குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

21.4.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கஅப்பின் மாலிக் (ரலி)
நபி தோழரின் நற்பண்பு

நபி அவர்கள் முஸ்லிம்களைத் தபூக் போருக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, புறப்படத் தயாராக வேண்டியது தான் என்று நானும் எண்ணினேன். ஆனால் சோம்பல்பட்டுக் கொண்டிருந்தேன். இதற்குள் என்ன அவசரம்? நேரம் நெருங்கும் பொழுது தயாராகிக் கொள்வோம். அதற்கு வெகு நேரமா பிடிக்கப் போகின்றது? என்று எண்ணினேன். இப்படியே புறப்படுவதற்குத் தாமதமாகிக் கொண்டு போயிற்று. இறுதியில்



புறப்படும் நேரம் வந்து விட்டது. ஆனால் நான் இன்னும் தயாராகி இருக்கவில்லை. நான் என் மனதிற்குள் சேனை புறப்பட்டுச் செல்லட்டும். நான் ஓரிரண்டு நாட்களுக்குப் பிறகு புறப்பட்டாலும் பரவாயில்லை, சேனையுடன் போய்ச் சேர்ந்து கொள்ளலாம் என்று கூறிக் கொண்டேன்.

ஆக, இந்தச் சோம்பலிலேயே காலம் கடந்து விட்டது. என்னால் போக முடியவில்லை. நான் எவருடன் பின் தங்கிவிட்டிருந்தேனோ அவர்கள் ஒன்று நயவஞ்சகர்களாக இருந்தார்கள் அல்லது அல்லாஹ்வே சலுகை அளித்த பலவீனர்களாகவும், இயலாதவர்களாகவும் இருந்தனர். நானோ இந்த இரு நிலைகளிலும் இல்லையே! இதனைக் கண்டு என் உள்ளம் மிகவும் குமையலாயிற்று. மேலும், எனக்கே என் நிலை குறித்து வருத்தம் ஏற்படலாயிற்று.

அண்ணலார் அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்த போது வழக்கப்படி முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்துக்கள் தொழுகை நிறைவேற்றினார்கள். பின்னர் மக்களைச் சந்திப்பதற்காக அமர்ந்தார்கள். இப்போது நயவஞ்சகர்கள் ஒருவருக்குப்பின் ஒருவராக வந்து அண்ணலாரிடம் தங்கள் சாக்குப் போக்குகளைச் சமர்ப்பிக்கலானார்கள்.

சத்தியம் செய்து இந்தக் காரணங்களால் தான் தாங்கள் போரில் கலந்து கொள்ள இயலவில்லை என்று நம்பும் வகையில் கூறலாயினர். இத்தகைய பேர்வழிகள் எண்பது பேருக்கு சற்று அதிகமாக இருந்தனர். அண்ணலார் அவர்கள், அவர்களுடைய செயற்கையான பேச்சுக்களையும் புனைந்துரைகளையும் புளுகுகளையும் கேட்டார்கள். அவர்கள் வெளிப்படையில் கூறிய அக்காரணங்களை ஏற்றுக் கொண்டு அவர்களுடைய உண்மை நிலையை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டு அவர்களை மன்னித்து விட்டார்கள்.

இப்போது என் முறை வந்தது. நானோ முன் சென்று ஸலாம் உரைத்தேன். அண்ணலார் அவர்கள் என்னை நோக்கிப் புன்னகைத்து விட்டு, உங்களைப் போரில் கலந்து கொள்ள விடாமல் தடுத்தது எது என்று கூறுங்கள் என வினவினார்கள். நான் கூறினேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எவரேனும் ஒரு உலகாதாயவாதியின் முன்னால் வந்திருந்தால், ஏதாவதொரு கட்டுக் கதையைக் கூறி அவரைத் திருப்திப் படுத்தியிருப்பேன். ஆனால் உங்களைப் பற்றி என் நம்பிக்கை என்னவெனில், உங்களிடம் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி உங்களைச் சமாதானப்படுத்தி விட்டாலும் கூட, அல்லாஹ் நிச்சயம் என்னைப் பற்றி அதிருப்தி கொள்ளச் செய்து விடுவான்.

