குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

16.12.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

70 பெரும் பாவங்கள்
70 பெரும் பாவங்கள்
வெளியிடு : ஸாஜிதா புக் ஸ்டோர்

1. ஷிர்க் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
2. கொலை
3. சூனியம்
4. தொழுகையை விடுதல்
5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்

6. நோன்பை விடுதல்
7. ஹஜ்ஜு செய்யாமை
8. பெற்றோரைத் துன்புறுத்தல்
9. உறவினர்களை வெறுத்தல்
10. விபச்சாரம்
11. ஆண் புணர்ச்சி
12. வட்டி
13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்
14. அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் பொய்யுரைத்தல்
15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்
16. தலைவன் அநீதி செய்தல்
17. பெருமை
18. பொய்ச்சாட்சி கூறல்
19. மது அருந்துதல்
20. சூது
21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்
22. மோசடி செய்தல்
23. களவு
24. வழிப்பறி
25. பொய்ச் சத்தியம்
26. அநீதி இழைத்தல்
27. கப்பம் பெறல்
28. தகாத உணவு
29. தற்கொலை
30. பொய்
31. கெட்ட நீதிபதி
32. அதிகாரியின் இலஞ்சம்
33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்
34. கூட்டிக் கொடுத்தல்
35. ஆகாததை ஆகுமாக்குபவன்
36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை
37. முகஸ்துதி
38. கற்ற கல்வியை மறைத்தல்
39. சதி செய்தல்
40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்
41. விதியைப் பொய்ப்படுத்தல்
42. மற்றவர்களின் இரகசியத்தை ஒத்துக் கேட்டல்
43. கோளுரைத்தல்
44. திட்டுதல் (சபித்தல்)
45. வாக்கு மாறுதல்
46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்
47. கணவனுக்கு மாறு செய்தல்
48. உருவப் படம் வரைதல்
49. ஒப்பாரி வைத்து அழுதல்
50. கொடுமை செய்தல
51. வரம்பு மீறுதல்
52. அயல் வீட்டாரைத் துன்புறுத்தல்
53. முஸ்லிம்களைத் துன்புறுத்தல்
54. துறவிகளைத் துன்புறுத்தல்
55. மமதையும், தற்பெருமையும்
56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்
57. அடிமை ஒளிந்தோடல்
58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல்
59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்
60. மேலதிக நீரைத்தடுத்தல்
61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்
62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்
63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்
64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்
65. தனித்துத் தொழுதல்
66. ஜும்ஆவைத் தவற விடல்
67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்
68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்
69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்
70. நபித் தோழர்களைத் தூஷித்தல்
1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்)
...எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமக்காரர்களூக்கு (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை. (5:72)
எவன் பிறரின் பாராட்டுக்காக நற்செயல் புரிகிறானோ அவனை அல்லாஹ் அவ்வாறே ஆக்கிவிடுகிறான். (அந்த நற்செயல்களுக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடையாது) என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ)
2. கொலை
எவர் ஒரு விசுவாசியை (அவர் விசுவாசி என்று நன்கறிந்திருக்கும் நிலையில்) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவன் (என்றென்றும்) தங்கியும் விடுவான். அவன் மீது அல்லாஹ் கோபங்கொண்டு அவனைச் சபித்தும் விடுவான் (இதனை) அன்றி மகத்தான வேதனையையும் அவனுக்குச் தயாராக்கி வைத்திருக்கின்றான். (4:93)
ஒரு விசுவாசியைக் கொலை செய்வது இவ்வுலகம் அழிவதை விட அல்லாஹ்விடம் பயங்கரமானதாகும் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், திர்மிதி, நஸயீ, பைஹகீ, இஹ்பானீ, இப்னுமாஜா)
3. சூனியம்
அழிவின்பால் உங்களை இட்டுச் செல்லக் கூடிய ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்ற நபி மொழியில் இரண்டாவது இடத்தைப் பெறுவது சூனியமாகும். (புகாரி, முஸ்லம், அபுதாவூத், நஸயீ)
மூவர் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்: மதுவில் மூழ்கியிருப்பவன், உறவினரை வெறுப்பவன்,சூனியத்தை உண்மைப்படுத்துபவன் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத், ஹாகீம், இப்னுஹிப்பான், அபூயஹ்லா)
மந்திரித்தலும், தாயத்துக் கட்டுவதும், நூல் கட்டுவதும் ஷிர்க்காகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், இப்னுஹிப்பான், ஹாகிம்)
4. தொழுகையை வீணாக்கி விடுதல்
'தங்கள் தொழுகையில் பாராமுகமாயிருக்கும் (நயவஞ்சகமான) தொழுகையாளிகளுக்கு கேடுதான்.(107:4,5)
மறுமையில் முதலாவதாக மனிதனிடம் தொழுகையைப் பற்றித்தான் கேள்வி கேட்கப்படும் தொழுகை ஒழுங்காக நிறைவேற்றப்பட்டிருந்தால் வெற்றியடைந்த நற்பாக்கியவானாவான். தொழுகையில் குறைபாடுள்ளவன் நஷ்டமடைந்த துர்ப்பாக்கியவானாவான் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், திhமிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)
5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்
அல்லாஹ் தன் அருளைக் கொண்டு அவர்களுக்கு அளித்த பொருட்களில் எவர்கள் உலோபித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிவிடவேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே முடியும். எதை அவர்கள் உலோபித்தனம் செய்தார்களோ அதைக் கொண்டு மறுமை நாளில் அவர்கள் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள். (3:180)
கொடுமை புரியும் தலைவன், ஸக்காத்து கொடுக்காதவன், பெருமையடிக்கும் ஏழை ஆகிய மூவரும் தான் நரகில் முதலாவதாக நுழைவார்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு குஸைமா, இப்னுஹிப்பான்)
6. நோன்பை விடுதல்
விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டிருந்த பிரகாரமே உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதியாக்கப்பட்டிருக்கின்றது (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம். இவ்விதம் விதிக்கப்பட்ட நோன்பு சில குறிப்பிட்ட நாட்களில் (நோற்பது கடமையாகும்).. (2:183,184)
எவன் ஒருவன் எவ்வித காரணமுமின்றி ரமழான் மாதத்தில் நோன்பை விடுகிறானோ அவன், ஏனைய நாட்கள் எல்லாம் நோன்பு வைத்தாலும் அதற்கு சமமாகாது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, இப்னுகுஸைமா)
7. ஹஜ்ஜு செய்யாமை
.....எவர்கள் அங்கு யாத்திரை செல்ல, சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அவ்வாலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும்... (3:97)
8. பெற்றோரைத் துன்புறுத்துதல்
...... (மனிதனே!) நீ எனக்கும் உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்துவாயாக! (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதாயிருக்கிறது. (31:14)
பொற்றோரின் திருப்தி அல்லாஹ்வின் திருப்தியாகும். பெற்றோரின் வெறுப்பு அல்லாஹ்வின் வெறுப்பாகும் (திர்மிதீ, இப்னுஹிப்பான், ஹாகிம்)
தாயின் காலடியில் சுவர்க்கமிருக்கிறது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (நஸயீ, இப்னுமாஜா)
9. உறவினர்களை வெறுத்தல்
உறவினர்களை வெறுப்பவன் சுவனம் புக மாட்டான் (புகாரி, முஸ்லிம்)
எவன் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டானோ அவன், தன் உறவினர்களை இணைத்து நடப்பானாக! (புகாரி, அபூதாவூத், திர்மிதீ)
10. விபச்சாரம்
(விசுவாசிகளே!) நீங்கள் விபச்சாரத்தின் அருகேகூட நெருங்க வேண்டாம். ஏனென்றால் அது மானக் கேடானதாகவும் தீய வழியாகவுமிருக்கிறது (17:32)
கண்ணின் விபச்சாரம் அந்நியப் பெண்ணைப் பார்த்தல், நாவின் விபச்சாரம் (அவளுடன்) பேசுதல், கையின் விபச்சாரம் (பெண்ணைப்) பிடித்தல், காலின் விபச்சாரம் (அவளைத் தேடி) நடத்தல். மர்மஸ்தானங்கள் இவைகளை உண்மைப்படுத்துகின்றன அல்லது பொய்யாக்குகின்றன என நபி அவர்கள் கூறியுள்ளார்கள.; (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)
11. ஆண் புணர்ச்சி
லூத் நபியின் கூட்டத்தினர் செய்த கொடிய (ஆண் புணர்ச்சி) எனும் பாவத்தைச் செய்பவர்களைக் கண்டால் இருவரையும் கொலை செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)
ஆணுடைய அல்லது பெண்ணுடைய பின் துவாரத்தில் புணர்ந்தவனை அல்லாஹ் மறுமையில் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் எனவும் நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, நஸயீ, இப்னுஹிப்பான்)
12. வட்டி
விசுவாசிகளே! (அசலுக்கு அதிகமாவும், வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக் கூடிய வட்டியை (வாங்கி) உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதனைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (3:130)
வட்டியின் பாவங்கள் எழுபது பிரிவுகளையுடையன. அதில் மிகவும் இலேசானது ஒருவன் தன் தாயைப் புணர்வது போன்ற பாவமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, பைஹகீ)
13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்
எவர்கள் அனாதைகளின் பொருட்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கிறார்கள். பின்னர் (மறுமையில்) அவர்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பிளும் நுழைவார்கள். (4:10)
அனாதைகளின் பொருளை அவர்கள் பிராயமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி, தொடாதீர்கள்... (6:152)
அனாதையைப் பொறுப்பேற்பவனும் நானும் சுவர்க்கத்தில் இணைந்து இருப்போம் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
14. அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் பொய்யுரைத்தல்
(நபியே!) அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் மறுமை நாளன்று கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்... (39:60)
பொய்யெனத் தெரிந்தும் என் மீது பொய்யுரைப்பவன் பொய்யனாவான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்
....உங்களில் (பொறுமையும்) சகிப்புத்தன்மை(யும்) உடைய இருபது பேர்களிருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொண்டு விடுவார்கள். (8:65)
16. தலைவன் அநீதி செய்தல்
எந்தத் தலைவனாவது தன் கீழுள்ளவர்களுக்கு எதிராக, சதி செய்தால் அவன் நரகவாதியாவான் (தப்ரானி)
எவனுக்கு அதிகாரமளிக்கப்பட்டு அதை அவன் முறையாக நிறைவேற்றவில்லையோ அவனுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கிவிடுவான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
17. பெருமை
நிச்சயமாக அவன் கர்வங்கொண்டவர்களை விரும்பமாட்டான். (16:23)
பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, மனிதர்களுக்கு அது எவ்வகையிலும் பொருந்தாது. கண்ணியம் எனது ஆடை, பெருமை எனது போர்வை என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
18. பொய்ச்சாட்சி கூறல்
பொய்ச் சாட்சியம் கூறுபவனின் பாதமிரண்டும் மறுமையில் அவன் நரகம் போகும் வரை அசையாமலிருக்கும் என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, ஹாகிம்)
19. மது அருந்துதல்
எவன் இவ்வுலகில் மது அருந்துகிறானோ அவன் மறுமையில் நரகவாதிகளின் ஊணைக் (சீழை) குடிப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ)
அல்லாஹ் என்னுடைய உம்மத்திற்கு மதுவை மருந்தாக ஆக்கவில்லை. (மது சேர்ந்த மருந்தும்கூட ஹராம்) என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகீ, அஹ்மத், ஹாகிம்)
20. சூது
விசுவாசிகளே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், விக்கிரக ஆராதனையும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.
21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்
எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி (அதனை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அ(த்தயைக)வர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள் (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் (வரம்பு மீறிய) தீயவர்கள். (24:4)
22. மோசடி செய்தல்
''மோசம்'' செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசடிசெய்தால் அவர் அந்த மோசடி செய்த பொருளையும் மறுமை நாளில் (தம்முடன்) கொண்டு வரவேண்டியிருக்கும்... (3:161)
23. களவு
ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் இ(த்தீ)ச் செயலுக்கு அல்லாஹ்விடமிருந்து உள்ள தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தோனும் ஞானமுடையோனுமாகியிருக்கிறான். (5:38)
24. வழிப்பறி
ஒருவன் திருடினால் கையை வெட்டுங்கள், மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் காலை வெட்டுங்கள், மீண்டும் செய்தால் மற்றக் கையை வெட்டுங்கள், மீண்டும் செய்தால் மற்றக் காலை வெட்டுங்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (அபூதாவூத், நஸயீ)
25. பொய்ச் சத்தியம்
மறுயைமில் அல்லாஹ் மூவரின் பாவத்தை மன்னிக்கமாட்டான், அவர்களோடு பேசவும் மாட்டான் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு அவர்கள் யாவரெனில்
1. தரையில் படும்படி உடை உடுப்பவன்,
2. கொடுத்ததைச் சொல்லிக்காட்டுபவன்,
3. பொய்ச்சத்தியம் செய்து தன் பொருளை விற்பவன் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)
26. அநீதி இழைத்தல்
அடியார்களே! எனக்கு நானே அநீதத்தை ஹராமாக்கியுள்ளேன். அதை உங்களுக்கிடையிலும் ஹராமாக்கியுள்ளேன். ஒருவருக்கொருவர் அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்! என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)
27. கப்பம் பெறல்
(குற்றம் சுமத்த) வழி ஏற்படுவதெல்லாம் மனிதர்களுக்கு அநியாயம் செய்து நியாயமின்றி, பூமியில் கொடுமை செய்கிறார்களே, அவர்கள் மீதுதான், அத்தகையோர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)
28. தகாத உணவு
நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணவேண்டாம் (2:188)
அனஸ்! உன் உழைப்பைச் சுத்தமானதாக்கிக் கொள்! தகாத உழைப்பிலிருந்து ஒரே ஒரு கவளம் உடலினுள் சென்றால் நாற்பது நாட்களுக்கு பிரார்த்தனைகள் ஒப்புக் கொள்ளப்படமாட்டாது (தப்ரானீ)
29. தற்கொலை
எவன் இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்வானோ அவன் அதே ஆயுதத்தால் நரகில் துன்பமனுபவிப்பான். விஷமருந்தி உயிரைப் போக்கியவன் தன் கையில் விஷத்தை வைத்துக் கொண்டே நரகில் துன்பப்படுவான். மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்தவன் நரகக் குழியில் குதித்துக் கொண்டேயிருப்பான். எப்பொழுதும் மீட்சியைக் காணவே மாட்டான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ)
30. பொய்
... யார் வரம்பு மீறுவதுடன் பொய்யராகவும் இருக்கிறாரோ அவரை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். (40:28)
மாபெரும் சதியாதெனில் மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
31. கெட்ட நீதிபதி
... எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே (5:44)
32. அதிகாரியின் இலஞ்சம்
இலஞ்சம் வாங்குபவனையும், கொடுப்பவனையும் அல்லாஹ் சபிப்பானாக என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, ஹாகிம்)
33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்
ஆணுக்கொப்பாகும் பெண்ணையும், பெண்ணுக்கொப்பாகும் ஆணையும் அல்லாஹ் சபிப்பானாக! என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா)
34. கூட்டிக் கொடுத்தல்
(கேவலமான) ஒரு விபச்சாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபச்சாரியை அல்லது இணை வைத்து வணங்குபவளை அன்றி (வேறு ஒருத்தியையும்) மணந்து கொள்ள மாட்டான். ஒரு விபச்சாரி ஒரு விபச்சாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி வேறு எவரையும் மணந்து கொள்ள மாட்டாள். இத்தகைய திருமணம் விசுவாசிகளுக்கு தடுக்கப்பட்டிருக்கிறது. (24:3)
35. ஆகாததை ஆகுமாக்குபவன்
36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை
(நபியே!) உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்: அசுத்தங்களை வெறுத்து விடும் (74:4,5)
37. முகஸ்துதி
சிறிதளவாவது முகஸ்துதி சேர்ந்தால் அச்செயல் ஷிர்க்கை ஒத்ததாகும். அது பாவமுமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (ஹாகிம், தப்ரானி)
38. கற்ற கல்வியை மறைத்தல்
'அறிஞர்களிடம் வாதிட்டு வெல்வதற்கும்', பாமரமக்களிடம் 'அறிவாளி' எனப் பெயர் எடுப்பதற்கும், 'மக்களைத் தன்பக்கம் திருப்புவதற்கும் கல்வி கற்பவனை' அல்லாஹ் நரகில் நுழையவைப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
39. சதி செய்தல்
நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெறவிட மாட்டான் (12:52)
சதியும், பொய்யும் இல்லாத எல்லா விஷயங்களையும் அல்லாஹ் பதிந்து கொள்கிறான் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்
''சதி செய்பவனும், உலோபியும், செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும்'' சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (நஸாயி, திர்மிதி)
41. விதியைப் பொய்ப்படுத்துதல்
எல்லாச் சமூகத்தவர்களிலும் மஜுஸிகள் (நெருப்பை வணங்கும் மிகக் கெட்டவர்கள்) உள்ளனர். என் உம்மத்தின் மஜுஸிகள் விதியைப் பொய்யாக்குபவர்களாவர் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
42. மற்றவர்களின் இரகசியத்தை ஒற்றுக் (ஒத்துக்) கேட்டல்
43. கோளுரைத்தல்
இழிந்தவனான, அதிகம் சத்தியம் செய்யக்கூடிய ஒவ்வொருவனுக்கும் நீர் கீழ்படியாதீர். (அவன் மனிதர்களின் தன்மானங்களில்) குறைபேசித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (68:10,11)
44. திட்டுதல் (சபித்தல்)
ஒரு முஸ்லிமைத் திட்டுவது கெட்டதாகும். அவனைக் கொலை செய்வது குஃப்ராகும் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி)
45. வாக்கு மாறுதல்
விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள் (5:1)
நயவஞ்சகனின் அடையாளம் மூன்று: அவன் தொழுதாலும், நோன்பு பிடித்தாலும் தான், ஒரு முஸ்லிம் என எண்ணிக் கொண்டாலும் சரியே (நயவஞ்சகனேயாவான்)
1. பேசினால் பொய்யுரைப்பான்
2. வாக்களித்தால் மாறு செய்வான்
3. நம்பினால் மோசடி செய்வான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்
எவரொருவர் ஜோதிடனை அணுகி, எதைப்பற்றியாவது கேட்டு அவன் கூறியதை உண்மை என நம்பிக்கை கொள்வாராயின் அவரது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
47. கணவனுக்கு மாறு செய்தல்
... எவளும் (கணவனுக்கு) மாறுசெய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையிலிருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள், (அதிலும் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு வழிப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும், மிகப்பெரியவனுமாக இருக்கிறான். (4:34)
48. உருவப் படம் வரைதல்
நாயும், உருவப்படங்களுமுள்ள வீட்டில் மலக்குகள் நுழையமாட்டார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
49. ஒப்பாரி வைத்து அழுதல்
ஓலமிட்டு அழுபவள் மரணத்திற்கு முன் தௌபாச் செய்யவில்லையானால் தாரினால் ஆன சட்டை போடப்பட்டு நரகில் வேதனை செய்யப்படுவாள் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், இப்னுமாஜா)
50. கொடுமை செய்தல்
(அளவு மீறி) மனிதர்கள் மீது அக்கிரமங்கள் செய்து நியாயமின்றி பூமியில் கொடுமை செய்வோருக்கு எதிராகத்தான் (குற்றஞ் சாட்ட) வழி இருக்கிறது. இத்தகையோருக்கு மிகத்துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)
51. வரம்பு மீறுதல்
எவன் பெருமைக்காக ஆடையை பூமியில் படும்படி (உடுத்தி) இழுத்து (நடக்கின்றானோ) அவனை மறுமையில் அல்லாஹ் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸாயி)
52. அயல் வீட்டாரைத் துன்புறுத்துதல்
அபூதர்ரே! நீர் கறி சமைத்தால் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கொடுப்பதற்காக அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அண்டை வீட்டார் பசித்திருக்கும்போது வயிறாற உண்பவன் மூஃமினல்லன் என நபி அவர்கள் கூறினார்கள். (ஹாகிம், பைஹகீ)
53. முஸ்லிம்களைத் துன்புறுத்துதல்
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் சகோதரராவார் சகோரத முஸ்லிமுக்கு அநீதமிழைப்பதோ அவரை அவமானப்படுத்துவதோ பழிப்பதோ கூடாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)
54. துறவிகளைத் துன்புறுத்துதல்
எவன் என் நேசர்களைத் துன்புறுத்துகிறானோ அவனோடு நான் சண்டையிடுவேன் என அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
55. மமதையும், தற்பெருமையும்
...பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! கர்வங்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதேயில்லை. (31:18)
56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்
தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உண்பதையும், குடிப்பதையும் பட்டாடைகளை அணிவதையும், அதில் உட்காருவதையும் நபி அவர்கள் தடுத்துள்ளார்கள் என அபூஹுதைபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
ஒரு மனிதரின் கையில் தங்கத்தினாலான மோதிரம் இருப்பதை நபியவர்கள் கண்டு அதனைக் கழற்றிவிட்டு, யாரும் நரகத்து நெருப்புத் துண்டிலிருந்து ஒரு துண்டை அணிந்து கொள்வார்களா? எனக் கேட்டார்கள். (முஸ்லிம்)
ஒரு கையில் தங்கத்தையும், மற்றொரு கையில் பட்டாடையையும் எடுத்துக் காண்பித்து, இவையிரண்டும் என் உம்மத்திலுள்ள ஆண்களுக்கு ஹராமானதாகும் (விலக்கப்பட்டதாகும்) என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸாயி)
57. அடிமை ஒளிந்தோடல்
நபி அவர்கள் காலத்தில் இந்த அடிமைப் பிரச்சினை இருந்தது. அவர்களுக்கென்று சில சட்டங்களும் இருந்தன. இப்போது உலகில் எங்குமே அடிமைகள் இல்லையாகையால் இதுபற்றிய விளக்கமும் தேவையில்லை என்றே எண்ணுகிறோம்.
58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல் (பலியிடுதல்)
அல்லாஹ் அல்லாதவருக்கு யார் அறுத்துப் பலியிடுகின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ் அல்லாதவருக்கு நேர்ச்சை செய்யவும் கூடாது. அறுத்துப்பலியிடுவதும் கூடாது. இப்படிப்பட்ட இறைச்சியை உண்பதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும்.
59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்
தன் சொந்த, தகப்பனைப் புறக்கணித்து விட்டு வேறொருவனைத் தகப்பனாக ஏற்றுக் கொள்பவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
60. மேலதிக நீரைத்தடுத்தல்
'மற்றவனுடைய பயிர் செழிப்பாக வளரக்கூடாது' என்பதற்காக மேலதிக நீரைத் தடுத்து விடாதீர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) எனவும்,
61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்
நீங்கள் அளந்தால் பூரணமாக அளவுங்கள் நிறுத்தால் சரியான எடையைக்கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) நன்மையையும் மிக்க அழகான பலனையும் தரும். (17:35)
62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்
அல்லாஹ்விடத்தில் மிகக் கோபமான மனிதர்கள் வீண் விதண்டாவாதம் பண்ணுபவர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்
(சொல்லுங்கள் நபியே!) அல்லாஹ் எங்களுக்கு விதித்துள்ளதைத் தவிர (வேறொன்றும்) நிச்சயமாக எங்களை அணுகவே அணுகாது (9:51)
64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்
யார் என் நேசரை பகைக்கின்றாரோ அவரோடு நான் ''யுத்தப் பிரகடனம்'' செய்வேன் என அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
65. தனித்துத் தொழுதல்
ஜமாஅத்தோடு தொழும் தொழுகை, தனிமையில் தொழும் தொழுகையை விட இருபத்தி ஏழு மடங்கு சிறந்தது என நபிÉ அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
66. ஜும்ஆவைத் தவற விடல்
எவன் அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களைத் தவற விடுகிறானோ (நேர்வழியைத் தவறவிட்டவன் என்பதாக) ''அவனது உள்ளத்தில் முத்திரையிடப்பட்டுவிடும்'' என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்
...(மரண சாசனத்தைக் கொண்டு வாரிசுகளில் எவருக்கும்) நஷ்டத்தை உண்டு பண்ணாதவனாக இருக்க வேண்டும். (இது) அல்லாஹ்வுடைய கட்டளையாகும். அல்லாஹ் நன்கறிந்தோனும், மிகப்பொறுமை உடையோனுமாக இருக்கிறான். (4:12-14)
68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்து விடுவான். (4:142)
69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்
யுத்த காலங்களில் எதிரியின் நிலைகளை அறிவதற்காக மட்டும் உளவு பார்க்க அனுமதியுண்டு. ஒரு தளபதி இதற்காகச் சிலரை உளவாளிகளாக ஊதியங்கொடுத்து வைத்துக் கொள்ளவும் முடியும். நபிÉ அவர்கள் உளவு பார்க்க சில தோழர்களை யுத்த காலங்களில் அனுப்பியுள்ளார்கள்.
70. நபித் தோழர்களைத் தூஷித்தல்
முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாத்தில்) முதலாவதாக முந்திக்(கொண்டு விசுவாசங்) கொண்டார்களோ அவர்களையும், நற்கருமங்களில் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். (9:100)

