குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

18.9.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கணவன் அமைவது
almighty-arrahim.blogspotcom
ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது என்பது, இனி உங்களது முழு உலகமும் அவள் தான் என்றாகி விடுகின்றது.
நீங்கள் மரணமடையும் காலம் வரைக்கும் அவள் தான் உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய பங்காளியாகவும், உங்களது தோழமைக்குரியவளாகவும், இன்னும் சிறந்த நண்பியாகவும் அவள் உங்களுடன் வலம் வரப் போகின்றாள்.
அவள் உங்களது ஒவ்வொரு நிமிடத்தையும், மணி நேரத்தையும், நாளையும், மாதத்தையும், ஏன் முழு வாழ்நாளையும் பகிர்ந்து கொள்ள வருகின்றாள். உங்களது இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்ள வருகின்றாள், உங்களது வெற்றியிலும் தோல்வியிலும் அவள் பங்கெடுத்துக் கொள்கின்றாள், நீங்கள் கனவு காணும் பொழுது அதனை நனவாக்கவும், நீங்கள் அச்சப்படும் பொழுதும் ஆறுதல் கூறவும் அவள் விரைகின்றவளாக இருப்பாள்.
நீங்கள் நோய்வாய்படுகின்றீர்கள் என்று சொன்னால், உங்களது வலியும் வேதனையும் அவளையும் நோவினைக்கு உள்ளாக்குகின்றது. ஒரு தாதியைப் போல ஏன் அவளை விடவும் அதிக உரிமை எடுத்து உங்களுக்குச் சேவகம் செய்ய விரைகின்றவள் அவள் தானே..!
உங்களுக்கு ஒரு உதவி தேவைப்படுகின்றதென்றால், உதவுவதற்காக விரைகின்ற முதல் நபர் அவளாகத் தானே இருப்பாள். அவளால் எந்த அளவு முடியுமோ அதுவரைக்கும் உதவக் கூடியவளாகவும், அதில் தன்னலம் கருததாதவளாகவும் இருக்கின்றவள் அவள் தானே..!
உங்களைப் பற்றி ரகசியம் ஒன்று உண்டென்றால், அவளைத் தவிர வேறு யாரால் அதனைப் பாதுகாக்க முடியும். இன்னும் உங்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை தேவைப்படுகின்றதெனில், அவளது ஆலோசனைகள் உங்களது வருங்காலத்தைக் கணக்கில் கொண்டு மிகச் சிறப்பான ஆலோசனையை அவளால் தானே வழங்க முடியும்.
அவள் எப்பொழுதும் உங்களைத் தொடரக் கூடியவள், உங்களுடனேயே இருக்கக் கூடியவள். நீங்கள் கண் விழிக்கும் பொழுது, காலையில் நீங்கள் பார்க்கும் முதல் நபர் அவளாகத் தானே இருப்பாள், இரவிலும் பகலிலும் உங்களது உணர்வுகளுடன் உறவாடி வரக் கூடியவளும், நீங்கள் அவளைப் பிரிந்திருந்தாலும், அவளது உடல் தான் பிரிந்திருக்குமே ஒழிய உள்ளம் உங்களுடன் தானே ஒட்டிக் கொண்டிருக்கும்.
அவள் எப்பொழுதும் உங்களைப் பற்றிச் சிந்திக்கக் கூடியவளாக, உங்களுக்காக உடலாலும் மனதாலுமு;, ஆன்மாவாலும் பிரார்த்திக்கக் கூடியவளாகவும், இன்னும் நீங்கள் படுக்கைக்குச் செல்லும் முன் இறுதியாக உங்களது கண்கள் பார்க்கக் கூடியதும், அவளாகத் தானே இருக்கும். இன்னும் நீங்கள் உறங்கினாலும் உங்கள் கனவுகளில் கூட உங்களைத் தொடரக் கூடியவளும் அவள் தானே.
சுருங்கச் சொன்னால், அவள் தான் உங்களது முழு உலகமுமே.., நீங்கள் தான் அவளது முழு உலகமும்..!
இறைவனது திருமறையாம் குர்ஆனைப் போல கணவன் மனைவியினுடைய உறவை வர்ணிக்கக் கூடியதொரு வார்த்தையை நான் கண்டதில்லை. இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; (2:187)
நிச்சயமாக, தம்பதிகள் இருவரும் ஒருவர் மற்றவருக்கு ஆடை தானே, ஆடையானது ஒருவரை எவ்வாறு பாதுகாக்கின்றதோ அதனைப் போலவே..! ஏனெனில் ஆடையானது பாதுகாப்பு வழங்குகின்றது, அவனுக்கு இதத்தைத் தருகின்றது, அவனைப் போர்த்திக் கொள்கின்றது, அவனுக்கு உதவிகரமாக இருக்கின்றது, அவனுக்கு அழகையும் கொடுக்கின்றது, மனிதன் என்ற உயர்ந்த அந்தஸ்தையும் கொடுக்கின்றது.
