குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

7.8.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஈகை பெருநாள் -சபீர்
 பெருநாளுக்கு முதல்நாளே
பிறைசிரிக்கும் கீழ்வானில்
குளக்கரையும் படித்துரையும்
குதூகலிக்கும் சிறுவர்களால்




தெருவெங்கும் தீன்கமழும்
வீடெங்கும் விளக்கெறியும்
விடியவிடிய சிரிப்பொலியும்
விடிந்தபின்னால் புதுப்பொலிவும்

பள்ளியெங்கும் நறுமனமும்
பாங்கொலிபோல் தக்பீரும்
பெருநாளைச் சிறப்பிக்கும்
முழுநாளும் முகமன்களோடு

புத்தாடை மொருமொருக்கும்
அத்தர்களின் மணமிருக்கும்
சட்டைப்பையில் பணத்தோடு
மடித்திருக்கும் கைக்குட்டையும்
வட்டிலப்பம் வெட்டெடுக்க
வாய்க்கிணற்றில் நீரூறும்
தட்டிலதை இட்டுவைக்கும்
தாய்க்குணத்தில் தேனூறும்

முட்டைவடிவ கடற்பாசி
மொட்டவிழ்ந்த வடிவத்திலும்
பிட்டுவைத்த கண்ணாடியாய்
கட்டுடைந்து கரைந்துவிடும்

பொறிச்ச ரொட்டி பொசுபொசுக்க
பூவிதழாய்ப் பிய்ந்து வரும்
எறச்சாணக் கூட்டணியில்
எச்சிலூறும் நினைத்துவிட்டால்


இடியப்பச் சிக்கலொன்றே
இலகுவாக அவிழுமன்றோ
சவ்வரிசி கஞ்சியூற்ற
சப்புக்கொட்டும் முழு நாக்கும்

விடியும்போதே மணத்துவிடும்
வீட்டில் செய்யும் உணவு வகை
பசியாற அமர்ந்துவிட்டால்
ருசியாலே கவர்ந்துவிடும்

பிரியாணிப் பிரியருக்கு
பெரும்விருந்து எமதூரே
விருந்துணவை நிறைவுசெய்ய
இனிப்புவகை ஏராளம்

ஊர் மணக்கும் பதார்த்தங்களால்
எங்களூரின் பேர் மணக்கும்
உளம் மகிழும் பழகிவிட்டால்
நாங்கள்பேணும் நன்னெறியால்!



-Sabeer Ahmed abuShahruk
, ,