முன்னுரை

--------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ள சகோதரர்களே!
எல்லோரும் நபி(ஸல்) அவர்;களிடம் நல்ல விஷயத்தைப் பற்றிக் கேட்பார்கள், தவறிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நான் கெட்ட விஷயத்தைப் பற்றி கேட்பேன் என்று ஹுதைபா அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணியக்கூடியவனாக இருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிதல் என்பது அல்லாஹ்வும் அவனின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் ஏவியதில் முடியுமானவைகளைச் செய்யவேண்டும். அவ்விருவரும் தடுத்தவைகளை முற்றாகத் தடுத்துக் கொள்ள வேண்டும்.
நான் ஏதாவது ஒன்றை ஏவினால் அதில் முடியுமானவைகளை எடுத்து செயல்படுங்கள், நான் ஏதாவது ஒன்றை தடுத்தால் அதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். நாமும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக ஆக வேண்டுமானால் ஏவல்களை எடுத்தும் விலக்கல்களை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்று முஸ்லிம்களில் பலர் கடமைகளை நிறைவேற்றுவதுடன் பல பெரும் பாவங்களை சாதாரணமாக செய்து கொண்டும் இருக்கின்றார்கள், இது அல்லாஹ்வுக்கு முழுக்க அடிபணியும் அடியானின் அடயாளமல்ல. கடமைகளை செய்வதுடன் பாவங்களையும் முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும், அதிலும் பெரும் பாவங்களை அறவே செய்யக் கூடாது.
அழித்துவிடக்கூடிய ஏழு பாவங்களை தவிர்ந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, சூனியம், அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்வது, வட்டி சாப்பிடுவது, எத்திம்களின் பொருளை உண்பது, யுத்த களத்திலிருந்து புற முதுகுகாட்டி ஓடுவது, பத்தினிப் பெண்ணை அவதூறு கூறல் என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மேலே உள்ள ஹதீதில் கூறப்பட்டவைகள் மாத்திரம் பெரும்பாவங்கள் அல்ல, இன்னும் பல பெரும் பாவங்கள் இருக்கின்றன. எந்தப் பாவத்தைச் செய்தால் அல்லாஹ்வின் லஃனத் உண்டாகும் அல்லது நரகத்தில் வேதனை செய்யப்படும் அல்லது அது ஹராம் என்று சொல்லப்படுகின்றதோ அவைகள் எல்லாம் பெரும் பாவங்கள்தான். இவைகள் அனைத்திலிருந்தும் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இக்குறிப்பில் பெரும் பாவங்களின் பட்டியல் ஆதாரத்துடன் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றது, இதைப் படித்து உங்களின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட தவறுகளை தவிர்த்துக் கொள்வதுடன் மற்றவர்களைளும் இப்படிப்பட்ட தவறுகளிலிருந்து தவிர்ப்பதற்குரிய முயச்சி செய்யுங்கள் அல்லாஹ் நம் அனைவருக்கும் இவ்வாய்ப்பினை தந்தருள்வானாக!.

1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்)

--------------------------------------------------------------------------------
ஷிர்க் இரண்டு வகைப்படும்
1. பெரிய ஷிர்க்
2. சின்ன ஷிர்க்
பெரிய ஷிர்க் என்றால்:- அல்லாஹ்வின் படைப்பினங்களை அல்லாஹ்வுக்கு சமமாக்குதல்.
உதாரணமாக:- கல், மரம், சூரியன், நட்சத்திரம், மலக்குமார்கள், நபிமார்கள், வலிமார்கள் இன்னும் அவர்களின் கப்ருகள் போன்றவைகளை வழிபடுவதும், அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டியவைகளை இவைகளுக்குச் செய்வதுமாகும்.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்;;;;கவேமாட்டான்;. இதனைத்தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்;கிறார்கள். (4:48)
நிச்சயமாக இணைவைப்பது மகத்தான ஓர் அக்கிரமமாகும். (31:13)
...எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமக்காரர்களூக்கு (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை. (5:72)
என அல்லாஹ் கூறுகிறான். இது போன்ற வசனங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.
அல்லாஹ்வுக்கு இணைவைக்காது அல்லாஹ்வின் மீது விசுவாசத்துடன் இறந்தவன், அவன் செய்த தவறுகளுக்காக நரகத்தில் தண்டனை அனுபவித்தாலும் இறுதியில் ''சுவர்க்கவாதியாவான்'' ஆனால் இணைவைத்தவனோ இறந்தபின் மீட்சியற்ற நரகவாதியாகவே இருப்பான்.
பெரும் பாவங்களில் மிகப் பெரியவைகளை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். ஆம், அல்லாஹ்வின் தூதரே அறிவியுங்கள்! எனத் தோழர்கள் கூறினார்கள். அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை நிந்தித்தல், (இவைகளைக் கூறும்போது சாய்ந்து கொண்டிருந்த நபியவர்கள் நேராக நிமிர்ந்து) பொய் சாட்சியம் கூறுதல் என்று இதைத்திரும்பத் திரும்ப கூறிக்கொண்டேயிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தால் நல்லதே என நாங்கள் சொல்லிக்கொள்ளும் வரை கூறிக் கொண்டேயிருந்தார்கள். (புகாரி, முஸ்லீம்)
எவன் தன் மார்க்கத்தை (இஸ்லாத்தை)த் துறந்தானோ அவனைக் கொல்லுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (புகாரி, அஹ்மத்)
சின்ன ஷிர்க்
இணைவைத்தலின் இரண்டாவது வகை சின்ன ஷிர்க் என்னும் ''முகஸ்துதியாகும்''. அதாவது தன் செயலை மற்றவர்கள் பார்த்து, புகழ வேண்டும் என்பதற்காக வணக்கங்கள் புரிவதாகும்.
...எவன் தன் இரட்சகனை சந்திக்க விரும்புகிறானோ அவன் நற்கருமங்களைச் செய்து, தன் இரட்சகனுக்கு ஒருவரையும் இணையாக்காது, அவனையே உள்ளச்சத்துடன் வணங்கி வருவானாக!. (18:110)
இதன் கருத்து:- ''தனது நற்செயல்களை, பிறர் பார்த்து வியக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல் புரிய வேண்டாம்'' என்பதாகும்.
''என்னிடம், தஜ்ஜாலை விடவும் (அவனால் உங்களுக்கு ஏற்படும் தீமையை விடவும்) உங்கள் மீது அதிகம் பயப்படத்தக்க ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?'' என அல்லாஹ்வின் தூதர் É அவர்கள் வினவினார்கள். ஆம்! தெரிவியுங்கள் என (தோழர்களான) அவர்கள் கூறினார்கள். அ(தற்கு நபிய)வர்கள், (நான் பெரிதும் உங்கள் மீது பயப்படும் தீங்கு) மறைமுக ஷிர்க்காகும் (அது யாதெனில்) ஒருவர் தொழுகையை நிறைவேற்ற நிற்கின்றார். தன்னை மற்றவர் பார்ப்பதை கண்டு தனது தொழுகையை (நீட்டி நிறுத்தி) அழகுபடுத்துகிறார். (முகஸ்துதியான இதுவே மறைமுக ஷிர்க்காகும்) எனக் கூறினார்கள். (முஸ்லிம்)
சின்ன ஷிர்க்கிலிருந்து எச்சரிக்கையாய் இருங்கள்! என நபி(ஸல்) அவர்கள் கூறியதும், சின்ன ஷிர்க் என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ''பிறருக்காகச் செய்யும் செயல்களாகும்;'' என நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு மறுமையில் அடியார்களின் செயல்களுக்கு, தீர்ப்பளிக்கும் வேளையில், உலகத்தில் நீங்கள் யாருக்காக, யார் பார்த்து மெச்ச வேண்டும் என நினைத்துச் செயல்பட்டீர்களோ அவர்களிடம் கூலி கிடைக்குமா? என்று பார்த்துக் கொள்ளுங்கள் என அல்லாஹ் கூறுவான் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், பைஹகீ, அபித்துன்யா)
எவன், என்னைத் தவிர்த்து வேறொருவனுக்காக (அவன் பாராட்டுவதற்காக) நற்செயல் புரிகிறானோ அவன், எனக்கு இணைவைத்தவனாகிறான். நான் அவனை விட்டும் நீங்கி விடுகிறேன் என அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், இப்னுமாஜா)
எவன் பிறரின் பாராட்டுக்காக நற்செயல் புரிகிறானோ அவனை அல்லாஹ் அவ்வாறே ஆக்கிவிடுகிறான். (அந்த நற்செயல்களுக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடையாது) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ)
நாளை மறுமையில் ஒரு கூட்டத்தினரை சுவனம் செல்லும்படி உத்தரவிடப்படும். அவர்கள் சுவனத்தை நெருங்கி அங்குள்ள மாளிகைகளைக் கண்டு அங்கிருந்து வெளிவரும் வாசனைகளை நுகர்ந்த பின் அவர்களைச் சுவர்க்கத்தில் நுழைய விடாது திரும்பி விடும்படி உத்தரவு வரும். யாஅல்லாஹ்! சுவர்க்கத்தின் வாசனையையும், அதன் அலங்காரங்களையும் காட்டுவதற்கு முன்பே இப்படி உத்தரவு கொடுத்திருக்கலாமே என கவலையுடனும், அது கிடைக்காமல் தவறிய வேதனையுடனும் கூறுவார்கள். இதைத்தான் நான் விரும்பினேன். நீங்கள் தனித்திருக்கும் போது பாவத்தில் மூழ்கியிருந்தீர்கள், கூட்டத்துடனிருக்கும் போது நல்லவர்களாக இருந்தீர்கள்! மனிதர்களுக்கு அஞ்சினீர்கள்! எனக்கு அஞ்சிய மனிதர்களை, கண்ணியப்டுத்தினீர்கள்! என்னை, கண்ணியப்படுத்தவில்லை. எனவே இப்பொழுது என் கொடிய வேதனையை உங்களுக்குத் தருகிறேன் என்று அல்லாஹ் கூறுவானென நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகீ, அபூநயீம், தப்ரானீ, இப்னு அஸாகிர், இப்னு நஜ்ஜார்)
தூய எண்ணத்துடன் வணங்குவது எப்படி? என ஒர் அறிஞரிடம் கேட்கப்பட்டது
பாவங்களை எவ்வாறு மற்றவர்களுக்குத் தெரியாது செய்கிறானோ அதே போன்று மற்றவர்களுக்குத் தெரியாமல் நன்மைகளைச் செய்வதாகும் எனப் பதிலுரைத்தார்கள். யா அல்லாஹ்! பிறருக்காக நற்செயல் புரிவதை விட்டும் பெரிய, சிறிய ஷிர்க்குகளை விட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக!

2. கொலை

--------------------------------------------------------------------------------
எவர் ஒரு விசுவாசியை (அவர் விசுவாசி என்று நன்கறிந்திருக்கும் நிலையில்) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவன் (என்றென்றும்) தங்கியும் விடுவான். அவன் மீது அல்லாஹ் கோபங்கொண்டு அவனைச் சபித்தும் விடுவான் (இதனை) அன்றி மகத்தான வேதனையையும் அவனுக்குச் தயாராக்கி வைத்திருக்கின்றான். (4:93)
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் நாயன் என்று அழைக்கமாட்டார்கள் அல்லாஹ் (கொலை செய்யக் கூடாதென்று) தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றி, கொலை செய்யமாட்டார்கள். விபச்சாரமும் செய்யமாட்டார்கள் ஆகவே எவரேனும் இவைகளைச் செய்ய முற்பட்டால் அவர் (அந்தப் பாவத்திற்குரிய) தண்டனையைச் சந்திப்பார். மறுமை நாளிலோ அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும். மேலும் இழிவுபட்டவராக அதில் என்றென்றும் தங்கிவிடுவார். (25:68,69)
ஆயினும் (அவர்களில்) எவர்கள் பாவத்திலிருந்து விலகி (மன்னிப்புக்கோரி) விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கின்றார்களோ அத்தகையோருடைய பாவங்களை அல்லாஹ் (மன்னிப்பது மட்டுமல்ல அதனை) நன்மையாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபை உடையோனுமாக இருக்கிறான். (25:68..70)
.....எவனொருவன் கொலைக்குப் பிரதியாகவோ, அல்லது பூமியில் குழப்பத்தை தடைசெய்வதற்காகவோ அன்றி, மற்றோர் ஆத்மாவை (அநியாயமாகக்) கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். அன்றி எவன் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே வாழவைத்தவன் போலாவான். (5:32)
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி எக்குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டு) கொலை செய்யப்பட்டீர்கள்? என்று கேட்கப்படும்.(81:8:9)
அழிவின்பால் உங்களை இட்டுச்செல்லக்கூடிய ஏழு பெரும்பாவங்களை, தவிர்த்துக்கொள்ளுங்கள் என்ற நபிமொழியில் மூன்றாவதாக இடம்பெறுவது நியாயமின்றி ஒருவனைக் கொலை செய்வது என்பதாகும். (புகாரி , முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து எது பெரிய பாவம்? என கேட்டார். உன்னைப் படைத்த அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கடுத்தது எது? எனக் கேட்டார். உணவு கொடுக்க பயந்து உன் குழந்தையைக் கொல்வதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கடுத்தது எது? எனக்கேட்டார். உன் அயல் வீட்டுப்பெண்ணுடன் விபச்சாரம் புரிவதாகும் எனக் கூறிவிட்டு,
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் ''நாயன்'' என்று அழைக்கமாட்டார்கள்..........(25:68) என்ற குர்ஆன் வசனத்தை நபியவர்கள் ஓதிக் காட்டினார்கள். (திர்மிதீ)
இரண்டு முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் வாளுடன் சண்டை செய்தால், கொல்பவனும், கொல்லப்படுபவனும் நரகத்திலேயே இருப்பார்களென நபி(ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதரே! 'கொல்பவன் நரகத்திற்குப் போவது முறைதான்: கொல்லப்படுபவனும் ஏன் நரகத்திற்குப் போக வேண்டும்? எனக் கேட்கப்பட்டது. கொல்லப்பட்டவனும் தன் சகோதரனைக் கொல்லும் எண்ணத்துடன்தானே சண்டையிட்டான்? என நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
தங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பகைமை, உலக விவகாரம், தலைமைத்துவம் இவைகள் போன்றவைகளுக்காக, சண்டையிடும் முஸ்லிம்களுக்குத்தான் இந்த நபிமொழி எச்சரிக்கையளிக்கிறது. தற்காப்புக்காக, அல்லது தன் குடும்பத்தின் மானத்தைக் காப்பதற்காக, அல்லது திருடனைத் தாக்குவதற்காக வாளை ஏந்தும் போது ஒரு முஸ்லிம் நரகவாதியாகமாட்டான் என இமாம் அபூசுலைமான் (ரஹ்) அவர்கள் விளக்குகிறார்கள்.
சிலரின் கழுத்தைச் சிலர் வெட்டிக்கொல்லும் காஃபீர்களாக எனக்குப் பின்னால் நீங்கள் மாறிவிடாதீர்கள்! என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லீம்)
விலக்கப்பட்ட, இரத்தத்தைச் சிந்தாமலிருக்கும் வரை (அநியாயமாக, கொலை செய்யாமலிருக்கும் வரை) ஒரு முஸ்லிம் தன் மார்க்கத்தில் விசாலமாக (மகிழ்வுடன்) இருப்பார் என்றும் நபி(ஸல்) É அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லீம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா)
ஒரு விசுவாசியைக் கொலை செய்வது இவ்வுலகம் அழிவதை விட அல்லாஹ்விடம் பயங்கரமானதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், திர்மிதி, நஸயீ, பைஹகீ, இஹ்பானீ, இப்னுமாஜா)
அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், கொலை செய்வதும், பொய் சத்தியம் செய்வதும் பெரும்பாவங்களில் உள்ளவையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லீம், நஸயீ)
கொலையை (முதலில்) செய்த ஆதம் (அலை) அவர்களின் மகனுக்கும் பாவத்தில் பங்கு உண்டு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
எவன் பாதுகாப்பளிக்கப்பட்டவனை (காபிரை)க் கொன்றானோ அவன் சுவர்க்கத்தின் வாடையைக்கூட பெற்றுக்கொள்ளமாட்டான்: சுவர்க்கத்தின் நறுமணம் நாற்பது வருடத் தொலைவுக்கு வீசிக் கொண்டிருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)
எவன் பாதுகாப்பளிக்கப்பட்டவனை (காபிரை)க் கொன்றானோ அவன் அல்லாஹ்வின் பாதுகாப்பை மீறியவனாகிறான், சுவர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெற்றுக் கொள்ளமாட்டான்: சுவர்க்கத்தின் நறுமணம் ஐம்பது (வருட)கால தூரம் வரை வீசிக் கொண்டிருக்கும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதீ)
பாதுகாப்பளிக்கப்பட்டவன் என்று மேலே குறிப்பிட்டது யாரெனில், தாம் முஸ்லிம ஆட்சியின் கீழ் இருந்து கொண்டு இஸ்லாமிய சட்டங்களுக்குக் கீழ்படிந்து நடக்கும் முஸ்லிம் அல்லாதவர்களைத்தான். இவ்வாறானவர்களைக் கொலை செய்பவனுக்குகே சுவர்க்கத்தின் வாடைகூட கிடையாது என்றிருந்தால் ஒரு முஸ்லீமைக் கொலை செய்வது எத்துணை பயங்கரமானது என்பதைச் சிந்தியுங்கள்.
மனமுரண்டாக ஒருவிசுவாசியை, கொலை செய்த குற்றத்தையும், ''முர்தத்தாக'' (மதம் மாறி) இறந்த குற்றத்தையும் தவிர, ஏனைய குற்றங்களை அல்லாஹ் மன்னிக்கக் கூடும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபுதாவூத், நஸயீ, ஹாகிம், இப்னுஹிப்பான்)
இக்கொடிய பாவம் ஏற்படாமல் அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!

3. சூனியம்

--------------------------------------------------------------------------------
........அந்த ஷைத்தான்கள்தாம் மெய்யாகவே காபீர்களாக இருந்தார்கள். மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்து வந்தார்கள் (இவை) பாபிலோனில் உள்ள ஹாரூத், மாரூத் என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கபட்டிருந்தன என்று பலவற்றையும் கற்றுக் கொடுத்தார்கள்) அவ்விருவரும் (சூனியத்தைக் கற்கச் சென்ற) மனிதர்களை நோக்கி நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்றால் நீங்கள் காபீர்களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக் கற்று) நீங்கள் காபீர்களாகி விடவேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை (என்றும் இவ்விதம் கூறிய பின்னரும் இதனை கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை உண்டுபண்ணக்கூடிய உபாயத்தை அவ்விருவரிடமிருந்து கற்றுக் கொள்வார்கள் (என்றும் கூறிக் கொண்டிருந்தார்கள்) அல்லாஹ்வின் கட்டளை இன்றி அதைக் கொண்டு அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்துவிட முடியாது. மேலும் அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக்கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர (விசுவாசத்திற்குப் பதிலாக)அ(ச்சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். (2:102)
என அல்லாஹ் சூனியத்தையும், அதை கற்பவர்களையும் எடுத்துக் காட்டியுள்ளான்.
வழிகேடர்கள் சூனியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
அவர்கள் அந்த வேலையை ''ஹராம்'' என்ற அளவோடு தான் பார்க்கிறார்கள். அது ''குஃப்ருக்குரியது'' என்பதை விளங்கவில்லை. வசியம் செய்யும் கலையைக் கற்கிறார்கள். கணவன் மனைவிக்கிடையில் பிரிவினை உண்டாக்குவதற்கும், பெண்ணை மயக்கித் தங்கள் கெட்ட எண்ணத்தைப் பூர்த்தி செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். இவைகளுக்காக உச்சரிக்கப்படும் வசனங்களில் அனேகமானவை ஷிர்க்கை உண்டுபண்ணக் கூடியனவாக உள்ளன. சூனியக்காரனுக்குரிய தண்டனை அவனைக் கொல்வதாகும். ஏனெனில் அவன் அல்லாஹ்வுக்கு மாறுசெய்து காஃபிராகிவிட்டான். எனவேதான் இஸ்லாம் அவனுக்கு இச்சட்டத்தை வழங்கியுள்ளது.
அழிவின்பால் உங்களை இட்டுச் செல்லக் கூடிய ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்ற நபி மொழியில் இரண்டாவது இடத்தைப் பெறுவது சூனியமாகும். (புகாரி, முஸ்லம், அபுதாவூத், நஸயீ)
மூவர் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்: மதுவில் மூழ்கியிருப்பவன், உறவினரை வெறுப்பவன், சூனியத்தை உண்மைப்படுத்துபவன் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத், ஹாகீம், இப்னுஹிப்பான், அபூயஹ்லா)
உமர் Ë அவர்கள் தன் வஃபாத்திற்கு ஒருவருடத்திற்கு முன், முஸ்லிம் ஆட்சியிலுள்ள கவர்னர்களுக்கு சூனியக்காரனையும், சூனியக்காரியையும் கொல்லும்படி உத்தரவிட்டார்கள் என பஜாலதிப்னு அப்தா Ë அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
சூனியக்காரனுக்குரிய தண்டனை அவனை வாளினால் வெட்டுவதாகும் என ஜூன்துப் Ë அவர்கள் கூறுகிறார்கள். (திர்மிதி)
மந்திரித்தலும், தாயத்துக் கட்டுவதும், நூல் கட்டுவதும் ஷிர்க்காகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், இப்னுஹிப்பான், ஹாகிம்)
முஸ்லிம்களில் சிலர் மந்திரித்துக் கொண்டும், தாயத்து கட்டிக்கொண்டும் திரிகிறார்கள். ''தாயத்து'' தங்களுக்கு ஏற்படும் தீங்குகளை விலக்கும் எனவும் நம்புகிறார்கள். குழந்தைகளுக்கும் அதை கட்டி கண்திருஷ்டி ஏற்படாது என்று நம்புகிறார்கள். அல்லாஹ் நாடியதே நடக்கும் என்ற நம்பிக்கைக்கு இச்செயல்கள் மாறானதாகும். அல்லாஹ்வின் விதியை நம்பாதவர் விசுவாசங்கொண்டவராக முடியாது.
அல்லாஹ் நம் விசுவாசத்தில் தவறேதும் ஏற்படாது பாதுகாப்பானாக!