சற்றுச் சிந்தித்துப் பாருங்கள், பனிபடர்ந்த அந்த அலாஸ்கா பெருவெளியில் நீங்கள் ஆடையின்றி உலாவ முடியுமா? அந்த அலாஸ்காவில் உலா வருகின்ற ஒருவனுக்கு ஆடையானது எந்தளவு பாதுகாப்பையும், இதத்தையும் வழங்கி, அவனுக்கு உதவிகரமாக இருப்பது போலவே ஒரு கணவனுக்கு அமைகின்ற மனைவியும் அத்தகைய தன்மைகளை வழங்கக் கூடியவளாக இருக்கின்றாள்.
ஒரு கணவனுக்கும் இன்னும் மனைவிக்கும் இடையே உள்ள உறவானது மனித நாகரீகத்தில் உள்ள மற்ற உறவுகளை விட மிக்க மேலானது. அன்பும், பாசமும், நெருக்கமும், கருணையும், இன்னும் உங்களுடன் இருக்கும் பொழுது அவள் அடைகின்ற பரவசமிக்க உணர்வுகளை வார்த்தைகளால் வடித்து விட முடியாது. மனிதனால் ஓரளவே அந்த உணர்வுகளை வகைப்படுத்த முடியும். ஆனால் நம்மைப்படைத்த இறைவன் அதனை இவ்வாறு நமக்கு விளக்கிக் காண்பிக்கின்றான் :
அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; (16:72)
படைத்த வல்லோனாம் அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலாவினால் மட்டுமே தம்பதிகளிடையே இத்தகைய நெருக்கத்தையும், உணர்வுப்பூர்வமான அதிசயக்கத்தக்க அன்பையும் வழங்கி, தனது கருணையை அவர்கள் மீது பொழிய முடியும்.
இன்னும் இறைவன் தனது திருமறையில் கூறுகின்றான், வானங்களிலும், பூமியிலும் இறைவன் இருக்கின்றானா என்ற அத்தாட்சியை நீங்கள் தேடக் கூடியவர்களாக நீங்கள் இருந்தால், உங்கள் மனைவியர்களின் இதயத்தில் நான் விதைத்து வைத்திருக்கின்ற உணர்வுகளை ஆராய்ந்து பாருங்கள், அங்கும் உங்களுக்கு அத்தாட்சிகள் விரவிக் கிடக்கின்றன என்று கூறுகின்றான் :

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)
மனிதர்களது மனது என்பது நிலையானதல்ல என்பதை இறைவன் அறிந்தவன், மனிதர்களது மனமானது அடிக்கடி மாறக் கூடியது, அது வாழும் நாளில் பல நேரங்களில் பலவீனங்களைச் சந்திக்கக் கூடியது. அதில் உலா வரக் கூடிய உணர்வுகள் நேரத்திற்கு நேரம் மாற்றமடையக் கூடியது. இருவருக்குமிடையே இருக்கின்ற பரஸ்பர அன்பானது சில நேரங்களில் மிகுதியாகவும், சில நேரங்களில் வெறுமையாகவும் காணப்படும். உறவுகளைச் சரிவரப் பேணவில்லை என்றால், ஊடல்கள் மழிந்து திருமண உறவில் விரிசல் ஏற்படக் கூடும். எனவே, அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். திருமணம் செய்து விட்டவுடன் தம்பதிகளின் வாழ்வில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கி விடும் என்று உறுதியாகக் கூற முடியாது, இறுதி வரை மகிழ்ச்சி உங்களது இல்லத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்றால், தம்பதிகள் இருவருடைய பரஸ்பர ஒத்துழைப்பினால் மட்டுமே அது சாத்தியமாகும். ஒரு மரமானது செழிப்பாக வளர வேண்டுமெனில், அது ஊண்றப்பட்டிருக்கின்ற மண் செழிப்பாக இருக்க வேண்டும், முறையான பராமரிப்புடன், தண்ணீர் மற்றும் உரங்களையும் சரியான விகிதத்தில் வழங்கினால் அந்த மரம் செழிப்பாக வளர்வதோடு, எதிர்பார்க்கின்ற பலனையும் கொடுக்கும். அது போலத் தான் குடும்ப அமைப்பும்..!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவிமார்களுடன் எத்தகைய வாழ்வை வாழ்;ந்திருக்கின்றார்கள் என்பதை அறிவீர்களா?! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பிரியத்திற்குரிய மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் ஓட்டப்பந்தயம் நடத்தியுள்ளார்கள். ஒருமுறை பாலைவனப் பகுதிக்கு தன்னுடைய குடும்பத்தினர்களுடன் சென்ற இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் வெற்றி பெற்றார்கள். இன்னுமொரு முறை இருவருக்கிமிடையே நடந்த ஓட்டப்பந்தயத்தில், அன்னையவர்கள் அதிக எடை போட்டதன் காரணமாக, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த முறை வெற்றி பெற்றார்கள்.
