பதிவுகளில் தேர்வானவை
9.10.11
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்
முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
நம் நாட்டில் பெண்களின் பிரச்சனைகள் அத்தனையும் திருமணத்தை மையமிட்டதாகவே உள்ளன. திருமணம் சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகிய அனைத்திலும் பெண்ணடிமை பிணைந்து கிடக்கின்றது. இவை அனைத்தும் சமயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு சாதிகளின் வழியாகப் பாதுகாக்கப்படுகின்றன!' என்று ஒரு பெண்ணியவாதி தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.
கருக்கலைப்பு, சிசுக்கொலை, மீறிப்பிறந்தால் வரவேற்பின்றி புறக்கணிப்பு, குழந்தை வளர்ப்பில் பாரபட்சம், விளையாட்டுகளில் கூட வேறுபாடு, கல்வி அளிப்பதில் பாகுபாடு,............ என்றிவ்வாறாக சீர், செனத்தி, நகை, நட்டு, வரதட்சணை, தற்கொலை, புகுந்த வீட்டுக் கொடுமைகள் என்ற தொடர்கதையாக நீள்பவை அனைத்தையும் பார்க்கும்போது மேற்கூறப்பட்ட கருத்து உண்மையே என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
கூடக்குறைவு ஏதுமின்றி பெண்களின் மீதான இக்கொடுமைகள் யாவற்றையும் மனித வரலாற்றில் இஸ்லாம் மட்டும்தான் ஒழித்துக்கட்டி பெண்ணினம் தன்னுடைய வாழ்வுமூச்சை சீராகச் சுவாசிக்க வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது என்று நாம் முன்வைக்கிற அதே சமயம், தற்போதைய நிகழ்கால முஸ்லிம் சமூகத்தில் இக்கொடுமைகள் நிலவவே இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கவும் தயாராக இல்லை
ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் (கி. பி. எட்டாம் நூற்றாண்டில்) இந்தியாவில் இஸ்லாம் அறிமுகமானது என்று வைத்துக் கொண்டால் கூட ஏறக்குறைய பன்னிரண்டு நூற்றாண்டு காலமாய் இங்கே இஸ்லாமும், முஸ்லிம்மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்று சொல்லவேண்டும். ஆனால், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றுதான் சொல்ல முடியுமேயொழிய இஸ்லாம் வாழ்ந்து வருகின்றது என்று சொல்லவே முடியாது. பிரச்சனையின் அடிப்படைச் சிக்கலே இங்கு தான் அவிழ்கின்றது.
'ஓரிறைவனை மட்டுமே ஒப்புக்கொண்டு அவன் காட்டிய வழியில் தான் வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள வேண்டும்!' என்கிற சத்திய நன்னெறியினை இந்தியவாழ் முஸ்லிம்கள் தத்தமது சமகாலத்தைய சகோதர சமயத்தார்களிடம் முறையாகக் கொண்டுபோய் சேர்த்தார்களா, இல்லையா? என்கிற கேள்வியையே இங்கு நாம் ஒதுக்கித் தள்ளி விடுவோம்.
கடவுட் கொள்கையிலும், பண்பாட்டிலும் பாரதூரமான வேறுபாடுகளைக் கொண்ட இருசமூகங்கள் அருகருகே கலந்து வசிக்கும்போது, அவற்றிற்கிடையே பரஸ்பரம் நிகழும் தாக்கங்கள் எங்ஙனம் அமையும்? அடிப்படைக் கொள்கையையோ, அவற்றின் கூறுகளையோ ஏற்றல், கலாச்சாரத்தின் சிற்சில அம்சங்களை ஒப்புக் கொள்ளல், நேரிடையாகவோ, எதிரிடையாகவோ ஒருசில பண்பாட்டு மாற்றங்கள், சிதைவுகளுக்கு உட்படுதல் போன்ற தளங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன? இத்தகைய எதிர்த் தாக்கங்கள் எந்தச் சமூகத்தில் அதிகமாகப் பிரதிபலித்தன? எனும் கோணத்தில் ஆராயப் புகுந்தோமென்றால் இந்திய முஸ்லிம் பெண்கள் இன்றைக்கு சந்தித்து வருகின்ற எல்லா பிரச்சனைகள், அவலங்களுக்குமான முழுவிடை கிடைத்துவிடும்!