4. தொழுகையை வீணாக்கி விடுதல்

--------------------------------------------------------------------------------
இவர்களுக்குப் பின்னர் (இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய ஸ்தானத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டனர். இவர்கள் (மறுமையில்) தீமையையே(நரகத்தையே) சந்திப்பார்கள் (19:59)
இவ்வசனத்தில் ''வீணாக்கிவிட்டனர்'' என்ற வசனத்தின் கருத்து தொழாமலே இருந்தவர்கள் என்பதல்ல. ''தொழுகையை அதன் நேரத்தில் தொழாதவர்கள்'' என்பதாகும். என இப்னு அப்பாஸ் Ë அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
தாபியீன்களின் இமாமாகிய ஸயீத் இப்னு முஸையிப் (ரஹ்) அவர்கள் ''வீணாக்கிவிட்டனர்'' என்பதன் கருத்து, அஸர் நேரம் வரை லுஹர் தொழாமலிருப்பதும், மஃரிபு நேரம் வரை அஸர் தொழாமலிருப்பதும், இப்படியே அடுத்த நேரம் வரும் வரை பிற்படுத்துவதாகும் என விளக்குகிறார்கள்.
தங்கள் தொழுகையில் பாராமுகமாயிருக்கும் (நயவஞ்சகமான) தொழுகையாளிகளுக்கு கேடுதான்.(107:4,5)
''தொழுகையில் பாராமுகமாயிருக்கும்'' என்பதன் பொருளென்ன? என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, உரிய நேரத்தில் தொழாது பிற்படுத்துவதாகும்., இவர்களுக்குக் கொடிய வேதனைதரும் ''வைல்'' என்னும் நரகம்தான் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஸஅதிப்னு அபீவக்காஸ் Ë அவர்கள் கூறுகிறார்கள். (பஸ்ஸார்)
''வைல்'' என்பது நரகத்திலுள்ள ஓர் ஓடையாகும். இவ்வுலகத்தில் உள்ள மலைகளையே அதில் போட்டால்கூட அவைகளும் உருகிவிடக்கூடிய அளவுக்கு உஷ்ணத்தை உடையது அது.
தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் பாராமுகமாக இருப்பவனுக்கு இந்த ''வைல்'' என்னும் ஓடையில் நுழையும் தண்டனையுண்டு என்று கூறப்படுகிறது.
விசுவாசிகளே! உங்களுடைய பொருள்களும், சந்ததிகளும் அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து
உங்களைத் திருப்பிவிடவேண்டாம். எவரேனும் இவ்வாறு செய்தால் அத்தகையோர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர் தாம். (63:9)
இவ்வசனத்தில் ''அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து'' என்று கூறப்பட்டிருப்பது ''தொழுகையை'' யாகும் என, குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். எவருடைய பொருள், குடும்பம், தொழில் ஆகியவை தொழுகையை நிறைவேற்ற முடியாதவாறு அவரை தடுக்கின்றனவோ, அவர் நஷ்டமடைந்தவராகிறார். நஷ்டம் என்பது மறுமையின் நற்பாக்கியம் கிடைக்காமல் போவதாகும்.
மறுமையில் முதலாவதாக மனிதனிடம் தொழுகையைப் பற்றித்தான் கேள்வி கேட்கப்படும் தொழுகை ஒழுங்காக நிறைவேற்றப்பட்டிருந்தால் வெற்றியடைந்த நற்பாக்கியவானாவான். தொழுகையில் குறைபாடுள்ளவன் நஷ்டமடைந்த துர்ப்பாக்கியவானாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், திhமிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)
தொழுகையின் முக்கியத்துவம்
1. (நபியே! யுத்த முனையில்) நீரும் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு நீர் தொழவைக்க (இமாமாக முன்) நின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (தொழ) நிற்கட்டும், மேலும் தங்களுடைய ஆயுதங்களை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். உம்முடன் இவர்கள் ஸஜ்தா செய்து முடித்து விட்டால் அவர்கள் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும், (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உம்முடன் (சேர்ந்து) தொழவும், (ஏனென்றால்) நீங்கள் உங்கள் பொருட்களிலிருந்தும், உங்கள் ஆயுதங்களிலிருந்தும் கவனக்குறைவாக இருந்து விட்டால், உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து தாக்க வேண்டுமென்று அந்நிராகரிப்போர் விரும்புகின்றனர். (4:102)
2. இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து, அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது(ஸல்) É அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது., தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது. ஸக்காத் கொடுப்பது, ஹஐ; செய்வது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
3. நாளை மறுமையில் தொழுகையைப்பற்றித்;தான் ஓர் அடியானிடத்தில் முதலில் விசாரிக்கப்படும், அது சரியாக இருந்தால் மற்ற எல்லா வணக்கங்களும் சரியாக இருக்கும், அது தவறாக இருந்தால் மற்ற எல்லா வணக்கங்களும் தவறாக இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தப்ரானி)
தொழுகையை விடுவது ''நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகும்''
1. சுவனவாசிகள் குற்றவாளிகளிpடம் கேட்பார்கள் உங்களை ''ஸகர்'' என்ற நரகத்தில் நுழையவைத்தது எது? (என்று) அதற்கவர்கள், ''தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை'' என்று கூறுவார்கள். (74:40-43)
2. இவர்களுக்குப் பின்னர் (வழிகெட்ட) தீய பின் தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை(த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள். (19:59)
3. யார் தொழுகையை, பாதுகாத்து (தொழுகின்றாரோ) அது அவருக்கு மறுமையில் ஒளியாகவும், அத்தாட்சியாகவும், பாதுகாப்பாகவும் ஆகிவிடும். யார் தொழுகையைப் பேணித் (தொழ வில்லையோ) அது அவருக்கு ஒளியாகவோ, அத்தாட்சியாகவோ, பாதுகாப்பாகவோ இருக்காது. இன்னும் அவர் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், தப்ரானி)
4. எங்களுக்கும், அவர்களுக்கும் (காஃபிர்களுக்கும்) இடையில் உள்ள உடன்படிக்கை தொழுகையாகும், எவன் தொழுகையை விட்டானோ அவன் காஃபிராகிவிட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், முஸ்லிம்,அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், ஹாகிம்)
5. இஸ்லாத்துக்கும், குஃப்ருக்கும் (ஓர் இறைவிசுவாசிக்கும், நிராகரிப்பாளனுக்கும்) இடையிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதாகும் (தொழுகையை விட்டவன் குஃப்ரில் இணைந்தவனாகிறான்) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், ஹாகிம், தப்ரானீ)
6. ''தொழுகையைத்தவிர'' மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் ஏகோபித்த முடிவெடுக்கவே இல்லை. (திர்மிதி)
7. எவனது அஸர் தொழுகை தவறி விடுகிறதோ அவனது நற்செயல்கள் யாவும் அழிந்து விடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
8. மனமுரண்டாக எவன் தொழுகையை விடுகிறானோ அவன் அல்லாஹ்வின் பாதுகாப்பிலிருந்து நீங்கியவனாகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், பைஹகீ, இப்னுமாஜா, தப்ரானீ)
9. அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு நாயன் இல்லை என்றும், முஹம்மது(ஸல்) É அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறும் வரையிலும், தொழுகையை நிலை நாட்டி ஸக்காத்துக் கொடுக்கும் வரையிலும், நான் மனிதர்களுடன் போராடும்படி கட்டளையிடப்பட்டுள்ளேன். இவைகளை நிறைவேற்றுபவர்கள் இஸ்லாத்தின் சட்டப்படி தண்டனைக்குரிய செயல்களைச் செய்யாதவரை, அவர்கள் தங்களது உயிர், உடமை ஆகியவைகளுக்கு என்னிடம் பாதுகாப்புப் பெறுவார்கள் அவர்களைப் பற்றிய கணக்கு (தீர்ப்பு) எல்லாம் வல்ல அல்லாஹ் இடத்திலே இருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
10. நபி(ஸல்) அவர்கள் இந்நால்வரின் பெயர்களையும் குறிப்பிட்டுக்கூறியதன் காரணம் என்னவெனில், பொருளீட்டல், அதிகாரம் செலுத்துதல், அரசு ஊழியஞ் செய்தல், வியாபாரம் செய்தல் ஆகியவைகளினால் யாராவது தொழுகையை விட்டிருந்தால், பொருளீட்டுவதிலேயே காலத்தைக் கழிப்பவன் காரூனுடனும், அதிகாரம் செலுத்துபவன் ஃபிர்அவ்னுடனும், அரசு ஊழியன் ஹாமானுடனும், வியாபாரி உபையிப்னு கலப்புடனும் இருப்பர் எனச் சுட்டிக்காட்டுவதற்கேயாகும் என்று சில அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றார்கள்.
கலீஃபா உமர் Ê அவர்கள் விரோதியினால் குத்தப்பட்டுப் படுக்கையிலிருக்கும் போது 'அமீருல் மூமினீன் அவர்களே! தொழுகையைக் கவனியுங்கள்' என்று கூறப்பட்டது. ஆம்! தொழுகை இல்லாதவனுக்கு இஸ்லாத்தில் உரிமையில்லை எனக்கூறிவிட்டு ''இரத்தம் ஓடிக் கொண்டிருந்த நிலையிலும்'' தொழுகையை நிறைவேற்றினார்கள்.
மூவருடைய தொழுகையை அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டான்
1. ஜமாஅத்தினரின் வெறுப்புக்குரிய இமாமின் தொழுகை.
2. சுதந்திரமானவனை அடிமையாக்கிக் கொண்டவரின் தொழுகை.
3. நேரம் தவறித் தொழுபவரின் தொழுகை என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், இப்னுமாஜா)
எவன் காரணமின்றி இரண்டு தொழுகையைச் சேர்த்து, தொழுதானோ அவன் பெரும் பாவங்களின் வாசலுக்கு வந்தவனாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஹாகிம்)
''குழந்தைகளைத் தொழும்படி ஏவுவது'' எப்போது?
ஏழு வயதானவுடன் உங்கள் குழந்தைகளை தொழும்படி ஏவுங்கள், பத்து வயதானால் அடித்து தொழ வையுங்கள். ஆண், பெண் குழந்தைகளைப் படுக்கையில் பிரித்து விடுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், இப்னுமாஜா)
அவசர அவசரமாகத் தொழுதல்
தொழுகையில் ருகூஉ, சுஜூதுகளில் போதுமான அளவு தாமதம் செய்யாது (நிதானமின்றி) அவசரமாகத் தொழுபவரின் தொழுகை சேராது.
ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது ஒரு மனிதர் அங்குவந்து தொழுதுவிட்டு நபி(ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் அதற்குப் பதில் கூறிவிட்டு மீண்டும் தொழுவீ-----ராக! என்றார்கள். அம்மனிதர் இரண்டாவது முறையும் தொழுதுவிட்டு நபி(ஸல்) அவர்களுக்குச் சலாம் கூறினார். நபி அவர்கள் சலாமுக்குப் பதிலளித்துவிட்டு மீண்டும் தொழுவீராக! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதைவிட சிறப்பாக தொழுவது எப்படியென்று எனக்குத் தெரியாது. எனக்கு சொல்லி (கற்றுத்) தாருங்கள்! என்றார். நீர் தொழுகைக்காக நின்று தக்பீPர் கட்டியவுடன் குர்ஆனில் உமக்குத் தெரிந்த இலேசான வசனங்களை ஓதிக்கொள்ளும், பின் ருகூஉ செய்து அதில் தாமதம் செய்வீராக, பிறகு நேராக நிற்குமளவிற்கு நிலைக்கு வந்து அதில் தாமதிப்பீராக, பின்னர் சுஜூது செய்து அதிலும் தாமதிப்பீராக, அதன் பின் இருப்புக்கு வந்து அதில் தாமதிப்பீராக, இரண்டாவது சுஜூது செய்து அதில் தாமதித்துக் கொள்வீராக. இவ்வாறே எல்லாத் தொழுகைகளையும், நிதானமாக நிறைவேற்றுவீராக! என நபி அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். (புகாரி, முஸ்லிம்)
ருகூஉ, சுஜூதுகளில் உறுப்பு (முதுகு) நேராக அமையும்வரை ஒருவரின் தொழுகை கூடாது என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி)
பர்ளான தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதின் அவசியமும் அதன் சிறப்பும்
1. நபி(ஸல்) அவர்;களிடம் கண்தெரியாத ஒரு மனிதர் (நபித் தோழர்) வந்து அல்லாஹ்வின் தூதரே! ''என்னை பள்ளிக்கு அழைத்து வருவதற்கு யாருமில்லை'' (என்று சொல்லி) வீட்டில் (தனிமையில்) தொழுவதற்கு அனுமதி கேட்டார்கள், நபியவர்களும் அனுமதி கொடுத்து விட்டார்கள். அந்த மனிதர் (நபித் தோழர்) திரும்பி செல்லும் போது அவரை அழைத்து பாங்கு சப்தம் கேட்கின்றதா? என வினவினார்கள், அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் தொழுகைக்கு (பள்ளிக்கு) கண்டிப்பாக வரவேண்டும் என்றார்கள். (முஸ்லிம்)
2. தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு ''தொழுகையை தொழவைப்பதற்காக ஒருவரை ஏற்படுத்திவிட்டு'' தொழுகைக்கு வராதவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் விடுகளை எரித்து விடலாமென நான் முடிவு செய்தேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
3. தனித்து தொழுவதை விட கூட்டமாக (ஜமாஅத்தாகத் தொழும்) தொழுகை 27 மடங்கு தரத்தில் சிறந்ததாகும், என அல்லாஹ்வின் தூதர் நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
4. உங்களில் ஒருவர் தனித்துத் தொழுவதை விட, கூட்டாகத் தொழுவது 25 மடங்கு சிறந்ததாகும் என அல்லாஹ்வின் தூதர் நபி அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் நஸாயி)
விளக்கம்:- 27 மடங்கு மற்றும் 25 மடங்கு என இரண்டு விதமான அறிவிப்புகள் ஹதீஸில் வந்திருக்கின்றன. இதற்கு விளக்கமளிக்கும் போது ஹாபில் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பல விளக்கங்களை அளித்துள்ளார்கள். அவைகளில் சிலவற்றை இங்கு தருகின்றேன்.
- பள்ளி தூரமாக இருந்தால் 27 மடங்கு நன்மையும், அருகில் இருந்தால் 25 மடங்கு நன்மையும்.
- ஜமாஅத் நடக்கும் பள்ளியில் 27 மடங்கு நன்மையும் தனி இடத்தில் தொழுதால் 25 மடங்கு நன்மையும்.
- தொழுகையை நிறைவேற்றி விட்டு அடுத்த தொழுகையை எதிர்பார்த்திருப்பவருக்கு 27 மடங்கு சிறப்பும் எதிர்பார்த்திராது திடீரென வந்து தொழுது செல்பவருக்கு 25 மடங்கு சிறப்பும்.
- ஜமாஅத்தின் தொடக்கத்திலேயே இருந்தவருக்கு 27 மடங்கு சிறப்பும் பிந்தி வந்தவருக்கு 25 மடங்கு சிறப்பும்.
- சப்தமிட்டு ஓதும் தொழுகையில் தொழுபவருக்கு 27 மடங்கு சிறப்பும் அமைதியாக தொழும் தொழுகையில் தொழுபவருக்கு 25 மடங்கு சிறப்பும் எனப் பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார்கள். இவைகள் அனைத்தும் விளக்கங்கள்தான். நபி அவர்கள் இவ்வாறு வித்தியாசப்படுத்திக் கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்க.
எனவே பர்ளான தொழுகைகளை பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுவதால் 27 அல்லது 25 மடங்கு நன்மைகள் உண்டு என்பதை அறியலாம். அதிகமாகக் கிடைக்கும் நன்மைகளைப் பெற்றிட பாங்கு சொல்லப்பட்டதும் பள்ளிக்குச் சென்று அங்கு நடைபெறும் ஜமாஅத்தில் கலந்து, தொழுகையை நிறைவேற்றி, அதிக நன்மைகளைப் பெற பழகிக் கொள்ள வேண்டும்.
கடமையான ஒவ்வொரு தொழுகைகளையம் உரிய நேரங்களில் தொழுவது மிக அவசியமாகும்
1. நிச்சயமாக தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது. (4:103)
2. அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது என்று நான் நபி(ஸல்) அவர்களிடம்; கேட்டேன், தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் - அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது Ê (புகாரி)

5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்

--------------------------------------------------------------------------------
அல்லாஹ் தன் அருளைக் கொண்டு அவர்களுக்கு அளித்த பொருட்களில் எவர்கள் உலோபித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிவிடவேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே முடியும். எதை அவர்கள் உலோபித்தனம் செய்தார்களோ அதைக் கொண்டு மறுமை நாளில் அவர்கள் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள். (3:180)
....எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேர்த்து வைத்துக் கொண்டு அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றார்களோ அவர்களுக்கு (நபியே) நீர் துன்புறுத்தும் வேதனையை நன்மாராயம் கூறுவீராக! (பொன,; வெள்ளியாகிய) அவற்றை நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு, உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை இவைதாம். ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றைச் (சிறிது) சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும் நாளை (நபியே நீர்) அவர்களுக்கு ஞாபகமூட்டும் (9:34,35)
''.....இணை வைப்போருக்குக் கேடுதான். அவர்கள் ஸக்காத்து கொடுக்கமாட்டார்கள் மறுமையையும் நிராகரிப்பவர்களும் அவர்களே! என அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான். (41:6,7)
இங்கு ஸக்காத் கொடுக்காதவர்கள் இணை வைப்போர் (முஷ்ரிகீன்கள்) எனக் கூறியிருப்பதைக் கவனியுங்கள்.
பொன், வெள்ளியுடையவன் அதன் அளவுக்கு ஸக்காத் கொடுக்காவிட்டால் மறுமையில் அவை உருக்கப்பட்டு அவன் நெற்றியிலும், விலாக்களிலும், முதுகிலும் சூடுபோடப்படும். ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்யப்படும் மறுமையில் ஒரு நாள் என்பது ஐம்பதுனாயிரம் வருடங்களாகும். கேள்வி கணக்குக் கேட்கப்பட்டு மனிதர்கள் விசாரிக்கப்பட்டு முடியும் வரை. இவன் நரகத்திற்கோ, சுவர்க்கத்திற்கோ போகும்வரை இது நடந்து கொண்டேயிருக்கும் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், நஸயீ)
அப்போது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகையுள்ளவன் நிலையென்ன? எனக் கேட்டார். ஒட்டகை உள்ளவன் அதன் ஸக்காத்தை நிறைவேற்றாவிட்டால், பாறை போன்ற தரையில் அவனைப் படுக்க வைத்து, ஒட்டகக் கூட்டத்தின் ஒவ்வொரு ஒட்டகையும் அவனை மிதித்துச் சென்று கொண்டேயிருக்கும். கடைசி ஒட்டகம் சென்றவுடன் மீண்டும் அவை திருப்பி மிதிக்கவிடப்படும். இவ்வாறே அவனுக்கு மறுமையில் தீர்ப்புச் சொல்லப்படும் வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் என நபி அவர்கள் கூறினார்கள். ஆடு, மாடுகளின் நிலையென்ன என்று இன்னொருவர் கேட்டார். அவர்களும் அவைகளுக்குரிய ஸக்காத்தை நிறைவேற்றாவிட்டால் ஒட்டகையின் ஸக்காத்தைக் கொடுக்காதவன் போன்றே வேதனை செய்யப்படுவான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், நஸயீ)
கொடுமை புரியும் தலைவன், ஸக்காத்து கொடுக்காதவன், பெருமையடிக்கும் ஏழை ஆகிய மூவரும் தான் நரகில் முதலாவதாக நுழைவார்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு குஸைமா, இப்னுஹிப்பான்)

6. நோன்பை விடுதல்

--------------------------------------------------------------------------------
விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டிருந்த பிரகாரமே உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதியாக்கப்பட்டிருக்கின்றது (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம். இவ்விதம் விதிக்கப்பட்ட நோன்பு சில குறிப்பிட்ட நாட்களில் தான் (நோற்பது கடமையாகும்) (2:183,184)
இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து. அவை கலிமா, தொழுகை, ஸக்காத், ஹஜ்ஜு, நோன்பு என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
எவன் ஒருவன் எவ்வித காரணமுமின்றி ரமழான் மாதத்தில் நோன்பை விடுகிறானோ அவன், ஏனைய நாட்கள் எல்லாம் நோன்பு வைத்தாலும் அதற்கு சமமாகாது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, இப்னுகுஸைமா)
நோன்பை விடும் பெரும்பாவத்திலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!

7. ஹஜ்ஜு செய்யாமை

--------------------------------------------------------------------------------
.....எவர்கள் அங்கு யாத்திரை செல்ல, சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அவ்வாலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும்... (3:97)
என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். வசதிபடைத்தவர்கள் ஹஜ்ஜு செய்ய வேண்டும் என்பதை இவ்வசனம் வலியுறுத்துகிறது. அல்லாஹ் கடமையாக்கிய ஒன்றைச் செய்யாமல் விடுவது பெரும் பாவங்களைச்சேரும். ஆகவே வசதியுள்ளவர்கள் ஹஜ்ஜு செய்யாமல் விடுவது பெரும் பாவமாகும்.
ஹஜ்ஜு செய்வதற்கு, தகுதியுடையவனாக இருந்து ஹஜ்ஜு, செய்யாமலிருப்பவன் யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ மரணிப்பான். ஏனெனில், முஸ்லிமாக மரணிப்பவனாக இருந்தால் முன் கூறப்பட்ட குர்ஆன் வசனப்படி ஹஜ்ஜை நிறைவேற்றிpயிருப்பான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.
என் ஆட்சியின் கீழுள்ள நகரங்களில் வசித்துக் கொண்டு, ஹஜ்ஜூச் செய்ய வசதியிருந்தும் அதை நிறைவேற்றாத முஸ்லிம்கள் மீது, ''முஸ்லிம் அல்லாதவர்கள் மீது விதிக்கும் ஜிஸ்யா'' என்னும் (பிற மதத்தவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தலைவரி)யை விதிக்க, கட்டளை பிறப்பிக்க நினைக்கிறேன். ஏனெனில், அவர்கள் முஸ்லிம்களல்ல என உமர் Ê அவர்கள் கூறுகிறார்கள்.
என் அயல் வீட்டானாயினும், வசதிபடைத்த பின் ஹஜ்ஜு செய்யாமல் இறந்தவனுக்காக நடத்தப்படும் தொழுகையில் நான் கலந்து கொள்ளமாட்டேன் என சயீத் இப்னு ஜுபைர் Ê அவர்கள் கூறுகிறார்கள்.
ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றாதவன் மீது இவைபோன்ற அனேக எச்சரிக்கைகள் வந்துள்ளன. ஹஜ்ஜை முறையாக நிறைவேற்றும் கூட்டத்தில் அல்லாஹ் நம் அனைவரையும் சேர்த்தருள்வானாக!

8. பெற்றோரைத் துன்புறுத்துதல்.