அறிந்து கொள்ளுங்கள்..! ஒருமுறை எத்தியோப்பிய நாட்டு வீரர்கள் வீர விளையாட்டு விளையாடிய பொழுது, அதனைக் காண தனது மனைவியர்களுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சென்றுள்ளார்கள்.
அவர்கள் மீது கணவன் காட்டுகின்ற அன்பு, இன்னும் நான் உன் மீது அன்பு வைத்திருக்கின்றேன் என்று அவர்களுக்கு உணர்த்தும் பொழுது, இருவருக்குமிடையே உள்ள உறவில் விரிசல் விழுவது தவிர்க்கப்படுகின்றது. கணவனாகிய நீங்கள் அவள் மீது காட்டுகின்ற பாசத்திற்கும், நேசத்திற்கும் கூட இறைவன் உங்களுக்கு நற்கூலி வழங்குகின்றான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :
அல்லாஹ்வினுடைய திருப் பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி ஒருவர், தனது மனைவிக்கு ஒரு கவளம் உணவு ஊட்டினாலும், அதற்காக அவர் வெகுமதி அளிக்கப்படுவார்.
மனைவியின் வாயில் ஒரு கவள உணவை ஊட்டுவது கூட நன்மையைப் பெற்றுத் தருமா என நீங்கள் மிகவும் மலிவாகக் கருதி விடாதீர்கள். அவளுக்காக அவள் பயணம் செய்யக் கூடிய கார்க் கதவைத் திறந்து விட்டு அவளை உட்கார வைப்பது கூட உங்களுக்கு நன்மையைப் பெற்றுத் தரக் கூடியதே..!
ஒட்டகத்தில் ஏறுவதற்காக தனது மனைவிமார்களுக்கு தனது பாதத்தை ஒட்டகத்திலிருந்து இறக்கிக் கொடுத்து, அவர்கள் ஒட்டகத்தில் மீது ஏறிக் கொள்வதற்கு உதவி இருக்கின்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.
தொழுகையில்..! நீங்கள் வீட்டில் அமர்ந்து தொழக் கூடிய சந்தர்ப்பங்களில் இருவரும் ஒரே நேரத்தில் தொழ முயற்சி செய்யுங்கள். இறைவன் முன்னிலையில் நீங்கள் இணைந்து நிற்பது உங்களது உறவுக்கு சாட்சியாக இருப்பதோடு, உங்களது நெருக்கத்தையும் அது இறுக்கமாக்கி வைக்கும். அல்லாஹ்வின் அருட்கொடைகளின் காரணமாக, உங்களது இல்லத்தில் அருட்கொடைகளும் அமைதியும் பூத்துக் குலுங்கும்.
அறிந்து கொள்ளுங்கள்..! தம்பதிகளில் யார் இரவுத் தொழுகைக்கு எழுந்து தொழுகின்றார்களோ, அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நற்செயதி வழங்கியிருக்கின்றார்கள். இன்னும் தம்பதிகள் இருவரில் யாராவது ஒருவர் முதலில் எழுந்து, மற்றவரை எழுப்ப வேண்டும் என்றும், இயலவில்லை எனில் அவள் அல்லது அவர், ஒருவர் மற்றவரின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாவது எழுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.
கணவன்மார்களே..! உங்களது மனைவியுடன் எப்பொழுது சொல்லாலும், செயலாலும் நல்ல மனிதராகத் திகழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
அவளுடன் இதமாகப் பேசுங்கள், சிரித்து மகிழுங்கள், அவளுடைய ஆலோசனையைக் கேட்டுப் பெறுங்கள், அவளது கருத்தையும் செவி தாழ்த்திக் கேளுங்கள், முடியுமானவரை உங்களது நேரங்களில் ஒரு பகுதியை அவளுக்காகவே ஒதுக்கி அவளுடன் தனித்திருங்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களின் மனைவியரிடத்தில் சிறந்தவர் தான்'', என்று கூறியுள்ளார்கள்.
