குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

21.5.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

வட்டி
வட்டியை உண்போர் (மறுமை நாளில் )ஷைத்தான் தீண்டியவனை போல் பைத்தியமாகவே எழுவார்கள் "வியாபாரம் வட்டியை போன்றதே" என்று அவர்கள் கூறியதே இதற்க்கு
காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்து விட்டான். தமது இறைவன் இடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகி கொள்பவருக்கு முன் சென்றது உரியது அவரை பற்றிய முடிவு அல்லாஹ்விடம் வுள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள் (2:275) நிரந்தர நரகம் யாருக்கு? காபிருக்கு தானே வட்டி வாங்குபவருக்கும் வுண்டு வட்டி (ஒரு சமூகக் கொடுமை)
வட்டியினால் ஏற்படும் தீமைகள்.!!!!, வட்டி என்றால் என்ன.?, வட்டியைப் பற்றி இறைவனும் அவனது தூதரும்.

வட்டி

நாம் வாழும் பூமி, கண்கள் காணும் மேகம், வானம், நாம் சுவாசிக்கும் காற்று, சுவையாக உண்ணும் பொருட்கள், பருகும் நீர்... இப்படி மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் படைத்த இறைவன். அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் கற்றுத் தந்து, எதை எல்லாம் மனிதன் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவாக்கி விட்டான். அத்தோடு விட்டுவிடாமல் அவன் காட்டித் தந்தவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக இம்மனித குலத்திலிருந்து பல புனிதர்களைக் காலத்திற்கேற்ப, தேவைக்கேற்ப தன்னுடைய தூதர்களாகத் தேர்ந்தெடுத்து அனுப்பினான்.

உலகில் முதல் மனிதரும், முதல் இறைத்தூதருமான ஆதம் (அலை) அவர்களை அனுப்பும் போது,

நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள், என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும் போது யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அல்குர்ஆன் 2:38

மேற்கண்டவாறு கூறியே இறைவன் அனுப்பினான். அதே போன்று அதற்கடுத்த காலங்களில் நூஹ்(அலை) அவர்கள் ஸாலிஹ் (அலை) அவர்கள், அய்åப்(அலை) அவர்கள், இன்னும் இவர்களைப் போன்ற இறைத்தூதர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் இறைவனால் அனுப்பப்பட்டார்கள்.

ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் அனுப்பப் பட்ட அந்த இறைத்தூதர்கள் இறைவன் ஏவியபடியே அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமென்பதையும், இன்னும் அந்த மக்கள் செய்து வந்த அக்கிரமங்களை விட்டும் விலக வேண்டுமென்பதையும் தெளிவுபடுத்தி எச்சரித்தார்கள். அந்த நபிமார்கள் வரிசையில் நபி ஷூஐபு (அலை) அவர்களை மக்கள் பொருளாதாரக் குற்றங்களில் மூழ்கிக்கிடப்பதை எச்சரித்துச் சீர்செய்ய அல்லாஹ் அனுப்பினான்.

பொருளாதாரத்தின் மீது மனிதன் கொண்ட பேராசை அன்றே அவனை மோசடி செய்யத் தூண்டியது என்றால் இன்றைய உலக சூழலில் மனிதன் எந்த அளவிற்கு மோசமான நிலைக்குத் தள்ளப்படுவான். அது அவனை எந்த அளவிற்கு இழிவு படுத்தி விடும் என்பதால் இறைவன் தனது இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மூலம் இறுதி நாள் வரை ஒத்துவரக் கூடிய மாபெரும் கரு¥லமான திருக்குர்ஆனை அருளினான்.

அப்புனித திருமறையின் பொருளாதாரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது அது எந்த அளவிற்கு அவசியமானது என்பதையும், அதை மனிதன் தேடிக் கொள்ளும் வழிமுறைகளையும், அதை அவன் பங்கிட்டு வாழும் திட்டத்தையும் அதனால் அவனுக்கு கிடைக்கும் பாக்கியத்தையும் குறிப்பிட்டதோடு இறைவன் கூறியிருக்கும் அப்பொருளாதாரத் திட்டத்திற்கு மாற்றமான வேறொரு திட்டத்தை மனிதன் வகுக்கும் போது விளையும் தீங்குகளையும் இறைவன் தெளிவு படுத்தி விட்டான்.

அப்படி இறைவனால் தடுக்கப்பட்ட பொருளாதாரத் திட்டங்களில் ஒன்று தான் வட்டி. இறைவனால் தடுக்கப்பட்ட இந்த வட்டி முறை பொருளாதாரத்தை மனிதன் கையாண்டால் அவன் ஈருலகிலும் பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும் இறைவன் தெளிவுபட எச்சரித்திருக்கிறான்.

வட்டியினால் ஏற்படும் தீமைகள்

வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை இறைவன் தடை செய்துள்ளானே, அது அப்படி என்னதான் தீமைகளைக் கொண்டது என்பதை நாம் ஆராயும் போது, அதனால் ஏற்படும் தீமைகளுக்கு அளவே இல்லை என்றே கூறலாம்.

எத்தனையோ கிராமப்புறங்களில் வாங்கிய தொகைக்கு வட்டி கொடுக்க முடியாத பெண்கள் அதற்கு ஈடாகத் தம் மானத்தையே இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதே போன்று எத்தனையோ அப்பாவி ஆண்கள் வட்டி கட்ட முடியாததால் தன் மனைவியையோ அல்லது தன் வீட்டிலுள்ள மற்ற நபரையோ அந்தப் பணத்திற்கு ஈடாக வைத்து அந்தப் பணத்தைச் செலுத்திய பின்னரே அவர்களை மீட்டிக் செல்லும் அவல நிலையை இன்றும் பல கிராமங்களில் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

இதில் மானத்திற்கு அஞ்சியவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமைகளையும் காண முடிகிறது. மேலும் தொழில் நடத்தலாம் என்ற நோக்கத்தோடு வட்டிக்குப் பணம் வாங்கியவர்கள் வட்டி கட்ட முடியாமல் தங்கள் தொழில் நட்டப்பட்டு முன்பு இருந்த நிலையை விட மோசமான நிலைக்குத் தள்ளப் படுவதையும் யாரும் மறுக்க முடியாது. இந்த வட்டி அடிப்படையில் கடன் வாங்கிய எத்தனையோ நாடுகள், தான் வாங்கிய கடனுக்கு மேல் பல மடங்கு அதிகமான வட்டி கொடுத்த பின்னரும் தான் கடனாக வாங்கிய தொகை குறையாமல் அப்படியே இருப்பதைக் கண்டு வருந்துவதைக் காண்கிறோம். இவ்வாறு வட்டியினால் ஏற்படும் கொடுமைகளுக்கும் கேடுகளுக்கும் அளவே இல்லை என்ற நிலை இன்று உருவாகி விட்டது.

வட்டி என்றால் என்ன?

பொருள் கொடுத்தவன் தன் பொருளைத் திரும்பப் பெறும் வரையிலோ அல்லது திரும்பப் பெறும் போதோ அல்லது தவணை முறையிலோ தான் கொடுத்துள்ளவற்றுக்கு அதிகமாக ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்குவது வட்டி எனப்படும்.

பொருளைக் கொடுப்பவர், தான் கொடுத்த அளவு மட்டும் வாங்குதல் கடன் எனப்படும். அதிகமாக வாங்குவது வட்டியாகும் என்று கூறும் போது சிலர் நாங்கள் வாங்குவது வட்டியல்ல. அவருக்குக் கிடைக்கும் லாபத்தில் பங்குதான் வாங்குகிறோம் என்று கூறுவர். இது பங்கு வாங்குதலாகாது. அப்படியானால் இலாபத்தில் எவ்வாறு பங்கு வாங்குகின்றோமோ அதே போன்று நட்டத்திலும் பங்கு கொள்ள வேண்டும் அல்லவா?