இஸ்லாமிய இறைக்கோட்பாடு இந்தியசமய நெறிகள், சித்தாந்தங்கள் பலவற்றிலும் பெருத்த மாறுதல்களை ஏற்படுத்தியது. இஸ்லாமியப் பேரறிஞர் மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி இது குறித்து எழுதியுள்ள ஒரு கருத்து மேலோட்டமாகப் பார்க்கையில் அதிர்ச்சியை அளித்தாலும் ஆழக் கவனித்தால் உண்மை புலனாகும்!. அவர் எழுதுகிறார்ளூ 'இஸ்லாமின் ஓரிறைக் கோட்பாடு காரணமாக சித்தாந்த மாறுபாட்டை சந்தித்தவை ஆர்ய சமாஜம், ஜனசங்கம், ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளே ஆகும்! விளைவாக, உருவ வழிபாடு எனும் இணைவைப்புக் கருத்திலிருந்து (தவ்ஹீது எனும்) ஓரிறைக் கோட்பாட்டை நோக்கி நெருங்கிவர அவை முயன்றன!'
நாம் பெண்ணியம் பற்றி பேசிக் கொண்டிருப்பதால் பண்பாட்டுத் தளத்தை கவனிப்போம். தன்னுடைய பண்பாட்டின் சிறப்புக்கூறுகள் பலவற்றை இஸ்லாம் பிற சமய நெறிகள், மரபு சித்தாந்தங்கள் போன்றவற்றிற்கு 'ஏற்றுமதி' செய்திருந்தாலும், குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு வீரியமிக்க பல்வேறு பண்பாட்டுத் தாக்கங்களை 'இறக்குமதி' செய்து உள்வாங்கிக் கொண்டது. (உலமாக்கள், மார்க்க அறிஞர்களின் கவனமும் கண்காணிப்பும் இல்லாமற்போனதால் தான் இது நிகழ்ந்தது என்று தைரியமாகக் கூறலாம்!)
உருவவழிபாட்டிற்கு இணையான தர்கா வழிபாடு, ஆதின மடாதிபதிகள், தனிநபர் வழிபாடு என்ற இடத்தில் பீர்கள், தரீக்கா நாயகங்கள் வழிபாடு, செய்வினை, ஜாதிகளுக்கு மாற்றாக உட்பிரிவுகள், பிராதபி (சகோதர இனப்பிரிவுகள்) சூனியம் போன்றவற்றின் மாற்றாக ஆமில்கள், தங்கல்களின் அமைப்பு, பஞ்சாங்கத்திற்குப் பதிலாத ஃபால் கிதாபுகள், ஜோஸியம், ஜாதகம் போன்றவற்றை அப்படியே மனமொப்பி ஏற்றுக் கொள்ளும் தன்மை, குலதெய்வங்கள் போன்று குல தர்காக்கள், நேர்ச்சை, நேர்ச்சை யாரை நோக்கி செய்யப்படுகின்றதோ அவர் பெயரையே குழந்தைகளுக்கு வைக்கும் போக்கு, குடும்ப உறுப்பினர்கள் (ஆண்பெண் உட்பட) அனைவர் பெயரிலும் அக்குல தர்கா அவ்லியாவின் பெயர் இடம் பெறுதல், சிற்சில இடங்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே பெயரையே சூட்டும் குணம், திருமணம், திருமண சடங்குகள், மூன்று நாள் முதல் ஏழு நாட்கள் வரை நடைபெறும் திருமண வைபவங்கள், சீர் செட்டுகள், நகை வரதட்சணைகள், மொய் வகையறாக்கள், அழைப்பு ஊர்வலங்கள், திருமணங்களைத் தொடர்ந்து படையெடுத்து வரும் பண்டிகை, விழா சீரியல்கள், வளைகாப்பு, குழந்தை பிறப்பு சீர்கள், கருக்கலைப்பு, (பெண் சிசுக் கொலை மட்டும் நானறிந்து அவ்வளவாக இல்லை) பெண் குழந்தை புறக்கணிக்கப்படுதல், வளர்ப்பில் பாகுபாடு பாரபட்சம், கல்வி மறுப்பு, பத்தாம்பசலித்தனத்தின் அடையாளமாய் பெண் உருவாக்கம்..................... என்று முஸ்லிம் சமூகத்தில் இன்று பிடிவாதமாய் நின்று நிலவிவரும் இவை எதுவொன்றுமே இஸ்லாத்தின் அம்சங்கள் அல்ல! ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக 'ஒட்டி உறவாடி' வரும் மாற்றுமதத்தாரின் பண்பாட்டைப் பார்த்து கற்றுக் கொண்டவை, அல்லது சிலைவணக்கம் தவறு என்றுணர்ந்து நம் முன்னோர் இஸ்லாமிய ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு 'உள்ளே' வந்தபோதும் விடாப்பிடியாக அக்கறையின்றி கொண்டு வந்த மிச்ச சொச்சங்கள் இவை!
