பதிவுகளில் தேர்வானவை
1.1.12
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
காஷ்மீரில் தொடரும்
'காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள் அணு ஆயுதத்தை போல இந்தியாவை அச்சுறுத்துகின்றன!'
‘காஷ்மீரில் ஏன் இவ்வளவுப் பிரச்னை?
அங்கு என்னதான் நடக்கிறது?’ என யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அவர்கள் மிக எளிமையான சில பதில்களை வைத்திருப்பார்கள். 1. காஷ்மீரில் நடப்பது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்னை. முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் சண்டையிடுகிறது. இந்துக்களுக்கு ஆதரவாக இந்தியா சண்டையிடுகிறது. 2. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அதை மீட்பதற்காக இந்திய ராணுவம் சண்டை நடத்திக்கொண்டிருக்கிறது. 3. முஸ்லிம் தீவிரவாதிகள் காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் சேர்ப்பதற்காக பயங்கரவாதம் செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்ற இந்திய ராணுவம் போராடிக் கொண்டிருக்கிறது... இப்படி வகை, வகையான கதைகள் காஷ்மீர் பற்றி பொதுப்புத்தியில் உலவுகின்றன.
எதுதான் உண்மை?
ஊடகங்களும், அரசும் சேர்ந்து காஷ்மீர் பற்றிய உண்மைகளை மறைப்பதோடு தங்களின் மேலாதிக்கத்துக்குத் தோதான பொய்களையும் கட்டி எழுப்புகின்றன. ஆனால் இவை அனைத்தும் இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் செல்லுபடியாகவில்லை. அங்கு மிகப்பெரிய மக்கள் யுத்தம் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. தங்களின் சுய நிர்ணய உரிமையை முடிவு செய்துகொள்ளும் பொருட்டு மக்கள் தன்னெழுச்சித் திரளாக போராடுகின்றனர். கடந்த நான்கு மாதங்களில் 70-க்கும் அதிகமானோர் துணை ராணுவப் படைகளின் துப்பாக்கி ரவைகளுக்கு பலியானபோதிலும் காஷ்மீரிகள் சோர்ந்துவிடவில்லை. முன்னெப்போதையும்விட வேகத்துடன் வீதிகளில் திரண்டுவந்து போராடுகின்றனர். அவர்களிடம் துப்பாக்கிகள் இல்லை. வெடிகுண்டுகள் இல்லை. கண்ணிவெடிகள் இல்லை. ஆனால் அவர்கள் கைகளில் ஏந்தி நிற்கும் கற்கள், இவை அனைத்தையும் விட மிக வீரியமான விளைவுகளை உலக அரங்கில் ஏற்படுத்தியுள்ளன. காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள், அணு ஆயுதத்தை விட அதிகமாக இந்தியாவை அச்சுறுத்துகின்றன. அதன் விளைவுதான், கடந்த இருபது ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்னைக்கு ராணுவத் தீர்வை நம்பியிருந்த இந்தியா முதன்முறையாக அரசியல் தீர்வைப் பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறது.
ஆசிய பிராந்தியத்தின் நீண்டகால பதற்றப் பகுதியான காஷ்மீரில் தற்பொழுது நடைபெறும் போராட்டங்கள் எதனுடனும் ஒப்பிடக்கூடியதாக இல்லை. இந்திய அடக்குமுறை அரசின் கைகூலியாய் மாறிப்போயிருக்கும் காஷ்மீர் முதலமைச்சர் பாரூக் அப்துல்லா, ‘‘காஷ்மீர் தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளை வன்முறையில் ஈடுபடாதவாறு பத்திரமாக பாதுக்காக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நிலைமை வேறானது. அவர் யாரை நோக்கி அந்த கோரிக்கையை வைத்தாரோ அந்தப் பெண்கள்தான் இப்போது போராட்டக் களத்தில் முன்னுக்கு நிற்கின்றனர். அவர்களுக்கு எந்தவித இயக்கப் பின்னணியும் இல்லை. ராணுவத்தின் துப்பாக்கிகளை எதிர்த்து 15 வயது சிறுவன் கல் எறிகிறான். ஒரு முஸ்லிம் பெண் கையில் கற்களை பொறுக்கி இளைஞர்களுக்குத் தருகிறார். ராணுவத்தின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் வழங்குவதற்காக மக்களே ரத்ததான முகாம்கள் நடத்துகின்றனர். மக்களே உணவுக்கூடங்களை திறந்திருக்கின்றனர். காஷ்மீரின் போராட்ட வரலாற்றில் இத்தகைய காட்சிகள் புத்தம் புதியவை.
‘‘துப்பாக்கி வேண்டாம். சுதந்திரம் வேண்டும்’’
மக்களின் தன்னெழுச்சியான இந்தப் போராட்டத்தை உலகமே வியப்புடன் பார்க்கிறது. ஒருபோதும் போராட்டங்களில் கலந்துகொள்ளாத மைசூன் என்ற பெண், தன் அன்பு மகன் உமர் ஃபாரூக்கை ராணுவம் கொலை செய்ததும் இன்று வீதிக்கு வந்திருக்கிறார். ‘‘காஷ்மீரிகள் எதற்கு சுதந்திரம் கேட்கிறார்கள் என்று எனக்கு ஒரு போதும் புரிந்தது இல்லை. ஆனால் இன்று எல்லாம் தெளிவாக புரிகிறது. எங்களுக்கு துப்பாக்கிகள் வேண்டாம், ராணுவம் வேண்டாம். சுதந்திரம்தான் வேண்டும்’’ என்கிறார் தெளிவாக.