அப்படி லாபத்திலும், நட்டத்திலும் பங்கு கொண்டால் வாங்கப் படும் தொகை வட்டியாகாது. ஆனால் வட்டி வாங்குபவர்கள் எவ்வித உழைப்புமின்றி லாபத்தில் மட்டும் பங்கு பெறுகிறார்கள். பணம் வாங்கி அதற்கு வட்டி செலுத்துபவன் பெரும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டாலும் கூட வட்டி வாங்குபவர்கள் அதைப் பொருட்படுத்தவே மாட்டார்கள்!

இலாபத்தில் மட்டும் பங்கு கொள்வோம் என்ற அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் அனைத்துமே வட்டியாகத் தான் கருதப்படும்.

வட்டியைப் பற்றி இறைவனும் அவனது தூதரும்

வட்டி என்றால் என்ன, எந்த அளவிற்கு மனித குலத்திற்குத் அது தீங்கை விளைவிக்கின்றது என்பதை எல்லாம் நாம் கவனித்த பின்பு மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டிய இறைவனும், இறைத்தூதரும் இது பற்றிக் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ஒரு முஸ்லிம் உலகில் என்ன செய்தாலும், தான் செய்யக்கூடிய அச்செயலைத் திருக்குர்ஆனிலும், நபி(ஸல்) அவர்கள் வாழ்வினிலும் ஒப்பிட்டுப்பார்த்த பின்பே செயல்படுத்த வேண்டும். வட்டி முறைப் பொருளாதாரத்தை நாம் அவ்வாறு காணும்போது அது முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே தெரிய வருகிறது.

(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருள்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. அல்குர்ஆன் 30:39

கடன் கொடுத்தவன் தான் கொடுத்துள்ளதைத் திரும்பப் பெறும் போதோ, அல்லது திரும்பப் பெறும் வரையில் தவணை முறையிலோ தான் கொடுத்துள்ள அதே இனப் பொருளைக் கொடுத்ததற்கு அதிகமாக வாங்குவது வட்டியாகும்.

குறிப்பிட்ட பொருளைக் கொடுத்து விட்டுத் திரும்பப் பெறும் போது அதிகமாக வாங்கினால் தான் வட்டி என்று பொருளல்ல. மேற்குறிப்பிட்ட வசனத்தில் இன்னபொருள் என்று குறிப்பிடாமல் பொதுவாக பொருட்கள்(அம்வால்) என்று கூறப்பட்டுள்ளது. எனவே பணம் தான் என்றில்லாமல் எந்தப் பொருளைக் கொடுத்தாலும் அதைத் திரும்ப பெறும் போது கூடுதலாக வாங்கி விட்டால் அது வட்டியாகி விடும் என்பது தெளிவாகிறது. இதைப் பற்றி நபி(ஸல்) அவாகள் கூறுகையில்

''தங்கத்தைத் தங்கத்திற்குப் பதிலாகவும், வெள்ளியை வெள்ளிக்குப் பதிலாகவும், மணிக்கோதுமையை மணிக் கோதுமைக்குப் பதிலாகவும், தொலிக் கோதுமையைத் தொலிக் கோதுமைக்கு பதிலாகவும், பேரித்தம் பழத்தைப் பேரீத்தம் பழத்திற்குப் பதிலாகவும், உப்பை உப்பிற்குப் பதிலாகவும் சம எடையில் விற்றுக் கொள்ளுங்கள். இவ்வினங்கள் மாறுபடுமானால் கரத்திற்குக் கரம் நீங்கள் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அறிவிப்பவர்: உபதத்துப்னு ஸாமித்(ரலி) நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸை எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ள இந்த ஆறு பொருட்களில் தான் வட்டி வாங்கலாகாது. நெல், சோளம் போன்ற ஏனைய பொருட்களில் வட்டி கூடும் என்று வாதிட முடியாது. ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் உதாரணத்திற் காகவே சில பொருட்களைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்களே தவிர இவற்றில் மட்டும் தான் வட்டி வாங்கலாகாது என்ற அர்த்தத்தில் இல்லை. அப்படி ஒரு அர்த்தத்தை நாம் எடுத்தால் அந்த ஹதீஸ் அல்குர்ஆனின் 30:39 வசனத்திற்கு முரண்பட்டு விடும். குர்ஆனிற்கும் ஹதீஸ்களுக்கும் ஒருபோதும் முரண்பாடு ஏற்படாது. அவ்வாறு முரண்படும் அர்த்தத்தை நாம் எடுக்கவும் கூடாது.

மேலும் வட்டி வாங்குபவர்களைப் பற்றி இறைவன் தனது திருமறையில் குறிப்பிடும் போது,

வட்டி வாங்கி உண்பவன் பைத்தியக்காரன்,

வட்டி வாங்குபவன் பெரும், குற்றவாளி,

அவன் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்த்துப் போரிடுபவன்,

அதை விட்டும் மீளாவிட்டால் நிரந்தர நரக வாசியாக அவன் ஆகிவிடுவான் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளான்.

''வட்டியை (வாங்கி) விழுங்கு கின்றவர்கள் (மறுமை நாளில் இறைவனால் எழுப்பப்படும் போது) ஷைத்தான் பிடித்த பைத்தியக் காரன் எழும்புவது போலன்றி (வேறுவிதமாக) எழும்ப மாட்டார்கள். ஏனென்றால் வணிகமும் வட்டியைப் போன்றது தான்(எனவே வட்டி வாங்குவது தவறில்லை) என இவர்கள் கூறியதுதான் இதற்குக் காரணம்.

ஆனால் அல்லாஹ் வணிகத்தை ஆகுமானதாக்கி வைத்து வட்டியைத் தடுத்து (ஹராமாக்கி) விட்டான். ஆதலால் இறைவனிடமிருந்து வந்த (இந்த) எச்சரிக்கைப் படி (அதை விட்டும் முழுமையாக) விலகிக் கொண்டால் (அதற்கு) முன்பு (அவன் வட்டியாக வாங்கிச்) சென்றது அவனுக்குரியதே. (இதற்கு முன்பு வட்டி வாங்கிய) அவனுடைய விடயம் அல்லாஹ்விடத்தில் இருக்கின்றது. (அல்லாஹ்வின் எச்சரிக்கை வந்த பின் வட்டி வாங்குவதை விட்டு விட்டால் அல்லாஹ் அவனை மன்னித்தும் விடலாம்) தவிர (இந்த எச்சரிக்கை கிடைத்த) பின்னரும் எவரேனும் வட்டி வாங்க முற்பட்டால் அவர்கள் நரக வாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். அல்குர்ஆன் 2:275

மேற்கண்ட வசனத்தில் வட்டி வாங்குவது தடுக்கப்பட்டது என்பதை அறிவிப்பதோடு, இக்கடுமையான எச்சரிக்கைக்குப் பின்பும் வட்டி வாங்க முற்படுவர் நரகவாசி என்றும் அதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாம் இதில் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இறைமறுப்பாளர்கள், இணைவைப்பவர்கள் ஆகியவர்களைப் பற்றி நரகவாசிகள் என்ற கூறும் போது ''ஹூம்ஃபீஹா காலிதூன்'' (அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி விடுவார்கள்) என்ற வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்தியிருக்கிறான். அதே வாசகத்தைத் தான் இங்கு வட்டி வாங்குபவர்களை எச்சரிக்கும் போதும் கூறியிருக்கிறான். அப்படியானால் வட்டி வாங்குவது எந்த அளவிற்குக் கொடிய பாவம் என்பதை இதன் மூலம் தெளிவாக அறியலாம்.