--------------------------------------------------------------------------------
(நபியே!) உமது இரட்சகன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை விரட்டவும் வேண்டாம் அவர்களை (நிந்தனையாக)ச் 'சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசவும். அவர்களிடத்தில் மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! மேலும், என் இறைவனே! ''நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்த பிரகாரமே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும், அருளும் பொழிவாயாக!'' என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (17:23,24)
...... (மனிதனே!) நீ எனக்கும் உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்துவாயாக! (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதாயிருக்கிறது. (31:14)
எப்பொருளையும் அவனுக்கு இணையாக்காதீர்கள் பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள் (6:151)
எனவும், அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். இந்த வசனத்தில், தனக்கு நன்றி செலுத்தும்படி கூறியபின் பெற்றோருக்கும் நன்றி செலுத்தும்படி இணைத்துக் கூறியுள்ளதை நன்கு கவனியுங்கள்.
மூன்று குர்ஆன் வசனங்கள், ஒன்றுடன் இன்னொன்றை இணைத்து வந்துள்ளன. ஒன்றை விட்டு மற்றொன்றைச் செய்தால் அதை அல்லாஹ் ஏற்கமாட்டான்.
அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள் அவன் தூதருக்கும் வழிப்படுங்கள். (3:32)
அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவன் அவன் தூதருக்கு வழிப்படாவிட்டால் அவனை அல்லாஹ் ஏற்கமாட்டான்.
தொழுகையை நிலை நிறுத்துங்கள் ஸக்காத்தையும் கொடுங்கள் (2:43)
தொழுதுவரும் செல்வந்தன் ஸக்காத்தை நிறைவேற்றாவிட்டால் அதனையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்.
எனக்கும் உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்தி வருவாயாக (31:14)
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவன் தாய், தந்தைக்கு நன்றி செலுத்தாவிட்டால் அதையும் அல்லாஹ் ஏற்க மாட்டான் என குர்ஆன் விளக்கத்தின் தலைவராகிய இப்னு அப்பாஸ் Ê அவர்கள் கூறுகிறார்கள்.
பொற்றோரின் திருப்தி அல்லாஹ்வின் திருப்தியாகும். பெற்றோரின் வெறுப்பு அல்லாஹ்வின் வெறுப்பாகும் (திர்மிதீ, இப்னுஹிப்பான், ஹாகிம்)
தாயின் காலடியில் சுவர்க்கமிருக்கிறது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (நஸயீ, இப்னுமாஜா)
எவ்வித சந்தேகமுமின்றி மூவரின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படும்.
1. அநீதி இழைக்கப்பட்டவன் பிரார்த்தனை
2. பிரயாணியின் பிரார்த்தனை
3. பெற்றோர் தம் மக்களுக்காக செய்யும் பிரார்த்தனை என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், திர்மிதீ, தப்ரானீ)
தாயின் மகத்துவம் மிகப் பெரியது. கர்ப்பம் தரித்தது முதல் பிரசவம் வரை எத்தனையோ துன்பங்களை அனுபவிக்கிறாள். பிரசவத்தின் போது ஜீவமரணப் போராட்டம் நடத்துகிறாள். அதன் பின் இரவு பகலாக விழித்திருந்து ஓர் ''ஈ'' கூட குழந்தையின் மீது மொய்க்கவிடாமல் பேணிக் காக்கிறாள். குழந்தையின் கழிவுகளைத் தன் கையினால் துப்புரவு செய்கிறாள். குழந்தை அழுதால் தூக்கம் கலைந்து எழுகிறாள். குழந்தையின் சுகமே தன் சுகம் என எண்ணுகிறாள். குழந்தை விரும்புவதைக் கொடுக்கிறாள். குழந்தை உடல் ஊனமுற்று இருந்தால் இரட்டிப்பு அன்பைச் சொரிகிறாள். இந்த உலகத்தில் தன் குழந்தைதான் உயர்ந்தது என ஒவ்வொரு தாயும் எண்ணுகிறாள். தத்தித் தள்ளாடி தளிர் நடைபோடும் போது எங்கே குழந்தை விழுந்து விடுமோ எனப் பதறும் தாய், பெரியவனானதும் அரும்பெரும் சாதனைகள் புரியமாட்டானா, நிலை நிறுத்தமாட்டானா என ஏங்குகிறாள்.
இவ்வாறு தாயின் மகத்துவத்தைக் அடுக்கிக் கொண்டே போகலாம். ''இத்தகைய தாய் வயோதிகமடைந்ததும் உதாசீனம் செய்யும் மக்கள் எத்தகைய துன்பங்களுக்காளாவார்கள்'' என்பதை நாம் எடுத்துக் காட்டவேண்டியதில்லை.
எல்லாம் வல்ல அல்லாஹ் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்து நல்லருள் பெற உதவி செய்வானாக!.

9. உறவினர்களை வெறுத்தல்

--------------------------------------------------------------------------------
..... அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே (நீங்கள் உங்களுக்குள்) ஒருவருக்கொருவர் (வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்புடைய உறவினர்களுக்கும் (மதிப்பளியுங்கள்) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (4:1)
(நயவஞ்சகர்களே!) நீங்கள் (யுத்தத்திற்கு வராது) விலகிக் கொண்டதன் பின்னர் நீங்கள் பூமியில் சென்று விஷமம் செய்து உங்கள் சுற்றத்தாரைத் துண்டித்துவிடப் பார்க்கின்றீர்களா? (47:22)
அவர்கள் (எத்தகையோரென்றால்) அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுவார்களேயன்றி (தாங்கள் செய்த) உடன்படிக்கையை முறித்துவிடமாட்டார்கள். மேலும் அவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி கட்டளையிட்டதை சேர்த்து வைப்பார்கள். தங்கள் இரட்சகனுக்கு பயந்து நடப்பார்கள் மேலும் (மறுமையில் கேட்கப்படும்) கொடிய கேள்விகளைப் பற்றி (எந் நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள் (13:20,21)
எவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை அதனை உறுதிப்படுத்திய பின்னரும் முறித்து விடுகிறார்களோ அவர்களுக்கும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் பூமியில் விஷமம் செய்து கொண்டு அலைகிறார்களோ அவர்களுக்கும் (அல்லாஹ்வின்) சாபந்தான் கிடைக்கும். அன்றி அவர்களுக்கு மிகக் கெட்ட வீடும் (சித்தப்படுத்தப்பட்டு) இருக்கிறது (13:25) எனவும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். பிந்திய இரண்டு வசனங்களிலும் 'சேர்த்து வைக்கும்படி' என்றிருப்பது உறவினர்களைச் சேர்த்துக் கொள்வதாகும் என்ற கருத்தினை குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
உறவினர்களை வெறுப்பவன் சுவனம் புக மாட்டான் (புகாரி, முஸ்லிம்)
எவன் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டானோ அவன், தன் உறவினர்களை இணைத்து நடப்பானாக! (புகாரி, அபூதாவூத், திர்மிதீ)
அல்லாஹ் அவனுக்கு வழிப்பட்டு நடந்த கூட்டத்தில் நம் அனைவரையும் சேர்த்தருள்வானாக!

10. விபச்சாரம்

--------------------------------------------------------------------------------
(விசுவாசிகளே!) நீங்கள் விபச்சாரத்தின் அருகேகூட நெருங்க வேண்டாம். ஏனென்றால் அது மானக் கேடானதாகவும் தீய வழியாகவுமிருக்கிறது (17:32)
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் ''ஆண்டவன்'' என்று அழைக்கமாட்டார்கள். அல்லாஹ் (கொலை செய்யக்கூடாதென்று) தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றி, கொலை செய்து விடமாட்டார்கள். விபச்சாரமும் செய்ய மாட்டார்கள். எவனேனும் இவைகளைச் செய்ய முற்பட்டால் அவன் (அந்தப் பாவத்திற்குரிய) தண்டனையை அடையநேரிடும். மறுமை நாளில் அவனுடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும் மேலும் இழிவுபட்டவனாக அதில் என்றென்றும் தங்கிவிடுவான். (25:68,69)
விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசை அடி அடியுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் விதித்த இக் கட்டளையை நிறைவேற்றுவதில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது. அவ்விருவருக்கு(த் தண்டனையாக) வேதனை கொடுக்கும் சமயத்தில் விசுவாசிகளில் ஒரு குழுவினர் (அதற்குச்) சாட்சியாக அங்கு இருக்கவும். (24:2) எனவும் அல்லாஹ் குர்அனில் கூறுகிறான்.
இது உலகத்திலளிக்கப்படும் தண்டனையாகும். இந்த, தண்டனை விவாகமாகாத ஆண், பெண்ணுக்குரியதாகும். விவாகம் செய்தவர்களாயிருப்பின் அவ்விருவர் மீதும் சாகும் வரை கல்லெறியப்படும். இவ்வாறு இவ்வுலகில் தண்டனை பெறாது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்காமல் இறந்தால் மறுமையில் அதற்காக அவர்களுக்கு தண்டனை உண்டு.
விபச்சாரம் செய்யும் கிழவன், பொய்யுரைக்கும் மன்னன், பெருமையடிக்கும் பிச்சைக்காரன் ஆகிய மூவரிடமும் மறுமையில் அல்லாஹ் பேசமாட்டான், அவர்களின் பாவங்களை மன்னிக்க மாட்டான், அவர்களுக்கு, கடுமையான வேதனையுண்டு என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ)
கண்ணின் விபச்சாரம் அந்நியப் பெண்ணைப் பார்த்தல், நாவின் விபச்சாரம் (அவளுடன்) பேசுதல், கையின் விபச்சாரம் (பெண்ணைப்) பிடித்தல், காலின் விபச்சாரம் (அவளைத் தேடி) நடத்தல். மர்மஸ்தானங்கள் இவைகளை உண்மைப்படுத்துகின்றன அல்லது பொய்யாக்குகின்றன என நபி அவர்கள் கூறியுள்ளார்கள.; (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)
எவன் மது அருந்திய நிலையில் மரணித்தானோ அவனுக்கு நரகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் 'கூத்தா' என்னும் நீர் புகட்டப்படும். அந்த நீர், விபச்சாரம் புரிந்த பெண்களின் மர்மஸ்தானத்திலிருந்து வடியும் சீழும் ஊணுமும் ஆகும். இதையே, மதுவில் ஊற்றி இறந்தவனுக்கு கொடுக்கப்படும் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (அஹமத், அபூயஹ்லா, இப்னுஹிப்பான், ஹாகிம்)
கருணையுள்ள அல்லாஹ் இக்கொடிய பாவத்தில் ஈடுபடாதிருக்க உதவி செய்வானாக!.

11. ஆண் புணர்ச்சி

--------------------------------------------------------------------------------
ஆணுடன் ஆண் இன்பம் அனுபவிப்பதையே ''ஆண் புணர்ச்சி'' என்று கூறப்படும். இதுவும் ஒரு கொடிய பாவமாகும். இத்தகைய பாவம் புரிந்து கொண்டிருந்த சமூகத்திற்கு அனுப்பப்பட்ட நபியின் பெயர் லூத் (அலை) அவர்கள். இவர்கள் இப்ராஹிம் (அலை) அவர்களின் காலத்தவர் ஆவார்கள்.
லூத் (அலை) அவர்களின் கூட்டத்தினர் பெண்ணை விவாகஞ் செய்து இன்பம் அனுபவிப்பதை வெறுத்து ஆணுடன் இன்பம் அனுபவிப்பதையே விரும்பினர். இது இயற்கைக்கு விரோதமானது, கொடிய பாவத்திற்குரியது. எனவே இவ்வாறு செய்யாதீர்கள்! என லூத் (அலை) அவர்கள் அம்மக்களுக்கு உபதேசம் செய்தார்கள் அதை அம்மக்கள் உதாசீனம் செய்தனர். அல்லாஹ்வின் தண்டனை இவ்வுலகிலேயே அவர்களுக்குக் கிடைத்தது. இதை அல்லாஹ் நமக்கு எடுத்துக்காட்டி நீங்களும் அவர்களைப் போன்று ''ஆண் புணர்ச்சி'' செய்து என் கோபத்திற்குள்ளாக வேண்டாம்! என அறிவுறுத்தியுள்ளான். (15:72-77)
நம்முடைய கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரை மேல் கீழாகக் கவிழ்த்து விட்டோம். (அதற்கு முன்னர்) அவர்கள் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம். (எறியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றிலும்) உம் இறைவனால் அடையாளம் இடப்பட்டிருந்தது. (புரட்டப்பட்ட) அவ்வூர் (மக்காவில் வாழும்) இந்த அக்கிரமக்காரர்களுக்கு வெகுதூரமுமல்ல (விரும்பினால் அதனை அவர்கள் நேரில் பார்த்துக் கொள்ளலாம்). (11:82,83)
(தீய காரியத்திற்காக) அகிலத்தாரில் ஆடவர்களிடம் வருகின்றீர்களா? உங்கள் இரட்சகன் உங்களின் மனைவிகளிலிருந்து உங்களுக்கெனப் படைத்ததையும் நீங்கள் விட்டுவிடுகிறீர்கள். இல்லை! நீங்கள் (அல்லாஹ்வின்) வரம்பைக் கடந்த சமூகத்தவர்கள் (என்றும் கூறினார்) (26:165,166)
லூத்தையும் (நபியாக்கி) அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்து, தீயகாரியங்களைச் செய்து கொண்டிருந்த ஊரிலிருந்தும் நாம் அவரை இரட்சித்துக் கொண்டோம். நிச்சயமாக அவ்வூரார் (மனிதர்களில்) மிகக் கெட்ட ஜனங்களாகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர். (21:74)
லூத் நபியின் கூட்டத்தினர் செய்த கொடிய (ஆண் புணர்ச்சி) எனும் பாவத்தைச் செய்பவர்களைக் கண்டால் இருவரையும் கொலை செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)
ஆணுடைய அல்லது பெண்ணுடைய பின் துவாரத்தில் புணர்ந்தவனை அல்லாஹ் மறுமையில் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் எனவும் நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, நஸயீ, இப்னுஹிப்பான்)
இக்கொடிய பெரும் பாவத்திலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!

12. வட்டி

--------------------------------------------------------------------------------
விசுவாசிகளே! (அசலுக்கு அதிகமாவும், வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக் கூடிய வட்டியை (வாங்கி) உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதனைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (3:130)
வட்டியை (வாங்கி) உண்ணுகிறவர்கள் ஷைத்தான் பிடித்து பித்தங் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழுப்பப்படமாட்டார்கள். ஏனென்றால் வணிகமும் வட்டியைப் போன்றதுதான் (எனவே வட்டி வாங்குவதில் தவறில்லை) என இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கிவைத்து வட்டியைத் தடுத்துவிட்டான்... (2:275)
இரத்த ஆறு ஒன்றில் நெருப்புக் கற்களை விழுங்கிக் கொண்டு அதைவிட்டும் வெளியேற முடியாமல் தத்தளித்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் சிலரைக் கண்டு ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இவர்கள் யார்? எனக் கேட்டேன். இவர்கள் தான் வட்டி சாப்பிட்டவர்கள். மறுமையில் விசாரணை நடைபெறும் வரை இவர்களுக்கு இந்த வேதனை கொடுக்கப்படுகிறது என ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்ததாக நபி(ஸல்) அவர்கள்; கூறினார்கள். (புகாரி)
எந்தக் கூட்டத்தில் வட்டி அதிகரிக்கிறதோ அங்கு மனநோய் அதிகரிக்கும். எங்கு விபச்சாரம் அதிகரிக்கிறதோ அங்கு மரணங்கள் அதிகரிக்கும். எங்கு அளவை நிறுவைகளில் மோசடி நடைபெறுகிறதோ அங்கு அல்லாஹ் மழையைக் குறைத்து விடுவான் என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, பைஹகீ, பஸ்ஸார்)
வட்டியின் பாவங்கள் எழுபது பிரிவுகளையுடையன. அதில் மிகவும் இலேசானது ஒருவன் தன் தாயைப் புணர்வது போன்ற பாவமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, பைஹகீ)
வட்டியின் மூலம் சம்பாதிக்கும் ஒரு திர்ஹம் முப்பத்தாறு தடவை விபச்சாரம் செய்யும் பாவத்திற்குச் சமமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (பைஹகீ, இப்னு அபித்துன்யா)

13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்

--------------------------------------------------------------------------------
எவர்கள் அனாதைகளின் பொருட்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கிறார்கள். பின்னர் (மறுமையில்) அவர்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பிளும் நுழைவார்கள். (4:10)
அனாதைகளின் பொருளை அவர்கள் பிராயமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி, தொடாதீர்கள்... (6:152)
நானும் அனாதையைப் பொறுப்பேற்றவனும் சுவர்க்கத்தில் இவ்வாறு இணைந்திருப்போம் எனக்கூறி நபி அவர்கள் சுட்டுவிரலையும், நடுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதி)
அனாதையைப் பொறுப்பேற்பவனும் நானும் சுவர்க்கத்தில் இணைந்து இருப்போம் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

14. அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் பொய்யுரைத்தல்

--------------------------------------------------------------------------------
அல்லாஹ் சொல்லாதவற்றை அல்லாஹ் சொன்னான் என்றும், ரசூலுல்லாஹ் சொல்லாதவற்றை ரசூலுல்லாஹ் சொன்னார்கள் என்றும் கூறுவது பெரும் பாவங்களிலொன்றாகும்.
(நபியே!) அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் மறுமை நாளன்று கருத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்... (39:60)
மறுமையில் முகம் கருத்திருப்பவன் நரகவாதியாவான். அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் நரகவாதி என்பதில் சந்தேகமில்லை. இந்தக் குர்ஆன் வசனம் இதனை உறுதிப்படுத்துகிறது.
மனமுரண்டாக என் மீது பொய்யுரைத்தவனின் தங்குமிடம் நரகமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம் உட்பட மற்றெல்லாக் கிரந்தங்களும்)
பொய்யெனத் தெரிந்தும் என் மீது பொய்யுரைப்பவன் பொய்யனாவான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
என் மீது பொய்யுரைப்பவன் உங்களுக்கு மத்தியில் தன் தேவைக்காகப் பொய்யுரைப்பவனை போன்றவனல்லன் என் மீது பொய்யுரைப்பவனின் தங்குமிடம் நரகமாகும். என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்

--------------------------------------------------------------------------------
விசுவாசிகளே! போரிட அணிவகுத்து வரும் நிராகரிப்போரை சந்தித்தால் நீங்கள் அவர்களுக்குப் புறங்காட்டி ஓடிவிடாதீர்கள். (பின்சென்று எதிரியை) வெட்டுவதற்காகவோ அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்வதற்காகவோ அன்றி எவனேனும் அது சமயம் புறங்காட்(டி ஓ)டினால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுடைய கோபத்திற்குள்ளாகி விடுவான். அவன் தங்குமிடம் நரகம்தான். இன்னும் சென்றடையும் இடத்திலெல்லாம் அது மிகக்கெட்டது. (8:15,16)
....உங்களில் (பொறுமையும்) சகிப்புத்தன்மை(யும்) உடைய இருபது பேர்களிருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொண்டு விடுவார்கள். (8:65)
இந்தக் குர்ஆன் வசனம் இறங்கியது ஒரு முஸ்லிம் இருபது விரோதிகளைக் கொல்லச் சக்தி பெற்றிருக்க வேண்டுமென்பதைக் காட்டுவதற்காகும்.
எனினும் நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு தற்சமயம் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான். ஆகவே உங்களில் (பொறுமையும்) சகிப்புத் தன்மை(யும்) உடைய நூறு பேர்களிருந்தால் (மற்ற) இருநூறு பேர்களை வெற்றி கொண்டு விடுவார்கள் (இத்தகைய) ஆயிரம் பேர்கள் உங்களிலிருந்தால் அல்லாஹ்வின் உதவி கொண்டு (மற்ற) இரண்டாயிரம் பேர்களை வெற்றி கொண்டு விடுவார்கள். அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (8:66)
இந்த குர்ஆன் வசனம் இறங்கியதால் குறைந்தபட்சம் இரு விரோதிகளையாவது கொல்ல, சக்தி பெற்றிருக்க வேண்டும் என்று சலுகை கிடைத்தது என இப்னு அப்பாஸ் Ê அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். (புகாரி)
மேலும் யுத்த களத்தில் ஒரு முஸ்லிம் குறைந்தபட்சம் இரண்டு விரோதிகளையாவது கொல்ல வேண்டுமேயன்றி புறமுதுகு காட்டி ஓடிவிடக்கூடாது. அவ்வாறு ஓடுவது பெரும் பாவங்களிலொன்றாகும்.
அழிவின்பால் உங்களைக் கொண்டு செல்லக்கூடிய ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
1. அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, 2. சூனியம்,
3. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுவது, 4. தண்டனைக்காகவேயன்றி கொலை செய்வது,
5. யுத்த களத்திலிருந்து மரணத்திற்குப் பயந்து ஓடுவது, 6. வட்டி சாப்பிடுதல்,
7. கெட்;ட நினைவுகளற்ற பத்தினிப் பெண்களைப் பற்றி அவதூறு சொல்லுவது (ஆகியவைகளாகும்) என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

16. தலைவன் அநீதி செய்தல்

--------------------------------------------------------------------------------
(அளவுக்கு மீறி) மனிதர்கள் மீது அக்கிரம் செய்து நியாயமின்றி, பூமியில் கொடுமை செய்வோருக்கு எதிராகத்தான் (குற்றஞ் சாட்ட) வழி இருக்கிறது. இத்தகையோருக்கு மிகத்துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)
(நபியே!) ''இந்த அக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பாராமுகமாயிருக்கிறான்'' என நீர் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம் திறந்த கண் திறந்தவாறே இருந்துவிடக் கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும்வரையில்தான். (அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்ததலை குனிய முடியாது (தட்டுக் கெட்டு, பல கோணங்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக்கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது (அதனையே நோக்கிக் கொண்டிருக்கும்) இவர்களுடைய இதயம் திக் பிரமை கொண்டுவிடும். (14:42,43)
அவர்கள் செய்து வந்த எந்த விலக்கப்பட்ட காரியத்தையும் ஒருவருக்கொருவர் தடை செய்யவுமில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்;தவை யாவும் நிச்சயமாக மிகத் தீயவை. (5:79)
எவன் ''சதி'' செய்கிறானோ அவன் எம்மைச் சேர்ந்தவனல்லன் எனவும், நீங்கள் ஒவ்வொருவரும்
மேய்ப்பாளர்களே! உங்கள் பரிபாலனத்தைப் (பொறுப்புகளைப்) பற்றிக் கேட்கப்படுவீர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
எந்தத் தலைவனாவது தன் கீழுள்ளவர்களுக்கு எதிராக, சதி செய்தால் அவன் நரகவாதியாவான் (தப்ரானி)
எவனுக்கு அதிகாரமளிக்கப்பட்டு அதை அவன் முறையாக நிறைவேற்றவில்லையோ அவனுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கிவிடுவான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

17. பெருமை

--------------------------------------------------------------------------------
பெருமை, அகந்தை, மமதை, தற்புகழ்ச்சி, கர்வம் இவையாவும் ஒரே இனத்தைச் சேர்ந்தவையாகும்.
மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள்: (கேள்வி) கணக்கு (கேட்கப்படும்) நாளை நம்பாத கர்வங்கொண்ட (தீயவர்களாகிய உங்கள்) யாவரை விட்டும் என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன். (40:27)
நிச்சயமாக அவன் கர்வங்கொண்டவர்களை விரும்பமாட்டான். (16:23)
(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டும், திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டும் நடக்காதே! கர்வங் கொண்டு பெருமையடிக்கும் யாவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதேயில்லை. (31:18)
இவ்வசனங்கள் மூலம் பெருமை பேசுவது, அகந்தை கொள்வது யாவும் விலக்கப்பட்டுள்ளன.
பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, மனிதர்களுக்கு அது எவ்வகையிலும் பொருந்தாது. கண்ணியம் எனது ஆடை, பெருமை எனது போர்வை என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
முதலாவதாக ஏற்பட்ட பாவம் பெருமையினால் உண்டானதாகும். ஆதமுக்குச் சிரம்பணியுமாறு அல்லாஹ் மலக்குகளுக்குக் கட்டளையிட்டபோது பெருமை கொண்ட இப்லீசைத் தவிர ஏனைய எல்லா மலக்குகளும் சிரம்பணிந்தனர். பெருமையினால் சிரம்பணியாத இப்லீஸ் பின்னர் நிராகபிப்பவனாக (காஃபிராக)வும் ஆகிவிட்டான். அதனால் அல்லாஹ்வினால் சபிக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டான்.
நாம் மலக்குகளை நோக்கி ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து சுஜுது செய்)யுங்கள் எனக்கூறிய போது அவர்கள் பணிந்தார் (சுஜுது செய்தார்)கள், இப்லீஸைத் தவிர. அவனோ பெருமை கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான். (2:34) என அல்லாஹ் கூறியிருப்பது இதற்கு ஆதாரமாக அமைகிறது.
எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை உண்டோ அவன் சுவனம் புகமாட்டான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
நரகவாதிகளைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மமதை கொண்டவன், ஏன் மமதையுள்ள யாவருமே நரகவாதிகள்தான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

18. பொய்ச்சாட்சி கூறல்

--------------------------------------------------------------------------------
விக்கிரக ஆராதனையின் அசுத்தத்திலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள். பொய்யான வார்த்தையிலிருந்தும் தப்பித்துக் கொள்ளுங்கள். (22:30)
அவர்கள் பொய்ச்சாட்சி சொல்லமாட்டார்கள். (25:72) என அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்.
பொய்ச் சாட்சியம் கூறுபவனின் பாதமிரண்டும் மறுமையில் அவன் நரகம் போகும் வரை அசையாமலிருக்கும் என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, ஹாகிம்)

19. மது அருந்துதல்

--------------------------------------------------------------------------------
விசுவாசிகளே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், விக்கிரக ஆராதனையும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க காரியங்களில் (செயல்களில்) உள்ளவையாகும். ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணவும், அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே அவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்ளமாட்டீர்களா? (5:90,91)
மதுவிலக்கு, சம்பந்தமான குர்ஆன் வசனம் வந்ததும் நபித்தோழர்கள் 'மது அருந்துவது ஷிர்க்குக்கு ஒப்பான பெரிய பாவம்' எனத் தெருத் தெருவாகக் கூறிக் கொண்டு போனார்கள் என இப்னு அப்பாஸ் Ê கூறுகிறார்கள். (தப்ரானீ, ஹாகிம்)
எவன் இவ்வுலகில் மது அருந்துகிறானோ அவன் மறுமையில் நரகவாதிகளின் ஊணைக் (சீழை) குடிப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ)
மதுவில் மூழ்கியிருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான் என நபி அவர்கள் கூறினார்கள். (பஸ்ஸார், ஹாகிம்)
அல்லாஹ் என்னுடைய உம்மத்திற்கு மதுவை மருந்தாக ஆக்கவில்லை. (மது சேர்ந்த மருந்தும்கூட ஹராம்) என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகீ, அஹ்மத், ஹாகிம்)
எல்லாம் வல்ல அல்லாஹ் இக்கொடிய பாவத்திலிருந்து நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!.