ஆனாலும் இந்திய அரசு தனது அடக்குமுறைகளை நிறுத்தியபாடில்லை. ஐந்து லட்சம் ராணுவத் துருப்புகள், பல்லாயிரக்கணக்கான துணை ராணுவப் படைகள், உள்ளூர் போலீஸ் என காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ராணுவத்தால் நிரப்பப்பட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு, கண்டதும் சுட உத்தரவு என அரசு முழுவீச்சுடன் இறங்கி இருக்கிறது. ஆனால் இத்தனை காலமும் தீவிரவாத இயக்கங்களைக் காரணம் காட்டி தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வந்த இந்தியாவால் இப்போதைய மக்கள் போராட்டங்களை எந்த வகையிலும் திசைதிருப்ப முடியவில்லை. ஆயுதங்களை பாகிஸ்தான் வழங்கியதாக சொல்லலாம். (அதில் பகுதி அளவுக்கு உண்மையும் இருக்கிறது). ஆனால் கற்களை பாகிஸ்தான் தருவதாக சொல்ல முடியாதே?! உடனே, ‘அந்த மக்கள் பாகிஸ்தான் உளவு நிறுவனத்திடமும், எதிர்கட்சியான, Jammu & Kashmir Peoples Demoratic Party -யிடமும் பணம் வாங்கிக்கொண்டு போராடுவதாக’ சொன்னது. துப்பாக்கிக்கு நெஞ்சுக் காட்டி நிற்கும் பத்து வயது சிறுவனின் வீரத்தின் முன்னால் அந்த பொய் அடிபட்டுப் போனது.
இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் 'Go India Go', 'Quit India' என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ரூபாய் நோட்டுகளில் இளைஞர்களால் இந்த வாசகங்கள் எழுதப்படுகின்றன. சமீபத்தில் இந்திய அரசு அனுப்பிய மத்திய அமைச்சர்கள் குழு காஷ்மீருக்கு சென்றபோது அவர்களின் பயணப்பாதையில் இருந்த இத்தகைய வாசகங்களை கவனமாக அழித்திருந்தது உள்ளூர் நிர்வாகம். சுவர்களில் இருந்து வாசகங்களை அழிப்பதில் என்ன இருக்கிறது? காஷ்மீரிகளின் மனங்களில் அல்லவா விடுதலை உணர்வு அரும்பி இருக்கிறது. அதை எதைக்கொண்டு அழிப்பது? காஷ்மீரிகளின் விடுதலை உணர்வுகளை கொஞ்சமேனும் நாம் புரிந்துகொள்ள வேண்டுமாயின் அந்த அழகிய பள்ளத்தாக்கின் வரலாறை சிறிது தெரிந்துகொள்ள வேண்டும்.
காஷ்மீரின் கதை.. நேருவின் துரோகம்!
காஷ்மீரில் நடப்பது வெறுமனே இந்து-முஸ்லிம் பிரச்னையோ, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான இடம்பிடிக்கும் போட்டியோ அல்ல. அதற்கு 400 ஆண்டுகால வரலாறு உண்டு. 1586-ல் காஷ்மீரை தன் ஆளுகைக்குள் கொண்டுவந்தார் அக்பர். அதைத் தொடர்ந்து முகலாய, ஆப்கானிய, சீக்கிய மன்னர்களின் ஆளுகைக்குள்தான் காஷ்மீர் தொடர்ந்து இருந்து வந்தது. சீக்கிய மன்னர்களுக்கு விசுவாசமாக இருந்த, டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங் (இந்து மதத்தை சேர்ந்தவர்), தனது விசுவாசத்தின் பரிசாக காஷ்மீரை பெற்றார். அதன்பிறகு ஆங்கிலேயர்களுக்கும், அவர்களுக்கு அடங்க மறுத்த சீக்கியர்களுக்கும் இடையே போர் வந்தபோது, முதல் ஆளாக சீக்கியர்களை காட்டிக்கொடுத்து துரோகம் செய்தான் குலாப்சிங் மன்னன். இந்த துரோகத்தின் பரிசாக ஆங்கிலேயர்கள் 75 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு காஷ்மீரை குலாப்சிங்குக்கே கொடுத்தார்கள். அந்த தொகையோடு ஓராண்டு குத்தகையாக 20 பாஸ்மினா ஆடுகள், மூன்று காஷ்மீர் சால்வைகள், ஒரு குதிரை ஆகியனவும் பிரிட்டீஷாருக்கு அளிக்கப்பட்டன. இப்படியாக காஷ்மீர் டோக்ரா மன்னர்களின் பிடிக்குள் வந்தது.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது டோக்ரா வம்சத்தை சேர்ந்த ஹரி சிங் என்ற மன்னரின் ஆட்சிக்கு கீழ் காஷ்மீர் இருந்தது. அவர் இந்தியாவுடன் செல்வதா, பாகிஸ்தானுடன் செல்வதா என்ற குழப்பத்தில் இரு தரப்புடனும் சேர மறுத்தார். காஷ்மீரைப் போன்றே ஹைதராபாத் (ஆந்திரா), ஜூனாகத் (குஜராத்) ஆகிய பகுதிகளும் இந்தியாவுடன் சேர மறுத்தன. ஹைதராபாத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்குள் ஒரு தனித்தீவு போல அது இயங்க முடியாது என்பதாலும், அதன் பெரும்பகுதி மக்கள் இந்தியாவுடன் இணைய விருப்பம் கொண்டிருந்ததாலும் ராணுவத்தின் மூலம் அதைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது இந்தியா. குஜராத்தின் ஓரப்பகுதியில்… பாகிஸ்தான் நிலப்பரப்புக்கு அருகில் இருக்கும் ஜூனாகத் நகரில் பெரும்பகுதி இந்து மக்கள் வசித்தாலும் அதை ஒரு முஸ்லிம் மன்னர் ஆண்டு வந்தார். அவர் பிரிவினையின்போது ஜூனாகத்தை பாகிஸ்தானுடன் இணைத்துக்கொள்வதாக அந்நாட்டுடன் ஒப்பந்தம் போட்டார். ஆனால் ஜூனாகத்தில் வசித்த பெரும்பகுதி மக்களின் விருப்பம் இந்தியாவுடன் இணைவதாக இருந்தது. உடனே இந்தியா தானாகவே முன்வந்து ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. முடிவு சாதகமாக வந்தவுடன் ஜூனாகத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது.