இக்கொடிய பாவத்தைப் பாவம் என்ற அறிந்த மறுகணமே அதை விட்டு விலகுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும். அப்படி அவன் மீளவில்லையென்றால் அவன் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்த்துப் போரிடுபவன் என்று அதே அத்தியாயத்தில் அடுத்து வரும் வசனங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அறியாமை காலத்திலிருந்தே பன} அம்ர் இப்னி உமைர் எனும் குடும்பத்தார் பனு முஙைரா எனும் குடும்பத்தார்களுக்குத் தங்கள் பொருட் களைக் கொடுத்து வட்டி வசூலித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இரு குடும்பத்தாரும் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டனர். அதன் பின்னரும் அவர்கள் முன்னர் போன்று வட்டி வசூலித்து வந்தனர்

பின்னர் வழக்கம்போல் பன} அம்ர் பின் உமைர் குடும்பத்தார் பன} முஙைரா குடும்பத்தாரிடம் வட்டி வசூலிக்கச் சென்றனர். ஆனால் பன} முஙைரா குடும்பத்தார், ''அல்லாஹ் விசுவாசிகளை விட்டும் வட்டியை அகற்றி விட்டான். எனவே நாங்கள் இஸ்லாத்தில் இருந்து கொண்டு வட்டி கொடுக்க மாட்டோம்'' என்று வட்டி கொடுக்க மறுத்து விட்டனர்.

அவர் வசூலிக்க வந்த வட்டித்தொகை, வட்டி ஹராம் என்று அருளப்படுவதற்கு முன்பே பன} முஙைரா கொடுக்க வேண்டிய தொகை. எனவே தான் அவர் வசூலிக்க வந்தார். இதற்கு மாறாக வசனம் அருளப்பட்ட பின்பும் வட்டி வாங்க அவர்கள் புறப்பட வில்லை. என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தனக்குப் பெருமளவு வட்டித்தொகை வரவேண்டியதாக இருந்ததால் பன}அம்ர் பின் உமைர் குடும்பத்தினர், ''அல்லாஹ் இப்போது தானே வட்டியை ஹராமாக்கியுள்ளான். இதற்கு முன்பே எங்களுக்கு நீங்கள் தர வேண்டிய பாக்கித்தொகை உள்ளதே. எனவே நீங்கள் அதனைக் கொடுப்பது தானே நியாயம்'' என்று வாதிட்டனர்.

அப்போது உஸைத்(ரலி) அவர்களை மக்கா மாநகரின் அதிகாரியாக நபி(ஸல்) அவர்கள் நியமித்திருந்தார்கள். பன}அம்ர் பின் உமைர் குடும்பத்தாரின் வழக்கு அங்கு கொண்டு வரப் பட்டது. அவர்களின் இவ்வழக்கில்தான் தீர்ப்புக் கூறாமல், அதன் விபரங்களை முழுமையாக எழுதி நபி(ஸல்) அவர்களிடம் உஸைத் (ரலி) தீர்ப்புக் கேட்டார்கள்.

அப்போது அல்லாஹ் திருமறையின் இரண்டாவது அத்தியா யத்திலுள்ள 278, 279 ஆகிய இரு வசனங்களையும் அருளினான், பன} அம்ர் பின் உமைர் இவ்வசனங்களைக் கேள்விப்பட்ட உடன் நாங்கள் தவ்பா செய்கின்றோம் என்று கூறி மீதமிருந்த வட்டித் தொகையை வாங்காமல் விட்டு விட்டனர்.

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களாக இருப்பின் அல்லாஹ்விற்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காது) விட்டு விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிட்டால் இறைவனும், அவனுடைய தூதருடனும் யுத்தம் செய்யத் தயாராகுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி மனம் வருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு. நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் (அவ்வாறே) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 2:278, 279

இவ்வசனங்களின் மூலமும் மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் மூலமும் வட்டி வாங்குபவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிடுபவர்கள் என்பதை உணரலாம். எனவே நம்மிடம் எவ்விதத்தில் வட்டி தலையிட்டாலும் அதை வேரோடுப் பிடுங்கி எறிந்திட வேண்டும். இதை அறிந்த பின்னரும் தன்னைத் திருத்திக் கொள்ளாதவன் நிச்சயம் தண்டிக்கப் படுவான். இதில் துளியும் சந்தேகமில்லை.

எவரிடமும் வட்டி வாங்கலாகாது

(மற்ற) மனிதர்களுடைய பொருட்களுடன் சேர்ந்து (உங்களது பொருள்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை.

அல்குர்ஆன் 30:39

ஏழைகள் வறுமையின் கொடுமையைப் போக்குவதற்கு வாங்கும் கடனுக்கோ, நோயாளிகள் நோயைப் போக்க வாங்கும் கடனுக்கோ வட்டி வாங்குவது தான் குற்றம். வணிகம், விவசாயம் போன்ற தொழில் ரீதியான கடன்களுக்கு வட்டி வாங்கலாம் என்பது சிலருடைய கருத்தாகவும் இருந்துவருகிறது. இது தவறான கருத்தாகும். ஏனெனில் வட்டி வாங்கலாகாது என்று இறைவன் கூறும் போது இன்னாரிடம் வட்டி வாங்கலாகாது என்று இனம் பிரித்துக் கூறாமல் 'அன்னாஸ்' மனிதர்கள் என்றுதான் கூறியுள்ளான்.

இன்ன மொழிக்காரனிடம் இன்ன இனத்தவரிடம் இன்ன நாட்டுக்காரனிடம் இன்ன நிறத்தவனிடம் என்று கூறாமலிருப் பதால் மனிதனாகப் பிறந்த எவனிடமும் வட்டி வாங்கலாகாது. அப்படி வாங்கினால் அது குற்றம் என்பதை 30:39 வசனம் நமக்குத் தெளிவு படுத்துகிறது.

குற்றத்தில் சமமானவர்கள்

வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்காகக் கணக்கு எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். இன்னும் அவர்கள் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள் என்றார்கள்.

அறிவிப்பவர் ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்

வட்டி கொடுப்பவன் கொடுத்தால் தான் வட்டி வாங்குபவன் அதை வாங்குவான். எனவே வட்டி வாங்குபவன், வட்டி கொடுப் பவன் ஆகிய இருவருமே குற்றவாளிகள் என இஸ்லாம் கூறுகிறது. எழுதுபவன் சாட்சியானவர்கள் ஆகியோர் இவர்கள் செய்யும் குற்றத்திற்குத் துணை போனதால் அவர்களையும் இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது. மேலும் தெரிந்து கொண்டே அக்குற்றத்தைச் செய்வதால் அனைவரும் குற்றத்தில் சமம் என்றும் தீர்ப்பளிக்கின்றது இஸ்லாம். எனவே வட்டி வாங்கக் கூடாது என்பது மட்டுமல்லாமல் வட்டிக்காக எவ்விதத்திலும் துணையும் நிற்கலாகாது என்பதையும் மனதில் அழமாகப் பதித்திட வேண்டும்.

