குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

2.10.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

உம்ராவின் சட்ட திட்டங்கள்
உம்ரா

உம்ரா செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் வாழ்நாளில் ஒருமுறை கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான் : அல்லாஹ்வுக்காக உம்ராவையும் ஹஜ்ஜையும் நீங்கள் நிறைவு செய்யுங்கள். (2:196)


இஹ்ராம்
இஹ்ராம் என்பது ஹஜ் அல்லது உம்ரா உடைய வணக்கத்தில் பிரவேசிப்பதாகும். இஹ்ராமிலுள்ளவருக்கு அதற்கு முன்னர் ஹலாலாக இருந்த சில காரியங்கள் ஹராமாகி விடுகின்றன. ஏனெனில் அவர் ஒரு வணக்கத்தில் புகுந்து விட்டார். ஹஜ் அல்லது உம்ராவை விரும்புகிறவர் மக்காவிற்கு வெளியில் நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்த எல்லைகளில் ஏதேனும் ஒரு எல்லையிலிருந்து முன்னோக்கி வருபவராக இருந்தால் இஹ்ராம் கட்டாயமாகும்.

எல்லைகள்

துல்குலைஃபா : இது மதீனாவிற்குச் சமீபமாக உள்ள ஒரு கிராமமாகும். தற்போது இதற்கு அப்யார் அலி என்று கூறப்படுகின்றது. இது மதீனாவாசிகளுக்குரிய எல்லையாகும்.
அல் ஜுஹ்ஃபா : இது ராபிஃக் என்னும் ஊருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய ஊராகும். தற்போது மக்கள் ராபிஃகிலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்கிறார்கள். இது சிரியா வாசிகளின் எல்லையாகும்.
கர்னுல் மனாஸில் : (ஸைலுல் கபீர்) இது தாயிஃபிற்குச் சமீபமான ஒரு இடம். இது நஜ்து வாசிகளின் எல்லையாகும்.
யலம்லம் : இது மக்காவிலிருந்து 70 கி.மீ. தூரத்திலுள்ளது. இது யமன் வாசிகளின் எல்லையாகும். (இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கும் இதுவே எல்லையாகும்.)
தாதுல் இர்க் : இது ஈராக் வாசிகளின் எல்லையாகும்.

இவ்வைந்து இடங்களும் மேலே குறிப்பிட்ட ஊர்வாசிகளுக்கு இவ்விடங்கள் வழியாக வருகின்றவர்களுக்கும் எல்லைகளாகும். இந்த எல்லைகளுக்கு உள்ளே உள்ளவர்களும் ஹரமில் உள்ளவர்களும் அவர்கள் இருக்கின்ற இடங்களிலிருந்தே இஹ்ராம் செய்து கொள்ள வேண்டும்.

இஹ்ராமின் சுன்னத்துக்கள்

இஹ்ராமுக்கு முன் செய்ய வேண்டிய சுன்னத்தான காரியங்கள் :

நகங்களை வெட்டுதல், அக்குள் முடிகளைப் பிடுங்குவது அல்லது மழிப்பது, மீசையைக் கத்தரிப்பது, மர்மஸ்தானத்தின் முடியை மழிப்பது, குளிப்பது, ஆடைகளிலன்றி உடம்புக்கு மட்டும் மணம் பூசிக் கொள்வது, ஆடைகளுக்குப் பூசக் கூடாது.

தையலாடைகளைக் களைவது, வேஷ்டி உடுத்தி, துண்டைப் போர்த்திக் கொள்வது, பெண் தான் விரும்பிய ஆடைகளை அணிந்து கொள்ளலாம். தன்னை மூடி மறைத்துக் கொள்வதிலும் அழகலங்காரங்களை வெளிப்படுத்தாதிருப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அன்னிய ஆடவர்கள் வரும்போது முகத்தையும் முன் கைகளையும் மறைத்துக் கொள்ள வேண்டும். கையுறைகளையும் முகத்தை மறைப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பள்ளிக்குச் சென்று அந்நேரம் தொழுகை நேரமாக இருந்தால் ஜமாஅத்துடன் தொழுவது அல்லது உளூவின் சுன்னத்தான இரு ரக்அத்துக்களை தொழுவது. அதன் பின்னர் இஹ்ராமைத் தொடங்குவது.

இஹ்ராம் முறை

''லப்பைக் உம்ரதன்'' என்று கூறி இஹ்ராம் செய்ய வேண்டும். இஹ்ராம் செய்த பின்னர் தல்பியாச் சொல்வதும் அதை இஹ்ராம் செய்ததிலிருந்து கஅபதுல்லாஹ்வை அடைந்து தவாஃப்-வலம் வருவதை ஆரம்பிக்கும் வரை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதும் சுன்னதாகும்.