காஷ்மீரின் நிலைமை வேறு. அங்கு வசித்தது பெரும்பகுதி முஸ்லிம் மக்கள். ஆனால் ஆண்டுவந்த ஹரிசிங்கோ ஓர் இந்து. அவர் இரு நாடுகளுடனும் இணைய மறுத்தார். அந்த நிலையில் மன்னராட்சிக்கு எதிராக பூஞ்ச் பகுதியை சேர்ந்த சிலர் ஆயுத கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். பிரிவினையினால் நிகழ்ந்த கலவரங்களின் ஒரு பகுதியாக அது நடந்தது. அதே சமயத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பஸ்தூன் பழங்குடி மக்கள் காஷ்மீர் மீது போர் தொடுத்து வந்தனர். கொலை, கொள்ளை, தீயிட்டு கொளுத்துதல், பாலியல் வல்லுறவு... என அவர்கள் எதிர்பட்ட அனைத்து மதத்தினரையும் (முஸ்லிம்கள் உள்பட) தாக்கினார்கள். இதை எதிர்கொள்ள முடியாத மன்னர் ஹரிசிங் இந்தியாவிடம் ஓடோடி வந்தார். அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நேரு அரசு ‘காஷ்மீர் இணைப்பு’ என்பதை நிபந்தணையாகக் கொண்டு ராணுவத்தை அனுப்பி பஸ்தூன் பழங்குடிகளை விரட்டி அடித்தது. ஆனாலும் கூட குறிப்பிட்ட சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக்கொண்டது. இப்படித்தான் காஷ்மீர் இந்தியாவுக்கு வந்தது. (அதுவரைக்கும், அதற்குப் பின்னர் சில வருடங்கள் வரையிலும் கூட, காஷ்மீருக்கு முதல்வரோ, ஆளுனரோ கிடையாது. பிரதமரும், ஜனாதிபதியும்தான் இருந்தார்கள்.)
அந்த ஒப்பந்தம் கூட காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைக்கவில்லை. பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளின் அதிகாரங்கள் மட்டுமே இந்திய அரசிடம் அளிக்கப்பட்டன. அரசியல் சட்டத்தில் 370-வது பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த இணைப்பில் மிக முக்கியமான அம்சம் என்பது ‘காஷ்மீர மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்பதுதான். பிரதமராக இருந்த நேரு ‘காஷ்மீரில் ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடிக்கப்பட்டப் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும்’ என்று அப்போது வானொலியில் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். பிற்பாடு இந்தியா, தானாகவே முன்வந்து இந்தப் பிரச்னையை ஐக்கிய நாடுகள் அவைக்கு எடுத்துச் சென்றபோது ஐ.நா. மன்றமும் வாக்கெடுப்பையே வலியுறுத்தியது. இந்தியாவும் அவ்வாறே செய்வதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் நேரு காலம் தொடங்கி இன்றுவரை அப்படி ஓர் வாக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை. ஏன்? இதைப்பற்றி தேசிய மனித உரிமை ஆர்வலர்கள் 13 பேர் இணைந்து நடத்திய முக்கியத்துவம் வாய்ந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
‘‘அப்போது பிரதமராக இருந்த நேரு இந்த வாக்கெடுப்பை வெளிப்படையாக ஆதரித்தார். ஆனால் உண்மையில் அவர் அப்படி ஓர் வாக்கெடுப்பு நடத்துவதை விரும்பவில்லை. நேரு, எழுதிய கடிதங்களில் ‘இந்தியாவின் நலனில் இருந்து பார்க்கும்போது காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுத்தர முடியாது. ஆனால் இதில் காஷ்மீர் மக்களின் விருப்பம்தான் முக்கியமானது. அவர்கள் இந்தியாவில் இருந்து பிரிவது என முடிவு எடுத்தால் நாம் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இதை வாக்கெடுப்பின் மூலம் தீர்மாணிக்கும் வாய்ப்பு இல்லவே இல்லை. காஷ்மீரத்தின் இன்றைய தலைமையைதான் நாம் மக்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிறார். ஆக வாக்கெடுப்பு என்ற ஜனநாயக முழக்கத்தை சும்மாவேனும் சொல்லிக்கொண்டே, காஷ்மீரில் தன் சொல்படி கேட்கும் ஒரு பொம்மை அரசை ஏற்படுத்துவதும், பிறகு அந்த தலைமையின் கருத்தையே காஷ்மீர மக்களின் கருத்தாக முன்வைத்து தொடர்ந்து இந்திய நலன்களை சாதித்துக்கொள்வதும்தான் நேருவின் நோக்கம்.’’ என்கிறது அந்த குழுவின் அறிக்கை.
இப்படி, நேரு பொதுவில் தனது ஜனநாயக முகத்தைக் காப்பாற்றிக்கொண்டு அடிமனதில் தேசியவெறியுடன் காஷ்மீரத்தை கையாண்டார். அதன் பின்வந்த யாருமே வாக்கெடுப்பு நடத்தவே இல்லை. காஷ்மீரில் சின்னச் சின்னதாக இயக்கங்கள் தோன்றி ‘சுதந்திர காஷ்மீர்’ கேட்டு ஜனநாயக வழியில் போராடத் தொடங்கினார்கள். 50 ஆண்டுகள் ஜனநாயகப் போராட்டத்தில் வெறுப்புற்று 1980-களின் பிற்பகுதியில் போராட்டம் ஆயுத வடிவம் எடுத்தது. இந்த இடத்தில்தான் பாகிஸ்தானின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் தொடங்குகிறது. காஷ்மீரின் போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்பதாலும், அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலும் தந்திரமாக அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி தீவிரவாதக் குழுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது பாகிஸ்தான். அதன்பிறகு போராட்டமானது தீவிரவாத முகம் எடுக்க ஆரம்பித்தது. காஷ்மீரில் விதம்விதமான பெயர்களில் தீவிரவாத அமைப்புகள் உருவாக ஆரம்பித்தன. தாலிபான் வரைக்கும் ஆதிக்கம் செய்யத் தொடங்கியது. அந்த அழகியப் பள்ளத்தாக்கு படிப்படியாக ரத்தப் பிரதேசம் ஆன கதை இதுதான். காஷ்மீர் விடுதலையை ஆதரிப்பதாகக் கூறி உள்ளே நுழைந்த பாகிஸ்தான் மெல்ல, மெல்ல அந்த போராட்டத்தின் முகத்தையே சிதைத்துவிட்டது.