20. சூது

--------------------------------------------------------------------------------
விசுவாசிகளே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், விக்கிரக ஆராதனையும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றிபெறுவீர்கள். மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களுக்கிடையில் விரோதத்தையும், கோபத்தையும் உண்டுபண்ணவும் அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே அவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (5:90,91)
இங்கே குறிப்பிடப்படும் சூதாட்டம் இப்போது நடைமுறையிலுள்ள பின்வருபவைகளாகும். பணம் வைக்கும் சூதாட்டம், கார்ட்ஸ் விளையாட்டு, பந்தயம் கட்டுதல், வேறு விளையாட்டுக்களில் ஏற்படும் சூது எல்லாமே இதில் அடங்கும்.
சதுரங்கப் பலகை (செஸ்) விளையாடுவதும் கூடாது. இது சோம்பேறிகளின் விளையாட்டாகும். வீண் பொழுதுபோக்குமாகும். சதுரங்கப் பலகை விளையாடுவது குறித்து உங்கள் அபிப்பிராயமென்ன? என்று இப்னு உமர் Ê அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அது ''சபிக்கப்பட்ட''தாகும் என விடையளித்தார்கள். அது சிறுவர்கள் ''மார்பிள்'' விளையாடுவதை விடவும் கெட்டதாகும் எனவும் கூறினார்கள். இதே கருத்தைத்தான் இப்னு அப்பாஸ் Ê அவர்களும் இராக்கின் மார்க்கமேதை இப்ராஹிம் நக்யீ அவர்களும் கூறியுள்ளார்கள்.
குதிரைப் பந்தயம், ஒரு ரூபாய் கொடுத்துச் சீட்டு வாங்கி ஒரு இலட்ச ரூபாய் பெறும் லாட்டரி ஆகியவை சூதின் வகையைச் சார்ந்ததாகும். இதுவும் பெரும் பாவங்களிலொன்று என எண்ணி, தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
செஸ் விளையாடுதல் சூதாட்டத்தைச் சேர்ந்தது என அலி Ë அவர்கள் கூறினார்கள்.
யார் கட்டம் போட்டு (லூடா) விளையாடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் மாறு செய்து விட்டார் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத் , இப்னு மாஜா)
இத்தகைய வீண் விளையாட்டுக்களில் ஈடுபடாதிருக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி செய்வானாக!.

21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்

--------------------------------------------------------------------------------
எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி (அதனை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அ(த்தயைக)வர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள் (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் (வரம்பு மீறிய) தீயவர்கள். (24:4)
எவர்கள் விசுவாசியான கற்புடைய அப்பாவிப் பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள், நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் (அல்லாஹ்வுடைய) சாபத்துக்குள்ளாவார்கள். (மறுமையிலும்) அவர்களுக்கு மகத்தான வேதனையுண்டு. (நபியே! ஒரு நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டும்) அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கால்களும் (கூட) அவர்களுக்கு விரோதமாக அவர்கள் செய்தவைகளைப் பற்றி சாட்சியம் கூறும். (24:23,24)
களங்கமற்ற கற்புடைய பெண்கள் மீது பழி சுமத்துபவன் அல்லாஹ்வின் சாபத்திற்கு உள்ளாகிறான். அல்லாஹ்வின் சாபத்துக்குட்பட்டவனுக்கு ''மீட்சியே'' கிடையாது. ஆகவேதான் மறுமையில் அவனுக்கு மகத்தான வேதனை கிடைக்கிறது. இம்மையில் இவ்வாறு அவதூறு சொல்பவனுக்குரிய தண்டனை எண்பது கசையடிகளாகும். இவ்வுலக நீதிபதி எண்பது கசையடி கொடுக்காது மறுவுலக நீதிபதியிடம் அனுப்பினால், அந்த நீதிபதி மகத்தான நரகவேதனையைக் கொடுப்பான்.

22. மோசடி செய்தல்

--------------------------------------------------------------------------------
''மோசம்'' செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசடிசெய்தால் அவர் அந்த மோசடி செய்த பொருளையும் மறுமை நாளில் (தம்முடன்) கொண்டு வரவேண்டியிருக்கும்... (3:161)
... நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை (8:58)
மோசடி செய்தவன், தற்கொலை செய்தவன் ஆகியோர்களுக்காக நபி அவர்கள் ''மையித்துத் தொழுகை நடத்த முன்வரவில்லை'' என இமாம் அஹ்மது (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
தலைவனுக்கு வேலையாட்கள் அனுப்பும் நன்கொடைகள் ''அபகரிக்கப்பட்ட பொருளைப் போன்றது'' தான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத், இப்னுமாஜா)

23. களவு

--------------------------------------------------------------------------------
ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் இ(த்தீ)ச் செயலுக்கு அல்லாஹ்விடமிருந்து உள்ள தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தோனும் ஞானமுடையோனுமாகியிருக்கிறான். (5:38)
மூன்று திர்ஹம்கள் மதிப்புள்ள ஒரு பொருளைத் திருடியவனின் கையை நபியவர்கள் துண்டித்துள்ளார்கள் என இப்னு உமர் அவர்கள் கூறுகிறார்கள் (புகாரி, முஸ்லிம்)
கால்தீனாருக்கும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு மதிப்புள்ள பொருளைத் திருடியவனின் கையை நபியவர்கள் துண்டித்துள்ளார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)
கால்தீனார் மதிப்புள்ள பொருளைத் திருடியவனின் கையை வெட்டுங்கள். அதற்குக் குறைந்த மதிப்புள்ளதைத் திருடினால் வெட்டாதீர்கள்! என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத்)

24. வழிப்பறி

--------------------------------------------------------------------------------
அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் யுத்தம் தொடுத்தும், பூமியில் விஷமம் செய்து கொண்டும் திரிகின்றவர்களுக்குரிய தண்டனை இதுதான். அவர்கள் வெட்;டப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும் அல்லது மாறு கை, (மாறு) கால் துண்டிக்கப்பட வேண்டும் அல்லது நாடு கடத்தல் செய்யப்பட வேண்டும். இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும். மேலும் மறுமையில் மகத்தான வேதனையும் அவர்களுக்கு உண்டு. (5:33)
ஒருவன் திருடினால் கையை வெட்டுங்கள், மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் காலை வெட்டுங்கள், மீண்டும் செய்தால் மற்றக் கையை வெட்டுங்கள், மீண்டும் செய்தால் மற்றக் காலை வெட்டுங்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (அபூதாவூத், நஸயீ)

25. பொய்ச் சத்தியம்

--------------------------------------------------------------------------------
எவர்கள் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தங்களுடைய சத்தியங்களையும் சொற்ப, கிரயத்திற்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் நிச்சயமாக யாதொரு (நற்)பாக்கியமுமில்லை. மேலும் அல்லாஹ் (மறுமை நாளில்) அவர்களுடன் (விரும்பிப்) பேசவேமாட்டான் (அன்புடன்) அவர்களை (திரும்பிப்) பார்க்கவும் மாட்டான் அவர்களைப் புனிதப்படுத்தவும் மாட்டான் மேலும் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுமுண்டு (3:77)
எவன் பிறர்பொருளை அபகரிப்பதற்காக, சத்தியம் செய்கிறானோ அவனை மறுமையில் அல்லாஹ் கோபத்துடன் சந்திப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஒரு முஸ்லிமின் உரிமையை, சத்தியம் செய்து பறிப்பவனுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி நரகத்தை கடமையாக்குகிறான். அது ஒரு தடியளவு மதிப்பு குறைந்ததாயிருப்பினும் சரியே! என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா, மாலிக்)
மறுயைமில் அல்லாஹ் மூவரின் பாவத்தை மன்னிக்கமாட்டான், அவர்களோடு பேசவும் மாட்டான் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு அவர்கள் யாவரெனில்
1. தரையில் படும்படி உடை உடுப்பவன்,
2. கொடுத்ததைச் சொல்லிக்காட்டுபவன்,
3. பொய்ச்சத்தியம் செய்து தன் பொருளை விற்பவன் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)

26. அநீதி இழைத்தல்

--------------------------------------------------------------------------------
(நபியே!) இந்த அக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாயிருக்கின்றான் என நீர் எண்ணவே வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம் திறந்த கண்திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும் வரையில் தான். (அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது (தட்டுக்கெட்டுப் பல கோணங்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது (அதனையே நோக்கிக் கொண்டிருக்கும்) இவர்களுடைய இருதயம் ''திக் பிரமை'' கொண்டுவிடும். ஆகவே (நபியே!) இத்தகைய வேதனை நாள் அவர்களுக்கு வருவதைப் பற்றி நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும். வரம்பு மீறியவர்கள் (அந்நாளில் தங்கள் இறைவனை நோக்கி) எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு சொற்ப தவணையளி! நாங்கள் உன் அழைப்புக்கு (இனி)ச் செவிசாய்த்து (உன்) தூதர்களைப் பின்பற்றி நடப்போம் என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) இதற்கு முன்னர் நீங்கள் உங்களு(டைய இவ்வுலக வாழ்க்கை)க்கு அழிவேயில்லை என்று சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா? (என்று கேட்பான்) (14:42-44)
(அளவு மீறி) மனிதர்கள் மீது அக்கிரம் செய்து நியாமின்றிப் பூமியில் கொடுமை செய்வோருக்கு எதிராகத்தான் (குற்றஞ்சாட்ட) வழியிருக்கிறது இத்தகையோருக்கு மிகத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (42:42)
... பிறரை நிந்தனை செய்து துன்புறுத்திய இந்த அக்கிரமம் செய்தவர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதி சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள். (26:227)
அநியாயம் செய்யும் ஊராரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) உம் இறைவன் பிடிக்கக் கருதினால் இவ்வாறே அவன் பிடித்துக் கொள்கிறான். ஏனென்றால் நிச்சயமாக அவனுடைய பிடி மிக்க கடினமானதாகவும், துன்புறுத்தக் கூடியதாகவும் இருக்கிறது? (11:102)
அடியார்களே! எனக்கு நானே அநீதத்தை ஹராமாக்கியுள்ளேன். அதை உங்களுக்கிடையிலும் ஹராமாக்கியுள்ளேன். ஒருவருக்கொருவர் அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்! என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)

27. கப்பம் பெறல்

--------------------------------------------------------------------------------
கொள்ளையடித்தல், வழிப்பறி செய்தல் போன்ற திருட்டுத் தொழில்தான் இதுவும். வித்தியாசம் என்னவென்றால் திருடன் வீட்டுக்காரனுக்குத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் அவரது பொருளை அபகரிப்பான். கப்பம் கேட்பவன் நேரடியாகச் சென்று அபகரிப்பான்
இதுவும் முறைகேடான சம்பாத்தியமாகும். அல்லாஹ் இதனையும் விலக்கியுள்ளான்.
(குற்றம் சுமத்த) வழி ஏற்படுவதெல்லாம் மனிதர்களுக்கு அநியாயம் செய்து நியாயமின்றி, பூமியில் கொடுமை செய்கிறார்களே, அவர்கள் மீதுதான், அத்தகையோர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)

28. தகாத உணவு

--------------------------------------------------------------------------------
நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணவேண்டாம் (2:188)
உரிமையில்லாமல் பிறரின் பொருட்களில் மூழ்கியிருப்பவர்களுக்கு மறுமையில் நரகமே கதி என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (புகாரி)
அனஸ்! உன் உழைப்பைச் சுத்தமானதாக்கிக் கொள்! தகாத உழைப்பிலிருந்து ஒரே ஒரு கவளம் உடலினுள் சென்றால் நாற்பது நாட்களுக்கு பிரார்த்தனைகள் ஒப்புக் கொள்ளப்படமாட்டாது (தப்ரானீ)
அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையைத் தவிர (வேறு எதையும்) ஏற்றுக் கொள்ளமாட்டான். தன் தூதர்களுக்கு எதை ஏவினானோ அவைகளையே நல்லடியார்களுக்கும் ஏவியிருக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான். (என்னுடைய) தூதர்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள், நல்லகாரியத்தையும் செய்யுங்கள், நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகிறவன் (23:51)
விசுவாசங்கொண்டோரே! நாம் உங்களுக்கு அளித்து உள்ளவற்றில்; தூய்மையானவற்றையே உண்ணுங்கள். (2:172)
பரட்டைத்தலையுடன் புழுதி படிந்த நிலையில் நீண்ட பிரயாணம் செய்யக்கூடிய ஒரு மனிதர் தன் இரு கைகளையும் வானத்தின் பக்கம் உயர்த்தி என் இறைவனே! என் இறைவனே! (என்று பிரார்த்தனை செய்கின்றார், ஆனால்) அவருடைய உணவு ஹராம், இன்னும் அவருடைய குடிபானம் ஹராம், இன்னும் அவருடைய உடை ஹராம், இன்னும் ஹராமானவற்றைக் கொண்டே வளர்க்கப்பட்டிருக்கின்றார், அவருடைய துஆ எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
தகாத உணவை வாயில் வைப்பதைவிட மண்ணைக் கொண்டு அவன் வாயை நிரப்புவது மேலாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

29. தற்கொலை

--------------------------------------------------------------------------------
... உங்கள் ஆத்மாக்களைக் கொன்று விடாதீர்கள்! (நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள்) அல்லாஹ் உங்கள் மீது அன்புடையோனாக இருக்கிறான். எவனேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அக்கிரமாக இவ்வாறு செய்தால் நாம் அவனை (மறுமையில்) நரகத்தில் சேர்த்துவிடுவோம். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே! (4:29,30)
அவமானம் தாங்கமுடியாமல், நோய் துன்பம் பொறுக்க முடியாமல், கடனை அடைக்க முடியாமல், காதல் தோல்வியை சகிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதை இப்போதெல்லாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தாய் புத்திமதி சொன்னாலும் தற்கொலை செய்கிறார்கள். காதல் தோல்வியும் தற்கொலையில் முடிகிறது.
இதைப் பெரும் பாவங்களிலொன்றாக இஸ்லாம் கருதுகிறது.
எவன் இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்வானோ அவன் அதே ஆயுதத்தால் நரகில் துன்பமனுபவிப்பான். விஷமருந்தி உயிரைப் போக்கியவன் தன் கையில் விஷத்தை வைத்துக் கொண்டே நரகில் துன்பப்படுவான். மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்தவன் நரகக் குழியில் குதித்துக் கொண்டேயிருப்பான். எப்பொழுதும் மீட்சியைக் காணவே மாட்டான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ)
உங்களுக்கு முன் வாழ்ந்த ஒருவருக்குக் கையில் கட்டி உண்டாகிப் பெரும் வேதனைக்குள்ளாகவே அவர் கத்தியை எடுத்து அக்கட்டியை அறுத்து விட்டார். அதன் பலனாக இரத்தம் ஓடிக்கொண்டேயிருந்து இறந்து விட்டார். இதுபற்றி அல்லாஹ் 'என் அடியான் முந்திக் கொண்டான், நான் அவனுக்கு சுவனத்தை ஹராமாக்கி விட்டேன்' என்று கூறியதாக நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (புகாரி, முஸ்லிம்)

30. பொய்

--------------------------------------------------------------------------------
... யார் வரம்பு மீறுவதுடன் பொய்யராகவும் இருக்கிறாரோ அவரை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். (40:28)
பொய் சொல்வோர் அழிந்தே போவர் (23:48, 26:139)
எவனிடம் நான்கு விஷயங்கள் இருக்கின்றனவோ அவன் நயவஞ்சகனாவான். நான்கில் ஒன்றிருந்தாலும் அதை விடும் வரை நயவஞ்சகத்திலிருந்து ஒன்றுள்ளவனாவான்.
1. பேசினால் பொய்யுரைப்பவன்
2. வாக்களித்தால் மாறு செய்பவன்
3. அமானிதத்தில் மோசடி செய்வார்.
4. (பிறருடன்) சண்டையிட்டால் வாயில் வந்தவாறெல்லாம் ஏசுவார் கேள்விப்பட்டதை ஆராயாமல் மக்களிடத்தில் வெளிப்படுத்துவார் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இன்னொரு ரிவாயத்தில் நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று: தொழுதாலும், நோன்பு பிடித்தாலும் தான் ஒரு முஸ்லிம் என எண்ணிக் கொண்டாலும் சரியே (அவன் நயவஞ்சகனாவான்).
1. பேசினால் பொய்யுரைப்பான்
2. வாக்களித்தால் மாறு செய்வான்
3. நம்பினால் மோசடி செய்வான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காக, பொய் கூறுபவனுக்கு கேடு உண்டாவதாக! அவனுக்கு கேடு, அவனுக்கு கேடு என நபி அவர்கள் மும்முறை கூறினார்கள். (முஸ்லிம்)
மாபெரும் சதியாதெனில் மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

31. கெட்ட நீதிபதி

--------------------------------------------------------------------------------
... எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே (5:44)
... எவர்கள் அல்லாஹ் அருளிய (வேதக்கட்டளைப்) பிரகாரம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அக்கிரமக்காரர்கள் தாம் (95:45)
... எவர்கள் அல்லாஹ் அருளிய (கட்டளைகளின்) பிரகாரம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் பாவிகளாவர்! (5:47, 7:102)
நீதிபதிகள் மூன்று வகையினர். ஒருவர் சுவர்க்கவாசி, இருவர் நரகவாசிகளாவர். உண்மையை அறிந்து அநீதியாகத் தீர்ப்புச் செய்பவரும், அறிவேயில்லாத நீதிபதியும் நரகத்திற்கு உரியவர்களாவர் என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்)
எவர் நீதிபதியாக இருக்கின்றாரோ அவர் கத்தியின்றி அறுக்கப்பட்டவராகிறார். (அது அத்துணை கஷ்டமான தொழில்) என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (அபூதாவூத், திர்மிதீ)

32. அதிகாரியின் இலஞ்சம்

--------------------------------------------------------------------------------
நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் கட்சி பொய்யானதென) நீங்களறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதனையும் பாவமான வழியில் விழுங்கிவிடும் பொருட்டு (இலஞ்சம் கொடுக்க) அதிகாரிகளிடம் செல்லாதீர்கள். (2:188)
இலஞ்சம் வாங்குபவனையும், கொடுப்பவனையும் அல்லாஹ் சபிப்பானாக என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, ஹாகிம்)
ஒருவன் தன் சகோதரனுக்காக ஒரு விஷயத்தில் இன்னொருவரிடம் சிபாரிசு செய்து அது நிறைவேறிய பின், சிபாரிசு செய்யப்பட்டவனிடமிருந்து ஏதாவது அன்பளிப்பு பெற்றுக் கொண்டால் ''அதுவும் இலஞ்சம் தான்'' எனவும் நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்

--------------------------------------------------------------------------------
பெரிய பாவங்களில் ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதலும் ஒன்று. பெண் அவளுக்குரிய கோலத்துடனும், ஆண் அவனுக்குரிய கோலத்துடனும் தான் வாழ வேண்டும். இஸ்லாம் கூறும் கட்டளை இதுதான். இதனை உதறிவிட்டு, சில ஆண்கள் பெண்களைப் போன்று நகை அணிந்து, முகத்தைச் சிரைத்து, பவுடர் போட்டுக் கொள்வது போன்றவைகளைச் செய்தல் கூடாது.
பெண்கள் ஆண்களைப் போன்று காற்சட்டை அணிந்து நெஞ்சின் பரிமாணங்கள் தெரியுமளவுக்கு (தெரியும்படி) 'டீஷர்ட்' அணிந்து கொள்வதும் கூடாது.
ஆணுக்கொப்பாகும் பெண்ணையும், பெண்ணுக்கொப்பாகும் ஆணையும் அல்லாஹ் சபிப்பானாக! என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா)

34. கூட்டிக் கொடுத்தல்

--------------------------------------------------------------------------------
(கேவலமான) ஒரு விபச்சாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபச்சாரியை அல்லது இணை வைத்து வணங்குபவளை அன்றி (வேறு ஒருத்தியையும்) மணந்து கொள்ள மாட்டான். ஒரு விபச்சாரி ஒரு விபச்சாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி வேறு எவரையும் மணந்து கொள்ள மாட்டாள். இத்தகைய திருமணம் விசுவாசிகளுக்கு தடுக்கப்பட்டிருக்கிறது. (24:3)
மூன்று கூட்டத்தினருக்கு சுவர்க்கம் ஹராமாக்கப்பட்டுள்ளது.
1. மதுவில் மூழ்கியிருப்பவன்,
2. பெற்றோரைத் துன்புறுத்துபவன்,
3. தன் மனைவியைக் கூட்டிக் கொடுப்பவன் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், பஸ்ஸார், ஹாகிம்)
அன்னியப் பெண்ணுக்கு ஆடவர்களைப் பிடித்துக் கொடுப்பவரின் நிலையும் இதுதான். விபச்சாரத்துக்குத் தூண்டிவிடுவதும், அதற்காகப் பெறும் பணமும் அவனுக்கு (இறைவிசுவாசிக்கு) விலக்கப்பட்டவைகளாகும். இத்தகைய இழி (ஈனச்) செயலிருந்து விலகிக் கொள்வோமாக!.