தல்பியா

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் லப்பைக்க லாஷரீக்கலக லப்பைக் இன்னல் ஹம்த வன்நிஃமத்த லகவல் முலக், லாஷரீக்க லக்.

(பொருள் : உன்னிடம் வந்து விட்டேன். இறைவா! உன்னிடமே வந்து விட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்து விட்டேன். நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களுக்கும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை).

இஹ்ராமில் தடுக்கப்பட்டவை

இஹ்ராம் கட்டிக் கொண்டவருக்கு பின்வருபவை ஹராமாகும்.
தலைமுடியையும் உடம்பின் ஏனைய பாகங்களிலுள்ள முடிகளையும் நீக்குவது
எனினும் தேவையின் நிமித்தம் இலேசாகத் தலையைச் சொரிவதால் (முடி விழுவதால்) குற்றமில்லை
நகங்களை வெட்டுதல். எனினும் நகம் உடைந்த விட்டால் அதை வெட்டுவது குற்றமல்ல.
வாசனைப் பொருட்களை உபயோகிப்பது (வாசனைச் சோப்புக்கும் இதே சட்டம் தான்)
உடலுறவு கொள்ளல், அதைத் தூண்டக் கூடிய காரியங்களைச் செய்தல். உதாரணமாக திருமணம் முடித்தல், மனைவியை இச்சையுடன் பார்த்தல், அணைத்தல், முத்தமிடுதல் போன்றவை

கையுறைகள் அணிதல்

வேட்டைப் பிராணிகளைக் கொல்லுதல்

இவையனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஹராமானதாகும். ஆண்களுக்கு அதிகப்படியாக இன்னும் சில ஹராமாகின்றன.

தையல் ஆடை அணிவது. எனினும் இஹ்ராமிலுள்ள பெல்ட், கண்ணாடி, வாட்ச் போன்ற தேவையுள்ள பொருட்கள் அணிவது கூடும்.

தலையை ஒட்டினாற் போல ஏதேனும் ஒன்றைக் கொண்டு தலையை மறைத்தல். தலையோடு ஒட்டாமல் சற்று உயரமாக வைத்து தலையை மறைத்துக் கொள்வது குற்றமில்லை. உதாரணமாக குடை, வாகனம், கூடாரம் போன்று!
காலுறை அணிவது, செருப்புக் கிடைக்கவில்லையானால் காலுறை அணிந்து கொள்ளலாம்
தடுக்கப்பட்ட இவற்றில் ஒன்றை யாரேனும் செய்து விட்டால் அவனுக்கு மூன்று நிலைகள் உள்ளன :
தக்க காரணமின்றிச் செய்பவன். இவன் பாவியாவான். அபாரதம் உண்டு.
தேவைக்காகச் செய்பவன். இவன் பாவியாக மாட்டான். அபாரதம் உண்டு.
தக்க காரணத்துடன் செய்பவன். அதாவது அறியாமலோ, மறந்தோ, நிர்ப்பந்தமாகவோ செய்வது போல. இவனுக்கு குற்றமில்லை. அபாரதமுமில்லை.

தவாஃப் (வலம் வருதல்)

மஸ்ஜிதுல் ஹராமில் (கஅபத்துல்லாவில்) நுழையும் போது வலது காலை வைத்து,
பிஸ்மில்லாஹி, வஸ்ஸலாத்து வஸ்ஸலாம அலா ரசூலில்லாஹ் அல்லாஹும்ம மக்ஃபிர்லீ துநூபி வஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக்க என்று கூறுவது சுன்னதாகும்.
பொருள் : அல்லாஹ்வின் பெயர் கூறி நுழைகிறேன். கருணையும், ஈடேற்றமும் அல்லாஹ்வின் தூதர் மீது உண்டாவதாக! இறைவா! என்னுடைய பாவங்களை மன்னித்து விடு. உனது அருள் வாயில்களை எனக்குத் திறந்து விடு)
இந்த துஆ எல்லாப் பள்ளிகளுக்கும் பொதுவானதாகும். பின்னர் கஅபாவை வலம் வருவதற்காக அதை முன்னோக்க வேண்டும்.

தவாஃப் என்பது அல்லாஹ்விற்கு வணக்கம் செய்யும் எண்ணத்தில் ஹஜருல் அஸ்வத்திலிருந்து ஆரம்பித்து இடது புறமாக கஅபாவை ஏழு முறை சுற்றி வருவதாகும். முடிக்கும் போது ஹஜருல் அஸ்வதில் முடிக்க வேண்டும். தவாஃப் செய்யும் போது உளூவுடன் இருக்க வேண்டும்.