காஷ்மீரில் வசிப்பது யார்?
புவியியல் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரை குறைந்தப்பட்சம் மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். 1. காஷ்மீர் பள்ளத்தாக்கு, 2. ஜம்மு, 3. லடாக் மலையகம். இவைத்தவிர ‘சுதந்திர காஷ்மீர் அல்லது ஆஸாதி காஷ்மீர்’ (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) மற்றும் பாகிஸ்தான் வசம் உள்ள கில்ஜித், பல்திஸ்தான் ஆகிய பகுதிகள். மத அடிப்படையில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் என நான்கு மதத்தினர் உள்ளனர் என்றபோதிலும் இஸ்லாமியரும், இந்துக்களுமே அதிகம். இவர்களுக்குள் எந்த காலத்திலும் மத ரீதியிலான பிளவுகள் வந்தது இல்லை. குறிப்பாக முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்குமான உறவு மிக நெருக்கமானதாகவே இருந்து வந்திருக்கிறது. ‘‘காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முஸ்லிமுக்கும் என்னால் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை. அவர்களின் கலாசாரம் கூட ஒன்றுபோலவே உள்ளது’’ என்று காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
அடிப்படையிலேயே காஷ்மீர் முஸ்லிம்கள் மென்மையான சூஃபி பிரிவை சேர்ந்தவர்கள். இப்போது இந்துக்கள் கொண்டாடிவரும் அமர்நாத் உருகும் பனி லிங்கத்தை கண்டுபிடித்தவரே ஒரு முஸ்லிம்தான். 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ‘மாலிக்’ பிரிவை சேர்ந்த ஓர் இஸ்லாமியர் கண்டறிந்த அமர்நாத் பனிலிங்கம்தான் இப்போது இந்து வெறியின் அடையாளமாக நிறுவப்பட்டிருக்கிறது.
பொதுவாகவே காஷ்மீரிகள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள். நேரு வாக்களித்தபடி வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதைக் கூட அவர்கள் பெரிய விஷயமாக நினைக்கவில்லை. ஆனால் ‘சுயாட்சி’ வாக்குறுதி ஏமாற்றப்பட்டதைத்தான் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மூன்றே மூன்று துறைகளில் மட்டும்தான் காஷ்மீர் மீது இந்தியா மேலாதிக்கம் செய்ய முடியும் என்று தொடங்கிய சுயாட்சி உரிமையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள 395 பிரிவுகளில் 260 பிரிவுகள் ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். மீதமுள்ள 135 சட்டப் பிரிவுகளை விட்டு வைத்ததற்கும் காரணம் இருக்கிறது. அவற்றை ஒத்த சட்டப் பிரிவுகள் ஏற்கெனவே மாநில அரசியல் சட்டத்திலும் உள்ளன என்பதால் அதை விட்டுவிட்டார்கள். அந்த அளவுக்கு சுயாட்சி கோரிக்கை என்பது அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. 1992-ல் சட்ட விரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் காஷ்மீரின் ஜமாத் தடை செய்யப்பட்டபோது சொல்லப்பட்ட காரணம், ‘இவர்கள் வாக்கெடுப்பு நடத்தச் சொல்லிக் கேட்கிறார்கள்’ என்பது. நேரு அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லிக் கேட்பதே சட்டவிரோதமாகப் பார்க்கப்படுகிறது.
சிதைந்துபோன சிவில் வாழ்க்கை!
ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா அங்கு 1.65 லட்சம் படைகளை நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 67 ஆயிரம் படைகளை நிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால் காஷ்மீரை தனது சொந்த நாடு என சொல்லும் இந்தியா காஷ்மீரில் நிறுத்தி வைத்திருக்கும் படையினரின் எண்ணிக்கை 6.67 லட்சம் பேர். இதில் மாநில காவல்துறை வராது. உலகிலேயே மிகக் குறுகிய நிலப்பரப்பில் இத்தனை அடர்த்தியான ராணுவ வீரர்கள் நிற்பது காஷ்மீரில்தான். இத்தனை லட்சம் பேர் எத்தனை தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காஷ்மீரில் இருக்கிறார்கள் தெரியுமா? சமீபத்திய இந்திய ராணுவத்தின் அறிவிப்புப்படி காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை வெறும் 660 பேர். இவர்களை பிடிப்பதன் பெயரால்தான் காஷ்மீரிகளின் உயிர் தினம், தினம் பலியிடப்படுகிறது. சமூகவியலாளர் பஷீர் அஹமது தப்லா 2008-ம் ஆண்டு காஷ்மீரில் மேற்கொண்ட ஆய்வின் படி, காஷ்மீரில் 37,400 விதவைகளும், 97,200 அநாதைகளும் இருக்கிறார்கள்.
அங்கு தினசரி சிவில் வாழ்க்கை என்பது மிக கொடுமையானதாக இருக்கிறது. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் 1958, பதற்றப் பகுதிச் சட்டம் 1976, ஜம்மு காஷ்மீர் பொது மக்கள் பாதுகாப்பு சட்டம் 1978, தீவிரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைச் சட்டம் 1985, பொடா 2002 என காஷ்மீரில் ஏராளமான ஆள்பிடி சட்டங்கள் அமுலில் இருக்கின்றன. இவற்றில் மிக மோசமானது ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம். இதன்படி எந்த ஒரு வீட்டுக்குள்ளும் ராணுவம் நுழையலாம். யாரையும் கைது செய்யலாம். விசாரணை என்ற பெயரில் கொலை செய்யலாம். அதை எதிர்த்து வழக்குப் போடும் உரிமைக் கூட மக்களுக்கு கிடையாது. மாதத்தின் பாதி நாட்கள் ஊரடங்கு உத்தரவில்தான் காஷ்மீரிகள் வாழ்கின்றனர். இரவு ஏழு மணிக்குப் பிறகான காஷ்மீர் வீதி எப்படி இருக்கும் என அவர்களுக்குத் தெரியாது. பத்து அடிக்கு ஒரு ராணுவ வீரர் துப்பாக்கியுடன் நிற்கிறார். காஷ்மீரிகளுக்கு மட்டுமல்ல.... அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கும் விடுதலை என்பது தேவையான ஒன்று. சதாசர்வ காலமும் பதற்றம் மிகுந்த கொடுமையான பனிப்பிரதேசத்தில் பணிபுரியும் அவர்களின் மனங்கள் கடுமையான உளவியல் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இது பொதுமக்கள் மீதான வன்முறையாகவும் வடிவம் கொள்கிறது. 2002 முதல் 2009-ம் ஆண்டுக்கு உட்பட்ட காலங்களில் மட்டும் 169 ராணுவத்தினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மரணப் பள்ளத்தாக்கு!