ஆனால் உண்மையைக் கூறி விட்டால், நீங்கள் கோபமடைந்தாலும் சரி, அல்லாஹ் எனக்கு மன்னிப்பு பெறுவதற்கான வழி எதனையாவது தோற்றுவித்து விடுவான் என்று நான் நம்புகிறேன். உண்மை என்னவெனில், என்னிடம் உங்கள் முன் சமர்ப்பித்திட உண்மையான காரணம் எதுவுமில்லை. நான் போருக்குச் செல்ல சக்தியனைத்தையும் பெற்றிருந்தேன். இதனைக் கேட்ட அண்ணலார் அவர்கள் உண்மையைச் சொன்னவர் இவர் தான்: எழுந்திருங்கள். அல்லாஹ் உங்கள் விவகாரத்தில் தீர்ப்பு எதுவும் வழங்கும் வரை காத்திருங்கள் என்று கூறினார்கள். நான் எழுந்தேன். பின்னர் என் கோத்திரத்தாரிடம் சென்று அமர்ந்தேன். என்னைப் போன்றே இன்னுமிருவரும் (மிராரா பின் ருயாய்ஆ, ஹிலால் பின் உமய்யா) நான் கூறிய அதே உண்மையான பதிலைக் கூறினார்கள்.

இதன் பின் அண்ணலார் அவர்கள் எங்கள் மூவருடனும் யாரும் பேசக் கூடாது என்று கட்டளையிட்டார்கள். அவர்கள் இருவரும் வீட்டிலேயே அமர்ந்து விட்டாhகள். ஆனால் நான் வெளியே சென்று வந்தேன். ஜமாத்துடன் தொழுகையை நிறைவேற்றி வந்தேன். கடைவீதிகளில்; சுற்றித் திரிந்து வந்தேன். ஆனால் எவரும் என்னுடன் பேசுவதில்லை. இந்த பூமியே மாறி விட்டது போன்றும் இங்கு நான் அந்நியனாய் இருப்பது போன்றும் இங்கு என்னை அறிந்தவர் எவருமேயில்லை என்பது போலவும் எனக்குத் தோன்றியது.

தொழுகைக்காக பள்ளிவாசல் சென்று அண்ணலார் அவர்களுக்காக ஸலாம் கூறி, அண்ணலார் அவர்களின் மலரிதழ்கள் பதில் தர அசைகின்றனவா? இல்லையா? என்று பதில் எதிர்பார்த்துக் கொண்டு இருந்து விடுவேன். நான் தனியாகத் தொழுகையை நிறைவேற்றும் போது அண்ணல் நபி அவர்கள் என்னை எப்படிப் பார்க்கின்றார்கள் என்றறிய தொழுகையில் மறைமுகமாக கண்ணை உயர்த்தி அண்ணலாரைப் பார்ப்பேன். ஆனால் அண்ணல் நபி அவர்களோ நான் தொழுது கொண்டிருக்கும் போது என்னைப் பார்ப்பார்கள். நான் ஸலாம் சொல்லி முடித்தவுடன் என்னை விட்டு பார்வையைத் திருப்பிக் கொள்வார்கள்!

ஓரு நாள் நான் மிகவும் பயந்து போய் என் ஒன்று விட்ட சகோதரரும் என் பால்ய நண்பருமான அபூகதாதா அவர்களிடம் சென்றேன். அவர்களுடைய தோட்டச் சுவரின் மீது ஏறி நின்று கொண்டு அவர்களுக்குச் ஸலாம் கூறினேன். ஆனால் அவரோ ஸலாமுக்குப் பதில் கூடக் கூறவில்லை.

நான் மனவேதனையுடன் கேட்டேன்: அபூகதாதாவே! இறைவன் மீது ஆணையிட்டு நான் கேட்கின்றேன். நான் இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் அன்பு வைத்திருக்கவில்லையா? அவர் மௌனமாயிருந்து விட்டார். நான் மீண்டும் வினவினேன். அவர் மீண்டும் மௌனமாகவே இருந்தார். மூன்றாவது முறை கேட்ட போது, அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே நன்கறிவார்கள் என்று மட்டுமே கூறினார். இதனைக் கேட்டு என் கண்களில் கண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது. நான் சுவரிலிருந்து கீழிறங்கி விட்டேன்.

இந்த நாட்களில் நான் ஒரு முறை கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தேன். சிரியா நாட்டு ஆசாமி ஒருவன் மன்னர் கஸான் எழுதியனுப்பிய பட்டு உiறையிலிட்ட கடிதம் ஒன்றை என்னிடத்தில் கொடுத்தான். நான் அதனைத் திறந்து படித்தேன். அதில் உமது தலைவர் உம்மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார் என்று கேள்விப்பட்டேன். நீர் இழிவான மனிதரல்லர். நீர் விணாக்கப்பட வேண்டியவரல்லர். என்னிடம் வந்து விடுங்கள். நான் உங்களைக் கண்ணியப்படுத்துவேன் என்று எழுதப்பட்டிருந்தது. நான் இன்னொரு சோதனை வந்திருக்கின்றதே! என்று கூறி அப்பொழுதே அந்தக் கடிதத்தை அடுப்பில் எரித்து விட்டேன்.

