விதிவிலக்கு, தற்காலிக விதிவிலக்கு என இரு வகைகளாக உள்ளன.
     
தற்காலிகமான விதிவிலக்குப் பெற்றவர்கள் ரமளான் மாதத்தில் நோன்பை விட்டு விட்டு வேறு மாதங்களில் நோன்பு நோற்று விட வேண்டும்.

நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள் வேறு மாதங்களில் கூட அதை நிறைவேற்றத் தேவையில்லை.
1. தள்ளாத வயதினர்

இவர்கள் நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள். முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலையில் உள்ளதால் எதிர்காலத்தில் நோன்பைக் களாச் செய்ய இவர்களால் இயலாது. ஏனெனில் எதிர்காலத்தில் மேலும் அதிக முதுமையில் இவர்கள் இருப்பார்கள்.

இவர்கள் நோன்பை விட்டு விடலாம்.

ஆரோக்கியமான காலகட்டத்தில் அவர்கள் தொடர்ந்து நோன்பைக் கடைப்பிடித்து வந்திருந்தால் தள்ளாத வயதில் நோன்பு நோற்காதிருந்தாலும் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டோம். அப்போது நபியவர்கள், மதீனாவில் சிலர் உள்ளனர். உங்களின் கூலியில் அவர்களும் பங்காளிகளாக உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களை (போருக்கு வரவிடாமல்) தடுத்து விட்டது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 2839, 4423

இறைவன், அடியார்கள் விஷயத்தில் எவ்வளவு கருணையுடையவன் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. முதுமையின் காரணமாக நோன்பை விட்டு விட்டார்கள் என்றால் அவர்களது நல்ல எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் கூலி வழங்குவான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

முதுமை என்பதை வயது சம்பந்தப்பட்டதாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. சிலர் எண்பது வயதிலும் திடகாத்திரமாக இருப்பார்கள். வேறு சிலர் அறுபது வயதிலேயே தளர்ந்து விடுவார்கள். முதுமையுடன் நோன்பு நோற்க இயலாத நிலையும் சேர்ந்தால் தான் அவர்களுக்கு விதிவிலக்கே தவிர குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் விதிவிலக்கு இருப்பதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.
2. நோயாளிகள்

நோயாளிகளிலும் இரண்டு வகையினர் உள்ளனர். கேன்சர் போன்ற தீராத நோய் உடையவர்களும் இருப்பார்கள். நிவாரணம் பெறக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்களும் இருப்பார்கள்.

தீரக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்கள் நோன்பை விட்டு விட்டு, நோய் தீர்ந்தவுடன் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்று விட வேண்டும்.

நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
அல்குர்ஆன் 2:184

நோயுற்றவர்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளாமல் அல்லாஹ் வழங்கிய சலுகையை ஏற்றுச் செயல்பட வேண்டும்.

நோன்பு வைப்பதால் மரணம் வரும் அல்லது இருக்கின்ற நோய் அதிகரிக்கும் என்ற நிலையில் நோன்பு நோற்றால் அவர்களின் செயல் இறைவனிடம் நன்மையாகப் பதிவு செய்யப்படாது. அதிகப் பிரசங்கித் தனமாகத் தான் கருதப்படும்.

இது தான் உயர்ந்த நிலை என்றால் அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்லியிருப்பார்கள்.

பயணம் செய்வோர் வேறு மாதங்களிலும் நோற்கலாம் என்று கூறியது போல் நோயாளிகள் விஷயத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை.

தீராத நோய்களுக்கு ஆளானவர்கள் இன்னொரு நாளில் நோற்க இயலாது. ஏனெனில் தீராத நோய் மேலும் அதிகப்பட்டிருக்கும். எனவே இவர்கள் நோன்பை விட்டு விடலாம்.
3. பயணிகள்

பயணிகளுக்கும் அல்லாஹ் சலுகை வழங்கியுள்ளான்.

நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

அல்குர்ஆன் 2:184

இந்தச் சலுகை தற்காலிகமானது தான். ஏனெனில் பயணங்கள் சில நாட்களில் முடிந்து விடக் கூடிய ஒன்றாகும்.

பயணிகளுக்குச் சலுகை வழங்கப்பட்டது குறித்து விரிவான பல செய்திகள் உள்ளன. அவற்றையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பயணிகள் என்றால் ரயிலிலோ, பேருந்திலோ சென்று கொண்டிருப்பவர் மட்டும் தான் என்று புரிந்து கொள்ளக் கூடாது. இவர்களும் பயணிகள் தான் என்றாலும், இன்னும் பலரையும் பயணிகள் பட்டியலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சேர்த்துள்ளார்கள்.

