இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

05/05/2016

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜாகிரின் படிக்கட்டுகள் -24
almighty-arrahim.blogspot.com
எப்படி இருக்க வேண்டும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் மனது சொல்கிறதோ அப்படி இருக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் ஒரு தியானம், ஒரு ட்ரான்க்வைல் நிலை.
எப்போது உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையோ உங்களை யாராலும் மீட்டு வர முடியாது. அது ஏறக்குறைய ஒரு புதை மணலுக்கு சமம்.

நாம் செலவழிக்கும் நேரம் எதுவும் நமக்கு புதிதாக வருமான உயர்வைத் தராது என்ற எண்னம் எப்போது வருகிறதோ அப்போதே நீங்கள் முன்னேர சிந்திக்கிறீர்கள் என்று சத்தியமாய் சொல்ல முடியும். எப்போது நம் உழைப்பு அனைத்தும் நமக்கு வருமானமாக மாறும். அது சொந்த தொழிலில் மட்டும் தான்.


சொந்த தொழிலுக்கு சொந்தக்காரர்களின் உதவி ,நண்பர்கள் உதவி, அறிவு. இதிலெல்லாம் கவனம் செலுத்துவதை விட நீங்கள் முடிவு எடுத்து விட்டீர்களா?.... தீர்க்கமாக, என்று மட்டும் கவனம் செலுத்தினால் போதும். முடிவு தீர்க்கமில்லை என்றால் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சொதப்பலாம். ஒரு கிளி, கூண்டுக்குள் இருந்து தனக்கு சுதந்திரம் எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும். கூண்டை திறந்து விட்டால் பறந்து போகும் கிளி வெளியில் என்ன கொடுமை நடந்தாலும் திரும்பி கூண்டுக்குள் போய் பாதுகாப்பாக இருக்கலாமே என்று ஒருபோதும் யோசிப்பதில்லை. ஆனால் மனிதன் தான் வெளியில் ஏவப்படும் சவால்களை கண்டு மீண்டும் கூண்டுக்குள் போய் விடலாமா என்று நினைக்கும் பிறவி. ஆனால் யார் தனது சுகங்களை தியாகம் செய்து விட்டு கொஞ்சம் நாள் கஷ்டப்பட்டாலும் நாம் நன்றாக வருவோம் என்று நினைக்கிறார்களோ அவர்கள் மட்டுமே சவால்களை சமாளிக்கும் குணம் கொண்டவர்கள். If you burn your bridge…and there is NO WAY to return back….YOU WILL FIGHT & WIN THE BATTLE.

இறைவனின் கருணை மிகப்பெரியது, உங்கள் பிரச்சினைகளையும் ,கஷ்டங்களையும் நினைத்து கவலைப்படும் நீங்கள் எப்போதாவது அந்த இறைவன் படைத்த உலகத்தின் விசாலம் கண்டு வியந்து இருக்கிறீர்களா?.

சொந்த தொழில் செய்ய எந்த தொழில் நல்லது என்று ஒன்றும் கிடையாது. எதையும் உருவாக்கலாம். எனக்கு தெரிந்து ஒருவர் ஏதாவது செய்ய வேண்டும் என்று கம்போடியா, லாவோஸ் போன்ற அதிகம் முன்னேராதநாட்டுக்கு சென்றவர் அங்கு அதிகம் பெண்கள் பதின்ம வயதில் இருப்பதையும் அவர்களுக்கு மேக்-அப் பொருட்கள்,அலங்காரப்பொருட்கள் கிடைக்காமல் இருப்பதை கவனித்த அவர் ஒவ்வொரு கடையாக சென்று ஆர்டர் எடுத்து பிறகு இங்கு மலேசியா வந்து அது போன்ற பொருட்களை எடுத்து சென்று அங்கு விற்பனை செய்து நல்ல நிலையில் இருக்கிறார்.

இன்னொருவர் தொழிற்சாலைகளை பார்வையிட்டு அதில் எவ்விதமான மெசினை பயன்படுத்தினால் லாபம் கிடைக்கும் என்று எடுத்துச் சொல்லி அந்த தொழிற்சாலைக்கு தேவையான மெசினரியை ஜெர்மனி , கொரியா போன்ற நாடுகளில் வாங்கி கொடுத்து நல்ல நிலையில் சம்பாதித்து வாழ்கிறார்.