35. ஆகாததை ஆகுமாக்குபவன்

--------------------------------------------------------------------------------
கணவன், மனைவிக்கிடையில் சண்டை ஏற்பட்டு கணவன் மூன்று தலாக்கும் கூறிவிட்டால் அவர்களுடைய விவாகப்பந்தம் நீங்கிவிடுகின்றது. அதன் பின் அவள் வேறு ஆடவனையும், அவன் வேறு பெண்ணையும் விவாகம் செய்து கொள்ளலாம்.
மூன்று தலாக்கும் சொல்லிவிட்டோமே என வருந்தும் கணவன் மீண்டும் அவளுடன் இல்லறம் நடத்த விரும்பினால் அவளை ஓர் அன்னியனுக்கு விவாகம் செய்து கொடுக்க வேண்டும். அவளுடன் அவன் இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்திய பின் அவனாக விரும்பி அப்பெண்ணைத் தலாக் கூறிய பின்னரே, முதல் கணவன் அப்பெண்ணை மீண்டும் திருமணம் செய்து வாழ்க்கை நடத்தலாம். இவ்வாறு இடையில் விவாகம் செய்து ஆகுமாக்குவதிலும் பல தில்லு முல்லுகளை இறையச்சமின்றி, செய்து கொண்டே சிலர் வாழ்கிறார்கள். அதற்காக, கூலியும் பெறுகிறார்கள். எப்படியெனில், ஒரு கணவன் ஒருவனிடம் வந்து நான் கோப மிகுதியால் அறிவிழந்து என்மனைவிக்கு மூன்று தலாக்கும் கூறிவிட்டேன் மீண்டும் நான் அவளுடன் வாழ விரும்புவதால், ஒரு நாளைக்கு மட்டும் நீ திருமணம் செய்து தொட்டும் பார்க்காமல் தலாக் சொல்லிவிடு. அதன் பின் நான் மீண்டும் என் மனையியுடன் சேர்ந்து கொள்வேன் என கூறிப்பணமும் கொடுப்பான். இப்படிப் பணம் வாங்கிக்கொண்டு பழைய மனைவியை கணவனுக்கு ஆகுமாக்கி வைக்கும் தொழில் கேவலமானதாகும். இது பெரும் பாவமாகும், அவ்வாறு ஆகுமாக்குபவனை நபி அவர்கள் சபித்துள்ளார்கள்.
ஆகுமாக்கியவனையும் அப்படிச் செய்துவிடும் படி கேட்டவனையும் நபி அவர்கள் சபித்துள்ளார்கள். (திர்மிதி , நஸாயி)
ஒரு நாளைக்கோ, சில நாட்களுக்கோ ஒரு பெண்ணுடன் இன்பம் அனுபவித்துக் கொள்ளலாம் என்பதற்காகவும் சிலர் பணம் வாங்காமலேயே இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். இதுவும் விபச்சாரம் தான் என்று கூறி நபி அவர்கள் இதனையும் சபித்துள்ளார்கள்.

36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை

--------------------------------------------------------------------------------
(நபியே!) உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்: அசுத்தங்களை வெறுத்து விடும் (74:4,5)
மறுமையில் நரகில் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நரகவாதிகள், பின்வரும் நான்கு கூட்டத்தினரால் மேலும் துன்பத்திற்குள்ளாக்கப்பட்டு அந்நான்கு கூட்டத்தினரையும் வேறிடத்திற்கு அனுப்புமாறு கூக்குரலிடுவார்கள். துரத்தப்படும் அந்நான்கு நரகவாதிகளின் கூட்டத்தினர் முறையே...
1. நெருப்பு எரிகின்ற ஒரு பெட்டி கழுத்தில் கட்டப்பட்டு நரகத்தினுள்ளே அதைச் சுமந்து கொண்டு ஓடித்திரியும் ஒரு கூட்டம். இத்தண்டனையைப் பெற்றவர்கள் பிறருடைய பொருளை அநீதியாகச் சாப்பிட்டவர்கள். (பொதுச் சொத்தை திருடி உண்டவர்கள்)
2. குடல் வெளியே வந்து கொண்டிருக்க அதை இழுத்துக் கொண்டு நரகமெல்லாம் ஓடித்திரிவோர் இத்தண்டனையைப் பெற்றவர் சிறுநீர் கழித்தபின் உடம்பையோ, ஆடையையோ சுத்தம் செய்யாதவர்;.
3. வாயிலிருந்து சீழும், இரத்தமும் ஓடும் ஒரு கூட்டம். இதன் நாற்றத்தால் ஏனைய நரகவாதிகள் இவர்களைத் துரத்துவார்கள். இவர்கள் தான் பொய் பேசிக்கொண்டும் அதனால் இன்பம் அடைந்து கொண்டும் இருந்தோர்.
4. சிலர் மற்றவர்களின் சதையைக் கிழித்துத்தின்று கொண்டிருப்பர். இவர்கள் உலகில் புறம்பேசித் திரிந்தவராவர் என நபி அவர்கள் கூறினார்கள்.(ஆபூநுஅய்ம், இப்னு அபித்துன்யா)
இத்தகைய கடுந்தண்டனைகளிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!.

37. முகஸ்துதி

--------------------------------------------------------------------------------
(...நயவஞ்சகர்கள் தொழுகையில் நின்றால் சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றவர்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே அன்றி அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை. (4:142)
விசுவாசிகளே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசங் கொள்ளாது (தான் தர்மவான் என்பதைப் பிற) மனிதர்களுக்கு அறிவிக்கும் பொருட்டுத் தன் பொருளைச் செலவு செய்து (வீணாக்கி) விட்டவனைப் போல, நீங்கள் உங்களுடைய தானங்களை(ப் பெற்றவனுக்கு) கொடுத்ததைச் சொல்லிக் காண்பிப்பது மூலம் இகழ்ச்சியையும், துன்பத்தையும் (செய்வது) கொண்டு (அதன் பலனை) வீணாக்கி விடாதீர்கள்... (2:264);
தங்கள் தொழுகையில் பராமுகமாயிருக்கம் (நயவஞ்சகமான) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் (தொழுத போதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுவார்கள். (ஊசி போன்ற) அற்பப் பொருள்களையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்வார்கள். (107:4-7)
சிறிதளவாவது முகஸ்துதி சேர்ந்தால் அச்செயல் ஷிர்க்கை ஒத்ததாகும். அது பாவமுமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (ஹாகிம், தப்ரானி)
உங்களுக்கிடையே நான் ''அச்சமடைவது சிறிய ஷிர்க்கைப்'' பற்றிதான் என நபி அவர்கள் கூறியதும் சிறிய ஷிர்க் என்றால் என்ன? எனத் தோழர்கள் கேட்டனர். அது ''பிறர் புகழ வேண்டும் என்பதற்காகச் செய்யும் வணக்கமாகும்''. மறுமையில் அவ்வாறு செய்தவர்களை அல்லாஹ் அழைத்து நீங்கள் எவருக்காக வணக்கம் செய்தீர்களோ அவர்களிடம் சென்று கூலியைப் பெற்றுக் கொள்ளுங்கள்: என்னிடம் கிடையாது எனச் சொல்லி விடுவான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், பைஹகீ, தப்ரானீ)

38. கற்ற கல்வியை மறைத்தல்

--------------------------------------------------------------------------------
நேர் வழியையும், தெளிவான அத்தாட்சிகளையும் நாம் அருளி அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்தி(க் கூறி) பின்னும் எவர்கள் (அவற்றை) மறைக்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கின்றான்: (மற்றும்) சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றனர்; (2:159)
வேதங்கொடுக்கப்பெற்றவர்களிடம் (உங்களுக்குக் கொடுக்கப்பெற்ற) வேதத்தை மறைத்து விடாது ஜனங்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டும். எனினும் அவர்கள் (தங்களின்) இவ்வுறுதி மொழியை, தங்களின் முதுகுப்புறமாக எறிந்துவிட்டு, இதற்குப் பிரதியாகச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டது மிகக் கெட்டது. (3:187)
எவன் அல்லாஹ்வுக்காக அன்றி உலக ஆதாயத்திற்காக கல்வி கற்கிறானோ அவன் சுவனத்தின் வாடையைக்கூட பெறமாட்டான் என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
'அறிஞர்களிடம் வாதிட்டு வெல்வதற்கும்', பாமரமக்களிடம் 'அறிவாளி' எனப் பெயர் எடுப்பதற்கும், 'மக்களைத் தன்பக்கம் திருப்புவதற்கும் கல்வி கற்பவனை' அல்லாஹ் நரகில் நுழையவைப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
யா அல்லாஹ்! ''பயனற்ற கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்'' என்று நபி அவர்களின் பிரார்த்தனை இருந்தது (முஸ்லிம், திர்மிதி, நஸயீ)

39. சதி செய்தல்

--------------------------------------------------------------------------------
விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் ''மோசம்'' செய்யாதீர்கள். தவிர நீங்கள் (செய்வது அக்கிரமம் என) அறிந்து கொண்டே, உங்களிடம் உள்ள அமானிதப் பொருள்களிலும் மோசம் செய்யாதீர்கள் (8:27)
நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெறவிட மாட்டான் (12:52)
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று:
1. பேசினால் பொய்யுரைப்பான்,
2. வாக்களித்தால் மாறு செய்வான்,
3. நம்பினால் சதி செய்வான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சதியும், பொய்யும் இல்லாத எல்லா விஷயங்களையும் அல்லாஹ் பதிந்து கொள்கிறான் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்

--------------------------------------------------------------------------------
விசுவாசிகளே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளை செலவழிப்பவனைப் போல, கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினை செய்தும் உங்கள் ஸதகாவை (தான தருமங்களைப்) பாழாக்கி விடாதீர்கள். (2:264)
''நான் இரவு தஹஜ்ஜத் தொழுதேன், இன்று நோன்பு வைத்தேன், மூன்று முறை ஹஜ்ஜுக்குப் போயிருக்கிறேன்'' என்று தன் செயல்களைச் சொல்லிக் காட்டுவதன் மூலம் நன்மைகள் பாழாகின்றன.
மூன்று கூட்டத்தினர் சுவனம் நுழைய மாட்டார்கள்.
1. பெற்றோரை நிந்திப்பவனும்,
2. மதுவில் மூழ்கியிருப்பவனும்,
3. செய்த நன்மைகளைச் சொல்லிக் காட்டுபவனும் என நபி அவர்கள் கூறினார்கள். (நஸாயி, ஹாகிம், பஸ்ஸார்)
''சதி செய்பவனும், உலோபியும், செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும்'' சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (நஸாயி, திர்மிதி)

41. விதியைப் பொய்ப்படுத்துதல்

--------------------------------------------------------------------------------
முஸ்லிம்கள் ஆறு காரியங்களை நம்ப வேண்டும். அதில் கடைசியானது நன்மை, தீமைகள் யாவும் அல்லாஹ்விடமுள்ளன என நம்பிக்கை கொள்வதாகும்.
நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் (குறிப்பான) அளவின் (விதியின்) படியே சிருஷ்டித்திருக்கிறோம் (54:49)
இந்த குர்ஆன் வசனத்திற்கு இப்னு ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் இரண்டு காரணங்கள் கூறுகிறார்கள்.
1. மக்கா முஷ்ரிகீன்கள் விதி பற்றி நபி அவர்களுடன் சண்டையிட்டனர் அதற்காக இவ்வசனம் இறங்கியது.
2. நஜ்ரான் தேசக் கூட்டத்தினர் நபி அவர்களிடம் வந்து, முஹம்மதே! பாவங்களும் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் நடக்கின்றன என்று கூறுகிறீர்! இதை நாங்கள் மறுக்கிறோம் என்றார்கள். நீங்கள் அல்லாஹ்வின் எதிரிகள் என நபி அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது
நிச்சயமாக இக்குற்றவாளிகள் வழிகேட்டிலும் சித்தமிழந்தும் இருக்கின்றனர். இவர்கள் நரகத்திற்கு முகம் குப்புற இழுத்துச் செல்லப்படும் நாளில், இவர்களை நோக்கி, (உங்களை) நரக நெருப்பு பொசுக்குவதை சுகித்துப் பாருங்கள் (என்று கூறப்படும்) நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் (குறிப்பான) அளவின்படியே சிருஷ்டித்திருக்கின்றோம். (54:47-49)
முன் சென்றவர்கள், பின் சென்றவர்கள் யாவரையும் ஒன்று சேர்த்து வைக்கும் மறுமை நாளில் எல்லோருக்கும் கேட்கக் கூடியதாக 'அல்லாஹ்வின் எதிரிகள் எங்கே?' என்றொரு சப்தம் கேட்கும். அப்போது 'கத்ரிய்யாக்' (விதியைப் பொய்யாக்கியவர்)கள் தனித்துச் சேர்வார்கள். அவர்கள் யாவரையும் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் என நபி அவர்கள் கூறினார்கள். (துர்ருல் மன்தூர்)
எல்லாச் சமூகத்தவர்களிலும் மஜுஸிகள் (நெருப்பை வணங்கும் மிகக் கெட்டவர்கள்) உள்ளனர். என் உம்மத்தின் மஜுஸிகள் விதியைப் பொய்யாக்குபவர்களாவர் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

42. மற்றவர்களின் இரகசியத்தை ஒற்றுக் (ஒத்துக்) கேட்டல்

--------------------------------------------------------------------------------
ஒரு முஸ்லிமைப் பற்றித் துருவித் துருவி ஆராய்வதும், அவன் மீது வீண்பழி சுமத்துவதும் பெரும் பாவமாகும்.
ஒவ்வொருவரும் தங்கள் ஆத்மாக்களைச் தூய்மையாக வைத்திருப்பதற்கே ஒரு நாளின் 24 மணி நேரங்கள் போதாது. இத்துடன் பிற முஸ்லிமின் அந்தரங்கங்களைப் பற்றியும் ஆராய்வதற்கு நமக்கு எங்கே நேரமிருக்கிறது? எனினும் சிலர் பிறரைப் பற்றி ஆராய்வதிலும், அவர்களின் குறைபாடுகளைப் பற்றி பேசுவதிலும் காலத்தைக் கழிக்கிறார்கள். அவன் எங்கே போகிறான்? யாருடன் பேசுகிறான்? என்ன செய்கிறான்? என்றெல்லாம் துப்பறிவதும், பல அவச்சொற்களை வீசுவதும் சிலரின் வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. இதை இஸ்லாம் கண்டிக்கிறது. நீங்கள் துப்பறிய வேண்டாம் எனக் குர்ஆன் 49:12 அத்தியாயத்தில் கட்டளையிடுகிறது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் Ê அவர்களிடம் ஒருவர் வந்து, வலீத் இப்னு உக்பான் தாடியிலிருந்து மதுத்துளி விழுகிறதே! (அவர் மது அருந்துவதை நீங்கள் தடுக்கவில்லையா?!) என்று கேட்டார். ஒருவரைப் பற்றி ஆராய்வது எங்கள் வேலையல்ல. அவர் குடிப்பது உண்மையென்று வெளிவந்தால் தண்டிப்போம் எனப் பதிலளித்தார்கள்.
பிறரின் அந்தரங்கங்களை ஆராய்வதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!.

43. கோளுரைத்தல்

--------------------------------------------------------------------------------
இழிந்தவனான, அதிகம் சத்தியம் செய்யக்கூடிய ஒவ்வொருவனுக்கும் நீர் கீழ்படியாதீர். (அவன் மனிதர்களின் தன்மானங்களில்) குறைபேசித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (68:10,11)
நபி அவர்கள் இரண்டு கப்ருகளுக்கு அருகாமையில் நடந்து செல்லும் போது, இவர்கள் இருவரும் இப்போது வேதனையளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். (அவர்கள் எண்ணப்படி) அவர்கள் பெரும் பாவங்கள் செய்யவில்லை. ஒருவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யமாட்டார் மற்றவர் மக்களுக்கிடையில் கோள் சொல்லிக் கொண்டிருந்தார் எனக் கூறிவிட்டு, ஒரு பச்சை ஈத்தமட்டையை இரண்டாகக் கிழித்து ஒவ்வொரு கப்ரிலும் நாட்டினார்கள். இவையிரண்டும் காயாமல் இருக்கும் வரை வேதனை குறையக் கூடும் என நபி அவர்கள் கூறியதாக ஹுதைபா Ê அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

44. திட்டுதல் (சபித்தல்)

--------------------------------------------------------------------------------
இவ்வுலகின் அற்ப தேவைகளுக்காக ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டும், சபித்துக்கொண்டும் வாழ்வதைக் காண்கிறோம். சாகும் வரை பகைமை பாராட்டிக் கொண்டிருப்பதையும் காண்கிறோம். இது பெரும் பாவங்களிலொன்றாகும். முஸ்லிம்கள் இப்பெரும் பாவங்களிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
ஒரு முஸ்லிமைத் திட்டுவது கெட்டதாகும். அவனைக் கொலை செய்வது குஃப்ராகும் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி)
''சபித்துக் கொண்டேயிருப்பவர்கள்'' மறுமையில் சிபாரிசு செய்ய முடியாதவர்களாகவும், சாட்சியளிக்க முடியாதவர்களாகவும் இருப்பர் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத்)
ஒரு விசுவாசியை, சபிப்பது அவனைக் கொலை செய்வது போன்றதாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
கெட்ட வார்த்தை பேசுபவனும், பிறரைத் திட்டுபவனும், பிறரைக் குறைகூறுபவனும் விசுவாசியாக மாட்டான் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், ஹாகிம்)
தனிப்பட்ட ஒருவரை சபிப்பதைத் தடை செய்யும் இஸ்லாம், பொதுவாக பாவிகளைச் சபிப்பதற்கு அனுமதியளித்துள்ளது. ''அநீதமிpழைப்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என்றும் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!'' (3:61, 24:7) என்றும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.
இதே போன்று நபி அவர்களும் பலரைச் சபித்துள்ளார்கள். வட்டி வாங்குபவரையும், கொடுப்பவரையும், (அதற்கு) கணக்கு எழுதுபவரையும், சாட்சிகளையும், பொய் முடிகளைச் சேர்ப்பவளையும், கண் புருவ மயிர்களை நீக்கிவிட்டு அழகிய வர்ணம் பூசுபவளையும், பூசப்படுபவளையும், துன்பத்தின் போது ஓலமிட்டு அழுபவளையும், கன்னத்தில் அறைந்து, ஆடையைக் கிழித்துக்கொண்டு அழுபவளையும், கணவனோடு தூங்க மறுப்பவளையும், ஆணைப் போன்று ஆடையணியும் பெண்ணையும், பெண்ணைப் போன்று ஆடையணியும் ஆணையும், உருவப்படங்கள் தீட்டுபவர்களையும், ஓரினச் சேர்க்கை செய்பவர்களையும், பெற்றோரை நிந்திப்பவரையும், பொதுப் பாதைகளை அசுத்தப்படுத்துபவர்களையும், ''தொழுகைக்கு விரைந்து வாருங்கள்'' என்னும் பாங்கோசை கேட்டும் தொழுகைக்கு வராதவர்களையும், அல்லாஹ் அல்லாதவற்றிற்கு அறுப்பவர்களையும், பிறர் பூமியை தன் பூமியுடன் சேர்த்துக் கொள்பவர்களையும், இன்னும் சில பாவிகளையும் நபியவர்கள் சபித்துள்ளார்கள்.