ஒருவர் சொந்த ஊரிலேயே இருக்கிறார். நாளை காலை பத்து மணிக்கு வெளியூர் செல்வதாகத் தீர்மானிக்கிறார். இவரும் பயணி என்ற வட்டத்திற்குள் வந்து விடுவார்.

பழைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூபுஸ்ரா என்ற நபித்தோழருடன் கப்பலில் ஏறினேன். அப்போது காலை உணவைக் கொண்டு வரச் செய்தார்கள். என்னையும் அருகில் வரச் சொன்னார்கள். அப்போது நான், நீங்கள் ஊருக்குள் தானே இருக்கிறீர்கள்? (ஊரின் எல்லையைக் கடக்கவில்லையே) என்று கேட்டேன். அதற்கவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை நீர் புறக்கணிக்கப் போகிறீரா? என்று திருப்பிக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: உபைத் பின் ஜப்ர்

நூல்கள்: அஹ்மத் 25974, அபூதாவூத் 2059

ஒருவர் ஊரின் எல்லையைத் தாண்டாவிட்டாலும், பயணத்திற்கு ஆயத்தமாகி விட்டாலே அவரும் பயணியாகி விடுகின்றார். பயணிகளுக்குரிய சலுகையை அவரும் பெற்றுக் கொள்கிறார் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் நோன்பு நோற்றவராக இருக்கும் போது பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. வைத்த நோன்பை முறித்து விட இவருக்கு அனுமதி உண்டு. இதனால் எந்தக் குற்றமும் ஏற்படாது.

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். அவர்களுடன் சென்ற மக்களும் நோன்பு நோற்றிருந்தார்கள். குராவுல் கமீம் என்ற இடத்தை அடைந்த போது, நோன்பு மக்களுக்குச் சிரமமாக உள்ளதால் உங்கள் முடிவைத் தான் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நபியவர்களிடம் கூறப்பட்டது. அஸர் தொழுகைக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரச் செய்தார்கள். மக்கள் பார்க்கும் விதமாக அருந்தினார்கள். அதைக் கண்ட சிலர் நோன்பை விட்டனர். வேறு சிலர் நோன்பைத் தொடர்ந்தனர். சிலர் மட்டும் நோன்பைத் தொடர்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்த போது,அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1878

ரமளான் நோன்பை நோற்ற பின் பயணம் மேற்கொண்டால் அந்த நோன்பை முறிக்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த ஹதீஸ் அவர்களின் கருத்துக்கு எதிராக நிற்கின்றது. இதனால் அவர்கள் இந்த ஹதீசுக்குப் புதுமையான ஒரு விளக்கம் தந்து தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொண்ட பின் (பயணத்திலேயே) நோன்பு நோற்றிருப்பார்கள். பயணத்தில் நோற்ற நோன்பு என்பதால் தான் முறித்தார்கள். மதீனாவிலேயே நோற்ற நோன்பு என்றால் அதை முறித்திருக்க மாட்டார்கள் என்பது தான் இவர்களின் விளக்கம். இந்த விளக்கம் முற்றிலும் தவறாகும்.

ஹதீஸின் ஆரம்பத்தைக் கவனித்தால் நோன்பு வைத்தவர்களாகத் தான் புறப்பட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இடையில், வழியில் நோன்பு நோற்றார்கள் என்று கூறுவதற்கு இந்த ஹதீஸின் துவக்கம் இடம் தரவில்லை.

மேலும் குராவுல் கமீம் என்ற இடம் மதீனாவுக்கு அருகில் உள்ள இடமாகும். மதீனாவிலிருந்து புறப்பட்டு இரவில் தங்கி விட்டு, மறுநாள் அடையும் தொலைவில் குராவுல் கமீம் என்ற இடம் அமைந்திருக்கவில்லை. காலையில் புறப்பட்டு அஸர் நேரத்தில் வந்து சேர்ந்து விடக் கூடிய அளவுக்கு அருகில் தான் உள்ளது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பாளியாகத் தான் புறப்பட்டார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாததாகும்.

எனவே பயணத்தில் நோற்ற நோன்பாக இருந்தாலும், அல்லது ஊரில் நோன்பு நோற்று விட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும் இரண்டு நோன்பையும் முறித்து விட அனுமதி இருக்கிறது என்பதே சரியான கருத்தாகும்.
பயணத்தில் நோன்பை விட்டு விடுவது அனுமதிக்கப்பட்டதா? அல்லது கண்டிப்பாக விட்டு விட வேண்டுமா?

மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில், நோன்பை முறிக்காத மக்களைப் பற்றி குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பயணத்தில் நோன்பைக் கட்டாயம் முறித்தாக வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இவ்வாறு வாதம் புரிவதற்கு ஏற்ற வகையில் அந்த ஹதீஸ் அமைந்திருப்பது உண்மை தான். ஆயினும் வேறு பல சான்றுகளைக் காணும் போது அவ்வாறு கருத முடியாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நான் பயணத்தில் நோன்பு நோற்கலாமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஹம்ஸா பின் அம்ர் (ரலி) கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்! விரும்பினால் நோன்பை விட்டு விடு என விடையளித்தார்கள்.
 அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1943

நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் பயணத்தில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், நாங்கள் நோன்பு நோற்றவர்களாக மக்காவை நோக்கிப் புறப்பட்டோம். ஒரு இடத்தில் இளைப்பாறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் எதிரிகளை நெருங்கி விட்டீர்கள். எனவே நோன்பை விடுவதே உங்கள் உடலுக்குப் பலமாக இருக்கும் என்று கூறினார்கள். (விட்டு விடுங்கள் என்று கட்டளையாகக் கூறாததால்) இதைச் சலுகையாகக் கருதிக் கொண்டோம். சிலர் நோன்பு நோற்றோம். வேறு சிலர் நோன்பை விட்டு விட்டோம். பின்னர் மற்றோர் இடத்தில் இளைப்பாறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விடிந்தால் நீங்கள் எதிரிகளைச் சந்திக்கவுள்ளீர்கள். நோன்பை விடுவதே உங்கள் உடலுக்குப் பலம் சேர்க்கும். எனவே நோன்பை விட்டு விடுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் கட்டளையிட்டதால் இப்போது அனைவருமே நோன்பை விட்டு விட்டோம். இதன் பிறகு (பல சந்தர்ப்பங்களில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றவர்களாகப் பயணம் செய்துள்ளோம் என்று விடையளித்தார்கள்.கஸ்ஆ முஸ்லிம் 1888

நோன்பை முறிக்காதவர்களைக் குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பயணத்தின் போது கூறினார்களோ அதே பயணத்தின் தொடர்ச்சியைத் தான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) விளக்குகின்றார்கள். இதன் பிறகு பல பயணங்களில் நாங்கள் நோன்பு நோற்றுள்ளோம் என்று கூறுகிறார்கள்.

பயணத்தில் நோன்பு நோற்பது குற்றமென்றால் இதன் பிறகு நபிகள் நாயகத்துடன் மேற்கொண்ட பயணங்களின் போது நோன்பு நோற்றிருக்க மாட்டார்கள். மேலும் இந்தப் பயணத்தின் தொடர்ச்சியிலேயே நபித்தோழர்களில் சிலர் நோன்பு நோற்றுள்ளனர் என்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெரிய வருகிறது.

பயணத்தில் நோன்பை விடுவது சலுகை தானே தவிர கட்டாயமில்லை என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

அப்படியானால் நோன்பை விடாதவர்களைக் குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் கூற வேண்டும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் செய்து அனைவருக்கும் அதைக் காட்டி விட்டு அருந்தியுள்ளார்கள். இதைக் கண்ட பிறகு உடனே அதைப் பின்பற்றுவது தான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். நான் ஒரு செயலைச் செய்து காட்டிய பிறகும் அதற்கு மதிப்பளிக்காவிட்டால் அந்த வகையில் அவர்கள் குற்றவாளிகள் தான் என்ற கருத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும். இப்படிக் கருதுவது தான் நாம் எடுத்துக் காட்டிய மற்ற ஹதீஸ்களுடன் மோதாமல் இருக்கும்.

பயணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உள்ளது. எனவே (நோன்பு நோற்பது) குற்றமாகுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அது அல்லாஹ்வின் சலுகையாகும். யார் அச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே! யார் நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் மீது குற்றமில்லை என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஹம்ஸா பின் அம்ரு (ரலி) நூல்: முஸ்லிம் 1891

பயணத்தில் நோன்பை விட்டு விடுவது தான் சிறப்பானது என்று இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

பயணத்தில் நோன்பு நோற்கவே கூடாது என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்த போது ஒரு இடத்தில் மக்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டார்கள். அங்கே ஒரு மனிதருக்கு நிழல் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இது என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இவர் நோன்பு வைத்திருக்கிறார் என்று மக்கள் விடையளித்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பயணத்தில் நோன்பு நோற்பது நல்ல காரியங்களில் அடங்காது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 1946

அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தை, மிகச் சிறந்த காரியமாகக் கருதியதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) மறுத்தார்கள் என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாம் எடுத்துக் காட்டிய பல ஹதீஸ்களுடன் இது முரண்படும் நிலை ஏற்படும்.