மக்களுடைய மனப்போக்கு என்று இதை ஒதுக்கித் தள்ள முடியாது. ஆலிம்கள் உலமாக்களின் பொறுப்பின்மை, கவனக்குறை என்று தான் கூற வேண்டும். இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றியவர்களே 'எங்களுக்கும் ஒரு சிலையைச் செய்து கொடு!' என்று கேட்டிருக்கும் போது மக்கள் என்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள் என்று காரணம் கட்ட முடியாது. (உலமாக்கள் ஏன் கவனம் செலுத்தாது விட்டுவிட்டனர் என்பது வேறொரு தலைப்பின் கீழ் விவாதிக்க வேண்டிய விஷயம்!)
இஸ்லாம் முறையாகப் போதிக்கப்படவில்லை, பின்பற்றப்படவில்லை என்பது தான் கருத்தூன்றி இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்! இதன் விளைவு எப்படி வெளிப்பட்டாக வேண்டுமோ அப்படியே வெளிப்படுகின்றது. 'குரலற்றவர்களின் குரல்!' என்கிற தலைப்பில் தேசிய பெண்கள் ஆணையம்
வெளியிட்ட நூலொன்று சிறையில் இருந்த போது என் கைக்கு வந்து சேர்ந்தது. அந்நூலை தொடர்ச்சியாக வாசிக்கவே என்னால் இயலவில்லை!. கண்ணீர் ததும்பித் ததும்பி எழுத்துக்களை மறைத்துக் கொண்டே இருந்தது. அடிகள் உதைகளுடனான வளர்ப்பு, குடிகாரத் தந்தையின் கொடுமை, பாலியல் சீண்டல்கள், முதிர் கன்னிகள், வரதட்சணை சித்ரவதைகள், கணவனின் கொடுமைகள், தலாக் பயமுறுத்தல்கள், நிர்க்கதியான நிலை, போக்கிடமோ, புகலிடமோ ஏதுமற்ற அநாதரவு ஐயா, இவையெல்லாம் என்ன? உலகமேல்லாம் சமத்துவம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் இஸ்லாமின் சொந்த வீட்டில்தானா இவையனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன? யா அல்லாஹ்! இவற்றுக்கெல்லாம் யார் காரணம்?
இஸ்லாமிய அமைப்பொன்றின் முன்பு ஊழியம் செய்து கொண்டிருந்த போது முஸ்லிம் பெண்கள் படும்பாட்டினை கண்களால் பார்த்திருக்கிறேன். நெருங்கிய உற்றார் உறவினர்களினால் நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல்களைப் பற்றி காது கொடுத்துக் கேட்டிருக்கிறேன். அவற்றால் மனம் பாதிக்கப்பட்ட பெண்களை பேதை சகோதரிகளை கண்டுள்ளேன். முறையற்ற தலாக்குகளால் சீரழிந்து போனோர் தொலைந்து போன வாழ்வைத் தேடி அலைவதையும் கண்டுள்ளேன்.
