குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

30.6.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இல்லறம் இஸ்லாத்தில் ஓர் இனிமையே
almighty-arrahim

திருமணமும் ஓர் அடிப்படைத் தேவையே

குடும்பம் என்ற ஒன்று மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப் படுவதாகும். உணவு, உடை, உறையுள் அல்லது தங்குமிடம் ஆகிய மூன்றும்
மனிதனுடைய அடிப்படைத் தேவைகளாக எங்ஙனம் அமைந்துள்ளனவேர் அதுபோலவே குடும்பம் என்னும் அமைப்புக்குள்ளே வாழ வேண்டியதும் மனிதனுடைய அத்தியாவசியத் தேவை என்றே சொல்லலாம்.

எனவே தான், அடிப்படை மனிதத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகிய இம்மூன்றோடும் ஆண், பெண் குடும்ப வாழ்க்கையைத் தொடர்புபடுத்தித் இறைவேதமான அல்குர்ஆன் அழகிய உவமைகளுடன் இதனை நமக்கு விளக்கியுரைத்துள்ளது.

மனித வாழ்வின் முதல் அடிப்படைத் தேவையான உணவுக்கு வருவோம். மனிதனுடைய வயிற்றுப் பசிக்கு உணவு தேவைப்படுவது போலவே, அவனது இன்ப நுகர்வுக்கும் தேவைகள் இருக்கின்றன. இத்தேவைகளும் நிறைவு செய்யப்படுதல் வேண்டும். எனவேதான் திருமறை குர்ஆன் குடும்ப அமைப்பின் முக்கியப்பங்குதாரராகிய மனைவியைப் பற்றிக் குறிப்பிடும்போது,

உங்கள் மனைவியர் உங்களுக்கு விளை நிலங்கள் ஆவார்கள் (2:223) என உவமித்துக் கூறியுள்ளது.

இஸ்லாம் பெண்ணுக்கு எத்தகைய உயர்வையளித்துள்ளது என்பதும், இதிலிருந்து தெரிய வருகிறது. மனிதன் என்னதான் கம்ப்யூட்டர் யுகத்தோடு கட்டிப் புரண்டு கொண்டிருந்தாலும், அவனது வயிற்றுப்பசி தணிப்பதற்கு உழவுத்தொழி லைச் சார்ந்துதான் ஆக வேண்டும். உழவுத் தொழிலுக்கு நிலைக்களமாக இருப்பது நிலம். இந்த நிலமும் நிலம் கொண்ட நீரும் இன்ன பிற தாதுக்களும் இல்லையேல் உணவு உற்பத்தி நிகழவியலாது. பெண்ணை விளைநிலத்திற்கு உவமைப்படுத்தியதன் வாயிலாக, மனித வாழ்க்கைக்கு, பெண் எந்த அளவுக்கு அச்சாணியாகத் திகழ்கிறாள் என்பதைத் தெரிய முடிகிறது.

இத்தகைய உயர்வும் உன்னதமும் ஆக்கத் திறனும் கொண்ட பெண்ணினத்தை எப்படிப் பேணிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் இந்த வசனத்திலிருந்து விளங்கிக் கொள்கிறோம். விளைநிலத்தைப் பண்படுத்தி, விதையூன்றி உரமிட்டு, நீர் வார்த்து, எப்படிக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கிறோமோ அதுபோலப் பெண்ணினத்தையும் பராமரித்திடுதல் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக விளைச்சல் நிலத்தை வேலியிட்டுக் காவலிட்டுப் பாதுகாக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதுபோன்று பெண்களின் அழகும் அலங்காரமும் பிற ஆடவர்களின் கழுகுப் பார்வையிலிருந்து பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதையும் இவ்வசனம் குறிப்பாக உணர்த்தி நிற்கின்றது.

கணவன்,  மனைவியராகிய இல்வாழ்க்கை விளை நிலத்திலிருந்துதான் குடும்பப் பயிர் செழித்து வளர முடியும். பெண்ணை விளைநிலம் என்று திருமறை குர்ஆன் குறிப்பிட்டுள்ளமை இங்குச் சிந்திப்பதற்குரியது.  ஹர்ஸுன்' என்ற இறைமொழிக்கு விளைநிலம் எனப்பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஏர் கொண்டு உழுவதற்குரிய நிலம் எனவும் இச்சொல் விரிந்த நிலையில் பொருள் பயக்கின்றது.