இன்று வங்கிகளில் வேலை செய்யும் முஸ்லிம்களைப் பார்க் கின்றோம். அவர்கள் இச்சட்டத்தைப் பற்றி நினைப்பது கூட இல்லை போலும். எனவேதான் அவர்கள் அவ்வேலையைச் செய்து அழிவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய உலகில் வட்டியில்லா வங்கிகள் ஓரிரு இடங்களைத் தவிர்த்து எங்கும் இல்லை. எனவே வட்டி முறையைக் கொண்டு இயங்கும் வங்கிகளில் வேலை பார்ப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. எங்கேனும் வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்காத வங்கிகள் இருக்குமானால் அதில் வேலை செய்யலாம். இஸ்லாம் அதைத் தடுக்கவில்லை. வட்டி முறையில் இயங்கும் வங்கிகளில் வேலை பார்க்கும் உயர் அதிகாரி முதல் வட்டித் தொடர்பான வேலை செய்யும் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள் தான். எனவே வட்டி முறையில் இயங்கும் வங்கிகளில் எவ்விதப்பணியும் மேற்கொள்ளக் கூடாது என்பது இஸ்லாமியச் சட்டமாகும்.

அடமானம்

வங்கிகள், பொது நிதி நிறுவனங்கள், அடகுக் கடைகள் பொருட்களைப் பெற்று அதற்குக் கடன் வழங்குவதை நாம் காணலாம். வழங்கப்படும் அக்கடன் தொகைக்கு அவர்கள் வட்டியும் வாங்குகின்றனர். சில தனி நபர்களும் இவ்வாறு செய்து வருகின்றனர். அடமானமாக வாங்கும் அப்பொருளைச் சிலர் உபயோகித்துக் கொண்டும் அதற்கு வட்டி வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இது சம்பந்தமாக இஸ்லாம் கூறும் தீர்வை நாம் காண்போம்.

நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடவேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு åதரிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாகக் கொடுத்து உணவுப் பொருள் களைக் கடனாகப் பெற்றார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்

''சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்று) செலவுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப் பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையேதான் செலவு சார்ந்திருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

மேற்கண்ட இறைவசனம், ஹதீஸ்களின் அடிப்படையில் பயணத்திலும் பயணம் அல்லாத காலத்திலும் பொருட்களை அடமானம் வைத்துக் கடன் பெறலாம் என்பது தெளிவாகிறது. ஆனால் அடமானமாகப் பெற்ற பொருளைக் கொண்டு இலாபம் எதுவும் அடையக் கூடாது. ஆனால் அடமானமாகப் பெற்ற பொருளுக்கு ஏதேனும் செலவு செய்தால் அந்த செலவுக்குத் தக்கவாறு அதைப் பயன் படுத்தலாம்; அல்லது அதற்குரிய செலவை அதன் உரிமை யாளரிடம் வசூலித்துக் கொள்ளலாம். அதற்கு மாறாக அதனைக் கொண்டு எவ்விதத்தில் பயன் பெற்றாலும் அது வட்டியாகி விடும் என்ற கவனத்தோடு செயல்படல் வேண்டும்.

ஒத்தி

ஒத்தி என்ற பெயரில் வீடு, கடை போன்றவற்றை வாங்குவ தும், அடமானப் பொருளை வாங்குவது போன்றுதான். எனவே அதிலும் நாம் எந்த உழைப்பும் ஊதியமுமின்றிப் பயன் பெற்றால், பயனாகப் பெற்றது வட்டியாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.

அடமானமாகப் பொருளைக் கொடுப்பது என்பது கடன் வாங்குபவன் தான் வாங்கும் கடனுக்கு உத்திரவாதமாகத்தான் அப்பொருளைக் கொடுக்கிறானே தவிர, கடன் கொடுப்பவன் பயன்படுத்துவதற்கல்ல. யாராவது இரு நபர்களைச் சாட்சியாக வைத்து நாம் ஒருவருக்குக் கடன் கொடுத்தால், சாட்சிக்காக வந்தவர்களைப் பயன்படுத்தி நாம் நம் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமா? அல்லது அந்த சாட்சியாளர்கள் தான் சம்மதிப்பார்களா என்பதை நாம் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்; அல்லது அது போன்று எவராவது நம்மைப் பயன்படுத்தினால் நாம் தான் அதை ஏற்போமா? ஒத்தியாக கடையோ, வீடோ நாம் வாங்கிக் கொண்டு, அதன் மூலம் பயனை அனுபவிப்பது என்பது வட்டிப் பணத்தை வாங்குவதற்குப் பதிலாக வாடகையில் கழிப்பதாகும். எனவே இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்றே!

தவணை முறையில் பொருட்கள் வாங்குதல்

தவணை (ஐளெவயடட அநவெ ) முறையில் பணம் கட்டுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு இன்று பல வணிக முறைகள் கையாளப் படுகின்றன. இதைப் பயன்படுத்தி அதனை விற்பவர்கள் வட்டி முறையில் பணம் சம்பாதிக்கின்றனர். தவணை முறைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

ஒன்று ரொக்கமாகப் பணம் கொடுத்து வாங்கினாலும் தவணை முறையில் பணம் கட்டுவதாகக் கூறி வாங்கினாலும் பொருளுக்குரிய விலையை ஒரே விலையாக வைத்து விற்பது. இதில் யாருக்கும் எவ்வித நட்டமும் இல்லை. இது மார்க்கத்தில் ஆகுமானது.

மற்றொன்று ரொக்கமாகப் பணம் செலுத்தி வாங்கினால் ஒரு விலையாகவும், தவணை முறையில் பணம் செலுத்துவதாகக் கூறி வாங்கினால் ஒரு விலையாகவும் அதாவது காலத் தவணைக்குத் தக்கவாறு (அதிகமான) விலை வைத்து விற்பது இந்த முறைப்படி விற்பது வட்டி முறையாகும். எனவே இம்முறை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

''பொருள்கள் மாறுபட்டால் கரத்திற்குக் கரம் நீங்கள் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபைததுப்னுஸ் ஸாமித்(ரலி) நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸில் தங்கத்திற்குப் பதிலாக வெள்ளி, பணத்திற்குப் பதிலாகப் பொருள் என்று மாறுபட்டால் கூட்டியோ, குறைத்தோ எப்படி விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அது உடனுக்குடன் என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே தவணைமுறையில் பொருட்கள் கொடுக்கல், வாங்கல் செய்யும் போது காலத்தை அடிப்படையாக வைத்து அதன் விலையைக் கூட்டிக் குறைத்துக் கணக்கிட்டுக் கொடுத்தால் அது வட்டியாகி விடும் என்பது தெளிவாகிறது. எனவே இந்த வியாபார முறையும் தவிர்க்கப் பட வேண்டியதே என்பதில் துளியளவும் ஐயமில்லை.

வட்டி என்பதே காலத்தை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கல் வாங்கல் செய்வது தான். எவராவது நம்மிடம் வந்து இப்போது நூறு ரூபாய் தருகிறேன் நீ எனக்கு நூற்றி இருபது உடனடியாகக் கொடு என்று கேட்டால் கொடுப்போமா?. காலத்தை அடிப்படையாக வைத்துத்தானே கூடுதலாகக் கொடுக்கின்றோம். அதைப் போன்றுதான் தவணை முறையிலும் காலத்தை அடிப்படை யாகக் கொண்டு கூடுதலாக வசூலிக்கப் படுகிறது என்பதை அறியவும்.