45. வாக்கு மாறுதல்

--------------------------------------------------------------------------------
விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள் (5:1)
மறுமையில் மூவருடன் தான் வழக்காடுவதாக அல்லாஹ் கூறுகிறான். எனக்காக (உடன்படிக்கை) கொடுத்து அதை மீறுபவன், ஒரு சுதந்திரமானவனை விற்று அப்பணத்தால் பசி தீர்த்தவன், ஒருவனை வேலைக்கு அமர்த்தி வேலை முடிந்தவுடன் கூலி கொடுக்காது இருந்தவன் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, இப்னுமாஜா)
நயவஞ்சகனின் அடையாளம் மூன்று: அவன் தொழுதாலும், நோன்பு பிடித்தாலும் தான், ஒரு முஸ்லிம் என எண்ணிக் கொண்டாலும் சரியே (நயவஞ்சகனேயாவான்)
1. பேசினால் பொய்யுரைப்பான்
2. வாக்களித்தால் மாறு செய்வான்
3. நம்பினால் மோசடி செய்வான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்

--------------------------------------------------------------------------------
(நபியே!) நீர் அறியாத யாதொரு விஷயத்தையும் பின் தொடராதீர்! ஏனென்றால் நிச்சயமாக காது, கண், இருதயம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல்களைப் பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். (17:36)
ஸைத் இப்னு காலித் ஜுஹ்னி அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு தினம் நபி அவர்கள் எங்களுக்காக சுப்ஹுத் தொழுகையைத் தொழ வைத்தார்கள். சலாம் கொடுத்தபின் எங்களை முன்னோக்கி ''உங்கள் நாயன் என்ன சொல்கிறான் தெரியுமா?'' எனக் கேட்டார்கள். அல்லாஹ்வும், அவனது தூதருமே அறிவார்கள் என நாங்கள் கூறினோம். என்னுடைய அடியார்களில் சிலர் காபிர்களாகவும், சிலர் மூமின்களாகவும் இன்றைய பொழுதைத் தொடங்கியுள்ளார்கள். எவர் ''அல்லாஹ்வின் நல்லருளினால் மழை பெய்தது'' எனக்கூறினாரோ அவர் என்னை விசுவாசித்தவராகிறார். எவர் ''இந்த நட்சத்திர மாற்றத்தால் மழை பெய்தது'' எனக் கூறினாரோ அவர் காபிராகி (என்னை நிராகரித்தவராகி) விட்டார் என்று அல்லாஹ் கூறுகிறான் என விளக்கமளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)
எவரொருவர் ஜோதிடனை அணுகி, எதைப்பற்றியாவது கேட்டு அவன் கூறியதை உண்மை என நம்பிக்கை கொள்வாராயின் அவரது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
எவர் ஜோதிடனிடம் வந்து, அவன் கூறுபவற்றை உண்மைப்படுத்துகிறாரோ, அவர் முஹம்மது(ஸல்) அவர்கள் மீது இறக்கிவைக்கப்பட்ட (வேதத்)தை நிராகரித்து விட்டார் என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

47. கணவனுக்கு மாறு செய்தல்

--------------------------------------------------------------------------------
... எவளும் (கணவனுக்கு) மாறுசெய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையிலிருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள், (அதிலும் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு வழிப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும், மிகப்பெரியவனுமாக இருக்கிறான். (4:34)
இந்த வசனத்தின் மூலம், தவறு செய்யும் பெண்களை எவ்வாறு திருத்தி, அவர்களோடு இன்பமாக (இணக்கமாக) வாழவேண்டும் என்பதை ஆடவர்களுக்கு அழகாக அல்லாஹ் விளக்கியுள்ளான்.
இனி கணவனை அலட்சியப்படுத்தும் பெண்களுக்கு, கிடைக்கும் தண்டனைகளைப் பார்ப்போம்.
கணவன் படுக்கைக்கு அழைக்கும்போது மனைவி மறுத்தால் பொழுது புலரும் வரை மலக்குகள் அவளை சபித்துக் கொண்டேயிருப்பார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)
மூவருடைய தொழுகையும் வேறு நற்செயல்களும் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
(அ) எஜமானைவிட்டு ஒளிந்தோடிய அடிமை, அவன் திரும்பி வந்து எஜமானைத் திருப்திப்படுத்தும் வரை.
(ஆ) கணவனை கோபமுறச் செய்த மனைவி, கணவன் திருப்தியடையும் வரை.
(இ) மது போதையிலிருப்பவன், அவன் திருந்தும் வரை என நபி அவர்கள் கூறினார்கள். (தப்ரானீ, இப்னுகுஸைமா, இப்னுஹிப்பான்)
மறுமையில் ஒரு பெண்ணிடம் முதலில் கேட்கப்படும் கேள்வி தொழுகையைப் பற்றியும், கணவனோடு எப்படி வாழ்ந்தாய்? என்பது பற்றியுமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (கன்சுல் உம்மால்)
அல்லாஹ்வைக் கொண்டும், மறுமை நாளைக் கொண்டும் விசுவாசங்கொண்ட பெண், கணவன் வீட்டிலிருக்கும் போது சுன்னத்தான நோன்பு வைப்பதும், அவன் உத்தரவின்றி பிற ஆடவரை வீட்டுக்குள் நுழைய அனுமதிப்பதும் கூடாது என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
எந்தப் பெண்ணாவது கணவன் திருப்தியுற்ற நிலையில் இறப்பாளேயானால் சுவனம் புகுவாள் என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, இப்னுமாஜா, ஹாகிம்)

48. உருவப் படம் வரைதல்

--------------------------------------------------------------------------------
எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் தொல்லைப்படுத்துகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் சபிக்கிறான், மேலும் இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்கு சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான். (33:57)
உருவங்களை (வரைபவர்களை) செய்பவர்களை, மறுமையில் அவைகளுக்கு உயிர் கொடுக்கும்படி (வற்புறுத்தி) கூறி வேதனையளிக்கப்படும் (புகாரி, முஸ்லிம்)
உருவம் தீட்டுபவர்கள், அமைப்பவர்கள் யாவரும் நரகத்திற்குரியவர்களேயாவர். அவர்கள் அமைத்த உருவங்களைக் கொண்டே வேதனை செய்யப்படுவார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
நாயும், உருவப்படங்களுமுள்ள வீட்டில் மலக்குகள் நுழையமாட்டார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

49. ஒப்பாரி வைத்து அழுதல்

--------------------------------------------------------------------------------
(விசுவாகிகளே!) ஓரளவு பயத்தாலும்இ பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் நஷ்டத்தாலும். நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். என்றாலும் (நபியே) இச் சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்துக் கொண்டிருப்போருக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக!(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய கஷ்டம் ஏற்பட்ட போதிலும், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள் நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்) எனக் கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இரட்சகனின் ஆசீர்வாதங்களும், கிருபையும் ஏற்படுகின்றன. மேலும் அவர்கள்தாம் நேரான வழியை அடைந்தவர்கள். (2:155,156,157)
இஸ்லாத்தில் இணைந்தவுடன் ஒப்பாரி வைத்து அழுவதில்லையென்று நாங்கள் நபியவர்களிடம் வாக்குறுதி செய்தோம் என உம்மு அதிய்யா Ë அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி)
ஓலமிட்டு அழுபவள் மரணத்திற்கு முன் தௌபாச் செய்யவில்லையானால் தாரினால் ஆன சட்டை போடப்பட்டு நரகில் வேதனை செய்யப்படுவாள் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், இப்னுமாஜா)

50. கொடுமை செய்தல்

--------------------------------------------------------------------------------
(அளவு மீறி) மனிதர்கள் மீது அக்கிரமங்கள் செய்து நியாயமின்றி பூமியில் கொடுமை செய்வோருக்கு எதிராகத்தான் (குற்றஞ் சாட்ட) வழி இருக்கிறது. இத்தகையோருக்கு மிகத்துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)
காரூன் (என்பவன்) மூஸாவுடைய ஜனங்களில் உள்ளவன் எனினும் அவர்கள் மீது அவன் அக்கிரமங்கள் செய்யத்தலைப்பட்டான்... (28:76)
பனூ இஸ்ராயீல்களுக்கு கொடுமை செய்து கொண்டிருந்த காரூன், அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்காகி, உயிருடனிருக்கும்போதே அவனை பூமி விழுங்கிவிட்டது. அவன் மட்டுமல்ல, அவனுடைய மாட மாளிகை, செல்வம் யாவும் பூமியில் செருகப்பட்டுவிட்டது. கொடுமை புரிவோரின் முடிவு இதுதான் என்பதையும், மறுமையில் இத்தகையோருக்கு மிகத்துன்புறுத்தும் வேதனையுண்டு (28:81) என்பதையும் குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

51. வரம்பு மீறுதல்

--------------------------------------------------------------------------------
மேலும், (உலோபியைப் போன்று, செலவு செய்யாது) உம்முடைய கையை உம்முடைய கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர்! அன்றியும் (உம்மிடம் இருப்பதை எல்லாம் செலவழித்து விட்டு) அ(க்கையான)தை ஒரே விரிப்பாக விரித்தும் விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்-பட்டவராகவும், முடைப்பட்டவராகவும் உட்கார்ந்து விடுவீர். (17:29)
''அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு'' என்று தமிழில் ஒரு பழமொழியுண்டு. எந்த வேலையானாலும் அளவோடு இருக்க வேண்டும். வரம்பு மீறாமலும் இருக்க வேண்டும். தர்மம் செய்யவேண்டுமென்பதற்காக இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டு தன் தேவைக்கு பிறரிடம் கெஞ்சக் கூடாது. அறவே கொடுக்காது கஞ்சத்தனம் செய்யவும் கூடாது.
சாப்பிட வேண்டும், உடுக்க வேண்டும், வீடு கட்டவேண்டும், எல்லாம் அளவோடு இருக்க வேண்டும். கடற்பாறையை விழுங்கிவிட்டு சுக்குக் கசாயம் குடிப்பது போல், வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு பின்னால் ஜீரணிக்க மருந்து சாப்பிடுவது புத்திசாலியின் அடையாளமல்ல. நிமிர்ந்து நின்று வணங்குவதற்கும், தனக்கும் தன் குடும்பத்திற்கும் உரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கும் பலம் தேவை. அதற்குரிய அளவுக்கே உண்ணவேண்டும்.
உடை விஷயமும் இப்படித்தான். மானத்தை மறைப்பதற்குரிய ஆடை அணிய வேண்டும். ஆனால் பெருமைக்காக அணிவது மற்றவர்கள் போற்ற வேண்டும் என்பதற்காக அணிவது வரம்பு மீறிய செயலாகும். மற்ற ஆடவர்கள் தன் உறுப்புக்களை பார்க்கும் அளவுக்கு, பெண்கள் ஆடை அணிவதும் ஹராமாகும். கரண்டைக் காலுக்குக் கீழ் பூமியில் படும்படி உடை உடுப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது. இதுவும் வரம்பு மீறிய செயலாகும்.
எவன் பெருமைக்காக ஆடையை பூமியில் படும்படி (உடுத்தி) இழுத்து (நடக்கின்றானோ) அவனை மறுமையில் அல்லாஹ் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸாயி)

52. அயல் வீட்டாரைத் துன்புறுத்துதல்

--------------------------------------------------------------------------------
அல்லாஹ்வையே வணங்குங்கள், அவனுக்கு யாதொன்றையும் இணை வைக்காதீர்கள், பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள், (அவ்வாறே) உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டினரான அந்நியருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்கள் ஆதிக்கத்திலிருப்போருக்கும் (அன்புடன் நன்றி செய்யுங்கள்) எவன் கர்வங்கொண்டு பெருமையாக நடக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (4:36)
இந்த வசனத்தில், அண்டை வீட்டிலுள்ள உறவினருக்கும், அந்நியருக்கும் அன்புடன் நன்றி செய்யும்படி கட்டளைபிடப்பட்டுள்ளது. அண்டை வீட்டிலுள்ளவர் சொந்தக்காரராக இருப்பினும், முஸ்லிமாக இருப்பினும், முஸ்லிமல்லாதவராக இருப்பினும், அவருடன் அன்பு செலுத்தி வாழ வேண்டுமென்பதே அல்லாஹ்வின் கட்;டளையாகும். இதற்கு மாறாக அண்டை வீட்;டாருடன் சண்டையிடுவதும், வெறுத்திருப்பதும் ''பெரும் பாவமாகும்''. அண்டை வீட்டுக்காரர் அனாந்தரக்காரராக (சொந்தக்காரராக) ஆகிவிடுவாரோ என்னும் அளவுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் அண்டை வீட்டுக்காரரின் விஷயத்தில் எனக்கு வஹீ அறிவித்துக் கொண்டே இருந்தார்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
''அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒருவன் பரிபூரண முஃமினாக முடியாது'', அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒருவன் பரிபூரண முஃமினாக முடியாது, அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒருவன் பரிபூரண முஃமினாக முடியாது. அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் அவன் யார்? என கேட்கப்பட்டது. எவருடைய அண்டை வீட்டார் அவருடைய தீங்கை விட்டும் அமைதி பெறவில்லையோ அவர் என என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
அபூதர்ரே! நீர் கறி சமைத்தால் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கொடுப்பதற்காக அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
எவருடைய அண்டை வீட்டார் அவருடைய தீங்கை விட்டும் அமைதி பெறவில்லையோ அவர் சுவனம் செல்லமாட்;டார் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அண்டை வீட்டார் பசித்திருக்கும்போது வயிறாற உண்பவன் மூஃமினல்லன் என நபி அவர்கள் கூறினார்கள். (ஹாகிம், பைஹகீ)

53. முஸ்லிம்களைத் துன்புறுத்துதல்

--------------------------------------------------------------------------------
விசுவாசிகளே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில், பரிகாசம் செய்யும்) இவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம். (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) அவர்கள், (பரிகாசம் செய்யும்) உங்களை விட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் மற்றவரை இழிவாகக் (கருதி குற்றங்குறை) கூறவேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு (த் தீய) பட்டப்பெயர் சூட்ட வேண்டாம். ஈமான் கொண்ட பின் (இவ்வாறு) சூட்டுவது மிகப் பெரும் பாவமாகும். எவர்கள் (இவைகளிலிருந்து விலகிக் கொள்ளவில்லையோ அவர்களே (வரம்பு மீறிய) அக்கிரமக்காரர்களாவர். (49:12)
... (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றெவரை பற்றியும் புறம் பேச வேண்டாம்... (49:12)
எவர்கள் விசுவாசங் கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாத (குற்றத்) தை (செய்ததாக)க் கூறித் தொல்லைப் படுத்துகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக(ப் பெரும்) அவதூறையும், பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர். (33:58)
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் சகோதரராவார் சகோரத முஸ்லிமுக்கு அநீதமிழைப்பதோ அவரை அவமானப்படுத்துவதோ பழிப்பதோ கூடாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)
ஒரு முஸ்லிமுடைய உயிரும், உடமையும், மானமும் மற்ற முஸ்லிமுக்கு ஹராமானதாகும் (விலக்கப்பட்டதாகும்) என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
மூன்று இடங்களில் பேசப்படும் பேச்சுக்கள் உண்மையா? பொய்யா? என்று பொருட்படுத்தப்படமாட்டாது.
1. யுத்த களத்தில்
2. மனிதர்களிடையில் ஒற்றுமை ஏற்படுத்துவதில்
3. கணவன் மனைவிக்கிடையிலான ஊடலில் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காகவும், மனிதர்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காகவும், மனைவியைத் திருப்பதிப்படுத்த கணவனும், கணவனைத் திருப்பதிப்படுத்த மனைவியும் பேசும் பேச்சுகளுக்காக அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான் என்பது இதன் கருத்தாகும்.
மனிதர்களுக்கு மத்தியில் நலவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பேசுபவன் பொய்யன் அல்லன் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

54. துறவிகளைத் துன்புறுத்துதல்

--------------------------------------------------------------------------------
எவர்கள் விசுவாசங் கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாத (குற்றத்) தை (செய்ததாக)க் கூறித் தொல்லைப் படுத்துகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக(ப் பெரும்) அவதூறையும், பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர். (33:58)
(நபியே!) எவர்கள் தங்கள் இறைவனின் பொருத்தத்தை நாடி, அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் (உம் கஷ்டங்களைச் சகித்துப்) பொறுத்திருப்பீராக! (18:28)
உம்மைப் பின்பற்றிய விசுவாசிகளிடம் புஜம் தாழ்த்தி, (பணிவாக) நடந்து கொள்வீராக! (26:215)
எவன் என் நேசர்களைத் துன்புறுத்துகிறானோ அவனோடு நான் சண்டையிடுவேன் என அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

55. மமதையும், தற்பெருமையும்

--------------------------------------------------------------------------------
பூமியில் (பெருமையுடன்) கர்வங்கொண்டு நீங்கள் நடக்க வேண்டாம். (ஏனென்றால்) நிச்சயமாகப் பூமியைப் பிளந்துவிடவோ அல்லது மலை உச்சிக்கு உயர்ந்து விடவோ உங்களால் முடியாது. (17:37)
...பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! கர்வங்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதேயில்லை. (31:18)
கரண்டைக்காலுக்குக் கீழ் ஆடை அணிந்த இடம் நரகத்தில் வேதனை செய்யப்படும் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
மூவருடன் மறுமையில் அல்லாஹ் பேசவும் மாட்டான், அவர்களை கருணை கண் கொண்டு பார்க்கவும் மாட்டான், அவர்களின் பாவங்களை மன்னிக்கவும் மாட்டான் இன்னும் அவர்களுக்கு, கடுமையான வேதனையுமுண்டு என நபி அவர்கள் கூறினார்கள்.
1. கரண்டைக் காலுக்கு கீழ் ஆடையை இறக்கி உடுத்துபவன்.
2. செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவன்
3. பொய்ச் சத்தியம் கூறி விற்பனை செய்பவன். (முஸ்லிம், அபூதாவூத்)
ஒரு விசுவாசியின் ஆடை முன்னங்காலுடன் நின்று விட வேண்டும். கரண்டைக் கால் வரை இருப்பது குற்றமல்ல. அதற்கும் கீழ் வந்தால் அது நரகத்திற்குரியதாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், நஸாயி)
பெருமைக்காக ஆடையணியும் பெரும் பாவத்திலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!.

56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்

--------------------------------------------------------------------------------
இதுவும் பெரும்பாவத்தில் உள்ளதேயாகும். எவ்வளவு செல்வம் வந்தாலும் ஆண்கள் தங்கத்தையும், பட்டாடைகளையும் உபயோகித்தல் கூடாது. செல்வம் வந்தால் சில ஆண்கள் பெருமைக்காக தங்கமோதிரம், தங்கச் செயின் அணிந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது. இது இஸ்லாத்தில் விலக்கப்பட்டதாகும். பட்டுத்துணிகளை அணிவதும், அதில் அமருவதும் கூடாது. தங்கம், வெள்ளிப்பாத்திரங்களை உபயோகிப்பது ஆண்-பெண் இருவருக்குமே ஹராமாகும்.
எவன் இவ்வுலகில் பட்டாடையை அணிந்தானோ மறுமையில் அவன் அதை அணியும் பாக்கியத்தைப் பெறமாட்டான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உண்பதையும், குடிப்பதையும் பட்டாடைகளை அணிவதையும், அதில் உட்காருவதையும் நபி அவர்கள் தடுத்துள்ளார்கள் என அபூஹுதைபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
ஒரு மனிதரின் கையில் தங்கத்தினாலான மோதிரம் இருப்பதை நபியவர்கள் கண்டு அதனைக் கழற்றிவிட்டு, யாரும் நரகத்து நெருப்புத் துண்டிலிருந்து ஒரு துண்டை அணிந்து கொள்வார்களா? எனக் கேட்டார்கள். (முஸ்லிம்)
ஒரு கையில் தங்கத்தையும், மற்றொரு கையில் பட்டாடையையும் எடுத்துக் காண்பித்து, இவையிரண்டும் என் உம்மத்திலுள்ள ஆண்களுக்கு ஹராமானதாகும் (விலக்கப்பட்டதாகும்) என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸாயி)
சில பெற்றோர்கள் சிறு ஆண் குழந்தைகளுக்கு தங்க நகையணிவித்து விடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், சிறு குழந்தைகளுக்கு அணிவிக்கலாம் என்று எந்த நபிமொழியும் கிடையாது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
இப்பெரும் பாவத்திலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!.

57. அடிமை ஒளிந்தோடல்

--------------------------------------------------------------------------------
நபி அவர்கள் காலத்தில் இந்த அடிமைப் பிரச்சினை இருந்தது. அவர்களுக்கென்று சில சட்டங்களும் இருந்தன. இப்போது உலகில் எங்குமே அடிமைகள் இல்லையாகையால் இதுபற்றிய விளக்கமும் தேவையில்லை என்றே எண்ணுகிறோம்.

58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல் (பலியிடுதல்)

--------------------------------------------------------------------------------
(விசுவாசிகளே!) அறுக்கும் பொழுது அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும்பாவமாகும். (இதில்) உங்களுடன் தர்க்கிக்குமாறு நிச்சயமாக ஷைத்தான்கள் தங்களுடைய நண்பர்களைத் தூண்டுகின்றனர். நீங்கள் அவர்களுக்கு வழிப்பட்டால் நிச்சயமாக நீங்களும் (அவர்களைப் போல்) இணை வைத்து வணங்குவோர்தாம். (6:121)
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாதவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று அல்லாஹ் தடுத்துள்ளான். அவ்வாறு சாப்பிடுவது பெரும் பாவமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளான்.
முஸ்லிம் ஒருவரே அறுத்தாலும் அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறப்படாவிட்டால் அதை உண்பது கூடவே கூடாது என்பதே இதன் கருத்தாகும் என்று இப்னு உமர் Ê, நாபிஃ Ê ஷஅபி, இப்னுஸீரின், இமாம் மாலிக், இமாம் ஹன்பல் ஆகியோர் கூறுகிறார்கள்.
இது போன்றே, ஒரு முஸ்லிம் பிஸ்மில்லாஹ் கூறி அவ்லியாக்களுக்காக அறுப்பதை உண்பதும் கூடாது. ஒரு பெரியாரின் பெயரால் கந்தூரி கொடுப்பதற்காக அறுக்கப்படுவது, சிலைகளுக்காக அறுக்கப்படுவது போன்றதேயாகும். உதாரணமாக, ஓர் ஊரில் முஹ்யித்தீன் கந்தூரி கொடுக்கப்படுவதாய் இருந்தால் ஒரு குறிப்பிட்ட தேதியில் அக்கந்தூரி நடைபெறும். அதற்குச் சில நாட்களுக்கு முன்பே அக்கந்தூரிக்காக, ஆடு, மாடு, கோழி நேர்ச்சை செய்யப்பட்டு ஒப்புவிக்கப்படும். இப்போது இப்பிராணிகள் முஹ்யித்தீன் வலியுல்லாவுக்கே அறுக்கப்படுகின்றன. அல்லாஹ் அல்லாதவருக்கு நேர்ச்சை செய்யவும் கூடாது. அறுத்துப்பலியிடுவதும் கூடாது. இப்படிப்பட்ட இறைச்சியை உண்பதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும். பின்வரும் ஆயத்து இதற்கு ஆதாரமாக இருக்கின்றது.
உங்களின் மீது (அல்லாஹ்வாகிய) அவன் ஹராம் (என்று தடை) ஆக்கியிருப்பதெல்லாம் (தானாகச்) செத்ததையும், இரத்தத்தையும், பன்றியின் மாமிசத்தையும், அல்லாஹ் அல்லாதவருக்காக (அறுப்புப்பிராணிகளில்) எதற்கு பெயர் கூற(ப்பட்டு விட)ப் பட்டதோ அதையும்தான். (2:173)
அல்லாஹ் அல்லாதவருக்கு யார் அறுத்துப் பலியிடுகின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
இத்தகைய பெரும் பாவத்திலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!.

59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்

--------------------------------------------------------------------------------
அறியாமைக் காலத்தில் இருந்த அறிவீனச் செயல்களில் இதுவுமொன்று. குலப்பெருமைக்காக, பதவிப் பெருமைக்காக சொந்தத்தகப்பனை மறுத்துவிட்டு, பெருங் குலத்தவன் ஒருவனை ''தன் தகப்பன்'' என்று பகிரங்கமாகக் கூறுவார்கள். இவ்வாறு கூறுவது பெரும் பாவமாகும்.
''தன் தகப்பன் இவனல்லன் என அறிந்திருந்தும்'' அந்நியனைத் தகப்பன் எனக் கூறுபவனுக்கு சுவனம் ஹராமாகிவிடும் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
தன் சொந்த, தகப்பனைப் புறக்கணித்து விட்டு வேறொருவனைத் தகப்பனாக ஏற்றுக் கொள்பவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
தன் சொந்த தகப்பனைப் புறக்கணிக்காதீர்கள்! அவ்வாறு செய்பவன் காஃபிராவான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
ஸைத் இப்னு ஹாரிதா Ê அவர்கள் சிறுவராக இருக்கும்போதே நபி அவர்களிடம் வளர்ந்தார்கள். இதற்காக, 'ஸைத் இப்னு முஹம்மத்' முஹம்மதுடைய மகன் என மக்களால் அழைக்கப்பட்டார்கள். இவ்வாறு அழைப்பதை அல்லாஹ் தடுத்து,
நீங்கள் வளர்த்த அவர்களை அவர்களுடைய (உண்மையான) தந்தையின் பெயர்களைக் கூறி அழையுங்கள். அது தான் அல்லாஹ்விடத்தில் மிக நீதமாக இருக்கிறது. (33:5)
என்ற வசனத்தை இறக்கி வைத்தான். ''எனவே அல்லாஹ் தடுத்து விலக்கியதைச் செய்வது பெரும் பாவமாகும்''.
இத்தகைய பெரும் பாவத்திலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!.