தவாஃப் செய்யும் முறை

ஹஜருல் அஸ்வதின் பக்கம் சென்று அதைத் தனது வலது கையால் தொட்டு 'பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்' எனக் கூற வெண்டும். இத்துடன்
அல்லாஹும்ம ஈமானம்பிக வ தஸ்தீகம் பிகிதாபிக வவஃபாஅம் பிஅஹ்திக வத்திபா அன் லி சுன்னத்தி நபிய்யிக. என்பதையும் சேர்த்து சொன்னால் சிறப்பாகும்.
(பொருள் : இறைவா! உன்னை நம்பிக்கை கொண்டு, உன்னுடைய வேதத்தை உண்மைப்படுத்தி, உன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி, உன்னுடைய நபியின் சுன்னத்தை பின்பற்றியவனாக இதை நான் செய்கிறேன்) முடிந்தால் அக்கல்லை முத்தமிட வேண்டும். அதை முத்திமிட முடியவில்லையெனில் கல்லைத் தொட்ட தனது கையை முத்திமிட்டுக் கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வத்தைத் தொட முடியவில்லையானால் அதை முன்னோக்கி அல்லாஹு அக்பர் எனக் கூறி தனது கை கொண்டு அதன்பால் சுட்டிக் காட்ட வேண்டும். தனது கையை முத்தமிடக் கூடாது. பின்னர் கஅபதுல்லாவை தனது இடப்புறமாக்கி தவாஃபத் தொடங்க வேண்டும். தான் விரும்பிய துஆக்களைக் கேட்கலாம் அல்லது தனக்குத் தெரிந்த குர்ஆன் வசனங்களை ஓதலாம். தனது மொழியில் தனக்கும் தான் விரும்பியவருக்கும் துஆச் செய்யலாம். இங்கு துஆச் செய்வதற்கென குறிப்பான துஆக்கள் ஏதுமில்லை.
ருக்னுல் யமானியை அடைந்து விட்டால், முடிந்தால் அதைத் தொட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் எனக் கூற வேண்டும். தனது கையை முத்தமிடக் கூடாது. முடியாவிட்டால் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பக்கம் தனது கையால் சுட்டிக் காட்டவும், தக்பீர் சொல்லவும் கூடாது. ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வதுக்குமிடையில்
ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்'' எனக் கூற வேண்டும்.
(பொருள் : எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையை விட்டும் எங்களைக் காப்பாயாக!)
ஹஜருல் அஸ்வத்தை அடைந்து விட்டால் வலது கையால் அதைத் தொட வேண்டும். முடியவில்லையானால் அல்லாஹு அக்பர் எனக் கூறித் தனது கையால் சுட்டிக் காட்ட வேண்டும். இப்படிச் செய்வது கொண்டு தவாஃபின் ஏழு சுற்றுக்களில் ஒரு சுற்று முடிவடைந்து விடுகிறது. மீதமள்ள சுற்றுக்களையும் இவ்வாறே பூர்த்தி செய்யவும்.
தொடர்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்க வேண்டும். ஏழு சுற்றுக்களைப் பூர்த்தி செய்யும் வரைக்கும் முதல் சுற்றில் செய்தது போலவே செய்ய வேண்டும். ஹஜருல் அஸ்;வதைக் கடந்து செல்லும் போதெல்லாம் தக்பீர் சொல்லிட வேண்டும். இது போன்றே ஏழாவது சுற்றக்குப் பின்னரும் தக்பீர் சொல்ல வேண்டும்.
முதல் மூன்று சுற்றுக்களில் தொங்கோட்டம் ஓடுவது சுன்னத்தாகும். மீதமுள்ள நான்கு சுற்றுக்களில் நடந்தே செல்ல வேண்டும். தொங்கோட்டம் என்பது கால் எட்டுகளை சுருக்கி வைத்து சற்று வேகமாக நடப்பதாகும். மேலும் இந்த தவாஃபில் மேல் அங்கியின் நடப்பகுதியை வலது அக்குளுக்கு கீழ் சுற்றிக் கொண்டு வந்து இரு ஓரங்களையும் இடது தோள் புஜத்தின் மீது போட்டுக் கொள்ள வேண்டும். வலது தோல் புஜம் மட்டும் திறந்திருக்க வேண்டும். இதுவும் சுன்னதாகும்.
தொங்கோட்டமும் மேலங்கியை இவ்வாறு போட்டுக் கொள்வதும் உம்ரா செய்யக் கூடியவரும், ஹஜ் செய்யக் கூடியவரும் மக்காவுக்கு வரும் போது செய்யக் கூடிய முதல் தவாஃபில் மட்டும் தான். இவ்விரண்டும் ஆண்களுக்கு மட்டும் தான்.