ஏலச்சீட்டு

சில இயக்கங்களில் சங்கத்தின் பணத்தையோ, பள்ளிவாசல் போன்ற பொது நிறுவனங்களுக்குச்,சொந்தமான பணத்தையோ ஏலம் விடுவதைக் காணலாம். அதில் அவர்கள் கையாளும் முறை வட்டியை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கின்றது. உதாரணத்திற்கு, ஒரு சங்கத்தினுடைய பணம் ரூபாய். 10,000, ஏலம் விடப்படுகிறது என்றால், அந்தத் தொகையை யார் மிகவும் குறைத்து கேட்கின்றாரோ அவருக்குக் கொடுக்கப்படும். அவர் அதைத் திரும்ப செலுத்தும் போது ரூபாய் 10,000ல் எதுவும் குறைக்காமல் முழுவதுமாகச் செலுத்த வேண்டும். இது மாதிரியான ஏலம் இஸ்லாமிய அடிப்படையில் தடுக்கப்பட்டது என்பதில் துளியளவும் ஐயமில்லை.

இந்தப் பணம் பொது நிறுவனத்திற்குத்தானே போய்ச் சேர்கிறது? இதனால் பலர் நன்மையடையும் வாய்ப்பு இருக்கிறதல்லவா? எனவே இதை ஒரு நன்கொடை போன்றும் எடுத்துக் கொள்ளலாமல்லவா என்று சிலர் எண்ணலாம்.

பொது நிதியிலிருந்து ஒருவன் பணம் பெற வருகிறான் என்றால் அவன் உதவி கேட்டுத்தான் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். உதவி கேட்டு வரும் அவனுக்கு மேலும் உபத்திரத்தைக் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். சரி ஏலமாகக் கேட்டு வாங்கிய அந்தப் பணத்தைக் கொண்டு அவர் தொழில் செய்யும் போது அதில் நஷ்டம் ஏற்பட்டு விட்டால், இந்தப் பொது நிறுவனங்கள் பணம் வாங்கிய அவனை விட்டு விடுமா என்றால் அதுவுமில்லை!

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கடன் கொடுக்கல், வாங்கல், பொது நிதிப் பங்கீடு எல்லாம் நடந்திருக்கிறது.

அவர்கள் இது போன்ற முறையைக் கையாண்டார்களா? என்று பார்த்தால் இல்லை என்றே தெரிகிறது. பின்பு நாம் ஏன் நம் இஷ்டத்திற்கு வட்டி முறையைக் கொண்ட இச்செயலைச் செய்து பாவியாக வேண்டும் என்பதை நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

குலுக்கல் சீட்டு

சில இடங்களில் குலுக்கல் சீட்டு நடத்தும் பழக்கம் உண்டு.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் சில நபர்கள் சேர்ந்து கொண்டு குறிப்பிட்ட தொகையை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை என்று அனைவரும் செலுத்தி அவர்கள் அனைவரின் பெயர்களையும் துண்டுச் சீட்டுக்களில் எழுதி, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து எவருடைய பெயர் இடம் பெறுகிறதோ அவருக்கு அத்தொகையைக் கொடுத்து விடுதல் என்பது தான் குலுக்கல் சீட்டு எனப்படும். இதில் பல முறைகள் உண்டு. அதில் மார்க்கம் அனுமதிக்காத முறைகளும் உண்டு. அதனை நாம் காண்போம்.

குலுக்கல் சீட்டில் இடம் பெறுபவர்கள் 11 நபர்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவரும் மாதாமாதம் ரூ.1000 செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கொள்வோம்.

ஒவ்வொரு மாதமும் எல்லோருடைய பெயரும் குலுக்கப்படும். எவருடைய பெயர் இடம் பெறுகிறதோ அவருக்கு ரூபாய் 10000 மட்டும் கொடுக்கப்படும். ரூ.1000 கம்பெனி எடுத்துக் கொள்ளும் இதில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமன்றி அவ்வப் போது யாரும் சேர்ந்து கொள்ளலாம். சுருக்கமாகக் கூறுவதானால் லாட்டரி சீட்டு நடத்துவது போன்றதுதான் இது. வட்டி வகையைச் சாராது சூதாட்ட வகையைச் சார்ந்ததாகும். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஒன்றாகும். முதல் மாதச்சீட்டை கம்பெனியே எடுத்துக் கொள்ளும். எனவே முதல்சீட்டு குலுக்கப்படாது. பின்னர் ஒவ்வொரு மாதமும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். இரண்டாவது மாதம் எவருடைய பெயர் இடம் பெறுகிறதோ, அவருக்கு 11,000ல் மிகக் குறைந்த குறிப்பிட்ட தொகை மட்டுமே கொடுக்கப்படும். அதற்கடுத்த மாதங்களில் அவர் பணம் கட்ட வேண்டியதில்லை. குலுக்கலில் அவரது பெயரும் இடம் பெறாது.

இது போல் இரண்டாவது மாதக் குலுக்கலில் எவரது பெயர் இடம் பெறுகிறதோ அவருக்கு முதல் மாதக் குலுக்கலில் இடம் பெற்றவருக்குக் கொடுத்த தொகையை விடக் கொஞ்சம் அதிகத் தொகை கொடுக்கப்படும். மீதித் தொகையைக் கம்பெனி எடுத்துக் கொள்ளும்.

அவர் அன்றோடு ஒதுங்கிக் கொள்வார். இதே போன்று தொடர்ந்து குலுக்கல் நடந்து கொண்டேயிருக்கும். இறுதியாக எவருடைய பெயர் இடம் பெறுகிறதோ அவருக்கு ரூ.11000-த்தை விடக் கொஞ்சம் அதிகமான தொகை கொடுக்கப்படும். இந்த முறை வட்டியையும் சூதாட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டிருப்ப தால் இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.

முதல் மாதச்சீட்டு குலுக்கலைப் பொறுப்பேற்று நடத்து பவருக்கு, அவரும் மாதாமாதம் தனக்குரிய பங்கைச் செலுத்தியாக வேண்டும். அதற்கடுத்து ஒவ்வொரு மாதமும் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு முழுத் தொகையும் கொடுக்கப்படும். எதுவும் குறைக்கப்படாது. அவருடைய பெயர் குலுக்கலிலிருந்து எடுக்கப்படும். ஆனால் அவர், தான் செலுத்த வேண்டிய பங்கைச் செலுத்திக் கொண்டே இருப்பார். இறுதியாக எவருடைய பெயர் இடம் பெறுகிறதோ அவருக்கும் அதே தொகை தான் கொடுக்கப்படும். கூடுதலாக எதுவும் கொடுக்கப்படாது. இது மாதிரியான குலுக்கல் மார்க்கத்திற்குட் பட்டதாக இருப்பதால் இதில் பங்கு கொள்ளலாம் தவறில்லை.

குலுக்கல் சீட்டு இன்னும் பல வகையாக இருக்கின்றன. உதாரணத்திற்குச் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். வட்டி., சூதாட்டம் இல்லாத குலுக்கல் முறைகளை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை விட்டு நாம் விலகிக் கொள்ள வேண்டும்.

வங்கி, தபால் அலுவலகங்களில் (பணம்) சேமித்தல்

இன்று பலர் தங்களுடைய பணத்தைத் தபால் அலுவலங் களிலும் வங்கிகளிலும் சேமித்து வருவதை நாம் காண்கிறோம். இஸ்லாமிய முறைப்படி இது ஆகுமானதுதானா என்பதைச் சிந்திக்காமல் தன்னை முஸ்லிம் என்று கூறும் ஒருவர் எச்செயலிலும் ஈடுபடக்கூடாது.