உலகின் அழகியப் பள்ளத்தாக்கான காஷ்மீர்தான் இன்று உலகின் மரணப் பள்ளத்தாக்காக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ‘காணாமல் போனவர்களின் பெற்றோர்கள்’ என்ற தனியொரு அமைப்பே செயல்படுகிறது. 2008-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி இந்த அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘உரி மாவட்டத்தின் 18 கிராமங்களில் இருந்து 940 சடலங்கள் புதைகுழிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக’ பட்டியல் இட்டது. காஷ்மீரில் காணாமல் போவதன் அர்த்தம் கொலை செய்யப்படுவதுதான். கேட்டு கேள்வியற்ற வகையில் ‘தீவிரவாதி’ சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் சத்தமில்லாமல் கொலை செய்யப்படுகின்றனர்.
‘உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம்’ அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் மரணப் படுகுழிகளைப் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் மிகக் கோரமானவை. பாரமுல்லா மாவட்டத்தில் 1,122 புதைகுழிகளும், குப்வாரா மாவட்டத்தில் 1,453 புதைகுழிகளும், பாந்திபோரா மாவட்டத்தில் 125 புதைகுழிகளும் இருக்கின்றன. இந்த மூன்று மாவட்டங்களின் கொத்துக் கொலைக்குழிகளில் இருந்து மட்டுமே 2,943 சடலங்கள் மீட்கப்பட்டன. இவை ஏதோ இறந்துபோய் புதைக்கப்பட்டவர்களின் சமாதிகளை தவறுதலாக கணக்கெடுத்து சொல்லப்பட்ட புள்ளிவிவரம் அல்ல. அனைத்தும் உண்மை. அந்த அளவுக்கு அங்கு கொலைகள் மலிந்து கிடக்கின்றன. பல புதைகுழிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிச்சாமா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் தாங்கள் இதுவரை 230 சடலங்களை புதைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சிறு கிராமத்தில் மட்டும் மொத்தம் 165 மரணக் குழிகள் கண்டறியப்பட்டன.
இந்த சடலங்கள் திடீர், திடீரென ராணுவத்தால் கொண்டுவரப்பட்டு புதைக்கப்படும். பிணம் வருவதற்கு முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்களுக்கு புதைகுழி தோண்டச்சொல்லி தகவல் வரும். ஏன், எதற்கு என கேட்காமல் தங்களின் சகோதரர்களை புதைப்பதற்கான புதைகுழிகளை அவர்களே தோண்ட வேண்டும். கேள்வி கேட்டால் நாளை வேறு எங்கேனும் தோண்டப்படும் குழிகளில் அவர்களும் சேர்த்து புதைக்கப்படுவார்கள். இந்த சடலங்களுக்கு ராணுவம் சொல்லும் ஒரே விளக்கம், ‘இவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள்’ என்பது மட்டும்தான். பிணங்கள் எழுந்து பேசவாப் போகின்றன? இப்படி புதைக்கப்படும் சடலங்களின் அடையாளங்களைக் கேள்விப்பட்டு தொலைதூரங்களில் இருந்து வரும் உறவினர்கள் பிறகு தோண்டி சடலங்களை மீட்டு எடுத்துச் சென்ற சம்பவங்களும் நிறைய நடந்திருக்கின்றன.
பண்டிட்டுகளுக்கு நடந்தது என்ன?
காஷ்மீர் பிரச்னைப் பற்றி பேசும்போதெல்லாம் இந்துத்துவ சக்திகள் ‘பண்டிட்டுகள் வெளியேற்றம்’ என்பதை மட்டுமே எதிர்வாதமாக முன்வைத்து வருகின்றன. உண்மை என்ன என்பதைப்பற்றி அறிய வேண்டுமானால் காஷ்மீரில் இரண்டு முறை ஆளுநராக இருந்த ஜக்மோகனைப் பற்றி பேசித்தான் ஆக வேண்டும். 1990-ம் ஆண்டு காஷ்மீரில் இரண்டாவது முறையாக ஆளுநர் பொறுப்பேற்றுக்கொண்ட ஜக்மோகன், அந்த அழகிய பள்ளத்தாக்கில் வகுப்புவாத எண்ணங்களை கட்டற்று பரப்பினார். உலகம் காஷ்மீரத்தை ‘பூலோகத்து சொர்க்கம்’ என்று வர்ணித்து வந்த நிலையில், ஜக்மோகன் அதை ‘தேள்களின் பள்ளத்தாக்கு’ என்று குறிப்பிட்டார். அவர் ஆளுநராக இருந்தபோதுதான் ஆயுதப் படைகளின் துப்பாக்கிகள் தங்கு தடையின்றி இயங்கின. தொடர்ச்சியான இந்திய மேலாதிக்கம், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, கொலைகள், நிம்மதியற்ற வாழ்க்கை, கண்காணிப்பு எல்லாம் சேர்ந்து காஷ்மீரிகளை சோர்வுற செய்திருந்த வேலையில் அவர்களை மத ரீதியாக பிரிக்கும் வேலையை ஜக்மோகன் திட்டமிட்டே செய்தார்.