ஒருவர் பயணம் மேற்கொண்டு வேறு ஊரில் சில நாட்கள் தங்குகிறார். தங்கும் காலத்தில் அவர் பயணத்தை மேற்கொள்ளாவிட்டாலும் வெளியூரில் இருப்பதால் அவரும் பயணிக்குரிய சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நிகழ்ச்சியின் போது நோன்பு நோற்றவர்களாகப் போருக்கு ஆயத்தமானார்கள். கதீத் எனும் நீரோடையை அடைந்த போது நோன்பை விட்டார்கள். பின்னர் அம்மாதம் (ரமளான்) முடியும் வரை நோன்பை விட்டு விட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 4275, 4276

ரமளான் மாதம் பிறை 20ல் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. எஞ்சிய பத்து அல்லது ஒன்பது நாட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலேயே தங்கியிருந்தும் நோன்பு நோற்கவில்லை. எனவே வெளியூர் பயணம் மேற்கொண்டவர்கள் வெளியூரில் இருக்கும் வரை நோன்பை விட்டு விட அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் விடுபட்ட நோன்பைப் பின்னர் நோற்றுவிட வேண்டும்.
4. மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் நோன்பை விட்டு விடச் சலுகை பெற்றுள்ளனர். சலுகை மட்டுமின்றி மாதவிடாய் நேரத்தில் நோன்பைக் கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்றும், விடுபடும் நோன்பை வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 508

மாதவிடாய்க் காலம் என்பதைப் பற்றிப் பெரும்பாலான பெண்கள் தவறாகவே விளங்கி வைத்துள்ளனர். மாதவிடாய் என்பது உடற்கூறு, வாழ்கின்ற பிரதேசம், உணவுப் பழக்கம், வயது ஆகியவற்றைப் பொறுத்து வித்தியாசப்படும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கணக்கில் மாதவிடாய் வெளிப்படாது.

சில பெண்களுக்கு ஓரிரு நாட்களிலேயே மாதவிடாய் ஏற்பட்டு நின்று விடும். இவர்கள் மாதவிடாய் நின்றவுடன் நோன்பு நோற்க வேண்டும். இன்னும் ஒரு வாரம் ஆகவில்லையே என்றெல்லாம் நினைக்கக் கூடாது.

அது போல் சில பெண்களுக்குப் பதினைந்து நாட்கள் கூட மாதவிடாய் நீடிக்கலாம். அவர்கள் பதினைந்து நாட்களும் நோன்பை விட்டு விட வேண்டும். இந்த விஷயத்தில் பல பெண்கள் அறியாமையிலேயே உள்ளனர்.

மேலும் பெண்களிடம் இன்னொரு அறியாமையும் உள்ளது.

புனிதமிக்க ரமளான் மாதத்தில் நோன்பை விடக் கூடிய நிலைமை ஏற்படுகிறது என்று எண்ணி மாதவிடாயைத் தள்ளிப் போடச் செய்யும் மாத்திரைகளை சில பெண்கள் உட்கொள்கிறார்கள். ஹஜ்ஜின் போதும் இது போன்று நடந்து கொள்கிறார்கள்.

அல்லாஹ் பெண்களுக்கு இயற்கையாக வழங்கியுள்ள தன்மையை மாற்றுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தராது என்பதை இவர்கள் உணர வேண்டும். மாதவிடாய் என்பது அல்லாஹ் செய்த ஏற்பாடாகும். ரமளானில் சில நாட்கள் தவறி விடுவதால் ஆண்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் பெண்களுக்குக் குறைந்து விடாது. விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் களாச் செய்து விடும் போது புனித ரமளானில் நோன்பு நோற்ற அதே நன்மையை இவர்களும் அடைவார்கள்.

அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதளவும் தீங்கு இழைக்க மாட்டான். மாறாக மனிதர்கள் தமக்கே தீங்கு இழைக்கின்றனர்.
அல்குர்ஆன் 10:44

அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.
அல்குர்ஆன் 4:40

மாதவிடாயை அவனே ஏற்படுத்தி விட்டு, அந்தக் காலத்தில் நோன்பு நோற்க வேண்டாம் என்று அவனே கட்டளையிட்டு விட்டு, அவர்களின் கூலியை அவனே குறைப்பான் என்பது இறைவன் விஷயத்தில் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாததாகும்
5. கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் சலுகை உண்டு

குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாக நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர்.

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: நஸயீ 2276

இவர்கள் ரமளானில் நோன்பை விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்று விட வேண்டும்.
விடுபட்ட நோன்பை களாச் செய்வது எப்போது?

மேற்கண்ட சலுகைகளைப் பெற்றவர்கள் விடுபட்ட நோன்பை எவ்வளவு நாட்களுக்குள் களாச் செய்ய வேண்டும்?

இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக் கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.

ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 1950

ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இது நடந்துள்ளதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

விடுபட்ட நோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

ஆயினும் மரணத்தை எதிர் நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்.

நோன்பு -
ஆசிரியர் பீ.ஜைனுல் ஆபிதீன்
, ,