தபால் அலுவலகங்களில் கொடுக்கப்படும் வட்டிக்காகவே பலரும் தங்கள் பணத்தை அங்கு சேமிக்கின்றனர். இஸ்லாமிய முறைப்படி இது ஆகுமானதல்ல. வட்டி இல்லாத முறையிலான சிறு சேமிப்பு இருக்குமெனில் தாராளமாக அங்கு சேமிக்கலாம்.

வங்கிகள் வட்டி முறைப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு செயல் படுவதால் அங்கு சேமிப்பதும் ஆகுமானதல்ல.

இலட்சக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பணம் வைத் திருப்போர் தங்களின் பணத்தை என்ன செய்வது? (பேங்க்) வட்டி முறையில் இயங்குகின்றன என்று தவிர்த்தால் பணத்தைப் பாதுகாக்கும் வழி என்ன? பணத்தை கையில் வைத்திருப்பதால் கொலை செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன. இந்நிலை யிலிருந்து தப்பிக்க வழி என்ன என்ற சந்தேகம் சிலருக்கு எழக்கூடும். இது போன்ற நிலையில் உள்ளவர்கள் இருவிதமான நிலைகளைக் கடைப்பிடிக்கலாம்.

ஒன்று இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பலர் தொழில் தெரிந்தும், தொழில் நடத்தவதற்காக பணமின்றி இருக்கின்றனர். தொழில் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பணம் முதலீடு செய்து, பிறரையும் தொழில் பங்குதாரராக்கி இலாபம் பெறலாம். தன் பொருளைப் பாதுகாத்துக் கொள்ளவும் செய்யலாம்.

மற்றொன்று இது போன்று பணம் இருப்பவர்கள் வங்கியில் தனக்கு கணக்கு துவங்கும் போதே வட்டி வேண்டியதில்லை என எழுதிக் கொடுத்து பணத்தைப் போட்டுப் பாதுகாக்கலாம். இவ்வாறு செய்தால் வட்டி நமக்குக் கிடைக்காவிட்டாலும் நம் பணத்தில் கிடைக்கும் வட்டியை இஸ்லாத்திற்கு எதிராகப் பயன் படுத்துவோர் உண்டல்லவா என்று சிலர் கூறுவர். இங்கொரு முக்கியமான விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரூ.2 லட்சத்தை வங்கியில் செலுத்தினால் அதற்கு வட்டியாக ரூபாய்.10,000- என்று வங்கியில் வைத்துக் கொள்வோம். இதில் 2லட்சம் ரூபாய் என்பது மட்டுமே நம்பணம் என்று தெரியும் போது 10000 (பத்தாயிரம்) ரூபாய் நம் பணமாகாது என்பது தான் உண்மை. எனவே இது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

இது போன்ற பணத்தை வைத்து அவாகள் நமக்கு எதிராக சூழ்ச்சி செய்தாலும் இவர்களின் சூழ்ச்சியை முறியடிப்பதற்கு மார்க்கம் அனுமதித்த முறையைத் தான் கையாள வேண்டுமே தவிர, மார்க்கம் தடைசெய்த செயலைச் செய்து பாவியாகி விடக்கூடாது. இது மட்டுமல்லாமல் இவர்களின் சூழ்ச்சியை விட இறைவனின் சூழ்ச்சி கடுமையானது என்பதால் நாம் அலட்டிக் கொள்ள வேண்டியதுமில்லை.

அவர்கள் திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்வோரில் மிக மேன்மையானவன். அல்குர்ஆன் 3:54

மற்றொரு வழியையும் கையாளலாம். வங்கிகளில் நடப்புக் கணக்கு (உரசசநவெ யஉஉழரவெ) வைத்துக் கொண்டால் வட்டிப் பணம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே இம்முறையை நாம் கையாண்டு வட்டியைத் தவிர்க்கலாம்.

தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் செக், டிராப்ட் போன்றவற்றை மாற்றிக் கொள்வதற்காக பேங்கில் கணக்கை துவக்குகின்றனர். இது தவறில்லை.

எந்த ஓர் ஆத்மாவிற்கும் அல்லாஹ் சக்திக்கு மீறிய கஷ்டத்தைத் தருவதில்லை என்று 2:286 இறைமறை கூறுகிறது. எனவே இது போன்ற நிலைகளுக்காக பேங்க்கில் தொடர்பு வைத்துக் கொள்வது தவறில்லை. மேலும் இவ்வாறு செக், னு.னு. மாற்றுவதில் வட்டிக்கு இடமில்லை என்பதையும் நினைவில் கொள்க. நம்மிடமிருந்து னு.னு. க்காகப் பெறப்படும் பணம் (கமிஷன்) அதன் கூலியே தவிர வட்டியாகாது.

நாங்கள் வங்கியில் கிடைக்கும் வட்டியை வாங்கி உண்பதில்லை. மாறாக நன்மையை நாடாமல் ஏதாவது ஓர் ஏழைக்குக் கொடுத்து விடுகிறோம்; எனவே நாங்கள் செய்வது எப்படி தவறாகும் என்பதும் சிலரது வாதம்.

அவர்கள் அந்த வட்டியை வாங்கி உண்ணுகிறார்களோ இல்லையோ அது இரண்டாம் பிரச்சனை. முஸ்லிமாக இருக்கும் ஒருவன் வட்டியை வாங்கும் உரிமையை எங்கிருந்து பெற்றான். என்பது தான் முதலில் சிந்திக்க வேண்டியது.

வங்கியில் வேலை பார்ப்பது

வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்காகக் கணக்கு எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். இன்னும் அவர்கள் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள் என்றார்கள்.

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் வங்கியில் வேலை பார்ப்பதும் வட்டிக்குத் துணை நிற்பதே. எனவே அதுவும் தவிர்க்கப்பட வேண்டியது என்பது தெளிவாகிறது.

நம் பொருளாதாரத்தை வட்டி பெறும் நோக்கத்தில் வங்கியில் சேமித்து வைப்பது,

வங்கியில் கடன் பெறுகிறோம் எனக் கூறிக் கொண்டு, வட்டி முறையிலான கடனைப் பெற்று வட்டி செலுத்துவது,

ஏதாவது ஒரு வகையில் அதற்குத் துணை நிற்பது உள்ளிட்ட அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டியதே.

முஸ்லிம்களிடம் வட்டி வந்ததன் காரணம்!

இன்றைய தினம் உலகில் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தைக் கையாளாத நாடே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல, உண்மை பேசுபவன்., ஒழுக்க மாண்புடையவன், நியாயமானவன், அநியாயத்தை எதிர்ப்பவன், என்றெல்லாம் பெயர் பெற்ற முஸ்லிம்கள் மத்தியில் இந்த வட்டி முறைப் பொருளாதாரம் தன் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருப்பது தான் மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.

இன்றும் எத்தனையோ ஊர்களில் முஸ்லிம்கள் வட்டிக் கடையை நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சில ஊர்களில் பள்ளி வாசலுடைய பணத்தையும் வட்டிக்கு விட்டு வட்டி வாங்குகிறார்கள். அப்பள்ளிவாசலில் பணிபுரியும் இமாம் இது கூடாது என்று கூறி எதிர்த்தால் அவரை உடனடியாக வேலை நீக்கம் செய்யும் இழிநிலைகளும் இந்த வட்டியால் அரங்கேற்றப்படுகிறது.

உலகில் எவரிடமும் இல்லாத இன்னும் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டக் கூடிய அளவிற்குத் தெளிவான சட்டங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டும், அதைப் புறக்கணித்து விட்டு மனிதன் வகுத்த நாசகரமான சட்டங்களைக் கையாண்டு வருவதே இதற்கு முழுக்காரணம் எனலாம்.