90-களில் பள்ளத்தாக்கில் தலையெடுத்த சில ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் பண்டிட்டுகள் சிலரை கொலை செய்தது. ‘அவர்கள் அரசாங்கத்தின் கைகூலிகளாக இருந்தார்கள்’ என காரணம் சொல்லப்பட்டாலும் இதை ஏனைய ஜனநாயக சக்திகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பள்ளத்தாக்கில் சிறுபான்மையாக இருந்த பண்டிட்டுகளை இத்தகைய கொலைகள் அச்சுறுத்தின. சூழலை சரிசெய்து இயல்பு வாழ்க்கையை உறுதிபடுத்த வேண்டிய கடமை காஷ்மீரத்து அரசுக்கு இருந்தது. ஆனால் ஆளுநராக இருந்த ஜக்மோகனோ, ‘பண்டிட்டுகள் அனைவருக்கும் அரசால் பாதுகாப்புத் தர முடியாது. அவர்கள் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறலாம்’ என்று அறிவுரை கூறினார். அரசே இப்படிப் பேசினால் பண்டிட்டுகள் என்ன செய்வார்கள்? பல்லாயிரக்கணக்கானோர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறினார்கள்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பண்டிட்டுகள் பள்ளத்தாக்கை விட்டு புலம் பெயர்வதை அரசு விரும்பியது, ஊக்குவித்தது. அப்படி வெளியேறியவர்களுக்கு தலைநகர் டெல்லியில் முக்கிய வணிகப் பகுதிகளில் கடைகளும், வீடுகளும் ஒதுக்கப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு வேலையேப் பார்க்காத நிலையிலும் முழு ஊதியம் வழங்கப்பட்டது. வேறு எந்த உள்நாட்டு அகதிகளுக்கு வழங்கப்படுவதைக் காட்டிலும் மிக அதிகமான சலுகைகள் பண்டிட்டுகளுக்கு வழங்கப்பட்டன, வழங்கப்படுகின்றன. அகதி வாழ்க்கையின் துயரத்தை அளவிட பொருளாதாரம் மட்டுமே அளவுகோல் இல்லை. உறவுகளையும், மண்ணையும் விட்டு புலம்பெயர்ந்த அகதியின் துயரங்கள் பண்டிட்டுகளுக்கும் உண்டு. ஆனால் அவர்களின் நிலைமைக்கு இந்த அரசும் ஒரு வகையில் முக்கியக் காரணம். ஏனெனில் இந்திய அரசு அரசு முன்னெடுக்க விரும்பிய மதவாத அரசியலுக்கு பண்டிட்டுகளின் இடப்பெயர்வு பெரும் அளவுக்கு உதவியது. இந்தப் பின்னணியிலேயே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
காஷ்மீர் முஸ்லிம்களை பிரித்தது யார்?
இந்த கேள்விக்கு மிக நேரடியான பதில் ‘இந்துத்துவ சக்திகள்’ என்பதுதான். இதன் வேர் 1952-லேயே தொடங்கிவிட்டது. டோக்ரா மன்னரின் உதவியுடன் காஷ்மீரத்துக்குள் நுழைந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், ‘ஜம்மு பிரஜா பரிசத்’ என்ற மதவாத அமைப்பை உருவாக்கினார்கள். காஷ்மீரத்துக்கான 370-வது பிரிவு சிறப்புரிமைகள் ரத்துசெய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்கள். வாக்கெடுப்பு நடத்துவதையும் கடுமையாக எதிர்த்தனர். இவர்களின் இத்தகைய திட்டமிட்டப் போராட்டம் பள்ளத்தாக்கின் முஸ்லிம் மக்களை அந்நியப்படுத்தியது. இதை அப்போது பிரதமராக இருந்த நேருவும் உணர்ந்திருந்தார். 1953 ஜூன் 29-ம் தேதியன்று மேற்கு வங்க முதல்வர் பி.சி.ராய்க்கு நேரு ஒரு கடிதம் எழுதினார்.
அதில், ‘‘காஷ்மீர் பிரச்னை முன் எப்போதையும் விட சிக்கலானதாக மாறியுள்ளது. ஜம்மு பிரஜா பரிசத் இயக்கம் தொடங்கப்பட்டப் பின்பு பள்ளத்தாக்கின் நிலை மோசமாகிவிட்டது. அங்கு பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம் மக்கள் இந்த இயக்கத்தைக் கண்டு அரண்டு போயிருக்கிறார்கள். இந்தியாவுடன் இணைதல் என்ற அவர்களின் முந்தைய விருப்பம் இப்போது நசிந்து போயுள்ளது. பாகிஸ்தான் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முனைகிறது. இந்து வகுப்புவாதிகள் ஜம்முவில் ஓர் இயக்கத்தைக் கட்ட முடியும் என்றால் இஸ்லாமிய வகுப்புவாதிகள் ஏன் காஷ்மீரில் இயங்கக்கூடாது? பிரஜா பரிசத் இயக்கத்தின் விளைவாக நாம் இன்று காஷ்மீரப் பள்ளத்தாக்கை இழக்கும் நிலையில் உள்ளோம். மக்கள் விரும்பாத நிலையில் நாம் கத்தி முனையில் காஷ்மீரை பிடித்து வைத்திருக்க முடியாது. இந்தியப் படைகள் வெளியேற வேண்டும் என்ற குரல்கள் முதன்முதலாக காஷ்மீரத்துக்குள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன’’ என்று நேரு குறிப்பிடுகிறார். இதுதான் யதார்த்தம். நேரு காலத்திலேயே உள்ளே நுழைந்துவிட்ட இந்துத்துவ சக்திகள் இப்போது வரை காஷ்மீரத்து முஸ்லிம்களை தொடர்ந்து அந்நிய சக்திகள் போலவே சித்தரித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் அறிவுஜீவி மணிரத்னம், ‘இந்தியா பிடிக்கலேன்னா பாகிஸ்தானுக்குப் போக வேண்டியதானே?’ என்று ‘ரோஜா’வில் கேட்பது தனிப்பட்ட அவரது கேள்வி அல்ல. இந்திய இந்துத்துவ மனநிலையின் வெளிப்பாடு.