நாற்பது நாட்கள் இதே நிலையில் உருண்டோடின. அதற்குள் அண்ணலார் அவர்கள் உமது மனைவியை விட்டு விலகியிருங்கள் என்று ஆணையிட்டார்கள். நான் அவளைத் தலாக் தந்து விடவா? என்று வினவினேன். அதற்கு, இல்லை, நீர் உமது மனைவியை விட்டு ஒதுங்கியருந்தால் போதும்

என்ற கட்டளையை அனுப்பி வைத்தார்கள்.

நான் என் மனைவியை அவளது தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டேன். அல்லாஹ் இந்த விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கும் வரை காத்திரு! என்று கூறினேன்.

ஐம்பதாவது நாள் வைகறைத் தொழுகைக்குப் பின் என் வீட்டுக் கூரை மீது அமர்ந்திருந்தேன். என் வாழ்வைக் குறித்து எனக்குள் நானே சலித்துக் கொண்டிருந்தேன். அதற்குள் ஒருவர், உமக்கு என் வாழ்த்துக்கள், கஅப் பின் மாலிக்கே! என்று கூறினார். இதனைக் கேட்டவுடன் சஜ்தாவில் (இறைவனுக்குச் சிரம் தாழ்த்தி) விழுந்து விட்டேன்! என்னை மன்னிக்கும்படி கட்டளை வந்து விட்டது என்று அறிந்து கொண்டேன். மக்கள் திரள் திரளாக ஓடி வந்த வண்ணமிருந்தார்கள். ஒவ்வொருவரும் மற்றவரை முந்திக் கொண்டு வந்து என்னை வாழ்த்திய வண்ணம் இருந்தார்கள். வாழ்த்துக்கள்! உம்முடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என்று வாழ்த்திய வண்ணம் இருந்தார்கள்.

நான் எழுந்து நேராக மஸ்ஜித் நபவியை நோக்கிச் சென்றேன். அண்ணலார் அவர்களின் முகம் மகிழ்ச்சியில் மின்னிக் கொண்டிருப்பதைக் கண்டேன். நான் ஸலாம் கூறியவுடன், உமக்கு என் வாழ்த்துக்கள்! இது உம் வாழ்நாளிலேயே மிகச் சிறந்த நாள் என்று கூறினார்கள். நான். இந்த மன்னிப்பு அண்ணலார் அவர்களின் தரப்பிலிருந்தா? அல்லது இறைவனின் தரப்பிலிருந்தா? என்று வினவினேன்.

அண்ணலார் அவர்கள், இது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட மன்னிப்பு

என்று கூறி இந்த பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாகக் கூறும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதரே! நான் மன்னிப்புக் கோரும் போது என் செல்வம் முழுவதையும் இறைவழியில் செலவிடுவதாக நேர்ச்சை செய்திருந்தேன்! என்று பணிந்து கூறினேன். அண்ணலார் அவர்கள் சிறிது மீதப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லதாகும்

என்று கூறினார்கள். நான் அண்ணலார் அவர்களின் இந்த ஆலோசனைப்படி கைபர் போர்pல் எனக்குக் கிடைத்த பங்கை மட்டும் எனக்காக வைத்துக் கொண்டு எஞ்சியிருந்த அனைத்தையும் இறைப்பாதையில் செலவழித்து விட்டேன். பின்னர், எந்த உண்மைக்குக் கூலியாக என்னை அல்லாஹ் மன்னித்தானோ, அந்த உண்மையின் மீது என் இறுதி மூச்சு வரை நிலைத்திருப்பேன்! என்று இறைவனிடம் உறுதி மொழிந்தேன். ஆகவே இன்று வரை நான் அறிந்தும் புரிந்தும் உண்மைக்கு மாறானது எதையும் கூறியதில்லை. இனி வருங்காலத்திலும் அல்லாஹ் என்னைப் பொய்யிலிருந்து காப்பாற்றுவான் என்று நம்புகிறேன்.




