குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

8.5.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தாயின் காலடியில் சுவர்க்கம்
almighty-arrahim.blogspot.com
ஆம்புலன்ஸிலிருந்து
அம்மாவை இறக்கி
ஆஸ்பத்திரியில்
சேர்த்துவிட்டு
காத்திருக்கலானேன்

சமீபகாலமாக
அவசர மருத்துவ உதவி
அடிக்கடி
அம்மாவுக்குத் தேவைப்படுகிறது

சுத்தம் செய்து
உடைகளைச் சரிசெய்து
வேதனை எதையும்
வெளிப்படுத்தாத
அம்மாவின் முகத்தைக் கண்டு
கலங்கி
செய்வதறியாது
இப்படி கொண்டு வந்து சேர்த்த பிறகே
ஆசுவாசப்பட முடியும்

உடல் வேதனையைவிட
கொடிய நோய் மறதி

பெற்று வளர்த்தப்
பிள்ளைகளைக்கூட
ஒரு நூலிழை தொடுப்பிலேயே
ஞாபகம் வைத்துக் கொள்ளும்
மறதி நோய்
முதுமையின் கொடுமைகளில் தலையாயது

படர்கை முற்றிலும் மறந்துவிட
தன்மையும் முன்னிலையும்கூட
தெட்டுத் தெறித்தே
நினைவில் வர
அயர்ச்சியான பார்வையில்
தெளிவில்லாத
தேடல் தவிக்கும்

அடித்துச் செல்லும்
வெள்ளத்தில்
கைகளால்
காற்றில் துலாவியபடி
இழுத்துச்செல்லப்படும் முதுமை
ஒரு
மரக்கிளையளவு ஞபகத்திற்காக
பரிதவிக்கும்

அம்மாவைப் பரிசோதித்த
மருத்துவர்
சோடியம் குறைபாட்டைச்
சுட்டிக்காட்டி மறதிநோயை
நியாயப்படுத்தி
அம்மாவைப் பார்க்க அனுமதிக்க

குளிரூட்டப்பட்ட அறையில்
அம்மா கிடத்தி வைக்கப்பட்டிருந்த
படுக்கையை அணுகி
மெலிதாகத் திறந்திருந்த
கண்களை உற்று நோக்கி
என் ஞாபகத்தைத்
திணிக்க முனைந்தபோது

மதியம் 2 மணிகூட ஆகிவிடாதபோதிலும்
சோடியம் தீர்ந்துபோன
மறதிநோய் பாதித்த
மூப்பெய்த
அம்மா முணுமுணுத்தது...
"சாப்ட்டியா?"

ZAKIR HUSSAIN
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
, ,