ஏரைக் கொண்டு நிலத்தைக் கிளறி விதையூன்றுவதன் முலம் ஒரு போகம், இருபோகம், முப்போகம் எனப் பல போகங்களை அறுவடை செய்து மகிழ்கிறான் விவசாயி. அதுபோல் ஆண்கள் மனைவியரிடம் விரும்பவுது போல் சுகம் அனுபவித்து மக்கள் செல்வங்களை அறுவடை செய்து கொள்கின்றனர்.

இப்படிப்பட்ட பல்வேறு குடும்ப விவசாயங்களின் அமோக விளைச்சல்களி னால் சமுதாயப் பயிர் செழித் தோங்கி வளர்கின்றது. ஆக, சமுதாயப் பயிர் செழிக்கும் விளை நிலங்களாகத் திகழ்பவர்கள் பெண்களே என்பதைத் திருமறை குர்ஆன் தீர்க்கமாக இயம்பியுள்ளது.

மனிதனுடைய உயிர்வாழ்வுக்கு முதல் தேவை உணவு எனக் கண்டோம். மனிதனைப் போலவே விலங்கினங் களுக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் உணவு அடிப்படைத் தேவையாக இருக்கின்றது. ஆனால் வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத, மனித இனத்துக்கு மட்டுமே உரிய இன்னொரு அவசியத் தேவையாக உடை இருக்கக் காண்கிறோம்.

குடும்ப அமைப்பிற்கு இந்த உடையை உவமையாகப் போர்த்துகின்றான் இறைவன்

(பெண்களாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் (ஆண்களாகிய) நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். அல்குர்ஆன் 2:187

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எந்த அளவுக்குப் பரஸ்பர நம்பிக்கையுடனும் புரிதலுணர்வுடனும் பகிர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதனை இதைவிட நாகரிகமாகவும் சிறப்பாகவும் வேறு எப்படியும் கூற முடியாது.

ஆள்பாதி, ஆடை பாதி; ஆடையில்லா மனிதன் அரை மனிதன்; ஆடையின் மகிமை அணிபவரைப் பொறுத்தது என்றெல்லாம் பழமொழிகள் வழங்கப் படுகின்றன. கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் ஆடை போன்றவர்கள் எனும்போது, இந்த ஆடையை அணிந்து கொள்ளும் போதுதான் அவர்கள் முழுமை பெறுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்கிறோம்.

மனிதனுடைய உடலோடு ஆடை எப்படி ஒட்டி உறவாடுகிறதோ அதுபோல, கணவன் மனைவியருடைய ஒட்டுறுவு உடலளவிலும் உள்ளத்தளவிலும் ஒருங்கினணந்து அமைதல் வேண்டும். மனிதனின் மானத்தை மறைப்பது ஆடை; அவனுக்கு அழகையும் அந்தஸ்தையும் தருவது ஆடை; தட்ப வெப்ப நிலைகளின் பாதிப்பிலிருந்து மனிதனைக் காப்பது ஆடை.

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் இந்த ஆடை போன்றுதான் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது. குடும்பமாக இணைந்து வாழும் போது ஒருவருடைய குறைகளை மற்றொருவர் வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

ஆடை எப்படி அணிபவருக்கு அழகையும், கண்ணியத்தையும் தருகிறதோ அதுபோல் கணவனது கண்ணியத்தை மனைவியும் மனைவியின் மகிமைகளைக் கணவனும் மிகுவித்துக் காட்டுதல் வேண்டும். குளிரின் நடுக்கத்திலிருந்து ஆடை மனிதனைக் காப்பது போல, குடும்பத்தில் துன்பங்களும், துயரங்களும் சசூழும் போது கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அரவணைத்துப் பாதுகாப்பதில் முனைந்திடுதல் வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் முதல் இறைவெளிப்பாட்டினைப் பெற்று அஞ்சி நடுங்கியபோது, அவர்களது அருமைத் துணைவியார் கதீஜா நாயகி அவர்கள் பெருமானாருக்குக் கம்பளி ஆடை போர்த்தி ஆறுதல் படுத்தினார்கள். தாமே ஒரு பெண்ணாடையாக இருந்து பெருமானாரை அரவணைத்தது மட்டுமன்றி, பெருமானாரின் பேரியல்புகளுக்குப் பொன்னாடை சசூட்டுவது போல அவர்களைப் போற்றிக் காத்து நின்றார்கள்.