60. மேலதிக நீரைத்தடுத்தல்

--------------------------------------------------------------------------------
விலை மதிக்க முடியாத ஒன்று இவ்வுலகில் இருக்கிறதென்றால், அது தண்ணீரேயாகும். உயிர்ப்பிராணிகள் அனைத்திற்கும் தண்ணீர் இன்றியமையாததாகும். தண்ணீர் இல்லாவிட்டால் பயிர்கள், தானியங்கள் வளராது, கால்நடைகள் ஜீவிக்க முடியாது. மனிதர்களுக்கு தாகம் தீர்ப்பது முதல் சுத்தம் செய்வது வரை தண்ணீர் அவசியமாகிறது. இத்தகைய தண்ணீரைப் பிறருக்குக் கொடுக்காது இல்லையென்பது மாபெரும் பாவமாகும். தனக்குரிய தேவைகள் நிறைவேற்றப்பட்டபின் எஞ்சியிருக்கும் நீரை தேவைப்பட்டோருக்கு கொடுத்துவிட வேண்டும். அதைக்கொடுக்க மறுப்பது பெரும்பாவமாகும்.
'மற்றவனுடைய பயிர் செழிப்பாக வளரக்கூடாது' என்பதற்காக மேலதிக நீரைத் தடுத்து விடாதீர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) எனவும்,
எவன் மேலதிக நீரை, பிறருக்குக் கொடுக்காது தடுக்கின்றானோ அவனுக்கு மறுமையில் அல்லாஹ் தன் அருட்கொடையைத் தடுத்து விடுவான் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
மறுமை நாளில் மூவருடன் அல்லாஹ் பேசவும் மாட்டான், அவர்களின் பாவத்தை மன்னிக்கவும் மாட்டான், அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு
1. தாகித்தவருக்கு மேலதிக நீரைக் கொடுக்காது தடுத்தவன்.
2. உலக நன்மையை எதிர்பார்த்து ஒரு தலைவனுக்கு வாக்களித்தவன்.
3. பொய் சத்தியம் கூறி (பொருளை) விற்பனை செய்பவன். என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தண்ணீர் (திடீரென்று ஒரு நாள்) காலையில் பூமியில் உறைந்துவிட்டால், பிறகு தண்ணீரின் (வேறோர்) ஊற்றை உங்களுக்குக் கொண்டு வருபவன் யாரென்று கவனித்தீர்களா? (67:30)
நீங்கள் குடிக்கின்ற நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து நீங்கள் அதனைப் பொழிவிக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிவிக்கின்றோமா? நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக்கி விட்டிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? (56:68-70)
மேற்கூறிய பெரும் பாவங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!.

61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்

--------------------------------------------------------------------------------
(அளவையிலும், எடையிலும் மோசம் செய்து) குறைக்கக்கூடியவர்களுக்கு கேடு உண்டாவதாக! அவர்கள் எத்தகையோரென்றால், (தங்களுக்காக) மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கினால், நிறைவாக (அளந்து வாங்கிக் கொள்கின்றனர். (ஆனால்) தாங்கள் அவர்களுக்கு (மற்ற மனிதர்களுக்கு) அளந்து கொடுத்தாலோ, அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலோ (குறைத்து மோசடி செய்து அவர்களை) நஷ்டப்படுத்தி விடுகின்றனர். அத்தகையோர் நிச்சயமாக, தாம் (மறுமையில் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவில்லையா? (83:1-4)
நீங்கள் அளந்தால் பூரணமாக அளவுங்கள் நிறுத்தால் சரியான எடையைக்கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) நன்மையையும் மிக்க அழகான பலனையும் தரும். (17:35)
அனாதைகளின் பொருளை அவர்கள் பிராயமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி தொடாதீர்கள். அளவை (சரியான அளவு கொண்டு) பூரணமாக அளவுங்கள் எடையை நீதமாக நிறுங்கள். (6:152)
(வியாபாரிகளே!) நீங்கள் இரு பெரும் பொறுப்புக்களைச் சுமந்துள்ளீர்கள்! அளவையிலும், நிறுவையிலும் (மோசடி செய்யாது) கவனமாக இருங்கள். ஏனெனில், இவைகளுக்காகவே உங்களுக்கு முன் சென்ற கூட்டத்தினர் அழிக்கப்பட்டனர் என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்

--------------------------------------------------------------------------------
(நபியே! உம்மிடம்) இவ்வுலக வாழ்க்கை பற்றி(ப் பேசும்பொழுது) தன்னுடைய (சாதுர்யமான) வார்த்தையைக் கொண்டு, உம்மை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கக்கூடிய (அகனஸ் இப்னு ஷரீக் போன்ற) ஒருவன் அம்மனிதர்களில் உள்ளான். (அவன் உம்மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறித்) தன் மனத்திலுள்ளவற்றிற்கு (சத்தியஞ்செய்து) அல்லாஹ்வை சாட்சியாக்குவான். (உண்மையில்) அவன்தான் (உமக்கு) கொடிய விரோதி. (2:204)
தவறு என்று தெரிந்த பின்பும் அதன்மீது வாதாடுபவன் அதை விடும் வரை அல்லாஹ்வின் கோபத்தில் இருந்து கொண்டிருப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
அல்லாஹ்விடத்தில் மிகக் கோபமான மனிதர்கள் வீண் விதண்டாவாதம் பண்ணுபவர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
உண்மையை நிலைநிறுத்த வாதாடுவது ஆகும் வாதத்திற்கு அழைப்பதும் ஆகும். ஐந்து நேரம் தொழ வேண்டும் என்பது மார்க்கம் காட்டிய வழி. ஒருவன் தொழத்தேவையில்லை என்று கூறினால் அல்லது மூன்று நேரம் தொழுதால் போதும் என்று கூறினால் அவனை வாதத்திற்கு அழைக்கலாம். ஆதாரங்களைக் காட்டி தர்க்கம் புரியலாம். இது ''கட்டாயம் செய்யவேண்டிய பணி''யாகும்.
இதற்கு எதிராக வாதாடுவதும், தன் பேச்சுத்திறனால் மக்களை உண்மையான வழியிலிருந்து திருப்ப நினைப்பதும் மாபெரும் குற்றமாகும்.
இத்தகைய குற்றங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!.

63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்

--------------------------------------------------------------------------------
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட (நல்லுபதேசத்)தை அவர்கள் மறந்து விடவே, (அவர்களைச் சோதிக்கும் பொருட்டு) ஒவ்வொரு பொருளின் வாயில்களையும் நாம் அவர்களுக்குத் திறந்து விட்டோம், (அவர்களுக்கு தேவையானவை அனைத்தும் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தன.) முடிவாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு அவர்கள் ஆனந்தமடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நம் வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துவிட்டோம். அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாகிவிட்டனர். (6:44)
அல்லாஹ்வின் சூழ்ச்சியை அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய சமூகத்தைத்தவிர (வேறு எவரும்) அல்லாஹ்வின் சூழ்ச்சியை பற்றி அச்சமற்றிருக்கமாட்டார்கள். (7:99)
அல்லாஹ்வின் சோதனையில் யாரும் அவநம்பிக்கை கொள்ளக்கூடாது. அல்லாஹ்வின் சோதனை உண்மையென்று நம்ப வேண்டும். ஆரோக்கியமாக இருப்பவன் நிரந்தர நோயாளியாகிறான். அடுத்த நிமிடம் இறந்து விடுவான் என நம்பும் நோயாளி எழுந்து நடமாடுகிறான். வாயில் வைத்த உணவு தொண்டைக் குழியில் இறங்கு முன் உயிர்பிரிகிறது. இம்முறை மகத்தான விளைச்சல் இருக்கும் என எதிர்பார்ப்பவன் ஏமாந்து போகிறான்.
(சொல்லுங்கள் நபியே!) அல்லாஹ் எங்களுக்கு விதித்துள்ளதைத் தவிர (வேறொன்றும்) நிச்சயமாக எங்களை அணுகவே அணுகாது (9:51)
இவையெல்லாம் அல்லாஹ்வின் சோதனைகளாகும். இவ்வாறு அல்லாஹ் செயல்படுத்துவதை நம்பாதிருப்பது பெரும் பாவமாகும். இன்று முஸ்லிம்களில் பலர் அவர்களுக்கு பணம் பதவிகள் கிடைத்து விட்டால் போதும். அல்லாஹ்வுக்கு மாறு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் நினைப்பதெல்லாம். எனக்கு என்ன குறைவு! நான் எதற்கு அல்லாஹ்விற்கு பயப்பட வேண்டும்? ''அல்லாஹ் நாடினால் ஒரே வினாடியில் அவர்களின் பதவிகளையும், பொருட்களையும் அவர்களிடமிருந்து பிடுங்கி எடுத்துவிட்டு அவர்களையும் அழித்துவிட சக்திபெற்றவன்'' (28:81) என்பதை குர்ஆன் கூறும் வரலாறுகளிலிருந்து படிப்பினையாகப் பெறட்டும்.

64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்

--------------------------------------------------------------------------------
விசுவாசிகளே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்திலிருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப் போக்கிவிட்டு) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான் அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் விசுவாசங் கொண்டவர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள். நிராகரிப்பவர்களிடம் கடுமையாக இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிவார்கள் இழிவுபடுத்தும் எவர்களுடைய இழிவிற்கும் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதனை அளிக்கிறான். அல்லாஹ் மிக விசாலமானவனும் (யாவரையும்) நன்கறிந்தோனுமாக இருக்கிறான். (5:54)
யார் என் நேசரை பகைக்கின்றாரோ அவரோடு நான் ''யுத்தப் பிரகடனம்'' செய்வேன் என அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
இந்தக் குர்ஆன் வசனம் நல்லதோர் படிப்பினையைத் தருகிறது. அல்லாஹ் ஓர் அடியானை நேசிப்பதாயின் அதைவிடப் பாக்கியம் வேறு எதுவுமே கிடையாது. அல்லாஹ் ஓர் அடியானை நேசிப்பதாயிருந்தால் அந்த அடியான் அல்லாஹ்வின் கட்டளைகளைத் தவறாது குறைவு ஏற்படாமல் நிறைவேற்ற வேண்டும். கடமைகளை நிறைவேற்றும் போது மிகவும் பேணுதலாக இருக்க வேண்டும். பிறர் பார்ப்பதற்காக ஒரு செயலும், தனிமையில் வேறொரு செயலுமாக இருக்கக்கூடாது. இவ்வாறே, ஒழுங்காகச் செய்த செயலை பிறர் பார்க்கிறார்களே என்பதற்காக விட்டு விடவும் கூடாது. பிறரின் பழிப்பிற்கும், ஏளனத்திற்கும் அஞ்சாது, எந்நேரமும் அல்லாஹ்விற்காக வாழும் அடியானையே அல்லாஹ் விரும்புகிறான்.
என்னுடைய வலியை(நேசரை) யார் பகைக்கின்றாரோ, நான் அவரோடு ''யுத்தப் பிரகடனம்'' செய்துவிடுவேன். நான் கடமையாக்கியதைவிட சிறப்பான ஒன்றைக் கொண்டு ஓர் அடியான் என்னை நெருங்க முடியாது. நான் என்னுடைய அடியானை நேசிக்கும் வரை சுன்னத்தான வணக்கங்களைச் செய்துகொண்டு என்னை நெருங்கிக் கொண்டே இருப்பான். நான் அவனை நேசித்து விட்டால் அவன் கேட்கும் கேள்வியாக, இன்னும் அவன் பார்க்கும் பார்வையாக, இன்னும் அவன் பிடிக்கும் கரமாக, இன்னும் நடக்கும் காலாக, நான் ஆகிவிடுகின்றேன். அவன் என்னிடத்தில் (எதையாவது) கேட்டால் நிச்சயமாக நான் அவனுக்குக் அதை கொடுப்பேன், அவன் என்னிடத்தில் பாதுகாப்புத் தேடினால் நிச்சயம் நான் அவனுக்கு பாதுகாப்புக் கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
இவைகள்தான் அல்லாஹ்வின் நேசர்களின் பண்புகளாகும்.

65. தனித்துத் தொழுதல்

--------------------------------------------------------------------------------
''பாங்கு'' சத்தம் கேட்டபின் ஜமாஅத் தொழுகைக்குச் செல்லாது தனித்துத் தொழுவது பெரும் பாவமாகும். விரோதியின் பயம், நோய் போன்ற காரணங்களைத் தவிர்த்து, வேறு எக்காரணங்களுக்காகவும் ஜமாஅத் தொழுகையைத் தவற விடுவதற்கு அனுமதி கிடையாது. தனித்துத் தொழ முடியாது, ''பாங்கு'' சத்தம் கேட்டும், தக்ககாரணமின்றி ஜமாஅத் தொழுகைக்கு யார் செல்லவில்லையோ அவரது தொழுகை நிறைவேறாது. (தனித்துத் தொழுதால் தொழுகை நிறைவேறாது) என்று நபி அவர்கள் கூறியதும், விடுவதற்குரிய காரணம் எது? எனத் தோழர்கள் கேட்டனர். விரோதிகளின் பயம் அல்லது நோய் என நபி அவர்கள் விடையளித்தார்கள். (ஹாகிம்)
எவன் வசம் என் ஆத்மா இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக! தொழுகைக்காக பாங்கு கூறப்பட்டதும், ஒருவரை இமாமத் செய்யச் சொல்லிவிட்டு, (ஊருக்குள் சென்று) ஜமாஅத்திற்குச் செல்லாதவர்களின் வீட்டை நெருப்பு வைத்துக் கொளுத்தி விட எண்ணுகிறேன் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்;களிடம் கண்தெரியாத ஒரு மனிதர் வந்து , அல்லாஹுவின் தூதரே! என்னை, பள்ளிக்கு அழைத்து வருவதற்கு யாருமில்லை (என்று சொல்லி) வீட்டில்(தனிமையில்) தொழுவதற்கு அனுமதி கேட்டார்கள், நபியவர்களும் அனுமதி கொடுத்து விட்டார்கள். அந்த மனிதர் திரும்பி செல்லும் போது அவரை அழைத்து ''பாங்கு சப்தம் கேட்கின்றதா''? என வினவினார்கள், அதற்கு அவர் ''ஆம்'' என்றார். அப்படியானால் ''தொழுகைக்கு (பள்ளிக்கு) வந்தேயாகவேண்டுமென்றார்கள்''. (முஸ்லிம்)
ஜமாஅத்தோடு தொழும் தொழுகை, தனிமையில் தொழும் தொழுகையை விட இருபத்தி ஏழு மடங்கு சிறந்தது என நபிÉ அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

66. ஜும்ஆவைத் தவற விடல்

--------------------------------------------------------------------------------
விசுவாசிகளே! (வெள்ளிக்கிழமை) ''ஜும்ஆ'' தினத்தன்று தொழுகைக்காக (பாங்கு சொல்லி நீங்கள்) அழைக்கப்பட்டால், வர்த்தகத்தை விட்டு விட்டு அல்லாஹ்வை தியானிக்க நீங்கள் விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிவுடையோராக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக்க நன்று (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!) (62:9)
அல்லாஹ்வின் இந்தக் கட்டளை மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் ஜும்ஆவுக்குச் செல்வது கட்டாயக் கடமையாகும். தவறவிடுவது பெரும் பாவமாகும் என அறிந்து கொள்ளலாம்.
எவன் காரணமின்றி ஜும்ஆவைத் தவற விடுகிறானோ அவனை முனாபிக் (நயவஞ்சகன்) என பதியப்படும் என்று நபி அவர்கள் கூறினார்கள். (நஸாயி)
எவன் அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களைத் தவற விடுகிறானோ (நேர்வழியைத் தவறவிட்டவன் என்பதாக) ''அவனது உள்ளத்தில் முத்திரையிடப்பட்டுவிடும்'' என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
வயது வந்த எல்லோருக்கும் ''ஜும்ஆ'' கட்டாயமாகும் என நபி அவர்கள் கூறினார்கள்.(நஸாயி)
யாராவது ஒருவன் வெள்ளிக்கிழமையில் குளித்து, நேரகாலத்துடன் பள்ளிவாசலுக்குச் சென்றால் ஓர் ஒட்டகை குர்பான் கொடுத்த நன்மையைப் பெறுகிறான். இரண்டாம் நேரத்தில் சென்றவன் ஓர் மாட்டை குர்பான் செய்த நன்மையையும், மூன்றாம் நேரத்தில் சென்றவன் ஓர் ஆட்டைக் குர்பான் செய்த நன்மையையும், நாலாம் நேரத்தில் சென்றவன் ஒரு கோழியைக் குர்பான் செய்த நன்மையையும், ஐந்தாம் நேரத்தில் சென்றவன் ஒரு முட்டையைக் குர்பான் செய்த நன்மையையும் பெறுகிறான். இமாம் குத்பா ஓத ஆரம்பித்ததும் அதைக் கேட்பதற்கு மலக்குகள் யாவரும் வந்துவிடுவார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)
பெரும் பாவியைத் தவிர வேறெவனும் இத்தகைய விசேஷங்களைத் தவறவிடமாட்டான். எனவே ஜும்ஆவைத் தவறவிடும் பெரும் பாவத்திலிருந்தும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!

67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்

--------------------------------------------------------------------------------
ஒரு செல்வந்தன் மரணமடைந்தால், அவன் செல்வங்களை அவனின் மனைவி, மக்கள் இன்னும் குடும்பத்திலுள்ள சிலருக்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் இஸ்லாம் அனுமதித்த அளவு பங்கு போட்டு அனுபவிப்பதற்கு இறைமார்க்கம் அனுமதி அளித்துள்ளது. குர்ஆன், இன்னாருக்கு இவ்வளவு பங்கு என்று தெளிவாகக் கட்டளையிட்டுள்ளது. இதற்கு மாறாக நடப்பது பெரும் பாவமாகும். சிலர் இந்தக் கட்டளையை புறக்கணித்துவிட்டு மரண சாசனம் என்ற பெயரில் சிலருக்கு அதிகமாக பங்கு எழுதி விடுகிறார்கள். இது தவறு என்பதை கீழ்காணும் குர்ஆன் வசனம் எடுத்துக் காட்டுகிறது.
...(மரண சாசனத்தைக் கொண்டு வாரிசுகளில் எவருக்கும்) நஷ்டத்தை உண்டு பண்ணாதவனாக இருக்க வேண்டும். (இது) அல்லாஹ்வுடைய கட்டளையாகும். அல்லாஹ் நன்கறிந்தோனும், மிகப்பொறுமை உடையோனுமாக இருக்கிறான். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவர்கள் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்பட்டு நடக்கின்றார்களோ, அவர்களை நீரருவிகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் அவன் சேர்க்கின்றான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இது ''மகத்தான பெரும்பாக்கியமாகும்''. எவன் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, அவன்(ஏற்படுத்திய) வரம்புகளைக் கடக்கின்றானோ (மீறுகின்றானோ), அவனை (அல்லாஹ்வாகிய) அவன் நரகத்தில் புகுத்திவிடுவான். அன்றி இழிவுபடுத்தும் வேதனையும் (அதில்) அவனுக்கு உண்டு. (4:12-14)

68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்

--------------------------------------------------------------------------------
(அவர்கள்) கர்வங்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர (மற்றெவரையும்) சூழ்ந்துகொள்ளாது... (35:43)
சூழ்ச்சி செய்வதும், வஞ்சிப்பதும் பெரும் பாவங்களைச் சேர்ந்ததாகும். பிறரை வஞ்சிப்பவன் அல்லது பிறருக்கு சூழ்ச்சி செய்பவன் தன்னையே வஞ்சித்துக் கொள்கிறான். அவன் பிறருக்குச் செய்யும் சூழ்ச்சி அவனையே தாக்கிவிடும். இதுவே இந்தக் குர்ஆன் வசனத்தின் கருத்தாதும்.
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்து விடுவான். (4:142)
இந்த குர்ஆன் வசனத்திற்கு, குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவராகிய ''வாஹிதீ'' என்பவர், பின்வரும் விளக்கத்தைக் கூறுகிறார்கள். மறுமையில் விசுவாசிகளுக்கு ஸிராத்தல் முஸ்தகீம் பாலத்தில் நடப்பதற்கு ஒளி கொடுத்து வழி காட்டப்படும். அவ்வேளையில் பிறரை வஞ்சித்தவர்களும் அவ்வொளியின் உதவியால் அப்பாலத்தைக் கடக்க முயற்சிப்பர் உடனே ஒளிமறைந்து இருள் சூழ்ந்து விடும். பாலத்தைக் கடக்க முடியாமல் நரகில் வீழ்ந்து விடுவார்கள். இதுதான் அல்லாஹ் அவர்களை வஞ்சிப்பதன் பொருள்.

69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்

--------------------------------------------------------------------------------
ஒரு முஸ்லிம் சகோதரனுடைய விஷயங்களைத் துருவித் துருவி ஆராய்வதும், அதைப் பிறருக்குத் தெரியப்படுத்தி துப்புக் கொடுப்பதும் கொடிய பாவமாகும். இதனால் நமக்கிடையே வெறுப்பும், பகைமையும் அதிகரிக்கும். ஒற்றுமை என்னும் கட்டுக்கோப்பு குலைந்து விடும்.
(எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். (49:12)
யுத்த காலங்களில் எதிரியின் நிலைகளை அறிவதற்காக மட்டும் உளவு பார்க்க அனுமதியுண்டு. ஒரு தளபதி இதற்காகச் சிலரை உளவாளிகளாக ஊதியங்கொடுத்து வைத்துக் கொள்ளவும் முடியும். நபிÉ அவர்கள் உளவு பார்க்க சில தோழர்களை யுத்த காலங்களில் அனுப்பியுள்ளார்கள்.
இவ்வாறான நிலை தவிர்த்து ஏனைய நேரங்களில் ஒரு முஸ்லிமை உளவு பார்ப்பதும், அதைப் பிறரிடம் கூறுவதும் கொடிய பாவங்களாகும். (இந்த விஷயத்தில் பெண்கள் முதலிடம் வகிக்கிறார்கள். இரண்டு பெண்கள் சேர்ந்து கொண்டால் போதும் ஒன்றுக்குப் பத்தாக மற்றவர்களைப் பற்றியே தேவையின்றி வம்பளந்து கொண்டிருப்பார்கள்)
இத்தகைய கொடிய பாவங்களில் ஈடுபடாமலிருக்க அல்லாஹ் உதவி செய்வானாக!

70. நபித் தோழர்களைத் தூஷித்தல்

--------------------------------------------------------------------------------
முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாத்தில்) முதலாவதாக முந்திக்(கொண்டு விசுவாசங்) கொண்டார்களோ அவர்களையும், நற்கருமங்களில் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். (9:100)
நபியின் மீதும், கஷ்டகாலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மீதும், அன்ஸாரிகள் மீதும் நிச்சயமாக அல்லாஹ் அருள் புரிந்தான். (அவ்வாறே) அவர்களில் ஒரு பிரிவினருடைய இருதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்கள் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் மீது அன்பும் கிருபையும் உடையோனாக இருக்கின்றான். (9:117)
அந்த மரத்தினடியில் உம்மிடம் (கை கொடுத்து) வாக்குறுதி செய்த விசுவாசிகளைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். (48:18)
நிச்சயமாக எவர்கள் விசுவாசங் கொண்டு, (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும், பொருள்களையும் தர்மம் செய்து யுத்தம் புரிந்தார்களோ அவர்களும், எவர்கள் அவர்களுக்கு(த் தங்கள் இல்லங்களில்) இடமளித்து வைத்துக் கொண்டு உதவி புரிந்தார்களோ அவர்களும், ஆகிய இத்தகையோர் ஒருவருக்கொருவர் நட்பில் மிக நெருங்கியவர்களாவர் (8:72)
அல்லாஹ் தன் தூதருக்கு வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் வெளிப்படுத்திய இறை அத்தாட்சிகளின் தொகுப்பே அல்குர்ஆனாகும். அல்லாஹ்வின் தூதர் É அவர்கள் சொன்னவை, செய்தவை, அங்கீகரித்தவையாகிய அல் ஹதீஸ்களை ஒன்று விடாமல் நம்மிடத்தில் ஒப்பித்தவர்கள் அந்த உத்தம நபித்தோழர்களாவர்.
எனது தோழர்களைத் தூஷிக்காதீர்கள்! உங்களில் ஒருவர் ''உஹத்'' மலையளவு தங்கத்தை (இஸ்லாத்திற்காக)ச் செலவு செய்தாலும் அவர்களின் இடத்தைப் (அந்தஸ்தை) பிடிக்கவே முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
உத்தம, தோழர்களில் முதலிடம் வகிப்பவர்கள் குலபா உர்ராஷிதீன்காளாகிய அபூபக்கர் Ë உமர் Ë உதுமான் Ë அலி Ë ஆகியோர்களாவர்.

, ,