இந்த வட்டி முறை பொருளாதாரம் முஸ்லிம்கள் மத்தியில் தலை விரித்தாடுவதற்குச் சில காரணங்கள் உள்ளன. அவற்றை நாம் சீர் செய்வோமானால் நாம் நமது சமுதாயத்தை விட்டும் வட்டியை முற்றிலுமாகத் துரத்தி விடலாம்.

இறையச்சமின்மை

பொதுவாக இறையச்சம் நம்மை விட்டு அகன்று விட்டால் எல்லாத்தீய செயல்களும் எளிதில் நம் இதயத்தில் இடம் பிடித்து விடும். இறையச்சம் என்பது ஏனோதானோ என்றில்லாமல் முறையாக இருக்க வேண்டும்.

''நம்பிக்கை கொண்டாரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் (அல்லாஹ் விற்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாக அன்றி மரணிக்க வேண்டாம்.'' அல்குர்ஆன் 3:102

''உங்களால் இயன்றவரை (எந்த அளவிற்கு அதிகமாக அஞ்சமுடியுமோ அந்த அளவிற்கு அதிகமாக) இறைவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.'' அல்குர்ஆன் 65:16

எந்த நிலையிலும் அல்லாஹ் நம்மைக் கண்கானித்துக் கொண்டே இருக்கிறான். எனவே அவன் ஏவியதைச் செய்து முடிப்போம்; விலக்கியதை விட்டொழிப்போம். அவனது கட்டளைகளை மீறலாகாது என்பதை மனதில் பதித்துச் செயல்பட்டால் மனிதன், தான் செய்யும் மானக் கேடான செயல்களை விட்டும் தவிர்ந்து கொள்ளலாம். உண்மையான இறையச்சம் உள்ளவரை ஷைத்தான் முதல் எவராலும் வழி கெடுக்க முடியாது என்பது நிச்சயம்.

மனிதாபிமானமின்மை

முஸ்லிம்களுக்கு மத்தியில் வட்டி முறைப் பொருளாதாரம் காணப்படுவதற்கான பல காரணங்களில் மனிதாபிமானமின்மையும் ஒரு காரணமாகும்.

இன்று எத்தனையோ இடங்களில் எண்ணிலடங்கா மனிதர்கள் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். அப்படிப் பட்ட நிலையில் தன்னைப் போன்ற ஒரு மனிதன்தானே அவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணங்கூட இல்லாதவன் தான் மனிதாபிமானம் அற்றவன்.

இப்படிப்பட்ட மனிதர்களை அல்லாஹ் ஒரு போதும் நேசிப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் தெளிவாக்கியுள்ளார்கள்.

''மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்''

அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் நூல்: புகாரி, முஸ்லிம்

மனிதாபிமானமுள்ளவன் ஒருபோதும் வட்டி முறைப் பொருளாதாரத்தைக் கையாளவேமாட்டான். இரக்கத் தன்மையற்ற கல் நெஞ்சம் உள்ளவன் மட்டுமே வட்டி வாங்கி உண்பான்.

உறவினர்களை ஆதரிக்காத நிலை

முஸ்லிம்களுக்கு மத்தியில் வட்டி தலைதூக்கியத்ற்கு மற்றொரு காரணமும் உண்டு. உறவினர்களை உபசரிக்கும் மாண்பை முஸ்லிம்களுக்கு இறைவன் நன்றாகக் கற்றுக் கொடுத்துள்ளான். ஆனால் முஸ்லிம்களோ அதனைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். இதனால் இவர்களுக்குள் ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்ளும் பண்புகள் பறிபோய்விட்டன. அதன் விளைவாகவே முஸ்லிம்கள் தங்கள் பொருளாதாரத் தட்டுப்பாட்டைப் போக்கிக் கொள்வதற்கு மனித உதிரத்தை உறிஞ்சும் வட்டியைத் தழுவினார்கள்.

உறவினர்களை ஆதரிப்பதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். அதனை முஸ்லிம்கள் முறையாகக் கையாண்டிருந்தால் வட்டியை முஸ்லிம்கள் மத்தியில் நுழைய விடாமலாக்கி இருக்கலாம்.

''நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மையைச் செய்யுமாறும், உறவினர்களுக்குக் கொடுப்பதைக் கொண்டும் ஏவுகிறான்'' அல்குர்ஆன் 16:30

''நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ஆகார வசதிகளை அதிகமாக்குகிறான். (தான் நாடியோருக்கு) குறைத்தும் விடுகின்றான். என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக ஈமான் கொண்டுள்ள சமூகத்திற்கு இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.''

''ஆகவே உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியத்தைக் கொடுத்து வருவீராக! அவ்வாறே ஏழைகளுக்கும்,. வழிப் போக்கர்களுக்கும் அவரவருக்குரியதைக் கொடுத்து விடுவீராக!''

அல்குர்ஆன் 30:37,38

''உறவினருக்கு அவரின் உரிமையைக் கொடுப்பீராக.''

அல்குர்ஆன் 17:26

''தாய் தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளியாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவராக, வீண்பெருமையுடையவராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.''

அல்குர்ஆன் 4:36

இதுபோன்று குர்ஆனில் பல இடங்களில் உறவினர்களுக்கு உதவ வேண்டும் என்பதை அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான். அது மட்டுமல்லாமல் 4:36 வசனத்தில் நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ''நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவராக வீண் பெருமையுடையவராக இருப்பவர்களை நேசிப்பதில்லை'' என்று குறிப்பிட்டுள்ளான்.

உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும். மேலும், தான் செய்த உதவியை சொல்லிக் காண்பிக்கவோ, பெருமையாக எண்ணவோ கூடாது என்பதைத் தெளிவு படுத்துகின்றான். மேலும் உறவினர்களுக்கு இன்று வரையிலும் உலகத்தில் யாரும் வழங்காத மிகப் பெரும் உரிமையையும் வழங்கியுள்ளான்.

''பாகப் பிரிவினை செய்யும் போது(பாகத்திற்கு உரிமை இல்லாத) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ, வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அச்சொத்தில் வழங்குங்கள். மேலும் அவர்களுடன் கனிவான வார்த்தையைக் கொண்டே பேசுங்கள்'' அல்குர்ஆன் 4:48

குர்ஆன் கூறும் இந்தக் குணப்பண்புகள் மனிதனுக்குள் உண்டாகி விட்டால் நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனும் பொருளா தாரத்தில் தன்னிறைவு அடைந்து விடுவான். யாரையும் மோசடி செய்யவேண்டிய அவசியமில்லை என்ற நிலை உண்டாகிவிடும். சமுதாயத்தில் ஒற்றுமையும் ஓங்கி விடும்.

உறவினர்கள் இணைந்து வாழ்வது பற்றி நபி(ஸல்) கூறுகையில்

''சரிக்குச் சரியாக நடந்து கொள்பவன் உறவினருடன் சேர்ந்து வாழ்பவனல்லன்; மாறாக உறவினர்கள் விலகிக் கொள்ளும் போதும் அவர்களுடன் சேர்ந்து வாழ்பவனே உறவினருடன் சேர்ந்து வாழ்பவன்''

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) நூல்: புகாரி, திர்மிதி,

மனிதனுக்கு இறைவன் வகுத்தளித்த விதிகள் தான் முழுத் தீர்வையும் தரும், மனிதனால் வகுத்தளிக்கப்படும் சட்டங்கள் மனித குலத்திற்கு தீமையைத்தரும் என்று நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதைதான்.

