குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

2.6.19

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அருள்மிகு இரவு
அருள் மிகு இரவு !

almighty-arrahim.blogspot.com
சபீர் அஹ்மது 
ஆற்றல் நிறை அல்லாஹ்
ஏற்றம் உடை யிரவில்
அருள் மறை அளித்தான்
இருள் அகல இகத்தில்


அருள் மிகு இரவின்
பொருள் எது வென்று
வெறும் சொல் கொண்டு
தரு வதும் தகுமோ !

சுவனம் திறந் திருக்க
நரகம் மூடிக் கிடக்க
ஷைத்தான் விலங்கில் முடங்க
விதித்தான் இரவை வல்லோன் !

தீதும் நன்றும் கலந்த
நாளும் பொழுதும் கொண்ட
மாதங்கள் ஆயிரத்தைவிட
மேன்மை மிக்க இரவு !

மன்னிப்பு நல்கு வதில்
மா பெரும் தயாளன்
மறை தந்த இறையிடம்
மனம் உருகி மன்றாட…

தீயச் செயல் யாவுக்கும்
தறிகெட்ட எண்ணங்கட்கும்
மன்னிப்பைப் பெற்றுத்தரும்
மகத்துவம் மிக்க இரவு !

நற் செயல்கள் பல சுமந்து
நமக் கிடையே நலம் வழங்க
நாயன் அனுப்பும் வானோர்
நிலம் இறங்கி வருமிரவு !

சாந்தி மயமாகச் சமாதானம் நிலவ
சகோதரத்துவத்தோடு சகிப்பும் திளைக்க
ஈகை செய்து இன்முகம் காட்ட
இனிதாய் இலங்கும் இரவு !

உபரி வணக்கங்களிலும்
உருக்கமான இரைஞ்சலிலும்
மறை யோதும் ஒலியோடும்
நகரும் இரவு நிலவும்…

இருட் போர்வை விலக்கி
இவ் வுலகம் விழிக்கும்வரை;
அருட் பார்வை விளக்கில்
அதி காலை வெளுக்கும்வரை!

(மூலம்: சூராஹ் அல்-கத்ர்/ 97: அல் குர்ஆன்)

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

, ,