6 மாதத்துக்கு முன் ஒருவரை சந்தித்தேன். சின்ன மினிமார்க்கெட் ஆரம்பித்து அதை ஏன் இந்த நாடு முழுவதும் அதே கான்செப்ட்டில் செய்யக்கூடாது என நினைத்த ஒருவர் இதுவரை அதுபோல் ஆரம்பித்த கடைகள் இப்போது 100ஐ நெருங்குகிறது. இதில் ஒன்றும் அப்படி ஆச்சர்யமில்லை என்று நினைப்பவர்களுக்கு, அவருக்கு இரண்டு கால்களும் செயல்படாது... சக்கர நாற்காலியில் இருந்து கொண்டே இவ்வளவு பெரிய சாதனை. ஒரு முறை நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை பார்த்த பிறகு அடுத்த வரியை படிக்கவும்.

Art Of Leverage

உங்களுக்கு கிடைத்த 24 மணி நேரத்துக்குள்தான் நீங்கள் உழைக்க முடியும்... இருப்பினும் உங்கள் உழைப்பின் நேரத்தை எப்படி அதிகப்படுத்த முடியும்.??

உங்கள் வேலையை மற்றவர்கள் செய்தால் உங்களின் வேலைப்பலு குறையும்.ஆனால் நீங்கள் இருக்குமிடத்தில் இல்லாவிட்டால் எவனும் உங்கள் சொல் கேட்க மாட்டான். ஒரே பொசிசன் முதலாளி தான். சரியான முறையில் உங்களின் வேலையை பகிர்ந்தளிப்பதன் மூலம் உங்களுக்கான வருமானத்தை இன்னொருவரின் உழைப்பிலும் பெற முடியும். இது கம்யூனிஸ்ட் திட்டும் சுரண்டல் அல்ல.மற்றவர்கள் உழைக்கும்போது அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் உங்களுக்கும் ஒரு பகுதி கிடைப்பதுதான் அது. இது ஏஜென்சி முறையில், மெர்ஜர் முறையில், ஃப்ரான்சைஸ் முறையில் சாத்தியம். அதுவெல்லாம் இங்கு சாத்தியமில்லை, ஆனால் நான் முன்னேர வேண்டும் , தொழிலை வளர்க்கவேன்டும் என்று என்று உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தால் கடைசியில் ஊரில் கிளி கூட வளர்க்க முடியாது.

நீங்கள் சார்ந்த தொழிலில் / வேலையில் மிக ஆர்வமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு கீழ் உள்ளவர்களும் ஆர்வத்துடன் செயல்பட முடியும். நீங்கள் நினைத்தால், நீங்கள் தொழில் செய்யும் இடத்துக்கு வருவது, பிறகு ஊர் சமாச்சாரங்களில் தலையிட்டு தீர்க்கும் தீர்க்க தரிசி வேசம் போட்டால் உங்களிடம் வேலை செய்பவர்களும் தனது ரோல் என்ன என்று தயாராகி விடுவார்கள் நடிப்பதற்கு.

உங்களுடைய சந்தர்ப்ப சூழலை குறை சொல்வதை நிறுத்தி விட்டு சந்தர்ப்ப சூழலை உருவாக்க கற்றுக் கொள்ளுங்கள்.

கால ஓட்டத்தில் உங்கள் நிலை உயர வேண்டும். ஒரு நிலையில் நீங்கள் இல்லாமலும் உங்களுக்கு வருமானம் வரவேண்டும். நீங்கள் போய் உட்கார்ந்தால்தான் அந்த வியாபாரம் நடக்கும் என்று 20 / 25வருடம் கழித்து நீங்கள் சொன்னால் அதில் பெருமை இல்லை. நீங்கள் சொல்லும் அந்த நிலை ஒரு டார்ச்சர்,அல்லது நீங்கள் உருவாக்கிய சாபக்கேடு. அது நிச்சயம் உங்களுக்கு வரம் அல்ல.

உலகம் எதை நோக்கி நகர்கிறது என்ற தகவல் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஒரு தொழிலை ஆரம்பிக்கும் முன் யோசித்து , திட்டமிட்டு, செயல்பட வேண்டும். சிலர் செயல்பட்ட பிறகு யோசித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் வரிசை தவறி செயல்படுவதுதான்.