கார்கிலுக்கு மிக அருகில் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி உண்டர்மான் என்ற குடியிருப்பு உள்ளது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினையில் அந்த இடம் பாகிஸ்தானுக்குப் போனது. இதனால் அவர்கள் பாகிஸ்தானியர்களாய் ஆனார்கள். 1971-ல் இந்திய-பாகிஸ்தான் போரின்போது இந்த குடியிருப்பை இந்தியப்படை கைப்பற்றியது. ஒரே இரவில் உண்டர்மான் கிராம மக்கள் இந்தியர்களாக மாறிப்போனார்கள். தேசம், தேசபக்தி என்பவை எல்லாம் எந்த அளவுக்கு கேலிக்கூத்தானவை என்பதற்கு இந்த எல்லையோரத்து கிராமம் ஓர் உதாரணம்.
இதற்கான விலை என்ன?
கார்கில் போருக்கு இந்தியா செலவிட்டத் தொகை 3,200 கோடி ரூபாய். போர்க்காலம் தவிர்த்த இதரக் காலங்களில் பனிமலை சிகரமான சியாச்சின் பகுதியில் சும்மா ராணுவத்தை நிறுத்தி வைப்பதற்கு தினந்தோறும் செலவிடப்படும் தொகை 6 கோடி ரூபாய். ஒவ்வொரு ஆண்டுக்கும் சியாச்சினுக்கு மட்டும் 2,190 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. கார்கிலில் தொடர்ந்து படையை நிறுத்தி வைக்க தினமும் 10 கோடி ரூபாய் வீதம் ஆண்டு ஒன்றுக்கு செலவாகும் தொகை 3,650 கோடி ரூபாய். ஆக மொத்தம் கட்டுப்பாட்டுக்கோட்டின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது இந்திய அரசு. இதுபோக படைவீரர்களின் சம்பளம், ஓய்வூதியம் தனி. இவ்வளவு பணத்தைக் கொட்டி இந்தியா பற்ற வைக்கும் தேசிய வெறியில்தான் அதன் இருப்பு அடங்கியிருக்கிறது.
உண்மையில் காஷ்மீரைப் பொருத்தவரை கட்டுப்பாட்டுக்கோடு என்று ஒன்று இல்லவே இல்லை. போர் நிறுத்தக்கோட்டையே இரு நாடுகளும் கட்டுப்பாட்டுக் கோடாக கருதி வருகின்றன. ‘‘காஷ்மீர் பற்றிய பேச்சு வரும்போது எல்லாம் இந்தியர்கள் அனைவரும் தேசபக்தர்களாக இருக்க வேண்டும் எனக் கோரப்படுகிறது. தேசபக்தி என்ற சொல்லுக்கு ஒரு ஜனநாயக உள்ளடக்கம் இருக்கும் என்றால் அதற்கு நாம் செய்ய வேண்டியப் பணி, இந்திய அரசாங்கம் இந்தப் பிரச்னையை முன் வைக்கும் விதத்தையும், அதை கையாளும் முறையையும் மிக கடுமையாக எதிர்ப்பதாகவே இருக்க வேண்டும்’’ என்று குறிப்பிடுகிறது நாம் தொடக்கத்தில் பார்த்த 13 பேர் கொண்ட மனித உரிமையாளர்களின் ஆய்வறிக்கை. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்று காஷ்மீர் பிரச்னை என்பது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் கௌரவத்துடன் தொடர்புடையதாக மாற்றப்பட்டுவிட்டது. சம்பந்தமே இல்லாமல் விஜயகாந்த், அர்ஜுன் மாதிரியான மொக்கைகள் கூட ‘பாகிஸ்தான் தீவிரவாதிகள்’ என்று சொல்லிச் சொல்லி இந்திய தேசிய வெறிக்கு தூபம் போட்டு வந்துள்ளனர். தேசபக்தி தப்பில்லை. ஆனால் ‘இது எங்கள் தேசமே இல்லை. எங்களுக்கு சுதந்திர காஷ்மீர் வேண்டும்’ என அவர்கள் கேட்டுக்கொண்டிருக்க, அதன் பெயரால்தான் இந்திய தேசபக்தி வரும் என்றால் அது எத்தனை வஞ்சகமும், சூழ்ச்சியுமானது?
காஷ்மீர் மக்களின் விருப்பம் என்ன?
இந்தியாவின் உச்சியில் இருக்கும் காஷ்மீரின் மேல் பகுதியை ‘பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்’ என்று இந்தியா சொல்கிறது. கீழ் பகுதியில் இருக்கும் காஷ்மீரை ‘இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீர்’ என பாகிஸ்தான் சொல்கிறது. ‘ஆனால் உண்மையில் இரு நாடுகளும் சேர்ந்து எங்களை ஆக்கிரமித்திருக்கின்றன’ என்பதே பூர்வீக காஷ்மீரிகளின் முழக்கம். பெரும்பகுதி காஷ்மீர் முஸ்லிம்கள் பாகிஸ்தானுடன் இணைவதையும் விரும்பவில்லை. இரு தரப்பும் முஸ்லிம்கள்தான் என்றாலும் அடிப்படையிலேயே வேறுபாடு இருக்கிறது. பாகிஸ்தானின் முஸ்லிம்கள் ஷன்னி மற்றும் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். காஷ்மீரின் முஸ்லிம்கள் ‘சூஃபி’ வகையைச் சேர்ந்தவர்கள். தர்காவை வழிபடும் தனிவகையான கலாசாரத்தைக் கொண்டவர்கள். தங்களை தனித்த தேசிய இனம் என வகைப்படுத்தும் காஷ்மீரிகளின் பெரும்பான்மைப் பகுதியினர் ‘சுதந்திர காஷ்மீர்’ கேட்கின்றனர். இதை இந்தியாவோ, பாகிஸ்தானோ இதுவரை கண்டுகொள்ளவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் காஷ்மீரிகளை பிரதிநிதிகளாகக் கூட அழைப்பது இல்லை.
2000-ல் ‘அவுட்லுக்’ இதழ் நடத்திய கருத்துக்கணிப்பு காஷ்மீரிகளின் மனநிலையை துல்லியமாக சொல்லியது. அந்தக் கருத்துக் கணிப்பின்படி, 74% மக்கள் தங்களின் காஷ்மீரி அடையாளத்துடனேயே வாழ விரும்புகின்றனர். 16% பேர் காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தற்சார்பு வேண்டும் என்கின்றனர். 2% மக்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்புகின்றனர். காஷ்மீரிகளின் உண்மை மனநிலையை மிகத் துல்லியமாக வெளிக்கொணர்ந்த கருத்துக் கணிப்பு இது. ஆனால் 2% மனநிலையைதான் ஒட்டுமொத்த காஷ்மீரிகளின் மனநிலையாக தொடர்ந்து சித்தரிக்கிறது இந்தியா.