இறுதியாக, பொதுவாக ஒருவர் மற்றவரிடம் நான் இறுதிவரை உன் மீது அன்பு செலுத்துவேன், மரணம் தான் நம்மைப் பிரிக்கவல்லது என உறுதிப் பிரகடனம் செய்து கொள்வது நல்லது. இந்த உறுதிப்பிரகடனத்தைச் செய்து கொள்வது நல்லது என்பதை விட அது மிகச் சிறந்தது, இது கூட நீங்கள் ஒருவர் மற்றவர்மீது அன்பு செலுத்தவதற்குப் போதாது என்று கூடச் சொல்லுவேன். அதனை நீங்கள் முழுமைப்படுத்த வேண்டுமென்றால், அவள் எதன் மீது அன்பு வைத்திருக்கின்றாளோ அதன் மீது நீங்களும் அன்பு செலுத்தாத வரை, உங்களது பிரகடனம் முழுமை பெறாது.
அவள் அன்பு செலுத்துகின்ற அவளது குடும்பத்தின் மீது நீங்கள் அன்புடையவராக இருக்க வேண்டும். இன்னும் உங்களது வீட்டிற்கு விருந்தாளியாக வருகை தரக் கூடிய அவளுடைய குடும்பத்தவர்களை புறக்கணிக்கக் கூடிய, உதாசினமாக நினைக்கக் கூடிய அநேகமானவர்களைப் போல நீங்களும் ஆகி விடாதீர்கள். உனது குடும்பத்தவர்களையும் எனக்குப் பிடிக்கவில்லை, ஏன் உன்னையும் பிடிக்கவில்லை என்று கூறக் கூடிய மோசமான நபர்களைப் போல நீங்களும் ஆகி விடாதீர்கள்.
ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள நேசத்தைப் பிரிக்கவல்லது மரணமே..! என்று நினைப்பது கூட தவறானது, ஏனெனில் நாம் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையின் மீது இறைவிசுவாசம் கொண்டுள்ளவர்கள். மரணம் என்பது இந்த உலக வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளியாக இருக்கலாம், ஆனால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள நேசத்திற்கு முடிவு என்பதே கிடையாது என்பதை இறைவசனம் இவ்வாறு மெய்ப்பிக்கின்றது :
நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). (43:70)
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்குமிடையே நிலவிய அன்பும் பாசமும் 25 வருடங்களாக அறுந்து விடாத நூலைப் போலத் தொடர்ந்தன, அவர்கள் விரும்பியதையே, அண்ணலார் (ஸல்) அவர்களும் விரும்பியவர்களாகவும், இன்னும் அண்ணலார் (ஸல்) அவர்கள் விரும்பியதையே அன்னையும் விரும்பியவர்களாகவும் அவர்களது வாழ்க்கைப் பயணம் இனிமையாகவும், அன்பாகவும், இதமாகவும் சென்றது.
இந்த உறவுப் பயணம் அன்னையவர்களின் மரணத்திற்குப் பின்பும் தொடர்ந்தது. எப்பொழுதெல்லாம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆடு அறுக்கின்றார்களோ, அப்பொழுதெல்லாம் அதில் ஒரு பகுதியை எடுத்து, அன்னை கதீஜா (ரலி) அவர்களது குடும்பத்தினர்களுக்கு கொடுத்து விடக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இன்னும் எப்பொழுதெல்லாம் அண்ணலார் (ஸல்) அவர்களின் வீட்டுக் கதவருகே, விருந்தினர் வந்திருக்கக் கூடியதை அறிவார்களோ அப்பொழுதெல்லாம் வந்திருக்கக் கூடியவர், அன்னை கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி ஹாலா (ரலி) அவர்களாக இருக்கக் கூடாதா? என்று நினைத்து, இறைவா! வந்திருக்கக் கூடிய விருந்தினர் ஹாலாவாக இருக்கட்டும் என்று பிரார்த்தனை புரியக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.
எனவே, சகோதரர்களே..!
இல்லம் என்னும் நல்லறம் தழைக்க பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, குடும்பம் என்னும் பூங்காவில் எப்பொழுதும் இனிமை எனும் பூக்கள் பூத்துக் குலுங்க, இருவரும் ஒத்துழைப்போமாக!

அதற்கு வழித்துணையாக இஸ்லாம் எனும் கயிற்றைப் பற்றிப் பிடிப்போமாக..!


,
, ,