ஒருவருக்கொருவர் ஆடை என்ற இத்திருமறை உவமையின் வாயிலாகக் கணவனும் மனைவியும் சம அந்தஸ்துக்குரியவர்கள் என்பதும் காட்டப்படுகின்றது. ஆண், பெண் ஆகியோருக்கிடையே உயர்வு தாழ்வு என்பது கிடையாது, இருந்த போதிலும் அவரவரின் உடல்கூறு இயல்புகளைக் கருத்தில் கொண்டு இஸ்லாம் அவரவருக்கென சில பிரத்தியேகமான பொறுபுக்களை முதன்மைப் படுத்திக் கூறியுள்ளது.

கணவன், மனைவி குடும்ப உறவுக்குள் நிலவும் சின்னச் சின்ன குற்றங்களை மறைத்துக் கொண்டு ஒரு முன் மாதிரிக் குடும்பமாகத் தங்களை வார்த்தெடுத்துக் கொள்பவர்களே நல்ல குடும்ப அமைப்புக்குரியவராவார். தனி மனிதனுடைய மானத்தை மறைப்பதோடு அவனை அலங்கரித்துக் காட்டுகின்ற பணியையும் ஆடை செய்வது போல, குடும்ப உறுப்பினர்களின் நடத்தை அமைதல் வேண்டும்.

ஆனால் சில குடும்பங்களில் என்ன நிகழ்கின்றது? கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சின்னச் சின்ன குறைகளைக் கூடச் சகித்துக் கொள்ள முடியா தவர்களாகி விடுகின்றனர். இவற்றைப் பட்டவர்த்தனமாக்கிப் பகிரங்கப்படுத்திக் குடும்பச் சச்சரவுகளை வீதிக்குக் கொண்டு வந்து விடுகின்றனர். இதன் காரணமாகப் பாதிக்கப்படுவது தங்களது குடும்ப கவுரவமே என்பதைக் கூட எண்ணிப் பார்க்காமல் நடந்து கொள்கின்றனர்.

இப்படி அவர்களை நாலுபேர் மத்தியில் கேவலப்படுத்திச் சந்தி சிரிக்கச் செய்வதற்காக ஷைத்தான் திட்டமிட்டு சசூழ்ச்சி செய்து கொண்டே இருக்கின்றான். எனவே தக்வா' என்னும் இறையச்சமும் நல்லொழுக்கமும் உள்ளவர்களாக மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதைச் சொல்ல வந்த இடத்திலும் திருமறை குர்ஆன் ஆடை' உவமானத்தைப் பின்வருமாறு எடுத்தாளக் காண்கிறோம்.

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்காக உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளளோம். ஆயினும் தக்வா(பயபக்தி) எனும் ஆடையே மேலானது. இது அல்லாஹ்வுடைய அடையாளங்களில் உள்ளதாகும். (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவார்களாக!

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல, அவன் உங்களை  (ஏமாற்றிச்) சோதனைக் குள்ளாக்க வேண்டாம். அல்குர்ஆன் 7:26,27

ஆதித் தந்தை ஆதமும் அன்னை ஹவ்வாவும் ஒருவருக்கொருவர் ஆடையாக' இருந்து நல்லதொரு குடும்பம் நடத்திய வேளையில் ஷைத்தான் அங்கே முள்ளாக முளைத்து, அவர்களுடைய தக்வா என்னும் ஆடையைக் கிழித்து, அவர்களைப் பெரும் சோதனையில் ஆழ்த்தினான். ஷைத்தானின் சசூழ்ச்சியால் உங்கள் ஆரம்பப் பெற்றோரின் குடுப்பத்திற்கு ஏற்பட்ட இதுபோன்ற நிலை உங்கள் குடும்பத்திற்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்று இறைவன் இவ்விடத்தில் எச்சரிக்கை விடுக்கின்றான்.

கணவன் மனைவியரடங்கிய குடும்ப அமைப்பை உணவு தரும் விளைநிலத்திற்கும் மானம் காக்கும் ஆடைக்கும் இறைவன் உவமைப்படுத்திப் பேசியதைக் கண்டோம். மனித வாழ்வின் மூன்றாவது அத்தியாவசியத் தேவையாகிய உறையுள் என்னும் தங்குமிடத்தோடும் தொடர்புபடுத்திக் குடும்ப உறவைத் திருமறை குர்ஆன் பேசியிருக்கின்றது.