இது எங்குபோய் முடியும்?
தற்போதைய காஷ்மீரத்துப் போராட்டங்களானது எங்கு, எப்போது முடியும் என எவராலும் கணித்து சொல்ல முடியவில்லை. ஏனெனில் இந்தப் போராட்டங்கள் எந்த இயக்கத்தாலும் அறிவித்து நடத்தப்படுபவை அல்ல. இவை, மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள். இந்த அம்சம்தான் இந்திய அரசை அசைத்துப் பார்க்கிறது. ஆனாலும் தனது நயவஞ்சக நாடகத்தை வெவ்வேறு வடிவங்களில் அரங்கேற்றுவதை காங்கிரஸ் நிறுத்தவில்லை. சமீபத்தில் காஷ்மீருக்கு மீண்டும் சுயாட்சி அந்தஸ்து வழங்குவதைப்பற்றி பரிசீலிக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சொன்னார். உடனே பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் அதைக் கடுமையாக எதிர்த்தன. அப்படியான ஓர் எதிர்ப்பை எதிர்பார்த்திருந்ததுபோலவே சுயாட்சி அறிவிப்பை கிடப்பில் போட்டுவிட்டார்கள். ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்வது என்ற மையமான கோரிக்கைப்பற்றி இதுவரை இந்த அரசு பரிசீலிக்கவில்லை. ‘’எங்கள் பிள்ளைகள் சிறு வயதில் இருந்து வன்முறைகளையும், கொலைகளையும், துப்பாக்கிகளையும் பார்த்து பார்த்து வளருகின்றனர். இதனால் அவர்களின் மனங்களில் கொலை இயல்பானது என்ற எண்ணம் வந்துவிடுகிறது. வளர்ந்ததும் கொலையும், எதிர்கொலையும் சராசரி நடவடிக்கைகளில் ஒன்றென நினைக்கின்றனர். இந்த உளவியல் சீர்கேட்டை எதைக்கொண்டு சீர்செய்ய இயலும்?’ என கேட்கும் பாரமுல்லா மாவட்டப் பெரியவரின் கேள்விக்கு இந்த அரசாங்கம் என்ன பதில் வைத்திருக்கிறது?
இன்னொரு முக்கியமான விஷயம், காஷ்மீரில் வரலாற்றிலேயே லட்சக்கணக்கானவர்கள் போராட்டக் களத்தில் நிற்பது இதுவே முதல்முறை. அவர்களின் கைகளில் எல்லா காலத்திலும் கற்கள் மட்டுமே இருக்கும் என சொல்ல முடியாது. நாளை ஆயுதங்களும் வரலாம். இத்தனை லட்சம் பேரின் கைகளில் ஆயுதங்கள் வந்தால் அந்தப் பள்ளத்தாக்கு தாங்காது.
என்னதான் தீர்வு?
யாசின் மாலிக், சையது அலிஷா கிலானி, மிர்வேஸ் உமர் ஃபாருக் ஆகிய முக்கியமான மூன்று பிரிவினைவாத தலைவர்களும் ஆயுதம் தாங்கிய பாதையில் இருந்து அமைதிவழிப் போராட்டத்துக்கு வந்துள்ளனர். இது ஒரு நல்ல அம்சமாகவே தெரிகிறது. அரசு இத்தகைய ஆரோக்கியமான போக்குகளைப் பயன்படுத்திக்கொண்டு தீர்வுத் திட்டத்தை நோக்கி நகர வேண்டும். காஷ்மீரைப் பொருத்தவரை வாக்கெடுப்பு ஒன்றுதான் என்றென்றைக்குமான தீர்வின் திறவுகோலாக இருக்க முடியும். ஆனால் பல பத்தாண்டுகளாக நிலங்களிலும், மனங்களிலும் வன்முறை அழுந்த விதைக்கப்பட்டிருக்கும் சூழலில் உடனடி வாக்கெடுப்பு என்பது வன்முறைக்கே வழிவகுக்கும். ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறுவது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான ராணுவத்தினரை சில மாத சீரான இடைவெளியில் திரும்பப் பெற்றுக்கொள்வது, சுயாட்சி அந்தஸ்தை மறுபடியும் வழங்குவது, இதுவரை காஷ்மீரில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி வெளிப்படையான வெள்ளை அறிக்கை சமர்ப்பிப்பது, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவது, பண்டிட்டுகள் உள்ளிட்ட துரத்தி அடிக்கப்பட்ட அனைவரையும் அவரவர் பிரதேசங்களில் மீள குடியமர்த்துவது, தவறிழைத்த ராணுவத்தினருக்கு உரிய தண்டனைப் பெற்றுத்தருவது…. என அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதற்கு செய்ய வேண்டியப் பணிகளே ஏராளம் இருக்கின்றன. இவற்றை செய்து முடித்தால்தான் காஷ்மீரில் வாக்கெடுப்புக்கு ஏதுவான சூழலே உருவாகும். அதற்கு முதலில் காஷ்மீர் பிரச்னை என்பது ஒரு அரசியல் பிரச்னை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். துப்பாக்கி முனையில் அமைதியை கொண்டு வர நினைத்தால் காஷ்மீரிகள் கைகளில் ஏந்தி நிற்கும் கற்களுக்கு முன்னால் துப்பாக்கிகள் மண்டியிடத்தான் வேண்டும்!
thanks nadaivandi.blogspot.com -பாரதி தம்பி
உதவிய நூல்கள்:
1.காஷ்மீரின் தொடரும் துயரம் -உண்மை அறியும் குழுவின் ஆய்வறிக்கை, விடியல் பதிப்பகம்.
2. காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே? அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.
3. காஷ்மீர் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு- அ.முத்துகிருஷ்ணன். கீற்று.காம்