எனவே தோல்வியும் வெற்றியும் உங்களுக்குள்தான் இருக்கிறது." தோல்வி"யும் 'வெற்றி"தான் அதை வெற்றிபெற பயன்படுத்தும்போது.

நீங்கள் நீங்களாகவே இருக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களை இறைவன் எந்தக்குறையையும் வைத்து படைக்கவில்லை. நீங்கள் நினைக்கும் குறைகள் அனைத்தும் நீங்களே படைத்துக்கொண்டது.

ஒரு வெற்றியாளனுக்கும் ,தோல்வியடைந்தவனுக்கும் உள்ள வித்தியாசம் அவர்களது அறிவிலோ, இனத்திலோ,கல்வியிலோ இல்லை. கடைசிவரை வெற்றியடைய வேண்டும் என்ற மன உறுதிதான் அந்த வித்தியாசம்.

என் நினைவில் உதித்தவை:
உங்கள் இமேஜை வீணடிக்க வேண்டுமென்றால் உங்கள் சொல்கேட்காதவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள். இமேஜ் காலியாவது கியாரன்டி.

பணம் சம்பந்தமான அறிவுரைகளை உங்களைவிட வசதியில் உயர்ந்தவர்களுக்கு சொல்வதை தவிர்த்து விடுங்கள்.

அதிகம் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தால் வரும் ஏமாற்றத்தை தாங்கிகொள்ள தயார் என்றால் பரவாயில்லை.

உங்கள் காலம் மட்டும்தான் வசந்தம் என்று உங்கள் மனைவியிடம் சொல்லலாம்,பிள்ளைகளிடமும் சொல்லிக்கொண்டு அதற்கு முக்கியத்துவம் இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்காதீர்கள்.

தர்மம் தலைகாக்கும்.

உங்களின் சூழ்நிலை சரியில்லை என்றால் இறைவன் உங்களுக்கு அதன் மூலம் ஏதோ கற்றுத்தருகிறான்.

சபை நாகரீகம் தெரியாதவனிடம் நட்புடன் இருக்காதீர்கள். அவன் ஒரு நாள் குலநாசம் செய்யத் தயங்கமாட்டான்.

மனிதர்களை மதம் / இனம் / மொழி போன்ற ஸ்கேனர் இல்லாமல் நெருங்க தெரிந்து கொள்ளுங்கள்

சம்பாதிப்பதில் மார்தட்டிப்பேச ஒன்றும் இல்லை, நீங்கள் எவ்வளவு சேமித்து வைத்து இருக்கிறீர்கள் என்பதில் கவனம் தேவை.

ஒரு துறையில் முன்னேர அதற்கு சம்பந்தமில்லாதவர்களிடம் போய் அறிவுரை கேட்காதீர்கள். [“பொதுவாக’ கேட்கலாம் இல்லையா? என்ற கேள்வி வரும். ரிசல்ட்டும்“பொதுவாக” இருக்கும் பரவாயில்லையா?]

விமர்சனங்களுக்கு பயப்படலாம்... விமர்சிப்பவர்களைப் பற்றிய பயம் தேவையற்றது.

நம் பிறவியின் முக்கிய அம்சங்களில் ஒன்று நம்மை சார்ந்தவர்களுக்கு பிரயோசனமாக இருப்பது.

பெருமானார் நபி முஹம்மது [ஸல்] அவர்களைத் தவிற யாரும்“பின்பற்றக் கூடிய”தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. [இதை நான் முஸ்லீமாக இருப்பதற்காக எழுதவில்லை]

வாழ்க்கையில் உறவுகளுடன் அன்பு இருக்க வேண்டும்,ஆனால் அதுவே உங்களை செயல்பட தடுக்கும் தடைக்கல்லாக நீங்கள் மாற்றி விடக்கூடாது. வாழ்க்கையே ஒரு தாமரை இலை மாதிரி... தண்ணீரில் நனையாது-தண்ணீரில்தான் இருக்கும்.

இறைவனின் வழிகாட்டுதலும்,பாதுகாப்பும் எப்போதும் உங்களுக்கு இருக்கும்வரை வெற்றி என்றென்றும் நிச்சயம். அதற்கு உங்களின் ஈடுபாடு மிக முக்கியம்.

[ நிறைவடைந்தது ]
ZAKIR HUSSAIN
, ,