மனித வாழ்வுக்குத் தங்குமிடம் அல்லது வீடு மிகவும் அவசியமாகும், மனிதன் தன் குடும்ப வாழ்க்கைக்கான உணவு , உடை, போன்ற தேவைகளைத் தேடுவதற்காக வீட்டை விட்டு வெளியேறிப் பல்வேறு சிரமங்களை மேற்கொள்கிறான். இங்ஙனம் தேடிப்பெறுவதற்காகச் சமுதாய அரங்கில் அவனுக்கு ஏற்பட்ட அலுப்பையும் களைப்பையும் போக்கிக் கொள்வதற்காக வீடு நோக்கி விரைகின்றான். கவலைகளையெல்லாம் விட்டு விடுகின்ற இடம் இதுவாகையால் இவ்விடம் வீடு எனப்பட்டது. விடு என்னும் வேர்ச்சொல்லிருந்து பிறந்த சொல்லே வீடு' ஆகும்.

வீட்டினுள்ளே குடும்பத் தலைவன் அமைதியையும் அரவணைப்பையும் எதிர்நோக்கிக் காலெடுத்து வைக்கிறான்.

அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீடுகளை அமைதியளித்திடும் இடங்களாக ஆக்கினான் (16:80) எனத் திருமறை குர்ஆன் எடுத்துரைக்கின்றது.

மனிதன் அமைதி பெறுமிடம் எதுவோ அதுவே வீடாகும். மேலே கண்ட இறைவசனத்தில் ஸகனன்' என்னும் அரபிச் சொல் அமைதி தருமிடம் என்ற பொருளைத் தந்துள்ளது. திருமறை குர்ஆனில் வேறு சில இடங்களில் இந்த   ஸகனன்' என்னும் சொல்லடியாகப் பிறந்த மஸாகின்' என்னும் அரபிச் சொல் வீடு என்னும் பொருளிலேயே எடுத்தாளப்பட்டுள்ளது.

எனவே மனிதன் எங்கே தங்கியிருந்து, அங்கிருந்து பரிவையும் பாசத்தையும் மன அமைதியையும் பெறுகின்றானோ அந்த இடமே மனிதனுக்குரிய அமைதித் தளமாகிய வீடாகும். இத்தகைய பரிவு, பாசம், மன அமைதி அனைத்தையும் குடும்பத் தலைவியாகிய மனைவியோடு உறைந்திருந்து மனிதன் பெறுகிறான் என்பதையும் திருமறை பகர்ந்து நிற்கின்றது.

கணவனும் மனைவியும் கொள்கின்ற குடும்ப உறவினைக் கூடல் என்றும் தமிழில் வழங்குவர். இந்தப் பொருளைத் தருகின்ற விதத்திலும் ஸகனன்' என்னும் சொல்லின் பல்வேறு வடிவங்கள் திருமறை குர்ஆனில் எடுத்தாளப்பட்டுள்ளன.

(இறைவனாகிய) அவன் உங்களிலிருந்தே உங்களுக்காக மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் தங்கியிருந்து அமைதி பெறுகிறீர்கள். உங்களுக்கிடையே காதலையும், கருணையையும் உண்டாக்கியிருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும் அல்குர்ஆன் 30:21

திருமறையின் 7:189 ஆம் வசனமும் இதே பாங்கில் தொடங்கி மேலும் இவ்வாறு தொடர்கிறது

அவன் அவளிடம் தங்கியிருந்து அமைதி பெறுகிறான். அவர்களின் ஒன்றிணைப்பால் அவள் இலேசான கர்ப்பவதியானாள். பின்பு அதைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள். பின்பு அது பளுவாகவே அவர்களிருவரும் தம் இறைவனிடம், (இறைவா!) நீ எங்களுக்கு நல்ல(குழந்)தைக் கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்'' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.

நன்மக்களைப் பெறுதல் என்னும் குடும்ப வாழ்க்கையின் பயனையும் இந்த வசனம் எடுத்துக் காட்டியுள்ளது.

ஆக மனித வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக அமைந்துள்ள உறையுள் அல்லது தங்குமிடம் என்பது குடும்ப வாழ்க்கையோடு எங்ஙனம் பின்னிப் பிணைந்து கிடக்கிறது  என்பதை இவற்றால் அறிய முடிகின்றது.

இவ்வாறாக மனிதனுடைய மூன்று அடிப்படைத் தேவைகளான உணவு தரும் விளைநிலம், மானம் காக்கும் உடை, மன அமைதி நல்கும் உறைவிடம் ஆகிய மூன்றினோடும் ஆண் பெண் உறவைத் தொடர்புபடுத்தி, குடும்ப அமைப்பின் இன்றியமையாமையை இறைவன் இயம்பியுள்ளான்.


, ,