முஸ்லிம் சமூக அமைப்பின் சிறப்பியல்புகள் :




இந்த நிகழ்ச்சியின் விவரங்கள் வாயிலாக நபித் தோழர்களைக் கொண்ட அந்த சமூக அமைப்பின் தெளிவான தோற்றம் நம் முன் வருகின்றது. அதில் சிறப்பம்சங்கள் மிகவும் பிரதானமாகக் காணப்படுகின்றன. அவற்றை எந்த ஒரு காலத்தில் வாழும் இறை நம்பிக்கையாளர் ஒவ்வொருவரும் (எப்பொழுதும்) தம் மனத்தில் பசுமையாக வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் இஸ்லாமிய இயக்கம் தன் தொண்டர்களை எத்தகைய பண்பாடுடையவராக, எத்தகைய மனோநிலை கொண்வராக வார்த்தெடுக்க விரும்புகின்றது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

முதலாவது நமக்குத் தெரிய வருவது இதுவே. இறை மறுப்புக்கும் இஸ்லாத்திற்கு மிடையே போராட்டம் ஏற்படும் பொழுது அது இறை நம்பிக்கையாளர்களுக்குக் கடும் சோதனை காலமாக விளங்குகின்றது. அச் சோதனைக் காலத்தில் அசட்டையின் காரணத்தால், எங்கே வாழ்நாள் முழுவதும் செய்த உழைப்பும் பட்ட பாடுகளும் வீணாகப் போய்விடுமோ என்கின்ற அச்சம் நிலவுகின்றது. ஏனெனில் அந்நேரத்தில் ஓர் இறைநம்பிக்கையாளர் இஸ்லாத்துடன் ஒத்துழைக்கவில்லை என்றால், அவருடைய இந்த நடத்தையினால் அவருடைய வாழ்நாள் முழுவதிலும் அவர் ஆற்றிய நற்செயல்களும் வணக்கங்களும் வீணாகி அழிந்து போகின்ற அபாய நிலை வந்து விடுகின்றது. இந்தக் குறைபாட்டை அவர் எந்தக் கெட்ட எண்ணத்தின் காரணமாகவும் செய்யவில்லை என்றாலும் சரி: வாழ்நாள் முழுவதிலும் ஒரேயொரு முறைதான் இப்படிப்பட்ட தவறை இழைத்திருக்கின்றார் என்றாலும் சரி!

ஒரு முறை நம்பிக்கையாளன் இஸ்லாத்திற்குப் பதிலாக இறைமறுப்புக்கு உதவிடலாம். மேலும் இஸ்லாத்திற்கு எதிரான இயக்கங்களுக்கு வலுவூட்டும் செயல்களை மேற்கொள்ளலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இஸ்லாத்திற்கு முரணான இயக்கங்களுக்கு எதிரே ஓர் இஸ்லாமிய இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்றால், இறை நம்பிக்கையாளர் இறைநெறியை மேலோங்கச் செய்ய தம் ஆற்றல்களை ஈடுபடுத்தாமல் மற்ற பணிகளில் அவற்றைச் செலவழிக்கின்றார்கள் எனில், இந்தக் குறைபாட்டின் விளைவுகள் பன்மடங்கு அதிகமாக ஆகிவிடுகின்றது. அதிலும் ஒரு நபியின் தலைமையின் கீழ் இஸ்லாமிய இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கும் போது மேற்குறி;ப்பிட்ட குறைபாட்டை செய்பவர் மாபெரும் ஓர் இழப்புக்குள்ளாவார்.

இரண்டாவதாக ஒரு கடமையை நிறைவேற்றுகின்ற நேரம் வந்து விடும் போது சோம்பல் காட்டுவது, இறைநம்பிக்கையாளனுக்கு அழகல்;ல. சில வேளைகளில் அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கான காலம் சோம்பலிலேயே கடந்து போய் விடுகின்றது. பின்னர், அவனுடைய இந்தத் தவறு கெட்ட எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்னும் காரணம் பயனளிப்பதில்லை.

நபித்தோழர்களுடைய சமூக அமைப்பின் இந்தப் பாங்கைக் கவனியுங்கள். செயற்கைக் காரணங்களையும் சாக்குப் போக்குகளையும் சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் நயவஞ்சகர்கள் ஒருபுறம். அவர்கள் பொய் சொல்லுகின்றார்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அண்ணலார் அவர்கள் அந்த நயவஞ்சகர்கள் வெளிப்படையாகக் கூறும் காரணங்களைக் கேட்டு அவர்களுடைய குற்றத்தை மன்னித்து விடுகின்றார்கள். ஏனெனில் சோதனைக் காலத்தில் தமது இறைநம்பிக்கை தூய்மையானது தான் என்று அவர்கள் நிரூபிப்பார்கள் என்கின்ற நம்பிக்கை எப்போதுமே இருந்ததில்லை.