தவஃபுக்குப் பின்னர்

தவாஃபுக்குப் பின்னர் மகாம் இப்றாஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்துக்கள் தொழுவது சுன்னத்தாகும். அப்படித் தொழும் போது மகாம் அவருக்கும் கஅபதுல்லாவுக்குமிடையே இருக்க வேண்டும். தொழுவதற்கு முன்னால் மேலங்கியை இரண்டு தோள் புஜங்கள் மீதும் போட்டுக் கொள்ள வேண்டும். முதல் ரக்அத்தில் ஃபாத்திஹா சூராவும், குல்யாஅய்யுஹல் காஃபிரூன் சூராவும், இரண்டாவது ரக்அத்தில் ஃபாத்திஹா சூராவும், குல்ஹுவல்லாஹு அஹத் சூராவும் ஓத் வேண்டும். கடுமையான நெருக்கடியினால் மகாம் இப்றாஹீமுக்குப் பின்னர் தொழ முடியவில்லையானால் பள்ளியின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். பிறகு ஸம்ஸம் தண்ணீரை வயிறு புடைக்க அதாவது அதிகமதிகமாகக் குடிப்பது சுன்னத்தாகும்.

ஸயீ செய்வது

பின்னர் ஸயீ செய்யுமிடத்திற்குச் சென்று ஸஃபாபின் பக்கமாகச் செல்ல வேண்டும். அதை நெருங்கும் போது,
'இன்னஸ் ஸஃபா வல் மர்வத மின் ஷஆயிரில்லாஹ்'' எனும் வசனத்தை ஓதிக் கொள்ள வேண்டும். (பொருள் : ஸஃபா, மர்வா இரு குன்றுகளும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவையாகும்). கஅபாவைக் காணுமளவிற்கு ஸஃபாவில் ஏற வேண்டும். பின்னர் கஅபாவை முன்னோக்கி தனது இரு கைகளையும் உயர்த்தி, அல்லாஹ்வைப் புகழ்ந்து தான் விரும்பிய துஆவைக் கேட்க வேண்டும். உதாரணமாக,

லஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தா அன்ஜஸ வஃதா வநஸர அப்தா வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா
(பொருள் : வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழ் அனைத்தும் அவனுக்கே! மேலும் அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் நிறைந்தவன்! அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவ்ன தன் வாக்குறுதியை நிறைவேற்றினான். தன் அடியாருக்கு உதவினான். அவன் மட்டுமே எதிரிக் கூட்டத்தினரைத் தோல்வியுறச் செய்தான்!)
என மூன்று முறை கூறிக் கொண்டு நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும். பின்னர் அதிலிருந்து இறங்கி மர்வாவை நோக்கிச் செல்ல வேண்டும். பச்சைத் தூணை அடைந்தால் அடுத்த பச்சைத் தூணை அடையும் வரை முடிந்த அளவு விரைந்து செல்வது சுன்னத்தாகும். இப்படிச் செய்யும் போது யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பது நிபந்தனையாகும். (விரைந்து செல்வது ஆண்களுக்கு மட்டுமே.., பெண்களுக்கல்ல).
மர்வாவை அடைந்து விட்டால் அதில் ஏறி கஃபாவை முன்னோக்கி கைகளை உயர்த்தி ஸஃபாவில் கூறியது போலக் கூற வேண்டும். இப்படி ஒருவா செய்து விட்டால் அவர் ஸயீக்குரிய ஏழு தடவைகiளில் ஒன்றை முடித்து விட்;டார். துஆவிற்குப் பின்னர் மர்வாவிலிருந்து இறங்கி ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும். முதல் தடவை செய்தது போலவே செய்து கொள்ள வேண்டும். ஸயீயின் போது துஆவை அதிகப்படுத்திக் கொள்வது சுன்னத்தாகும்.
ஸயீ செய்த பிறகு தலை முடியை முழுவதும் மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது முழுவதும் குறைத்துக் கொள்ள வேண்டும். என்றாலும் மழிப்பதே சிறந்தது. ஆனால் பெண்கள் தம் அனைத்து முடிகளிலிருந்தும் விரல் நுனி அளவிற்கு (சுமார் 3 செ.மீ) வெட்டிக் கொள்ள வேண்டும். இதன் பிறகு உம்ராவிலிருந்து விடுபட வேண்டும். இதுவே உம்ரா செய்யும் முறை.

உம்ராவின் ருகுன்கள் (முதல் நிலைக் கடமைகள்)

இஹ்ராம்

தவாஃப்

ஸயீ

இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் விட்டு விட்டால் அதை நிறைவு செய்யாத வரை அவரது உம்ரா பூர்த்தியாகாது.
உம்ராவின் வாஜிபுகள் (இரண்டாம் நிலைக் கடமைகள்)
எல்லையில் இஹ்ராம் செய்தல்
தலை முடியை மழித்தல் அல்லது குறைத்தல்
இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் விட்டு விட்டால் அவர் குர்பானி கொடுக்க வேண்டும். அதன் இறைச்சியை ஹரம் பகுதியிலுள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும்.



, ,