இளம் வயதில் துணையற்றுப் போன (பெரும்பாலோர் தலாக் விடப்பட்டவர்கள்) முஸ்லிம் பெண்களின் மறுவாழ்வுக்கென்றே திருப்பூர், குன்னுõர் போன்றவிடங்களில் அமைப்புகள் இயங்குகின்றன!. தென்காசி பகுதியில் பழங்குடி முஸ்லிம் பெண்களை முறைப்படி திருமணம் செய்து கொடுப்பதெற்கென்றே சிலர் பாடுபட்டு வருகிறனர். இவர்கள் அனைவரும் தாங்கள் மேற்கொண்டுள்ள பணியை நிறைவேற்ற எப்படியெல்லாம் திணறுகிறார்கள் என்று நம்மில் யாருக்காவது தெரியுமா? எழுத்துகளிலும், பயான்களிலும் முன்வைக்கப்படுகின்ற இஸ்லாம்தான் மொஹல்லாக்களிலும் வசிக்கின்றது என்றால் இவர்களுக்கு எல்லாம் எதற்கு இந்த வேலை?
இதற்கெல்லாம் யாருங்கண்ணா காரணம்? இறைவனா? இறைத்தூதரா? வான்மறை குர்ஆனா? வழிகாட்ட வந்த நபிமொழியா? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! இவை தாம் காரணம் என்றால் இப்படிப்பட்ட மார்க்கம் கண்டிப்பாக இறைமார்க்கமாக இருக்காது!. இத்தகைய போதனைகளுக்குப் பின்னணியில் உள்ள நூல் கட்டாயம் இறைமறையாக இருக்காது! !!
இஸ்லாமிய அறிவு கொடுக்கப்படாததும், இஸ்லாமிய வாழ்வும் ஒழுக்கமும் பயிற்றுவிக்கப் படாததும் தான் உண்மையான காரணங்கள் என்கிற ஒருமித்த முடிவிற்குத்தான் நீங்களும் நானும் இப்போது வரவேண்டியிருக்கிறது. கற்பிப்பதும், பயிற்றுவிப்பதும் யார் மீது கடமை? அக்கடமையை ஏனவர்கள் நிறைவேற்றாமற் போனார்கள்? என்பனவெல்லாம் பக்கவாட்டில் முளைக்கின்ற துணைக்கேள்விகள்!. ஆனால், ஒன்றை மட்டும் நீங்களும் நானும் கண்டிப்பாக செய்ய மாட்டோம். இஸ்லாத்தின் கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்குவது, ஷரீஅத்தை சுட்டிக்காட்டி குற்றஞ்சுமத்துவது, குர்ஆனுக்கு புதியதொரு விளக்கம் காணவேண்டும் என்று துடிப்பது, பெண்கள் சட்டவாரியம் அமைப்பது, வெகுஜன ஊடகங்களில் இஸ்லாத்தை விமர்சிப்பது என்பன போன்ற செயல்கள் நம்மிடமிருந்து தோன்றா!!.
மேற்கண்ட அவலங்களையெல்லாம் எவ்வாறு அகற்றவது? அதற்குரிய வழிமுறைகள் என்ன? என்பது பற்றியும் நாம் விரிவாக அலசி ஆராய வேண்டியுள்ளது. சொல்லப் போனோமென்றால் இஸ்லாமிய சமூக மறுமலர்ச்சியின் கட்டுமானமே அதன் மீது தான் அமைய வேண்டியிருக்கும்!.
அது போன்றே, 'பெண்ணுக்கான முழுமுற்று விடுதலை, பரிபூரண விடுதலை!' இஸ்லாமின் மூலம் தான் சாத்தியம் என்பதை இக்கட்டுரையில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வலியுறுத்தி உள்ளேன். பெண்ணிய இயக்கங்களின் போராட்டங்கள் கூட இவ்விஷயத்தில் பெரிதாக ஒன்றும் சாதித்திட இயலாது என்றும் கூறுகிறோம். அதெப்படி இஸ்லாம் மட்டும் வெற்றியை ஈட்டும், அல்லது ஈட்டியது என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த கட்டுரையில் காணலாம்.