ஆனால் மற்றொருபுறம் தம் இறைநம்பிக்கையையும் உள்ளத் தூய்மையையம் இதற்கு முன்பு பலமுறை நிரூபித்துக் காட்டி விட்டிருந்த உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் இருந்தனர். அவர்கள் பொய்க் காரணம் காட்ட விரும்பவில்லை. தெளிவாகவும், வெளிப்படையாகவும் தங்கள் தவற்றை ஒப்புக் கொள்கின்றார்கள். அவ்வாறிருந்தும் அண்ணலார் அவர்களை முழு சமுதாயத்தை விட்டும் ஒதுக்கி வைத்து அவர்களுடன் கடுமையாக நடந்து கொள்கின்றார்கள். இவ்வாறு செய்தது அவர்களுடைய இறைநம்பிக்கையிலும் எண்ணத் தூய்மையிலும் சந்தேகம் பிறந்து விட்ட காரணத்தால் அல்ல: மாறாக, நயவஞ்சகர்கள் மட்டுமே செய்யக் கூடிய காரியத்தை அவர்கள் ஏன் செய்தார்கள் என்பதற்காகத் தான்!

இதில் காணப்படும் இன்னும் சில சிறப்பான அம்சங்கள் கவனிக்கத்தக்கது :

அந்த அமைப்பின் தலைவர் உரிமை தொனிக்க தண்டனை அளிக்கும் பாணியைப் பாருங்கள்

தொண்டர் அந்தத் தண்டனையை பணிவோடு ஏற்றுக் கொள்கின்ற தன்மையை நோக்குங்கள்.

சமூகத்தில் உள்ள அனைவரும் தம் தலைவரின் நாட்டப்படி செயல்படுகின்ற பாங்கையும் கவனியுங்கள்!

இந்த அம்சங்கள் ஒவ்வொன்றும் தன்னிகரற்றவையாய் விளங்குகின்றன.

தலைவர் மிகக் கடுமையான தண்டனையைத் தந்து கொண்டிருக்கின்றார். ஆனால் கோபத்துடனோ வெறுப்புடனோ அவற்றைத் தந்து கொண்டிருக்கவில்லை. மாறாக, ஆழ்ந்த அன்புடன் அந்தத் தண்டனையைத் தருகின்றார்.

பரிவும் பாசமும் கொண்ட தந்தையொருவர் தவறிழைத்து விட்ட தன் அன்பு மகனுக்கு தண்டனை தந்து விட்டு, தன் மகன் எப்பொழுது திருந்துவான். அவனை மீண்டும் எப்பொழுது மார்புறத் தழுவிக் கொள்ளலாம் என்று ஆவலுடன் காத்திருப்பதைப் போன்றே அந்த தண்டனையை அளிக்கின்றார்.

தொண்டரோ, தண்டனையின் கடுமையினால் நிம்மதியின்றி தவித்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் தன் அன்புத் தலைவருக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக அவரை எதிர்த்துக் கலகம் புரிய வேண்டும் என்னும் சிறு நினைப்புக் கூட அத் தொண்டரின் நெஞ்சில் நிழலாடுவதில்லை. எந்த முறையீடுமில்லை. தன் முந்தைய சாதனைகளைப் பாராட்டிட வேண்டும் என்னும் கோரிக்கையும் இல்லை!

மேலும் அந்தச் சமுதாயத்தைப் பாருங்கள்! தமது தலைவரின் கட்டளைக்குப் பணிந்து வாழும் உணர்வு அவர்களுக்குள் எந்த அளவிற்கு ஆழமாகவும் அழுத்தமாகவும் ஊடுருவிச் சென்றிருக்கின்றது.

இன்னாருடன் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளும்படி கட்டளை பிறந்தவுடன் - நகரம் முழுவதுமே அவரை இதற்கு முன் எவருமே அறிந்திராததைப் போல அவருக்கு அந்நியமாகி விடுகின்றது.

மன்னிப்புக் கிடைத்து விட்டதாக அறிவிப்பு வந்தவுடன் ஒவ்வொருவரும் முந்திக் கொண்டு தாமே முதலில் வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் என்னும் உணர்வுடன் ஓடி வருகின்றனர்.
, ,