இஸ்லாமியச் சட்டங்களில் சரியாக எதையும் செயல் படுத்திப் பார்க்காமல் இருந்து கொண்டு, இஸ்லாமியச் சட்டங் களின் மூலம் தீர்வைக் காணமுடியாது, நடைமுறைக்கு ஒத்துவராது என பிதற்றுவது முறையல்ல. முதலில் செயல் படுத்திப் பாருங்கள் இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்

உழைப்பைக் கைவிடல்

இஸ்லாமியச் சமுதாயத்தில் வட்டி வேர் விட்டிருப்பதற்கு மற்றொரு காரணம் உழைப்பைக் கைவிட்டதாகும். வட்டி வாங்குபவன் எவ்வித உழைப்பும் இல்லாமல் லாபம் மட்டும் பெற்றுக் கொண்டே இருக்கின்றான். இந்த ஆசை அவனை உழைப்பற்றவனாக ஆக்கி விடுகிறது, பொருளாதாரத்தைப் பெருக்குவதை மட்டும் தன் நோக்கமாகக் கொண்டு சமுதாயத்தில் மற்ற எந்தப் பங்கையும் எடுத்துக் கொள்ளாமல் பிரிந்து விடுகிறான்.

பிறருடைய உழைப்பில் தன் பங்கு இல்லாமல் உண்பது அநீதமாகும். அநியாயமான முறையில் உண்பதை இறைவனும், இறைத்தூதரும் தடைசெய்துள்ளனர்.

''அன்றியும் உங்களில் ஒருவர் மற்றவர் பொருளை தவறான முறையில் சாப்பிடாதீர்கள்.'' அல்குர்ஆன் 2:188

''நீங்கள் உண்பதில் மிகச் சிறந்தது உங்கள் உழைப்பின் மூலம் உண்பதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி நூல்: திர்மிதி, நஸயீ, அபூதா¥த்)

பொதுவாக வட்டி வாங்குபவர்கள், வட்டியில் தான் பெருமளவு லாபம் உள்ளது என்று எண்ணுகிறார்கள். ஆனால் உண்மையில் வட்டியில் கிடைக்கும் லாபத்தை விட தொழிலில் தான் அதிகமாக லாபம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திட வில்லை. உழைப்பே உயர்நிலையைச் செய்யும் என்பதை மறந்து விட்டார்கள்.

இன்று இதற்குச் சாட்சியாக எத்தனையோ, நிறுவனங்கள் முன்னேறிக் கொண்டிருப்பதையும், எத்தனையோ தொழில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றி கண்டு வருவதையும் நாம் காண்கின்றோம். இதனை இறைவன் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

''அல்லாஹ் வட்டியை (எவ்விதப் பாக்கியமுமில்லாமல்) அழிக்கின்றான்; இன்னும் தான தர்மங்களைப் (தன் அபிவிருத்தியைக் கொண்டு) பெருகச் செய்கின்றான்.

அல்குர்ஆன் 2:276

இறைவனும் இறைத்தூதரும் ஏவியுள்ள முறைப்படி ஒரு முஸ்லிம் உழைக்க முற்பட்டால், அவன் எதிர்பார்ப்பை விட அதிகமாகவே லாபத்தைச் சம்பாதிக்க முடியும். ஆனால் இன்று உழைக்கச் சோம்பல் பட்ட முஸ்லிம்கள் வட்டி முறை பொருளாதார வளர்ச்சி என்று சொல்லக்கூடிய வழிகேட்டில் தங்களை நுழைத்துக் கொண்டனர். இதை விட்டுவிட்டு எப்போது இறைச்சட்டத்தைக் கையாள்வரோ அப்போதே ஈருலக வெற்றியைப் பெறுவர்.

ஜகாத்தைக் கைவிடல்

வறுமையைப் போக்கி மனிதன் தன் வாழ்வைச் சீராக ஆக்கிக் கொள்வதற்கு இறைவனால் அருளப்பட்ட அருட்கொடை தான் 'ஜகாத்' எனும் காப்புவரி, இது சமுதாயத்திற்கு ஒரு வேலியாகும்.

வறுமையின் கொடுமையால் ஒரு முஸ்லிம் தன்னிச்சையாக செயல்பட்டு 'ஹராம், ஹலால்' என்ற வேறுபாடின்றி எதையும் உண்ணலாம், எப்படியும் வாழலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடைதான் ஜகாத்!

இந்த அருட்கொடையை அலட்சியம் செய்ததன் விளை வாகத் தான்வட்டியைத் தன்னுள் புகுத்திக் கொண்டு பிரிக்க முடியாமல் தவிக்கிறது. இன்றைய முஸ்லிம் சமுதாயம்.

ஜகாத் என்பது போதிய வசதியுடையவர், தான் வைத்திருக்கும் சொத்தின் மீது வருடம் ஒன்று கழிந்து விட்டால் இரண்டரை சதவீதம் பொது நிதி நிறுவனத்திடம் கொடுப்பதாகும். அதனை மொத்தமாகச் சேகரித்து குர்ஆன் கூறும் நபர்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும். அப்படிச் செயல்படத் தொடங்கினால் குறுகிய காலத்திற்குள் ஒவ்வொரு முஸ்லிமும் பொருளாதாரத்தில் நிச்சயம் தன்னிறைவு அடைந்து விடுவான்.

நம்மவர்களில் குறைந்த அளவு 20 சதவிதம் மக்கள் ஜகாத் கொடுக்கும் தகுதியைப் பெற்றிருந்தும், அதைச் செய்வதில்லை என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

இஸ்லாமிய சமுதாயத்தை விட்டும் வட்டியை அகற்றுவதில் முக்கியப் பங்கு வகிப்பது ஜகாத் தான். எனவே வட்டி ஹராம்! வட்டி ஹராம்!! என்று உபதேசம் செய்பவர்கள் ''பைத்துல் மால்'' ஒன்றை அமைத்து ஜகாத்தைச் சேகரித்து, பிரித்தளிக்காத வரையில் இஸ்லாமியச் சமுதாயத்தை விட்டும் வட்டியைப் பிரிக்கவே முடியாது.

அதை விட்டு மீளுவதற்கான வழி

ஒரு முஸ்லிம் வட்டி எனும் கொடிய நோயிலிருந்து மீள வேண்டும் என்றால் அவன்

இறையச்சம் உள்ளவனாகவும்

மனிதாபிமானம் உள்ளவனாகவும்

உறவினர்களை ஆதரிக்கக் கூடியவனாகவும்,

உழைப்பைக் கையில் கொண்டவனாகவும்

தகுதி இருப்பின் ஜகாத்தை முறையாகக் கொடுக்க கூடியவனாகவும் தானும் மாற வேண்டும்; தன் சமுதாயத்தையும் மாற்ற வேண்டும். மேலும் தன் சமுதாயத்தின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு வட்டியில்லா வங்கியைத் தொடங்க வேண்டும். அந்த வட்டியில்லா வங்கியை இறையச்சம் மிகுந்தவர்கள் நிர்வகிக்க வேண்டும். இதற்கு இஸ்லாம் கூறும் தீர்வும் இதுவே ஆகும். இதனைக் கடைபிடிக்கக் கூடியவர்களாக இறைவன் நம்மை மாற்றி,

வட்டி எனும் இக்கொடிய நோயிலிருந்து மனித சமுதாயத்தைப் பாதுகாப்பானாக!

ஆ.ஆ. அப்துல் காதிர் உமரி


http://www.ziddu.com/download/9861444/vatty2.3gp.html
, ,